மரந்தங்காத இலை
அது பழுத்துதான் இருக்க
வேண்டுமென்பதில்லை
சட்டெனப் பறந்த அவசரப்பறவையின்
அதிர்வில் கிளையின் நுனியில் இருந்த
பிஞ்சு இலையாகக்கூட இருக்கலாம்
அந்தப் பறவையின் எச்சத்தின்
எடை தாங்காது தானே முறிந்து கொண்ட
இலையாகக்கூட இருக்கலாம்.
அல்லது தம்மீது விழுந்துவிட்ட
எச்சத்தைக்கழுவிக்கொள்ள
இன்னொரு மழையை எப்போதும்
எதிர்பார்த்துக்காத்திருக்கும் மற்றுமொரு
இலையாக தன்னைக்கருதிக்கொள்ள
விரும்பாமல் விழுந்திருக்கலாம்.
மரத்தின் உச்சாணிக்கொம்பில்
துளிர்க்க இயலாது போகும்வரும்
அனைவரும் எட்டிப்பிடிக்க,தட்டிவிட
ஏதுவாக தாழ்வான கிளையில்
இருந்த இலையாக இருக்கலாம்.
மரத்தின் கிளைகளில்
அவ்வப்போது வந்தமரும் பறவைகளின்
உல்லாசப் பறப்பை தானும் அனுபவித்துப்
பார்க்க முயற்சித்திருக்கலாம்.
வரப்போகும் இலையுதிர்காலத்திற்கு
அச்சாரம் போடுவதற்கென மரம் தம்மை
சோதித்துப்பார்த்திருக்கலாம்
இப்போது பழுக்கத்தொடங்கியிருக்கும்
இன்னொரு இலை தம்மைப்பார்த்து
விசனப்பட்டுக்கொள்வதை
தாங்கிக்கொள்ள இயலாத இயல்பான
வெறுப்பாலுமிருக்கலாம்.
தொடர்ந்து அடிக்கும் வெய்யில்
தம்மீது மட்டுமே பட்ட கோபத்தில்
தன்னைத்தானே வீழ்த்தியும் இருக்கலாம்
எங்கும் போகாது அசையாது
தமது இடத்தில் மட்டுமே எப்போதும்
நின்று கொண்டிருக்கும்
மரத்தைப்பற்றி காற்றின் திசையெங்கும்
தான் செல்லுமிடங்களில் பறைசாற்ற
தம்மை விருப்பார்வத்தொண்டனாகக் கருதியிருக்கலாம்.
துளிர்க்கும்போதிருந்தே தம்மை
எப்போதும் மறைத்திருக்கும் அடர்ந்த
பெரிய கிளையின் நிழலில்
மட்டுமே வளரமுடிந்ததை,
வெய்யிலையும் மழையையும் தன்னால்
நேரே கண்டுணர இயலாத இயல்பான
ஆதங்கத்தினாலும் வீழ்ந்திருக்கலாம்.
விழுந்துவிட்ட பிற இலைகளின்
தழும்பிலிருந்து கண்டுணர்ந்து கொள்ளாது
தாமே தனது தழும்பைப் பார்க்க
முயற்சித்த ஒரு விபரீத எத்தனிப்பாலுமிருக்கலாம்.
தம்மைச்சுற்றி இருக்கும் மரத்தின்
பாகங்களை மட்டுமே எப்போதும்
பார்த்துக்கொண்டிருப்பதிலிருந்து
தம்மை விடுவித்து பிற பாகங்களையும்
காண முயற்சித்த ஆர்வக்கோளாறாலுமிருக்கலாம்.
எப்போதும் நேரடி வெய்யிலிலும் மழையிலும்
காய்ந்து நனைந்து அலுத்துப்போயிருக்கலாம்
வந்தமரும் பறவைகளின் காதல் மொழியை
இனியும் சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கலாம்.
தன்னை ஒட்டி வளர்ந்த பூ காயாகி
பின் பிதுங்கி பழமான இடநெருக்கடியில்,
தம்மைத்தாமே விடுவித்துக்கொண்டுமிருக்கலாம்
தம்மீதேறித்தாவிச்செல்லும் அணிற்கால்களின்
கூரிய நகம் பட்டு விழுந்துவிட்ட
தன் சகோதர இலையின் பிரிவு தாங்காமல்
மனமுவந்து தம்மை வீழ்த்தியிருக்கலாம்.
அல்லது எதிர்காலம் பற்றிய கனவில்
திளைத்து தனது நிலை மறந்து
ஊறியிருக்கும் தளர்வான நிலையில்,
தமது காதலின் களிப்பில் மரத்தின்
அத்தனை கிளைகளிலும்,விரட்டிச்சென்று
இணையைப்பிடிக்க முயன்ற
அதே அணிலின் விளையாட்டால்
கூட விழுந்திருக்கலாம்.
வழக்கமான இயற்கைச்சுழற்சியை விடுத்து
பிறிதொரு தமக்கு இணக்கமான சுழற்சிக்கு
தம்மை ஆட்படுத்திக்கொள்ள முயற்சித்திருக்கலாம்.
இவ்வாறெல்லாம் பரிணாமத்தை மீறிய
சிந்தனை கொண்ட அதை
பிஞ்சில் பழுத்த இலையெனக் கருதி மரமே
உதிர்த்தும்விட்டிருக்கலாம்.
தம்மை விட்டுப்பிரிந்த இலைகளை
மரம் தமக்கு உரமாக மட்டுமே
ஆக்கிக்கொள்வதை அறிந்து முன்னரே
தம்மை விடுவித்துக் கொண்டதாகக்கூட
இருக்கலாம்.
அல்லது தனது மரத்தை
விட்டுப்பிரிந்த இலை
பின் மீண்டும் தம்மால்
மரத்தைச்சேரவே இயலாது என்று
எல்லாவற்றையும் போல
பிறகு உணரும் சாதாரண
இன்னொரு இலையாகக்கூட இருக்கலாம்.
.
No comments:
Post a Comment