Thursday, February 25, 2021

So baby

 


சப்தஸ்வரதேவி யுணரு.... கவிதை அரங்கேறும் நேரம்.. ஹ்ம்.. இதான் தம்பி அநிருத் இப்ப போட்ருக்கான் , க்ளாசிக்கல் வெஸ்டர்ன். ஒண்ணுல்ல. தாளம் மட்டும் 6/8-ல் (ஃபாஸ்ட்) போட்டுட்டு ராகத்தை அதன் போக்கில பாடிரலாம். ’அவள் முகம் பார்த்து’ன்னு தொடங்கும் பாடல் So baby பாட்டு. கொஞ்சம் வேகமா பாடிட்டா க்ளாஸிக்கலை மறைத்துவிடலாம். இதே ஜானர்ல ’யூ டர்ன்’ன்னு ஒரு படத்துல பேக்ரவுண்டல வரும் ஒரு பாடல். The karma Theme. அதே தான் இதுவும் அதுவும் தம்பி இசைத்தது தான். கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பாடல் இன்னொரு பாடலை ஞாபகப்படுத்தாது இருக்கவேணும் என்பது விதி. இங்கு 04:17-ல் தொடங்கும் அந்த சரளி வரிசை அப்படியே கொண்டு போய் ‘ கவிதை அரங்கேறும்’ல விடும். அடிப்படையில் இது ‘கெளரி மனோகரி’ ராகந்தான். ஐயா எம்எஸ் விஸ்வநாதன் ஒரிஜினல் ரா’ ஃபார்மெட்ல கொடுத்தை இங்க கொஞ்சம் வெஸ்ட்டர்ன் பீட்ஸ் வெச்சு உருமாற்றி கொடுத்திருக்கிறார் அநிருத். 
 
கேட்க நல்லாத்தானிருக்கு. இருந்தாலும் பழைய பல பாடல்களை நினைவு படுத்தாது இருப்பின் சாலச் சிறந்தது. தியாகைய்யரின் ’குருலேக எடுவண்டி’ தான் எல்லாத்துக்கும் மூலம். ஹ்ம்.. எவ்வளவோ உருமாறி வந்து கிடைக்குது!

இதே ராகத்தின் பேரிலேயே ஐயா எம்மெஸ்வி ‘ கெளரி மனோகரியைக் கண்டேன்’னு வாணி ஜெயராமின் குரலில் அழைத்தார். இன்னும் பீட்ஸ்களை குறைத்து அமைதியா பாடினா ’தூரத்தில் நான் கண்ட உன்முகம்’ என்று ராசைய்யாவின் வயலின் அழும். அதெல்லாம் அப்பவே சிம்ஃபொனி. அப்டீன்னு தெரியாமலேயே கேட்டுக் கொண்டிருந்தோம். அடேயப்பா இந்த ‘So baby’ எத்தனையையோ கிளறிவிடுகிறதே. பொண்ணு கன்னாலே கெளறித்தாண்டா விடுவாளுக...ஹிஹிஹி 🙂 #SoBaby

Saturday, February 20, 2021

கர்ணன்- கண்டா வரச்சொல்லுங்க

 


எண்பதுகளில் வந்த ஹிந்திப்படம் ’ஹீரோ’வில் வரும் அந்த ’லம்பி ஜுதாயி’ என்ற பாகிஸ்தானிய பாடகரின் பாடல் , பாடியவர் பாடகி ரேஷ்மா. அற்புதமான பாடல் அது. இன்றைக்கு கேட்டாலும் இனம் புரியா சோகம் மனதிற்குடி கொள்ளும். அது ராஜஸ்தான் பழங்குடியினரின் பாடல். அவ்வப்போது எல்லை கடந்து பயணிக்கும் இசை. நுஸ்ரத் ஃபதே அலிகானும் சில பாடல்கள் பாடினார். இங்கு ஜேம்ஸ் வசந்தன் இசைத்த ‘வந்தனமா வந்தனம்‘ என்ற தஞ்சை செல்வி பாடிய பாடல். அதுவும் ஒரு நாட்டார் குரல் கொண்டு இசைத்தது. பின்னர் ’அம்மாவின் சேலை’ என்ற பாடல். பின்னர் மலையாளத்தில் ’ஐயப்பனும் கோஷியும்-ல் பின்னில் ஒலிக்கும் ‘கலக்காத்த’ என்ற ஒரு பாடல். என எங்கனம் எப்போது கேட்பினும் அசரவைக்கும் அற்புதமான பாடல்கள். எத்தனை கேட்பினும் எவ்வித இசை கேட்பினும் இவை மட்டுமே மனதிற்கு நெருக்கமாக உணரவைப்பவை. இதையெல்லாம் கேட்பதற்கு 5.1 டால்பி சிஸ்டம் எல்லாம் அவசியமேயில்லை. சுசீலாம்மாவின் பல பாடல்கள் அங்கனம் இசைக்கப்பட்டு தொகுக்கப்பட்டவையே.

