Wednesday, August 29, 2012

கார்த்திக்-சலீம்-அஷோக் மற்றும் நான்


MS விஸ்வநாதன் தன்னோட மெல்லிசைக்காலங்கள் கிட்டத்தட்ட முடிந்த பிறகே பிற துறைகள்லயும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நடிக்க வந்தார், இங்க விஜய் ஆண்டனி, அவரோட Field-Music Direction – ல ஒரு நல்ல Status-ல இருக்கும்போதே நடிக்க வந்திருக்கார். இவரைப் பார்த்துவிட்டு DSP (தேவி ஸ்ரீபிரசாத்) யும் நடிக்க வந்து விட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கனவே ஒரு பாட்டுக்கு Dance ங்கற மாதிரி DSP அப்பப்ப வந்து தலயக்காட்டிட்டு போறார் சில படங்கள்ல.

 
UnderPlay, Under Acting-ங்கறது நடிக்க, தமது திறமையை/உணர்ச்சிகளை இன்னும் நல்லா காட்ட முடியுங்கற இடங்கள்ல அடக்கி வாசிக்கிறது. ‘பரதம்’" என்று 90-கள்ல ஒரு மலையாளப்படம் வந்திருந்தது. "மோகன்லால்" நடிச்சிருந்த படம் அது. அதுதான் UnderActing – அவருக்கு தேசிய விருதை வாங்கிக்கொடுத்த படம். மேலும் பல தேசிய விருதுகளையும் அள்ளிக்குவித்த படம் அது. இது மாதிரி நடிக்க வேண்டிய இடங்கள்லயும் நடிக்காமலே இருக்கிறதுக்குப் பேரு UnderActing இல்ல.இன்ன பிற துறைகள்லயும் தன் திறமையைக் காட்றேன்னு வர்றவங்களால தான் இந்தப் பிரச்சினையே வருது. ஹிந்தில பாடகர்/இசையமைப்பாளர் கிஷோர்குமார் ஏற்கனவே முயற்சி செய்ததுதான் இந்த நடிப்புத்துறை.

Matt Damon –னின் Bourne பட வரிசைகள் போல தாம் யார் என்று தெரியாத Character ஆக உலா வராமல், தான் யாரென்று தெரிந்து சூழலுக்குத் தகுந்தவாறு இங்கு தம்மை மாற்றிக்கொள்ளும் விஜய் ஆண்டனி, கிட்டத்தட்ட மௌனகுரு’" அருள்நிதி பாணிலயே அடிக்குரல்ல பேசி,தான் சரியா நடிக்கிறோமா/இல்லயான்னு தனக்குள்ள நினைச்சிக்கிட்டே படம் பூரா வர்றார். சொல்லப்போனா அவர் நடிச்சிருக்கிற "Character" தான் அவரக்காப்பாத்துது.Body Language, Dialogue Delivery போன்ற Technical விஷயங்கள்ல இன்னும் நிறைய உழைத்திருக்கலாம் விஜய் ஆண்டனி .

படத்தில் வரும் எந்தப்பெண்ணையும் மருந்துக்குக்கூடத் தொட்டுப்பார்க்கவில்லை விஜய் ஆண்டனி. அவர் படிப்பது மருத்துவமே என்றான போதிலும்.(ஒருவேளை அது அவர் மனைவியின் அன்புக் கட்டளையாகக்கூட இருக்கலாம் )

Well Knit Plot , அதற்கேற்ற அருமையான தெளிவான குழப்பமில்லாத திரைக்கதை.எந்த இடத்திலும் படம் தொய்கிறது என்று கூறவே இயலாது. எனினும் படத்தின் ஆரம்பக்காட்சிகள் முழுக்க நந்தா" படம் போலவே அச்சசல் இருக்கிறது. சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, தாயின் அன்புக்காக ஏங்குவது , பின்னர் அதுவே எல்லோரையும் அடித்து வைப்பதற்கான காரணங்களாகக் காட்டுவது என்பதெல்லாம் குறைகள். Flirting Friend அஷோக், அப்புறம் அவரின் தோழர்கள் எல்லோரும் நாம வழக்கமாகப் பாக்றவங்க தான்.நம்ம கூட இருக்கறவங்க போலத்தான் வந்துவிட்டுப் போகிறார்கள்.

பாடல்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை/உழைப்பை பின்னணி இசைக்கும் கொடுத்திருக்கலாம். எப்போதும் போல பாடலின் ராகத்தை இஸ்லாமியப் பின்னணிக்கென "Mandolin" கொண்டே இசைத்திருப்பது பெரிய Drawback. Psycho படத்தில் வரும் கொலைக்காட்சிகளுக்கான Viloin, Double Bass இங்கும் அவ்வப்போது வந்து போகிறது.

இப்போது இருக்கிற இசையமைப்பாளர்களுக்கு எங்கிருந்தாவது உருவி பாடல்களை அமைத்துவிடுவது எளிதாக இருக்கிறது.படத்தின் காட்சிகளை உள்வாங்கி அதன் கதையை உணர்ந்து , Theme Music Concepts களை
வைத்துக்கொண்டு இசைப்பது என்பது இமாலய முயற்சியாகத்தான் தோன்றுகிறது அவர்களுக்கு. கற்பனை வளம் குன்றிய பின்னணி இசை, இது போன்ற Thriller படத்திற்கு உரமேற்றத் தவறுகிறது. Thriller படங்களுக்கெனவே பழைய காலங்களில் வேதா" என்பவரின் இசை வெகுவாகப் பாராட்டப்பட்டது." ‘அதே கண்கள்" பின்னணி இசை இன்னும் நிலைத்திருப்பதே அதற்குச் சான்று. படத்தின் பல இடங்களில் "Predator 1" ன் பின்னணி இசையை உணரமுடிகிறது.


முன்னெல்லாம் English கலந்துதான் Lyrics எழுதினாங்க, இப்ப "Spanish, Portugese" லாம் கூட தமிழ்ப்பாடல்களில் காண முடிகிறது. "மக்காயேலா மக்காயேலா காய மவ்வா " என்ற வரியை பாடலின் துவக்கத்திற்கென ரைமிங்கிற்கென எடுத்துக்கொண்டாலும் ஹாரீஸ்போல அனைவரும் இறங்கியிருப்பது வருந்தத்தக்கதே. அந்தப்பாடலைப் பாடகர்கள் Spanish Background-லேயே பாடியுமிருக்கின்றனர். ராஜா சார் " Elvis Presly " Style ல் அமைத்திருந்த பாடல் " ரம்பம்பம் ஆரம்பம் , ரம்பம்பம் பேரின்பம் " ,எப்போது கேட்டாலும் அது தமிழ்ப்பாடல் போலத்தான் ஒலிக்கும், ஆங்கிலப்பாடல் நமக்கு ஞாபகம் வரவே வராது. பிற தேசத்து பாணி இசையை இங்கு கொண்டுவருதல் தவறில்லை. அதை நமக்குத் தகுந்தவாறு அதன் வாசனை சிறிதும் இல்லாமல் கொடுப்பதில் இருக்கிறது இசையமைப்பாளனின் பங்கு.


படத்தின் அனைத்துப் பாடல்களையும் மேற்கத்திய இசைப்பாங்கில் அமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. ஈழக்கவிஞர் அஸ்மின் எழுதிய "தப்பெல்லாம் தப்பேயில்லை"" பாடலுக்கு நமது பாணியில் இசை அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பாடலின் ஒவ்வொரு சரணத்திற்குப்பிறகும் English ல் குரல் ஒலிக்கிறது. சலிப்புத்தான் வருகுது

என்னய்யா ரொம்பவே அடக்கியே வாசிக்கிறாரே நம்ம விஜய் ஆண்டனி, எடுத்து அடிக்க மாட்டாரான்னு நினைக்கும்போது , அவரின் அப்பா என்று கூறிக்கொண்டு வரும் ராட்டினம் சுற்றுபவரை Barல் வைத்து சந்திக்கும் போது, ஏற்கனவே பெண் விஷயத்தில் பிரச்சினை செய்தவர்களை "Beer Bottle" ஐ எடுத்து அந்த "அப்பாவி(யி)"ன் தலையிலடித்து உடைத்து அடிக்கும் Stunt Scene Fasntastic. நிஜமாகவே தனக்குள் அடக்கி வைத்திருந்த கோபத்தை சீறும் புலி போலக் காட்டியிருக்கிறார். சபாஷ் விஜய் ஆண்டனி!

அஷோக் (சித்தார்த் வேணுகோபால்)கின் நண்பன் சுரேஷைக்கொல்லும் காட்சிக்கென Home Theaterல் "Oh Fortuna" என்ற விதி மற்றும் எதிர்காலத்தைப்" பற்றிக்கூறும் நாடகக்கதைப் பாடல் (Opera Choir Music) இசைக்கிறது . இந்தக்காயர் ம்யூஸிக்கின் கட்டமைப்பு மிக மெதுவாகத்தொடங்கி , கிசுகிசுக்கும் ஒலியுடன் சேர்ந்திசைத்து , பின் Drums ம் யாழுமாக இசைத்து எதிர்பாராத சமயத்தில் சடாரென முடியும் ஒரு இசைக்கோவை. அவனைக் கொலை செய்வதும் அவ்வாறே தொடங்குகிறது. கட்டையை வைத்து அடிக்கத் தொடங்கி பின்னர் எதிர்பாராத விதமாக மேஜை நாற்காலிகளை வைத்து அடித்து பின்னர் உருட்டுக்கட்டையால் அடித்து மாடிப்படிகளில் ஏறுபவனின் கால்களை இடறி குப்புற விழவைத்து நடுமண்டையில் ஓங்கி அடித்துக் கொல்லும் காட்சிக்கு மிகவும் பொருத்தமான இசைக்கோவை

இந்தக் Choir -ன் ஒலி அளவைக் கூட்டிவைத்துப் பெரும் சப்தத்துடன் பின்னணியில் இசைக்க அவரைக் கொன்று பின் புதைத்துவிட்டு வீடு திரும்பும்போது சுரேஷின் பைக்" வாசலில் நிற்கிறது. விஜயோடு சேர்ந்து நமக்கும் தூக்கிவாரிப் போடுகிறது . பின்னரும் சாவியைத்தேடி அலைந்து களைத்துப்போய் புதைத்த இடம் வரை சென்று மீண்டும் பிணத்தைத்தோண்டி எடுத்து ஜீன்ஸ் பாக்கெட்டில் இருக்கும் சாவியை எடுத்து திரும்ப வந்து பைக்கை யாருமில்லா சாலையில் கொண்டுபோய் நிறுத்தி விட்டு வந்து வீட்டுக்குள் நுழைந்த பின்னர் அப்பாடா", என்று பெருமூச்சு விடுகிறாரே, அந்த அத்தனை காட்சியிலும் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கும் அவ்வாறே தோணுவது ஓடிக்கொண்டிருக்கும் படத்துடன் சேர்த்து நம்மையும் கட்டிப்போடுகிறது.

இவ்வளவு கொலைகளையும் செய்துவிட்டு அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு வளைய வருகிறாரே அங்கு ஜெயிக்கிறார் விஜய் ஆண்டனி. அதே போல் She knows Too Much So she should be Killed என்று வழக்கமான ஆங்கிலப்படங்கள் பாணியில் ரூபாவையும் போட்டுத்தள்ளி விடுவார் என்று நினைக்கும் நமக்கு அவருக்குள்ளிருக்கும் தம்மையறியாத காதல் அதைத் தடுத்து நிறுத்தி அவரை அறையில் வைத்துப் பூட்டிவிட்டு , தம்மைத்தாமே தாக்கிக்கொண்டு Scene Create பண்ணும் காட்சி நமக்கு விஜய் ஆண்டனி மேல் பரிதாபத்தை வரவழைக்கத் தவறவில்லை.

இத்தனை கொலைகளையும் செய்து விட்டு சாமர்த்தியமாக எல்லா இடங்களிலிருந்தும் தப்பிக்கிறார் என்பது நம்ப முடியவில்லையே , எப்பேர்ப்பட்ட தேர்ந்த குற்றவாளியாக இருப்பினும் , To Err is human என்பதற்கிணங்க ஏதேனும் சிறு தடயமேனும் விட்டுச்செல்லமாட்டானா என்ற நமது ஆதங்கம் , அந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் கடைசியில் வருவது நம்மை ஓரளவு ஆசுவாசப்படுத்துகிறது. மேலும் "எதையும் நிரூபிக்க தடயங்கள் கிடைக்கவில்லை. அதனால நீ தப்பிக்கிற"" என்று அந்த இன்ஸ்பெக்டர் வலிய வந்து விஜய் ஆண்டனியிடம் வழக்கம் போலச் சொல்லாமலிருப்பதும் பெரிய ஆறுதல் நமக்கு.

