Monday, July 23, 2018

செருப்பக்காரனும் இளம்பெண்ணின் ஆவியும்



பெங்களூர் வாசகசாலை தொடங்குவதற்கான அத்தனை ஆயத்தங்களையும் நானும்,ஸ்ரீனி, செந்தில் மற்றும் தயா,மகேஷ் உடன் விவாதித்து பின்னர் அந்தக்கூட்டங்கள் நடக்கும் போது சென்று கலந்து கொள்ளவியலாமல் போய்விட்டது அத்தனை வேலை தலைக்கு மேல்.ஒவ்வொருமுறை புகைப்படங்களும் ,கட்டுரைகளும் பகிரப்படும் போது ஆஹா இங்க இல்லாமற்போய்விட்டோமே என உணர்வு மேலோங்கும், நேற்று கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு சென்றே விட்டேன். பெங்களூர் தமிழ்ச்சங்கத்திற்கு. மூன்று மணிக்கே போய் அமர நினைத்தேன். நூலகம் திறக்கப்படவில்லை. எதிரே உள்ள அல்சூர் ஏரிக்கரையில் அமர்ந்து ‘உன்னதம் சிறப்பிதழை’ வாசித்துக்கொண்டிருந்தேன். இப்போது தான் நேரம் கிடைத்தது.

மணி நான்கானதும் மெல்ல ஏரிக்கரையிலிருந்து வெளிவந்து தமிழ்ச்சங்கத்துள் நுழைந்தேன். மேலே மூன்றாம் மாடியின் நூலகம் திறக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன, இரண்டொருவர் ஏற்கனவே வந்து விட்டிருந்தனர். பின்னர் செந்திலும் ஸ்ரீனியும் வந்து சேர்ந்தனர், ஒருங்கிணைப்பாளர் தாமு அனைவரையும் வரவேற்று பின் சுஜாதா நிகழ்ச்சிகளை துவங்கி வைத்தார். அறிமுகம் முடிந்த பின்னர் கதை பற்றிய விவாதம் தொடங்கியது. நேற்றைய தலைப்பில் மூன்று சிறுகதைகள் வாமணிகண்டனின் ஒன்று, பின்னர் லைலாவின் ஒரு கதை, பின்னர் அபிலாஷ் சந்திரனின் ஒரு கதை.விவாதித்த அனைவரும் அவைக்கூச்சமின்றி பேசினர், எனக்கு மகிழ்ச்சி. முன் பின் அறியதோர் முன்னில் இத்தனை விவாதப்பொருளை எடுத்துக்கொண்டு பேசுவது என்பது என்னைப்பொருத்தவரை கொஞ்சம் கடினமான விஷயந்தான். புது மாப்பிள்ளை ஹிந்து விநோதும்,மற்றும் நணபர் திருஞானம் திரு’வும் என் பின்னில் அமர்ந்து அமைதியாக விவாதங்களை கவனித்துக் கொண்டிருந்தனர். 



கதை எழுதிய ஆசிரியர் என்ன சொல்லவருகிறார் எதைக்குறிப்பிட்டு அதன் உள்நோக்கம் என்ன, அக்கதை வாசிப்பவனின் மனதை எங்கனம் பாதிக்கும் என்றெல்லாம் பல வித கோணங்களில் ஒன்றினை அலசுவது என்பது மிகச்சிக்கலான விஷயம். பேசுவோர் கதையை ஒன்றுக்குப்பலமுறை வாசித்து பொருளுணர்ந்து விட்டே மேடையேறினர் என்பது கண்கூடு. அலுவலகத்தில் கூட்டங்களில் பேசுவது என்பது எளிது ஏனெனில் அனைவரும் திரட்டப்பட்ட ஆட்களல்ல, ஒரே தொழில் நுட்பத்தில் தம்மை பிணைத்துக்கொண்டு சற்றேறக்குறைய ஒரே விதமான புரிதலோடு, சமவிகிதத்திலான அறிவோடும் அமர்ந்திருப்பர். (Targeted Audience)  இங்கோ அங்கனமில்லை. பலதரப்பட்ட பார்வையாளர்கள், என்னைப்போன்ற கொஞ்சமேனும் எழுதுபவர்கள், பிரபல எழுத்தாளர்கள் தீவிர வாசகர்கள் என பலவகை, அனைவரையும் ஒருங்கே அமரவைத்து ஒரு கதைப் பொருளை விவாதிப்பதென்பது கடினமான விடயம் தான்.மேடையிலிருந்து விவாதித்த மூன்று பேருமே தாம் உணர்ந்த விஷயங்களை வெகுவாகவே பேசி கைதட்டல் வாங்கினர். 

