Sunday, June 1, 2014

பிடரிகள் இல்லாத குதிரைகள்





வீட்டில நடக்கும் சில விழாக்களை எனது மூவி கேமரா கொண்டு படமெடுப்பது வழக்கம். அதோடு சில ஸ்டில் போட்டோக்களையும் சேர்த்து,பின்னர் திரைப்படப் பாடல்களைப் பின்னணியில் ஒலிக்கவிட்டு சிடி கட் செய்வது வழக்கம். இருநூறு இருநூற்றைம்பது ஃபோட்டோக்கள், கொஞ்சம் வீடியோ சீக்வென்ஸ் எனக்கலந்து பின்னணியில் சினிமாப்பாடல்களைச் சேர்ப்பதற்குள் முழி பிதுங்கிவிடும். சொன்னால் நம்பமாட்டீங்க, ஒரு தடவை இது போலச்செய்ய ஆரம்பித்த போது வாஷிங்மெஷினில் துணிகளைப் போட்டு விட்டு ஓட விட்டதை அறவே மறந்துவிட்டு கிட்டத்தட்ட மூன்று நாட்கள்,தொடர்ந்து இந்த மூவியிலேயே மூழ்கிக் கிடந்தேன். எல்லாம் சரியாக இருந்தால் வீடியோ சீக்வென்ஸ் தவறான இடத்தில் ஆரம்பித்து திடீரென அந்தக்காட்சிக்கு பொருத்தமில்லாத புகைப்படத்திற்கு பிறகு வந்துவிடும். அதைத் திருப்பி ஒழுங்கான கால இடைவெளியில் சேர்த்து பின் ரெண்டர் செய்ய ஆரம்பிக்கவேணும் அதற்கு மூணு மணிநேரம் பிடிக்கும்.

எல்லாம் சரியாக வந்துவிட்டதென நினைத்தால் பாடல்கள் வீடியோ முழுமைக்கு வராது வெகு முன்னரே முடிந்துபோயிருக்கும்.! இடையில் சிஸ்டம் கொடுமை வேறு. மெமரி எர்ரர்ஸ் எப்போது அடிக்கும் எனத்தெரியாது . எல்லாம் நினைவகம் தின்னும் அப்ளிக்கேஷன்கள். யப்பா...கொடுமை கொடுமை என்றால் கொஞ்சநஞ்சமல்ல. என்னிடம் இருக்கும் மென்பொருளில் டெக்னிக்கல் விஷயங்கள் எவ்வளவோ கொஞ்சம் தான். அதற்கே இந்தப்பாடு. ஒன்றுமில்லை. இன்றைக்குத் தான் கோச்சடையான் பார்த்தேன். பார்ப்பதற்கு முன்னதாக பலவாறு கற்பனைகள் இருந்தாலும் எல்லாம் தகர்ந்தே போய்விட்டன. அருமையான முயற்சி. சாதாரண மென்பொருள் கொண்டு வீடியோ சீக்வென்ஸ் என்பதே எனக்கு இமாலய முயற்சி.ஓரளவு இவற்றை செய்து பார்த்தவன் என்பதால் சொல்லுகிறேன். இமாலய முயற்சி இது. அவ்தார், போலார் எக்ஸ்ப்ரெஸ் எல்லாம் விட்டுவிடலாம். அதெல்லாம் ஏற்கனவே அட்வான்ஸ்டு. அதனால ஒப்பிட்டுப் பார்ப்பதெல்லாம் கூடாது. அப்படிச்செய்தால் எனது மூவியை கோச்சடையானோடு ஒப்பிடுவது போன்றது.