"பட்டுக்கோட்டை பிரபாகர்" 80-களின் பிந்தைய காலங்கள்ல "மூன்றாம் கை"" (நம்பிக்கை)ங்கற தலைப்பில ஒரு குற்றப்பின்னணி கொண்ட புதினம் எழுதியிருந்தார்,அதிலயும் கதாநாயகன் இதுபோலவே மூன்று கொலைகளைச் செய்து விட்டு நகரின் மணிக்கூண்டில் ஏறி ஒளிந்துகொண்டு அத்தனை களேபரங்களும் அடங்கிய பின்னர் அமைதியாக இறங்கி வந்து தன் வழமையான வாழ்க்கையைத் தொடங்குவான் , அதுபோலவே இந்தக் கதையும் அமைந்திருக்கிறது.

Star Value இல்லாதது ஒரு பெரிய குறை படத்திற்கு.எத்தனை அழகான பெண்கள் வந்து சென்ற போதிலும் யாருக்கும் பெரிதாக தமது திறமை காட்ட வாய்க்கவில்லை. அவர்களில் ஒருவர் கூட நம் மனதில் நிற்கவில்லை.விஜய் ஆண்டனியே படம் முழுக்க வியாபித்திருக்கிறார்.

இந்த நான்" பார்க்கும் அனைவருக்குள்ளும், மிகச்சரியான தவறேயில்லாத திரைக்கதையினால் ,எத்தனை தவறு செய்தாலும் சாமர்த்தியமாகக் காய் நகர்த்தினால் தப்பிக்க வழியுண்டு என்ற ஒரு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது. திரைப்பட அரங்கை விட்டு வெளியே வரும்போது அதை அங்கேயே விட்டுவிட்டு வருதல் மிகவும் நலம்...


.

Monday, August 27, 2012

நீர்க்குமிழிகள்



தங்கமீன்கள் தமது உணவென நினைத்து
அழகிற்கெனப் போடப்பட்டிருந்த சிறு கற்களை
விழுங்கிப் பின் துப்பிக்கொண்டிருந்தன

எண்ணற்ற நீர்க்குமிழிகள் புனலிலிருந்து
வெளிக்கிளம்பி நீர் மேல் மட்டம் வரை சென்று
காற்றில் பட்டு உடைந்து கொண்டிருந்தது

நீர்த்தாவரம் போலிருந்த அந்தப்பச்சை
நிறப் பிளாஸ்டிக் பாசிகள் மீன்களுடன் சேர்ந்து
நீருக்குள் அல்லாடிக்கொண்டிருந்தன

கூட்டுக்குள் தம்மை மறைத்துக்கொள்ளாமல்
சிறு ஆமைகள் தம்மால் முடிந்தவரை நீந்தி
நீரின் மேல் மட்டம் வரை வந்து பின்
நீர்ச்சுழலில் தடுமாறி கீழே போய்க்
காயப்படாமல் விழுந்துகொண்டிருந்தன

என்னாலியன்றவரை ஷூ ஒலிகளை
அதிகம் வெளிப்படுத்தாது
தானியங்கிக் கதவை நோக்கி
என்போக்கில் நடந்துகொண்டிருந்தேன்
“முடிவு பிறகு தெரிவிப்போம்” என்ற குரல்
என் முதுகில் ஒலித்துக்கொண்டிருந்தது


.

Tuesday, August 21, 2012

நிழல்கள்



தொடர்ந்தும் நடந்தபோதுதான் கவனித்தேன்
எனக்கு இரண்டு நிழல்கள் விழுவதை
எங்கனம் சாத்தியம்
எல்லோருக்கும் ஒன்று தானே விழும்?


கவனமாக நடந்தேன்
சுற்றும் முற்றும் பார்த்து
ஹ்ம்..இரண்டு நிழல்களே தான்
ஒரு சந்தேகமுமில்லை


வெய்யிலிலிருந்து ஒதுங்கி நின்று கொண்டு
சிறிது நேரம் கழித்து
உடம்பை நீட்டிச் சரிபார்த்தேன்
அப்பட்டமாக இரு உருவம் நிழலாடியது


இது காரணமாகவே
கொஞ்சநாள் வெய்யிலில்
அலைவதை நிறுத்திக்கொண்டேன்
மற்றவர்க்கும் இது தெரிந்துவிடக்கூடாதே என்று
அப்படியே போயே தீரவேண்டுமெனினும்
தெருவின் கட்டிட நிழலோரங்களில் சென்று
வருவதை வழக்கமாகக்கொண்டேன்


வீட்டுக்குள்ளிருக்கும் போது
குண்டுபல்புகளின் வெளிச்சத்தில்
அவை இரண்டாகவே தெரிந்து
என்னை இன்னும் கலவரப்படுத்தியது


இதைப்பற்றிப் பிறரிடம் விவாதித்தும்
எவரும் பெரு விருப்பொன்றும் காட்டாதது
எனக்கு மேலும் வெறுப்பையே தந்தது


பிறகுதான் புரிந்தது
அனைவர்க்கும் இரண்டு நிழல்கள்
விழத்தான் செய்கின்றது
அதில் அவர்கள்
ஒன்றை எப்போதும் மறைக்கும்
வித்தை அறிந்திருப்பதை.



.

Tuesday, August 14, 2012

பொன் மாலைப்பொழுது



மயக்க வைக்கும் பின்னணி இசையுடன் ஒரு பொன் மாலைப்பொழுது, நேர்மறையாக எல்லாவற்றையும் முடித்து வைத்த பொன் மாலைப்பொழுது..வெளியே மழை,உள்ளே ராஜா’வின் இசை, கையில் கோல்ட் காஃபி,எதிரே ஒரு அழகான பெண், வேறென்ன வேண்டும்?! இதுவே மாலைப்பொழுதின் மயக்கத்திலே..!

ஒரு திரைப்படத்தை இயக்கிவிட நினைக்கும் ஆசையில் ஒரு இளம் இயக்குநர். அதை எப்பாடுபட்டாவது சாத்தியமாக்கி விட நினைக்கும் ஒரு ஆத்மார்த்த நண்பன்.

7 Year Itchல் ஒரு சிறுவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் தம்பதியினர். வாங்கிய கடனைக்கொடுக்க இயலாத Coffe Shop Owner, அந்த காஃபி டே’யில் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டு மேலே படிக்க நினைக்கும் ஒரு இளைஞன்,அதே கடையில் வரும் பெண்களை மடக்கி அனுபவிக்க நினைக்கும் நம்மைப்போன்ற ஒரு சாதாரண இளைஞன்,கதை எழுதுகிறேன் பேர்வழி என்று ஒரு காஃப்பியை மட்டும் வைத்துக்கொண்டு நாள் பூராவும் குடிக்கும் என்னைப்போன்ற ஒரு எழுத்தாளன். இவர்கள் யாவரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் படி அந்த Coffe Day’விற்கு வரும் இளம்பெண் , இப்படி எல்லோரையும் வெளிக்கிளம்ப விடாமல் உள்ளேயே தடுத்து வைக்கும் மழை...! ஆஹா..கேட்கவே சுகமாக இருக்கிறதே.


கதைக்கென ஒன்றும் மெனெக்கெடவில்லை இயக்குநர்.போகிற போக்கில் மேற்கூறிய அனைவரையும் குழப்பாது அறிமுகப்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் நாராயண். சலித்தபடி வெகு தூரம் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தில் ஒரு துருதுருவென இருக்கும் கைக்குழந்தையுடன் ஒரு தாய் ஏறியவுடன் ஏற்படும் மாற்றங்கள் போல அனைவரின் பார்வையும் கதாநாயகி மேல் படிகிறது ..நம் பார்வையுந்தான்.

அவரவர்க்கான பிரச்னைகள். யாருக்குத்தான் பிரச்னையில்லை என்று கூறுகிறான் , அந்த டாவடிக்கும் பேர்வழி.அவன் மூலமாக “பிரச்னையே இல்லன்னா வாழ்க்கையே வாழமுடியாது மச்சி” என்று அறிவுரையை வலிக்காமல் பிரச்சார நெடியின்றி கூறுகிறார் இயக்குநர். ஐயா இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாகிவிட்டது ? ஹ்ம்.!

தெரிந்த முகங்களோ, இல்லை பெரிய நடிகர்களோ, ஏன் பிரபல இசையமைப்பாளரோ கூட இல்லாமல் படம் நம் மனதில் ஒட்டிக்கொள்கிறது.மனதை அள்ளிச்செல்லும் காட்சிகள் , ஒரு Coffe Day’க்குள்ள தான் படம் முழுக்கன்னே முடிவான பிறகு என்னதான் காண்பித்து விட முடியும் என்று எல்லோரையும் போலத்தான் முதலில் நானும் நினைத்துக்கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தேன். பின்னர் தான் தெரிகிறது அந்த மழைக்கு ஒதுங்கி நானும் அவர்கள் கூடவே காஃபி அருந்த அமர்ந்து விட்டேனென்று..!.

நமக்கு அன்றாடம் வாழ்க்கையில் நடக்கிற விஷயங்களை வைத்துக்கொண்டு ,, அந்தக்கோபத்தை காட்ட வேண்டியவர் மேல் காட்ட இயலாது பிறர் மேல் காட்டுவது என்பது இயல்பு. அதே அந்த 7Year Itch பெண்மணி Waiter மேல் காட்டுகிறாள். Green Tea கொண்டு வரச்சொன்னா Lemon Tea ஏன் கொண்டு வந்தேன்னு எரிஞ்சு விழுகிறார்.அதனால் இன்னொரு Customerஐ என்னால் இழக்க முடியாதுன்னு Manager அந்த Waiterஐ வேலை விட்டுப்போகச்சொல்கிறார். சற்று முந்தைய காட்சிகளில் அந்தப்பையனுக்குத் தான் தன் செலவில் மேற்படிப்பிற்கான Application Form வாங்கிக்கொடுத்த அதே Manager. மனமொடிந்து போகிறான் அவன். Managerக்கு அவருடைய கஷ்டம் , இந்த Coffe Day Shop ல் வருவதைக் கொண்டு பணம் திருப்பித்தர வேண்டுமே என்று.


நாமளும் இப்படித்தானே இருந்தோம் , 7வருஷத்துக்கு முன்னால, ஏன் இப்ப எதுவுமே ஒத்துப்போக மாட்டேங்குது என்று தம் மனைவியுடன் சலித்துக்கொள்ளும் கணவன்.

“சும்மா Love Marriage , அப்புறம் Divorce இவ்வளவுதானா வாழ்க்கை” என்று மனதில் பட்டதை வெளிப்படையாகச்சொல்லும் கதாநாயகி. “உங்க மனதுக்குப் பிடித்தவரிடம் அதைச் சொல்லித்தான் அவருக்குத் தெரிய வேண்டுமா” என்று கேட்கும் கதாநாயகன் என யாரிடமும் போலி முகங்கள் இல்லை.பகட்டு, பிறர் பார்க்கிறார்களே நம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்ற குற்றவுணர்வு எதுவும் இல்லாத கதா பாத்திரங்கள் படம் முழுக்க.! நாம அப்படி இருப்பதில்லை , மனதில் பட்டதை சொல்ல இயலாமல் , மூடி மறைத்து போலி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள்.

தொடர்ந்தும் பெய்துகொண்டிருக்கும் மழையில் அனைவரின் சஞ்சலப்பட்ட மனமும் மாறத்தான் செய்கிறது. வலுக்கட்டாயமாக பெய்து கொண்டிருக்கும் மழை இன்னொரு கதாபாத்திரமாகவே உருவெடுத்து படம் முழுக்க வியாபித்திருக்கிறது.கரைக்கும் சக்தி மழைக்கு உண்டு , கலங்கிய மனங்களை கழுவித் துடைக்கும் சக்தி அதற்கு மட்டுமே உண்டு. சில நேரங்களில் மட்டுமே பல படங்களில் மழை பெய்யும், காட்சிக்கு வலுவூட்ட , இங்கு படம் முழுக்கவும் பெய்து நம்மையும் சேர்த்தே குளிர்விக்கிறது.

