Wednesday, March 26, 2014

எனது கவிதை பற்றிய ஒரு விமர்சனம்




எனது கவிதை பற்றிய ஒரு விமர்சனம், கவிஞர் லதாமகன் எழுதியது.

#t1kavithai – சின்னப்பயல்
Posted: February 11, 2014 

நாங்கள் உங்கள் கவிதைகளை
வாசிப்பதில்லை
 
அதற்கான நேரமும் இருப்பதில்லை
இரை தேட வேண்டியிருக்கிறது
மழைக்காலமானால் கூடுகளை இடம் மாற்ற
வேண்டியிருக்கிறது
நனைந்து போன சிறகுகளை உலரவைக்கவே
வெகுதூரம் பறக்க வேண்டியிருக்கிறது
பெரிய கழுகுகளின் பார்வையிலிருந்து
எங்கள் குஞ்சுகளைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது
ஆண்டில் பலமுறை புலப்பெயர்வுக்கென
இடம் தேடிப் பறப்பதிலேயே
வாழ்க்கையின் பாதி நாள் வீணாகிறது
இப்படி நாங்கள் வானில் சஞ்சரிக்கும்
சில நேரப்பொழுதுகளை மட்டும்
பார்த்து வைத்துக்கொண்டு
கவி பாடித் திரிவதில் கொஞ்சமும்
அர்த்தமில்லை

மேலும்
நாங்கள் உங்கள் கவிதைகளை
வாசிப்பதில்லை
 
- சின்னப்பயல் (இங்கிருந்து - பேஸ்புக்

கலை தன்னிறைவு பெற்றவனின் பொழுதுபோக்கு என்ற இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அது எப்பொழுதும் அப்படித்தான் இருப்பதாகவும். அத்தியாவசியத் தேவைகள் நிறைவு பெறாத நாளொன்றில், திரைப்படம், இசை, கவிதை எதுவும் நமக்குள் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடிவதில்லை. தன் வாழ்க்கையைக் எதாவது ஒரு கலைக்காக அழித்துக்கொண்டவர்கள்கூட, தன் நுழைவை தன்னிறைவு கொண்ட பொழுதில் தொடங்கி பிறகு இழந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்

காலம் அதன் கூரிய நகங்களின் தடங்களை ஒவ்வொருவரின் மீதும் ஒவ்வொரு நொடியும் உரசிச் செல்கிறது. தேவைகளை நோக்கி ஓடும் நாட்களில் இளைப்பாறுதலாக ஒரு கவிதை வந்தடைகிறது. அதுவும், எளிய தேவைகள் நிறைவடைந்து ஒரு பெரிய தேவையை நோக்கிச் செல்லும் காலத்தில் மட்டும்தான் சாத்தியப்படுகிறது. கூடுகட்டத்தொடங்கும் பறவைகூட, அதன் தானியத்தை முதலில் அலகில் நிறைத்துகொண்டபின் தான் தொடங்குகிறது. தானியம் என்பது எளியதேவையாகவும், கூடு என்பது பெருந்தேவையாகவும் இருக்கும் நாளில், ஒரு தாகந்தீர்க்கும் சிறு மழைத்துளியாக வேண்டுமானால் கலை இருக்கக்கூடும்

கவிதைகள் பிறர்வாழ்வின் உச்ச தருணங்களை ஒரு புகைப்படத்தைப்போல சில வார்த்தைகளில் சேர்த்துவைக்கின்றன. எழுதுபவன் அவனுக்கான தானியத்தையும், கூட்டினையும் பெற்றபின், தானியம் தேடும் சிறுபறவையின் அழகைப்பற்றி தன் பார்வைகளை எழுத்தில் சேமித்துவைக்கிறான். அவன் பசியை அறிவதில்லை. தன் பழைய நாளொன்றின் பசியை நினைத்துக்கொண்டு, இன்றைய பிறரின் பசியை சிலவார்த்தைகளுக்குள் அடக்க முயற்சி செய்கிறான். இந்த வார்த்தைகள், வேடனுக்குக் காத்திருக்கும் வலையில் சிக்கிய பறவையிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. கவிதை அதற்கான வாசகர்களைத் தேடுமென்பதுவும், இந்த கனவின் ஒரு பகுதியாகத்தானே இருக்கமுடியும்?



.

1 comment:

  1. பறவை ஒப்பீடுடன் விமர்சனம் நன்று...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete