Wednesday, January 16, 2019

சென்டிமென்ட்வாசம்



அன்புள்ள அப்பா. ஆஹா. விஸ்வாசம். அர்னால்ட் ட்ரூ லைஸ்,கமாண்டோன்னு ஒரு படம் பண்ணினார். இப்டித்தான் குடும்பத்த காப்பாத்றேன்னு புள்ளயக் காப்பாத்றேன்னு அடிச்சு புரட்டுவார். இங்க தூக்கு துரை தாம் அழுவது மகளூக்கு தெரியக்கூடாதென காரை விட்டு வெளியேறி  நிற்கிறார்.மழை பெய்கிறது. மம்மூட்டி ஒரு படம் பண்ணினார். மூணு பொண்ணுகள்ல உம்பொண்ணு ஒண்ணு இருக்குன்னு சொல்லக்கேட்டு அலைக்கழிவார். ஆனந்தயாழை மீட்டுகிறாய்னு இயக்குநர் ராம் கண்ணீர் விட்டழுதார். 

இப்படி ஏகப்பட்ட ஏற்கனவே விட்டழுத கண்ணீரின் மீதி மிச்சம் சென்டிமென்ட்’வாசம் விஸ்வாசம்.ஹிஹி. பாக்றவங்கள பொங்க வெக்கிறார். ’அறிந்தும் அறியாமலும்’ படத்துல அப்பான்னு கேட்டுச்சு என்பார் பிரகாஷ்ராஜ். இப்டி எல்லாத்தையும் கொஞ்சம் கலந்து கட்டி போட்டு பொங்க வெச்சிருக்கார் சிவா.

தாம் மட்டும் தலக்கவசம் போடாது தம் மருத்துவச்சி பொண்டாட்டியையும் போட வெக்கிறார்.அப்பால அந்த தலைக்கவசத்த வெச்சே ஒரு சண்டைய முடிக்கிறார் மழையோட. செமங்ணா அந்த ஸ்டண்ட். நாப்பத்தேழு வயசுல இப்படியா முழுக்க முழுக்க வைட் ஃபோம் மண்டிப்போகும் மொகத்துல ? அந்த பால்குண்டு சிவா’வுக்குத்தான் வெளிச்சம்.

எவ்வளவு தான் வயசானாலும் அத வெளிக்காட்டிக் கொள்ள மனசார விரும்பும் கேரக்டர். இருப்பினும் அடிதடியில் கிஞ்சித்தும் குறைவில்லை எனக்காட்டிக்கொள்ள விரும்பும் நார்ஸிஸம். ஹாலிவுட் ஜார்ஜ் க்ளூனி ஸ்டைலில் ”சால்ட் அன் பெப்பர” தொடங்கி வெச்ச ”வாசுகி பாஸ்கருக்கு” வாழ்த்துகள்.


ஒய்யாம பஞ்சாயத்து இழுக்காத, சண்டை போடாதன்னு சொல்லி மருத்துவச்சி கோவிச்சிட்டு போய்ட்றார். இவர் ஆரம்பிச்சதே அப்டித்தானே? உல்லாசம் படத்துல ஆரம்பிச்சது இரபத்திரெண்டு வருசமா இப்ப வர இழுத்துக்கிட்டு இருக்கு. தாம் புள்ள செவிக்கணும்னு எவனாவது இன்னொரு புள்ளயக்கொல்லத்துணிவானா ? ஹ்ம்.. கையக்கால ஒடச்சிப்போட்டா அது பாட்டுக்கு ஓடாம 


மொடங்கிக் கெடக்கப் போவுது.வில்லனின் ப்ளாட் சரியாவே ஒர்க்கவுட் ஆவலை. பேசாம அந்தப்புள்ளய பிட்ச்சி கொண்டந்து வழக்கம்போல குடவுன்ல அட்ச்சி வெச்சு தல’க்கி போன் போட்டு களேபரம் பண்ணிருக்கலாம்.ஹ்ம், ஓஹோ அது க்ளீஷேங்ணா. அதான் பண்ணல.

