Thursday, August 1, 2013

வணக்கம் அநிருத்



பள்ளியில் பத்தாவது வரை படித்த அனைத்தும் விக்கிபீடியா’வில் பார்த்து ஒரு வாரத்தில் கற்றுக் கொள்ளலாம் என்றாகிவிட்டது போல,பழைய ஜாம்பவான்கள் நாற்பது வருடங்களாக இழைந்து இழைந்து கொடுத்தவற்றை நேற்று வந்த அநிருத் மூன்றாவது படத்திலேயே கொடுத்திருக்கிறார். பாம்பேயில் கூட பல வருடங்களாக தனியான ஆல்பம் என்ற விஷயங்கள் பரவலாக ஆரம்பித்து விட்ட போதும் இன்னும் தமிழுக்கு அந்த இசைக்கோர்வைகள், தனியான ஆல்பங்கள் , சினிமா சேராத ஆல்பங்கள் என்றவை வர இன்னமும் காலம் பிடிக்கும், தமிழன் இந்த விஷயங்களில் இன்னும் பின் தங்கித்தானிருக்கிறான்.

தமிழில் சிலரது முயற்சிகள் சரியான வரவேற்பின்றிப்போய் வெறுமனே யூட்யூப் வீடியோக்களாகத்தங்கி விட்ட பாடல்களாக அமிழ்ந்துதான் போய்விட்டன. அநிருத் அந்த விஷயத்தில் கொஞ்சம் உஷாராகவே இருந்து கொண்டு சினிமாவுக்குள் தன்னைப் புகுத்திக்கொண்டு வலுவான இடம் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழில் திரைப்படம் சாராத ஆல்பங்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவதோ இல்லை சிலாகித்துப்பேசப்படுவதோ எப்போதும் இல்லை.

இசை புதிது, எடுத்துக்கொண்ட களம் புதிது, வெறுமனே பல இங்கிலீஷ் ஆல்பங்களைக் காப்பியடித்து இன்னபிற இன்ஸ்டெண்ட் இசையமைப்பாளர்கள் போலல்லாது , தமக்கென ஒரு பாணி , அது எப்போதும் ரீப்பீட் ஆகாமல் , Plagiarized  என்ற சொல்லுக்கு இடம் கொடாமல் , பிற இசையமைப்பாளர்களின் சாயலும் தமக்குள்ளே வந்துவிடாது எப்போதும் புதிதாகக் கொடுக்கவேண்டும் என்பதாக சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான் மற்றும் அநிருத் தொடர்ந்தும் இசைத்துக்கொண்டிருப்பது நல்ல அறிகுறி.

மூன்றாவதாக வந்திருக்கும் இந்த ஆல்பம் முழுதும் இளைஞர்களுக்கெனவே இசைத்திருக்கிறார் அநிருத். 3-ல் நிறைய சீரியஸான பாடல்களும்,எதிர்நீச்சல்-ல் கொஞ்சம் Blues , மற்றும் Romance கலந்து கொடுத்த அவர் இங்கு பலவித வெரைட்டிகளாக விரவிக்கிடக்கிறது. ஒஸாகா,ஒஸாகா/ஐலேசா ஐலேசா’ அற்புதமான மெலடி.  ‘ஓ பெண்ணே , சர்வதேச வெர்ஷன் மற்றும் தமிழ் வெர்ஷன் ஆக ஜொலிக்கிறது. ‘இதுதாண்டா சென்னை கெத்து’ ‘எங்கடி பொறந்த’ ‘சென்னை சிட்டி கேங்க்ஸ்ட்டர்’ எல்லாம் நம்ம லோக்கல் சரக்குகள் :)


 
ஐலேசா ஐலேசா

மழைத்துளி விழுவதிலிருந்து தொடங்கி பின் பியானோவிலிருந்தும் இசைத்துளிகள் சொட்டத் தொடங்குகிறது. இந்த மழைத்துளிகளுக்கும் பியானோவின் கருப்புவெள்ளைக்கட்டைகளின் மெல்லிய அழுத்தங்களிலிருந்து ஒழுகிடும் இசைத்துளிகளுக்கும் ரொம்பவே சம்பந்தம் இருக்கிறது போலருக்கிறது. ராஜா சாரில் தொடங்கி , கங்கை அமரன் இசைத்த பாடல் ( மழையின் துளியில் லயமிருக்குது-சின்னத்தம்பி பெரியதம்பி ) வரை குளிர்ந்த ஜில்லிப்பை நம் காதுகளின் வழி அனுப்பி வைக்கின்றன. அநிருத்தும் சுசித்ரா’வும் பாடிய இந்த இசைத்துளிகள். சுசித்ரா’வுக்கு ஒருவிதமான கீச்சுக்குரல் , அவரை இப்படி ஒரு தாழ்வான அடிக்குரலில் பாடவைத்திருப்பது பாராட்டுக்குரியது. ‘என் இதயம் இதுவரை துடித்ததில்லை இப்போ துடிக்கிறதே ‘ என்று பாடிய மெலடியைத் தொடர்ந்து இந்தப்பாடல் பாடியிருக்கிறார் சுசித்ரா.

பின்னர் தொடரும் ட்ரெம்ப்பட்டின்/ஷெனாயின் அழுத்தமான ஓசை உரம் சேர்த்து பாடலோடு உடனே ஒன்றிப்போகவைக்கிறது. பின்னர் தொடர்ந்தும் பாடும் அநிருத்’தின் குரலோடு பியானோவின் துளிகள் விழுந்து விழுந்து நம்மைத் தொடர்ந்தும் நனைத்துக்கொண்டிருக்கிறது. முழுக்க நனைந்து ஈரமாகித்தான் விடவேண்டும் இதைத்தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருந்தால். இழைகிறது சுசித்ராவின் குரல் நல்ல தேர்வு இவரின் குரல். இந்த ஆண்டின் அற்புதமான மெலடி. ‘ரஹ்மானின் டச்’ தெரிந்தாலும் காதுகளுக்கும் இதயத்துக்கும் இதமாகி ஒலிக்கிறது பாடல். தொடர்ந்தும் லூப்பில் வைத்துவிடுங்கள் இல்லையேல் உங்களையே அந்த பொத்தானை அழுத்தச்சொல்லி வற்புறுத்தும் இந்தப்பாடல். பாடல் முழுக்க இசை நிறைந்து கிடந்தாலும் இரைச்சல் என்ற பேச்சுக்கே இடமின்றி நெஞ்சு முழுதும் வியாபித்துக்கிடக்கிறது

எத்தனை இசைத்தாலும் இப்படி ஒரு மெலடியை எப்போதும் ஆல்பத்தில் வைத்துக்கொண்டிருந்தால் நீக்கமற இடம் பிடித்துக்கொண்டேயிருக்கலாம் என்ற உத்தியை கண்டுகொண்டு இசைக்கிறார் அநிருத். பாடலின் கடைசி நிமிடங்களில் பல இழைகளாக ஒலிக்கும் பாடல் நம்மைக்கூர்ந்து கவனிக்கவைத்து, திரி கண்டு பிடித்து ரசிக்க வைக்கிறது.

ஒஸாகா ஒஸாகா

ஐலேசா ஐலேசா’வின் இன்னொரு வெர்ஷனாக வந்திருக்கிறது இந்தப்பாடல்.கொஞ்சம் Rustic Touch மற்றும்  Rhythemic Drums உடன் சேர்ந்து ஒலிக்கிறது இந்தப்பாடல். தொடக்கத்தில் ஒலிக்கும் அந்த வயலின் ‘குன்னக்குடியின்’ கொட்டாங்குச்சி’ வயலினை ஞாபகப்படுத்துகிறது. ‘ஐலேசா ஐலேசா’வின் ரீமிக்ஸ் போல கலந்து கட்டி அடிக்கிறது பாடல். அருமையாக ஒலிக்கும் 3:42ல் ஒலிக்கும் அந்த ஃப்ளூட் பிட்டுக்கு கொஞ்சம் வயல்வெளியும் கூடவே தூறிக்கொண்டிருக்கும் வானத்தையும் லேண்ட்ஸ்கேப்பில் கொண்டு வந்து சேர்க்கிறது. இந்த வெர்ஷனுக்கு பிரகதி குருப்ரசாத் பாடியிருக்கிறார். அந்த Rustic/Folk Touchக்கு மிகவும் பொருத்தமாக ஒலிக்கும் சொற்கள் , குரலை வளைத்துப்பாடும் முறை எல்லாமாகச்சேர்ந்து நம்மைக்கூடவே சேர்ந்து தாளம் போட்டு ரசிக்கவைக்கிறது. நீளம் அதிகமானாலும் சொய்வு வரவில்லை பாடலைத்தொடர்ந்து ரசிக்க. இது கொஞ்சம் பரீட்சார்த்த முயற்சி அநிருத்துக்கு , இந்த மாதிரி Folkம் செய்து பார்க்க. புஷ்பவனம் குப்புசாமி’யின் உச்சரிப்பு, பாடும் மொழியும் கைகூடியிருக்கிறது :)  தொடர்ந்தும் Westernized ஆகவே ஒலித்துக் கொண்டிருக்கும் அநிருத்’திற்கும் அவர் பாடல்களுக்கும் அடுத்த கட்டத்தை எட்ட வைக்க நினைக்கும் முயற்சி. நன்றாகவே அமைந்திருக்கிறது.
 


