Thursday, June 19, 2014

துளிப்பாக்கள்




எனக்குப்பிடித்த
இலையுதிர்காலம்
என் கூரையை நிறைக்கிறது
*---*
உன்னருகில் வரும்
பச்சோந்தியும்
நிறம் மாற்றிக்கொள்வதில்லை
*----*
இறைத்தூதர்
தொடர்ந்தும் தின்று தீர்த்த
திராட்சைகள்
மிகச்சுவையாக இருந்திருக்கவும்
வாய்ப்புண்டு
*---*
எங்கள் வீட்டில் எப்போதும்
நட்சத்திரங்களை மட்டுமே
எண்ணிக்கொண்டு
தூங்க முடிந்திருக்கிறது.
*---*
உறங்கிக்கொண்டிருக்கும்
பட்டாம்பூச்சியை
எழுப்ப நினைக்கிறேன்
அதனுடன் நட்புக்கொள்ள
எழுந்தால் பறந்துவிடும்
அதனால்தான் இன்னமும் யோசிக்கிறேன்
*---*
உறக்கம்பிடிக்காத
நீள் இரவுப்பயணங்கள்
புரியவைக்கும் என் கவிதைகளை
*---*
வயலில் அலையும்
முயலின் மீசையில் பனித்துளிகள்
இரவின் மழை
*---*
விடாது பெய்த மழையைக்
கட்டிவைக்க முயன்ற
கொடிக்கயிற்றில்
என் முகம் காட்டும்
எஞ்சிய மழைத்துளிகள்
*---*
தொப்புள்கொடி வழி
சிலிர்த்தது
என் அன்னை பனியில்
*---*
 தாம் நிர்வாணம் அடைவதை
நேரடிப்புகைப்படம் எடுக்க
புத்தன் ஆணையிட்டிருக்கிறார் எனக்கு
பிறகு வந்து உங்களைச்சந்திக்கிறேன்
*---*
புதிய இலைகளைத்
திரும்பத்திரும்ப உற்பத்தி
செய்துகொண்டேயிருக்கிறது
அந்த மரம்
என் மனதில் எப்போதும்
இறந்த இலைகள்
*---*
எத்தனைதான் மலர்கள்
ஒருசேரப்பூத்துக்கிடந்தாலும்
என் கால்கள் செல்லும் தூரம் வரை மட்டுமே
அவை அழகாக இருக்கின்றன


3 comments:

  1. வணக்கம்
    நிஜமாக நிறமாறுவது .. பச்சை ஓந்திகள்..

    கவிதையை இரசித்தேன். பகிர்வுக்கு நன்றி..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    தங்களை அழைத்துள்ளேன் வந்து பாருங்கள் என்னுடைய பக்கம் 10 கேள்விகளுக்கு பதில் சொல்வதுதான்.தங்களின் பதிலுக்காக காத்திருக்கேன்.
    http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/06/blog-post_21.html#comment-form

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete