Saturday, October 29, 2011

சலனங்கள்




நகர்ந்து கொண்டேயிருக்கும் ஆறு
ஆற்றின் அடியில் கிடக்கும்
கூழாங்கற்களை சிறிது புரட்டிப்போடுகிறது

விடாமல் காற்றுக்கு
தலையசைத்துக்கொண்டேயிருக்கும்
மரக்கிளைகள், அமர்ந்திருக்கும்
பறவைகளை கொஞ்சம்
அலைபாயச்செய்கின்றன

பறந்து கொண்டேயிருக்கும் பறவைகள்
வெய்யிலின் கதிர்களை படுக்கை வசமாக
நறுக்கிக்கொண்டு பறக்கின்றன

இடம் மாறிக்கொண்டேயிருக்கும் மேகங்கள்,
தங்கள் உருவத்தையும் அவ்வப்போது மாற்றிக்கொண்டு
கீழிருக்கும் வயல்களை நனைத்துச்செல்கின்றன

அலைந்து கொண்டேயிருக்கும் மனது
என்னை வேறு எதையும் செய்யவிடாமல்
வெறுமனே அலைக்கழித்துக்கொண்டேதானிருக்கின்றது.









.

Saturday, October 22, 2011

சவப்பெட்டியில் பூத்திருந்த மலர்கள்




இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில்
டர்னிப் இலைகள் கருகிப் போயிருந்தன
ஜன்னல் எரிந்து கொண்டிருந்தது.
அறையைப் புகை நிறைத்தது.

ரத்தச் சிவப்பாயிருந்த
ஒரு ரோஜாவின் இதழைப்
பிய்த்துச் சாப்பிட்டேன்
புகைபோக்கியில் புகைக்குப்பதில்
ரத்தம் வந்து கொண்டிருந்தது.

ஸ்தாரே மெஸ்தோ’வின் தெருக்களில்
ஒரு கசாப்புக்காரனிடம்
இரந்து பெற்ற ஒரு ராத்தல்
மாட்டிறைச்சி மெல்லக் காய்ந்து
ஈக்கள் மொய்த்துக்கிடந்தது.

எழுதுவது என்பதே
‘இயற்கையான வகையில்
வயோதிகத்தை அடைவதாகும்’
என்று கஃப்கா என் காதுகளில்
ஓதிக்கொண்டே எழுதியவற்றை
தானே கிழித்துக்கொண்டிருந்தான்

ஸ்லிவோவிஸ்-ஸின் ருசி இன்னமும்
அடி நாக்கில் பிரண்டு
கொண்டுதானிருக்கிறது
ப்ளம் செடிகள் தம்
மலர்களை உதிர்த்து விட்டிருந்தன.

பூ ஜாடியொன்றில் இற்றுப் போன
வெண்மலர் கொத்தொன்று கிடந்தது.
என் கரம் நிர்வாணமாக இருந்தது.
அது குளிர்காற்றில் ஜில்லிட்டுப்பின்
கல்லாய்ச் சமைவதை உணர்ந்தேன்.

வருவோர் போவோரை
உற்று நோக்கிக்கொண்டு
செல்ல வழியறியாது நின்ற பூனை
தன்னாலியன்றவரை சிறிதளவு
ஒலியெழுப்பிக்கொண்டிருந்தது



.

Thursday, October 20, 2011

தஞ்சாவூரு மாடத்தி

உயிரோசை'யில் வெளியான திரை விமர்சனம்



முருங்கைக்காய் வாங்கிக்கொண்டு வரும் எண்பதுகளின் வாத்தியார் பாக்யராஜ், தான் அப்போது சென்ற கிராமத்துக்குத் தமது மகனை அனுப்புகிறார். வழக்கம் போல கிராமத்துக்குச் செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மகனாக விமல். பொட்டக்காட்டில் புழுதி பறக்க வந்திறங்குகிறார் தனது அரசாங்க வேலைக்கும், Certificate-குமாக.

"இதுஹள்லாம் படிச்சு என்ன கலெக்டர் வேலைக்கா போஹப்போகுதுஹ.? பொழப்பப்பாருங்க வாத்யாரே" என்று டிபிக்கல் வில்லனாக வரும் பொன்வண்ணன். அவரும் அவரது அடியாட்களும் வரும் எல்லாக்காட்சிகளிலும் கட்டியிருக்கும் வேட்டி சட்டையில், ஒரு துளிகூட மண்தூசு ஒட்டாமல் வந்து செல்கின்றனர். அத்தனை புழுதிக்காட்டில், உடலெங்கும் சேறும் சகதியுமாகப் படம் முழுக்க வந்து செல்லும் கிராம மக்கள். உழைக்கும் வர்க்கமும் அதனைச் சுரண்டிப்பிழைக்கும் முதலாளி வர்க்கமும் எப்படி வாழ்கிறது என்பதற்கான குறியீடு அவர்களின் தும்பைப்பூ வெள்ளை வேட்டியும் இவர்களின் கோலமும். அவர்களை அந்த அளவிலேயே வைத்திருப்பதுதான் தமக்கு நல்லது என்று கருதி செங்கற்களின் எண்ணிக்கையை எப்போதும் குறைத்துச் சொல்லுதல், 'ஆண்டையை எங்களுக்குப் பல வருசமா தெரியும். நீ இப்ப வந்தவன்' என்று விமலுக்கு எதிராகவும் கிராம மக்களை அவர்களைக்கொண்டே பேசவைக்கும் காலங்காலமாக ஊறிக்கிடக்கும் அடிமைத்தனம், குடுக்குற வேலையப்பாப்போம், நீதி,நியாயம்னு எதுத்துக் கேள்வி கேட்டா , மொத்தப் பணத்தையும் திரும்பக்கேப்பானே என்று அவர்களைக் கேள்வி கேட்கவிடாமல் அதே இடத்தில் வைத்திருக்கும் அடக்குமுறை, என்று படம் முழுக்க முழுக்கப் பிரச்சார நெடியின்றி வந்து செல்லும் காட்சிகள் அருமை.


