எலான் கன்வென்ஷன் செண்டர் பக்கம் இதுவரை
போனதில்லை. ஜெபீ நகர் ஏழாவது ஃபேஸ், தேடிக்கண்டுபிடிச்சு போய்ட்டேன். எப்பவும்
புத்தகக்கண்காட்சின்னா அது பேலஸ் க்ரௌண்ட்ஸ்ல தான் நடக்கும். நிறைய ஸ்டால்ஸ்
இல்லை. மொத்தமே ஒர் 60-70 ஸ்டால்ஸ் இருந்திருக்கலாம். எங்கு திரும்பினாலும்
கன்னடம் , அவ்வப்போது கொஞ்சம் இங்கிலீஷ், மூன்றே மூன்று கடைகள் தமிழில். காலச்சுவடு,
கிழக்கு, மற்றும் விகடன் மட்டுமே.
டிசம்பர் 19 லிருந்து 28 வரை என போட்டிருந்ததால்,
இன்று ஞாயிற்றுக்கிழமை பார்த்து தேடிச்சென்றேன்.
பெரிய பலூன் பறக்கவிட்டிருந்தனர். பறக்காஸ் :) , உள்ளே நுழைய
இருபது ரூபாய் டிக்கெட். வாங்கிக் கொண்டு நுழைந்தவுடன் இடம் வலம் புறம் எல்லாம்
கன்னடப்புத்தகங்கள் மட்டுமே. பின்னர் கொஞ்சம் இங்கிலீஷும் மூன்று கடைகள் மட்டும்
தமிழில். வேறு எந்த மொழியும் காணக்கிடைக்கவில்லை. இங்கு தெலுகு பேசும் மக்கள்
அதிகம் தான் , தமிழோடு ஒப்பிடும்போது சற்றுக்குறைவு. அதற்கும் ஒரு கடை கூட இல்லை.
இந்தியும் ஓரிரு கடைகளில் மட்டுமே காணக்கிடைத்தது.
ஸாஹித்ய அகாடெமியின் ஸ்டால் ஒன்று, அதிலும்
அத்தனையும் கன்னட நூல்கள். இத்தனை ஸாகித்ய அகாடெமி விருது வாங்கியிருக்கிறதா
கன்னடம் ?! உள்ளே நுழைந்து நோட்டம் விட்டேன். ஒரு வரி போலும் வாசிக்கத்தெரியாத
எனக்கு அத்தனையும் லத்தீன் :)
சலாம் செண்டர் என ஒரு ஸ்டால். முழுக்க இஸ்லாமிய
மதநூல்கள். உள்ளே நுழைந்து பார்க்க எத்தனித்தேன். அத்தனை மொழிகளிலும் குர்ஆன்
காணக்கிடைத்தது. ஸ்டாலில் இருந்த ஒருவர் , மெதுவாக கன்னடத்திலேயே உரையாடினார். இங்கு
இருக்கும் நூல்களை இலவசமாக நீங்கள் எடுத்துச்செல்லலாம் என்றார்.
பெரும்பாலும் மத சம்பந்தமான நூல்களை நான் தேடி
வாசிப்பதில்லை. இருப்பினும் என்னிடம் ஒரு நூலை,என் மொழியைக் கேட்டுக்கொண்டு,எடுத்துக்கொடுத்தார்,
‘தவறான புரிதல்கள்’ என்ற நூலை. தொடர்ந்தும் என்னிடம் இந்த நூலைப்பற்றி
விளக்கிக்கூறினார், அவர் கண்களில் இருந்த இரக்கம் என்னை என்னவோ செய்தது, சரி
கொடுங்கள் என வாங்கிக்கொண்டேன். பிறகும் உங்களுக்கு குர் ஆன்’ தமிழில் வேண்டுமா ?
என வினவினார். மறுக்க இயலவில்லை, எந்த பதிலும் நான் சொல்லவில்லை. கடை
முழுக்கத்தேடி பின்னர் மன்னிப்பு கேட்கும் பாங்கில் என்னருகில் வந்து,
தமிழ்ப்பதிப்புகள் தீர்ந்துவிட்டன, குறைவாகவே கொண்டு வந்தோம். உங்கள் உள்ளூர்
முகவரியைக்கொடுங்கள் உங்கள் வீட்டிற்கே அனுப்பிவைக்கிறோம் என்றவரிடம் எனது
முகவரியைக் கொடுத்துவிட்டு வந்தேன். தொடர்ந்தும் சரளமான கன்னடத்தில் என்
கையிலிருந்த நூலை ஒரு முறையேனும் முழுதும் வாசிக்க வேண்டிக்கொண்டார். சரி என்ற
நான் பக்கத்து கடைகளை நோக்கி செல்ல எத்தனித்தேன். யாரோ சிலர் செய்யும் தீங்குகள்
எவ்விதமான பார்வையை நம் மனதில் பதித்துவிடுகின்றன. எனினும் அந்தக்கண்களை என்னால்
மறக்கவே இயலவில்லை.