அத்தனை போர்க்காட்சிகளும் அருமை. கப்பலில்,பின் நிலத்தில், தேர்ச்சக்கரங்களை வளைத்துத்திருப்பி குதிரைகளின் கால்கள் ஒங்கி உயர்ந்து நிற்பதெல்லாம் ஃபென்டாஸ்ட்டிக். 3டி அனிமேஷங்களில் வரும் ஏற்கனேவெ பார்த்த காட்சிகள் தானெனினும் அத்தனையும் அருமை. ஒவ்வொருத்தரும் குதிரையில் இருந்து குதித்து விழும் போது ஆடைகளும் மடிந்து விலகி காற்றில் ஆடி நிற்கிறது.ஆஹா.. மூன்று குதிரைகள் வந்து நின்று வீரர்கள் இறங்கிய பின்னர்,அவை தமது முகத்தையும் கழுத்தையும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக திருப்பியும் அசைத்தும் நிற்பது நிகழ்வின் உச்சம். அத்தனை ரியலிஸமான காட்சிகள். கால்களை மடக்கியும் நீட்டியும் , ஹ்ம்,, குதிரைகளை அருகில் இருந்து பார்த்து காட்சிகளை வடிவமைத்திருப்பார் போலிருக்கிறது. அத்தனையையும் கவனித்து செய்திருக்கிறார் சௌந்தர்யா. 

ரஜினியின் வழக்கமான ஸ்டைல்கள், காற்றைக்கிழிக்கும் சைகைகள் எல்லாம் இல்லாது , ஒரே ஒரு ஸ்டைல் அந்த உறையிலிருக்கும் வாளை சற்றே நெருக்கி காற்று வெளியில் வெளியேறும் வாளை இடக்கை கொண்டு பிடித்து, அதில் சூரிய ஒளியை மின்னவைத்து என. அருமை! கேமராவை எங்கு வேணுமானாலும் வைத்து ஆங்கிள்கள் அமைத்துக்கொள்ளலாம் அத்தனை சுதந்திரம் இந்த அனிமேஷனில். பல இடங்களில் ஒரிஜினல் ரஜினி தெரிகிறார் அசைவுகளில், வசன உச்சரிப்பில், லிப்சிங்க்கில்.!

தீபிகா மற்றும் ரஜினியின் அந்த ஸ்டிக்ஃபைட். சிலம்பாட்டம் பத்தி சொல்லியே ஆகணும். ‘மாட்ரிக்ஸ்’ எஃபெக்ட்ஸ்ல குச்சிகள் முகம் நோக்கி வரும்போது வளைந்து கொஞ்சம் அக்ரோபேட்டிக் ஸ்டைலில் வளைந்து கொடுப்பது , அத்தனை குச்சிகளையும் அவை காற்றில் பறந்து வரும்போது நடுவில் அடித்து எல்லாவற்றையும் பிளப்பது என அந்தக்காட்சி ஜொலிக்கிறது. சிலம்பாட்டம் விளையாடுபவரின் நிழல்களும் கூடவே இம்மி பிசகாமல் பின் தொடர்வதும் தொழில் நுட்பத்தின் உச்சம்.

கலைஞரின் ‘சித்திரம்’ தொலைக்காட்சியில் திருக்குறள் கதைகள் என்று தினமும் காலையில் அனிமேஷன் தொடர் வருகிறது, நேரம் இடைக்கும்போதெல்லாம் பார்த்துவிடுவேன். அது 2டி அனிமேஷன் தான். இருப்பினும் மிகநேர்த்தியாக தயாரிக்கப்பட்ட கதைகள் அவை.தமிழில் நான் பார்த்தவற்றிலேயே உயர்வான டெக்னிக்கல் ரீதியில், முன்னில் நிற்பது. அந்தத்தொடர். மோஷன் கேப்ச்சர் இல்லை. இருப்பினும் அத்தனை நேர்த்தியான குறைகளே கண்டுபிடிக்க இயலாதவை.

அதேபோல இங்கும் என்னால் ஒரு குறையும் சொல்லவே இயலாது. ஏனெனில் அத்தனையும் உழைப்பு. ‘சாயாஜி ஷிண்டே’ பாரதியாக நடித்து வெளிவந்த போது கமல் சொன்னது போல ‘இப்பதானே முதன் முதலாக ஆரம்பிச்சிருக்காங்க, இனியும் செய்வோம்’ என்று. அதே தான் இனியும் செய்யச்செய்ய மெருகு கூடும். இந்தியத்திரையுலகில் மறுக்கவியலாத அடுத்த பாய்ச்சல் இது. ஹாலிவுட்டில் எடுக்கிறார்கள் என்றால் அவர்களின் பட்ஜெட்டும், காலஅவகாசமும் விசாலமானவை. மார்க்கெட்டும் கூட. அதேபோல. இங்கு குறைந்த பட்ஜெட்டுக்குள் ,அத்தனை காலவகாசம் கிடைக்காது, மார்க்கெட்டின் வீச்சும் குறைவாக இருக்கும் இடத்தில் எடுப்பதே சவால். ‘பொன்னியின் செல்வன்’ இது போல வந்தால் இன்னும் கொண்டாடலாம் ! :)