ஓ பெண்ணே பெண்ணே

இதிலும் இரண்டு வெர்ஷன்கள் ஒன்று சர்வதேசத்திற்கென , இன்னொன்று நமக்கென. பெரிய வேறுபாடுகள் என்று ஏதுமில்லை. ஆங்கிலம் விரவிக்கிடக்கிறது இரண்டிலும். கொஞ்சம் ‘One Love’ Blues பாடலை பாடும் முறையிலும், ராகத்திலும் ஒத்திருந்த போதிலும் ரசிக்கவைக்கிறது பாடல். International தரமென்று பார்த்தால் அவர்களின் பாடல்கள் அத்தனை வித்தியாசம் காட்டுவதில்லை , Blues  -ன்  ஆல்பங்களில் எனக்கு பெரிய வித்தியாசங்கள் ஏதும் கண்டுபிடிக்க முடிவதில்லை. முதல் ஆல்பத்தின்பாடல்களின் நீட்சியாகவே அமைந்திருக்கும் அவர்களின் பாடல்கள். 4:10ல் ஆரம்பிக்கும் அந்த கடை இசை வெகுவாகக்கவர்கிறது. ‘கொலவெறி’ அளவுக்கு பேசப்பட வேண்டுமென ரெண்டு வெர்ஷன்ஸ் போட்டதுபோலவே தோன்றுகிறது. இருப்பினும் இரண்டிற்கும் அத்தனை வித்தியாசம் தெரியவில்லை. அழகாக ப்ரோக்ராம் செய்யப்பட்டு எந்தப்பிசிறுமின்றி தெளிவாக சர்வதேச தரத்திற்கென பாடல் ஒலிப்பது மகிழ்ச்சி.

தவறி உதிரும் முத்து மணிகள் போன்ற இசையுடன் பாடல் ஆரம்பிக்கிறது நம் கவனத்தைப்பாடல் பக்கம் திருப்பி ஆழ்ந்து போக வைப்பதற்கான முயற்சியாக. விஷால் தாத்லானி ( ‘ரா ஒன்’ படத்திற்கென ஷேகர்-உடன் இணைந்து இசைத்தவர் விஷால்-ஷேகர்
Duo நிறைய இந்திப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறது எனினும் , ரஹ்மான்/அமித் த்ரிவேதி தாண்டி இவர்கள் இன்னும் பரவலாக பேசப்படவில்லை ) பாடியிருக்கிறார் தமிழில் அந்த ஆங்கிலக்குரலுடன். பெரிய வித்தியாசமாக இல்லை இவரின் குரல், வழக்கம்போல பாடலுக்குத்தேவையான உணர்ச்சியைக்கொடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறார்.,

International Album செய்வதற்கான முதல் முயற்சி போல இந்தப்பாடல் அமைந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில ஆல்பங்கள் உலகளவில் அத்தனை பேசப்படுவதில்லை , பாம்பேயில் நிறையப்பேர் முயற்சித்தும் அத்தனை வெற்றி பெறவில்லை.எனினும் அநிருத்’தை வாழ்த்தலாம்.! You Take my Breath Away.!!!


சென்னை சிட்டி கேங்க்ஸ்ட்டர்

ஒரு பெரிய கூட்டமே பாடியிருக்கிறது இந்தப்பாடலை. ‘ஹிப் ஹாப் தமிழா’, மற்றும் ‘கன்ட்றி சிக்கன்’ அப்புறம் நம்ம ‘அநிருத்’ , ‘ஹார்ட் கவுர்’ எல்லாருமாச்சேர்ந்து கும்மியடிச்ச பாடல். ‘மேமாதம்’ படத்தில் ரஹ்மான் சென்னை பற்றி ஒரு பாடல் ‘மனோரமா’வைப் பாடவைத்து இசைத்திருப்பார். ‘மெட்ராசசுத்திப் பாக்கபோறேன்’ என்று. அது மாதிரி நம்ம அநிருத்’ நம்ம ஊரு பத்தி அடித்துக்கலக்கியிருக்கும் பாடல். கொஞ்சம் ‘Crazy Frog’ பின்னணியில் ஒலித்தாலும் தமிழ்நாட்டின் தேசீயகீதமாக கொஞ்ச நாள் தொடர்ந்து ஒலிக்கும் இந்தப்பாடல். காலைச்சேவல் முதலிலும் பின்னர் அவ்வப்போது இடையிடையே ஒலித்து எல்லாரையும் விழிக்க வைத்தே இருக்கிறது இந்தப்பாடல் முழுக்க. 

அவ்வப்போது வந்து தமிழ்த்திரையில் பாடிவிட்டுச்செல்லும் யோகி-பி, அப்பாச்சி இண்டியன்,கவிதை குண்டர் போன்ற ஹிப்-ஹாப்,ராப் குழுக்கள் போல ‘ஹிப்ஹாப் தமிழா’வும் இந்தப்பாடலைப் பாடிவிட்டு சென்றிருக்கிறார்.  ஹிப்-ஹாப், ராப் கொஞ்சம் ஹார்ட் ராக் ,நம்ம தேவாவின் ‘கானா’ என கலந்து கட்டி ஒலிக்கிறது. இந்தப்பாடலால் ஒன்றும் தமிழ்க்கலாச்சாரம் அழிந்து விடாது :) இனி அத்தனை நடன நிகழ்ச்சிகளிலும் கொடி கட்டிப்பறக்கும். ரொம்ப முன்னால எம்டீவி’யில் ‘ஸௌத் ஸ்பெஷல்’ என்று ஒரு ப்ரோக்ராம் வரும்.அதற்கு இந்தப்பாடல் மிகவும் பொருந்தும் :) “முடியக்கட்டி மலைய இழுப்போம் வந்தா மலை போனா....” என்பதற்குப்பிறகு சேவலின் கூவல் ஒலிக்கிறது. ‘இதுதாண்டா சென்னை கெத்து’ :)

எங்கடி பொறந்த

அநிருத்’தும் ஆன்ட்ரியா’வும் இணைந்து பாடியிருக்கும் பாடல் ( எதுக்குய்யா சிரிக்கிறீங்க ? :) இது இசை விமர்சனம் மட்டுமே :) ) புஷ்பவனம் குப்புசாமி’யும் அனிதா குப்புசாமி’யும் சேர்ந்து பாடியிருக்க வேண்டியது. கரகாட்டங்களில் ஒரு வகை ராஜா ராணி ஆட்டம் என்று உண்டு. அந்த டச் தெரியுது இந்தப்பாடலில். திடீர்னு பாட்ஷால்லாம் வர்றார் பாட்டுல. ட்ரம்ஸும்,அந்த ட்ரெம்ப்பெட்டும் என்ன போடு போடுது பாடல் முழுக்க. ஆன்ட்ரியா’வுக்கு பொருத்தமான பாடல்தான் இது. எப்பவுமே Western Classics பாணியில் பாடிக்கொண்டிருந்தவருக்கு இது கொஞ்சம் Different Genre ல் அமைந்துள்ள பாடல். அநாயாசமாக ஊதித்தள்ளுகிறார். அநிருத்துக்கு எல்லா Genre- லயும் பாடிப்பார்த்து விடவேண்டுமென்ற ஆசை இதிலும் தெரிகிறது. புலி வேஷம் கட்டி ஆடும் ஆட்டத்திற்கும் இதே இசை பொருந்தும். Folk Touch ல் ஓரளவு அந்தத் தரத்தை/இடத்தை எட்டிப்பிடிக்க நினைத்த பாடல்.
  


