Saturday, January 28, 2017

காஃபி வித் ஏலியன்ஸ் - Arrival(2016)


ஓவியம்,ஒலி அல்லது இசை, பின்னர் மொழி. இதுதான் வரிசை. இந்த மொழியை மட்டும் பிடித்துக்கொண்டு நாம் தொங்கிக் கொண்டிருக்கிறோம்.  தமிழ் எழுத்துகளே முதலில் சித்திர எழுத்துகளாகத்தான் தொடங்கியது என்றும் காலப்போக்கில் அது பலவித மாற்றங்களுக்கு உட்பட்டு, அந்நிய படையெடுப்புகள், பிறமொழிக் கலப்பு,எழுத்து வடிவங்களில் மாற்றங்கள் என்று சிதைந்து இப்போது உள்ள இந்த வட்டெழுத்துகளில் வந்து நிற்கிறது. ஆயிரம் சொற்கள் கொண்டு ஒரு கானகத்தைப்பற்றி  எழுத அக்கானகத்திலுள்ள பதினாயிரம் மரங்களை வெட்டி காகிதம் உருவாக்கி பின்னர் எழுதுவதைக்காட்டிலும் வண்ணம் கொண்டு தீட்டி விட்டுச்சென்று விடமுடியும். சொற்களை விடவும் ஆழமாகப்பதியும்  ஒரு வயலினைக்கொடு உன் அழகை வாசித்துக் காண்பிக்கிறேன் என்பது யாவரும் அறிந்த ஒன்று. கேட்போர்/பார்ப்போர் மனதில். கலாச்சாரம், பண்பாடு கடந்து நிற்கும் இசையும் ஓவியங்களும். ஓவியமும் இசையும் நல்ல ஊடகங்கள் , இதைத்தான் சொல்கிறேன் கேள் என அதிகாரத்தோரணையின்றி கேட்பவன்/ பார்ப்பவன் மனத்தில் கலைஞனைக்காட்டிலும் இன்னமும் ஊற்றெடுக்க வைக்கும் ஊடகங்கள்.

இன்னமும் சைனாக்காரர்கள் நமது பழைய எழுத்துகளான சித்திர எழுத்துகளையே பயன்படுத்துகின்றனர். அதையே நாமும் தொடர்ந்திருக்கலாம். உணர்வுகளை அடுத்தவனுக்கு தெரிவிக்க வேணும், நாம் நினைப்பதை பிறர் புரிந்து கொள்ள வேணும், என்பது பழைய கால பேச்சுக்களற்ற சார்லி சாப்ளின் படங்களின் மூலம் அத்தனை தெளிவாக புலப்படும் நமக்கு. சைகைகளின் மூலம் விளக்கி சொல்தல் என்பது கூட மனிதர்களுக்கிடையே மட்டுமே செல்லு படியாகக்கூடிய தொடர்பு ஊடகம். பறவைகளுக்கோ இல்லை மிருகங்களுக்கு அங்கனம் புரிய வைக்க இயலாது. சங்கேத மொழிகளும் குழூஊக்குறிகளும் மனிதர்களுக்கிடையேயான இன்னொரு ஊடகமே. இதை வைத்துக்கொண்டும் இன்னபிற விலங்குகள் பறவைகளுடன் உரையாடிவிட இயலாது.

இந்தத்திரைப்படத்திலும் அன்னியர்கள் ( ஏலியன்ஸ்) வேற்றுகிரக வாசிகள் ஓவியத்தையே தமது ஊடகமாக மனிதர்களுடன் தகவல் தெரிவிக்க பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அவற்றை புரிந்து கொள்தல் என்பது எவெரெஸ்ட் ஏறும் முயற்சியாகிறது. இன்னமும் கற்கால மனிதனின் பாறை ஓவியங்களைப்புரிந்து கொள்ள நம்மால் இயலவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு புரிதலுடன் அதை மொழியில் விளக்க முயற்சிக்கின்றனர்.  இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பூமிக்கு வந்துபோய்க் கொண்டிருக்கும் ஏலியன்ஸ் கிட்டத்தட்ட ஐம்பது அறுபது வகைகள் என்பது புலனாகியிருக்கிறது. அத்தனை பேருடனும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள இயலவில்லை நம்மால். பெரும்பாலும் பூச்சியினத்திலிருந்து உருவான அதி உயர் மனித இனம் தான் அவை. நாமோ முதல் குரங்கு. டினோஸார்களை அந்த விண்கல் மோதி அழித்திருக்காவிடில் டினோசாரின் பரிணாம வளர்ச்சியில் மனிதன் தோன்றியிருப்பான்.



ஒரு எகா. கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஒரு ஏலியன். எட்டுக்கைகளும் மூன்று இதயங்களும் கொண்ட ஒரு உயிரினம். மிகுந்த அறிவுடையவை , அதனால் காற்பந்து போட்டிகளில் இவற்றின் ஆரூடம் உலகப்புகழ் பெற்றது, மிகக்குறுகிய காலமே வாழக்கூடியவை. உலகில்/கடலில் எந்த உயிரினமும் இங்கனம் உடற்கூறு கொண்டதில்லை. ஜெல்லி மீன்களுக்கு இதயமோ/மூளையோ இல்லை. மேலும் ஜெல்லிகளுக்கு இயற்கை இறப்பே இல்லை. இதெல்லாம் மிகவும் ஆச்சரியத்துக்குரிய விஷயங்கள். இவையெல்லாம் பூமியில் இருந்து உருவான உயிரினங்களே இல்லை என அடித்துக்கூறலாம். இந்த திரைப்படத்தில் காண்பிக்கப்படும் ஏலியன்ஸும் கிட்டத்தட்ட ஏழெட்டுக்கால்களை/ கைகளைக் கொண்டுள்ளன. எனினும் வழக்கமாக சுவாரசியத்துக்காக காண்பிக்கப்படும் ஏமாற்று வித்தைகளோ அவற்றை வைத்து மாயாஜாலம் காட்டவோ முயலவில்லை.