இத்தனை நாளும் விடலைப் பையனாகவே வந்து கொண்டிருந்த விமலுக்கு இந்த வாத்தியார் வேடம் குருவி தலையில் பனங்காய்தான். இருப்பினும் நன்கு சமாளிக்கிறார்.பட்டம் பெற்றவர்கள் எங்கனம் வாழ்க்கைப்பாடம் தெரியாதவர்களாக இருக்கின்றனர் என்பதன் அடையாளம் விமல். முட்ட வரும் ஆட்டை சமாளிக்கத் தெரியாமலிருப்பது, மீன்கள் வகைகள் அறியாமலிருப்பது, தண்ணீர் பாம்பைப் பார்த்து அலறி அடித்து ஓடுவது என்று தினசரி வாழ்க்கையில் சாதாரணமாக நாம் எல்லோரும் இருப்பது போல அவரும் இருப்பதைக் காட்டியிருப்பது இயற்கை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கத்துக்கொள்கிறார்.

 
 எப்போதும் கிராமத்தை விட்டு ஓடிப்போகும் நினைப்புடன் இருக்கும் விமல் மேல் எதனால் காதல் வருகிறது என்று அழுத்தமாகச் சொல்ல எந்தக் காரணமுமில்லை இனியாவிற்கு. "உங்க வீட்டுல சீர் செனத்தி எதிர்பாக்காட்டாக்கூட நீங்க எதிர்பாப்பீஹ, கொஞ்சக்காசு சேர்த்து வெச்சிருக்கேன். பட்டணத்துல உங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு டீக்கடை வெச்சு மிச்ச சீரையும் அடைச்சிருவேன் , என்னக் கல்யாணம் பண்ணிக்குவீஹளா ?" என்று கேட்கும் வெள்ளந்தி இனியா (இவரும் மல்லுவாமே ?!) "மூணு நாளாப்பாக்கல, ஊருல எந்தப்பூவும் பூக்கல" பாடிக்கொண்டே வாத்தியாரை மடக்கிப்போட நினைக்கும் இனியா. முழுக்கச் சல்லடைக்கண்ணாக இருக்கும் ஆலிலையைக் கையில் வைத்துக்கொண்டு தமது முகம் மறைக்கும் இனியா. 'சொச்சக்கதய எப்ப சொல்லுவீரு'ன்னு வாத்தியாரை ஆழம் பார்க்கும் இனியா. வயலின் இசைக்குத் தகுந்தவாறு கொஞ்ச வருவது போல் தமது முக அசைவினால் கொள்ளைகொள்ளும் இனியா.விட்டால் இந்த விமர்சனம் முழுக்கவே அள்ளிக்கொண்டு போய்விடுமளவிற்கு இனியா..


"தனது கிடை அடைக்கும் பட்டியில் தங்குவதற்கு ஆள் வந்து விட்டானே என்று நினைத்து ஆட்டுக்கிடாவை மோதவிட்டுப் பழி தீர்த்துக்கொள்ளும் கிராமத்தான்." "யாருக்குமே புரியாது என்று நினைத்துக்கொண்டு, தான் போடும் கணக்கை தீர்க்க எவனுமேயில்லை என்று இறுமாப்புடன் அலைந்து கொண்டிருக்கும் தம்பி ராமையா", எங்க நம்மளயும் படிக்கச்சொல்லி இம்சை பண்ணுவானோன்னு நினைத்துக்கொண்டு, மண்பானையைத் தலையில் கவிழ்த்துக்கொண்டு கிணற்றில் விழும் சிறுவன்", "படிப்பு சொல்லிக்குடுக்குற வாத்தி இப்டி வீடு பெருக்கலாமான்னு கேட்டு, உங்க வீட்ட நல்லா சுத்தமா பெருக்கிக் கூட்டி வெச்சிருவேன், என்னப் படிக்கக் கிடிக்கன்னு கூப்டக்கூடாதுன்னு சொல்லும் சிறுமி" என்று படம் முழுக்க இறைந்து கிடக்கும் இவர்களெல்லாம் கிராமத்து இயல்பின் பதிவுகள்.

"நீ விதைக்கல, அறுக்கிற", "நீ விதைக்கல, அறுக்கிற" என்று வாத்தியாருக்குப் புரியும் மொழியில் பேசும் குருவிக்காரர் இளங்கோ குமரவேல் , "நான் போறேன், நீ இரு" என்று சொல்லிவிட்டுக் கதையில் விமலை இருக்க வைப்பதோடு, நம்மையும் விமலுடன் சேர்ந்து இருக்க வைக்கிறார் அந்தக் கிராமத்தில்.

