Friday, December 1, 2023

Colonial Interlude

 

Colonial Interlude – Nottuswara Sahityas of Muthuswami Dheekshithar – இந்த நிகழ்வுக்கு இன்று போயிருந்தேன், முத்துஸ்வாமி தீஷிதர் மும்மூர்த்திகளில் ஒருவர். நிறைய கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார். எல்லாம் தெரியும். தெரியாத ஒன்று.. ‘ நோட்டூஸ்வரம்’ என்கிற மேற்கத்திய பாணி இசையில் அதன் ஸ்வரங்களுக்கேற்ப வடமொழியில் (கிட்டத்தட்ட இவரின் கீர்த்தனைகள் அனைத்துமே) 40 கீர்த்தனைகள (நமக்கு கிடைத்தவை அத்தனை தான்). பாடல்கள் எழுதியிருக்கிறார் என்ற செய்தி மிகப்புதியது என்னைப் பொருத்தவரை.

அவரின் சிறுபிள்ளைக்காலத்தில் இந்திய நாட்டினை அடிமையாக்குவதில் இன்னமும் முனைப்புக்காட்டிய காலனிய அரசு தமது இசையையும் கூடவே கொண்டுவந்திருக்கிறது. அதை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்த முத்துஸ்வாமி அதனடிப்படையில் கீர்த்தனைகளை எழுதியிருக்கிறார். அதே போல வயலினை கர்நாடக இசைக்கு அறிமுகப்படுத்தியது முத்துஸ்வாமியின் தம்பி பாலஸ்வாமி தீஷிதர்,இப்படி நிறைய செய்திகளைக்கொண்ட ஒரு ஆவணப்படம் அது. ஒரு எ.கா.வுக்கு தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒரு இங்கிலீஷ்காரர் நாயனம்/தவில் வாசிக்கும் சிவாஜியின் கோஷ்ட்டியிடம் கேட்பர். எங்கள் இசையை இதில் வாசிக்க இயலுமா என. அப்போது வாசிப்பது தான் இங்கிலீஷ் நோட்ஸ். நோட்டூஸ்வரம்.

அவரின் கீர்த்தனைகள் அனைத்தும் வாய்மொழியாக சீடர்களின் வழி பரவியது தான். சில கிடைக்காமலே போய்விட்டன. நல்லதொரு அனுபவமாக இருந்தது இன்று. பின்னர் குறும்படத்தை இயக்கிய கன்னிகேஸ்வரனுடன் உரையாடலும் நிகழ்ந்தது.

Tuesday, October 24, 2023

கழுதைப்புலி - லியோ

 


பார்த்தா / பார்த்திபன் கதாபாத்திரம் மகாபாரதத்தில் வரும் அர்ஜுனனின் கதை. வில்லாளன் அர்ஜுனின் இன்னொரு பெயர் பார்த்திபன். போர் முடிவடைந்ததும் மனைவி மக்களோடு இமாலயம் சென்று வாழத் துவங்கினான். (நம்ம காப்பி ஷாப் பார்த்திபன் இமாசலப்பிரதேசத்தில் அமைதியாக வாழ்வார்) வில்வித்தையில் விஜயன் (விஜய் ! ) கண்ணைக்கட்டிக் கொண்டு கூட குறிபார்த்து அம்பெய்துவான். குறி ஒருபோதும் தவறாது. ( நெற்றிப் பொட்டில் பார்த்து சிறு தவறேனும் செய்யாது கொன்றழிப்பார் நம்ம ஜோஸப் விஜய்) கூடப்பிறந்தவர்களைக் கொன்றவன். தம்மை தனது திறமைகளை வீரதீர பராக்ரமங்களை மறைத்துக் கொண்டு வாழ்ந்தான் பலகாலமாக அஞ்ஞாத வாசத்தில் மஹாபாரத பார்த்திபன். நம்ம விஜய் அதையே தான் ’தியோக்’ நகரில் இமாசலத்தில் காஃபி ஷாப் வெச்சுண்டு வாழ்றார்.
 
’ஷ்வேதவாஹனா’ என்ற ஒரு பெயரும் மஹாபாரத அர்ஜுனனுக்கு உண்டு. (கறந்த பால் வெண்மையுடன் கூடிய வெள்ளைக்குதிரைகள் பூட்டியவெண் தேரில் பயணிப்பவன் எனப்பொருள்படும்) ஒரு கட்டத்தில் வீட்டுக்கு விரைவாகச் செல்லவேணும் என வெள்ளைக் குதிரையில் பயணிப்பார் நம்ம காஃபி ஷாப் பார்த்திபன் ... அஞ்ஞாத வாசத்தில் பிரிஹன்னளை என்ற மூன்றாம் பாலினர் ஒருவருக்கு ஆடல் பாடல் எல்லாம் சொல்லிக் கொடுக்கும் குருவாக இருந்தான் மஹாபாரத பார்த்திபன். நம்ம விஜய் சார் நன்னா ஆடுவார், அதுவும் பாடிண்டே ஆடுவார். 🙂 Picture Yourself ன்னு குழந்தைகளுடன் அமர்ந்து கதை சொல்வார் நம்ம பார்த்திபன். அது வேறொன்றுமில்லை. சக்கரவியூகம் தான். நாலா பக்கமும் எதிரிகள் புடைசூழ வென்றெடுத்து வெளிவருவது எங்கனம் என வினவுகிறார். அதையே திரும்பத்திரும்ப சொல்லிக் கொடுத்து பதிலை வரவழைக்கிறார்.
 
எந்தப்போருக்குச் செல்லும் முன்பும் பலி கொடுத்தல் என்பது அக்காலத்தில் சகஜந்தானே?... மஹாபாரததில் குருக்‌ஷேத்ரா போரில் வென்றெடுக்க வில்லாளன் அர்ஜுனனின் மகன் ‘அரவானை’ப்பலி கொடுத்தனர். அதே போல இங்கு பார்த்திபனையே தேர்ந்தெடுக் கின்றனர். அதனால தர்க்கப்பிழை ஒன்றும் தெரிய வில்லை.
 
கூட்டிக்கழிச்சு எல்லாம் சேர்த்துப்பாருங்க , நம்ம லியோ வந்து சேர்வார் எல்லா இடத்திலும். என்ன இங்க ட்ரக் மாஃபியா/ Breaking Bad ஹெய்சென்பர்க் எல்லாம் சேர்த்து இக்காலத்துக்கு சுவையாக கலவையாக கொடுத்திருக்கிறார் லோகேஷூ.
 
ஒரு விஷயம் பாராட்டலாம். கதையின் நாயகன் மட்டுமல்ல. மொத்தக் குடும்பமுமே கிறிஸ்து மதத்தினர். இதுவரை ஒரு படமும் நான் இத்தனை வேற்று மதத்தினர் பாத்திரங்களை வைத்து தமிழில் பார்த்ததில்லை. பாபநாசம் கூட ஒரிஜினலில் இருந்த கிறிஸ்டியன்ஸை இந்துவாக்கித்தான் அழகு பார்த்தது.
 
ஒரே ஒரு சந்தேகம் ,அதற்கு எந்த பதிலும் இல்லை. சஞ்சய் தத் தம் மகனை தேடிவருகிறார். மீண்டும் அந்த ‘டதூரா’ ப்ராண்ட் போதைச்சரக்கை மீள மார்க்கெட்டுக்கு கொண்டுவர. ஏனெனில் லியோவுக்கு மட்டுமே அதன் சூத்திரம் தெரியும். ஆனால் ஹெரால்ட் தாஸ் ஏன் லியோவைச்சந்திக்க வேணும் என விரும்புகிறார்.? போட்டுத்தள்ளவா?..அதான் இரட்டையரில் தங்கையை ஏற்கனவே பலி கொடுத்தாயிற்றே ?!... சும்மா (சஞ்சய் தத்) அண்ணன் தேட்றான் நானும் தேட்றேன்னு சொல்வதை நம்ப இயலவில்லை. சரி அப்டியே குடுமபத்துல இருக்கறவங்களையெல்லாம் போட்டுத் தள்ளிட்டு என்னா ம**க்கு பிஸ்னெஸ் பண்ணோணும் ??!🙂 
 