சிறிது நேரங்கழித்தே அபிலாஷ் சந்திரன் வருகை புரிந்தார். அவரை நான் நேரில் பார்ப்பது இதுவே முதன்முறை. அவரின் திருட்டுச்சாவி என் வலைப்பூ வாசிப்புப் பட்டியலில் ஆண்டுக்கணக்கில் பூக்களை கொண்டு வந்து கொண்டேயிருக்கும் அதன் வாயிலாக அவர் எனக்கு மிகவும் பரிச்சயமானவர். தமது சிறுகதையை விவாதப் பொருளாக்கியதில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. அக்கதை உருவான விதம் பற்றி பேசினார். ’வைக்கம் முகம்மது பஷீரின்’ ஒரு சிறுகதையை வாசித்ததாகவும் அதன் தாக்கத்தில் இந்த மர்மக்கதையை எழுதியதாகவும் கூறினார். பேய் வசிக்கும் வீட்டில் குடியேறும் ஒரு எழுத்தாள செருப்பக்காரனின் (இளைஞனின்) கதை. கிணற்றில் தன் கணவனாலேயே தள்ளிக் கொல்லப்பட்ட ஒரு இளம்பெண் பேயாக உலவுவதாக கதையின் போக்கு. இதை உணர்ந்து தம்மை ஒப்புக்கொடுத்து அதை விரட்ட எந்த முயற்சியும் எடுக்காது கூடவே வசிக்கவைக்கும் இளைஞனை அதற்கு பிடித்துப் போய்விடுகிறது. இப்படிப்பட்ட பேயுலவும் வீடு என்பதால் சல்லிசாக வாடகைக்கு கொடுக்கப்பட்டது என்பதை அறிந்து மலைக்கிறான் செருப்பக்காரன்.



ஒரு நாள் மழை அடித்துப்பெய்கிறது.வழக்கம்போல வீடு இருளில் மூழ்குகிறது. ஒரு சிறு மெழுகு திரியை ஏற்றிவைத்துவிட்டு ஏதேனும் உண்ண வாங்கி வர வெளியேறுகிறான் இளைஞன். அந்த நேரம் அவனின் அறைக்குள் புகும் அந்த இளம்பெண்ணின் பேய் அவன் எழுதி வைத்திருக்கும் கதைகளை வாசிக்கும் வண்ணம் அறை முழுக்க பரப்பி வைக்கிறது. திரும்பி வந்து பார்ப்பவனுக்கு அதிர்ச்சி. மெழுகு திரி இன்னமும் அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. 

இந்தக்கதையை மையமாக வைத்து அவர் எழுதிய சிறுகதையை ஒரு இளம்பெண் கைகளை ஆட்டியும்,முகத்தில் பெரும் மகிழ்ச்சிப் பெருக்கோடும் விவாதித்தார் அபிலாஷ் அமைதியுடன் அமர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தார்.காத்துக்கிடந்த வயிற்றுக்கும் சிறிது தேநீர் வழங்கப்பட்டது கூடவே சில பிஸ்கோத்துகளும். கூட்டத்திலிருந்தும் பல கேள்விகள் கிளம்பின.

