Wednesday, July 10, 2013

தொப்பிபாய்




மல்லு பஜார் ஷாப்பிங் மாலில், கல்லாவில் இருக்கும் ஒரு பாய் (முஸ்லீம்), ரம்ஜானுக்காக அன்னிக்கு ஒரு புது தொப்பி ஒண்ணு போட்டிருந்தார். நிறைய வேலைப்பாடுகளும், எம்ப்ராய்ட்ரிகளுமா ஏகத்துக்கு நல்லாருந்தது. சில்க் துணியால தைத்தது போல,அந்த நினைப்பிலேயே அவர் அன்னிக்கு பில் போட்டுக்கிட்டு இருந்தார். கடைல எடுத்து வந்த சாமான்களை பில் போட வந்தவன், அவர் தொப்பியை பார்த்து , ‘என்ன பாய் பிரமாதமா இருக்கே’ என்று சொன்னேன். சிரித்துக்கொண்டே ஹ்ம்,,என்றார் , நான் சொன்னதை ரசிக்கவில்லை போல. ஏதோ நினைப்பிலிருந்த நான் என்னையும் அறியாமல் ஒரு நமுட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டேன். அவரது முகம் பார்க்கச்சகிக்காது போனதை என்னால் பார்க்க முடிந்தது. இருந்தாலும் அந்த நினைப்பு என்னை உள்ளூர அரித்துக்கொண்டுதானிருந்தது. பிறகு அதே கடைக்கு செல்லும்போதெல்லாம் என்னைப் பார்ப்பதை தவிர்க்கிறார் என்று தெரிந்தது. நானும் அதை உணர்ந்து கவனியாது விட்டது போலவே காட்டிக்கொண்டேன். எப்படியாவது இந்த இறுக்கத்தை தளர்த்திவிட வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

வெகு நாட்கள் கழித்து சாலையோர கடையில் தேநீரருந்திக்கொண்டிருந்தார் அவர்.. என்ன பாய் “சாய் கிடைக்குமா” என்று போகிற வாக்கில் அவரிடம் கேட்டேன். ‘இந்தா குடி’ என்று தம்ளரை என்னை நோக்கி நீட்டி என்மேல் கவிழ்த்து விடுவது போல பாவனை காட்டினார். சரி ஏதோ என்னாலியன்ற அளவு நிலைமையை , இறுக்கத்தை தளர்த்தி விட்டேன் என்று நினைத்துக்கொண்டு , சிரித்தபடியே வீட்டிற்கு வந்து விட்டேன். இப்போது ஓரளவு அவரது மனம் ஆசுவாசப்பட்டிருக்கும் போல என்றெண்ணி எனக்குள் மகிழ்ச்சி.

மீண்டும் அதே கடைக்குத்தான் போயாக வேண்டும், அருகிலிருக்கும் கொஞ்சம் பெரிய கடை , எல்லாம் கிடைக்கும் என்பதால்.எப்போது போனாலும் அந்த ‘தொப்பிபாய்’ இருக்கிறாரா என்றே கண்கள் தேடும். அன்று என் முன்னாலேயே வந்துவிட்டார். அவர் முகம் வழக்கத்தை விடவும் சுருங்கிப் போயிருந்தது. ‘என்ன பாய் என்னாச்சு’ என்றேன். “இல்ல அன்னிக்கு எல்லார் முன்னாலயும் டீக்ளாஸ உயர்த்திக்காமிச்சு, ஊத்த முயற்சிச்சது தப்பு தான், மன்னிக்கணும்’ என்றார்.

இந்த மன்னிப்பை நான் அன்னிக்கு அவரப் பார்த்து சிரிச்சப்பவே கேட்டிருந்தால், இவ்வளவு தூரம், இத்தனை காலம் பிடித்திருக்காது, இறுக்கம் தளர்வதற்கு. ஹ்ம்...!

________________________________________________________________

இதே கட்டுரையை தோழர் ஆபிதீன் அவரின் வலைப்பூவிலும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

http://abedheen.blogspot.in/2013/07/blog-post.html


No comments:

Post a Comment