Saturday, May 29, 2010

மல்லிகைஅம்மா..'நான் பள்ளிக்கூடத்துக்குப் போய்ட்டு வாரேன்'.சரிப்பா.என்று அம்மா அடுக்களையில் வேலையிலிருந்தபடியே குரல் கொடுத்தாள்.மல்லிகை இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகிறாள்.வீட்டில் அப்படி ஒன்றும் வசதியில்லை.அப்பாவுக்கு ஜவுளி வியாபாரம் , அதுவும் அவர் வயதை விடவும் கிழமாகிவிட்ட சைக்கிளில் பின் 'கேரியரில்' கட்டி வைத்து சிறு கிராமங்களில் கூவி விற்று வரும் வேலை.அப்படி ஒன்றும் பெரிய வருமானம் பார்த்துவிட இயலாது.அம்மாவுக்கு அடுக்களையே கதி.


நேற்றுப் பொங்கிய சோறில் நீரிட்டு வைத்திருந்ததை தூக்குசட்டியில் நிரப்பிக்கொண்டு மல்லிகை புறப்பட்டாள்.அடுத்த தெரு சினேகிதி ரோஜாவைக்கூட்டிக்கொண்டு தான் செல்ல வேண்டும்.ரோஜா படிப்பதோ பெரிய தனியார் பள்ளியில்.நாள்தோறும் டியூஷன்,ஸ்பெஷல் கிளாஸ் என்று எப்போதும் பிஸியாக இருப்பதாய் காட்டிக்கொள்வாள்.ஆனால் பள்ளிக்குச்செல்வது இருவரும் ஒன்றாகத்தான்.மல்லிகை படிப்பதோ வெறும் மா நகராட்சிப் பள்ளியில் தான்.இருவரின் பள்ளியும் அருகருகில் தான்.


'வேட்டைக்காரன்' பார்த்தியாடி?..ரோஜா தான் கேட்டாள்.'இல்லப்பா' , நான் அதெல்லாம் பார்க்கல, நேத்து நடத்தின பாடத்தப் படிக்கவே நேரம் சரியாகிருச்சி.அதுவும் வீட்டில கரண்ட்பில் கட்டாததால ஃபியூஸை எடுத்துட்டுப்போய்ட்டாங்க...லாந்தர்ல தான் படிச்சிக்கிட்டு இருந்தேன்.'நான் பார்த்துட்டேண்டி,அந்தப் படத்தப் பத்தி இன்டெர்னெட்'ல வந்த எஸ்.எம்.எஸ் பார்த்தியா ?அவ்ளவ் ஜோக்..அத உடனே என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார்க்கும் ஃபார்வர்ட் பண்ணிட்டேன்.ஒரே கூத்து தான் போ.ரோஜாதான் பேசிக்கொண்டே வந்தாள்.மல்லிகையின் கவனமெல்லாம் நேற்றைய பாடத்தின் தொடர்ச்சியையும், அத்ற்கு தயார்படுத்தி வெச்சிருந்ததையும் மனது அசை போட்டுக்கொண்டே இருந்தது.பத்தாவது படிக்கிற புள்ளக்கி செல்ஃபோன் எதுக்கு ?


பேசிக்கொண்டே வந்தவள் மீண்டும் செல்ஃபோனில் மூழ்கிவிட்டாள்.காலர் ட்யூன்ஸ் ஏதும் புதுசா வந்திருக்கான்னு பார்த்துக்கிட்டு இருக்கேன், வந்திருந்தா 'டௌன்லோட்'பண்ணிருவேன்.நேற்று கணிதப்பாடத்தில் டீச்சர் எடுத்த 'டீ மொர்கன்ஸ்' "லா"வை மல்லிகை மறுபடி ஒருமுறை ஞாபகப்படுத்தி மனதிற்குள் ஓட விட்டுக்கொண்டாள்.இன்று டீச்சர் கேட்டால் சொல்லவேண்டுமென்று.


ரோஜா நடந்து கொண்டிருக்கும் போதே பையைக்குடைய ஆரம்பித்தாள்.'என்னடி என்ன தேட்ற' இல்ல நேத்து 'பில்டிங் ஃப்ண்ட்' கட்டின ரசீது காட்டினால் தான் டீச்சர் உள்ள விடுவேன்னு சொன்னாங்க , அதைத்தான் தேட்றேன்..ஆங் கிடைச்சிருச்சி.மல்லிகை தன் கிளாஸை நினைத்துப்பார்த்தாள்.பல நாட்கள் வகுப்பு நடப்பது என்னவோ மரத்தடி தான்.'க்ளாஸ்' இருக்கு..ஆனால் அதுக்குப்பக்கத்திலேயே 'சத்துணவுக்கூடமும்' இருக்கிறதால வர்ற புகையும்,வாசமும் அவர்களை அங்கு உட்காரவிடாமல் விரட்டி அடித்தது.


'டை'யை சரி பார்த்துக்கொணடே வந்தாள் ரோஜா,மல்லிகையோ நேற்று அறுந்த செருப்பின் வாரை இழுத்திப்பொருத்திக்கொண்டாள்.இன்னும் கொஞ்ச தூரம்தானே ஸ்கூல்.போய்ட்டால் உட்காந்துரலாம், அப்புறம் செருப்பை சரி செய்ய வேண்டியதில்லை.ரோஜாவின் பள்ளி போல கட்டமைப்பு வசதியோ,உயர்ந்த கல்வித்தரம் கொண்ட ஆசிரியர்களோ,பல்வேறு வகையான கற்பிப்பு முறைகளோ இல்லை மல்லிகையின் பள்ளியில்.'பாப்பாத்தி மாடு வந்துருச்சி..கட்டுனா கட்டு..கட்டாட்டாப் போ'ங்ற மனப்பான்மைதான்.ஒழுங்கா டெய்லி அட்டெண்டன்ஸ் கூட எடுக்கறதில்ல..அதுலயும் பல வாத்தியார்கள் மட்டம் போடுறதும் சாதாரண விஷயம்.பாடங்கள் அப்படியே மிஞ்சிப்போகும்,லீவு முடிஞ்சு வந்த பிறகு அவ்வளவையும் அவசர அடியாஎடுத்து முடிக்கிற கூத்தும் பழகிப்போச்சு மல்லிகைக்கு,இருந்தாலும் அவள் தன் நிலை உணர்ந்து அன்றன்று நடத்தும் பாடங்களை விடாமல் குறிப்பெடுத்துக் கொண்டு அன்றே படித்து விடுவாள்,நாளைக்கென்று எதையும் விட்டுவைக்காமல்.


அம்மாவும் மல்லிகை படிக்க உட்கார்ந்து விட்டால் அவ்வளவாகத் தொந்தரவு செய்வதில்லை.அவள் காலத்தில் பள்ளி என்பது சிலருக்கே சொந்தமான விஷயம்.மகள் படிக்கிறாளே என்ற மகிழ்ச்சியில் அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வாள்.


மல்லிகையின் அப்பாவும் அவளை எப்படியாவது ரோஜாவின் பள்ளியில் சேர்த்துவிட வேண்டுமென்று பெரு முயற்சி செய்து பார்த்தார்.பின்னர் தான் தெரிந்தது,அவங்க கேக்குற ஃபீஸுக்கு தொழிலே தொடங்கிறலாம்னு.'நீங்க குடுக்கறேன்னு சொல்ற ஃபீஸ் எங்களுக்கு 'கட்டுபடியாகாது' என்று நிர்வாகத்திடமிருந்து பதில் வந்தது அவள் தந்தைக்கு.'கட்டுப்படியாகாது'ன்னு என்பது எங்களைப்போன்ற வியாபாரிகளின் வார்த்தை, எப்படி கல்வி போதிப்பவரிடமிருந்து வருகிறது என்று விக்கித்துதான்போனார்.அதானால் அவளை மா நகராட்சிப்பள்ளியிலேயே சேர்த்து விட்டார்.'நல்லாப் படிக்கிற புள்ள எங்கயும் படிக்கும்'ங்ற நம்பிக்கைதான்.


