Wednesday, May 29, 2013

சில பறவைகள் எத்தனை பழகினும் அருகே வருவதில்லை




இந்த வெய்யில் காலம் வந்துவிட்டால் எங்கிருந்தோ வந்துவிடுகின்றன மைனாக்கள். கூடவே சில குயில்களும் , அவ்வப்போது இன்னெதென்று அறியாத பறவைகளும் வந்து அமர்ந்து கொள்கின்றன. என் வீட்டின் பின்னால் நந்தினி பால் கழகத்தின் ( நம்ம ஊர் ஆவின் போல இங்கே பெங்களூரில் நந்தினி ) பெரிய காலி இடம் இருக்கிறது. பயன்படுத்தாது விட்டதால் செடி கொடிகளும் கொஞ்சம் பெரிய மரங்களுமாக சின்னக் காடு போலவே தோற்றமளிக்கும். அதற்குப்பிறகு ஒரு சர்ச்சும் அதனுள்ளேயும் பிரார்த்திக்க வருபவர்களுக்கென பார்க் செய்ய பெரிய காலியிடமுமாக , கிட்டத்தட்ட ஒரு அரை கி.மீ தூரத்துக்கு மரங்களும் , அவற்றினூடே ஆங்காங்கே சில கட்டடங்களுமாகவே காட்சியளிக்கும்.வீட்டின் எந்த ஜன்னலைத் திறந்தாலும் அந்தக்காடு தெரியும் பாரீஸ் நகரில் எந்த ஜன்னலைத் திறந்தாலும் .டவர் தெரிவது போல. நந்தினி நிறுவத்தினர் அவர்களாகவே சில யூகலிப்டஸ் மரங்களைக் கொண்டுவந்து நட்டு வைத்துவிட்டுப்போயினர். அவையும் கூடவே வளர்ந்து அறையின் ஜன்னலை இரவில் திறந்து வைத்து விட்டுப்படுத்தால் காலை அந்த அறை முழுதும் யூகலிப்டஸ் நீலகிரித்தைல வாசனை அறையை நிறைத்துக்கொண்டிருக்கும்.

வந்தமரும் மைனாக்கள் இன்ன மரம் என்று பார்ப்பதில்லை. ஒரு சிறிய குருவி , இன்னும் கொப்பே விடாத கிளையில் , நான்கு இலைகள் மட்டுமே இருந்த பசுங்கிளையில் அமர்ந்து தள்ளாடிக் கொண்டிருப்பது எப்போதும் காணக்கிடைக்கும் காட்சி. கூடுகள் என்று ஏதும் கட்டியது போல எனக்கு தோணவில்லை. மைனாக்கள் கூடு கட்டுவதில்லையோ ?!. மே மாதம் முடிந்தால் , அந்த கடைசி வாரங்களிலேயே மழை ஆரம்பித்து விடுவது கடந்த இரண்டு வருடங்களாக நடக்கவில்லை. இந்த ஆண்டு என்னவோ கொஞ்சம் முன்னக்கூட்டியே மழை ஆரம்பித்துவிட்டது..


அன்றும் அப்படித்தான், எதோ ஒரு கிளையில் , மரங்களடர்ந்து உள்ளே எங்கே உட்கார்ந்திருக்கிறது என்றே அறியாது, ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது ஒரு பறவை. முற்றிலும் பரிச்சயமில்லாத ஒலி. எத்தனை முயன்றும் கிளைகளினூடே என்னால் என் கண்களைக் கொண்டு பயணிக்க இயலவில்லை. அதுவும் தொடர்ந்து ஒலியெழுப்புவதை நிறுத்தவில்லை. ஒலியெழுப்பும் போது அதன் நீண்ட வால் மட்டும் மேலேறி கீழிறங்குவதைப்பார்க்க முடிந்தது. அவ்வளவு தான் என்னால் முடிந்தது. மிக அரூபமான ஒலி. இதுவரை கேட்டறியாதது அது. பின்னர் எதோ ஒரு இடர்ப்படலில் , சிறகுகள் அடித்து மேல் நோக்கிப்பறந்த போது மட்டுமே அதைக்கண்டேன். குரலுக்கும் உடலுக்கும் சற்றும் பொருத்தமில்லை. கரிய நிறத்தில் , வால் பட்டையாக நீண்டு கொண்டு , எனக்கென்னவோ அது ரொம்பவும் நீட்சியாகவே தோன்றியது, அதை வைத்துக்கொண்டு எங்கனம் பராமரிக்கிறது அது ?.ஹ்ம்.. இதென்ன கேள்வி..நமக்கும் கை கால்கள் நீண்டுதான் கிடக்கிறது.

மரங்களூடே, மிக உயரமாக லைட்போஸ்ட்களும் காம்ப்பவுண்டு சுவரை ஒட்டியவாறு நின்று கொண்டிருக்கும். மரங்களிலமர்ந்தது போக லைட்போஸ்ட்களிலும் மேலேறி அமர்ந்து கொண்டு யாரையும் சட்டை செய்யாது சப்தமிட்டுக்கொண்டே இருக்கும் அந்த மைனாக்கள்..எதோ தமக்குள் காரசாரமாக விவாதிப்பது போலவே எனக்குத்தோன்றும். சடாரென அறைக்கதவை நான் திறந்தபோதும் அதைப்பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாது தாம் மனம்போன போக்கில் அமர்ந்து கொண்டு மூக்குகளை உரசிக்கொண்டும் , உடலை முழுதுமாக நீவி விட்டுக்கொண்டும் , 360 டிகிரி தமது தலையைத் திருப்பிக் கொண்டு முதுகை நீவி விட்டுக்கொண்டும், ஒன்றுக்கொன்று இடம் மாற்றி அமர்ந்து கொள்வதுமாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கும் அவை. சில நேரங்களில் என்  செல்பேசியில் உரையாடிக் கொண்டிருக்கும்போது கூட நண்பர்கள் கேட்பதுண்டு ‘என்ன மச்சி, எதாவது புறா கிறா வளர்க்கிறாயா’ என்று ,வீட்டின் எந்த மூலையில் நின்று பேசினாலும் அந்த மைனாக்களின் குரலுடனேயே என் குரல் ஒலிப்பதைக்கேட்கலாம்.



ஓய்வு நாட்களில் இவற்றை பார்த்துக்கொண்டிருப்பதே என் பொழுதுபோக்கு. எத்தனை தேடியும் இவற்றுக்கான கூட்டை என்னால் கண்டறிய முடியவில்லை. வீட்டின் பின்புறம் , பரணில் காற்று போய் வரவேணும் என்பதற்காக  சிறு குழாய்கள் வைத்து அவற்றை மூடாது விட்டுவிடுவது வழக்கம். ஒரு முறை வீட்டின் பின்னால் சென்று பார்த்தபோது சில மைனாக்கள் அவற்றினுள்ளே சென்று வருவதைப் பார்க்க முடிந்தது. “அப்ப இங்க கட்டுது கூடு ” :) எதோ கொலம்பஸின் மகிழ்ச்சி எனக்கு. இருப்பினும் இந்த மைனாக்கள் இன்னபிற பறவைகள் போக்குவரத்து எல்லாம் கோடை முடிந்து மழை ஆரம்பிக்கும் வரையே. மழை பெய்ய ஆரம்பித்தவுடன் இவையெல்லாம் எங்கோ சென்று விடும். ஒன்றையும் பார்க்க இயலாது. ஒரு சமயத்தில் ஒரு மைனா மட்டுமே சென்று வர ஏதுவான அளவிலான குழாய் அது. மேல் வீட்டில் இரண்டு மாதங்களாகவே ஆட்கள் யாருமில்லை, பூட்டிக்கிடக்கிறது. இவைகளுக்கு கொண்டாட்டம். எனினும் அவை சப்தம் எழுப்பினால் வீடே அதிரும். ஒரு நாள் தவறுதலாக எனது வீட்டின் பரண் குழாய்க்குள் நுழைந்த ஒரு மைனா சப்தமிடத்தொடங்கிவிட வீடே அதிர்ந்தது. அதுவும் கொஞ்ச நேரந்தான். பிறகு பட்டெனப்பறந்து மேலேறி சென்றுவிட்டது.