Good Bad Ugly படத்துக்குப்பிறகு நிறைய அதே போன்ற ஸ்டீரியோடைப் கெளபாய் படங்களாக எடுத்துத் தள்ளினர் அமெரிக்கர்கள். எல்லாவற்றுக்கும் ’என்னியோ மரிக்கோன்’ தான் இசைக்கவேண்டும் என தவம் கிடந்தனர். ஒவ்வொரு படத்தையும் பார்த்து முடித்து இசைக்க முற்படும்போது ’என்னியோ’ அப்படியே தூங்கி விடுவார். அதே கதைதான் தம்பி அநிருத்துக்கும். வர்ற படமெல்லாம் அடிதடி/ட்ரக் மாஃபியா/கொலை கொள்ளை/ கட்டப் பஞ்சாயத்து என்றே வாய்க்கிறது. லியோவில் கண்டிப்பாக உறங்கியே இருப்பார் என்பது திண்ணம். கொஞ்சம் கூட க்ரியேட்டிவிட்டிக்கு இடம் கொடுக்காமல் அரைத்த மாவையே அரைத்துத்தள்ளப்பணித்தால் இப்படித்தான் 🙂 டெக்னிக்கலாக மிரட்டி இருக்கும் லோகேஷ் மற்றும் பரமஹம்சாவின் முன்னில் தம்பி took a back seat... ! பாடல்களுக்குக் கொடுத்த சிரத்தை பின்னணி இசைக்கு இல்லை. ஆனாலும் ஆர்ப்பாட்டமான அந்த ட்டூட்டூ சாங். அற்புதமான இந்திப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் (இவருக்கு இப்படி ஒரு கெதியா?... ’ஏகே வெர்ஸஸ் ஏகே’-வெல்லாம் எடுத்தவர்யா ?.. அடக்கெரஹமே?? ) மற்றும் அவரின் கூட்டாளிகளை சுட்டுத் தள்ளிவிட்டு உடனே தொடங்கும் டூன் டுன் டுன் டுன் டுன் பாடல் அமர்க்களம்டா.
 
நீங்க என்னாதான் சொன்னாலும் இங்கிலீஷ் படத்துலருந்து சுட்டதுன்னாலும் இப்டி ஒரு லைவ் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் ஞான் எப்போழும் கண்டிட்டில்லா. அந்த காஃப்பி ஷாப் ஸ்டண்ட். மிஷ்கின்/சாண்டி இன்னபிற ஆட்காரோடு அடிச்சுப்பொளிக்கும் சண்டைக்காட்சி. அதிலும் இன்னமும் ஒரு கூடுதல் சுவாரஸ்யம். மொத்தமாக அடிவாங்கி ஒவ்வொருவரும் மூலையில் கிடக்க, விஜய் களைத்துப்போய் நிற்க, மிஷ்கின் கேட்பார் ‘சாக்லேட் காப்பீ....?’ என. சிரிக்காத ஆளில்லை. காசு எடுத்தாச்சு கெளம்பினா போய்ட்டே இருக்கலாம் என்ன எழவுக்குடா உனக்கு ‘சாக்லேட் காப்பி கேக்குது’ என. அத்தனையும் ரியல் ஆக்‌ஷன். அந்தக்காட்சிக்கு தேர்ந்தெடுத்த பாடலும் அருமை. டேய் பூனை பாட்டைப்போட்றா... ஹிஹி
 
ஒண்டாத ஒரே விஷயம். ஹயீனா மட்டுமே. அனிமல் லவ்வர் என்ற அடைமொழி, இவரென்ன ஃபாண்டமா? எல்லா அனிமல்ஸையும் பொத்திக் காப்பாத்தி சரணாலயத்துல கொண்டு சேக்றதுக்கு?.. இருந்தாலும் முதற்பத்து நிமிடக்காட்சிகளில் ஹயீனா அவரின் முதுகில் கீறத்தானே செய்யுது? ஒரு ”ட்டீ.ட்டீ” இன்ஜெக்‌ஷன் போடேண்டாமோ ?...அப்டியே அலையிறார். கடையில கல்லாவில போய் ஒக்கார்றார் விசைண்ணா! ( குடும்பத்தை/தம் கூட்டத்தை விட்டுப்பிரிந்த ஹயீனா தான் நம்ம காப்பி ஷாப் பார்த்திபன். சிம்பாலிக்கா அப்பாலிக்கா 🙂 )
 
பீம்சிங்கின் ஜானர் குடும்பம்/தியாகம்/ கூட்டுக் குடும்பம்/ஏகத்துக்கு பிழிந்தெடுக்கும் செண்டிமெண்ட். பாரதிராஜாவுக்கு கிராமம். எஸ்பி முத்துராமனுக்கு மசாலா ஜானர். அதுபோல லோகேஷின் ஜானர் எப்போதுமே இதுபோல அடல்ட் சமாச்சாரம் தான். ட்ரக்ஸ்/ மாஃபியா/ போலீஸ்/ அண்டர்க்ரவுண்ட் ஆக்டிவிட்டீஸ். இதிலென்ன தவறு இருக்கமுடியும்?... #கழுதைப்புலி

Saturday, October 21, 2023

பிமல் ராய் - The Silent Master

 


நேற்று ஒரு திரைப்பட நிகழ்வு. பெங்காலி இயக்குநர் பிமல் ராய். அவரின் படங்கள், பெங்காலி/ஹிந்தியில் அவர் எடுத்தவை. என முழு நாள் நிகழ்வு. நிறைய பிரபலமான படங்களை எடுத்திருக்கிறார்.பெரும்படமான தேவ்தாஸ் இவர இயக்கியது தானாம். ( எனக்கு இப்ப தான் தெரியும். ஸ்பீல்பெர்க், டரண்டினோ எல்லாம் நமக்கு அத்துப்படி 🙂 ) அவரைப்பற்றிய ஒரு ஆவணப்படம், பின்னர் அவர் மகனாருடன் ஒரு உரையாடல். பின்னர் அவரின் முதல் படமான பெங்காலி “உதார் பத்தே’ (வெளிச்சத்தை நோக்கி) திரையிடப்பட்டது. 
 
ஆவணப்படத்தை இயக்கியது அவரின் மகன். இது ஒன்று தான் இயக்கியிருக்கிறேன் என பணிவுடன் தெரிவித்தார். அவரின் நேரடி வாரிசுகள் திரைத் துறைக்கு வரவேயில்லை எனலாம். ஏன் விருப்பமில்லையா தெரியவில்லை. அடுத்த தலைமுறை வாரிசுகள், கலை இயக்கம், ஃபோட்டோக்ராஃபி என தலையெடுக்கின்றனர். ஆவணப்படம், அவரின் திரைப்படங்களிலிருந்து சில முக்கியமான காட்சிகள், பின்னர் அவருடன் பயணித்த கவிஞர் குல்ஸார், நடிகர் திலீப்குமார் என பெருந்தலைகள் பேசுகின்றனர். ஒன்றும் புதிதில்லை. இத்தனை பெரிய இயக்குநரின் மகனுக்கு ஒரு ஆவணப்படத்தை சுவைபட எடுக்க வரவில்லை என்பது தான் சோகம். இது தெரிந்து தான் திரைஇயக்கத்தின் பக்கம் வரவில்லை போலிருக்கிறது.
வாரிசுகளுக்கு இப்பொதைய வயது குறைந்தது அறுபது இருக்கும். முதலில் பிமல் ராய் புகைப்படக்கலைஞராக இருந்திருக்கிறார். பின்னர் எழுதி இயக்க முனைந்திருக்கிறார். ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் என பல படங்களை எடுத்திருக்கிறார். அதிலொன்று நம்ம ‘நல்லதங்காள்’ படத்துக்கு ஒளிப்பதிவு அவர் தானாம். ஓடிய எழுத்துகளில் அவசரமாக வாசித்தேன். தமிழாக இருந்ததால் சட்டெனெக்கண்ணில் பட்டது. (எனினும் விக்கி ஏதிலும் இவர் தான் ஒளிப்பதிவாளர் எனக் கூறவில்லை).
 
அவரின் மகன் உரையாடலின்போது பல நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவரின் தாத்தாவுடன் எப்போதும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்த ஒருநண்பர் பூர்வீக முழு வீட்டையும் எழுதி வாங்கிக் கொண்டு பிமல் ராயின் குடும்பத்தை இரவோடு இரவாக பங்களாதேஷ் டாக்காவிலிருந்து விரட்டி அடித்திருக்கிறார். பின்னர் கல்கட்டா வந்து பின்னரும் வாய்ப்புகள் கிட்டாது நியூ தியேட்டர்ஸின் பரிவில் ’உதார் பத்தே’ எனற பெங்காலி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். அதே நேரம் அந்தத் தயாரிப்பு நிறுவனம் ஒரு பெரிய ப்ளாக்பஸ்ட்டர் படத்தில் அதிக கவனம் செலுத்தி இவரை உதாசீனப்படுத்தியிருக்கிறது. இருப்பினும் அவமானங்களைத் தாங்கிக் கொண்டு எடுத்து முடித்து வெளியிட்டபின் ஓராண்டு அந்தப்படம் ஓடியிருக்கிறது பெங்காலில். அப்போதைய வசூல் அறுபது லெட்ச ரூபாய் சம்பாதித்துகொடுத்தது. (உடன் எடுத்த அந்த ப்ளாக்பஸ்ட்டர் ஊத்திக்கொண்டு போயிருக்கிறது) இப்போதைய மதிப்புக்கு 10-20 கோடிகள் வரும்! .. 
 
பின்னரும் பாம்பேக்கு வந்து சேர்ந்த பின் நல்ல படங்களை கொடுத்த போது, அவரின் மேனேஜர், நம்ம இருப்பதற்கு ஒரு வீடு வாங்கலாமே எனக்கூறிய போது , நான் வீடு/கார்/நிலம் எல்லாம் வாங்குவதற்காக சினிமா எடுக்க வரவில்லை என சொல்லியிருக்கிறார். ( வீட்டை எழுதி வாங்கிய ரணம் அவரின் மனதில் ஆழப்பதிந்திருக்கிறது) வாடகை வீட்டிலேயே வசிக்கலாம் என்றே பிடிவாதம் பிடித்திருக்கிறார்.
 
அந்த முதற்படம் உதார் பத்தே’ வந்த போது அந்தப்படத்தில் வந்த நெக்லேஸ் ரொம்ப நாட்களுக்கு ஃபேஷனாக இருந்திருக்கிறது பெங்காலில். மேலும் பிமல் ராய்க்கு ரபீந்தரநாத் தாகூரின் கவிதைகள் மேலே பெரிய மோகமே இருந்திருக்கிறது. இந்தப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களுமே ரவீந்த்ரநாத் எழுதியது தான். (எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை.. ஆங்கிலத்தில் கொட்டை எழுத்துகள் ஓடிய போதும்) படத்தின் முதலில் எழுத்துகள் ஓடும்போது நம்ம தேசியகீதத்தை இசைத்திருக்கிறார். படம் வெளிவந்தது 1944-ல். இந்தப்படம் இப்போது திரையிட்டாலும் பெங்காலில் திரையரங்கில் மக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்துவர் என. ஆனால் நேற்றைய அரங்கில் ஒருத்தர் கூட எழுந்து நிற்கவேயில்லை. ( நான் உட்பட..!) இதைக்குறிப்பிட்டுப்பேசிய அவரின் மகள் மிகுந்த வருத்தப்பட்டார். ஏன் எழுந்து நிற்கத் தோணவேயில்லை ஒருவருக்கும்?... ஹ்ம்... மேலும் இந்தப்படத்தின் வசனங்கள் அடங்கிய புத்தகம் உள்ளூர் பான் கடைகளில் கூட விற்கப்பட்டது. அத்தனை பிரபலம்.
 
1943-ல் பெங்கால் ஃபெமீன் (பெங்கால் பஞ்சம்) ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார் பிமல் ராய். இப்போது ஒரே ஒரு காப்பி இருப்பதாக தெரிவித்தார் அவர் மகள். அவர் எடுத்த அத்தனை படங்களும் இப்போது NFDC கைவசம். மிகப்பெரும் சவாலாக இருக்கிறது ராயல்ட்டி பிரச்னைகளில். மேலும் Criterion என்ற அமேரிக்க நிறுவனம் இந்தப்படங்களின் உரிமையை வாங்கியிருக்கிறது. சத்யஜித்ரேயின் படங்களுக்கு கொடுத்த மரியாதை என் தந்தை படங்களுக்கு கிட்டவில்லை. இருப்பினும் போனால் போகிறது என இப்போது பிமல் ராயின் படங்களையும் மீளுருவாக்கம் செய்ய முனைந்திருக்கிறது. எங்கு சென்றாலும் உருவாக்கும் கலைஞனுக்கு மரியாதையோ ராயல்ட்டியோ அத்தனை எளிதில் கிடைப்பதில்லை. அவன் இறந்தபின்னும் கூட.! 
 
பிமல் ராயின் மனைவி மனோபினா ராய் நல்ல ஸ்டில் ஃபோட்டொக்ராஃபர். நிறைய படங்களை எடுத்துத் தள்ளியிருக்கிறார். பல விருதுகளையும் பெற்று இருக்கிறார். அந்த 1920-1930களிலேயே. அவரும் அவரின் கூடப்பிறந்த சகோதரியும் சேர்ந்து எடுத்த படங்களை (கறுப்பு வெள்ளை) எக்ஸிபிஷனாக இரண்டாம் தளத்தில் பார்வைக்கு வைத்திருந்தனர். அவரின் மகனுக்கும் மகளுக்கும் பெருமை தாங்க வில்லை. மேற்தளத்தில் என் அம்மாவின் படங்களும், கீழ்த்தளத்தில் அப்பாவின் திரைப் படங்களுமாக பெங்களூர் இண்டர்நேஷ்னல் செண்ட்டர் கொண்டாடிக் கொண்டு இருப்பதைக் கண்டு. பின்னரும் தாம் ஒரு நூல் எழுதியிருப்பதாகவும் அதை கவுண்ட்டரில் ஐநூறு செலுத்திப்பெற்றுக் கொள்ளலாம் எனக்கூறினார்.
 
உரையாடிக் கொண்டிருக்கும்போது இசையமைப்பாளர் ’சலீல் செளத்ரி’யின் பேத்தி இங்க தான் இருக்கிறார். எழுந்திரும்மா என்றார். என் பக்கத்தில் இருந்த ஒரு இளம்பெண் சிரித்துக்கொண்டே எழுந்தார். அடப்பாவிகளா மொதல்லயே சொல்லக்கூடாதா என கெதக் என்றிருந்தது. பார்ப்பதற்கு வழக்கமான பெங்களூர் காலேஜ் யுவதிபோல டைட் ஜீன்ஸும் ஒரு டாப்ஸுமாக அமர்ந்திருந்தார். இங்க இதுபோல நிறைய ஆர்ட்டிஸ்ட்டுகள், பெயிண்டர்கள், நடிகர்கள் என எப்போதும் கூட்டம் கூடும். அதுபோல எதோ ஒண்ணு உக்காந்திருக்குன்னு நினைச்சா.. ஆஹா. அம்மா தாயே.. பெயிண்டிங்/கேன்வாஸ் எல்லாம் செய்வாராம். அப்ப சரி. படம் ஆரம்பித்த பின் தாமாக எழுந்து எங்கோ போய்விட்டது இளம் யுவதி சலீல் செளத்ரி.
 
மிக்க மார்க்ஸீஸ பின்னணியில் இவரின் பெரும் பான்மையான படங்கள் அமைந்திருக்கின்றன. காந்திக்கு திரைப்படங்கள் மீது வெறுப்பும் அதே நேரம் நேருவுக்கு படங்களில் விருப்பம் இருந்திருக்கிறது. ( ரஷ்யாவின் லெனின் திரைப்படங்களை கொண்டாடியவர் எனகூறினார்)

இன்றும் பிமல் ராயின் (21 அக்டோபர்’23) புகழ்பெற்ற சில படங்கள் திரையிடப்படுகின்றன BIC-ல். #பிமல்ராய்
 

 

Sunday, September 3, 2023

பத்மினியும் ரமேசனும்

 


பத்மினியும் ரமேசனும், ஆஹா. என்னே ஒரு சுஹானுபவம். அந்தப் பெயரைச் சொன்னாலே ஆர்ட்ஸ் வாத்தியார் , மார்ஷியல் ஆர்ட்ஸ் வாத்தியாரா மாறி அடிச்சுத்துவம்சம் பண்ணிடுவார். :) . மடோன்னா செபாஸ்டியன் (ஆஹா..ஹிஹி) ஸ்கூல்ல சேர்ந்தப்போ அவர் பெயரைச் சொல்லாமலே டீச்சர் வாங்க டீச்சர் போங்கன்னு ஒவ்வொருத்தரும் சொல்லும்போது, ஏன் இந்த டீச்சருக்கு பேர் இல்லையான்னு கொஞ்சம் யோசிக்கவைக்கும் இடங்கள்.

பின்னர் ரமேசனுக்கும் மடோன்னாவுக்கும் காதல் அரும்பியதும், தமது கவிதைகளைகொணர்ந்து கொடுத்து ப்ரொபோஸ் செய்தவனை புறந்தள்ளியதைச் சொல்லும்போது, அவ்வளவு மோசமா என் கவிதைகள் என ரமேசன் கேட்கும்போதும் ( இந்த இடத்தில் சப்தம் போட்டு சிரித்து விட்டேன் நான் ) அரும்பும் புன்முறுவல்கள்.

போத்துபோல உறங்காம் (எருமைமாடு) என பரஸ்யம் (விளம்பரம் செய்யும் அந்த ’ராரீரம் ஜெயன்’ . ரமேசனின் வாயிலிருந்து ‘பத்மினி’ என்ற பெயரை அன்பாக சொல்ல/வரவழைவைக்கும் அந்த மாமன், பத்தாயிரத்தில் தொடங்கி கடைசியில் மூவாயிரம் ரூபாய்க்காவது கல்யாண ஆல்பத்தை தள்ளிவிட்டுவிடலாம் என எண்ணும் அந்த ஃபொட்டோக்ராஃபர், எந்தா ஃபர்ஸ்ட நைட்லு பொண்ணு ஒளிச்சோடிப்போயதாணோன்னு நீதிமன்றமே சிரிப்பொலியில் மயங்கக் கேட்கும் ஜட்ஜு, எனப்பலப்பல சாதாரணமான மனுஷன்மார் படம் முழுக்க நிறைந்து கிடக்கின்றனர்.

இந்த மாதிரி படங்களைப்பார்க்கும்போது நாமும் எடுக்கலாம்டேன்னு ஒரு நம்பிக்கை வருது தமிழ்ல எங்க பார்த்தாலும் ஐந்நூறு கோடி ஆயிரம் கோடின்னு விக்ரம், ஜெயிலர், பக்கத்துலயே அண்டவிடாது வளர சீரியஸாயிட்டு அடிச்சு விரட்டும் சலச்சித்ரங்ஙள் மாத்றமே வராருண்டு. எண்டே குருவாயூரப்பா :)

#பத்மினி

 


Friday, August 11, 2023

Writing with Fire

 


’Writing with Fire ‘ என்ற ஒரு டாக்குமெண்டரி படம் நேற்று பார்த்தேன். உத்தர் பிரதேசத்தில் முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே நடத்தப்படும் பத்திரிக்கை/ யூட்யூப் சேனல் பற்றிய ஆவணப்படம். தாழ்த்தப்படுத்தப்பட்ட பெண்களால் முன்னெடுக்கப்பட்டு இப்போது அவர்களின் பத்திரிக்கையும், யூட்யூப் சேனலு நிறைய வாசகர்களை/சந்தாதாரர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

Khabar Lahariya (செய்தி அலைகள்) என்ற பெயரில் பத்திரிக்கை மற்றும் யூட்யூப் சேனல் செயல்படுகிறது. முழுக்க ஹிந்தியில் மட்டுமே செயல்படும் ஊடகம். உள்ளூர் பிரச்னைகளை, தலித்கள் படும் துயரினை, ஆணாதிக்கம் மற்றும் உள்ளூர் தாதாக்களால அவர்கள் நடத்தப்படும் முறை, ஏகப்பட்ட கோரிக்கைகள், முறைப்பாடுகள் போலீஸ் ஸ்டேஷன்களில் செய்யப்பட்டிருப்பினும் ஒன்றின் மேலும் நடவடிக்கைகள் எடுக்காதிருத்தல் என்பன போன்ற சாதாரண மக்களின் பிரச்னைகளை முன்னெடுத்து தம்மாலியன்றவரை அது பற்றிய செய்திகளை சேகரித்து பத்திரிக்கையிலும், சேனலிலுமாக அம்பலப்படுத்தி இருக்கின்றனர். அதற்கான தீர்வும் பல கேஸ்களில் கிடைத்திருக்கிறது. மேலும் இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கவிதா என்ற பெண்ணின் முன்னேற்பாட்டில் இந்தச்செய்தி நிறுவனம் செயல்படுகிறது. ஜர்னலிஸம் படித்த யாரும் செய்தி தொகுப்பாளர்கள் எல்லாம் இல்லை. பள்ளிப்படிப்பை முடித்த இல்லை, அது போலும் படிக்க இயலாத கிராமத்துப்பெண்களின் சேனல் இது. இப்போது 1.54 லெட்சம் சந்தாதாரர்களைக் கடந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு ஃபோன் போலும் பயன்படுத்தத்தெரியாத கிராமத்துப் பெண்கள் அவற்றை உபயோகப்படுத்த கற்றுக்கொண்டு பின்னர் அது கொண்டு சேகரித்த வீடியோக்களை, செய்தியை பிரசுரிக்கின்றனர்.

இந்த ஆவணப்படம் Sundance Festival-ல் சிறந்த ஆவணப்படம் என தெரிவாகியிருக்கிறது. நிறைய இது போன்ற விருதுகளை வென்ற ஆவணப் படம் இது. ஆஸ்கார் பட்டியலிலும் இந்தப்படம் இடம் பிடித்திருந்தது. 2017ல் வெளியான இந்த ஆவணப்படம் இங்கு பெங்களூரில் திரையிட பல முறை முயன்றும் இயலாது போய் இப்போது கடைசியாக திரையிடப்பட்டது. ஏனெனில் உள்ளிருக்கும் விஷயம் அப்படி. அப்பட்டமாக உள்ளூர் பெரும்பான்மைக் காவிக்கட்சிக்கு எதிரான பல செய்திகள்/ பேட்டிகள் எல்லாம் படத்தில் காணக்கிடைக்கிறது.

எப்போதும் திரையிடல் முடிந்ததும், ஆவணப்படம் எடுத்தவர்களுடன் உரையாட வாய்ப்பு கிட்டும். இந்த திரையிடல் இரு முறை ஒரே நாளில் நடந்ததால் நான் கலந்துகொண்ட திரையிடலில் இயக்குநர்களை சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போனது. பெருவாரியான மக்கள் திரையிடலைப் பார்க்க ஆவல் கொண்டு பதிந்துவைத்ததால் இரு முறை திரையிடப்பட்டது.

#WritingwithFire


Sunday, August 6, 2023