Saturday, June 12, 2021

Gate to Hell - HeraPolis

 Private Tour: Pamukkale Hierapolis and Aphrodisias Tour 2021

ஜாஷ் கேட்ஸின் ’Josh Gates’ ‘Expedition to the Unknown’ நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். டிஸ்கவரியில், இவர் இன்னொரு பியர் க்ரில்ஸ். ஆனாலும் இவரின் நிகழ்ச்சிகள் வெறும் மலையேற்றம், நீண்ட சுழலுள்ள நெடுநதியில் நீந்திக்கடத்தல் என்பன போன்ற சாகசங்கள் இல்லை. அத்தனை நிகழ்வுகளும் தொல்லியல் சம்பந்தப் பட்டவை. இன்றைய நிகழ்ச்சி இறப்பிற்குப்பின் வாழ்வு என்பது குறித்து, வழக்கமாக யூட்யூபில் பார்த்துச்சலித்த அதே விஷயங்களைப் போட்டுத் தாளிக்க போகிறார் என நினைத்து உட்கார்ந்தால் அத்தனையும் மிகப்புதுமை.
 
ஹீராபோலிஸ் என்ற ஒரு இடம். துருக்கியில் இருக்கிறது. விக்கியில் தேடினால் விபரங்கள் கொட்டுகின்றன. அதுவல்ல முக்கியம். இங்கு ஒரு Gate to Hell அதாவது ஒரு ‘நரகத்தின் வாயில்’ இருக்கிறது. உள்ளே நுழைந்தவர் மீள்வதில்லை என்பது ஐதீகம். 🙂 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பூசாரி பலி கொடுக்க கிடாக்களையும் , செம்மறிஆடு, மாடுகளையும் அந்த குகையின் உள்ளே கொண்டு செல்வார், பின்னர் அவர் மட்டுமே திரும்ப வருவார். என்ன ஆகிறது அந்த அனிமல்ஸுக்கு. அவை உள்ளே சென்ற கணம் பலி கொடுக்கப் படுகின்றன. இருப்பினும் பூசாரி கையில் எந்த ஆயுதமும் எடுத்துச் செல்வதில்லை.
 
நம்ம ஜாஷ் கேட்ஸ், கூட வந்த தொல்லியலாளரிடம் கேட்கிறார். நாம இப்ப உள்ள போனா திரும்பி வருவமா? என. ‘வந்தாலும் வரலாம்; எனக்கூறிச் சிரிக்கிறார் அவர். ஜாஷ் ஒரு ஜேம்ஸ்பாண்ட், கொஞ்சம் கூட யோசிக்காது ஒத்துக்கொள்கிறார். இப்ப என்ன பிரச்னை எனில் அந்தப் பகுதியில் முன்னரே இருந்த வெந்நீரூற்றுகள் கசிந்து அந்த குகை முழுக்க பரவிக் கிடக்கிறது. குகை வெந்நீர்க்குளமாக இருக்கிறது. உள்ளே செல்ல வேணுமெனில் நீர்மூழ்குவபர் (Divers) உடை அணிந்தே செல்ல வேணும். நீர்க்குமிழிகள் நுரைத்துக்கொண்டு வெளிவருகின்றன. அதில் மூழ்கி சென்று உள்ளே என்ன தான் இருக்கிறது என்று பார்த்தே ஆகவேணும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருவரும் செல்கின்றனர். உள்ளே செல்லச்செல்ல குமிழிகள் கேமெரா திரையை மறைக்கின்றன. வெந்நீரூற்று கசிந்து வெளியேறும் சிறு இடைவெளி வரை பயணித்து செல்கின்றனர். இருவரும். கூடவே கேமராக்காரரும் :) ஹ்ம்.. நம்ம ஜேம்ஸ் பாண்டுக்கு ஒன்றும் ஆகவில்லை. உள்ளே பேசிக் கொண்டே செல்கிறார். அவர் பேசும் அத்தனையும் திரையில் பெரிய எழுத்துகளில் தெரிகிறது. நீருக்குள் மூழ்கினால் சொற்கள் தெளிவாகக் கேட்காது என்பதால்.

உள்ளே சென்று பார்த்தவருக்கு சப்’பென ஆகிவிட்டது, பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் தான். ஆரும் மரிக்கவில்லை. ஆடும் மரிக்க வில்லை. ஹிஹி...சரி போதும் இங்கருந்து என்ன பண்றது என்று இருவரும் நீந்திக்கடந்து வாயிலை அடைகின்றனர். மரண வாயில் அல்ல அது. சரி மேலே தான் வந்து விட்டோமே என ஆக்ஸிஜன் மாஸ்க்கை கழற்ற முற்படுகிறார் கேட்ஸ். அப்போது தான் தொல்லியலாளர் தடுக்கிறார். கழற்ற வேண்டாம், கழற்றினால் இறப்பு உறுதி எனக்கூறி விட்டு உங்களுக்கு ஒன்று காண்பிக்கிறேன் என்கிறார். ஆக்ஸிஜன் மற்றும் இன்னபிற வாயுக்களை ஆராயும் மானியை இயக்கி காண்பிக்கிறார்.

அங்கு அந்த இடம் முழுவதும் ,குகை உள்ளே வெளியே, நீரூற்று பரவிக்கிடக்கும் அத்தனை பகுதியிலும் எவ்வித விலங்குகளாலும், மனிதனாலும் சகிக்க இயலாத அளவிற்கு கார்பன் டை ஆக்ஸைடு பெருகிக் கிடக்கிறது. ஆக்ஸிஜன் மிகக்குறைந்த அளவே இருக்கிறது எனினும் மனிதர்களால் அங்கு நிலை கொள்ள முடியும் எனக்கூறிச் சிரிக்கிறார். ஆஹா இவ்வளவு தானா மரணவாயில். உள்ளே அழைத்துச் செல்லும் விலங்குகளை அதன் உயரத்திற்கு இருக்கும் குறைந்த அளவு ஆக்ஸிஜன், பெருகிக்கிடக்கும் கரியமில வாயு தானாகக் கொன்று விடுகிறது. பூசாரியின் உயரத்தில் ஆக்ஸிஜன் போதுமான அளவு இருப்பதால் அவரால் வெளியே வந்து விட முடிகிறது. கரியமிலவாயுதான் நரகத்தின் வாயில் 🙂 #GatetoHell
 
.