இன்னாப்பாஆ படத்துல நல்ல காஷிகளே இல்லியா ? இருக்கே.. அப்பனும் புள்ளயும் ஒவ்வொரு வாட்டியும் வீட்டுக்கு லேட்டா வந்து மருத்துவச்சி கிட்ட கை கட்டி நிக்கிறது. பாட்டு வங்கறது அம்சங்ணா. அடிச்சுப் புடிக்கிற பயலுவள எல்லாப் பொண்டுகளுக்கும் புடிக்குந்தேன். ஆனா மூணு முடிச்சு போட்டப்புறமும் அத தொடரப்பிடாது அது பிடிக்காம போய்ரும். அவா சொல்றத கேட்டுட்டு பொட்டிப் பாம்பா அடங்கணும். அங்க தான் நம்ம பயலுவளுக்கு பெரச்சன. பாதுகாப்புக்கும் பயத்துக்கும் ரொம்ப தூரம் இல்லைங்கறார் சிவா. கேட்டுக்கலாம். 



கண்ணான கண்ணே’ன்னு சித்து சிரிராம் அப்பப்ப பாட்றார்.  சிலிர்க்குது . அத்தத்தவித்து வேற எந்தப்பாட்டும் சகிக்கலை. டீ/சீக்ரேட்க்கு வெள்ல போறதுக்கு மட்டும் பயன்படுது. ஹிஹி. ரொம்ப நாளைக்கிப்பிறகு விவேக் ஆகா.. சிம்’ம மாத்துனாலும் வாய்ப்பாட்டு வாங்கறார்.

’உன்னை அறிந்தால்’ படத்துல சொம்மா அந்தப் புள்ளக்கி கேர்டேக்கரா இருந்தார் அஜீத். இந்தப் படத்துல அதே புள்ளக்கி அப்பனாய்ட்டார்.. ஹிஹி.. அடுத்த படத்துல டூயட் பாடீருவார். ஹிஹி. காதல் மன்னனோட எல்லாக் கதைகள்லயும் பொண்ணுகள மரியாதையா நடத்துற மாதிரி அத்தனை படத்துலயும் கேரக்டர்களை அமைத்துக் கொள்கிறார் தல. வாழ்த்துகள் தல.!

சிவா’வுக்கு கை கொடுக்கலாம், ஹிஹி ஆனா கட்டிப்பிடிக்க முடியாது ..ஹாஹா :)  #சென்டிமென்ட்வாசம்



Sunday, January 13, 2019

டான்ஸ் கில்லர்


மாஸ் மரண மாஸ் படம் ரஜ்னிஃபைடு!.. பரமக்குடி தியேட்டர்ல காளி,தீ , அப்புறம் ஊர்க்காவலன்லாம் பாத்த ஞாபகம் வந்திருச்சு. என்ன கொஞ்சம் வயசாயிருச்சு தாத்தாவுக்கு அவ்ளவ்தான். தரமான சம்பவம் சொல்லில் மட்டுமே இருக்கு. பழைய பஞ்சாங்கத்தான் கதெ.  கார்த்திக் இந்த நான் லீனியர், அவன் லீனியர்ன்லாம் போட்டு கொழப்பிக்காகம ரசினி படமாவே எடுத்து வெச்சிருக்கார். இன்னும் எனக்கு என்ன ஆதங்கம்னா ஜிகர்தண்டாவில பாபி சிம்ஹா கேரக்டரா ரசினி நடிச்சிருக்கணும். அதுக்கு வாய்க்கல.!

ஆமா படத்துல ஏன் இவ்ளவ் இந்தித்திணிப்பு ?! என்னவோ கொஞ்சம் பாம்பேல இருந்ததால அவா பேஸ்ரதுல்லாம் புரியுது. நம்ம கவிதாயினி கனிமொழி இப்பதான் பாராளுமன்றத்துல எனக்கு புரியும் மொழியில பேசுங்க என கர்சித்தார். ஆப்ரஹாம் பாம்பே ஏர்போர்ட்ல இந்தி தெரியலைன்னா தமிழ்நாட்டுக்குப் போன்னு சொன்ன அதிகாரியை இருக்கிற அத்தனை டாப் தலைவர்களையும் ட்வீட்ல செருகி நாறடிச்சார். இங்க கார்த்திக் அப்டியே எல்லாரையும் ஹிந்தி பேச வெச்சிருக்கார். ஒரு வேள நவாஸுத்தீன் சித்திக்'கிற்கு வசதியா இருக்கட்டும்னு அப்டியே கதெயெ நார்த் இன்டியாவுக்கு தள்ளிக்கினு போய்ட்டார்னு நெனக்கிறேன். ஆதன்ட்டிக்கா இருக்கும்லயா அதுக்காக.. ஹிஹி..

இஸ்லாமியரை தவறாக சித்தரிக்கவில்லைன்னு ஒரு பதிவு பார்த்தென். நவாஸுதீன் யாருங்ணா?! பிறப்பால் முஸ்லீம்தானே.? சரி கதெல அவர் இந்து, வெறியாட்டம் போடும் இந்து. இப்பத்தான் 'லுங்கி உட்டாவோ புங்கி பஜாவோ'ன்னு பதினெஞ்சு தடவ பொழிஞ்சு தள்ளினார் பால் தாக்கரே படத்துல. ஏன் இப்டி ஒரு வாட்டமா ரொம்ப நாள் சாப்டாத மேரி ஒரு கெட்டப்பு. அதுல ஆஸ்த்துமா பேஷன்ட் போல. கொடும. மன்ட்டோ பாத்தே செம காண்டுல இருக்கேன் நான். கொல பண்ணிடுவேன் ஆமா. ஹிஹி.. ராஹீஸ்ல அவரின் நடிப்பு பின்னர் ரமன் ராகவ் இதிலெல்லாம் கலக்கின மனுசன். பாவம் ரஸ்னிகிட்ட வந்து அடிபட்டு சாகிறார். ரைட்டு விடு.





எவ்ளவ்தான் ரசினி தன் பழைய ஸ்டைல திரும்ப கொண்டு வந்தாலும் , வயசு தள்ளாட வெக்கிது, வெறி கண்ணுல மட்டுந்தான் இருக்கு உடல் கை கால் இன்னபிற பாகங்கள்லாம் ஒத்துழைக்கல. காற்றைக்கிழிக்கும் சப்தம்லாம் இல்லை. என் வலி தனி வலின்னு பாவம் புலம்பிருப்பார் ஒவ்வொரு சண்டைக்காட்சிக்கப்புறமும். போதுமே...ஹ்ம்? அமிதப் மேரி ஒரு பிங்க்,அஸ் குட் அஸ் இட் கெட்ஸ் இந்திப் பதிப்பு மாதிரி படங்கள் தேர்ந்தெடுத்து நடிக்கலாமே.?

ஒவ்வொரு தடவையும் எதிரியைக்கொல்லும் போது ஒரு டான்ஸ் போட்டு அப்புறந்தான் கொல்றார். டான்ஸ் கில்லர். அதே மாதிரி ஒவ்வொருத்தரும் எதிரிகள் கிட்ட மாட்டிக்கிட்டு காப்பாத்துங்கன்னு கத்தாம 'பேட்ட'ன்னு கூவுறாங்கள். ஆதிமூலமேன்னு ஆனை கூவினதைப்போல. இருகைகளையும் உயர்த்தி கூவினாள் திரெளபதை அது மாதிரி இங்கயும் , உடனே பேட்ட பராக் அங்க ஸ்பாட்டுக்கு. ஹ்ம்..பார்க்க குதூகலமாத்தான் இருக்கு, விசிலடிக்குது தெட்டர்ல. எதிர்பார்த்த மேரியே எல்லாம் நடக்குது. ஹைலி பிரிடிக்டபிள். ஹிஹி. இயக்குநர் மகேந்திரன் முன்னர் ரசினி பேசும் வசனங்கள் , அவருக்கு முள்ளும் மலரும் காளியை ஞாபகப்படுத்தியிருக்கும்.

மாட்டுக்கறி, பீஃப், வேலன்டைன்ஸ் டே, பக்தாள் எல்லாரும் வரிசையா லைன் கட்டி வாறாங்கள். ஒவ்வொண்ணா புடிச்சு அடிச்சுத்தள்றார் வேலன்.சிகரெட் பிடிக்கிறது உடல் நலத்துக்குக்கேடுன்னு விஜய் சேதுபதிகிட்ட சொல்றார். காயத்துக்கு மருந்து போட்டுக்கிறார். ஜேம்ஸ் பாண்ட் பாணில. எவ்வளவு அடிச்சாலும் தாங்க முடியுமா என்ன? அதான். கொஞ்சம் யதார்த்தமா இருக்கட்டுமென்னு முதுகச்சுத்தி நெஞ்சு வரைக்கும் பேன்டேஸ்..ஹிஹி.கலை அற்புதம். ஒரே ஒரு தடவ தான் சொல்றார் ரசினி, குழப்பமா  இருந்தா பாட்டு போட்டு டான்ஸ் ஆடி அப்புறமா முடிவெடுங்கன்னு, க்ரானிக் ஹீலர்,அடுத்தவர் மனசுல இருக்கிறத உடனே சொல்றவருக்கு இதெல்லாம் தெரியாதா? ஹ்ம்.. உடனே சிம்ரன் கதவ சாத்திட்டு டான்ஸாட்றார். ஹிஹி. அதான்டே லவ்வூ...ஹிஹி..




ஆமா யாரு இவருக்கு ரிக்கமென்ட் பண்ணினது அந்த ஹாஸ்டல் வார்டன் போஸ்ட்டுக்கு? தெரியவேயில்லை. ஏன் பாபி சிம்ஹா திடீர்னு சேம்சைட் கோல் போட்றார் ? தெரியலை. சிம்ரன் , ஜானு எல்லாம் எங்கே போனாங்கோ, தெரியலை. ஏற்கனவே இருக்கிற கார்த்திக்கோட அதே ஷேவிங் செட்தான் , நிலைய வித்வான்கள் தான் படம் முழுக்க, பாபி சிம்ஹா, விஜே சேதுபதி அப்பால முனீஸ்காந்த்துன்னு. சித்திக்கும் ரஜினியும் மட்டும் வெளீலருந்து. ரஜினிக்காக பல இடங்கள்ல காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டா மேரி இருக்கு. இது மாதிரி காதலைச்சேர்த்து வெக்கிற படம் நெறய இருக்கூங்ணா. 'பூந்தோட்டக் காவல்காரன்', 'வைதேகி காத்திருந்தாள்', இது மேரி சொல்லிக்கிட்டே போலாம்.

தம்பி அநிருத் அடிச்சுப்பட்டையக் கெளப்பிட்டான் பாடல்களில் மட்டும். பின்னணி இசைக்கு நிறைய ஹிஸ்பானியா, கொஞ்சம் இட்டாலியன் மாஃபியா, ஒரு இடத்தில் 'குட்பேட் அக்லி' படத்தில் வரும் ரெம்ப ஃபேமஸான  என்னியோ மரிக்கோனின் தீம் இசையைப் பயன்படுத்தியிருக்கிறார். சீழ்க்கை ஒலி. வடநாட்டுப்பின்னணிக்கு டோலக்,சித்தார்னு சமாளிச்சு வெச்சிருக்கிறார். பின்னணி இசைக்கென ராசைய்யாவிடம் கொஞ்சம் உஞ்சவிருத்தி பண்ணி சாதகம் பண்ணீண்டான்னா எல்லாம் சரியாயிரும். நிறைய பழைய பாடல்கள் அதுவும் பிபிஸ்ரீனிவாஸின் பாடல்கள் பின்னணியில் ஒலிக்கிறது. அது என்ன ரேடியோவா இல்லை டேப் ரிக்கார்டா? ,,ஹ்ம்..என்னவோ கேரவான்'னு ஒண்ணு விட்டாங்ய..அதுல என்னவோ அஞ்சாயிரம் பாட்டுகள் இருக்குன்னு அந்த அம்மா கடும் குளிர்ல கட்டின குரல்வளையில் சொல்லும். ஒரு வேள அதத்தான் ரசினி தூக்கிக்கிட்டே திரியிறார் போல.கதெ எண்பதுகளிலா இல்லை தொண்ணூறுகளிலா இல்லை எல்லாமே ஃப்ளாஷ்பேக்லயாங்ற குழப்பத்தில இசையும் ஈடு கொடுக்க முடியாமல் திணறுகிறது. 




