Tuesday, April 17, 2012

கடவுள் வருவார்



இன்னொரு கண்ணையும் தோண்டி எடுத்து
படையல்
 செய்ய துணிந்தவரின்
வன்முறையைத்தடுத்தாட்கொள்ள
கடவுள் வந்தார்

 
பிள்ளைக்கறி சமைத்து
படையல் வைக்கமுயன்றவரின்
வன்முறையைத்தடுத்தாட்கொள்ள
கடவுள் வந்தார்

 
சுண்ணாம்புக்காளவாயில்
தம்மையே சுடமுயன்றவரின்
வன்முறையைத்தடுத்தாட்கொள்ள
கடவுள் வந்தார்

 
கிடைக்காத சந்தனக்கட்டைகளுக்கெனத்
தம் கைகளையே எலும்பு வரை 
தேய்த்து எடுத்தவரின்
வன்முறையைத்தடுத்தாட்கொள்ள
கடவுள் வந்தார்

 
தம் சுயத்தை நிரூபிக்க
தீயினிற்புகவும் முயற்சித்தவரின்
வன்முறையைத்தடுத்தாட்கொள்ள
கடவுள் வந்தார்

 
தம் கால்களை முதலையின்
வாயிற்கொடுத்து கதறிய  அஃறிணையின் மீதான
வன்முறையைத்தடுத்தாட்கொள்ளக்கூட

கடவுள் வந்தார்

 
அருகில் நடந்த வன்முறைகளை
இதுகாறும் கண்டுகொள்ளாமலிருந்த
அதே கடவுளை யாசிக்க
இந்தக்கவிதையை நேர்மறையாக
முடிக்க விரும்பி

 
தலைப்பை மீள வாசிக்கக்கோருகிறேன்.
அதுவே உங்களுக்கும் விருப்பமெனில்




.
 

6 comments:

  1. அருகில் நடந்த வன்முறைகளை
    இதுகாறும் கண்டுகொள்ளாமலிருந்த //
    சாட்டை அடி போலும் வரிகள் மிகவும் அருமை .

    ReplyDelete
  2. உங்கள் கவிதைகளை உயிரோசையில் வாசித்திருக்கிறேன்.என் தளம் வந்து மகிழ்ச்சிபடுத்தியதுக்கு சந்தோஷமும் நன்றியும் !

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஹேமா.. ! :-)

    ReplyDelete
  4. வித்தியாசமானது..:0

    ReplyDelete
  5. மிக்க நன்றி சிட்டுக்குருவி...உங்கள் பெயர் ரொம்ப அழகா இருக்கு,,

    ReplyDelete