நிறைய கேள்விகள் அரசாங்கத்துக்கு எதற்காக அவர்கள் இங்கே வந்திருக்கின்றனர்? அவர்களுக்கு என்ன தேவை ? சுற்றிப்பார்க்க வருவதானால் ஒரு விண்வெளிக்கப்பல் மட்டும் போதுமே , எதற்கு பன்னிரண்டு கப்பல்கள் உலகெங்கும் அத்தனை சிறப்பற்ற இடங்களில் தொங்கிக்கொண்டு இருக்கவேணும் ? ஆம் அவை தரை பாவாது பத்தடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டே நிற்கின்றன. நதியில் ஓடாதிருக்கும் பரிசல்கள் கரையில் சார்த்தி வைத்திருப்பதைப்போல அவை அந்தரத்தில் சார்த்தி வைக்கப்பட்டுள்ளன. எவ்வித புகையோ இல்லை , கழிவுப்பொருட்களோ வெளியில் சிந்துவதில்லை. அத்தனை கப்பல்களும் தமக்கிடையே தகவல் பரிமாற்றங்களை அதீத உயர் ஒலிக்குறியீடுகளில் நிகழ்த்திக்கொள்கின்றன. அந்தப்பரிசல் விண்கப்பலினுள்ளே ஈர்ப்பு விசை மிகவும் குறைவு. தேவையான ஆக்ஸிஜன் இருக்கிறது.மூச்சுமுட்டல் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு என அறிய வருகிறது

உள்ளிருக்கும் அந்த ஏலியன்ஸை ஹெப்டா பாட்ஸ் -ஏழு காலிகள் -ஏழு கால்களைக்கொண்டவை (எட்டுக்காலிகள் அல்ல ) என அழைக்கலாம். அவர்களின் கப்பல்கள் உலகில் இடி/மின்னல் அதிகம் நிகழாத இடங்களாகப் பார்த்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பதினெட்டு மணி நேரங்களிலும் அவர்களின் கதவுகள் திறக்கின்றன. மனிதர்களுடன் பேசி அவர்களின் வருகைக்கான காரணங்களை அறியத்தர. அவர்களின் ஓவிய மொழி,ஒலியை அடிப்படையாகக்கொண்டதல்ல நமதைப்போல. சித்திரங்களை, படங்களை அடிப்படையாகக் கொண்டு விளக்க முயற்சிப்பவை. ஓராயிரம் சொற்களில்/ஒலிகளில் சொல்லவேண்டியதை ஒரு சிறு படத்தின் மூலம் விளக்க முயற்சிக்கும் ஓவியங்கள். சிக்கலானவை , ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை, ஒன்று போல் ஒன்று இருப்பதில்லை,  உயிர், மெய் என்ற பாகுபாடில்லாதவை. மிகப்பெரிய சவாலாக இருக்கிறது தலைவிக்கு. முன்னும் பின்னும் எழுதப்படும் ஒலிக்குறிப்புகள் அடங்கிய மனித மொழி அல்ல அது. இசைக்குறிப்புகளைப்போல சுருங்கச்சொல்லி விளங்க வைப்பவை. அதனால்தான் இசை பிரபஞ்ச மொழி என அழைக்கப்படுகிறது.




ஒரு வரியை எழுத வேண்டுமானால் எத்தனை சொற்கள், எவ்வளவு இடைவெளிகள், அது பதிலா இல்லை கேள்வியா , இல்லை மெதுவே கடந்து போகக்கூடிய வெறும் சொற்களா ? இத்தனை நமது மனதில் ஓடி பின்னர் எழுதத்தொடங்குகிறோம். அவர்களின் ஓவிய மொழி சப்தங்களை அடிப்படையாகக்கொண்டதல்ல. அர்த்தங்களை/பொருளை அடிப்படையாகக்கொண்டது Non linear Orthography.இதில் மனித மொழி போன்று இடமிருந்து வலமோ , இல்லை வலமிருந்து இடமோ இல்லை. எல்லாம் ஒரு சுழலில் எழுதப்படுகிறது. ஒரு வட்டம் போல , ஆங்காங்கே சின்னஞ்சிறு முடிச்சுகளுடன், முடிச்சுகள் அதே இடத்தில் நிலைப்பதில்லை , வேறுபாடு காண்பிப்பதற்காக சுழலில் வேறு வேறு இடங்களில் முடிச்சு விழுகிறது. முடிச்சு இறுக இறுக அதை விடுவிக்க முயற்சிப்பவர்க்கு இன்னமும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. கணிதக் குறியீடுகளைப்போல/புதிர்களைப்போல  அவற்றை விடுவிக்க வேண்டியிருக்கிறது.

தலைவி ஒரு மொழிப்பேராசிரியர் , பல்கலைக்கழகத்தில். உலக மொழிகள் குறித்த தேர்ந்த அறிவு படைத்தவர். ஒரு காட்சியில் அவரை தவிர்த்து விட்டு இன்னொருவரை பணியமர்த்த ராணுவ அதிகாரி முயற்சிக்கும் போது, சமஸ்கிருதத்தில் 'போர்' என்ற சொல்லுக்கு என்னெவென அழைப்பார்கள் என்று அவரிடம் கேளூங்கள் என்பார். அவருக்கு வடமொழியைக்காட்டிலும் பழைமையானது தமிழ் என்றறிருந்திருக்கவில்லையே என வருந்தினேன். Palindrome பற்றியும் பேசுகிறார். திருப்பிப் போட்டாலும் அதே உச்சரிப்பை தரக்கூடிய சொற்கள். எகா' விகடகவி தமிழில் ஆங்கிலத்தில் HannaH. தலைவர் அவரோடு சகபயணி ஒரு theoretical physicist. நிறைய கேள்விகள் அதைக்கேட்டு விடவேணும் என்ற ஆவல் அவருக்கு. ஒளியைக்காட்டிலும் கூடுதல் வேகத்துடன் பயணிக்கும் கப்பல் எங்கனம் உருவாக்க முடிந்தது ? ஈரிலக்க எண்கணிதம் (binary) அறிந்தவர்களா ?

இந்த மொழிச்சிக்கல்களிலிருந்து விடுபட்டு தகவல் தொடர்பை சரியாக கடப்பவனில்லை என்பதால் இன்னமும் சிங்கிள் என்கிறார். எல்லாம் இருந்தாலும் சிங்கிளாக இருப்பவரும் உலகில் உண்டு என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவைக்கிறார் தலைவி. இதைப்போல சின்னச்சின்ன உரையாடல்களே போதும் காட்சியின் சீரியஸ்னெஸ்ஸை வெளிப்படுத்த. இதை முதலில் தமிழில் செய்தவர் பாலு மகேந்திரா, பின்னர் மணிரத்னம் , காட்சிகளை அதிகம் அழுத்தம் கொடுத்து உரையாடல்களை சுருக்கி என.

ஒரு கட்டத்தில் அந்தச்சின்னப்பெண் அம்மாவிடம் கேட்பாள். 'யாரும் வெற்றி தோல்வி என அடையாது போகும் விளையாட்டின் பெயரென்ன ? போட்டியில் பங்கு பெறும் இருவருக்கும் என. உடன்படிக்கை/ Win-Win எனச்சொல்லி முடித்துவிடுவார். அது உண்மையில் Non Zero Sum Game.உறக்கத்தில் ஏலியன்களில் மொழியில் கனவு காண்கிறாயா ? என்ற கேள்வியெல்லாம் படத்தில் வருகிறது. எந்த மொழியில் சிந்திக்கறோமோ அதே மொழியில் கனவுகளும் வரும் என்பதே உண்மை. சீனாவின் ராணுவம் ஏலியன்ஸுடன் உரையாட அவர்களின் விளையாட்டான Mahjong ஐப் பயன்படுத்துகிறது. பேசிப்புரிய வைப்பதைவிட விளையாடி அவர்களின் உள்ளக்கிடக்கையை அறிந்துகொள்தல் எளிது என நினைத்து. வெற்றி தோல்வி சமரசம் உடன்படிக்கை வீழ்த்துதல் படிந்து போதல் என்பன விளையாட்டின் மூலம் தெரிந்து கொள்வது/ புரிந்து கொள்வது எளிது.

பின்னர் தலைவனும் தலைவியும் ஆங்கிலத்தில்  தமது பெயர்களை  எழுதிக்காண்பித்து உங்களின் பெயர்களை தெரிவியுங்கள் எனப்பணிக்கின்றனர். அதற்கும் ஏலியன்ஸ் ஒரு வட்டத்தில் பதிலளிக்கின்றனர். தொடர்ந்தும் பலவித சந்திப்புகளில் அவர்களின் மொழியை மொழிபெயர்க்க வாய்க்கிறது. ஒரு அணுக்கம் ஏற்பட்டு பின்னர் அதுவே தொடர்கிறது பின்னரான சந்திப்புகளில். அதுவரை கவச உடையணிந்து சென்று அவர்களைச் சந்தித்தது போய், சாதாரண உடையிலேயே சந்திக்கிறார் தலைவி. நேஷ்னல் ஜியாக்ரஃபி தொகா'வில் கழுகுகளைப்பற்றிய ஆவணப்படம் எடுக்கப்போன அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் ஒரு புகைப்படவியலாளர். முதலில் அத்தனை பெரிய காட்டில் அந்தக்கழுகின் கூட்டுக்கு சற்று தொலைவில் கூடாரம் அடித்து தங்கும்போது, பறவைகளுக்கே உரித்தான தற்காப்பு தாக்குதலில் பல முறை காயப்பட்டதாகவும் , பின்னர் அதுவாகவே உணர்ந்து இவன் நம்மைத்தாக்க, தம் குஞ்சுகளை  அழிக்க வரவில்லை என நன்கு உணர்ந்த பின்னர் தாக்குதலை நிறுத்தி இணக்கத்துடன் இருந்ததை தெரிவித்தார். அதுபோல நான்கு முறை சந்தித்தபின்னரும் அவர்களிடமிருந்து எந்தவிதமான தீங்கும்,கதிர் வீச்சுகளும் தம்மை தாக்கவில்லை என அறிந்து சாதாராணமாக காஃபி ஷாப்பிற்கு நண்பர்களைச்சந்திக்க செல்வது போல செல்கிறார்.



ஏலியன்ஸின் வட்ட ஓவியங்களிலிருந்து ஓரளவு புரிந்துக்கொண்டு அவர்களின் மொழியிலேயே ஒரு கட்டத்தில் இந்த பூமிக்கு வந்ததின் நோக்கமென்ன எனக்கேட்கப்படும் கேள்விக்கு  "offer weapon"என பதிலுரைக்கின்றன ஏலியன்கள். இங்கு தான் தவறான புரிதல் எற்படுகிறது, அவை சொல்ல நினைப்பவை "Use Tools"என்ற பதில். இவர்கள் புரிந்து கொள்தல் "offer weapon" என்று. அங்கிருந்து பிரச்னை ஆரம்பிக்கிறது.   ஏலியன்கள் நம்மைத்தாக்க வந்திருக்கின்றனர் என்ற தவறான புரிதல்களே முட்டலுக்கு சாத்தியப்பாடுகளை எடுத்து உரைக்கிறது.Tools என்பதற்கும் Weapons என்பதற்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிய நாட்கள் பிடிக்கிறது, அதற்குள் சைனா தாக்குதலுக்கு முற்படுகிறது. அதுவரை மற்ற நாடுகள் பெற்ற தகவலை பகிர்ந்து கொள்ளவும் தயங்குகின்றன. Weapons என்ற ஒற்றைச்சொல் போதுமனதாக இருக்கிறது ராணுவத்துக்கு. வேறென்ன வேண்டும் அவர்களூக்கு ? மொழிச்சிக்கல் யாருக்குத்தான் இல்லை. Slip of the Tongue என்று பெரிய தலைவர்களே சொல்லி தமது தவறை மன்னிக்க கோரும் இங்கு இவ்வளவு பெரிய சொல்லை எங்கனம் புரியவைப்பது ?

பின்னரும் அடுத்த சந்திப்பில் ஒரு கையால் ஏலியன் எழுத மறுகையால் தலைவி எழுதுகிறார். புரிந்து கொண்டதன் அடையாளமாக அந்தக்காட்சி கண்ணாடித்திரை முழுக்க ரொம்பவும் சிக்கலான ஓவியங்கள். தலையைப்பிய்த்துக்கொள்ளுமளவுக்கு. அத்தனையும் காலம் குறித்தான சிக்கல்கள் என தெளிவாகிறது. காலங்கள் கடந்த கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எதிர்காலத்தைப் பற்றியதான ஓவியச்சிக்கல்கள் இடியாப்பச் சிக்கல்கள். விடுவிக்க ஆண்டுகள் பிடிக்கும் என்கிறான் பிஸிசிஸ்ட். மனம் பிறழ்ந்த ஓவியனின் அதி தீவிர மனச்சிக்கல்களின் குறியீடாக அந்த கடைசி ஓவியங்கள் அவர்களைக் குழப்புகின்றன. என்ன தான் விடை என்னதான் சொல்ல விழைகின்றனர், என்ன செய்தியைத்தெரிவிக்க இத்தனை குழப்பமான ஓவியங்கள் ?! காலத்தை திறக்கும் சாவி tool-கருவி தலைவியின் கையில் உள்ளது. என்று முடிக்கிறது அந்த ஏலியன். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று - chosen one! ஏலியன்களின் ஓவியமொழியைக் கற்றுக்கொண்டால் காலங்கடந்தும் சிந்திக்கவியலும், எதிர்காலம் பொதிந்து வைத்திருக்கும் பரிசுகளை அறிய வழி வகுக்கும் என்பதை உணர்த்துகிறது.