இசை பற்றிக்குறிப்பிட இங்கு ரஹ்மான். இது சவாலெல்லாம் இல்லை, வழக்கமான பீரியட் ஃப்லிம் தான் அவருக்கு. இதுவரை அவர் செய்ததில்லை. இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நிறைய ஸிம்ஃபொனி பிட்ஸ்கள் கேட்கக்கிடைக்கிறது. அந்த ‘சிவதாண்டவம்’ பிட் ஒரிஜினல் அருகில் கூட இல்லை என்பது தான் ஏமாற்றம். வீருகொண்டு எழுந்து ஆடத்தோணவைப்பது சிவ தாண்டவம். காட்சிகளின் நேர்த்தி, இசையைப் பற்றி கவலை கொள்ளாது செய்துவிட்டது. ‘பாய்ஸ்’ படத்தில் வந்த அந்த ‘ஐயப்பன் பாடல்’ கூட ரஹ்மான் செய்யவில்லை. அவரின் உதவியாளர் செய்தது. தான் சார்ந்திருக்கும் மார்க்கத்தில் இவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதால் அவர் அதைத்தொடவில்லை.இங்கும் அதேபோல் சிவதாண்டவத்திற்கு  நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. வேற்று மத/மார்க்க இசையை அனைவரும் கொடுக்கத்தான் செய்கின்றனர்.

குதிரைகள் ஓடி வந்து கால்களின் குளம்பு தேய நிற்பதும், போர்க்காட்சிகளில் திடும் திடும் என வழக்கமான சமூகப்படங்களில் வரும் ஒலியே இங்கும் ஒலிப்பது அத்தனை சுவாரசியமில்லை. பின்னணி இசைப்பதென்பது இவருக்கு எப்போதும் கைவராத கலை.அதுவே இங்கும் தொடர்கிறது. பாடல்கள் இன்னும் தமிழ்ப்படந்தான் என்பதால் வந்துகொண்டிருக்கிறது. ஒரு க்ளேடியேட்டர் ஸ்டைலில் உருவாக்கிய படத்தில் பாடல்கள் வருவதென்பது கொடுமை. அந்த ‘எனக்காகவா’ தவிர மற்ற பாடல்கள் அத்தனை சுகமில்லை. ( அந்தப்பாடல் கூட ‘எனக்காகவா நான் உனக்காகவா’ என்ற சிவாஜி பாடல் தான் :) கொஞ்சம் ட்ரீட்மெண்ட் டிஃபரன்ஸ் தான் இங்க :) )

ஒரே ஒரு குறை மட்டும் சொல்றேன் அதுவும் குதிரைகள் பற்றியே. ஓவியர் எம்.எஃப்.ஹுஸைன் மாதிரி எனக்கும் இந்தக்குதிரைகள் மேல தீராக்காதல் உண்டு. முழுப்படத்திலும் வரும் ஒரு குதிரைக்குக்கூட பிடரி மயிரே இல்லை. அது எப்படி என்று தான் எனக்குப்புரியவில்லை. இத்தனையையும் கூர்ந்து கவனித்து பார்த்துப் பார்த்து செய்துவிட்டு அவற்றின் இயல்பான பிடரிகள் இல்லாமை ஒரு பெரும் குறை.!
தலையை அசைத்து அவை நிற்கும் போது ஆடி அடங்கும் அந்தப்பிடரிகளை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்... ! அடுத்த சீக்குவலில் சௌந்தர்யா அதையும் சரி செய்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது :)

 
 .

2 comments:

  1. சிறப்பான விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
  2. மிக்க நன்றி தளிர் சுரேஷ்!

    ReplyDelete