பேச்சைத்தொடர்ந்தாள் ரோஜா..'நேத்து மானாட மயிலாட' பார்த்தியாடி , ஆட்டம் கலக்கிட்டாண்டி' உனக்குத்தான் டியூஷன் இருக்குமே,அப்புறம் எப்படி பார்த்த.?' ஆமா இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா.?,செல்லுல மிஸ் கால் குடுக்க சொல்லிட்டு அதை அட்டெண்ட் பண்றா மாதிரி டீச்சர் கிட்ட சொல்லிட்டு ஓடிற வேண்டியதுதான்.'அப்ப படிப்பு' ' அதான் ரிவிஷன் டெஸ்ட் வெப்பாங்கள்ல..அப்ப படிச்சிக்கிர்றது' என்றாள் ரோஜா.எல்லா சேனலும் பார்த்துருவேன்.அதுலயும் டான்ஸ் ப்ரொக்ராம்' விடவே மாட்டேன்.

மல்லிகையின் மனதில் 'படிப்பு' என்ற ஒற்றை சேனல் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது.

ஹேய் ..இந்த வீக்கெண்ட்'ல லைஃப்ஸ்டைல்'ல புது டிசைன் சுடிதார் எல்லாம் வந்திருக்காம்..நாங்க எல்லாம்போறோம்.நீயும் வாறியா?என்றாள் ரோஜா.'இல்லடி ஞாயிற்றுக்கிழமைகள்ல அப்பாவுக்கு உதவியா துணிகளை கட்டி ஒழுங்கு பண்றதுக்கும் , இந்த வாரப்பாடங்கள மறுபடி ஒரு தடவை ரிவிஷன் பண்றதுக்குமே நேரம் சரியாயிருக்கும்.'அதனால என்னால வர முடியாது.' மல்லிகை.


ஆயிற்று.நாட்கள் கடந்து முழுப்பரிட்சையும் வந்தது.பல முறை படித்து வைத்திருந்ததால் எந்தவித குழப்பமோ பயமோ இல்லாமல் இருந்தாள் மல்லிகை.பாடங்களை மீள வாசித்து மனனம் செய்தவற்றை அசை போட்டுக்கொண்டிருந்தாள்.விரைவில் நினைவுக்கு வராதவற்றை மற்றவைகளோடு தொடர்புபடுத்தி வைத்துக்கொள்வாள்.அதனால் சிரமமான பாடக்குறிப்புகள் அந்த சங்கிலித்தொடர் முடிவடையும் போது சரியாக ஞாபகத்திற்கு வரும்.எவ்விதக் கலக்கமுமின்றி பரீட்சை எழுதி முடித்தாள் மல்லிகை.ரோஜாவோ கடைசி நேரத்தயாரிப்பில் அனத்தும் மலை போல் குவிந்து கிடப்பதை நினைத்துக் கவலைப்பட்டு மிகவும் சிரமத்தினூடே பரீட்சை எழுதி முடித்தாள்.


முடிவுகள் வெளியாகும் நாள், அன்றும் வழக்கம் போல் ரோஜா 'செல்'லும் கையுமாக திரிந்து கொண்டிருந்தாள், தொடர்ந்து ஒலி எழுப்பிய செல்லின் அனைத்து எஸ்.எம்.எஸ் களையும் ஒவ்வொன்றாக அழித்துக்கொண்டிருந்தாள் ரோஜா.எந்த சேனலையும் பார்க்க விருப்பின்றி அணைத்தாள் டீ.வி.யை..


செய்தித்தாள்களிலும் , அவள் பார்க்கும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் மல்லிகை 'பேட்டி' கொடுத்துக்கொண்டிருந்தாள்.'''ஆம்''' மல்லிகை மானிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தாள்.


3 comments:

 1. அருமை தோழர் ...
  கதையும் ...
  கதை தலைப்பும் ...
  மல்லிகைகள் ஆண்டு தோறும் மணக்கட்டும் ...
  நன்றி தோழர் ...

  ReplyDelete