இந்தத்திரைப்படத்தில் முகப்பிலும் கடைசியிலும் பயன்படுத்தப்பட்ட அந்த சின்ன சிம்ஃபொனி அளப்பரிய உணர்வுகளை நம்முள் கிளர்ந்துவிடுகிறது. மேக்ஸ் ரிக்டரின் On the Nature of Daylight என்ற இசைக்கோவை. எத்தனை முறை திரும்பத்திரும்ப இசைத்தாலும் உள்ளுக்குள் கள் போலிறங்கி ஊறித்திளைக்கிறது. எப்போதும் திரும்பியே வராத காலத்துக்கு திரும்பத்திரும்ப இசைக்க வைக்கும் கோவை. 01:43ல் தொடங்கும் அந்த லீட் வயலின் பிழியும் நமக்குள் சோகத்தை. இங்கு தலைவியின் குடும்பம்,அவளின் குழந்தை பற்றிய முதல் மற்றும் கடைசிக்காட்சிகளில் இந்த இசை எடுத்தாளப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட  நான்கைந்து வயலின் கற்றைகள்/இழைகள் பின்னில் ஒலிக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தாளலயம். நேரப்பரிமாணங்கள். இருப்பினும் லீட் வயலினுடன் இசைந்து இணைந்து ஒலிக்கும் இசைக்கோவை. Sustaining Notes கொண்ட வயலினில் இசைப்பது என்பது பேரின்பம். இழைத்து முடித்தபின்னரும் தொடரும் ஒலி. வாழ்ந்து முடித்த பின்னரும் மனதில் தொடரும் காலம் போல. மேக்ஸ் ரிக்டர் எந்த உளநிலையை பிரதிபலிக்க இசைத்தாரோ அதை சரியாக இனங்கண்டுகொண்டு இங்கு திரையில் பொருந்திப் போகும் காட்சிகளுக்கு ஒலிக்கவிட்டிருப்பது சாலப் பொருத்தம். சிக்கலான இசைக்கோவை இல்லை, இருப்பினும் உளச்சிக்கலை இன்னமும் பிரிக்கமுடியாதபடி இறுக்கிக்கட்டி படுமுடிச்சுப்போடும் இசைக்கோவை. திரையில் ஏலியன்களின் மொழிச்சிக்கல் இங்கு மிக எளிதான இசைக்கோவை, முரண்களாலானது உலகம். 






Friday, January 13, 2017

வர்லாம் வர்லாம் வா..பைரவா.


வர்லாம் வர்லாம் வா..பைரவா. இவ்வளவு இளமை உடலிலும் குரலிலும் ஹ்ம்... கமலுக்கு மட்டுமே வாய்க்கும் அந்த மேஜிக். இங்க தளபதிக்கும்.சரி சரி எத்தினி படந்தாண்ணா இப்டீல்லாம் நட்சிக்கினே இருக்கிறது ?! அதெல்லாம் பத்தி வணிகநாயகர்கள் கவலைப்படணுமா என்ன ? அதான் தைரியமா , சட்டையே பண்ணாம இறுக்கின சட்டை போட்டுக்கிட்டு டைட் பேன்ட் போட்டுக்கிட்டு இறங்கி அடிக்கிறார் கில்லி. அந்த சின்னப்பெண்ண கடத்தி வெச்சிட்டு அப்பால ஒரு ஃபைட்டு ,,ஹா.. சம்மதிக்கணும் சாரே. அதுல ஒரு அல்லக்கை அடி வாங்கிட்டு சக்கரம் போல காற்றில் சுழன்று விழுகிறார். அதான் எப்டீன்னு தெரில. இந்த கம்பி கட்டி தொங்குறது, கயிறு கட்டி தொங்குறதெல்லாம் மேட்ரிக்ஸ்க்கு அப்புறம்தான் தமிழ்லயும் ஆரம்பிச்சது. அப்பால டிஜிட்டல் பிரின்ட்ல சின்னதா ஒரு எரேஸர் வெச்சிக்கிட்டு அந்த கம்பி/கயிறு வகைறாவ அழிச்சிடலாம்னு வெச்சுக்குங்க. இருந்தாலும் இங்க மாட்டு வண்டி சக்கரம் போல சுழன்று விழுகிறார். அந்த ஃபைட்டு ..ஆஹா.. 



இருக்கிறதுலயே வணிகப்படம் எடுக்கறதுதான் கடினம். எங்க பாட்டு வெக்கிறது, எங்க ஃபைட்டு வெக்கிறதூன்னு தலயே வெடுச்சிரும். தல' உருவம் எப்டி இருந்தாலும் பரவால்ல,  சால்ட் பெப்பர் ஸ்டைல்லாம் வெச்சிண்டு தூள் கெளப்புவார். நம்ம தளபதி எப்பவும் இளமை குன்றாது "மாண்புமிகு மாணவன்" போலவே இருப்பார். அதான் விசேஷம். வயசே ஆகாதாங்ணா உமக்கு? சரி குரல்ல எப்டி வயசு தெரியாம சமாளிக்கிறார்னு தான் தெரில.!  இடைவேளைக்கு முன் ஒரு காமெடியன், பின்னொரு காமெடியன் என்ற இப்போதைய ட்ரென்டு இங்கும்.  அவ்வளவு பெரிய ஃப்ளாஷ்பெக்கை ஒரு பேருந்து நிலையத்தில் நடுவில் நின்று கொண்டு 'வாய்ஸ் ஓவரில்' சொல்வதெல்லாம் அரத காலப்பழைய டெக்னிக். சொல்லப்போனா கீர்த்தி தான் ஃப்ர்ஸ்ட் ஹாஃப் ஹீரோ. செகன்ட் ஆஃப்ல தான் தளபதி ஹீரோ.



ஜேம்ஸ்பான்டு படங்கள்ல எவ்வளவு தான் அடிபட்டாலும் ரென்டு சிலுப்பில எல்லாக்காயத்தையும் சரி பண்ணிடுவார்னு காமிச்ச காலங்கள்லாம் போயி 'பியர்ஸ் ப்ராஸ்னன்' தான் நெனக்கிறேன். ஆஸ்பத்திரில்லாம் போயி கட்டு கிட்டெல்லாம் போட்டுக் கிட்டு அப்பால அடிச்சு தூள் பண்ணக்கிளம்புவார். அதே மாதிரி இங்கயும். கம்பில பூட்டெல்லாம் போட்டு கட்டி வெச்சிட்டு டானியல் பாலாஜி, வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கும்போது தளபதி வெறும் ஹேர்பின்னை வைத்து கழற்றிவிட்டு வெளியேறுகிறார், அடுத்த காட்சி அம்ணி டாக்டருல்லா, அதான் ஊசி போடுது. இத்தனை அழகான கீர்த்தி தின்னவேலி பாஷை பேசுது ..ச்சை..வேணாங்ணா. டும்டும்டும்'ல இது மாதிரிதான் ஜோதிகா டின்னவேலீ பாஷா பேசிண்ட்ருப்பா.ஹிஹி.. ஆனாலும் விஜய்யின் குறுகுறுப்புக்கு த்ரிஷாவுக்கு அப்புறம் கீர்த்தி தான் செம ஃபிட்டு!


எல்லா ஃபைட்டுக்கும் 'வர்லாம் வர்லாம் வா'ன்னு சநா போட்டுத்தாக்குறார். தூள் விக்ரம்க்கு பரவை முனியம்மா ஆயா பாடின 'சிங்கம் போல' பாடல் இங்க ரிப்பீட்டூஊ. இருந்தாலும் அந்த எலெக்ட்ரிக் கிட்டார்ல வரும் முகப்பிசை அதிரத்தான் செய்கிறது. பிற பாடல்கள் எல்லாம் விஜய்க்கு பண்ணினது போல க்ளீஷெ. இதே விஜய்க்கு ரஹ்மானும் இசையமைத்தார் இரெண்டொரு படங்களுக்கு அவரின் பாணியே மாற்றாமல் ( உதயா, அழகிய தமிழ் மகன்) அது கொஞ்சம் கூட செட்டாகவேயில்லை விஜய்க்கு. அதான் இங்க இறங்கிட்டார் பழைய படிக்கு, இருப்பினும் சநா விஜய்க்கு பணிந்துவிட்டதிலேயே பாடல்களெல்லாம் கேட்கும்படியே இல்லை. பின்னணி இசையில் அடித்துக் கிளப்பியிருக்கலாம் தான் அங்கும் வெறுமனே, அருண்ராஜின் வர்லாம் வர்லாம் வா..ஹ்ம்..சலிக்கிறது. வேற ஜானர் ட்ரை பண்ணல்லாம் இந்த தனுஷு, விஜய்லாம் விடவே மாட்டா :)  கபாலி முழுக்க ரஞ்சித்தின் கட்டுப்பாட்டிலிருந்ததால் தப்பிப்பிழைத்தது.



கத்தீல குழாய்லல்லாம் உக்காந்து ப்ளான் போட்டு எதிரியக்கவுத்தவர்,துப்பாக்கீல டீம் வொர்க் பண்ணி எதிரிய துவம்சம் பண்ணினவர் இங்க ஒரு ஆஃப்டர் ஆல் கசாப்பு கடைக்காரனை வெட்ட விட்டுருக்கார் பரதன். சம்பவங்கள் எதிலும் புதிதில்லை. வழக்கமான மசாலா. இருப்பினும் ஒத்த ஆளா நின்னு படத்தயே தூக்கிக்கினு அலயுறார் விஜய்!  முருகதாஸ் மட்டுமே இத்தனை களேபரத்திலும் ரசிக்க வைத்தார் விஜயை வைத்துக் கொண்டு. விசிலடிக்கும் கூட்டமும் , டிக்கெட்டுக்கு ஐந்நூறு கொடுத்தும் ப்ளாக்கில் வாங்கிப்பார்க்கும் கடினச்சாவு விசிறிகள் இருக்கும் வரைக்கும் இது போன்ற படங்கள் எப்போதும் தோற்காது.
#பைரவா



Thursday, January 12, 2017

தலைப்பில்லாத கவிதைகள்


ரயிலின்
கடைசிப்பெட்டி
ஒரு கவிதை.

***
அணுகுண்டுக்கும்
அழியாத
கரப்பான்பூச்சி
காஃப்க்கா

***
கடலுக்கு
அலைகள்
க்ளீஷே

****
எனக்கும் கவிதை வாசிக்கத்தான் விருப்பம்
இந்த முன்னிரவில்
இதுவரை யாரும் எழுதவில்லையே ?!

***
ஜன்னல் கதவைத்திறந்தால்
மேகம் உள்ளே வந்துவிடுமோ
என்ற பயம்
அடைத்தே வைத்திருக்கிறேன்

***
என்னை எரித்துவிட்ட
சுடரில்
சாம்பல் படிந்திருக்கிறது

***
உன் ஆயுதங்களை
மௌனித்திருக்கிறாய்
எனக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது
பெரும் சமர்

***
ஆசைப்படாமல் இருக்கிறேன்
கிடைக்கிறதா எனப்பார்க்கலாம்….

****
எனது சிறந்த கவிதை
இன்னும் எழுதப்படவில்லை
ஆனால் உன் தந்தை

****
கடவுளையும்
ஆப்பிள்
உண்ண வைத்தவள்

***** 


என்றும் மின்சாரம் தீராத
மின்மினிப்பூச்சி
அவள்

****
இனி உனை
முத்தமிடக்கூடாது
என்றிருக்கிறார்
மருத்துவர்

****
எனக்குள் நானே
சொல்லிக்கொள்ளாததையா
என் கவிதை
சொல்லிவிடப்போகிறது ?

*****
எப்படியும் இந்தக்கவிதையை
இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்
என்றுதான் சொல்லப்போகிறீர்கள்.

*****
சாத்தானைப்
பிரார்த்தித்துக்கொண்டு
உன்னைக்காதலிக்க
விழைகிறேன்
ஒவ்வொரு முறையும்
கடவுளையே
துணைக்கழைக்கிறாய்

*****
ஒரு சன்னலை
அடைத்தால்
மறு சன்னல் திறக்கும்
என்றுதான் இருக்கவியலும்.

*****
இக்கால இறுவட்டு
போலிருக்கிறாய்
அக்கால ஒலிப்பேழைகள் போல்
மறுபக்கமேயில்லை
உன்னிடம்

*****
உன் அழகைப்போல்
என் ஆன்மாவிற்கும்
வயதாவதில்லை

****
என்றும் நரைக்காத
மயிற்தோகை
உந்தன் குழல்

*****
கடவுள் கொடுத்த
ஆப்பிள் நீ
எனக்கு

*****


யுகங்கள் கடந்தும்
போதி மரம்
ஞானம் பெறவில்லை.

****
உனக்கென விட்டுக்கொடுத்து
விட்டுக்கொடுத்து
நீயானேன்

****
காதலை
எடுத்துச்சென்ற
உறக்கம் அவள்

*****
ஒரு சிறிய
காதல் கிரகத்துள்
அடக்கிவிட இயலாது
உனை

****
நீயே நோய்
நீயே மருந்து
நீயும் ஒரு கார்ப்பொரேட்

****
அகாலத்தினாற்செய்த உதவி
அண்டத்தினும் சால சிறிது

****
நான் ஒன்றுமில்லாததை
கொடுக்கிறேன்
எடுத்துக்கொள்வாயா ?

****
சுஜாதாவுக்கு
ஸ்ரீதேவியின் மூக்கு
லாசராவுக்கு
ஈர உடையுடன்
படியிறங்கும் பெண்
பாலகுமாரனுக்கு
செருப்பில் ஒட்டிய சோறு
நகுலனுக்கு சுசீலா
எனக்கு…
வாசிக்கும் நீங்களே
சொல்லுவீர்கள் இப்போது

*****
மீன் என்ற சொல்
நீர் என்ற சொல்லில் நீந்திக்கொண்டிருக்கிறது
தூண்டில் எனும் சொல்லால்
புழு என்ற சொல்லைக்கொண்டு
பிடிக்க முயன்றேன்
முள் என்ற சொல்லில்
சிக்கிக்கொண்டது

*****
சலனமற்ற
தெளிவான குளமும்
என் முகத்தை
கலக்கியே காண்பிக்கிறது

*****
என்னோடு
நிழலையும் சேர்த்துப்புதையுங்கள்
தனிமையில் வாடாதிருக்கட்டும்

*****
நானெழுதுவதெல்லாம்
கவிதைக்ள் தான்
நீ எழுதும்வரை

****
தரவுகளில்லாத
தவறுகள்
உனது

*****
உடனுள்ளவரெல்லாம்
காகிதக்கப்பல்
செய்துகொண்டிருக்கும்போது
நான் கத்திக்கப்பல்
செய்துகொண்டிருந்தேன்

*****
ஒவ்வொரு குயிலிடமும்
வேறு வேறு
கானங்கள் இல்லை

*****
இத்தனை அழகான
பட்டாம்பூச்சியை
பராமரிப்பது
அத்தனை கடினமான
இருக்கிறது
கம்பளிப்பூச்சியாக மாறிவிடு.



http://malaigal.com/?p=9618

Saturday, January 7, 2017

முன்பே வா என் அன்பே வா ...