சரி போனால் போகிறதே என்று சின்னக் குழாய்த்துவாரத்தில் போய் கூடு கட்டிக்கொண்டு பாவம் சிரமப்படுகிறதே என்று. ஒரு கூடு நாமே கட்டிக்கொடுத்துவிடலாமென நினைத்து வீட்டில் கிடந்த பழைய டீவீ பெட்டி அட்டையை நறுக்கி வைத்து ஒரு பெரிய குழல் போலாக்கி, முற்றத்தில் ( துணிகள் காயப் போடுவதற்கும் , ஹாயாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பதற்குமான , முற்றம் அது ) மேலே கம்பிக்கிராதிகள் வைத்து மூடியிருக்கிற முற்றத்தில் ,அந்தக்கம்பிக்கிராதிகளில் பிளாஸ்ட்டிக் கயிறு கொண்டு கட்டி தொங்க விட்டேன் நான் அமைத்த கூட்டை. முதலில் சீண்டவேயில்லை அந்த மைனாக்கள். ஹ்ம் எப்படியாவது வந்து தானே ஆகவேண்டும் என்ற இறுமாப்புடன் அவ்வப்போது போய் தலையை மேல் நோக்கிப்பார்த்து விட்டு வருவது வழக்கம்.

 
மழையிலும் வெய்யிலிலுமாக நனைந்து பின் காய்ந்து ,அந்த அட்டைப்பெட்டியில் இருந்த எழுத்துகள் கொஞ்சம் கொஞ்சமாக அழியத்தொடங்கியிருந்தன. பெட்டி தொய்ய ஆரம்பித்துவிட்டது. வேறொரு அறையில் அன்று அமர்ந்திருந்த நேரம் , ஒரு மைனா அதை ஆராய வந்தது. அந்த பெட்டியின் மேலேறி நடை பழகிவிட்டு சட்டென உள்ளே நுழைந்து மறுபக்கம் வெளியே வந்துவிட்டது. ஆஹா இனி உள்ளே வந்து உட்கார்ந்து விடும் என்றே மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டேன். மேற்பார்வை பார்த்துவிட்டுச் சென்றதோடு சரி , பிறகு அதுவோ , அல்லது அதன் காதலியோ எட்டிக்கூடப் பார்க்கவில்லை. கூடு தேய்ந்து கொண்டிருந்தது. எனக்குள் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் அவற்றில் இருந்த எழுத்துகள் போல மங்கத்தொடங்கின.

வீட்டிற்கு மிக அருகிலேயே ஹெச்.ஏ.எல்’லிருந்து அவ்வப்போது போர் விமானங்களும், ஓட்டிப்பழக முயற்சி செய்யும் ஹெலிகாப்டர்களும் தாழப்பறந்து கீழே இருக்கும் அனைவரையும் அதிரவைக்கும். எனினும் அந்த சப்தங்களுக்கெல்லாம் இந்தப்பறவைகள் பழகித்தான் விட்டன. பறந்து செல்ல எத்தனிப்பதோ இல்லை, இடம் மாற்றி கிளை மாற்றி அமர்ந்து கொள்வதோ இல்லை. அது பறந்தால் எனக்கென்ன என்ற தோரணையுடன் வழக்கம்போல தங்கள் சப்தங்களை எழுப்பிக்கொண்டேதானிருக்கும்.

மழைக்குருவி என் வீட்டு ஜன்னலிலேயே வந்து அமர்ந்து கொண்டு கொஞ்சமும் பயமின்றி “ இன்னிக்கு மழை வந்தே தீரும் பார்த்துக்கோ” என்று எப்பொழுதும் கூவிச்செல்லும். அதற்கு கூடு குடும்பம் குட்டி என்று எதையும் பார்க்க இயலாது., எனக்கென சேதி சொல்ல வந்தது போல் வந்துவிட்டு சொல்லி முடிந்ததும் பறந்து சென்று விடும். பட்டும் படாமல் இருந்துகொள்ளும் அந்த மழைக்குருவி. உள்ளங்கை அகலமே இருக்கும் அது, என்ன சாப்பிடும் எவ்வளவு சாப்பிடும் ?! ஹ்ம்.,,சப்தம் மட்டும் ஊரைக்கிழிக்கும். சில சமயங்களில் கீழேயிருக்கும் விசிறி வாழையில் அமர்ந்து கொண்டு கூவாமல் எதையோ யோசித்துக் கொண்டேயிருக்கும். எப்பத்தான் கூவும் என்று என் பொறுமை இழக்கும் வரை அசையாது அமர்ந்து இருக்கும். யாருக்குத்தெரியும் அது என்ன நினைக்கிறது என்று.


