ஹாம்லெட் பற்றிய காணொளி கண்டேன், நேரடி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது போனது வழக்கம்போல. பாலா பேசிய ‘டான் க்விக்ஸாட்’ நிகழ்வுக்கும் இதே போல நேரங்கழித்து கலந்து கொள்ள வாய்த்தது. இங்கு ஹாம்லெட் பற்றி முதலில் பேசியவர் நவீனா, இத்தனை ஆங்கிலம் எதற்கு? ஒரு வாக்கியத்தில் இரண்டு தமிழ்ச் சொற்களே இருக்கின்றன. மற்றதெல்லாம் இங்கிலீஷ். ஆஹா.. ஷேக்ஸ்பியரின் புனைவுகளையோ நாடகங்களையோ மேற்கல்வியில் படிக்க வாய்ப்பில்லாது போன தொழில்நுட்ப படிப்பு எனது. மேலும் மூலத்தில் வாசிக்கவென செறிவான ஆங்கில அறிவு வேண்டியிருக்குமெனக் கேள்விப் பட்டிருக்கிறேன். அதனால் அருகில் கூட சென்றதில்லை. எளிதாக்கிய பதிவுகள் எங்கும் என் கண்ணில் படவில்லை. இது ஒரு நல்வாய்ப்பெனக் கருதி அமர்ந்தால் அத்தனையும் தங்கிலீஷ். போதும் போதும். அவர் ஆங்கிலப்பேராசியராக கூட இருக்கலாம். அவரின் பின் புலமெல்லாம் ஞானறியேன். செந்தமிழில் பேச வேணும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. (அப்படியே இருந்தாலும் ஆர்வத்துடன் வரவேற்பேன்.)
Saturday, January 30, 2021
ஹாம்லெட்
தமிழ் இலக்கிய கூட்டம் என்று முடிவான பின், தமிழ் மட்டுமே ஒலிக்க வேணும் என்று விரும்புபவன் நான். நாள்தோறும் காலைக்காப்பி முதல் இரவு உணவு வரை ஆங்கிலம் தவிர வேறேதும் பேசவியலாப்பணி எனது. இப்படிப்பட்ட இலக்கிய நிகழ்வுகளே தமிழுக்கு நெருக்கமாக என்னை உணரவைக்கும். எனினும் அவர் முழுக்க ஆங்கிலத்திலேயே உரையாடியிருக்கலாம். ஒரு குற்றமுமில்லை. பாலாவின் கூட்டத்தில் கூட ஒரு பெண்மணி (பெயர் மறந்து விட்டது) இங்கிலாந்தில் தான் வசிக்கிறார். அத்தனை அழகான தமிழில் இதுவரை அறியாத ’க்விக்சாட்’ குறித்த பதிவுகளை சொல்லிக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் அவர் பேச்சாளர் இல்லை அன்று. இங்கோ நிகழ்வைத் தொடர்ந்தும் கேட்கவியலவில்லை என்னால். என் மனதிற்பட்டதை சொல்கிறேன். அது ஆங்கில இலக்கியமாகவே இருக்கட்டும், அழகு தமிழில் பிறமொழி கலக்காது பேசினால் என்ன தவறு? தவிர்க்கவே இயலாத சொற்களை பேசுவதை எதிர்க்கவில்லை. ’மைக்’கை ஒலிவாங்கி என்றெல்லாம் பேசவேணும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை.!
நீரினும் ஆரளவின்றே
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
- குறுந்தொகை
இந்தக் குறுந்தொகைப் பாடல் யாரெழுதிய தென்று தெரியவில்லை. ’நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே’ என்று தொடங்குகிறது. எத்தனை ஆழம், எவ்வளவு பெரிது என் நட்பு, காதல்? என்றெல்லாம் சொல்கிறாள் தலைவி. இதே போல கெல்வின் ஹாரிஸ் எழுதி இசைத்த ஒரு ஆங்கிலப்பாடலும் இருக்கிறது. ‘How deep is your love? Is it like the ocean?’ கெல்வின் ஹாரிஸுக்கு குறுந்தொகையும் தெரிகிறதா?! இருப்பினும் கெல்வின் பாடலில் இந்த வரி உசிதம் ! “Is it like Nirvana?” நிர்வாணமடைதலைப் போன்ற ஆழமானதா என்ற இந்த வரி நிறைய யோசிக்க வைக்கிறது. இவ்வளவெல்லாம் காதலிக்க முடியுமாங்ணா ?!