ரஹ்மானின் முதல் பத்தாண்டுகள் என்றும் மறக்கவியலாது எனினும் பின்னில் அவரின் இனிமை குறைந்து பல வித உலக இசைக்கோவைகளை முயற்சி செய்யத்தொடங்கிய போது தமிழுக்கு அந்நியப்பட்டுப்போனார். இனியும் மீண்டு வருவார் என்ற எண்ணமே இல்லாது போனது எனக்கு. இருப்பினும் 2006-ல் அவரின் பிந்தைய பத்தாண்டில் வந்த இந்தப்பாடலை சொல்லலாம்.அவரின் இசை இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்று தமிழ்கூறும் நல்லுலகுக்கென இசைத்தது என்றே கூறுவேன். இந்த ராகம் ஒரு சோக இசைக்கென (Pathos) உண்டானது.அதை கதையையொட்டி பின்னில் வரப்போகும் பிரிவைச்சொல்லக்கூடியதாக இருக்கட்டும் என எண்ணி இசைத்திருக்கிறார் என்றே கூறுவேன். அத்தனை மகிழ்வெனில் பின்னில் துயரம்தான் என்ற மறுக்கவியலாத கூற்றை பறைசாற்றும் இந்தப்பாடல். நிறைய வடநாட்டு ஜோன்புரி, நம்ம ஊரு 'நடபைரவி'. கோபாலகிருஷ்ணபாரதியின் 'எப்ப வருவாரோ' கூட நடபைரவி தான் :) தெரிகிறது பல இடங்களில். 'ஆசை முகம் மறந்து போச்சே'ன்னு பாரதி கூட பாடீருக்கான் :)  சுசீலா பாடின 'சொல் சொல் என் உயிரே' இப்டீ பல எகா'க்களை சொல்லலாம் ஜோன்புரிக்கு.

இது தந்திக்கருவி கொண்டு இசைக்கும் அந்த முன்னிசை/முகப்பு இசை(Prelude)க்கெனவே தொடர்ந்தும் கேட்பதுண்டு.  00:35 வரை அந்த தந்தி கொண்டு இசைக்கும் முன்னிசை மனதைக்கரைக்கும். சந்த்தூர் என்ற இசைக்கருவியாகத்தானிருக்க வேணும். முன்பக்கம் வளைந்த இரண்டு இரும்புக்குச்சிகளை வைத்துக்கொண்டு ( ஆங்கில L போல இருக்குமவை) இரு கைகளிலும் பிடித்து மடியில் கிடத்தியிருக்கும் அந்தக்கருவியில் உள்ள கிடைமட்டமாக இறுக்கி இருபுறமும் கட்டப்பட்டிருக்கும் தந்திகளில் அடித்து ஒலியெழுப்ப வேணும். கொஞ்சம் இம்மி பிசகினும் நாரசமே ஒலிக்கும். முகப்பு ஒலி மட்டுமல்ல பாடல் முழுதும் வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் இசைத்திருப்பார்.பண்டிட் ஷிவ்குமார் ஷர்மா என்ற கலைஞர் இக்கருவியை இசைப்பதற்கெனவே பிறந்தவர் போல கேட்பவர் அனைவரையும் பைத்தியமாக்கி விடுவார் நம்மை. காஷ்மீரத்தை சார்ந்த இசைக்கருவி இது. மிகவும் அரிதாகவே தமிழிசையில் இடம் பெறும் இது. இந்தக்கருவியை வாசிக்கப்பயில்தல் ஆகக் கொடுமையான பயிற்சியாகவே இருக்கும். பெரும்பாலும் String Instruments வாசிக்கக் கற்றுக்கொள்வதே கடினமான செயல் :)

இந்தப்பாடலுக்கு மெட்டமைத்ததற்குப்பின்னரே வரிகள் வாலி எழுதியிருப்பார் என நம்புகிறேன். சரளி கொண்டு நிரப்ப வேண்டிய இடங்களிலும் சொற்கள் கொண்டே நிரப்பியிருப்பார். முகப்பில் வரும் அந்த ரோஜாத் தோட்டம், கைகளை விரித்துக்கொண்டு பாடும் பூமிகா ஆஹா.. எல்லாம் சுகம்டா. ஊட்டி போயிருந்தப்போ ரோஸ் கார்டன்'ன்னு டிக்கெட்லாம் வாங்கிக்கிட்டு உள்ள விட்டார்கள். நான் இந்த ஞாபகத்துலயே போனா அங்க ஒரு செடீல ரெண்டு பூ மட்டுமே இருந்தது. ஹ்ம்.. சரி அதை விட்டுவிடலாம். 03:07ல் ஆரம்பிக்கும் அதே சந்த்தூர் ஆஹா. ரஹ்மான் எப்பவும் இசைக்கலைஞர்களை இன்ன ராகத்தில் இசையுங்கள் எனக்கூறிவிட்டு அவர் தம் போக்கில் இசைக்கவிட்டு (இப்ப ஒரு ராகம் முழுக்க வாசிக்க வேணுமெனில்  ஆலாபனை, சரளி, மெயின் கோர்ஸ், பக்கவாத்தியம் எல்லாம் வாசித்து அடங்க குறைந்தது 20-25 நிமிடங்கள் பிடிக்கும். அதை அப்படியே வாசிக்கவைத்து விட்டு ) பின்னர் தமக்கு தேவையான பாகங்களை மட்டுமே நறுக்கி எடுத்து தமது பாட்டில் செருகி வைப்பார் என்று அறிவேன். 'டூயட்' படத்தில் கதிரி கோபால்நாத்'தின் சாக்ஸஃபோன் இசையையும் அப்படியே செய்திருந்தார். அது போல இங்கும்.