அந்தக்காலேஜூ பாத்தா என்னவோ மலை மேல இருக்கிற பைத்தியக்காரக்கூடம் மாதிரி தான் எனக்கு தோணுது. நிறைய இருளில் சண்டைக்காட்சிகள். அந்த டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒரு சண்டை. அபாரம். அக்னி நட்சத்திரத்தில கடைசி உச்சக்கட்ட காட்சில பிசி ஸ்ரீராம் பளிச் பளிச்னு ஒளி அடிச்சு பாக்க வந்தவன் கண்ணெல்லாம் ஒரு வழி பண்ணி விட்டாமேரி இங்க இல்லை. ப்ளூ டின்ட், டார்ச் லைட் ஹ்ம்.. 'மவனெ கொல காண்ட்ல இருக்கேன் மவனே ஓடிப்போய்டு'ன்னு வசனம், அடிக்கடி வருதே ஏனுங்ணா கார்த்திக்? பாக்க வந்தவன சொல்றீங்ளாண்ணா ?!.ஹிஹி.. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே.. #டான்ஸ்கில்லர்

.

Tuesday, December 18, 2018

மன்ட்டோ'



மன்ட்டோ' பார்த்துக்கொண்டிருந்தேன் காலையில். லூதியானாவில் பிறந்து பாம்பேவிற்கு குடி பெயர்ந்து, பின்னர் லாகூக்கு புலம் பெயர்ந்த எழுத்தாளர். ரொம்ப நாட்களாக அவர் பெங்காலி என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் பஞ்சாபி ! தண்டா கோஷ்ட் (குளிர்ந்த இறைச்சி) கதைக்காக கோர்ட் வாசலுக்கு நடையாய் நடந்திருக்கிறார். லாகூரில் 'பாக் டீ ஹவுஸ்'ல் அவரும் சக எழுத்தாள நண்பர்களும் காரசாரமாக இலக்கியம் அரசியல் என  விவாதிப்பதை உள்ளூர் சர்வாதிகாரிகளாலும் தடுக்க இயலாதாம். என்ன படம் முழுக்க ஒரு ஆவணப்படம் போல தோன்றுவது சலிப்பு. இத்தனைக்கும் நவாஸுதின் ஸித்திக்கி, இவரை ரமன் ராகவ்'விலும் பின்னர் ஷாரூக்கானின் 'ரயீஸிலும்' பார்த்ததை விட இங்கு ஏமாற்றியிருக்கிறார்.இவரைத்தான் கொண்டு வந்து 'பஞ்ச் டயலாக்' பேச வைத்தனர் பேட்ட ஆடியோ ரிலீஸீல். ஹிஹி.

புகைக்கிறார் குடிக்கிறார் எனக்கு ஒரு எழுத்து போலும் புரியாத உருதுவில் எழுதித்தள்ளுகிறார். அவர் பிடித்த சிகரெட்டுகளின் எண்ணிக்கை எப்படியும் ஒரு ஐநூறைத்தாண்டும் படத்தின் இரண்டு மணிநேரத்துக்குள். அதிக உருது வசனங்கள். புரியச்சிரமம் , இன்னொரு முறை 'அடியெழுத்துகளின்' துணையுடன் பார்க்க வேணும். குதா ஹாஃபிஸ், தஷ்ரீஃ ரக்கியே.. எல்லாம் உருது யப்பாஆ..  நீ இப்டி எழுதறாலதான் நாம இப்டி கஷ்ட்டப்பட்றோம்னு மனைவி சொன்னதும் விருட்டென எழுந்து சென்று கை கழுவுகிறார்.

மனதைத்தைக்கும் இடமோ , இல்லை வசனங்களோ, இல்லை நிகழ்வுகளோ இல்லை. காமராஜர் படம் இப்படித்தான் இங்கு இருந்தது. எல்லாம் வரலாற்று ஆவணங்கள். சலிப்பூட்டும் திரும்பத்திரும்ப வரும் காட்சிகள். எழுதி முடித்த கதைகளுக்கு/நாடகங்களுக்கு இப்பவே பணம் கொடுத்தாலே ஆயிற்று என்று பல காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது சலிப்பு. தானாய் மூடிக்கொள்ளும் திட்டிக்கதவை வலுவாய்த்திறந்து மூடி தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று அவர் நண்பர் சொல்ல, ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் என மன்ட்டோ கூறுகிறார். இந்த பாகிஸ்தான் இந்தியா பிரிவினை குறித்து தமிழனுக்கு கிஞ்சித்தும் தெரியாது. எதையும் கிளறவும் செய்யாது. இருப்பினும் அந்தக்காட்சி அத்தனை உணர்ச்சியற்ற அமைப்பு. எப்படா படம் முடியும் என்றாகி விட்டது எனக்கு. நந்திதா தாஸ் நடிச்சா மட்டும் போதும் ...#மன்ட்டோ



Monday, December 10, 2018

பேட்ட பராக்!



வணிக நாயகருக்கு நடிக்கத்தான் பிடித்திருக்கிறது. மேடையில் சிவப்பு துண்டு போட்டு ஒரு இளைஞர் பிரமாதமாக அவரின் அத்தனை வேஷங்களையும் அபிநயித்துக்காட்டிக் கொண்டிருந்தார். உண்மையிலேயே நல்ல கலைஞர் அவர். அப்படியே செய்து காட்ட நிறையப்பேர் இருந்ந்த போதும் அவரின் அத்தனை அசைவுகளும் வணிக நாயகனைப்போன்றே அச்சசல் அமைந்திருந்தது, எத்தனை பேர் கவனித்தீர்கள் , ரஜினி அந்த இளைஞரை கட்டை விரலை உயர்த்தி புன்முறுவலுடன் பாராட்டியதை.  ஆடின காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது.

 அரசியல் கிரசியல்னு இவங்க தேவைக்காக இழுக்குறாங்ய. பேசாம நற்பணி மன்றமாகவே வைத்துக்கொண்டு இன்னும் பல உதவிகள் செய்ய இயலும்.  ஜிகர்தண்டா'வில் பாபி சிம்ஹாவின் கேரக்டரை எனக்கு ஏன் கொடுத்து இருக்கக்கூடாது என்ற அவரின் ஆதங்கம். ஹ்ம்.. படம் வேற லெவலுக்கு போயிருக்கும். இப்போதும் என்ன பேட்ட'யில் இன்னமும் கலக்குவார். தம்பி அநிருத் கிடைத்த வாய்ப்பை அப்படியே கபளீகரம் செய்து கொண்டு இறங்கி வேலை பார்த்திருக்கிறார்.

அத்தனை பாடல்களும் அற்புதம். கல்யாணப்பாடல் என்னவோ வேறு ஜானரில் இருக்குமென நினைக்கிறேன். உல்லாலா உல்லாலா லத்தீன் அமெரிக்க பாணியில் ஆந்தோனியோ பந்தேராஸ் போல கையில் கிட்டார் வைத்துக்கொண்டு ...ஆஹா...பாராட்ட வார்த்தைகளே இல்லை.  பேட்ட பராக்..வேற லெவல் இன்னமும் கேட்கவேணும்.

இது பழைய 'முள்ளும் மலரும்' காளியை, 'முரட்டுக்காளை' காளையனை, 'ஊர்க்காவலன்' காங்கேயனை மீளக்கொணரும் எனவே தோன்றுகிறது. கார்த்திக்கிற்கு அந்த ஜிகர் தண்டா ஒரு படம் போதும். நான் லீனியரில் கதை சொல்ல இப்போதைக்கு யாரும் இல்லை தமிழுலகில். இளைஞர்களுடனும் சேர்ந்து வெலை செய்ய ஒப்புக்கொண்டதற்கு ரஜினிக்கு வாழ்த்துகள். கேமரா முன்னால் நிற்கவில்லை மில்லியன் சனங்கள் முன்னால் நிற்கிறார் எத்தனை அற்புதமான கூற்று. ரோபோ கீபோல்லாம் வேணாம்டா. அவர் பழைய பரட்டை'டா ங்கொய்யால. #பேட்டபராக்!

Saturday, December 8, 2018

உல்லாலா உல்லாலா ...




பீலா பீலா பீலா விடாத (தானா சேர்ந்த கூட்டம்) , ஹொலா மீகோ (ரம்) வரிசையில இந்த உல்லாலா.. ஹ்ம்.. இதுவும் ஒரு  ஹிஸ்பானியா தீம். ராசைய்யாவி  'மாருகோ மாருகோ மாருகயே' கூட இதே ஜானர் தான். எல்லாரும் கொஞ்சம் ஊறுகாய் மாதிரி தொட்டுக் கொள்ளத்தான் செய்வர்.  யுவனின் 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' கூட இந்த ஜானர்ல வந்த பாட்டுதான். மென்மையா மெலடியா, அதிராத தாளம் கொண்ட பாடல் முழுக்க ரிதம் மாற்றாம, கிட்டார் வைத்துக்கொண்டு தலைவன் பாடுவது போன்ற பாடல்கள், ஆன்டானியோ பந்தேராஸ் பாடுவார் 'எல் மரியாச்சீ'  லூயி ஃபொன்ஸி 'டெஸ்பாஸீத்தோ'ன்னு எடக்கு மடக்கா அந்தப்பெண்ணோட பாடி ஆடுவார். போர்ச்சுகல்/ஹிஸ்பானியா டைப் ஸாங்.

கோவா' டைப் ஸாங்னு வெச்சிக்கலாம். இத வயசான காலத்துல ரசினிக்காக போட்டது தான் எப்டீன்னு தெரியல. ஏன் வயசானவா எல் மரியாச்சி பாடக்கூடாதா? ஹ்ம்..  ரசினிக்கு இது மாதிரி பாட்டு இப்பதான் முதன்முறை :)

கார்த்திக் சுப்பராஜ் போயி சந்தோஷ் கால்ல விழணுமாம் இந்தப்பாட்டுக்காக. யாரோ எழுதியிருந்ததப்பார்த்தேன். ரஹ்மான் கூட ராசைய்யாவின் பாணியில் தான் இசைத்திருந்தார் வணிக நாயகனுக்கு, அதை உடைத்து பிற பாடல் ஜானர்களையும் இசைக்கலாம் என கொஞ்சம் முயற்சித்தால் தவறு. என்னதாண்டா உங்களுக்குப்பிரச்ன ?! #உல்லாலா


Wednesday, November 28, 2018

ம்யூஸிக் ரவுடி




ஒரு காலத்துல ம்யூஸிக் ரவுடியா இருந்த யுவன்...இங்க ஐயோ பாவமா இருக்கார். பழைய ட்யூன், அதே பழைய மெதட் ஆஃப் சாங் மேக்கிங். என்ன பண்றது, பசங்கல்லாம் வளர்ந்து வந்து அடிபின்றானுங்களே.. என்ன பண்றது ..ஹ்ம்..?  ராப்/ஹிப் ஹாப்ல ட்ரை பண்ணீருக்கலாம். இது குத்து மாதிரியும் இல்லை,  சும்மா பாப்'மேரியும் இல்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னில் ட்ரெம்ப்பெட் வருவதெல்லாம் அரதப்பழசு யுவன். 