லைலாவின் சிறுகதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, உண்மையைச் சொல்லவேணுமென்றால் நான் விவாதத்திற்கென எடுத்துக்கொள்ளப்பட்ட  ஒரு சிறுகதையைக்கூட வாசிக்கவில்லை கூட்டத்திற்கு சென்று வெறுமனே அமர்ந்து கொண்டிருந்தேன். அக்கதை பாலியல் வன்புணர்வைப்பற்றின ஒரு பெண்ணின் பார்வையில் அமைந்த சிறுகதை. ஒவ்வொருவரும் தமக்கு முன்னாளில் நேர்ந்த வன்கொடுமையை பற்றி விவாதித்தனர். கீர்த்திகா என்னிடம் அவரின் மொபைலைக்கொடுத்து இப்ப வாசிங்க, வாசிச்சிட்டு போய் பேசுங்க என்றார், என்ன இது விளையாட்டு இப்ப இயலாது என்று மழுப்பி வைத்தேன். பெண்ணை போகப்பொருளாகவே பார்த்துப்பழகிய ஆண் வர்க்கத்தின் மன விகாரங்களை எடுத்துச்சொல்லி அதை அறவே களைய முற்படும் விவாதமாக அரங்கேறியது. பேருந்தில் பயணிக்க வேணுமெனில் ஒரு சிறிய ஊசியைக்கூடவே கொண்டு போகும் சிறுபெண்களின் உணர்வைப்பற்றி கீர்த்திகா பேசினார். முழுக்க நேரலை விவாதமாகவே கதை கதைக்கப்பட்டது.

ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தம் கதை தம் முன்னால் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு  காரசாரமாக விவாதிக்கப்படும் போது உண்டாகும் மகிழ்ச்சி ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயின் மனநிலை.

முடிவில் தாமு கூட்டங்களை நடத்த/ஒருங்கிணைக்க தன்னார்வப் பணியாளர்கள் வேணுமென வேண்டுகோள் விடுத்தார். கூட்டம் கலைந்தது.அடுத்த வாரத்திற்கென கதைத்தெரிவுகள் பற்றிய பேச்சோடு.



கலைய முற்பட்ட கூட்டத்தில் அபிலாஷிடன் பேசினேன். அவர் பெங்களூருக்கு வந்தது, பின்னர் அதன் குளுமையில் எழுதவியலாமற் போனது பற்றி பேசினேன். ‘வெம்மை’யில்லாததால் எழுத இயலவில்லை எனக்குறைப்பட்டுக்கொண்டிருந்தார் தமது முகநூற்பதிவில் முன்னாளில். இப்போது எப்படி எனக்கேட்டேன், இல்லை இந்தக்குளுமை இன்னமும் நேரங்கழித்தும் எழுத உதவுகிறது சென்னையில் எப்போதும் வியர்த்து களைத்துப்போகும் இங்கு அங்கனமில்லை. என்று மகிழ்வுடன் பேசினார். அப்ப இங்கேயே இருந்து விடுங்கள் என்றேன். சிரித்துக்கொண்டார். பின்னர் எனது செல்பேசி எண்ணை வாங்கிக் கொண்டார்.அவரின் கதையை கைகளை ஆட்டி ஆட்டி பேசிய இளம்பெண் , உங்க கல்லூரியில் கரெஸ்பாண்டென்ஸில் இந்தக்கோர்ஸ் இருக்குமா என்றவாறே அப்வரைப்பின்தொடர்ந்துகொண்டேயிருந்தார்.


இருப்பினும் கதைத்தெரிவுகள் இன்னமும் நேர்த்தியானதாக எடுத்துக்கொள்ளப்பட வேணும் என்பது எனது உணர்வாக இருந்தது. ஆழமான உட்பொருளுள்ள கதைகளை எடுத்து விவாதித்தால் இன்னமும் சிறக்கும் என்பது என் உணர்வு. பார்க்கலாம் இனி வரும் கூட்டங்களில் அது நிகழும் என்ற எதிர்பார்ப்புடன்….