சரி மழை வலுத்துவிட்டது , இனி வெளிக்கிளம்பினாலும் போகத்தான் முடியாது என்ற நினைப்பிலேயே கதாநாயகி தொடர்ந்தும் அவன் முன் அமர்ந்து இருக்கிறாள்.ஏதேனும் பேச்சுக்கொடுப்போம் என்று ஆரம்பிப்பவளுக்கு அவனின் பேச்சில் ஆர்வம் பற்றிக்கொள்ள உரையாடல் தீராது தொடர்கிறது, காதல் ,கல்யாணம், குழந்தைகள், 7Year Itch, Divorce என்று அனைத்தையும் கொஞ்சு தமிழில் பேசித்தீர்க்கிறாள், சளைக்காது ஈடு கொடுக்கிறான் அந்தக்கதாநாயகன். சின்னதாக French Beard வைத்துக்கொண்டு நம்மில் ஒருவன் போல இருக்கிறான் அவன்.



எதையும் முடிவு செய்யவேண்டும் என்றோ இல்லை முடிவு கிட்டும் என்று நம்பியோ அங்கு யாரும் வரவில்லை அந்த CoffeDayவுக்கு, ஆனால் அனைத்தும் அங்கு ஒரு நல்லதொரு முடிவை எட்டுகிறது. எந்தப் பிரச்னையானாலும் பேசித்தீர்த்து விடலாம் என்பது மிகவும் சரி.அதற்கு விடாது பெய்யும் மழையும் துணை நிற்கிறது.

கொடுத்த பணத்தை மிரட்டி மீள வாங்க நினைக்கும் வில்லனைக்கூட மழை மாற்றி விடுகிறது. ‘தம்பி எடுக்குறேன்னு சொல்லுதில்ல, பரவால்ல விட்டுறலாம்’ என்று கையெழுத்து வாங்கிக்கொண்டு செல்கிறான். கொடுக்கவே இயலாது என்று அவர்கள் பார்வையிலிருந்து தப்பித்து CoffeDayவுக்கு வரும் கதாநாயகனின் மனதும் கூட , இப்போது கிடைத்த அந்தப்பெண்ணின் நட்பு, மழை காரணமாக வலுக்கட்டாயமாக இருந்தே ஆகவேண்டிய சூழல் என அனைத்தும் ஒன்று சேர்ந்து அவனையும் மாற்றித்தான் விடுகிறது.!

திரும்பத்திரும்ப அதே Coffe Shop-க்குள்ளேயே காட்சிகள் நிகழவேண்டிய நிர்ப்பந்தம்,அதையும் சலிக்காது நம்மைப்பார்க்க வைக்கவேண்டிய கட்டாயம் இயக்குநருக்கும் , ஒளிப்பதிவாளருக்கும் இருப்பது நன்றாகவே தெரிகிறது.இருப்பினும் ஒரு காட்சியில் கூட ஆயாசமோ, சலிப்போ வரவில்லை என்பதே ஒரு மகிழ்ச்சி.! Castawayல் Tom Hanks பெயர் தெரியாத தீவில் விமானம் வெடித்து சிதறி ஒதுங்கவேண்டிய நிலையில் , எங்கு பார்த்தாலும் கடல், இல்லையானால் சில தென்னை மரங்கள் என்று எப்போதும் அதைச்சுற்றியே கதை/காட்சிகள் நகர்ந்தாக வேண்டிய சூழல் போல , நல்லவேளை அது போல இங்கு ஏதும் இல்லை , ஐந்தாறு கதாபாத்திரங்கள் இருப்பதால் போரடிக்காமல் செல்கிறது படம்! அதில் FedEx க்கான விளம்பரம் போலவே தோன்றுவது போல , இங்கும் CoffeDayக்கான விளம்பரமாகவே தோணுகிறது, எனினும் உறுத்தவில்லை.



இசை பற்றிச்சொல்லித்தான் ஆகவேண்டும். Coffe Day Shop என்றால் எப்போதும் Western Music அல்லது இப்போதைய Hindi Songs/Instrumental Music இசைப்பது என்றில்லாமல் இறங்கி உழைத்திருக்கிறார் மனிதர்.புதிய இசையமைப்பாளர் “அச்சு”(Achu).

கதாநாயகியின் அறிமுகக்காட்சி , அவர் நடந்து வருவது , பின் இருக்கை தேடி அமர்வது, பிறகும் Waiter வரத்தாமதிப்பது, பின்னர் புத்தகம் புரட்டிக்கொண்டே எதிரில் அமர்ந்திருக்கும் கதாநாயகனை அவன் கவனியாது ஓரக்கண்ணால் பார்ப்பது என்றும் கிட்டத்தட்ட ஒரு 4-5 நிமிடங்களுக்கு ஒரு இசைக்கோவை இழையோடுகிறது. அத்தனை இசைக்கருவிகளையும் குறிப்பாக Piano மற்றும் Violin கொண்டு இசைத்து நம் மனதை கொள்ளை கொள்கிறார். பல இடங்களில் வரும் Lead Guitar Solo Piece Class மச்சி. இறங்கி உழைத்து அடித்துக் கலக்கியிருக்கிறார். பின்னரும் காட்சிகளுக்குத் தகுந்தவாறு ராஜா சாரின் அத்தனை பாடல்களும் , Guitar based ஆக இசைத்திருப்பது அருமை.அதற்காக முழுமையும் ராஜா சாரின் பாடல்களையே பயன்படுத்தாது தாமும் இசைத்திருக்கிறார் புதிய இசைக்கோவைகளோடு,பின்னணி இசையில்.

மென்மையாக அதிரும் Guitar ஒலியுடன் ஆரம்பிக்கும் “என் இனிய பொன் நிலாவே” இசைக்கிறது , அதைக்கதாநாயகன் பின்னோக்கி தலை சாய்த்து, கைகளை சோஃபாவின் இருபுறமும் முழுக்க நீட்டி Relaxed ஆக அமர்ந்துகொண்டு தமக்குள் ரசித்துக் கொண்டிருக்கிறான், பின்னால் சன்னமாக மழையின் ஓசை, அப்போது உள்ளே நுழைகிறாள் கதாநாயகி. ஆஹா...Hats Off Director Sir !.. அதைக்காண அனுபவிக்க கண் கோடி வேண்டுமய்யா..! மழையுடன் சேர்ந்து நமக்குள்ளும் இறங்குகிறது பாடல் ,,,ஹ்ம் ..! பாடல் மட்டுமா ? :-) எழுத என்னிடம் சொற்கள் இல்லை...!!

