Sunday, December 7, 2014

சாரு நிவேதிதா'வும் சின்னப்பயலும்

கேள்வி: கலைகளில் Originality  தற்படைப்பாற்றல்/தனித்தன்மை என்பது உண்மையில் இருக்கிறதா? நாம் பிறந்ததே இன்னொருவரின் வழி. உலகின் முதல் மனிதனின் டிஎன்ஏ மூலக்கூறின் வாய்ப்பாடு இன்னமும் நம்முள்ளே வரி போல ஓடிக் கொண்டுதான் இருக்கிறது என்பது அறிவியல் உண்மைஅத்தனை கலைகளும், அதை உருவாக்குவதற்கான தூண்டுதல்களும் வெளியிலிருந்து தானே கிடைக்கின்றன. ஒரு செயலுக்கு எதிர்ப்பதமாக செய்தல் கூடபோலச் செய்தல்என்றே கூறப்படுகிறது.  எனில் ஒன்றிலிருந்து வந்ததை அந்த ஒன்றைப் போல் அல்லாமல் இன்னொன்று போலக் காட்டி விடுதலே கலையா?   -சின்னப்பயல். 

பதில்: நான் சிந்திக்கும் மொழி என்பது வரலாற்றின் மூலமாக எனக்குக் கொடுக்கப்பட்டதே என்றாலும் புரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், உணர்தல் போன்ற செயல்பாடுகளின் மூலம் அகம், புறம் இரண்டையும் என் மனதின் பல்வேறு அடுக்குகளுக்குக் கொண்டு செல்கிறேன்.  இந்த அனுபவத்தோடு பல்லாயிரம் மனிதத் தாதுக்களின் மகரந்தத் துகள்களினால் உருவாக்கப்பட்ட நான் பல நூறு ஆண்டுகளாகப் பாய்ந்து கொண்டிருக்கும் இந்த மொழியின் கரையில் அமர்ந்திருக்கிறேன்கனவு, நனவு, நனவில் கனவு, கனவில் நனவு ஆகிய திசைகளின் வழியே காற்றில் மிதந்து என் மூதாதையரின் பாடலைக் கேட்கப் பயணிக்கிறேன்இந்தப் பயணத்தில் உருவாகும் பித்தநிலையையே எழுத்து எனப் பெயரிட்டு சக மனிதனுக்கு வழங்குகிறேன்கேள்வி: இசையின் இருப்பிடம் எது? எங்கிருந்து உருவாகிறது? மௌனத்தை வெல்ல எந்த இசையாலும் இயலவில்லையே, ஏன்?  சின்னப்பயல்.(பரிசுக்குரிய கேள்வி)

பதில்: The music is not in the notes, but in the silence between என்று மொஸார்ட் கூறியிருக்கிறார்.  (மேற்கத்திய சங்கீதத்தில்) இரண்டு சலனங்களுக்கு இடையே வரும் இறுக்கமான மௌனமும் ஒரு இசையே.  மௌனத்தையே இசையாக மாற்றிய ஜான் கேஜ் (John Cage) பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை.  ஜான் கேஜின் புகழ் பெற்ற படைப்பான 4’33”-இல் ஒரு சப்தம் கூட இருக்காது.  ஒரு பியானிஸ்ட் பார்வையாளர்களின் முன்னால் தோன்றி 4 நிமிடம், 33 நொடிகளுக்கு எந்த சப்தமும் இல்லாமல் இருப்பார்.


இது ஒருவகை தியானம்.  இசை என்று சொல்லும் போது நம் மனதில் என்னென்ன எண்ணங்கள் தோன்றுகிறதோ, நாம் இதுவரை எதை இசை என்று ரசித்துக் கொண்டிருந்தோமோ அது எல்லாவற்றையும் மாற்றக் கூடியது ஜான் கேஜின் இசை.  ஆனால் ஆச்சரியகரமாக ஜான் கேஜின் இசைக்கு அடிப்படையாக அமைந்தது இந்தியத் தத்துவமும் ஜென் பௌத்தமும்தான்.  மிக முக்கியமாக, ஆனந்த குமாரசுவாமி மற்றும் I Ching என்ற சீன நூல்.  சீனர்களின் மிகப் பழமையான நூல் இதுவே. 

Schoenberg என்ற கம்போஸரிடம் இரண்டு ஆண்டுகள் இசை கற்றார் கேஜ்.  இரண்டு ஆண்டுகள் சென்று உனக்கு இசையே வராது என்றார் ஷோன்பெர்க்.  ஏன்?” ”நீ ஒரு சுவரின் முன்னே நின்று கொண்டிருக்கிறாய்.  அதன் ஊடாக உன்னால் போக முடியாது.” “அப்படியானால் என் வாழ்நாள் வரை அந்தச் சுவரை என் தலையால் முட்டிக் கொண்டே இருப்பேன்.

ஜேன் கேஜ் ஒரு மாபெரும் கலைஞனாக இருந்ததால் அவர் சுவரை முட்டியதெல்லாம் வியக்கத்தக்க கலா சிருஷ்டிகளாக மாறின.  என்னைப் பொறுத்தவரை மௌனத்தை இசையால் வென்ற கலைஞன் ஜான் கேஜ் என்று சொல்வேன். முடிந்தால் இதைக் கேட்டுப் பாருங்கள்.  

String quartet in Four Parts:   https://www.youtube.com/watch?v=sCYyChtOvww

பிறகு கேஜ் ஒரு திரைப்பட இயக்குனரை சந்திக்கிறார்.  அவர் ஒருமுறை கேஜிடம் சொல்கிறார்: இந்த உலகில் உள்ள எல்லா பொருட்களிடம் ஒரு சக்தி இருக்கிறது.  அது தன்னை அதிர்வுகளின் மூலம் வெளிப்படுத்திக் கொள்கிறது.  இந்தக் கருத்து கேஜிடம் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது.
 
பிறகு ராமகிருஷ்ண பரமஹம்சரின் தத்துவத்தில் ஈடுபாடு கொள்கிறார் கேஜ்.  அதேபோல் நாகார்ஜுனா, விட்ஜென்ஸ்டைன் ஆகியோரின் தத்துவத்தைப் படிக்கிறார்.  நாகார்ஜுனா இந்தியப் பாரம்பரியத்தில் புத்தருக்கு அடுத்த இடத்தில் வருபவர்.  தத்துவம் (சூன்ய வாதம்), விஞ்ஞானம் (ரசவாதம்), மருத்துவம் (ஆயுர்வேதம்) போன்ற துறைகளில் மாபெரும் பங்களிப்புகளைச் செய்தவர்.  நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் இருந்தார்.
 
குறிப்பாக உங்கள் கேள்வி இசை பற்றியதாகத் தெரிந்தாலும் அதற்கான பதில் தத்துவத்திலும் விஞ்ஞானத்திலும் வான சாஸ்திரத்திலும்தான் இருக்கிறது.  வெற்றிடத்தில் இசையைக் கேட்க முடியாது.  கேட்க முடிந்தால் சூரியன் மற்றும் இன்னொரன்ன நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் சப்தப் பிரளயத்தில் பிரபஞ்ச வெளியே கிழிந்து போய் விடும்.  சூரியன் ஒரு விநாடியில் 70 கோடி டன் ஹைட்ரஜனை 69.5 கோடி ஹீலியமாகவும் மீதி 50 லட்சத்தை காமா கதிர்களாகவும் வெளியேற்றுகிறது.  இவ்வளவும் நடப்பது ஒரு விநாடியில்.  இதை எழுதும் போது மனிதப் பதரேஎன்ற ஒரு எண்ணம் மனதில் தோன்றுகிறது.  தோன்றினால் அது தத்துவத்தின் பக்கம் கொண்டு போய் விடும்.  வேண்டாம்.  நாம் சூரியனையே ஆராய்வோம்.  இவ்வளவும் ஒரு நொடியில் வெளியாகிறது என்றால் அதன் சப்தம் எப்படி இருக்கும்?  அமைதிதான்.  சூன்யம்தான்.  ஏனென்றால், விண்வெளியில் காற்று இல்லை.  காற்று இருந்தால் பிரபஞ்சப் பிரளயம்.  ஆக, இசை என்பதெல்லாம் இந்த மனிதப் பதர்களின் செவிகளில் வந்து விழும் சப்தம்தான்.  மீதியுள்ள பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருப்பது மௌனம்.  சூன்யம். அந்த மௌனத்தை எப்படி உணர்வது?  எப்படிக் கடப்பது?  அந்தக் கேள்வி நம்மை ஆன்மீகத்தில் கொண்டு போய் விடும்.


.

No comments:

Post a Comment