Tuesday, September 2, 2014

மிளகாய் விதைகள்



**

ஃபேஸ்புக்கில் பிரபலமான சே
என் ஃபேக் ஐடியோடு உரையாடினார்
மேஜிக்கல் ரியலிஸம் குறித்த
எனது கேள்விகளுக்கு
இருபது ஆண்டுகளுக்கு முன்னதான
ஒரு நிகழ்வு குறித்து
நான் அவருடன் சேர்ந்து
ரெட் வைன் குடித்ததை
சுட்டிக்காட்டினார்.
சே நான் ஒரு ஃபேக் ஐடி என்றேன்
பின்னர் நான் மட்டும் என்னவாம்
என தனது அந்திமகால
புகைப்படத்தை அனுப்பிவைத்தார்

**


அந்தப்பெயர்ப்பலகையில்
தவறாக எழுதியிருந்தார்
சகித்துக்கொள்ளவியலாத
எழுத்துப்பிழை தான்
இருப்பினும் எனக்குள்
அதைச்சரி செய்துகொள்ள முடிந்தது.
அவரே அதைப்பிழையின்றி
எழுதியிருப்பின்
எனக்குச்சரி செய்துகொள்ள
அவசியமும் நேர்ந்திராது
உங்களிடம் வந்து இப்படி
சொல்லிக்கொள்ளவும்.

**
 

சிறுமழைக்குப்பிடித்த குடை
நன்கு மழையை உள்ளே
வரவிடாமல்
என்னைக்காத்தது
உச்சியாணியும் துணியும்
சேருமிடம் சிறு துளை
அதன் வழி ஓடிவந்த
ஒரு துளி இப்போ என
சிறுபிள்ளை போல
என் கைகளில் வழிந்தோடியது!
  

**
வரைந்து வைத்த மலையை
நகர்த்த முடியவில்லை என்னால்
இந்தப்பறவைகளை இன்னமும்
உயரப்பறப்பதை தடுத்துக்கொண்டிருக்கிறது
இன்னொரு படத்தில்
மலைகளே இல்லாமல்
வெறும் பறவைகளை மட்டுமே
வரைந்து வைத்தேன்
என்னிடம் அவை முறையிட்டன.
இங்கு ஒரு மலை இருந்திருந்தால்
அதனினும் உயரப்பறந்திருப்போமல்லவா என

**

இந்த மிளகாயின் விதைகளை
தோட்டத்தில் தூவ எண்ணி பிரித்துக்கொண்டிருந்தேன்
ஏதோ சப்தம் கேட்டு
அதை அப்படியே போட்டுவிட்டுச்சென்றவன்
பின் வந்து பார்த்தேன்
எந்த மிளகாய் எனத்தெரியவில்லை
கைக்கு கிட்டிய ஒன்றை எடுத்துப்பிரித்து
தூவிவிட்டேன்
எடுக்க விட்ட மிளகாய்
இப்போது
என்னைத்தூற்றிக்கொண்டிருக்கக்கூடும்.

**
  
 

2 comments:

  1. வணக்கம்
    இரசிக்க வைக்கம் வரிகள் மிகஅருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...:

    வலையுலக உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete