Friday, September 20, 2013

என் பிரிய எழுத்தாளர் வண்ணதாசன்

முகநூலில் நான் எழுதியிருந்த இந்தப்பதிவிற்கு என் பிரிய எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் ஆமோதிப்பும் கூடவே இணக்கமான பாராட்டுதலும். இத்தனை நுணுக்கமாக ஒரு பதிவை உற்றுநோக்கி அதனுள் உறைந்துகிடக்கும் அடிப்படை மனித உணர்வுகளை அவரின் என்றைக்குமான கவிதைகள் போலவே எடுத்துக்கூறிய என் பிரிய எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு என் நன்றிகள்.!

அந்தப்பதிவு



பெங்களூர் கோரமங்கலா 80 ஃபீட் ரோட்லருந்து சில்க் போர்டு வர்றதுக்கு எந்த ஆட்டோவாவது ஒத்துக்கொண்டதுன்னா அவர ஒபாமா ஆக்கீறலாம். ஆனாலும் எனக்கு ஒரு ஒபாமா கெடச்சார் அன்னிக்கு. ஏகத்துக்கு ட்ராஃபிக். வண்டி ஒரு இம்மி கூட நகரல. கைல வெச்சிருந்த ஃபைலை அப்படி ஆட்டோ சீட்டில் வைத்துவிட்டு, அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். இப்பல்லாம் எலெக்ட்ரானிக் மீட்டர், வெய்ட்டிங்க் டைம் ‘டிக்’கிக்கொண்டிருந்தது. ‘ஏகப்பட்ட ட்ராஃபிக் ஆயிப்போச்சு தம்பி, பெங்களூர்ல இருக்கிற அமைப்புக்கு 15 லெட்சம் வண்டி தான் ஓட முடியும் (?) ஆனா இப்ப 45 லெட்சம் வண்டிக ஓடுது. எங்கருந்து எடம் கெடைக்கும் ? தம்பி எப்டி போலாம்ங்க்றீங்க’ என்றார். ‘சேவா சதன் வழியா போயி அந்த கிருபாநிதி காலேஜ் கட்ல ரைட் எடுங்கன்னேன்.’ ‘இல்ல வர்றவங்க இந்த ரூட்ல போங்க அப்பதான் மீட்டர் கம்மியாவும்னு சொல்லுவாங்க அதான் கேட்டேன்னார்’. அப்பல்லாம் என்ன இத்தினி ஆட்டோ வண்டில்லாம் கெடயாது, பஸ்களோட ப்ளீமூத், மாரீஸ் மைனர், எப்பவாச்சும் ரோல்ஸ் ராய்ஸ், அப்பறம் நம்ம அம்பாஸிடர் இவ்வளவுதான் ஓடும். அப்பால பிரிமியர் பத்மினி வந்துச்சு, எடமும் விசாலமா இருந்துச்சு, ட்ராஃபிக்கும் கெடயாது. இப்ப இந்த ஐடி’காரங்க வந்ததுலருந்து சொம்மா பேங்க் லோன் குடுத்து குடுத்து வண்டிக பெருகிப்போச்சு.

64’ல HMTல வேலக்கி சேர்ந்தேன் தம்பி அப்ப எனக்கு 69 ரூபா மாசச்சம்பளம், ‘HMT-ன்னா வாட்ச் தயார் பண்ணுவீங்களோ’ இல்ல நான் டூல் செக்ஷன்ல இருந்தேன்’ என்றார். அப்ப தான் எனக்கு கல்யாணம் ஆச்சு. வாங்கிற சம்பளத்த பூரா எங்கப்பா கைல குடுத்துருவேன். ஒரு சினிமா பார்க் போகணுன்னா கூட அவர் கிட்ட தான் எதிர்பாக்கணும்.சனி ஞாயிறு தயங்கித்தயங்கி நிக்கிறத பாத்துட்டு அங்க அண்ணன்தான் அஞ்சுபத்து கொடுத்து ‘பொண்டாட்டிய சினிமா கினிமா கூட்டீட்டுப்போய்ட்டு வாடா’ன்னு அனுப்பி வெப்பார். எம்ஜியார் படம் ரெண்டு பேரும் பால்க்கனி டிக்கெட் வாங்கிட்டு போய் பாத்துட்டு , அப்டியே ஓட்டல்ல சாப்ட்டுட்டு வீடு வந்த சேர்ந்தா மிச்சம் சில்லறை கைல இருக்கும். இப்ப ?! ‘நேத்து ஐநூறு ரூபா குடுத்து வீட்டுக்காய்கறி , மளிகை எல்லாம் வாங்கிக்கன்னு சொல்லீட்டு சவாரி போயிட்டு சாயங்காலம் திரும்பி வந்தா இன்னும் கொஞ்சம் காசு குடூன்னு கேக்றா என் பொண்டாட்டி. என்னம்மான்னேன், என்னா செய்றது எல்லாம் செலவாயிட்டுதூங்கறா என்று கூறிச்சிரித்தார்.’ இத்தனைக்கும் நான் அவர எதுவுமே கேட்கல. அவராகவே சொல்லிக்கிட்டேயிருந்தார். ‘அப்புறம் 25 வருஷ சர்வீஸுக்கப்புறம் வீஆரெஸ் வாங்கிட்டு இந்த ஆட்டோவ வாங்கி ஓட்டிட்டிருக்கேன்.’ அவன் இப்பவே , இப்பந்தான் படிச்சிக்கிட்டிருக்கான் அதுக்குள்ள பல்ஸர் வேணூங்கறான்’ ‘யாரு ? ’ ‘என் மகன் தம்பி ‘

'எனக்கு ஒரே பையன் தம்பி , இங்க தான் KR-புரத்துல ஒரு எஞ்சீனியரிங் காலேஜ்ல சேத்துவிட்டுருக்கேன். காலை  டிஃபன்  வீட்டில சாப்ட்டுட்டு மத்தியானத்துக்கு வீட்டுலருந்தே கட்டீட்டும் போயிடுவான் , அப்டியும் தெனத்துக்கு அம்பது ரூபா கைல குடுத்துவிடுவா அவன் அம்மா. இப்ப அதுவும் பத்தல இன்னும் அம்பது குடூங்கறான் தம்பி. ‘ஒண்ணரை காலன் பெட்ரோல்,ரெண்டே கால் ரூபா அப்ப, இப்பத்தி கணக்குக்கு மூணேமுக்கா லிட்டர் வரும்,இப்ப பாரூங்க தம்பி 75-ரூபா விக்கிது பெட்ரோல் ஒரு லிட்டருக்கு.’ அவர் பேச்சில் முழுக்க கன்னட வாடை தான் அடித்தது. ஒரு திருப்பத்தில் நிறுத்தி ஒதுங்குப்புறமாகப்போய் சிறுநீர் கழித்துவிட்டு வந்தார். பிறகு உட்கார உள்ளே நுழைந்தவர் கை இரண்டையும் சீட்டின் மேல் வைத்துக் கொண்டு, தலையை மட்டும் என் பக்கம் திருப்பி ‘எங்க தம்பி இப்ப இருக்கிற புள்ளைங்கல்லாம் கடுமையா ஓழச்சி வேல செஞ்சி சம்பாதிக்கிறதுன்னா அவ்வளவு யோசிக்கிதுங்க, ஆனா காசு மட்டும் நெறயக் கொட்டணும்னு எதிர்பாக்குதுங்க’ என்றார். 
 




2 comments:

  1. நான் அதே கொரமங்களாவில் ஆறு ஆண்டுகள் இருந்தவன். நானும் இதுபோல ஆட்டோக்காரர்களின் கதைகளைக் கேட்டிருக்கிறேன். தானாக வந்து சொல்லும் இக்கதைகளில் தான் எத்தனை வாழ்வியல் நீதிகள் வெளிப்படும் தெரியுமா? மீண்டும் ஒருமுறை இத்தகைய ஆட்டோ ஓட்டுனர் கிடைத்தால் அவர் சொன்ன கதைக்காக மீட்டருக்கு மேல் பத்து ரூபாய் போட்டுக் கொடுத்துவிடுங்கள். அவர்களாகக் கேட்க மாட்டார்கள். – கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னையிலிருந்து.

    ReplyDelete
  2. @ இராய செல்லப்பா : கொடுத்தாலும் வாங்கவில்லையே.. சரியான சில்லறை கொடுத்து என்னை வழியனுப்பிவைத்தார்.

    ReplyDelete