Saturday, July 21, 2018

தூரமாய் - பேரன்பு





விஜய் ஏசுதாஸ் மற்றும் யுவன். தெளிந்த நீரோடை. சலசலத்து செல்லும் கூழாங்கற்கள் போல கிட்டாரின் இழைப்பு வரை வெளித்தெரிகிறது. பல்லவிக்கும் சரணத்துக்கும் ராக வேறுபாடு இல்லை அதுதான் நீரோடை. எங்கும் மாறாது தானாக வழி கொண்டோடும் அது. சரணங்களில் அங்கங்கு எதிரொலி கொடுத்து அழகு கூட்டியிருக்கிறார் யுவன். விஜய் ஏசுதாஸின் குரலில் தந்தையின் குழைவு அங்கனமே தொடர்கிறது. திசைகளை நீ மறந்துவிடு, பயணங்களை தொடர்ந்து விடு. மிகுந்த வியர்வையில் எங்கிருந்தோ வந்த குளிர் தென்றல் வீசுவது போன்ற இசையமைப்பு. யுவன் அவர் இடத்தில் எப்போதும் இருந்து கொண்டுதானிருக்கிறார்.

எத்தனை தான் கிழஞ்சிங்கம் வைரமுத்து எழுதியிருந்த போதும், ராம் மற்றும் யுவனின் நாடித்துடிப்பு கண்டு வரிகளை அள்ளிக்கொடுக்கும் நாமுஇல்லாதது பெரும் குறை. தேற்றும் பாடல் போல,எல்லாம் முடிந்தது என வீழ்ந்து கிடக்கையில், இன்னமும் அதையே நினைத்துக் கொண்டிருக்க வேணுமா என கேட்பது போல அமைந்திருக்கிறது பாடல்.

தண்ணீரில் வாழும் மீனுக்கு ஏது குளிர் காலமே”, “சலவை செய்த பூங்காற்று”, “குழலோடு போன சிறுகாற்று இசையாக மாறி வெளியேறும்அத்தனையும் வைரமுத்துவின் அடித்து ஓய்ந்துபோன துருப்பிடித்த பட்டறையின் வரிகள். ஐயா இப்படியெல்லாமா இன்னமும் எழுதிக்கொண்டிருக்கிறீர்? அத்தனை பாடல்களிலும் உயிர் வரிகள் இல்லாது இட்டு நிரப்பியவற்றவையே காணக்கிடைக்கிறது.
 
பாடலின் தொடக்கம் ஏகாந்த உணர்வைத்தர அதையே தொடர்ந்தும் இழைத்து பாடல் முடிவு வரை அதே உணர்வில் வைத்திருக்கிறது யுவனின் இசை. பச்சைப்பசேலென எழுந்து நிற்கும் ராமின் கற்பனையும் அதில் மழை பொழியும் யுவனின் இசையும், வைரமுத்துவின் வரிகள் மட்டுமே காய்ந்து நிற்கிறது. இதையே நாள்பூராவும் ஓடவிட்டுக்கொண்டிருக்கலாம் இசை மட்டுமே போதும் என உணர்வு மேலோங்குகிறது. மொழியற்ற பூமிக்கு எதற்கு வரிகள் ?! இசை மட்டுமே போதுமே?!

.

Tuesday, July 17, 2018

’ஆஸ்டின் இல்லம்’



ஆஸ்டின் இல்லம்னு ஒரு பெருங்கதை எழுதீருந்தார் அப்ப வந்தஇந்தியா டுடேயில் சுஜாதா. அது தான் இப்பத்தைய வடிவம் கடக்குட்டீ சிங்கம்! கிட்டத்தட்ட ஒரு பெரும் கிராமத்தின் ஆட்கள் வீட்டுக்குள்.அத்தனை கதா பாத்திரங்கள், அத்தனை பெயர்கள், அவர்களின் உறவுமுறை எங்கும் பிசகாது அத்தனை உறவுமுறைகளையும் தெளிவாக உச்சரிக்கும் அத்தனை பாத்திரங்களும். அதுல வர்ற ஒரு சின்னப்பையன் கேப்பான் சக வயது பெண்டுகள்ட்ட எஃப்ல ஆரம்பிச்சுகேல முடியற இங்கிலீஷ் வார்த்தை நாலு சொல்லு பாப்பம்னு.அது மட்டும் தெளிவா எனக்கு ஞாபகம் இருக்கு  ஹெவிலீ இன்ஸ்பையர்டுன்னு சொல்லி தப்பிச்சுக்கலாம் பாண்டிராசு.



வயலும் வாழ்வும், விவசாயின்னு பைக்ல எழுதி வெச்சுக்கிட்டு ஊர் சுத்துவது, காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல கதா காலட்சேபம் நடத்துறது எல்லாம் ஜிகினா வொர்க். எங்கவிவசாயீஈ விவசாயீஈன்னு பாடீருவாரோன்னு ஒரு பயம். அது மாதிரி எதுவும் இல்லை
:) சொல்லப்போனா கார்த்திக்கி அழவே தெரியலை. மூஞ்சைப்பாக்கவே சகிக்கலை. அந்த ரேக்ளா ரேஸ் யுகங்கள் கடந்தும் பயணிக்கும்பென் ஹர்’. எத்தனை ஈரோயினி, யப்பாப்பா எல்லோருக்கும் அழகிய தமிழ்ப்பெயர்கள். கண்ணுக்கு இனியாளான்னு ஒரு இடைவெளி விட்டு மெளனிகா கேக்கும் போது பக்குனு சிரிப்பு வருது. கண்ணுக்’கினியா’ கல்ச்சுரல்ஸ்ல கைல பறை வைத்துக்கொண்டு அடித்து தாளமிட்டு ஆடுகிறார். எதோ சேட்டு வீட்டுப்பொண்ணுஹ நம்மூர் கிரமத்திருவிழாவ வாயப்பிளந்து கேட்டுக் கொண்டிருப்பது போல ஒரு ஃபீலிங்கி.ஹிஹி.. கொஞ்சமும் பொருந்தவில்லை.



சத்யராஜ் அப்படியேவருத்தப்படாத வாலிபர் சங்கபெரியவர்! அப்பாகிட்ட காதலிய காட்டீட்டு அப்பால லவ்ஸ் உட்றதெல்லாம் புதுசு கண்ணா :) ஆமா,இந்த எதிரி எதுக்கு இந்தப்படத்துக்கு? தேவையேயில்லையே ..?! ஹ்ம்..காட்டுல போயி கருவேலத்த அறுப்பாராம். அப்பால கார்த்திட்ட அடிவாங்கி எங்க ஓடுனார்னே தெரியாமப் போவாராம்.அடக்கருமமே..  அதே மாதிரி இம்மானு, இருக்க எடமே தெரியல.!  என்ன பாட்டு ஒண்ணும் வெளங்க இல்ல



ரொம்ப நாளைக்கி பிறகு வந்த பாண்டிராசுக்கு ஒரு சிறு வெற்றி இதன் மூலம் கிடைக்கலாம். பெண்கள் மனது வைத்தால்.எப்பவும் தமிழப்பய ’செண்ட்டிமெண்டல் இடியட்’ தானே அதனால,! ஹிஹி இந்தக் காலத்துல இம்மாம்பெரிய பெத்த ஃபேமிலீல்லாம் ஏதுங்ணா.? கண்ணாலமே பண்ணாத சும்மானாச்சுக்கும் தத்து எடுத்துக்கிற கலாச்சாரம் தான் வளந்துகெடக்கு. என்னவோ ஒரு தெலுங்கு படம் பாக்றாமேரீயே ஒரு ஃபீலிங்கி ஒஅடுது படம் முழுக்க. ஆஹா அதானே பாத்தேன் இதே படம் உள்ளூர் விநாயகா தேட்டர்ல ‘சின்னபாபு’ன்னு தெலுகுலோ ஒடுதூங்ணா
:)