‘எங்கும் கன்னடம் எதிலும் கன்னடம்’ என்றே என்
கண்ணில் பட்டுக்கொண்டேயிருந்தன. இத்தனை ஆண்டுகள் பெங்களூரில் வசித்த பின்னரும் ஒரு
அட்சரம் கூட கன்னடத்தில் வாசிக்கத்தெரியாத என்னை நானே நொந்துகொண்டேன். தோழர் கௌதம்
சித்தார்த்தன் சமீப காலத்திய கொஞ்சம் கன்னட நூல்களைப் பற்றிய விபரங்கள் வேண்டும்
என என்னிடம் கேட்டிருந்தார், அதற்கென கொஞ்சம் நாட்கள் முன்பு சப்னா புக் ஹவுஸ்,
உள்ளூர் லேண்ட்மார்க் எனத்தேடி ஒரு லிஸ்ட் எடுத்தேன். இன்னபிற உள்ளூர் கன்னட நண்பர்களிடம்.
அதையும் ஆங்கிலத்தில் எழுதச்சொல்லி வாங்கி பின்னர் அனுப்பிவைத்தேன் J ஒரு வேளை அதே
புத்தகங்கள் கூட வைக்கப் பட்டிருந்திருக்கலாம். எனக்குத்தான் வாசிக்கத்தெரியவில்லை
தற்குறி! ஸப்னா புக் ஹவுஸின் ஸ்டால் பெரிய அளவிலே இருந்தது.
அதைத்தாண்டி வரும்போது , தொடர்ந்தும்
தமிழ்நாட்டை விட்டு வெகுதூரம் பயணிக்கும்போது , எப்போதாவது தெரியும்
தமிழ்ப்பலகைகளை, எழுத்துகளைப்பார்க்கும்போதும் வரும் மகிழ்ச்சி போல் என்னுள் பொங்கியது
காலச்சுவடு ஸ்டாலைக்கண்டதும் :) ஸ்டால் என்னவோ சின்னது தான். இருப்பினும்
புத்தக எண்ணிக்கைகள் நிறைவாகவே இருந்தன. மொழிபெயர்ப்புகளும், நேரடித்தமிழ்
வெளியீடுகளும் என காலச்சுவடு பதிப்பகத்தின் நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
ஓரான் பமுக்’கின் என் பெயர் சிவப்பு ( My Name Is Red ) பனி ஆகிய நூல்கள் என்னைக்கவர்ந்து இழுத்தன. கரம்ஸோவ்
சகோதரர்கள்,ஆகப்பெரிய தலையணை போல உட்கார்ந்திருந்தது. ஹோட்டல் மெனுவின் வலது
பக்கம் மட்டுமே பார்த்துப்பழகிய கண்கள் , புத்தகத்தின் பின்னட்டையை மட்டுமே
பார்க்க விழைகிறது. பார்த்தேன் விலை படியாது போலிருக்கிறது வைத்துவிட்டேன்.
பக்கத்திலே ‘திருடன் மணியப்பிள்ளை’ என்னைப்பார்த்து கண் சிமிட்டினார். சரி
திருடிவிடலாம், பின்னர் எவ்வாறு திருடினேன் என மணியபிள்ளை போல ஒரு புத்தகம் போட்டு
உட்கார்ந்து சாப்பிடலாம் என எண்ணிக்கொண்டிருந்த போது, புத்தகங்களைப்பற்றி விளக்கி
கூறிக்கொண்டிருந்தவருக்கு என் முழி மேல் சின்ன சந்தேகம் வந்ததால் ‘தற்கொலைக்கு பறக்கும் பனித்துளி – ஸில்வியா ப்ளாத்’ மற்றும் ‘வாடிவாசல்-
சி,சு செல்லப்பா’ வையும் கையில் எடுத்துக் கொண்டேன். நல்லபிள்ளை போல் பில்
போடக்கொடுத்தேன்.
ஒன்றும் சுரத்தில்லை. தமிழில் பேசிக்கொண்டு என்
கூடவே இரண்டு பேர் வந்துகொண்டிருந்தனர். காலச்சுவடு ஸ்டாலில் அந்தக்கரம்ஸோவ்
சகோதரர்கள் புத்தகத்தைப்பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். ‘இந்தப்புத்தகத்துல என்ன
பிரச்னைன்னா பேர்களெல்லாம் ரஷ்யனில் இருக்கறதால கொஞ்ச நேரத்துலயே எல்லாம்
மறந்துரும். மறுபடியும் பத்துப்பக்கம் பின்னால திருப்பி வாசித்துவிட்டு பின்னரும்
மீண்டும் வரணும்’ என்றார்.கேட்டுக்கொண்டிருந்த இருவருக்கும் அவரின் பேச்சில்
அத்தனை சுவாரசியமில்லை. பின்னரும் ‘மிஷ்கின்’ டைரக்டர் தெரியுமா சார் என
வினவினார். அவர்கள் இடம் வலம் தலையாட்டினர். மிஷ்கின் சார், பிசாசு என்றவுடன் ஓ ஆமாமா
என்றனர். அவர் இயற்பெயர் ராஜா, இந்தப்புத்தகத்தின் மேல காதலாகி இதுல வர்ற ஒரு
கேரக்டரோட பேரான ‘மிஷ்கின்’ என்பதையே தன்னோட பேரா வெச்சுக்கிட்டார். தன்னிடம் உதவி
இயக்குநரா வர்றவங்ககிட்ட ‘இந்த கரம்ஸொவ்
ப்ரதர்ஸ’ வாசிச்சிருக்கியான்னு கேட்டு விட்டு தான் உதவியாளராகச்சேர்த்துக்கொள்வார்
என்றார். கொஞ்சம் கவனிக்க ஆரம்பித்தனர்.
பின்னர் பில்
போட்டுக்கொண்டிருந்த என்னிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்தார் சமது. காலச்சுவடில் ஒரு திட்டம் இருக்கிறது , ஐந்தாயிரம் கட்டி
மெம்பராகி விட்டால் எனத்தொடர்ந்து விளக்கிக்கொண்டிருந்தார். நண்பர்களுக்கு
சொல்லுங்க என என்னைக் கேட்டுக்கொண்டார். வழக்கம்போல் தலையாட்டிக்கொண்டேன்.
இன்னும் நிறைய புத்தகங்கள்
கொண்டுவந்திருக்கலாம். எவ்வளவு போகும், எவ்வளவு கூட்டம் வரும் இங்கே என்ற
சந்தேகங்களில் அதிகம் கொண்டுவரவில்லை என்றும் நாளை மறுநாள் என இன்னமும்
வந்திறங்கப்போவதாக எல்லோரையும் போல் சொல்லிக்கொண்டிருந்தார்.
அங்க ‘பேல்ஸ் க்ரொண்ட்ஸ்லன்னா; இன்னும்
நிறையப்பேர் வருவாங்க என தம் ஆதங்கத்தை தெரிவித்தார். ஏற்கனவே வைத்திருந்த பழைய
காலச்சுவடு இதழ்களை என் பையில் திணித்தார். ஹ்ம்.. சரி பரவாயில்லை,அந்த ஓரான்
பமுக்’கையும் எடுங்கள் என்றேன். ஆயிற்று மூன்று புத்தகங்கள். ஸில்வியா ப்ளாத்,
செல்லப்பா, ஓரான் பமுக்.
பின்னர் கண்ணில் பட்டது விகடன் ஸ்டால்.விகடன்
பதிப்பக அத்தனை புத்தகங்களும் கொட்டிக்கிடந்தன. லிங்கூ முன்னர்
துருத்திக் கொண்டிருந்தார். ‘கத்துக்கிட்ட மொத்த வித்தையும்’ இறக்கீருப்பார் போல.
கொஞ்சம் கொஞ்சம் புரட்டி வாசித்தேன். ஹைக்கூக்கள் என்ற புரிதலில் நிறைய
எழுதியிருக்கிறார். முழுப்பக்கத்தையும் வெறுமையாக விட்டுவிட்டு பக்க எண் போடும்
இடத்தில் மட்டும் இரண்டு வரிகளென. வைத்துவிட்டு நகர்ந்தேன்.