சநா’வும் அதே அடிப்படையில் எண்ணி சில வாத்தியக்கருவிகளை வைத்துக்கொண்டு இசைத்திருக்கிறார். வகையறா தொகையறா’க்களை வைத்து பின்னில் ராகம் எடுத்து இசைக்கும், அதே பாணி. ஆங்கிலத்தில் Verse and Chorus. இங்கு ஒரு ஓலம் போல இசைக்கும் பாடல். இழவு வீட்டுப்பாடல். ராசைய்யா செய்தது விருமாண்டியில். ஊரில ஒரு மைக் கொடுத்து , அவருக்கென சிறு கொட்டகை அமைத்துப்பாடப்பணிப்பர். அடிப்படையில் இழப்பு பற்றிய சோகப்பாடல். அது போலவே இங்கும். என்ன ஒன்று முதலிலும் பின்னர் இடையிடயே வரும் உரையாடல் போன்ற வரிகளில் இருக்கும் சோகம் , பாடும்போது இல்லை. குதூகலம் தொற்றிக்கொள்ளும் படியான ராகம்/தாளம். இருப்பினும் இதை அந்த வகைகளில் சேர்த்துக்கொள்ளலாம். நல்ல பாடல்தான் சநா.! #கர்ணன்

வேறேலெவெல்

 


பிரபுதேவா வெளிப்படையாகவே சொன்னார் அப்போது. எனது ஆடலுக்குத்தகுந்தாற்போல இசை அமைக்க வில்லை ராசைய்யா என. அப்படி சிவகார்த்திகேயனும் இப்போது சொல்வார் ‘வேற லெவல்ல’. டி.தர்மராஜ் எழுதியிருந்ததை வாசித்தேன். ரஹ்மானிடம் யாருக்கும் விருப்பு இல்லை, அது ராசைய்யாவிடம் தோன்றிய வெறுப்பு மட்டுமே மேலும். எல்லாவற்றையும் சிறுபிள்ளைகள் போல கட்டுடைக்க நினைக்கும் செயலென்றும் சொல்லியிருந்தார். 
 
அப்படிப்பட்ட கட்டுடைப்புகள் திடும் திடும் என நிகழ்ந்தது ரஹ்மானின் காதல் ரோஜாவே என்ற காதற் தோல்விப் பாடலில். அப்படியான கட்டுடைப்புகள் இனியும் தேவையில்லை என தம்பி அநிருத், தரன் குமார் (சித்து +2) ,ஜஸ்டின் பிரபாகரன் (ஒரு நாள் கூத்து) என்று சிறுவர்களின் பட்டாளமே இசைத்துக் கொண்டிருக்கிறது இப்போது.. (இமானை இந்த வரிசையில் சேர்க்க இயலவில்லை.) இது ஏலியனின் கதை (அயலான்) , அதற்கென இசைத்தது, இன்னும் முன்னூறு ஆண்டுகள் ஆகும் விளங்குவதற்கு என தூக்கிக் கொண்டு வருவார்கள் கடினச்சாவு விசிறிகள்...ஐயோ பாவம்! #வேறேலெவெல்.

Monday, February 8, 2021

மாஸ்டர்

 

அநிருத்’தான் மாஸ்டர். மாஸ்டர் த ப்ளாஸ்டர்.  அநிருத் ரெய்டுடா. கைதி’ல சாம் சிஎஸ், அவ்வளவு சிறப்பான இசையமைப்பு இல்லை. இங்க விஜய், அப்புறம் விசே அப்டீன்னு பெரிய பெரிய ஆட்காரால்லாம் வந்ததால அநிருத்.  இனி வேற யாரையும் யோசிக்கவே வேணாம். பாடல்கள் அவை வரும் இடங்கள் எல்லாம் பாலா’ படத்தை போல இதெல்லாம் இல்லாமலிருந்தாலும் நல்லதே  எனத்தான் தோன்றும். அவ்வளவு தீனி பின்னணி இசைக்கு இடம் கொட்டிக்கிடக்கிறது. யுவனுக்கு ஒரு ஆரண்ய காண்டம்’ எனில் அநிருத்துக்கு ஒரு மாஸ்டர். ஆரண்ய காண்டம் யுவனுக்கு ஒரு பெருவிருதை அள்ளித்தருமென காத்துக்கிடந்தேன். கண்டு கொள்ளாமலேயே விடப்பட்டது. அதன் பின்புலம் மெக்ஸிகோ/ ஹிஸ்பானியம் , அதே போல இங்கும் பாவித்து இசைத்திருக்கிறார் தம்பி  அநிருத்.

தலைவனுக்கு (விஜய்க்கு) இசைத்த கருவிசையை (தீம் ம்யூஸிக்) விட எதிரிக்கு (விசே’) இசைத்தது தான் கவர்கிறது.  
The Chainsmokers - Don't Let Me Down (Official Video) ft. Daya-வின் பாணியில் பின்னணியில் ஒலிக்கும் எதிரியின் கருவிசை. ஒரே இசைக்கருவி கொண்டு இசைத்ததினால் தோன்றலாம். எனினும் அதை ஞாபகப்படுத்த தவறவில்லை. இருப்பினும் தயா’வின் அந்தப்பாடல் காதற்பின்னணி கொண்டது J மேலும் எண்பதுகளின் பின்னணியும் இங்கு பேசுகிறது. தலைவனுக்கென அதிசத்தமான பெர்குஷன்ஸ் (ட்ரம்ஸ்) வைத்துக்கொண்டு இசைத்திருப்பது எல்லாம் எண்பதுகள் தான். எனினும் படத்தின் காலம் நிர்ணயிக்கப் படவில்லை. இதே குழப்பம் பில்லா2’வுக்கு இருந்தது. வந்த போக்கில் எக்காலத்தையும் உணர்த்தாத படமாக அது  உருவெடுத்திருந்தது.  சத்ருகன் சின்ஹா நடித்து ‘பவானி ஜங்ஷ்ன்’ என்றொரு ஹிந்திப் படம் வந்திருந்தது. இதே போல போலீஸ் கேங்க்ஸ்ட்டர் பின்புலத்தில். அற்புதமான படம். 

இது போல ’கீழ் உலக குறிப்புகளை’ச்  சுட்ட ஹிஸ்பானிய இசையை கொடுப்பதே வழக்கமாகி விட்டது. ராசைய்யாவிற்கு இது போன்ற வாய்ப்பு கிட்டவேயில்லை. எனினும் அவர் காலம் ஒரிஜினல் எண்பதுகள். இது போன்ற கருத்தாக்கங்கள் திரைப்படமாக எடுக்கப்படவில்லை. ஷிவா(உதயம்) இசை தென்னகத்தைச் சார்ந்த அதிரவைக்கும்,கொலை பாதகத்தை முள்ளந்தண்டில் உணரவைக்கும் இசை. உதயம் பவானி’யின் கருவிசை அங்கனமே.  ராம் கோபால் வர்மா அந்தப்படத்தை ஒரு கேங்ஸ்ட்டா பாணியில் எடுத்திருந்த போதும் தெலுகு, உள்ளூர் கோஷ்ட்டி மற்றும் அரசியல் தகராறில் தான் மையம் கொண்டிருந்தது. அதனால் அதற்கேற்ற இசை. யுவனுக்கு கிடைத்ததோ ஜெம். தியாகராஜன் குமாரராஜா கொட்டிக் கொடுத்தார், இது போல வேறுபட்ட களங்கள் உருவாக்கி தரப்பட வேணும் . என்றாலே இசையமைப்பவர்க்கு ஒரு உத்வேகம் பிறக்கும் . ராசைய்யாவின் இப்போதைய பேட்டியில் இனியும் சிம்ஃபொனி இசைக்க என்னை அணுகுவார் யாருமில்லை ஆதலால் இசைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதான் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேணும். பின்னரே அதற்கான இசை நமக்கு கிட்டும். ரஹ்மானைப்பற்றி ஏன் சொல்லவே இல்லை எனலாம், செக்கச் சிவந்த வானத்தில் கிட்டிய நல்வாய்ப்பை அவர் தவற விட்டுவிட்டார். இயக்குநர் மணி’யின் உத்திகள் காட்ஃபாதரை நகலெடுக்க நினைத்தவை. ஏனோ ரஹ்மானால் அதற்கு ஈடு கொடுக்க இயல வில்லை. சிம்புவின் திருமண நிகழ்வில் மட்டும் எங்கோ ஒரு மூலையில் ஒலித்தது பின்னர் கண்டு கொண்டு ஆர்வமாகக் கேட்க முற்படும் போது முடிந்தே போனது.

இங்கு படமே எதிரியை மையம் கொண்டு தான் நகர்கிறது.தொடக்கமே அவரை வைத்து தான். பெயர்கள் அப்படியே உதயம்(ஷிவா) படத்திலிருந்தே எடுக்கப் பட்டிருக்கின்றன. (ஷிவா’வே Way of Dragon (Bruce Lee) படந்தான்) ஜேடி, பவானி என. எவ்வளவுதான் மோசமானவாக காட்டியிருந்த போதிலும் குடிகாரன்,  ஆறு மணிக்கு மேல் என்ன செய்வான் என அவனுக்கே தெரியாது, கல்லூரி கூட்டங்களில் உறங்குபவன், மற்றவர் மதிக்கும் படி வாழாதவன், எனக்கென்ன போச்சு என குழந்தை கைதிகளிடம் பேசுபவன் எனக்காட்டிய போதும் கடைசியில் அதர்மத்தை எதிர்த்து அழித்து தான் ஆகவேண்டிய கட்டாயம் தலைவனுக்கு எப்போதும் இருந்தே ஆக வேண்டி இருக்கிறது. அதற்கான உரிய தண்டனையைப் பெற்ற போதும்.  ஆன்ட்டி ஹீரோ சத்யராஜ் காலத்திலிருந்தே இருக்கத்தான் செய்கிறது. ஆதலால் விஜய் அப்படியான ஒரு கதா பாத்திரத்தில் தோன்றும் போது, இல்லையே இவர் இப்படி இருக்க மாட்டாரே என்ற பொதுப்புத்தி புனைவுகள், எப்படியாவது நல்லவனாக காட்டி விட மாட்டாரா லோகேஷ் என்று குறுக்கு சால் ஓட்டிக்கொண்டே இருக்கிறது. கதைப்போக்கில் அதுபோலவே நடந்தேறி விடுவதும் க்ளீஷே.

விசே பற்றிப்பேச ஒன்றுமேயில்லை. வழக்கமான க்ளீஷேத்தனமான என்ன நடந்தாலும் ஒன்றுமே நடவாதது போல சாதாரணமாக டீக்கடையில் உட்கார்ந்து அரட்டை அடிப்பது போன்ற வசன உச்சரிப்பு மற்றும் நடிப்பு. இதே போல ஆர்யா தொடர்ந்தும் செய்து கொண்டிருந்தார். அப்புறம் காணாமலே போய்விட்டார். நாப்பது லெட்சம் அம்பது லெட்சம் எனக்கூறும் போதெல்லாம் ஒரு பரபரப்போ இல்லை என்ன நிகழப் போகிறதோ என ஒரு எதிர்பார்ப்பே இல்லை. இங்கயும் தம்பி அநிருத் தான் காப்பாற்ற வேண்டியிருக்கிறது.  எங்கு இசைக்க வேண்டாம் எனவும் இப்போது தான் தெரிந்திருக்கிறது தம்பிக்கு. முழுக்க முழுக்க மயான அமைதி தான் பயங்கரம். எதிர்கொள்ள இயலாதது.

 விஜயை கூடவே இருந்து ரசித்துக் கொண்டிருக்கும் மாதுகள், ஆன்டிரியா, ரம்யா மற்றும் மாளவிகா என  ஒரு பட்டாளமே இருக்கிறது. எவருக்கும் காதல் சொல்ல விழையவேயில்லை, அதற்கான வாய்ப்புகள் கொடுக்கப் படவில்லை. மாளவிகா மட்டும் அந்த சின்ன ஓட்டலில் கேண்டில் லைட் டின்னர் இல்லையா என ஆதங்கம் கொப்பளிக்க பேசுகிறார். இருப்பினும் அதற்கான சூழல் உருவாக விடவேயில்லை லோகேஷ். ஒவ்வொரு தடவையும் முன்னால் வந்த படங்களின் காதற் கதையை தனதாக சொல்லி வெறுப்பேற்றி விடும் விஜய் வேறு அதை உருவாக தடுக்கிறார். என்ன ஒண்ணு ‘மாண்புமிகு மாணவன்’-ல் தோன்றியவர் கவர்ச்சிக் கன்னிகளைப் போலவே இன்னமும் உடம்பைப் பேணும் விஜய்க்கு வாழ்த்துகள். விஜய்க்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த இடமெனில் ’பார்கவ் செத்துட்டாண்டா’ என  அந்த நால்வரிடம் பேசும் போது மட்டும் தான். பின்னரும் அழுகை அமற்களம். கடைசியாக அழுது ’துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் தான் பார்த்தது அதன் பின்னர் இங்கு தான் அழுகிறார்.இயல்பாக இருக்கிறது ஆற்றாமையால் பொங்கும் கண்ணீர். கடைசிக் காட்சியில் அரசியலைப் பற்றி விசே எடுத்துரைக்கும் போது. விசேயை அடித்துத்தூக்கி மாட்டுக்கறி தொங்க விடும் ஹூக்கில் தொங்க விடுகிறார். எனக்கென்னவோ விஜய் தன் அப்பா சந்திரசேகரைத் தூக்கி தொங்க விட்டது போல தோன்றிற்று. ஓற்றை விரலை வைத்து மாஸ்டர் சத்தம் மூச் என்கிறார்.

கொஞ்சம் பாடல்களைப்பற்றி பேசலாம். எவ்வளவுதான் சொன்னாலும் அந்தக்குட்டி ஸ்டோரிய ஆங்கிலத்தில் எழுதிப்பாடியதை மட்டும் என்னால் சம்மதிக்கவே இயலவில்லை. பாடுமிடம் ஒரு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, முறையாக யாரும் பள்ளிக்கே செல்லாத இளங்குற்றவாளிகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தில் தாய்மொழி தவிர வேறேதும் அறியாதவர்களிடம் ஆங்கிலத்திலேயே பாடுவது எப்படி எடுத்துக் கொள்வது, கூடவே அதிலொருவன் என்ன மாஸ்டர் இங்கிலீஷூ என்று தொடக்கத்திலேயே கேட்ட போதும் ஆங்கிலத்திலேயே தொடர்வது சரியில்லை. இந்தப்பாடலை ஒரு அறிவு புகட்டும் பாடலாக இண்டர்நெட் ஜெனெரேஷன் வாயிலாக உலகம் முழுக்க பரப்ப நினைத்த ‘கொலவெறி; தான் ஆங்கிலத்திலேயே பாட வைத்திருக்கிறது. பொருந்தவேயில்லை.

Bjon Surrao எழுதிப்பாடிய அந்த ‘மாஸ்டர் த ப்ளாஸ்டர்’ Got the Man with the Plan Here’ எனத் தொடங்கும் தலைவனுக்கான முகப்புப் பாடல்  Malibu Jammin வகையிலான புதுமையான இது வரை தமிழுலகம் காணாத ஒன்று. ஹிஸ்பானிய பின்னணியில் ட்ரெம்ப்பெட்டும் அக்கார்டியனும் ( நமது ஹார்மோனியம் போன்ற ஒரு இசைக்கருவி ,இதெல்லாம் இப்ப பயன்பாட்டில் உள்ளதா என கேட்டுத்தான் பார்க்கணும் ஏன்னா எல்லாமே கீபோர்டில் இசைத்துத் தள்ளிவிடலாம் அதான் ..!) வழக்கமான ராப் ஹிப் ஹாப்’பைத்தவிர்த்து ஆதென்டிக் ஹிஸ்பானிய பாணியில் இசைத்த ஒன்று.அற்புதம் அநிருத்.  Peter Andre’வின் Mysterious Girl பாடற் பின்னணியில் ( அதையே இங்க தூக்கி வைக்கல..பொறுமை பொறுமை) அதே பாடற் கட்டமைப்பில் உருவான ஒரு மெக்ஸிகன் ஃப்ளேவர் பாட்டு என்று சொல்ல வந்தேன்.  மேலும் யுவனும் ஒரு பாடல் பாடியிருக்கிறார் இங்கு. அது அவரின் வழமையான பாணியிலேயே இசைக்கப்பட்ட ஒன்று.

 இது ஒரு நல்ல ஆல்பமாக அநிருத்திற்கு வாய்த்திருக்கிறது. ஹிஸ்பானிய பாணியில் ஒரு பாடல் – மாஸ்டர் த ப்ளாஸ்டர், பின்னர் அடிகுத்து மற்றும் வடசென்னைப்பாணியிலான ஒரு பாடல் – வாத்தி கமிங், யுவனின் குரலில் ஒரு குழைவான காதற்பாடல், சுத்தமான நூறு சதமான ஸ்ரீவில்லிபுத்தூர் வெண்ணையில் உருவான தெருக்குரல் அறிவு’ ராப் – வாத்தி ரெய்டு , எண்பதுகளின் கிராமியப்பாணியிலான சந்தோஷ் நாராயணனின் குரலில் -பொளக்கட்டும் பரபர, பின்னர் அநிருத்தின் வழக்கமான Comfort Zone- லிருந்து - போனப்போகட்டும், அப்பால பழைய கொலவெறி’யை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட ஒரு -குட்டி ஸ்டோரி.!

படம் நீளமெல்லாம் இல்லை. சரியான கால அளவுதான். டீட்டெய்லிங், மற்றும் காட்சித்தேவைகள் என மூன்றுமணி நேரம் ஓடுகிறது. என்றாலும் ஒரு இடத்திலும் சலிக்கவில்லை. ஆமா இந்த லோகேஷ் என்ன லாரி பிஸினெஸ் வெச்சிருந்தாரா முன்னால, எல்லாப்படத்துலயும் இந்த லாரி மூக்க நீட்டிக்கிட்டு வந்துருது. ’லாரி லோகேஷ்’..ஹிஹி J  சில காட்சிகள் மட்டும் நான் லீனியரில் இருந்த போதிலும் படம் முழுக்க லீனியர் கதை சொல்லல் தான், ஒன்றுக்கொன்று தொடர்புடைய காட்சிகளைக்கொண்டு தான் நகர்கிறது. விஸ்வாசத்துக்கு வேல பார்க்கிறதுக்கும் பணத்துக்கு வேல பார்க்கிறதுக்கும் வேறுபாடு தெரியலை என்ற வசனம் எல்லா கம்ப்யூட்டர் கம்பனி எம்ப்ளாய்ஸுக்கும் பொருந்தும். எமோஷனலா இருக்கிறவன்லாம் ஏண்டா கோபப்பட்றான் என்பதெல்லாம் யோசிக்க வைக்கிறது. ஒற்றை ஆளாக விசே அந்த கடைசி லாரி ஓட்டுநர் சங்கத் தலைவரை சந்திக்கச் செல்வது. அதே நேரம் விஜய் செல்லுக்குள் ஒற்றை ஆளாக அடைபடுவது என திரைக்கதை ஜொலிக்கிறது. இருப்பினும் கடைசியில் ஐயாம் வெய்ட்டிங் எனக்கூறி விசே காட்சியை சிதைத்து விடுகிறார். அந்த தாஸ் (அர்ஜூன் தாஸ்) இன்னொரு  உதயம் ‘பவானி’யாக உருவெடுப்பார் இன்னும் சில காலங்களில். அவரின் குரல் முன்பு சலீம் கெளஸ் என்ற வில்லனின் குரலை ஒத்திருக்கிறது.
‘பக்கா மாஸ்’ட்டர் #மாஸ்டர்