புதிய மலராக மலர்ந்திருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான். படத்தின் பின்னணி இசையில் கொஞ்சம் சிரமப்பட்டிருந்தாலும் பாடல்களில் ஜொலிக்கிறார் .மேலும் இவருக்கென ஒரு பாணி/ஸ்டைல் இருப்பதை அழுத்தமாகவே நிரூபித்திருக்கிறார். இவருக்கு இன்னொரு படம் வரட்டும், அப்புறம் சொல்றேன் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.
"போறானே போறானே", விரகத்தை வேறு பாணியில் வித்தியாசமாகச் சொல்லியிருக்கும் பாட்டு. கஞ்சிராவையும், வயலினையும் வைத்துக்கொண்டு இனியாவிற்கென அவர் போட்டிருக்கும் "சாரக்காத்து" காதுகளுக்கு தேன் வார்க்கிறது.கொட்டாங்குச்சி வயலினை வைத்துக்கொண்டு இசைத்திருக்கும், ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே வரும் 'தஞ்சாவூரு மாடத்தி'யும் அருமை.


முதல் படமே Period Film என்றானதால் பின்னணி இசையில் சருக்கித்தானிருக்கிறார். அறுபதுகளில் இப்போதிருக்கும் எந்த எலக்ட்ரானிக் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸும் இல்லாத காலங்களில் உள்ள இசையை நமக்குக் காண்பிக்க அக்கார்டியனும், ட்ரெம்ப்பட்டும், வயலினும், கொஞ்சம் Double Bass -ஸுமாக வைத்து சமாளித்திருக்கிறார். இப்போதைய நவீனம் எந்த இடத்திலும் தெரிந்துவிடக்கூடாது என்று மெனக்கட்டிருக்கிறார் ஜிப்ரான். பின்னணியில் அப்போதைய சமகாலத்திய திரைப்பாடல்களை இலங்கை வானொலி மூலம் இசைத்திருப்பதின் மூலமும் நமக்கு ஒரு Feel கொண்டு வருகிறார்.பின்னணி இசையில் குறிப்பிட்டுச்சொல்ல வேணுமெனில் இனியாவிற்கான வருடிச்செல்லும் Flute bit –, தீம் மியூஸிக்கை சொல்லலாம். பிற காட்சி/நடிகர்களுக்கென தனியாக தீம் என்று வைத்துக்கொள்ளாமல் படத்தோடு ஒன்றிச்செல்கிறது பின்னணி இசை. Lisbon International Symphony Orchestra  வை வைத்துக்கொண்டு Children Choir -ஆக அவர் இசைத்திருக்கும் "ஆனா, ஆவன்னா' இந்திரா'வில் வந்த ரஹ்மானின் "அச்சம் அச்சம் இல்லை" பாடலை நினைவுபடுத்துவது தவிர்க்க இயலவில்லை. Same Genre என்பதால் இருக்கலாம். :-) Sorry Gibran.

கொத்தடிமைகளாகவே காலந்தள்ளும், அப்படி இருக்கிறோம் என்று அறியாமலேயே உள்ள கிராம மக்கள், அவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க அங்கு வந்து சேரும் வாத்தியார், அவ்வப்போது கடிதம் கொடுக்க வரும் PostWoman என்று அறுபதுகளில் நடக்கும் கதைக்குப் பொருத்தமாக முழுக்க Sepia Tone-லேயே படம் முழுக்க நகர்ந்து செல்வது அருமை. "இடைவேளை" என்பதைக் காண்பிக்கும்போது கூட "ளை"க்கு கொம்பு வைத்து காண்பிப்பது என்று மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர். எந்த இடத்திலும் 'பாரதிராஜா' தெரியாமல் பார்த்துக்கொள்வதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

'உழைப்பவனுக்கு சிலை எடுத்தால் அதிலும் கூட அவன் உழைத்துக்கொண்டுதான் இருப்பான்'னு ஒரு கவிஞர் சொன்னது எவ்வளவு நிஜம். உழைப்பதற்கென ஒரு ஜாதியும் அதை எப்போதும் சுரண்டித்தின்னும் ஒரு ஜாதியும் காலங்காலமாகத் தொடர்ந்து வருவது சோகம். தன்னாலியன்றவரை இந்த மையக்கருத்தை, பார்ப்பவர் மனதில் கொண்டுபோய்ச் சேர்த்து விடவேண்டும் என்ற துடிப்பில், படத்தை ஒரு  Period Film-ஆக கொடுத்திருக்கும் இயக்குனர் சற்குணம் உயர்ந்து நிற்கிறார் நம் மனதில்.

.



Tuesday, October 18, 2011

ஒரு குரல்


 



"இப்ப ஒன்னய என்ன செய்றதுன்னே தெரியல? எவ்வளவு சொல்லிருப்பேன் உங்கிட்ட? ஹ்ம்...கேட்டியா நீ? நீ நெனச்சதுதான் சரின்னு நெனச்சு பண்ணிக்கிட்டேயிருந்த இப்ப...?"இடி இடியெனச் சிரித்தான் அவன்.

"இங்க பாரு நான் செஞ்சது என்னவோ எல்லாம் எனக்கு சரிதான், உனக்கு தப்பா தெரியுதுங்கறதுக்காக என்ன நான் மாத்திக்க முடியுமா?, இப்டீ மாத்திக்கிட்டே போனா, நான் எப்டி நானாவே இருக்குறது? ஹ்ம்..சொல்றா .."

"எப்பவுமே நீ நீயா இருக்குறதப்பத்தி தான் நெனப்பா? .ம்..சுத்தி இருக்குறவங்களப்பத்தியும் நெனக்கணும், எப்பவுமே ஒலகம் ஒனக்காக மட்டும் சுத்திக்கிட்டு இருக்கல ...எல்லாரோடயும் சேந்து வாழ்ந்து தான் ஆகணும், ஒனக்குப்புடிச்சத செய்றதுங்கறது அடுத்தவங்கள பாதிக்காம இருக்கணும், ஒருத்தனோட மூக்கு வரைக்கும் ஒன்னோட கையக்கொண்டு போறதுக்கு உனக்கு சுதந்திரம் இருக்கு, ஆனா அவன் மூக்குல குத்துறதுக்கு இல்ல, புரிஞ்சுக்க."

"இப்டீ எல்லாப்பயலும் கையக்கொண்டுக்கிட்டு தான் வாராங்ய, அதுதான் எரிச்சலா இருக்கு மவனே திருப்பி அடிக்கணும்டா, அதுல தான் என்னோட உரிமை இருக்கு, அன்னிக்கு பாத்தேல்ல வீண் சண்டக்கி இழுக்கிறாங்ய, போக வேணாம்னு பாத்து, ஒதுங்கிப்போனா,என்னென்ன பேசுனாங்யன்னு ஒனக்கு தெரியாதா?, இங்க பாரு ஒன்னய மாதிரி நியாயம் தர்மம்னு இப்பவும் பேசிக்கிட்டுருந்தன்னு வெச்சுக்க, மவனே ஒன்ன பொலி போட்ருவாங்யடி, அடக்கி வாசிக்கணுமாம்ல அடக்கி, அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது மாப்ள, போட்டமா போனமான்னு இருக்கணும்."

"இதாண்டா, ஒங்கிட்ட புடிக்காத கொணம் எனக்கு, எவ்ளவ் சொல்லியும் திருந்த மாட்டேங்குற, என்னிக்காவது அடி பொளக்கப்போறாங்ய, அப்பத்தெரியும்டி சேதி"

"ஹ்ம்..ஒனக்குச் சொல்லி மாளாது என்னென்ன பேச்சு ஏச்சு வாங்க வேண்டிருக்கு? இதெல்லாம் எனக்கு தேவயா? ஒன்ன மாதிரி பூன மாதிரில்லாம் எனக்கு இருக்க முடியாதுடி.திருப்பிக்குடுக்கணும்டா, அப்பத்தான் நெருங்கவும் பயப்படுவாங்ய, ஒன்ன மாதிரி ஒதுங்கி ஒதுங்கி போயிக்கிட்டிருதேன்னு வெச்சுக்க, இன்னேரம் புல்லு மொளச்சுப்போயிருக்கும்டி...ச்ச, அதெல்லாம் ஒரு பொழப்பா ..?ஹ்ம்..?"

"வேண்டாம் மாப்ஸு, நிறுத்திக்க, போதும், எப்பவும் அடுத்தவன நோகடிக்கிறதும், கெட்ட வார்த்தைல திட்டி அசிங்கப்பட வைக்கிறதும், ஒன்னய நெருங்கவிடாமப் பாத்துக்குறதும் எத்தன நாளைக்கி தான் நடக்கும், ஒரு மிருகத்த பாக்றமாதிரில்ல ஒன்னப்பாக்றாங்ய இப்பவே, தொடர்ந்து இதே மாதிரி பண்ணிக்கிட்டேயிருந்தேன்னு வெச்சுக்க, சமயம் பாத்து போட்டுத்தள்ளத்தான் நெனெப்பாய்ங்க, அவ்ளவ் தான் சொல்லிட்டேன், ஓயாம இதயே சொல்லி சொல்லி எனக்கும் அலுத்துப்போச்சுடா, திருந்துற வழியப்பாரு, ஆமா."

"ஹ்ம்,,ஒன்னயும் பெத்தான் பாரு அவனச்சொல்லணும், பயந்தாங்கொள்ளி மாதிரி, ஓடி ஒளியாதடா, திருப்பி அட்றா, அப்பத்தான் ஒரு பயமிருக்கும் நம்ம மேல.சும்மா ஓடி ஒளிஞ்ச்சிக்கிட்டிருந்தன்னு வெச்சுக்க, மவனே தேடித்தேடி வந்து அடிப்பாங்ய, அடி வாங்கியே சாக வேண்டியதுதான்"

"நீ சொல்ற மாதிரி, இந்த காந்தி, புத்தன் மாதிரில்லாம் எனக்கு வாழத்தெரியாது, என்னய நோகடிக்காம என்னப்பாத்துக்கிர்றதுக்கு இதத்தவிர வேற வழியேயில்ல எனக்கு,அதான் எனக்கு சரின்னு பட்டத நான் செய்றேன், இதுல என்ன தப்பு இருக்கு?..ஹ்ம்..ஒரு கன்னத்துல அடி வாங்கிட்டு இன்னோரு கன்னத்த திருப்பிக்காட்றது இதெல்லாம் ஒனக்கு சரிவரும் எனக்கில்ல ..ஆமா மொதல்ல அடி வாங்குவானேன், அப்புறம் இன்னொரு கன்னத்தயும் காமிப்பானேன்,, மொதல்லயே தடுத்துட்டா இவ்ளவும் நடக்குமா?"

"ஓனக்கு நானக்கப்பாத்து இவ்ளவ் பேசிக்கிட்டு இருக்கேன் இன்னமும், வேறொருத்தனா இருந்தான்னு வெச்சுக்க, கையில அருவாளோடதான் பாத்திருப்ப நீ",

"ஹ்ம்,,அதத்தான மாமு நான் வெச்சிக்கிட்டிருக்கேன்  புரிஞ்சிக்க மாட்டேங்கிறியே?"

"வேணாம்டா, கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதாண்டா சாவு, நிறுத்திரு போதும், வேணாம்"

"ஐயையே, சின்னபபுள்ள மாதிரி பேசுனதயே பேசிக்கிட்டிருக்கியே மாமு, போ, ஏதாவது வேற சோலிகீலி இருக்கான்னு பாரு அத விட்டுப்புட்டு எங்கிட்டயே எப்பப்பாரு சிலுகிழுத்துக்கிட்டு?"

"சொல்றதெல்லாம் வேம்பாக்கசக்கத்தாண்டி செய்யும் இப்ப, பின்னால அனுபவிப்பேல்ல, அப்பத்தெரியும்டி சேதி,அவன் சொன்னானே, காது குடுக்கலியேன்னு "

"ஹ்ம்...பாப்பம் பாப்பம், அதயும் பாக்கத்தான போறேன்..இப்டி நீ சொல்ற மாதிரி பயந்தாங்கொள்ளியா இருந்து தெனம் சாகறத விட, ஒரேயடியா செத்துப்போகலாம்டி,போடா ஒன் வேலயப்பாத்துக்கிட்டு, பெருசா சொல்ல வந்துட்டான், நீ வந்தாலே எனக்கு என்னவோ பூச்சி ஊர்ற மாரதிரி இருக்குடா, நீ வராத, தொலஞ்சு போ மொதல்ல "

"வெரட்டாத, என்னை வெரட்டிட்டு நீ நிம்மதியா இருந்துரலாம்னு மட்டும் நெனக்காத, ஒன் பலமே நாந்தாண்டி, ஏதோ நான் இருக்கக்கண்டு இது வர தன்னக்கட்டிக்கிட்டு இருக்க, இல்லன்னு வெச்சுக்க, எப்பவோ நடந்துருக்கும்டி நடக்கவேண்டியது.. "

"போடா போ, போயிரு, வராத, நீ வரவே வராத, நீ வந்தாலே எனக்கு என்னமோ ஆகுதுடா, களைச்சுப்போகுதுடா, வேணாண்டா, போயிரு நீ போயிரு, போ போ ஒழிஞ்சு போ"

அந்த "ஒழிஞ்சு போ"வ ரொம்பவே கத்தி சொல்லிட்டேன் போல, பஸ்ஸில எல்லாரும் என்னயே திரும்பிப்பார்த்தனர். அவங்க ஏன் என்னயே பாக்றாங்கன்னு முதல்ல புரியவேயில்லை, பிறகு நானாகவே வெட்கப்பட்டு தலை குனிந்து கொண்டேன்.



.

Saturday, October 15, 2011

வெறுப்பு

உயிரோசை'யில் வெளியான கவிதை

அது விருப்பின் எதிர்மறை
என்று எனக்குத்தோணவில்லை.
அது விருப்பில் ஒரு நிலை
என்றே தோணுகிறது

இன்று வெறுத்து ஒதுக்கியது என்பது
என்றோ விரும்பியது மட்டுமே.
இதுவரை காணாததை,
அனுபவிக்காததை,கேட்டிராததை
என்னால் வெறுத்து
ஒதுக்க இயல்வதில்லை

விருப்பின் தெவிட்டு நிலையில்
வெறுப்பு தோன்றுகிறது
எனினும் நிலையெதிர் மாறாகத்
தோன்றுவதில்லை.

வெறுப்பின் உச்சத்தில் இருக்கும்போது
எனது முகம் இருகி விடுவதை
என்னால் தவிர்க்க இயல்வதில்லை
முகத்தின் குருதி முழுதும் வடிந்து
தாடையை விட்டிறங்கி
நெஞ்சிலேயே தங்கி விடுகிறது                                     


விருப்பிலிருந்து நழுவி
வெறுப்பிற்குச்செல்லுதல் என்பது
ஒரு பனிக்கட்டியின் மேல்                                                   

வழுக்கிச்செல்வதுபோல்
அவ்வளவு எளிதாயிருக்கிறது
அதுவே திரும்பும்போது
இருப்பதில்லை.

வாயின் வார்த்தைகளையும்

அது கட்டிப்போட்டு விடுகிறது.
என்னை அந்தச்செயலைத்தவிர
வேறெதையும் செய்ய விடாமல்                     
தடுத்தும் விடுகிறது.

அப்போதெல்லாம்

ஒரு அடிபட்ட மிருகத்தைப்போல
என்னை நான் உணர்கிறேன்
ஒரு குரல் எனக்குள் நடுக்கத்துடன்
களைப்புற்று ஹீனமாக ஒலிக்கிறது.

அதிலிருந்து விடுபட எத்தனிக்கும்

ஒவ்வொரு கணமும்
அதையும் விடவும் பல மடங்கு
வேகத்தில் என்னை
அது உள்ளிழுக்கிறது.
புதைமணல் போல.

என் கால்பாதங்களை

அருவிக்கொண்டு பின்
உடலெங்கும் பரவுகிறது ,
ஆகக்கடைசியில்
அது தன்னையே
மாய்க்கிறது எனக்குள்.

கீழிருந்து மேலாக

இந்தக்கவிதையை
சு'வாசித்துக்கொண்டு சென்றால்
ஒருவேளை உங்களின்
அடிமனதில் இருக்கும்
விருப்பு வெளிதெரியலாம்
நீங்கள் தொடர்ந்து
வெறுத்துக்கொண்டிருக்கும்
ஒரு விஷயத்தின் மேல்.



.

Tuesday, October 11, 2011

இரை




அசையும் புழுவுடன்,
அசைவற்ற மீன்தூண்டில் நரம்பு
அனங்குவதற்கென
மழிக்கப்பட்டிருந்த தலையுடனும்,
பழைய தாமிர உலோக
நிறத் தோலுடனும்.
காத்திருந்தான் ஒரு கற்சிலை போல்

நீருக்குள்ளிருந்த மீன்
அவனைத்தனது
வாலை மட்டும்
அசைத்துக்கொண்டே
பார்த்துக்கொண்டிருந்தது.

வாலசைவால் சலனப்பட்ட நீர்
புழுவையும் சிறிது
அலைபாயச்செய்தது
ஏதுமறியாத புழு ,மீனின் கண்களை
உற்று நோக்கியவாறு வளைந்து
நெளிந்து கொண்டிருந்தது.
கலங்கிய நீர்த்திரைகளினூடே
அவனால் அக்காட்சியைக்காண
இயலவில்லை.

பின்னர் அதிவேகமாக
மீன் தனது வாலைச்சுழற்றி
தூண்டில் நரம்புடன்
மீனவனை உள்ளுக்கிழுத்து
இரையாக்கிக்கொண்டது
மாட்டிக்கொண்டிருந்த
புழு விடுபட்டு
பின்நீந்திச்சென்றது.


Saturday, October 8, 2011

Strangers on a Car - முரண்




இந்த அப்பட்டமான Alfred Hitchcock- ன் காப்பி படத்துக்கு விமர்சனம் எதுக்கு? அப்டீன்னு முன்முடிவோட படம் பார்க்கப்போன என்னை தனது வலுவான திரைக்கதையால விமர்சனம் எழுத வெச்ச இயக்குனர் ராஜன் மாதவ்'விற்கு வாழ்த்துக்கள்.


எல்லாமே சரியா திட்டமிடப்படுது , எங்க திரும்பணும், எப்ப அடிக்கணும்,எப்ப சுடணும் என எல்லாமே கரெக்ட்டா எழுதி, ப்ளான் பண்ணி ஒரு கொலையைப்பண்றத காகிதத்தில் எழுதி வைத்துக்கொண்டு , Plan B கூட வைத்துக்கொண்டு ,திரையில் காட்சிகளை நகர்த்தி , ஒரு Compelling Drama-வை [Action Thriller- னு சொல்ல முடியல இந்தப்படத்த ] நம்மை இருக்கையை விட்டு எழுந்துகொள்ள விடாமல் பார்த்துக்கொள்கிறார் இயக்குனர். வசனங்களும் அதுக்கு ரொம்பவே கைகொடுக்கிறது.


பிரசன்னா முழுக்க நம்ப வெச்சு [ நம்மளயுந்தான் ..! ] கெடுக்கிற கேரக்டர். சேரன் அதே வழக்கம்போல உள்ளுக்குள்ளயே குமைந்து கொண்டிருக்கும் கேரக்டர் , யுத்தம் செய்'யிலிருந்து , ஒரு வேளை இது அடுத்து தொடர்ந்த படமா இருந்ததால அதே மூடு'ல நடிச்சிருக்கார் போல.ஆகாத மனைவி குடுக்குற ஆறின காப்பி குடிச்ச வருத்தம் முகம் முழுக்க இறைந்து கிடக்கிறது அவருக்கு.என்ன இந்தப்படத்துல துப்பாக்கி தூக்கிறதுக்கு பதிலா Guitar-ஐத் தூக்கியிருக்கார். [ பின்னால துப்பாக்கி தூக்கத்தான் செய்றார் ..! ]


சேரன் அவ்வளவு மன உளைச்சலிலும் நம்மை சிரிக்க வைக்க முயல்வது "நான் எனக்கு கல்யாணம் ஆகலன்னு சொன்னனா ? "ன்னு கேக்ற இடம் மட்டுமே.மற்ற இடங்கள்ல ஏண்டா,எனக்கு மட்டும் இப்டி இருக்குன்னு சொல்ல முடியாம தனக்குள்ளயே சுய பச்சாதாபம் நிறைந்து அதை வெளிக்காட்டவும் முடியாம திண்டாடுவதை நல்லா செய்திருக்கார்.


"உங்கள போலீஸ் பிடிக்கமுடியாதுன்னு தெரிஞ்சா உங்க மனைவியக்கொல்ல துணிவீங்கதானே"ன்னு பிரசன்னா கேக்றப்ப ஆடிப்போறது சேரன் மட்டுமில்ல, பாத்துக்கிட்டிருக்கிற நம்மளுந்தான்."ஏன் செஞ்சா தான் என்னன்னு தனக்குள்ளேயே கேக்கவைக்கிற அளவுக்கு" ஆழம் பார்க்கிற பிரசன்னா'வின் கேஸனோவா கண்கள்.சான்ஸ் கிடைச்சா அதயே தான் நாமளும் செய்வோம்னும், Consequences-க்கு பயந்து தான் எல்லாரும் நல்லவனா நடிச்சிக்கிட்டிருக்கோம்ங்கறதயும் தெளிவா புரிய வைக்கிறார்.
                                                                  


சேரன்'கிட்ட இருக்கிற அந்த வெறுப்பை , தனக்கு சாதகமாப்பயன்படுத்திக்கிர்ற பிரசன்னா'வின் உத்திகள் வெகு சிறப்பு. ரோட்டோரத் தோட்டத்தில திருட்டு மாங்கா பறிக்க அனுப்புறதும், பின்னால அவரே போட்டுக்குடுக்கிறதும், சேரனோட காரை வலிய ப்ரேக்டவுன் பண்ண கோஷ்டிகள்கிட்ட,சேரன் சொல்றதையும் பொருட்படுத்தாம போயி வம்பு வளத்து , பின்னால சேரனையே சண்டைக்குள்ள இழுக்குற காட்சிகளும் சபாஷ்.


Strangers-ஆன நமக்குள்ள Help பண்ணிக்கிட்டா Motive என்னானு தெரியாமலேயே போயிடும் ரெண்டு பேரும் Easy-ஆ தப்பிச்சுக்கலாம், அப்டியே பிடிக்கிறதா இருந்தாலும் இன்னொரு ஜென்மம் எடுத்துதான் வரணும்' னு பிரசன்னா சொல்றப்ப நமக்குள்ளயே ஒரு எதிர்பார்ப்பு ,நம்பிக்கை வர்றத தவிர்க்க முடியவில்லை.


சேரன் ஒண்ணும் சொல்லாது இருப்பதை தமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு , பிரசன்னா , சேரனின் வழியில் தடையாயிருக்கும் அனைவரையும் போட்டுத்தள்ளிவிட்டு , சேரனை தனது வழிக்கு கொண்டுவருவது இன்னும் சேரனின் கேரக்டரை மெருகூட்டுகிறது.ஏற்கனவே உள்ளுக்குள் குமைந்து கொண்டிருப்பவரை சூழ்நிலைக்கைதியாக ஆக்கிவைத்து விட்டு , இனி வேறு வழியேயில்லை , எனக்கு உதவித்தான் ஆகணும்னு பிரசன்னா மல்லுக்கட்டுவது நம்மை படத்தோடு ஒன்றத்தான் வைக்கிறது.


"உனக்குப்பிடிக்காத மனைவிய நான் கொல்றேன், எனக்குப்பிடிக்காத என் அப்பன நீ கொல்லு" இந்த ஒரு வரிய மட்டும் "Strangers on Train"- லருந்து எடுத்துக்கிட்டு வேறெந்தக்காட்சிகளையோ , இல்ல உத்திகளையோ மூலத்திலிருந்து எடுத்துக்கொள்ளாது தமது அழகான கதை சொல்லும் திறமையால் படத்தை கொஞ்சமும் அசராமல் நகர்த்திச்செல்கிறார் இயக்குனர் ராஜன் மாதவ்.பிரசன்னா கேரக்டர் மூலமாகப் படத்தை நகர்த்திக்கொண்டு செல்கிறது .அடுத்த மூவ் என்னவா இருக்கும்னு எப்பவுமே பிரசன்னா தான் தீர்மானிக்கிறார்.படத்தின் இடைவேளையைக்கூட பிரசன்னா'தான் நமக்கு சொல்கிறார் :-)




படத்தின் ஒரு ஹீரோ சேரன் ஒரு இசையமைப்பாளர், மேலும் Guitar அவரது Speciality என்று காட்சிகளால் நமக்குக்காட்டிவிட்டு 
Guitar-ஐ முதன்மையாகக்கொண்டு ஒரு பாடலையும் நமக்கென படத்தின் இசையமைப்பாளர் சஜ்ஜன் மாதவ் கொடுக்கவில்லை.ஒரு Thriller படத்திற்கான இசை எப்படி இருக்க வேண்டுமோ , அப்படி எந்த இடத்திலுமே இல்லை, .குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஜெயப்ரகாஷை'க்கொல்ல சேரன் ,க்ளப்'பில் அவரைப்பின் தொடர்ந்து செல்லும் இடத்தில் ,ஏதோ காதலனுக்கு காதலி டேக்கா கொடுத்து விட்டு செல்லும் காதல் காட்சிகளுக்கு இசைத்தது போல தோணுவது Pathetic. திகிலுக்கு உரம் சேர்க்காத இசை இந்தத் திரைப்படத்தின் முக்கியமான Weakness.திகில் படங்களுக்கென பிரத்யேகமான முறையில், முன்பு பழைய படங்களில் 'வேதா' போன்ற ஜாம்பவான்களின் இசையை நன்கு உணர்ந்திருக்கும் நமக்கு இங்கு மிஞ்சுவது வெறும் ஏமாற்றம் மட்டுமே.




Chashme Buddoor-ல் வரும் Chamko Girl தீப்தி நாவல் போல, ஹரிப்ரியா சேரன் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து நன்கு சோப்' போடுகிறார் 
[நமக்கும் சேர்த்துதான் :-) ], 'ஏங்க காஸ்ட்லி ஷர்ட்டு'ங்க என்பதையும் பொருட்படுத்தாமல் Permanent Marker -ஐ வைத்து அழுத்தமாக ஷேர்ட்டில் மட்டுமில்லாமல், சேரனின் மனத்திலும் அழியாத கோடுகள் போடுகிறார் ஹரிப்பிரியா.! இவர் வந்து செல்லும் காட்சிகளில் தான் சேரனுக்கு தமது 
முகத்திலும் , நமக்கும் இறுக்கமற்று இருக்க முடிகிறது.


Accidents நடந்துக்கிட்டேதான் இருக்கும் , அதை யாராலும் கணிக்கவும் முடியாது, தடுக்கவும் முடியாது, அந்த மாதிரி ஒரு Planned Accident -ஆல நம்ம பிரச்னைய நாமளே Solve பண்ணிக்க முடியும்.அதே மாதிரி ஆக்ஸிடெண்ட் அந்த Chamko Girl ஹரிப்பிரியா'வுக்கு கூட நடக்கலாம்' னு பிரசன்னா சொல்லும்போது நம்ம முதுகுத்தண்டு ஜில்லிடறத யாராலும் தடுக்கமுடியாது.


"கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி" என்று சரோஜா'வில் Item Song-க்கு ஆடிய நிகிதா, கிட்டத்தட்ட அதே போல காசுக்கு ஆசைப்படும் Software Engineer -ஆக வந்து சேரன் மேல் எரிந்து விழுந்து கொண்டு , அவ்வப்போது சக Colleague-இடம் வழிந்து affair வைத்துக்கொண்டு பின்னர் ஒரு கார் ஆக்ஸிடென்ட்டில் செத்தும்போகிறார்.குறிப்பிட்டு சொல்லும் படியாக அவர் கேரக்டர் அமையவில்லை.இவரைப்போல நிறையப்பெண்கள் வர்றாங்க படத்துல , ஆனா யாரும் மனதில் நிற்கவில்லை , ஹரிப்பிரியாவைத்தவிர.


இசைப்பவனின் மனதில் குருதிக்கு இடமில்லை , ஏதோ அது போன்ற சில காட்சிகளுக்கென , அதிர வைக்கும் இசையைத்தந்து விடுவதோடு முடிந்து போகிற விஷயத்தை , தன் கையாலேயே செய்ய வைக்க நினைக்கும் பிரசன்னா'வை கூட வைத்துக்கொள்ள முடியாமலும் , புறந்தள்ளி விடமுடியாமலுமாக , மனக்கொந்தளிப்பை,தனது இயலாத தன்மையை வெகு இயல்பாக காட்டியிருக்கிறர் சேரன். ஆட்டோக்ராஃபிற்குப்பிறகு அவருக்குப்பேர் சொல்லிக்கொள்ளக்கூடிய ஒரு படம் இது !


இந்தப்படத்தோட ஹீரோ சேரனா இல்ல பிரசன்னா'வாங்கற "முரண்"ஐத் தவிர வேறேதும் முரணாகத்தெரியாமல் பல நல்ல உத்திகளுடன், படத்தை வலுவான திரைக்கதையை வைத்துக்கொண்டு ,Hitchcock-ன் உதவியுடன் சொல்லியிருக்கும் இயக்குனருக்கு சபாஷ்.

.
.

Friday, October 7, 2011

சுதேசிகள்



அம்மணக்குண்டியுடன் அலைந்து திரிந்து
கொண்டிருக்கும் ஊரிலுள்ள அனைவரும்
ஆபத்பாந்தவர்களான அடிடாஸு’ம் ,ப்யூமா’வும்
வந்து தம் மானம் காக்க வேண்டி நிற்கின்றனர்

தங்கம் தவிர்த்த வேறு உலோகங்கள்
மனித இனத்திற்குக்கிஞ்சித்தும் பயனற்றவை
‘ஆதலால் காதலை’ச்சொல்ல இப்போதெல்லாம்
ஆதாமும்  தங்கம் தேடி அலைகிறான்.

வெள்ளாவியில் வைத்துத் துவைத்ததால்
போகாத அழுக்குடன் எல்லோரும்
வாழ்நாள் முழுதும் மல்லுக்கட்ட இயலாமல்
ஒரு தேக்கரண்டி பொடி தேடி அலைகின்றனர்

வெள்ளை உள்ளம் படைத்தவரை
இனங்கண்டுகொள்ள
அவரின் முகமும் செயற்கை
வெள்ளையாய் இருத்தல் அவசியம்
அதுவும் ஏழே நாளில்.

பார்க்கச்சென்ற பெண்
அழகாக  மட்டும் இருந்து விட்டால்,
அவர் போடும் காப்பியும்
இலுப்பைப்பூவின்றி இனிக்கிறது.

இளம் வயதுப்பெண்களுக்கு
இப்போதெல்லாம் இயல்பு வாசனையுள்ள
விடலைப்பையன்களை பிடிப்பதில்லை
அவர்களும் மாற்று மருந்து தேடி அலைகின்றனர்.

தாய்த்தமிழில் பேசினால் தரணியில்
மதிப்பே கிடைப்பதில்லை
ஆதலால் பலரும் 30நாளில் செவ்வாய்க்கிரகமொழி
பயின்று கொண்டிருக்கின்றனர்

அடுத்த கவிதையின் கருவுக்கென
வாஷிங்டனிலிருந்து தருவிக்கப்பட்ட
ஆப்பிளின் மேல் தோலைக் கீறி
எடுக்க கடந்த 40 நாட்களாக
முயன்று கொண்டிருக்கிறேன்,
இயலவில்லை.


.

Monday, October 3, 2011

நனைந்த சிறகுகள்




மழைக்குருவியின்
கிறீச்சல்கள் கொடியில்
காய்ந்து கொண்டிருந்த
துணிமணிகளை கொஞ்சம்
கொஞ்சமாக நனைத்து 
விட்டிருந்தது.
பின்னர் வந்த மழைக்கு
நனைக்க ஏதுமின்றி.
ஏமாற்றத்துடன் திரும்ப
விரும்பாத மழை
குருவியின் சிறகுகளை 
நனைத்துச்சென்றது