படத்தில் பாடல்கள் செருகப்பட்டிருப்பது போலத்தோன்றினாலும் உறுத்தவில்லை, எனினும் இசையமைப்பாளர் “அச்சு” அனைத்துப்பாடல்களையும் “ரஹ்மானின்” ஸ்டைலிலேயே அமைத்திருப்பது ஒரு குறை. எந்தப்பாடலும் முந்தைய பாடல்களை நினைவுபடுத்தவில்லை என்றாலும் அவற்றின் பாணி அப்பட்டமாக ரஹ்மானை நம் கண் முன் , மன்னிக்கவும் காதுகளின் :-) முன் கொண்டு வந்து நிறுத்துவது குறைதான்.தனக்கென ஒரு பாணியை அவரால் அமைத்துக்கொள்ள இயலும் அதற்கான பின்புலங்கள் அவரிடம் இருக்கிறது என்பதும் தெள்ளத்தெளிவு. படத்தின் உச்சக்கட்டக்காட்சியில் ஒலிக்கும் “பாம்பே ஜெயஸ்ரீ”யின் குரலில் ஒலிக்கும் “என் உயிரே” இன்னமும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது என் மனதில்..!


“அவங்களுக்குப் பிடிச்சதப்பண்ணினா எல்லாருக்கும் பிடிக்கும்ங்கறது எல்லாருக்கும் தெரிஞ்சது, அவங்களுக்குப் பிடிக்காதத பண்ணாம இருக்குறதும் எல்லாருக்கும் பிடிக்கும்ங்கறது இன்னிக்கு தான் தெரிஞ்சுது” “ ஒருத்தர ஒருத்தர் Daily பார்த்துப்பேசினாலே சரிவர்றதில்ல , என்னால மத்த பொண்ணுங்க மாதிரி எதுவும் சொல்லாம உன்னையும் அழவிட்டு எனக்குள்ளயே உன்னை நினைச்சிக்கிட்டிருக்க முடியாது, Long Distance Relationships , never work, படிப்பு விட்டுட்டு உன்னை பத்தி யோசிப்பேன்னு பயமாயிருக்கு “ “திரும்பிப்பார்த்தா நான் மட்டுமே தனியா இருப்பனோன்னு பயமா இருக்கு சார்” “ ஒரு நொடி சந்தோஷத்துக்காக லைஃப் பூரா கஷ்டப்படணுமா “ பேசினா பிரச்னை தீரும்னு சொல்லுவாங்க, ஆனா பேசப்பேசத்தானே பிரச்னை வளருது” “ காதல் ஒரு ஆதங்கம் , அதைக் காப்பாற்றிக்கொள்வது என்பது அதைவிடப்பெரிய ஆதங்கம் “ “வேலை பார்க்கும் கம்பெனியின் கஸ்ட்டமருக்காக எவ்வளவோ உழைக்கிறோம் , அங்க வெறும் பணம் மட்டுந்தான் கிடைக்கும் , அதையே, இல்ல அதுல பாதியாவது வீட்டில் காமிச்சா என்ன?” என்பன போன்ற வெளிப்படையான கருத்துகளை முன் வைக்கிறார்கள் அனைவரும் இந்தப்படத்தில்..! 

தொடர்ந்தும் பெய்யும் மழை அனைவரையும் குளிர்விக்கிறது , பார்ப்பவர் மனதையும் சேர்த்து.!..மனத் தடைகளையும் ,ஏன் எந்த ஒரு மலையையும் கூடப் பெய்தே கரைத்து விடும் மழை என்பது இந்தப் பொன்மாலைப்பொழுதின் சங்கதி..!


.

Friday, August 10, 2012

நீங்கள் யார் ?



மின்சார ரயிலின்
வாயிலிலிருந்து அரகப்பரக்கச் சென்று
ஜன்னலோர சீட் பிடிக்கையில்
நானும் வவ்வால் மனிதன் தான்

ஊரார் பிரச்னைகளைத்தீர்த்து வைக்கும்
எனக்கு என் பிரச்னைகளுக்கு
விடை கண்டுபிடிக்கத்தெரியாத
கணங்களில் நானும் சிலந்தி மனிதன் தான்

சங்கடமான சூழல்களிலிருந்து விடுபடக்
கைவிரல்களை மடக்கிக்கொண்டு
வானத்தை நோக்கி உயர்த்திப்
பறக்க எத்தனிக்கும் போது
நானும் அதி உன்னத மனிதன் தான்

இதையும் ஒரு கவிதையென்று
நம்பிக்கொண்டு
கடைசி வரை வாசித்த
நீங்கள் யார்..?!



.

Saturday, August 4, 2012

இசை என்ற இன்ப வெள்ளம்



எண்பதுகளில் இருந்த தமிழ்த்திரை இசை பற்றி அந்தக்கால யுவன்/யுவதிகள் சிலாகித்துப் பேசுவது போல, 1990களிலிருந்து இப்போதைய 2010 வரையிலான இசை பற்றி இக்கால இளைஞர்கள் பேசுகிறார்களா..? இந்தக் காலகட்டத்திய இசை அவர்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்து பயணிக்கிறதா,,? எண்பதுகளில் கோலோச்சிய இளையராஜாவையும் , கூடவே பயணித்த சக இசைக்கலைஞர்களின் இசையையும் வாழ்வோடு இணைத்துப்பார்த்த பார்வை இப்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கிறதா..? கேள்விக்கான விடையை கடைசியில் பார்க்கலாம்,..ஹ்ஹ...இல்ல கேட்கலாம்.

எனக்குத் தெரிந்து ரஹ்மானையும், யுவனையும் சிலாகித்து வெகு சிலரே இடுகைகள் இடுவதையும், அவர்கள் கூட சில நாட்களுக்குப்பிறகு இளையராஜாவைப் பற்றியும் அந்தக்கால கட்டத்தில் வாழ்ந்த, இசைத்தவர்களைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுவதைப் பார்க்கிறேன்..அப்ப அவங்க ஆழ்மனதில Originality ய தேடிப்போறதுங்கறது இருக்கத்தான் செய்யுது , ஆனா இப்ப இருக்கிற இசையமைப்பாளர்கள் அதைக் கவனிக்கத்தவறி அவர்களின் ஆவலைப்பூர்த்தி செய்வதில்லை.அன்றைய ரசிகர்கள் பாடலின் இடைஇசையைக்கூட(Interlude) நினைவில் வைத்திருந்து ரசித்தனர்.இப்போது அது போன்ற ஈடுபாடுகள் காணக்கிடைக்கவில்லை.

இசை தவிர எந்த alternative மனதிற்கு இதம் ?. இந்தக்கால இசை பற்றி யாரும் சிலாகித்துப் பேசுவதில்லை, அதிக கட்டுரைகளோ, பெருவாரியான கருத்துகளோ வருவதே இல்லை , இப்போது இருப்பவர்களைப் பற்றி. இன்னும் சொல்லவேண்டுமென்றால் இளைஞர்களுக்கு இசை தவிர பிற விஷயங்களில் அவர்களின் நாட்டம் இருக்கிறது.“அறிவொளி இயக்கம்“ ச.தமிழ்ச்செல்வன் சமீபத்துல பெங்களூர் வந்திருந்தப்ப சொன்ன ஒரு விஷயம். இந்தக்காலக்கட்டத்தில தான் இலக்கியமும், இசையும் மிகவும் வேண்டியதாக இருக்கிறது , மேலும் அதனோட அவசியமும் அதிகம் என்று.

இசை பற்றி தமிழ் வலைப்பூக்கள்ல பல பேர் எழுதுறதப் பாத்துருக்கேன், ..இருந்தாலும் பெரு வாரியான வெள்ளம் போல இளையராஜா மற்றும் எண்பதின் இசையைப்பற்றி எழுதுவது/ விவாதிப்பது போல இப்போதைய இசைபற்றிக் கருத்துகளோ இல்லை விவாதங்களோ காணக்கிடைப்பது இல்லை


மேலும் இப்போது இசை மலிந்து விட்டது , Uniqueness இல்ல, Originality இல்ல இப்ப இருக்கறவங்ககிட்ட, எப்பவுமே இந்தக்கால எந்த இசை ஆல்பம் கேட்டாலும் , இது இங்க இருந்து காப்பி அடிக்கப்பட்டது , இது இங்கருந்து Lift ங்கற மாதிரிதான் இருக்கு,?! Casio, Roland மாதிரியான Keyboards ரொம்ப சுலபமாகவே எல்லாரும் வாங்கக்கூடிய விலையிலேயே விற்பதும் ஒரு பெரிய காரணம். அதில எல்லாமே இருக்கு, எந்த Beats வேணும் , எவ்வளவு நேரம் அதை இசைக்கலாம் , இடையில் எந்த வாத்யக்கருவிகளை எந்த அளவில் ஒலிக்கச் செய்யலாம் , எத்தனை கருவிகள் தேவை என்றெல்லாம் Program பண்ணி வெச்சிட்டா அதுவாவே இசைக்க ஆரம்பித்து விடுகிறது. அதனால வீட்டுக்கு வீடு இப்ப ஒரு Composer உருவாகிவிட்டனர்.

எந்தவித இசை பற்றிய ஞானமும் இல்லாமல், அடிப்படைப்புரிதல்கள் இல்லாமல், Program பண்ணா வாசிக்கிதுங்கற நிலைல எந்த Music Soul Touching ஆக இருக்க முடியும்?!

இசை பாடல்களில் மட்டுமல்ல, நம்ம கைபேசிகளிலும், வாயில் மணிகளும், ஏன் கார் ஹார்ன்ஸ்களிலும் கூட இசை ததும்புகிறது, ஃபோனில் கால் வெய்ட்டிங்கிற்கு கூட இசை தான். இசை”பட” வாழ்கிறோம்.மேலும் அந்தக்காலத்திய இசை என்பது கேட்பதற்காக மட்டுமே இருந்தது. இப்போது இசையை காட்சிகளுடன் சேர்ந்து ரசிப்பது என்ற மனோநிலை. எதைச்செய்தாவது கவர்ந்துவிட வேண்டும் என்று காட்சி ஊடகங்களில் இசையைக்கொண்டு செல்வதற்கென உள்ள மெனக்கெடல்கள் இசையைக் கொல்கின்றன.


முக்கியமா பேசறதா இருந்தா அவங்களுக்கு இசை பற்றின ஆழ்ந்த அறிவோ இல்ல அத எப்படி ரசிக்கிறதுங்கற புரிதல்களோ இல்லைங்கறது தான் நிஜம். இன்றைய இசையை நான் ரசிக்கிறேன்னு சொல்றவங்கெல்லாம் Ipod, Iphone , MP3 Playersலயும் இசையை நிரப்பிக்கிட்டு தொடர்ந்தும் கேட்டு சலித்துத்தான் போகுது அவங்களுக்கு. மேலும் இன்னிக்கு ஒரு சொடுக்கில எங்கருந்து இந்த இசை உருவப்பட்டது, எந்த இசைக்கோவை இந்த இசையை கொண்டுவந்ததுங்கறத தெரிஞ்சுக்க முடியுது இந்த Internet Generations ல , அதுவே கூட பெரிய சலிப்பை உண்டாக்கி அவங்கள இந்தக்கால இசை பற்றி சிலாகித்துப்பேச ஒண்ணுமே இல்லங்கற நிலைக்குக் கொண்டு போய்விடுகிறது.

இப்ப இருக்கிற இசையமைப்பாளர்களுக்கு IT Engineer போல Oniste Offer கிடைக்காதாங்கற ஆசைலதான் இருக்காங்க. ஒரு படத்துக்கு இசையமைச்சாச்சுன்னா உடனே அத YouTube-லயும் , இன்னபிற சமூக வலைத்தளங்கள்லயும் உடனே பகிர்ந்துகொண்டு International Audience- ஐக்கவர்ந்துவிட வேண்டும் என்கிற மனப்பாங்கோடயே இருக்காங்க என்பது தெளிவு. இந்த மாதிரியான சிக்கல்கள்ல மாடிக்கிட்டு , அவங்க Target International Audience தான்னு ஆனப்புறம் , அவங்களுக்கு பிடித்த மாதிரியான இசையைக் கொடுத்தே ஆகவேண்டுமென்ற உந்துதல், அழுத்தங்கள் அவங்களயறியாமலேயே அவங்களுக்குள்ளேயே வந்துவிடுகிறது . அதனால தனித்துவம், மனதை மயக்கும் இசைங்கறதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரிவதில்லை. அதனாலேயே உள்ளூர்ல இருக்கிறவங்களுக்கும் இது போன்ற இசையை பெரிதாக கருத்திலெடுத்துக் கொள்ளாமல் போறபோக்கில ரசித்துவிட்டுச் செல்லும் மனப்பாங்கும் தொடர்கிறது.


மேலும் எண்பதுகளின் இசையைப்பற்றி அப்போதிருந்தவங்ககிட்ட கேட்டால் , இது இன்னார் தான் இசையமைத்ததுன்னு தெளிவா எந்த சந்தேகமும் இல்லாம சொல்ல முடிந்திருக்கிறது . இப்ப எல்லாம் அந்த Uniqueness , அல்லது Originality ங்கற பேச்சுக்கே இடமில்லாமப்போச்சு. எல்லோரின் இசையும் ஒன்றாகவே ஒலிக்கிறது. வேறுபடுத்திப் பார்ப்பதற்கு தனிக்காதுகள் அவசியப்படுகிறது. இன்றைய பத்திரிக்கைகள் , மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளின் சின்னங்களை/பெயர்களை மட்டும் நீக்கிவிட்டால் எல்லாம் ஒன்று போலத்தான் தெரியும் அதுபோலவே இன்றைய போஸ்ட்டர்களில் இருந்து இசையமைப்பாளனின் பெயர் மட்டும் நீக்கப்படுமானால் யார் இசையமைத்தது என்று தெரியாமலேயே போய்விடும். சொல்லப்போனா யாருக்கும் தனக்கான ஸ்டைல் என்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் மனம் போன போக்கில் இசையமைக்கின்றனர். அளவுக்கதிகமான மேற்கத்திய இன்றைய இசையின் தாக்கமும், அரேபியன் இசையின் தாக்கமும் அவர்களுக்குள் வந்துவிட்டதால் அவர்களின் இசை ஒன்று போலவே தெரிகிறது. எது விற்கிறதோ அதைக் கொடுக்கிறேன் என்பதால் வர்ற பிரச்னை இது.

அவசர வாழ்க்கையில் இசையை அணு அணுவாக ரசித்துக் கேட்க யாருக்கும் நேரம் இல்லை. அப்படிக் கேட்க நினைத்தாலும் ஒரு தமிழ் பாடல், ஒரு ஹிந்திப் பாடல், மலையாளப் பாடல், ஆங்கிலப் பாடல் ஸ்பானிஷ் பாடல் எனப் போய்க் கொண்டே இருக்கிறது. தொழில் நுட்பம் மட்டும் மாறவில்லை. மக்களின் ரசனையும் மாறி அறிவும் இப்போது கூடி விட்டதால் எந்த ஒரு பாடலும் அவர்களின் மனதிலும் வாழ்விலும் நிலைத்து நிற்பதில்லை. பாடல்களின் வரிகளை தம் அன்றாடம் உழலும் வாழ்வில் இணைத்துப் பார்ப்பதற்கு யாருக்கும் தோன்றுவதில்லை. எது மனதிற்கு நிம்மதியைக் கொடுக்கிறது ? எதைத் தேடிச் செல்கிறான் என்பது ஒரு புதிர். என் கூட பணிபுரிபவர்கள் எல்லாம் Frustrated ஆனா என்ன பண்ணுவ மச்சி’ன்னு கேட்டா என்னா கொஞ்சம் சரக்கடிச்சிட்டு கவுந்து படுத்துக்கலாம் ,இல்ல எதாவது “மால்”ல போயி Figure வெட்டலாம்னு தான் சொல்வார்கள். இல்லாட்டி Weekend ல எதாவது பக்கத்தில இருக்கிற மலைப்பாங்கான இடத்துக்குப்போயி ஜாலியா கும்மாளம் போடலாம்ங்கற நினைப்பிலதான் பலபேர் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். கவிதை வாசிக்கலாம், மனதிற்கினிய இசை கேட்கலாம் என்று பொதுவாக யாரும் விரும்புவதில்லை.


ஆத்மார்த்த இசைங்கற விஷயத்தப்பத்தி யாருமே கண்டுக்கிர்றதேயில்ல. கும்மாளம் போடவும், Fast Beatsல தன் சந்தோஷத்த வெளிப்படுத்தவும் மட்டுமே இசை தேவையாயிருக்கு. Weekend Parties எல்லாம் ரொம்பவே பிரபலம் IT Filed ல. அங்கெல்லாம் இந்தக்கூத்து தான் நடக்குது..எப்படியும் வெளிநாட்டவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் தான் அவை. [ ஏன் எங்க ஆஃபீஸுலயும் இதே கூத்து தான் ]. இலக்கியம் இசை, கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பது என்பன போன்ற கலை மீதான விருப்பங்கள் குறைந்து கொண்டே வருவதும் ஒரு காரணம். 

நம் மண்ணுக்கான இசை , நமது மண்ணின் மொழி , நமது இசைங்கறதெல்லாம் எப்பவோ இல்லாமப் போயாச்சு. எல்லாம் உலகமயம், தாராளமயமாக்கல் , இந்த விஷயங்கள்லாம் நம்ம கலைகளிலும் , இசையிலும் ஊடுருவி நிற்பது ஒரு வலுவான காரணம்.

எண்பதுகளின் இசை பற்றி , முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தான் இப்படி ஒரு விவாதம் வந்திருக்கு , அதே போல 2020ல, 1990லிருந்து 2010 வரையிலான இசை பற்றிப் பேசுவாங்களோ..?! இருந்தாலும் ஒப்பிட்டுப் பாக்கறதுக்கு அக்காலத்திய நிகழ்கால இசை பயன்படுத்தப்படும்னு நினைக்கிறேன். :-)

எவ்வளவுதான் சொன்னாலும் , அவங்கவங்க இளைமைல கேட்ட , பாத்த , பழகின விஷயங்கள் தான் அவங்களோட பிற்கால வாழ்க்கை முழுக்க நிறைந்திருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.! அப்போது , இப்ப இருக்குறவங்க எந்த விஷயங்களப்பத்தி யாருடைய இசை, மற்றும் எழுத்துகள் பற்றி சிலாகித்துப் பேசுவாங்க..?!


.