ஒமக்கு என்னாதான் ஆச்சு.? கிளர்ந்தெழச்செய்யாத இசை. வயசாயிருச்சா?!. இந்த ஜானர் ஒத்து வரல.இதுக்கெல்லாம் யூத் மனசு வேணும். அதான் தம்பி அநிருத் இப்ப இந்த மாதிரி ஜானலர்ல கலக்கிக்கிட்டு இருக்கான். சிங்காரி சரக்கு'ல்லாம் ராசைய்யா உச்சத்தில இருந்தப்ப போட்டது..ஹ்ம்...என்ன சொல்றது ?! தனுசுவின் லிரிக்ஸ் எங்கயுமே ஒக்காரலை. ஒட்டு மொத்தமா ஃப்ளாப்.  #ரவுடி

.

Tuesday, November 13, 2018

காகித உறைகள்

இன்னிக்கு பக்கத்தில இருக்கிற மெடிக்கல் ஷாப்பில சில மாத்திரைகள் வாங்கப்போயிருந்தேன். ஆச்சரியம் மாத்திரைகளை ஒரு காகித உறையில் போட்டுக்கொடுத்தார். அந்தக்காகிதம் எதோ ஒரு புத்தகத்தின் ஒரு பக்கமாக இருந்திருக்கக்கூடும். 

அப்போதைய காலங்களில் எல்லாப்பொருட்களுமே காகித உறைகளிலேயே வழங்கப்படுவது வழக்கம். அப்படிக்கிடைத்த உறைகளை புரட்டிப்புரட்டிப்பார்த்து அதில் எழுதியிருப்பவற்றை வாசிப்பது வழக்கம் எனக்கு. சில சமயம் விகடன்/குமுதம் போன்றவைகளின் பக்கங்களிலும் உறைகள் செய்யப் பட்டிருக்கும். வாய்ப்பிருப்பின் சிறுகதைகளின் ஒரு பக்கத்தை நான்காக மடித்து பசை ஒட்டி அந்த உறையை அளவிற்கேற்ப தயாரித்து வைத்திருப்பர். பொதிந்து கொடுக்க. அப்படி சில சிறுகதைகளை அந்த சிறுமடிப்பிலேயே வாசித்துவிடுவது என்பதில் உள்ள சுகம் அலாதி. 

வீட்டிற்கு வந்து அதனுள் இருக்கும் பொருட்களை எடுத்து வைத்துவிட்டு கவனமாக அந்த பசையை நீக்கி,(சில சமயம் கிழிந்து கொண்டே போகும் :)) , கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முழுப்பக்கத்தையும் வாசிப்பது என்பது சால சுகம். சில சமயங்களில் அந்தக்கதைப்பகுதி மிகப்பெரிதாக இருக்கும் பட்சத்தில் , மீதக்கதையை நமக்குள்ளேயே புனைந்து கொள்வதும், இன்னொரு பொருள் வாங்கியிருந்தால் அதன் தொடர்ச்சி அடுத்த காகித உறையில் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதே என்ற நப்பாசையும் கிளர்ந்தெழும். 

இப்பொதெல்லாம் மால் கலாச்சாரம் , காகித உறைகளையோ , இல்லை அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறுகதை, கட்டுரைகளையோ வாசிக்கவோ வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இருப்பினும் இன்று வாங்கிய காகித உறை , எதோ ஃப்ரன்ட்லைன் பத்திரிக்கை போல வழவழவென இருந்த பக்கம், சுவைக்கவியலாத கட்டுரை. இருப்பினும் அந்தக்கால நினைவுகளை கிளறத்தவறவில்லை. இன்று கடலை வாங்கினால் கூட காகிதத்தில் வருவதில்லை. எல்லாம் அந்தக்கடையின் விளம்பரம் தவிர சுவாரசியமான பத்திகள் வாசிக்கவென எதுவும் வாய்ப்பதில்லை. ஒரே ஆறுதல், தீபாவளிக்கு வெடிகள் வெடித்து மிச்சக்குப்பைகள் எல்லாம் காற்றில் பறந்து கொண்டிருந்தன தெருவில் இங்கு, அவையனைத்தும் தினத்தந்தி நாளிதழின் பக்கங்கள்...! #காகிதஉறைகள்

.