ஹே காற்றில் எதோ புது வாசம்

எதிர்நீச்சலில் வரும் ‘பூமி என்ன சுத்துதே‘ என்ற அந்தப்பாடலின் இசையில் ஒலிக்கிறது கொஞ்சம் அதே பாடலையும் ஞாபகப்படுத்துகிறது இந்தப்பாடல். பாடியவர்களின் பெயரெல்லாம் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கிறது ‘பாப்போன்’ மற்றும் ‘அமிரான் வின்செண்ட்’ இணைந்து பாடியிருக்கின்றனர். மைல்ட் மெலெடியாக உருவெடுத்து சாதாரணமாக முடிகிறது. அத்தனை ஆர்ப்பாட்டமான பாடல்களுக்கு இடையில் இது கொஞ்சம் சுருதி குறைந்தே ஒலிக்கிறது. கென்னி ஜி’யின் சாக்ஸ் இழைந்தோட ஒலிக்கும் பாடல் போகப்போக பிடித்துப்போகலாம். நல்ல தென்றலில் கொஞ்சம் மழைச்சாரல்கள் பட்டும் படாமல் என்மேல் விழும்போது இந்தப்பாடல் கேட்கப்பிடிக்கும் எனக்கு..! :) கொஞ்சம் மயங்கி , பாடும் அவர்கள் வார்த்தைகளைச் சரியாக முழுதுமாக உச்சரிக்காததால் அப்படியான ஒரு Feeling நமக்கு வருகிறது கேட்கும்போது :) 3:00 ல் ஆரம்பிக்கும் அந்த ஹார்மனி மயக்குகிறது நம்மை.


இப்போது இருபதுகளில் இருப்பவர்களுக்கு ஏகத்துக்குப்பிடித்துப்போன அநிருத்தை, ரஹ்மான் நுழைந்த போது அதே இருபதுகளில் இருந்துகொண்டு கொண்டாடியவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போவது தான் எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. காலம் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. தமக்கு வயது ஏறிவிட்டதையும், இனியும் தமது இளைமையில் கேட்ட,ரசித்த, ஒன்றிப்போன இசையை, விடாது பிடித்துக்கொண்டிருப்பது காலகாலமாக தொடர்ந்து வந்துகொண்டுதானிருக்கிறது. இதில் ராஜாவைக்குறை சொல்லி இனி ஒன்றும் ஆகப்போவதில்லை. தொண்ணூறுகளில் ரஹ்மான் வந்தபோது , ‘ராஜா இப்பவும் நல்லாத்தான்யா ம்யூஸிக் போட்றாரு, சும்மா இவங்களா என்னன்னமோ சொல்கிறார்கள்’ என்று சொன்ன அந்த முப்பதை’க்கடந்தவர்கள் காலத்தில் இருந்த ரஹ்மானைக்கொண்டாடிய இருபது வயதினர், இப்போது இருபதுகளில் இருப்பவர்களின் அநிருத்தின் மீதான அதே ஈர்ப்பை ஏன் புரிந்துகொள்ள இயலவில்லை ?!
இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், இப்போதிருக்கும் சூழலில் இருபதின் வயதினரின் மனதில் அநிருத்’தே நீக்கமற நிறைந்திருக்கிறார்.  




4 comments:

  1. ஹா.... ஹா.... தளத்தின் தலைப்பு சரி தான்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அனிருத் வெறுமனவே ஒரு ட்ரெண்ட் செட்டராக உருவெடுத்துள்ளார்.அவர் தேர்வுசெய்யும் குரல்களும் அனேகமான தமிழுக்கு புதுசு. ஓ பெண்ணே பெண்ணே ஆங்கில பாடல் பாடிய அர்ஜின் இலங்கை தமிழர் அவர் தற்போது ஐரோப்பாவில் ஆங்கில ஆல்பங்கள் வெளியிட்டவண்ணமுள்ளார். ஒய் திஸ் கொலவெறி பாடலை ஆங்கிலத்தில் கொஞ்சம் மாற்றிப்பாடி வெளியிட்டு யூடியூப் ஹிட்ஸ் அள்ளியவர். அந்த நட்பு இன்னும் தொடர்கிறது அனிருத்துடன்.
    அருமையான விமர்சனம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete