இசையில் ஹிந்துஸ்தானி மெட்டீரியல் அளவு கூடும்போது எனக்கு அந்தப்பாடல்
அந்நியமாகி விடுகிறது. இந்த விஷயத்தில் ராஜா கெட்டிக்காரர். அளவோடு கொடுத்து,அதையும்
கொடுத்ததே தெரியாமல் முடித்துவிடுவார், பிரபு.சிவாஜி நடித்த அந்த மும்தாஜ்/ஷாஜஹான்
‘சாதனை’ படத்தில் அத்தனை பாடல்களும் ஹிந்துஸ்தானி இசையிலமைந்த பாடல்கள்.’வெளுத்து
வாங்கியிருக்கிறேன்’ என்று பேட்டியெல்லாம் கொடுத்ததாக தகவல். ‘குரு சிஷ்யன்’
படத்தில் கூட ‘வா வா வஞ்சி இளமானே’ கூட கலந்து கட்டி அடித்த பாடல். ரொம்ப
நீளமாகவும்,எதுக்கு இவ்வளவு நீட்டிக்கொண்டே போகிறது என்றும் கொஞ்சம் சலிக்க
வைக்கும் பாடல் அது. நான் கூட இருந்து வடக்கத்தி நண்பர்களுடன் கேட்டிருக்கிறேன்.
உடனுக்குடன் சொற்கள் வருவதும், பாடல் வேக தாளகதியில்
செல்வதும் அவர்களுக்குப்பிடித்தமே இல்லை. எத்தனையோ ராஜா’வின் பாடல்களை தொடர்ந்து
இசைத்து அவர்களின் கருத்தை அவரறியா வண்ணம் பார்த்திருக்கிறேன். அத்தனை
பிடித்தத்துடன் அவர்கள் கேட்பதில்லை. அதனலேயே அவரின் பாடல்கள் எல்லை தாண்டாது
இங்கேயே நின்று விட்டன. எதுவும் வேண்டாம். ‘மௌன ராகத்தின்’ ‘மன்றம் வந்த தென்றலே
ஒரு நல்ல உதாரணம். அதே பாடலை டெம்ப்போ ஏற்றி கொஞ்சம் 6-8ஐ கவ்விப்பிடித்து
பவதாரிணியை பாடவைத்து அவர்களைக்கேட்க வைத்தார். ‘இங்கு பொழிந்த இளையநிலா’ அங்கு
நிலே நிலே அம்பர் பர்’ என்று கொஞ்சம் தாளகதி மாற்றிப்பொழிந்தது. இடைவெளியின்றி சில
செக்கண்டுகளே இடைவெளி விட்டு ஒலிக்கும் சொற்கள் அமைந்த அத்தனை பாடல்களும்
வடநாட்டவர்க்கு பிடித்தமில்லை. நாம் யாருக்காக இசைக்கிறோம் என்று அறிந்தவன் இசைஞானி.
‘நிலாவே வா செல்லாதே வா’ என்ற பாடலை உதாரணத்துக்கு
எடுத்துக்கொண்டால் அந்த ‘செல்லாதே வா’வுக்குப்பின்னர் உடனே ஒலிக்கும் ‘என்னாளும்
உன்’ என்ற வரியை இன்னமும் நேரம் எடுத்துக்கொண்டு அந்தச்செல்லாதே வா’வை இன்னமும்
இழுத்துப்பாடி பிறகு என்னாளும் உன்’னைக்கொண்டு வந்தால் வடக்கத்தி நண்பர்கள் அமர்ந்து கேட்பர். ‘பச்சமலப்பூவு
நீ உச்சி மலத்தேரு’ என்று பாடி முடித்தபின் ஒரு நான்கு செகன்களுக்குப்பிறகு ‘குத்தம்
குறை ஏது இது நந்தவனத்தேரு’ என்று பாடினால், ஆகாது இழுத்து வைத்து பாடினால்
அவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். நமக்குப்பேயறைந்தது போல ஆகிப்போகும்.
உடனுக்குடன் வரும் வரிகளைக்கண்டு வடக்கத்தி ஆட்கள் நகைப்பதுண்டு. அவர்களின் பாடல்
முறை வேறு. ஒரு வரியை அனுபவித்து லயித்துப்பாடி ,,,ஹ்ம்,,போதும்டா சாமி என்ற
நிலைக்கு வந்த பின்னர் அடுத்த வரிக்குச்செல்லவேணும். வரலாறு படத்தில் வரும் ‘
காற்றில் ஓர்’ என்ற ரஹ்மானின் பாடலை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம்.
கேட்கச்சகிக்கவில்லை நண்பர்களே. எவ்வளவு மெதுவாகப் பாடப்படுகிறது?! பாடல்...ஹ்ம்.
இங்குதான் எனக்கு எரிச்சல் கிளம்பும்.
ரஹ்மான் எந்தெந்த விஷயங்களில் அவர்களுக்கு (நமக்கில்லை) சலிப்பு வருகிறது என்று உன்னிப்புடன் கவனித்து அவற்றைக் களைந்து எல்லை தாண்டிச்
சென்றார். அவரின் பாணியே இந்துஸ்தானி/ராஜஸ்தானிய இசைப்பின்னணியில் பிருகா கலந்து
ஒலிக்கும் இசை. எத்தனையோ இசைக்கோவைகளை அவர் இசைத்திருந்தாலும் அவருக்கு Comfort Zone அந்த ஹிந்துஸ்தானிதான்.(லக்ஷ்மிகாந்த்/
பியாரிலால் வெகு காலமாக கோவைத்தம்பி’ தயாரித்த படங்களுக்கு இசைத்திருந்தாலும் எதோ
வெளிநாட்டு இசை போல மண்ணுக்குப்பொருந்தாத இசையாகவே ஒலித்து அவர்களால் இங்கு
நிலைக்க இயலாமலேயே போய்விட்டது. ‘மனோஜ்
கியான்’ விதிவிலக்கு. அந்த ஹிந்துஸ்தானி மெட்டீரியலை நம்மை ரசிக்க வைக்க அதன்
ஒரிஜினல் பாணியிலேயே லக்ஷ்மிகாந்த் இசைத்தது போலல்லாமல் இங்கிருக்கும் பாணி கலந்து
கொடுத்ததால் அவர்களின் பாடல் இப்போதும் பேசப்படுகிறது.)
அதனாலேயே எனக்கு ரஹ்மானின் பாடல்கள் எப்போதும் அந்நியமாகத்தான்
படும். கொஞ்சம் காலம் வடநாட்டில் கழித்தாலும் அவர்களின் இசை வேண்டாமென்றாலுமென் காதுகளில்
விழுந்து கொண்டே தானிருக்கும். இருப்பினும் ஒரு லயிப்போ இல்லை ஆர்வமோ எனக்கு
எப்போதும் இருந்ததில்லை. பிடிவாதம் காரணம் இல்லை,கவர்ந்திழுக்காத எதுவும் என்னை
ஆட்கொள்வதில்லை. எலெக்ட்ரிக் ட்ரெயினுக்காக காத்திருக்கும் போது அறிவிப்பு போக
மீதமிருக்கும் வேளைகளில் ஹிந்துஸ்தானி இசை ஒலிக்க விடுவர். அந்த இசை எப்போதும்
நமது திருச்சி,திருநெல்வேலி வானொலி நிலையங்களில் எதேனும் தலைவர்கள் இறந்து விட்டால்
ஒலிக்கவிடுவது போலவே இருக்கும். சிறுவயதில் இப்படி ஒலித்தால் யாரோ இறந்து விட்டனர்
என்ற எண்ணமே நிலைத்துப்போய்விட்டது. ஒரு கல்ச்சுரல் ஷாக் போல அமைந்து விட்டது அந்த
இசை. தொடர்ந்தும் ஒலிக்கும்போது சொய்வும் களைப்பும் ஏறி போதும் நிறுத்துங்கள்
என்று கத்தவேணும் போல என்றே எனக்குத்தோன்றும். அவர்களின் பாடல்கள் எப்போதும்
இத்தகைய பாணியிலேயே ஒலிப்பதால் ஒரு ஈர்ப்பு எப்போதும் எனக்கு வந்ததில்லை. அன்றைய
காலங்களில் ராஜாவின் இசையை எப்போதும் ஒப்பிட்டுப்பார்த்தே காலம் கழிப்பது வழக்கம்.
ரஹ்மானின் பாடல்களை ஹிந்தி மொழியில்
கேட்டுப்பாருங்கள்,உங்களுக்குப்பிடிக்கும் என்று பல நண்பர்கள்
பகிர்ந்துகொள்வதற்குக்காரணம் அவரின் பாணி அவர்களுக்கானது,நமக்கானதில்லை.! சூஃபி
இசை கேட்க இனிது தான். அதற்காக அந்தப்பாணியில் நான் வித்தகன் , அதையே நீயும்
கேட்கவேணூம் என்று வற்புறுத்துவது, இந்தியா முழுதுமானதற்கான இசையாக வருத்தி
இசைப்பது என்பதெல்லாம் என்ன முறை என்று எனக்குத் தெரியவில்லை.(எனக்கெதுக்குடா
இதெல்லாம், நான் ஏண்டா நட்டநடு ராத்திரீல சுடுகாட்டுக்குப்போகணும்?! J ) எதையும் வலிந்து
திணித்தால் அதை அறவே விலக்கிவைப்பான் தமிழன். ஹிந்திக்கு நேர்ந்த கதி,அது கொண்டு வரும் இசைக்கும் நடக்கும். உயிர்
வரை சென்று செல்களை அரிக்காத எந்த இசையும் விரைவில் தாமாக விலக்கப்பட்டுவிடும். இசைக்கு
மொழியில்லை தான். ஆனால் மொழிக்கு இசை உண்டு. அரபி இசையை தமிழில் பாடினால் யாராலும்
கேட்கமுடியாது. விட்டுவிட்டு அப்படியே ஓடிவிடத் தோணும்
தமிழர்களை இந்திப்பாடல்கள் அண்டாது தடுத்தார் ராஜா. இப்போது
இந்திப்பாடல்களை நெருக்கமாகக் கொண்டுவருவதற்காக இந்தியப்பேரரசின் கார்ப்பொரேட்டுகளின்
கையில் சிக்கிக்கொண்டு நம்மைத் தொடர்ந்து வருத்துபவர் ரஹ்மான். ரஹ்மானின் பாணி ‘பூங்காற்று
தழுவாமலே’ என்ற பழைய பாடலின் முறை தான். ( படத்தின் பெயர் மறந்துவிட்டது )
வேண்டுமானால் இப்போதைய சமீபத்திய பாடலைச் சொல்லலாம். ‘ஒரு காதல் தேவதை பூமியில்
வந்தாள்’ என்ற பாடலும் அவரின் பாணியை சொல்லும். ‘பாரடி கண்ணே கொஞ்சம்,
பைத்தியமானது நெஞ்சம்’ என்ற கவ்வாலி இசைதான் அவருக்கு பலம்.
இடைவெளி அதிகம் விட்டு, நாளை வரை பாடலாம் என்ற பாணி
அவர்களது. இன்றே இப்போதே பாடி வைத்து விடவேணும் என்பது நமது. மூன்று நிமிடங்களில்
பாடி முடிக்கவேண்டியதை ஏழு நிமிடங்களாக்கினால் அது அவர்களின் இசை.
சலிப்பும்,முடிந்தால் போதும் என்ற நிலைக்குத்தள்ளப்படுவது அந்த இசையின் இயல்பு.
நம் வங்கக்கடலும், என்றும் மரிக்காத மரியானும்,
ராப்பும்,ப்ரேஸிலின் இசையும் பாடியதால் விலக்கப்பட்டு விட்டது. அதுக்காக எப்பவுமே
‘அரைத்த மாவையே அரைக்கணுமா’ என்றால் பாரதி சொன்னது தான் எனக்கு ஞாபகம் வருது.
‘தமிழனுக்கு இரும்புச்செவி’. ‘நிதி சால சுகமா’வும், ‘அலைபாயுதே’வும் எப்போதும்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது போனதற்கு காரணம் நமக்கு இரும்புச்செவி :) இப்போ வந்த யுவனின் ‘ஆரம்பமும்’
அத்தனை எடுபடாமல் போனதற்கு காரணம் , அவர்களின் இசைப்பாணியில் அமைந்ததே காரணம்.
பாணி, இசைக்கும் முறை , இசைக்கருவிகள் தேர்வு எல்லாமாகச்சேர்ந்து இசையை
அந்நியப்படுத்திவிடும். MTV விளம்பரங்கள்
அப்போது பரவலாகப் பேசப்பட்டு வந்தது.அவர்கள் இந்தியாவில் சேனல் ஆரம்பித்து வைத்த
நேரம், சின்ன சின்ன ஜிங்கிள்ஸ் போட்டு விளம்பரப்படுத்திக் கொண்டிருந்த போது ‘I
want Michael Jackson’ என்று மராத்திய மீன் பிடிக்கும் ‘கோழி’
இனத்தினர் கையை உயர்த்திச் சொல்வது போல, வந்ததை கேலி செய்யாதவர்களே இல்லை.கெக்கெலி
கொட்டிச்சிரித்தனர். மண்ணுக்கு இசை உண்டு, அதைக்கண்டறிந்து சொல்பவனே எப்போதும் மக்கள்
மனதில் இடம் பிடிப்பான்.
எனது வீட்டில் யாரும் கர்நாடக சங்கீதம் முறையாகப்
பயிலவில்லை யெனினும், எனக்குள் ஊறிக்கிடக்கும் அந்த இசை,அம்மா தொடர்ந்து பாடிக்
கொண்டேயிருப்பார். ‘சுட்ட திருநீறு பூசி தொம் தோமென்று ஆடுவார்க்கு, பிட்டுக்காசை
பட்டு மாறன் பிரம்படி பட்டவர்க்கு’ என நான் வலிந்து கேட்காமலும் அந்த இசை/ஒலி
ராகம் சிறு வயதிலிருந்து எனக்குள் ஆழ்ந்து போய்க்கிடக்கிறது. அப்பா நல்ல இசை
ரசிகர். கர்நாடக இசைக்கச்சேரிகள் என்றால் எந்த ஒலிபரப்பையும் விட மாட்டார்.ஆழ்ந்த
புரிதலுள்ள இசை விமர்சகர்,ரசிகர். நான் கொஞ்சம் அங்குமிங்கும் அலைந்து
கொண்டிருந்ததில் தொடர்ந்தும் கர்நாடக இசை கேட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து
போய்விட்டன.
பின்னர் கிட்டார்
கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ‘ஆர்ச்சி ஹட்டன்’ மாஷே (மலயாளத்தில் ‘மாஸ்ட்டர்’) எல்லாப்
பள்ளிப்பாட்டுகளையும் (கிறிஸ்துவ கானங்கள் J) சொல்லிக்கொடுத்து முடித்துவிட்டு தமிழ், மலையாள /ஹிந்தி சினிமாப்பாடல்களையும் வாசிக்க கற்றுக்கொடுத்தார்.அங்கும்
எனக்கு ஹிந்திப்பாடல்கள் என்னை அவ்வளவாக ஈர்த்ததில்லை. இப்போது எத்தனையோ இசை
கேட்டுக்கொண்டிருக்கிறேன். ராக்,ஹிப்ஹாப், அரேபியன், தென்னமெரிக்க நாடுகளின்
இசை,ஜமைக்கன்,மற்றும் மேற்கத்திய செவ்வியல் இசை என. எல்லாம் அவ்வப்போது கேட்டு
விட்டு ஓய்ந்து விடுவேனே தவிர ஆழ்ந்து எதையும் கேட்பதில்லை. இன்னிக்கும் ராஜா’வின்
இசை உள்ளுக்குள் ஊறிப்போய்க்கிடப்பதற்கும்
இதுவே காரணம். பிற இசைகள் கேட்கலாம். மேலும் இமானின் இசை தொடர்ந்து ஜெயிப்பதற்கு தமிழிசையே காரணம்.
மேற்கத்திய இசையில் கூட நமது நன்கு அறிந்த தமிழிசை ராகங்கள்
இருப்பதாக அறிந்ததுண்டு. இசைக்கும் முறையும், அவர்களின் பாணியும் அதை அந்நியமாக்கி
வைத்துவிடுகிறது. ஒரு இசைக் கலைஞனாக இருந்துகொண்டு அத்தனை ஜானர்களையும்
செய்துபார்க்க வேணும் என்கிற அவா’வைப்பற்றி நான் குறைகூறவில்லை. கேட்பவருக்கும்,
கேட்பவர் குடியிருக்கும் மண்ணுக்கும் கிஞ்சித்தேனும் சம்பந்தமுள்ள இசையாக
இருப்பின் அது கேட்பவரின் மனதின் அடியிற்சென்று தங்கும்.
என்னடா ‘மான் கராத்தே’ன்னு
தலைப்பு வைத்துவிட்டு வேறு எதையோ பேசிக்கொண்டிருக்கிறேனே என்று பார்க்கவேண்டாம்.
சம்பந்தம் இருக்கிறது. அனிருத் , நமது தமிழிசைப்பாணியில் மெட்டமைத்து நமது
பாரம்பரிய இசைக்கருவிகளுடன் ஒலிக்கச்செய்த ‘கொலவெறி’ அத்தனை மொழிகளிலும்
அவர்களுக்கான இசையாகவே ஒலித்தது. எதையும் மாற்றவில்லை, தமிழ்ப்பாடலுக்குரித்தான
அத்தனையும் அந்தப்பாடலில் விரவிக்கிடந்தது. அதோடு அவர் அந்தப்பாணியை இதுவரை
மாற்றாது , இன்னமும் தமிழ் ரசிகர்களை மனதில் வைத்தே இசைப்பதும் தொடர்வெற்றிக்கு
காரணம். தமிழிசையை ஆதாரமாகக்கொண்டு மருவி வந்த ‘கர்நாடக செவ்வியல் இசையை’ இன்னமும்
பயின்றுவருவதும், அதே பாணியில் தொடர்ந்து இசைப்பதுமான தம்பி அநிருத்தின் இசை மனதுக்கு நெருக்கமாகவே இன்னமும் இருந்து வருகிறது. இப்போது இசைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் சந்தோஷ்,
ஜிப்ரான் மற்றும் அநிருத் இதை நன்கு அறிந்துவைத்துக் கொண்டே இசைப்பது மனதுக்கு
இதம்.
அநிருத்தின் சமீபத்திய
இசைக்கோவை ‘மான் கராத்தே’ பற்றிய ஒரு விமர்சனம். இசைக்கோவை வெளியானவுடனேயே
தீப்போல் பற்றி எரியத்தொடங்கியது பாடல்கள். இனி அவருடைய பாடல்கள்.
‘டார்லிங்கு
டம்பக்குடா’
மெட்டுப்போடும்போதே நல்ல
ஜாலி மூடில் இருந்துகொண்டு இசைத்தது போல அத்தனை குதூகலம் இந்தப்பாடலில். வரிகளும்
சேர்ந்தே போட்டுத்தாக்குகிறது நம்மை. கொஞ்சம் மயக்கமும் கிறக்கமுமாக பாடலைப்பாடி
நம்மையும் கிறங்கடிக்கிறார் சுனீதி சௌகான். ஆடுவதற்கு ஏற்ற பாடல். கூடவே வந்து
பாடிக்கொண்டிருக்கும் அந்தப்புல்லாங்குழல் ‘ஆத்தாடி தலகாலு புரியாம’ என்ற
வரிகளுக்கூடே வந்து பயணிக்கும் அந்தப்புல்லாங்குழல் பிட்டு எல்லாமே ராஜாவின் பாணி.
க்ளீஷேதான் பரவாயில்லை இருக்கட்டும்.. கேட்பதற்கு இதம் அது. [ ‘பண்ணையாரும்
பத்மினியும்’ படத்தில் வரும் அந்தப்பாடலிலும் ‘எங்க ஊரு வண்டி’ என்ற
வரிக்குப்பின்னரும் ‘மின்னலைப்போல் போகுது பார்’ என்ற வரிக்குமிடையே ஒலிக்கும்
அந்த http://youtu.be/ZDsxFKiI294?t=2m27s, ஒலிக்குறிப்புகள் எல்லாம் க்ளீஷே, ராஜா காலத்தியது. என்றாலும்
மனதுக்கு நெருக்கமாக எப்போதும் இருப்பவை இதுபோன்ற சின்னச்சின்ன நியூயன்ஸ்கள்தான். இதையெல்லாம்
ஏகத்துக்கு க்ளீஷேவா இருக்கப்பா என்று எடுத்துத்தூற எறிந்துவிட்டு, பாடல்களையே
கேட்கவிடாமல் செய்தனர் பின்னர் வந்தவர்கள். ]
இந்தப்பாடலில் பின்னரும் 1:36-ல்
வருமந்த ‘வீணையின்’ தொடர் நாதம் தெள்ளத்தெளிவாக ஓடிவரும் நீரோடை போல. பாடலில் ‘ராமனுக்கு
சீத, கண்ணனுக்கு ராத’ என்ற இந்த வரி வரும்போது ‘அப்டிப்போட்றா’ என்று
சொல்லிக்கொண்டே பாடலைத்தொடர்ந்து கேட்காதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.! அதேபோல
‘பாவிப்பயலே’ பாவிப்பயலெ’ என்று குரல் ஒலிக்கும்போது சேர்ந்தே ஒலிக்கும் அந்த
மத்தளமும் நம்மைக் கைபிடித்துக்கூட்டிக்கொண்டே போகிறது.
பாடிய விதம்,அந்த ஃபீல்
எல்லாமே நமக்கு நெருக்கமான பழகிய ஒன்று. இதெற்கென மூட் வைத்துக் கொண்டு
கேட்கவேணூமென்ற அவசியமின்றி போகிறபோக்கில் பிடித்துப்போகும் பாடல் இது. ரொம்பச்
சாதாரணப்பாடல் தான் இது. இதே பாடலில் இரண்டு வெர்ஷன்கள் எதுக்கு, பெரிய
வித்தியாசம் ஏதும் எனக்குத்தெரியவில்லை. பாடல் முடியும்போது, வணக்கம் சென்னை’யின்
ஒசக்க ஓசக்க’ போல ஒலிப்பதை கவனிக்கத்தவறவில்லை. இருப்பினும் ‘அடிபொளி’ சாங் இது !
2014-ன் மாஸ் ஹிட்..!
உன்
விழிகளில்
அந்த வயலினை லால்குடி
வயலின் போல இழையோடவிட்டிருப்பது சுகம். வயலின் இசைப்பில் வெஸ்ட்டர்ன் பாணியும்,
நமது லால்குடி போல கர்நாடக பாணியும் விரைவில் தெளிவாகப்புரிந்துவிடும் இங்கு
இசைத்திருப்பது பின்னதான பாணி. அதுவே நம்மை ஒரு வேறுபாடில்லாமல் கேட்க வைத்து விடுகிறது.
தொடர்ந்து இசைக்கும் அந்த ‘எலெக்ட்ரிக் கிட்டார்’ மேற்கத்திய ராக் பாணியில்
இழைக்கிறது, கத்தையான பாலியெஸ்ட்டர் துணியை கத்தி வைத்து கிழிக்க முற்படுவது போல.
பாடும் முறையும் அத்தனை
சுகமாக நல்ல தென்றல் அடிக்கும்போது , வியர்வைகளெல்லாம் காற்றோடு கலந்து கரைந்து
போவது போல தோன்றுவது இதயத்தின் அடியாழம் வரை சென்று தங்குவது என கவிதை வரிகள் போல்
உணரச்செய்கிறது பாடல். வெஸ்ட்டர்னைப் போல பெண்குரலும்,நம் தமிழுக்குரியதைப் போல
ஆணின் குரலுமாகச்சேர்ந்த ஒரு கலவை இது. ‘என் பார்வையில் விழுந்தநாள் முதல்’ என்ற
‘எதிர்நீச்சலில்’ வரும் சிறுதுளிப்பாடல் போன்றே இதுவும் துவங்குகிறது. இருப்பினும்
தன் உருக்கொண்டு அதை விலகிச்சென்று அற்புத மெலடியாக இசைக்கிறது.
ட்ரம்ஸில் இசைக்க இனிமை
இந்தத்தாளம்.கூடவே இசைக்கும் அந்த கிட்டார்,தொடர்ந்து பாடுகிறது. ‘Six Pence the Richer’ Kissa Me’
போல அந்தக்கிட்டாரே
பாடிக்கொண்டிருக்கிறது. சொய்வடிக்க வைக்கும் அதிக நீளமில்லை, முழுக்க முழுக்க
வெஸ்ட்டர்னும் இல்லாமல், அந்நியப்படாமல் நம்மை நெருங்கியே நிற்கிறது பாடல். முழுக்க
லூப்பில் வைத்துவிடலாம். ‘Continuing Music’ என்ற
ஒரு வகை Genre பிரபலமாக இருந்தது முன்பு. அதுபோல தொடர்ந்தும்
தொடரும் பாடல். 2:25-ல் படியிறங்கி வருவது
போல ஒலிக்கும் அந்த ட்ரம்ஸ், ராகத்திலிருந்து இறங்க அவசியமில்லாத இடத்திலும்
இறங்கி வருவது போன்ற ‘மாயத்தோற்றத்தை’ உண்டாக்குவது பாடலுக்கு அழகு.
மாஞ்சா
இது கொஞ்சம் ஜாஸ்,இல்லை
முழுக்கவே ஜாஸ். இப்ப யுவன் பிரியாணில ட்ரை பண்ண ‘பொம் பொம் பொம் பெண்ணே’ போல,
நல்லா ஸ்டெப்ஸ் வெச்சு ஆட்றதுக்காக போட்ட பாடல். ‘ஓரெண்டு ரெண்டுன்னு’ வாய்ப்பாடு
சொல்வது போல ராகம் அமைந்திருப்பது கொஞ்சம் சிரிப்பை/புன்முறுவலை வரவழைக்கிறது. இடையில்
இங்கிலீஷுல பாடலைன்னா இவனுகளுக்கு தூக்கமே வராது போல. இருந்தாலும் அதற்கேற்றவாறு
மத்தளமும் இசைத்து நம்ம ஃபீலைக்கொண்டுவருகிறது. பாடல் முழுக்க ஒரே
ராகத்துடன், ரிப்பீட்டிங் ரிதமுடன் பாடல் வருவது சுகம். பாட்டை விட்டு விலகாமல்
கேட்கத்தூண்டும் பாணி இது. ராஜாவின் பல பாடல்கள் இந்த வகையில் அமைந்தவை. ‘மாப்பிள்ளைக்கு
நல்ல யோகமடா’, ‘மாருகோ மாருகோ’ போன்ற பாடல்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
‘ஓப்பன்
த டாஸ்மாக்கு’
‘சலாம்குலாமு’,‘கொத்தவால்சாவடி
லேடி நீ கோயம்பேடு வாடி’ போன்ற காலத்தாலழியாத ‘கானா’ பாடல்களைக்கொடுத்த தேவா இங்க
வந்து பேரனோடு சேர்ந்து ‘ஓப்பன் த டாஸ்மாக்கு’ என்று அம்மா’வுக்குப் பிடித்த பாடலைப்பாடுகிறார்.
சும்மா கானாப்பாட்டே பாடிக்கிட்டு இருக்காதீங்கன்னு அவரோட வீட்டம்மா சொன்னதால
நிறுத்தினார் கொஞ்ச காலமா. இதோ இப்ப மறுபடி ஆரம்பிச்சிட்டார். ரொம்ப சங்கதிகள்லாம்
இல்லாம,தன்னோட இசைப்புலமையை நிரூபிக்கவேணும்ங்கற அழுத்தமில்லாம, புள்ளயார்
சதுர்த்தி ஊர்வலத்துல இசைத்துக்கொண்டுவரும் உள்ளூர் ‘பேஞ்சோ பார்ட்டி’ போல, எல்லோராலும்
சுலபமாகப் பாடக்கூடியவகையில் இந்த மாதிரியான கானாப்பாடல்கள் நிறைய இசைத்தவர். அவருக்காக
நம்ம தம்பி இசைத்த இந்த கானாப்பாடல். ஒரு தபேலா, ஒரு கீபோர்ட் மட்டுமே
வைத்துக்கொண்டு, ராகத்தையும், துள்ளலான பாடல் வரிகளையும் நம்பி இசைக்கப்படும்
கானாப் பாடல்களுக்கு இன்னொரு அறிமுகத்தை ‘கானா பாலா’ செய்துவைத்தார். அவரே
இந்தப்பாடலை எழுதியுமிருக்கிறார். ‘சிங்காரி சரக்கு’, ‘ஓலஓலக்குடிசையில’ போன்ற
கானாப்பாடல்களை அவை அந்த வகையைச்சேர்ந்தவை என்றே தெரியாது இசைத்தார் ராஜா.
இந்தப்பாடல் இன்னொரு கம்பேக்’கை கொடுக்குமா தேவா’விற்கு ?! :)
ராயாபுரம்
பீட்டரு
சிவகார்த்திகேயன் அப்போ
விஜய் டீவில, கலக்கப்போவது யாருல கலந்துக்கிட்டு அஞ்சு லெட்ச ரூபா ஜெயிச்சார். அது
முடிஞ்சபிறகு வந்த அதே போல நிகழ்ச்சில, ஜெயிக்கிறதுக்காக வந்திருந்தார். அப்ப
‘ரோபோ சங்கர்’ந்னு நினைக்கிறேன். ‘அஞ்சு லெட்ச ரூவா ஜெயிச்சது பத்தலன்னு இந்த ஒரு
லெட்சரூவாய்க்கும் வந்துட்டான்’னு கலாய்ச்சிக்கிட்டிருந்தார். அது மாதிரி நடிச்சு
சம்பாதிச்சது போதாதுன்னு இப்ப பாடவும் வேற வந்துட்டார். எல்லாம் இந்த ‘இமான்’
பண்ணின வேலை. வவாச’வில் ஒரு பாடலை பாடவெச்சு ஆரம்பிச்சு வெச்சார். இப்ப இங்க இந்த
‘ராயபுரம் பீட்டரு’ன்னு ‘பரவை’ முனியம்மா கூட சோடி போட்டு பாடவந்திருக்கார். ‘
டேய் சவுண்ட ஏத்தப்பா’ன்னு முனியம்மா சொல்றது போல சவுண்டு அதிகமாவே ஒலிக்குது
பாட்டு.! சும்மா ஒரு குத்துப்பாட்டு! ‘ஆ இந்தா ஆ இந்தா’ன்னு பரவை ஏற்கனவே பாடின
‘தூள்’ பாடல் போலத்தானிருக்கு இதுவும் :)