Saturday, July 13, 2013

பாம்பே ட்ரீம்ஸ்கீற்று இணைய இதழில் வெளியான கட்டுரையின் மறுபகுதி


கூடுதல் சீனி

பாம்பேயில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, தங்கியிருந்த வீட்டின் அருகில் ஒரு மராட்டி தேநீர்க்கடை வைத்து நடத்திக்கொண்டிருந்தார். எப்போதும் அங்கு ஒரு தேநீர் அருந்திவிட்டே லோக்கல் ட்ரெயினைப் பிடிக்கச்செல்வது வழக்கம். எப்போதாவது எனது யாஷிகா கேமராவை (பழைய ஃபிலிம் ரோல் போட்டு படம் எடுக்கும்) எடுத்துக்கொண்டு சும்மா படம் எடுக்கவென்று அலைவது வழக்கம். அதைப்பார்த்துவிட்டு என்னிடம் தயங்கித் தயங்கி தம்பி, என்னை ஒரு படம் எடுங்களேன், டீ போடுவது போல, ஃபோட்டோக்ராஃபரைக் கூப்பிட்டால் நிறைய காசு கேட்கிறான் என்றார். சரி நில்லுங்க என்றபோது, கரண்டியை நன்கு பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்தார். சாலையில் போய்க்கொண்டிருந்தவர்கள் ஃப்ரேமிற்குள்ளும் வந்து போய்க் கொண்டிருக்க, கொஞ்சம் பொறுங்க என்றேன்..இருப்பினும் சமாளித்துக்கொண்டு போஸ் கொடுத்துக்கொண்டேயிருந்தார்.

சரியான தருணத்தில் அவரும் கரண்டியும் மட்டும் ஃப்ரேமிற்குள் வந்துவிட ஒரு க்ளிக். அதன் பிறகு ரோல் நிறைந்தவுடன் , டெவெலெப் செய்து பிரிண்ட் எடுத்து அவரிடம் ஒரு நாள் கொடுத்தேன். வாங்கிப்பார்த்தவர் முகத்தில் அன்றைய சாயா முழுதும் ஒரே மணிநேரத்தில் விற்றுத்தீர்ந்தது போல சந்தோஷம். அன்று எனக்கு ஒரு காப்பி கிடைத்தது கூடுதல் சீனியுடன் இலவசமாக...! பிறகு சில நாட்கள் கழித்து அவரின் பக்க சுவரில் ஃப்ரேம் செய்து மாட்டி வைத்தார். சாயா குடிக்க வருபவர்களிடம் பெருமையாக அதைக் காண்பிக்கவும் செய்வார்.

நானும் தொடர்ந்து படங்கள் அனுப்பிக்கொண்டிருக்கிறேன் நேஷனல் ஜியோக்ரஃபி புகைப்பட போட்டிக்கு , ஒரு போதும் எனக்கு அத்தனை மகிழ்ச்சி கிடைத்ததில்லை, அந்த சாயாக்கடை நண்பரின் முகத்தில் இருந்ததை விட.! எனது பழைய ரோல்களை தேடிப் பார்த்ததில் ஒருபோதும் அந்த நெகட்டிவ் கிடைக்கவில்லை. அவரின் சிரிப்பும், அந்த காப்பியின் சுவையும் இன்றும் அழியாப்புகைப்படம் போல என்றும் என் நெஞ்சில் நிறைந்திருக்கும்போது அசையாத புகைப்படத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது ?.


பாம்பே ட்ரீம்ஸ்  

வழக்கமாக பாம்பேயின் புறநகர் பகுதிகளில் ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’வின் சில சிறப்புப்பகுதிகள் கிடைப்பதேயில்லை. எனக்கென பேப்பர் போடும் ஒரு முதியவர் , அவரின் மனைவியுடன் ஸ்டேஷன் செல்லும் வழியில் கடை பரப்பி வைத்திருப்பார். சில சமயங்களில் நேரம் கடந்து விட்டால் நேரே சென்று பேப்பர் வாங்கிக்கொண்டே ட்ரெயினைப்பிடிப்பது வழக்கம். அங்க்கிள் ‘பாம்பே டைம்ஸ்’ என்று இழுப்பேன். 'போரிவில்லி’க்கபுறம் யாருக்குமே கொடுக்கிறதில்ல தம்பி, இருந்தாலும் இங்க எல்லாருமாச் சேர்ந்து கேட்டுக்கிட்டிருக்கோம். கிடைக்க ஆரம்பிச்சவுடனே உங்களுக்கு மட்டும் தனியா கொடுக்கிறேன் என்று வழக்கமான பாணியில் பதில் கூறுவார்.

ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை. பேப்பர் வர தாமதமானதால், நேரே போய் வாங்கி விடலாமென்று நினைத்து, அவர் கடைக்குச்சென்று பேப்பரை உருவி எடுத்து, சில பக்கங்களை வாசித்துக் கொண்டிருந்தேன். கூட்ட மிகுதியால் அவர் கையில் நான் திணித்த காசுகளை அவர் கவனியாது கல்லாவில் போட்டு விட்டு வியாபாரத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார். நானும் வாசிக்கும் மும்முரத்தில் நடக்க மறந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து, தம்பி சில்லரை கொடுத்தீங்களா என்று கேட்டார். ‘கொடுத்திட்டேன் அங்கிள்' என்றவனை அவரும் அவர் மனைவியும் ஒரு மாதிரி பார்த்தனர். அவர்களுக்கு முதுமை, எதையும் சட்டெனெ மறந்து விடுவது இயல்பு. எனக்கும் வாதாட மனமில்லை. இருப்பினும் போதுமான அளவு காசு கையில் இல்லை. (கண்டிப்பாக அந்த பேப்பருக்கான காசை நான் கொடுத்துவிட்டேன், யாதொரு ஐயமுமில்லை இது வரை) ‘இல்ல அங்கிள் நீங்க வேலை மும்முரத்தில மறந்திருப்பீங்க , நல்லா கணக்குப் போட்டுப்பாருங்க’ என்று கூறியவாறு அங்கிருந்து நகர ஆரம்பித்தேன். அவர்களுக்கு சமாதானமாகவேயில்லை. ஏற்கனவே முதுமையினால் சுருங்கிய அவர்களின் முகம் வாடியே விட்டது. எனக்கு என்னவோ போலாகிவிட்டது. இருப்பினும் எனது பிடியில் தளராது நின்று சொல்லிவிட்டே நடந்தேன். அவர்களுக்கு கொஞ்சமும் சம்மதமில்லை என் பேச்சில்.

சில நாட்கள் கழிந்தது. தம்பி உங்களுக்காக மட்டுமே ‘பாம்பே டைம்ஸ்’ எடுத்து வெச்சிருக்கேன். யாருக்கும் தெரியாம கொண்டுபோங்க என்றார். இத்தனை நாட்கள் என்னை உறுத்திக்கொண்டிருந்தது சட்டெனெ விலகியது போல தோன்றியது. அவர் கண்களில் தெரிந்த அந்த குற்றவுணர்வு என்னை என்னவோ செய்தது. இருப்பினும் அவர் கடைசி வரை என்னைக் கேட்கவேயில்லை ‘அந்த’ நாளிதழுக்கான காசை கொடுத்தாயா என்று.!

No comments:

Post a Comment