ஷ்ரேயா கோஷல் , மற்றும் நரேஷ் பாடிய பாடல். நரெஷின் முதல் பாடல் என்றறிகிறேன்.பொருந்தும் குரல் இருவருக்கும். இதே ஜோடியை ராசைய்யாவும் பாடவைத்தார் பிறகு ( பிரகாஷ்ராஜின் ஒரு கிரிக்கெட் படத்தில் ஒரு பாடல் வரும் ). ஹார்மனியில் ராசைய்யாவை மிஞ்ச ஆளே கிடையாதுதான். பாரதிராஜாவின் வெள்ளுடை உடுத்திய தேவதைகள் சூழ்ந்து கலங்கடிப்பது ஹார்மனிக்குத்தான் :)  இருப்பினும் சிஷ்யர் இந்தப்பாட்டில் கத்துக்கொண்ட வித்தையை மொத்தமாக இறக்கித்தான் வைத்திருப்பார். :) 

நரேஷ் 'நீநீநீ மழையில் வாட' என்னும்போது பின்னில் ஒலிக்கும் அந்த தந்திக்கருவியின் இசை சிறு மழைத்துளிகளால் நம்மை நனைக்கும். 02:59 மற்றும் 04:22 ல் ஷ்ரேயாவின் அந்த  கரப்பான்பூச்சி சங்கதி கவனித்தேதீரணும் அனைவரும். இந்த கரப்பான் பூச்சி சங்கதி என்ற பதம் அனுராதா ஸ்ரீராம் தான் அடிக்கடி பயன்படுத்துவார். ரொம்ப கஷ்டம் அதோட , கரப்பான் பூச்சி நம்மையறியாமல் காலில் ஊறிச்செல்லும்போது படக்கென தட்டிவிடத்   தோன்றுமல்லவா..  அதான் கரப்பான்பூச்சி சங்கதி. இங்க ஷ்ரேயா அப்டியே வெண்ணையில் புதுக்கத்தி நழுவுவதுபோல நழுவிச்சென்றிருப்பார். கேளுங்களேன் :) இப்டீ நிறைய சிலாகித்துக்கொண்டே செல்லலாம். 'நிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டில் குடி வைக்கலாமா ?' #முன்பேவாஎன்அன்பேவா

Monday, January 2, 2017

யுவனின் பழைய கோப்பை


காதல் ஒரு கட்டுக்கதை - ஆரம்பம்' படத்தில் ஒரு ராப்' இசைத்திருப்பார் , அந்த இங்லீஷ் வாய்ஸ்ஸை பதிவு செய்து விட்டு பின்னர் தமிழ் குரலை இட்டு நிரப்பியதாக சொல்வார் யுவன். ஸ்டைலிஷ் தமிழச்சி. அதே முறையில் பதிவு செய்யப்பட்ட பாடல் இது. ஹ்ம்..இப்பல்லாம் தமது பாடலைக்கேட்க வைப்பதே பெரும்பாடாகி விட்ட யுவனுக்கு இது கொஞ்சம் ஸ்பெஷல். பாடலின் துவக்கத்தில் வரும் அந்த ஸிந்த்-தில் இசைக்கும் அந்த பிட் அற்புதம்.ஸ்லோ பாய்ஸன் தான் மெல்ல இறங்கும் விஷம். அதுல கொஞ்சம்  Arabian Erotic Style இருக்குது பாருங்க. அது தான் Just Elevating the Song. ராப்'ஐயும் கேட்க வைக்கலாம் தான். கொஞ்சம் ஹிப் ஹாப் கலந்தால். ராப் அப்பன்னா பிள்ளை ஹிப் ஹாப்..ஹிஹி.அதோட கொஞ்சம் Arabian Erotic Style. Beautiful Yuvan! 02:36-ல் தொடங்கும் ஸிந்த் இசையும்,பின்னிலேயே கொஞ்சும் ஆங்கிலக்குரலும், இடைவிடாத தாளமும் தலையை இடப்புறமாக மட்டும் திரும்பத்திரும்ப ஆட வைக்கும். கைகளைக்கட்டிக் கொண்டு முயற்சி செய்யுங்கள்.. 
ஸுஹானுபவா,,,ஹிஹி..

Little Mix-ன் Black Magic பாட்டு கேட்டுப் பாருங்களேன்..ஹ்ம்..அந்தப்பாடல் தான்னு நினைத்துவிட வேண்டாம்..அது முழுக்க பாப்'பில் இசைத்தது .இருந்தாலும் சும்மானாச்சுக்கும் சொன்னேன். கொஞ்சம் மிக்ஸிங்-லாம் அந்தப்பாடலின் அடியொட்டி இருப்பதை அவதானித்தேன். 00:31லிருந்து 00:32 அப்புறம் 01:25-01:26 வரை மேஜிக் கேளுங்க. நடந்துகொண்டிருக்கும்போது  நம்மையறியாமல் வந்து விட்ட படியில் ஏறி இறங்கியது போல ,எதிர்பாரா சாலையின் வேகத்தடையில் மெதுவாக ஏறியிறங்கியது போல உணர்வீர்.



 ஒரு கோப்பை - "உனக்காகவே உயிர் வாழ்கிறேன்"-னு மூன்றுபேர்மூன்றுகாதல்-ல ஒரு பாட்டு இசைத்திருப்பார் யுவன். அதன் சாயல். அதன் நீட்சி என்றே சொல்லலாம். 02:16லிருந்து தொடங்கும் அந்த இடையிசை தெளிவாகச் சொல்லும்.பின்னரும் பாடல் துவங்கும்போது "மின்னலே நீ வந்ததேனடி"ன்னு ரஹ்மான் "மே மாதம்" படத்தில் ஒரு பாடல் இசைத்திருப்பார். அதன் நினைவுகள் என ஏகத்துக்கு பழைய பாடல்களை ஞாபகப்படுத்தும் பழைய கோப்பையாகவே இருக்கிறது .இருப்பினும் மயக்க நிலையை உருவாக்கும் பாடல் ஆர்க்கெஸ்ட்ரெஷனை மெச்சலாம்.Touch by an Angel! யுவனின் பழைய கோப்பை'யில் நாமு'வின் புதிய கள். இதுவரை'ன்னு கோவா'வில் பாடிய ஆன்ட்ரியா இங்க கோப்பையில் குடியிருக்கிறார்.இருப்பினும் இதுவரை'யின் மயக்கம் வேற லெவெல். கோப்பை என்றாலே தள்ளாட்டம் தானே ?! :) Selena Gomezன் Kill Em With Kindness-ல் வரும் அந்த முகப்பு விசில் இசை பின்னரும் பாடல் முழுதும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புழங்க விட்டிருப்பர். சமீப காலத்தில் மிகவும் ரசித்த விசில் இசை , இங்கும் யுவன் பாடலை விசிலோடேயே ஆரம்பிக்கிறார்.

ஆன்ட்ரியாவின் வெஸ்ட்டர்ன் ட்ரீட் ஸ்ருதிஹாசனை விடவும் ரொம்ப ஆதன்ட்டிக். ஸ்ருதி கற்றுக்கொண்டு பாடியது போலவே தோன்றும், ஆன்ட்ரியாவோ இயல்பில் இருப்பதை தாமாக உணர்ந்து பாடுவார். அது தான் ஆன்ட்ரியா! எனக்கு ரொம்ப நாளாவே ஒரு ஆதங்கம். இவர் ஏன் இசையமைக்கக்கூடாது? ஏதேனும் ஆல்பமாவது வெளியிடலாம். கேபா ஜெரீமியா' கிட்டாரிஸ்ட்டை வைத்துக்கொண்டு ஒரு தனிப்பாடல் திரட்டு வெளியிடலாம். கேபா ஜெரீமியா'யின் தமக்கையா இவர்..தெரியவில்லை , எனில் இருவருக்கும் ஒரே குடும்பப்பெயர் (ஸர்நேம்) :) "பெண் என்பவள் ஆண் பார்வையில் மோகச்சதை தானா?" என்று நாமு'வும் தம் பங்குக்கு தெளியவிடாது மயக்குகிறார். முகப்பு இசை முடிந்ததும் கூட தெரியாமல் இரண்டு செகன்ட் கழிந்த பின் பாட ஆரம்பிக்கிறார் ஆன்ட்ரியா..அத்தனை மயக்கம் ..ஆஹா! 'சொர்க்கம் மதுவிலே,சொக்கும் அழகிலே'ன்னு ராசைய்யா இசைத்தது மிகவும் போதையில் அதை ஆராதித்து மகிழ்ந்து பாடுதல். இங்கு சோகத்தில் மூழ்கி வெளிவர முயற்சி எடுக்காமலிருக்க பாடுகிறார் ஆன்ட்ரியா.




உன் பதில் வேண்டி - தொடக்கத்திலேயே 'அறுவடை நாள்' படத்தில் ராசைய்யாவின் ஜீவன் முழுதுமாக உருக்கி இடபட்ட பாடல் தெரிகிறதா ? 'தேவனின் கோயில் மூடிய நேரம்'. அதுவே மிக மென்மையான பாடல். அதையும் இன்னமும் மெலிதாக்கி இளைக்கவைத்து கொஞ்சம் ஹிந்துஸ்தானி ட்ரீட்டில் கொடுத்திருக்கிறார் யுவன். ஹிந்துஸ்தானி பாடு உன் குரலுக்கு சூட் ஆகும் என்று ரஹ்மான் சொன்னதாகக்கேள்வி. இங்கு பாடியிருப்பது சித்தார்த் எனத்தெரிகிறது. பெயர் பார்க்காதவரை யுவன் என்றே நினைத்திருந்தேன்.இருப்பினும் யுவனின் ரேஞ்சுக்கு என இசைக்கப்பட்ட பாடல். இது என்னைக்கேட்டால் 'தேவனின் கோயில்' யுவனின் பாணியில் இசைத்தது என்றே கூறுவேன்.

'வழிப்போக்கனின் பாதையில் நிழலாக வருகிறாய்' ஆஹா.. எத்தனை சாதாரணமான வரி இது. இடையிசை முழுக்க அரேபியன் ஸ்டைல் ஸ்டிங்-கின் 'டெஸர்ட் ரோஸ்' (Sting Desert Rose) கேளுங்க. அதே ஃபீலிங். 'பேசு' என்றொரு ஆல்பம், அதன் ஸ்டைலில் தமது வழக்கமான பாணியில் செய்த பாடல் இது. 'உந்தன் வார்த்தையில் எந்தன்' , 'கெட்டிமேளம்' என்ற வரிசையான பாடல்களினூடே 'தப்பு தண்டா செய்யும் வயசு' (ஆதலினால் காதல் செய்வீர்) என்பன போன்ற யுவனின் comfort zone-லிருந்து இசைத்த பாடல். கொஞ்சம் வேறுபடுத்திக்காட்ட அந்த அரேபியன் ஹார்மனி இடையிசையென. ஹிந்துஸ்தானி ட்ரீட் எனில் சொய்வு வந்துவிடும் தமிழ்கூறும் நல்லுலகுக்கு, ஆகவே அதையொட்டிய கொஞ்சம் அந்நியமான அரேபியன் ஸ்டைலை எடுத்துக்கொண்டால் நல்லதென இசைத்திருக்கிறார். எல்லாம் மிக்ஸ் தான் சினிமா இசை. ஜுகல்பந்தி - சமபந்தி போஜனம்.




உன்னை உன்னை உன்னை - முகப்பு 'பேசு' ஆல்பமில் உள்ள 'வெண்ணிற இரவுகள்'  என்ற யுவன் 'சோலோ' போல பியானோவின் கட்டைகளை மெதுவே அழுத்தி இசைத்த பாடலை ஒத்திருக்கிறது. வரிகளுக்கு இசைத்த பாடல் அதுதான் எந்த ராகத்துக்குள்ளும் அமர்ந்து கொள்ள இயலவில்லை. வாசித்து ஒப்பேற்றுகிறார் யுவன். முகநூல் ஸ்டேட்டஸ்கள் போல வாக்கியங்கள் தொக்கி நிற்கின்றன. வேணுமெனில் இயக்குநர் ராம் மட்டுமே வாசித்துவிட்டு சென்றிருக்கலாம் இந்த நாமு'வின் வரிகளை. பின்னில் இதே பியானொ'வின் கட்டைகளை மெதுவே அமிழ்த்தி.

"என் பெயரே எனக்கு மறந்து போன இந்த வனாந்தரத்தில் என்னைப்பெயர் சொல்லி அழைத்தது நீயா நீயா ?!"  என எம்எஸ்வி ஐயா,வைரமுத்துவின்("திருத்தி எழுதிய தீர்ப்புகள்" தொகுப்பில் இடம் பெற்ற கவிதை என நினைக்கிறேன்) புதுக்கவிதைக்கு இசைக்கப்படாத பாடு பட்டு இசைத்திருப்பார். இடையிசையில் லால்லா வெல்லாம் போட்டு..ஹ்ம்.. முடியலடா சாமி என்று ஜாம்பவானே தோற்ற இடம் அது. சொற்களில் சந்தம் இல்லையெனில் சப்பென்று உரைநடையாக முடிந்து போகக்கூடியன. அதுக்குத்தான் அப்பப்ப 'மானே தேனே'ல்லாம் போட்டுக்கணும் ..ஹிஹி.  தோதுப்படவில்லை எனில் அதைக்கேட்பவனுக்கு அந்நாள் அருமையான நாளாகவே இருக்கும் ( fine day ..hehehe )

இப்ப ஏன் சொல்றேன்னா என்னதான் வரிகள் எழுதினாலும் அது ராகத்துக்குட்பட்டு உட்காரவில்லையெனில் கேட்கச்சகிக்காது. இவற்றையெல்லாம் பின்னில் ஒரு வயலினோ இல்லை பியானோவோ ஒலிக்கவிட்டு வாசித்துவிட்டு செல்லலாம். இங்கும் ராமும் இதையே செய்திருக்கலாம்.

ரெட்ரோ எனச்சொல்லவியலாத , முழுமையாக தமது பிந்தைய பாணியிலேயே இசைத்த ஆல்பம் இது. பெரும்பாலும் நாம் வழக்கமாக எதிர்பார்க்கும் யுவனின் ஆல்பம் தான் இது. புதுமை என ஏதும் இல்லை. யுவனின் பழைய மொந்தையில் நாமு'வின் புதிய கள்ளூற்றப்பட்டிருக்கிறது. ராமாவாது ஏதாவது புதிதாதத் தந்திருக்கிறாரா ,,படம் வந்ததும் பார்க்கலாம்!



.