சத்குருவின் ஸ்டால் பெரிதாகவே இருந்தது. எல்லா
மொழிகளிலும் அவரின் போதனைப்புத்தகங்கள் , சீடிக்கள் என விற்றுக் கொண்டிருந்தனர். உள்ளே
உணவுகள் கொண்டு வருதல் தடை என்றபோதும் ஒரு சாயா விற்பவரின் குரல் என்னைக்கடந்து
சென்றது, அதற்கு தடை இல்லை போலும். நித்தியானந்தா
(இன்னும் தான் இருக்கார்யா) ஸ்டால் பளபளப்பாக
முன்னைவிட முனைப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. சிறுகுழந்தைகளுக்கான க்ரேயான்,ஸ்டோரி புக்ஸ்,
எல்லாம் கூட அதிக கடைகள் இல்லை.
சுற்றி வந்து கடைசியில் பார்த்தேன். கிழக்கு
ஸ்டாலை. முழுக்க முழுக்க சுஜாதா. எங்கெங்கு திரும்பினும் சுஜாதா மட்டுமே.
ஆங்காக்கே கொஞ்சம் சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி, பாம்புக்கதைகள், எக்ஸைல் எல்லாம்
ஒன்றிரண்டு பிரதிகள் மட்டுமே காணக்கிடைத்தன. இன்னும் நிறையப்புத்தகங்கள் இல்லை
தெரிந்தெடுக்க. சாருவின் புதிய புத்தக ஆஃபர் இன்னமும் இருக்கிறதா என்ற நப்பாசையில்
பில் போடும் கவுண்டரில் ஏதேனும் போஸ்ட்டர் இருக்கிறதா எனப்பார்த்தேன் அங்கனம்
ஒன்றும் இல்லை. ‘உயிர்மை’ தேடி ஏமாந்தேன் :)
இந்த விஷயத்தில் வெளியீட்டாளர்கள் பெங்களூரைப்புறக்கணிப்பது
ஏன். எல்லோரும் பின்னர் ஆன்லைன் வர்த்தகம் தான் செய்யவேண்டிவரும். எத்தனை தான் ஆன்லைனில்
கிடைத்தாலும் , கையில் அந்தப் புத்தகத்தை எடுத்து அதன் புதிய புத்தக காகித வாசனையை
முகர்ந்தபடி நான்கு பக்கங்களைப்புரட்டிப் பார்த்து பின்னர் பில் போடக்கொடுக்கலாமா
வேண்டாமா என கொஞ்ச நேரம் யோசித்து பின்னரும் தயங்கி, இதைவிட இது இப்ப லேட்டஸ்ட்டா
வந்திருக்கே இது வாங்கலாமா என கொஞ்சம் சலனப்பட்டு, இந்த புதுப் புத்தகத்தப்பத்தைப்பற்றி
இன்னும் தெளிவான விமர்சனங்கள் எதுவுமே வரலையே என்று சமாதானப்படுத்திகொண்டு பின்னரும்
முன்னர் எடுத்த அதே புத்தகத்தையே வாங்க முடிவெடுப்பது என்ற அந்த அனுபவமெல்லாம்
ஆன்லைனில் கிடைக்காது :)
சிறிதும் தயங்காமல் எந்த ஷாப்பிங் மால்களிலும்
,சில வேளைகளில் சாலையில் முகவரி கேட்கவும், தெரியாத வழித்தடத்தில் பயணிக்க
நேர்ந்தாலும் நடத்துனரிடமும் தமிழிலேயே பேசி விட முடிகிறது. மேலும் அதே நாளில்
அத்தனை தமிழ்த்திரைப் படங்களும் உள்ளூர் கன்னட ஆதரவாளர்களின் தீவிர எதிர்ப்புகளையும்
மீறி பெங்களூரின் சுவர்களில் தமிழிலேயே போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டு ரிலீஸாகும் போது தமிழ்ப்புத்தகங்களுக்கும்
தமிழ்ப்புத்தக வெளியீட்டாளர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை ?! சென்னைப்புத்தக கண்காட்சிக்கு
வந்து வாங்கிக்கொள்ளலாமே எனக்கேட்கலாம் தான். எனினும் நான்கே நான்கு மணிநேர பயணத்தூரத்துக்குள்
இத்தனை பெரிய கடக்கவியலாத காட்டாறு என ஒன்று இருக்கிறதா என்ன ?!
.