கூண்டு போன்ற கம்பிக்கிராதிகளின் மேலே, ஒரு பழைய நன்கு வாயகன்ற ப்ளாஸ்ட்டிக் டப்பாவில், அவ்வப்போது தண்ணீர் ஊற்றி வைப்பது வழக்கம். பறவைகள் டப்பாவின் விளிம்பில் அமர்ந்து விரல் நகங்களால் கவ்விக்கொண்டு ஒரு சொட்டு நீரை அலகால் உறிஞ்சிக்குடிக்கும் அழகே தனி. சில நாட்களில் சாயங்காலம் வரை வைத்த தண்ணீர் அப்படியே இருக்கும். வெய்யில் அடித்தால் கொஞ்சம் குறைய வாய்ப்புண்டு. ஆனாலும் அந்தத்தண்ணீரில் அவை குளித்து ஒரு போதும் பார்த்ததில்லை நான். அவற்றுக்கு தெரிகிறது போல , இது குடிக்க மட்டுமே , குளிக்க அல்ல என்று.

இரவில் வரும் ஆந்தைகளின் ஒலி சில நேரம் என்னைத்தூங்கவிடாமல் செய்துவிடுவதுண்டு. அவற்றிற்கு அந்த உயரமான லைட்போஸ்ட்களின் மீது இப்போதெல்லாம் சோடியம் வேப்பர் விளக்குகள் பொருத்தப்பட்டுவிட்டதால், கீழிருக்கும் பல்புகளுக்கு ஏதுவாக , நன்கு அகலமாக தட்டைப்பாகமாக விளக்குகளின் ஷேடுகள் இருப்பதாலவற்றின் மீது அமர்ந்துகொள்வதே விருப்பம். அந்தப்பக்கத்து அறையில் விளக்கைப்போடாது சில இரவுகளில் அமர்ந்து அவற்றை இருட்டினூடே காண முயல்வது வழக்கம். இருப்பினும் அவற்றின் விழிகளைக்கொண்டே அவை இருக்குமிடம் எனக்குப்புலப்படும். கிளை கூட்டுவது , இரண்டு மூன்று அல்லது ஏழு முறை ஒலியெழுப்புவது என்று அவற்றிற்கும் ஒரு கணக்கு இருக்கிறது போல. எதையும் கண்டறிய முடியவில்லை. நிறைய விக்கிப்பீடியா தேடியும் அவற்றிற்கான  பொருள் புரியவில்லை. கிராமத்தில் சொல்வதுண்டு எத்தனை முறை கூகை ஒலியெழுப்புகிறதோ அவை எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு பொருள் உண்டு என்று. எனக்கென்னவோ மழை அதிகம் இல்லாத நாட்களில் வந்து அமர்ந்து கொண்டு என் சுகமான உறக்கத்தைக் கலைப்பதையன்றி வேறேதும் செய்து விடுவதில்லை அவை.

 
மழை வருவதற்கான அறிகுறிகள் தென்படும் போது, இலைகள் அசைந்து , பெரிது உயர்ந்து நிற்கும் யூகலிப்டஸ் மரங்கள் தம் கிளையை முறிந்து விடுவது போல ஆடும்போது , அதிலமர்ந்து கொண்டிருக்கும் குருவிகள் சிறகடித்துப் பறக்க முயற்சிக்கும். இன்னும் சில கெட்டியாகப்பிடித்துக்கொண்டு அமரும். விரல்களின் நகங்கள் கூர் பதிப்பதை என்னால் பார்க்க இயலும்.

மைனாக்கள், குயில்கள் மற்றும் இன்னபிற பெயர் தெரியாத பறவைகள் எல்லாம் காலம் முடிந்து தத்தமது தரிப்பிடங்களுக்கு சென்றுவிட்ட பின்னாலும் , வீட்டின் பக்க அறைகளின் சுவரை ஓட்டி , ஒரு ஜோடிப் புறாக்கள் எப்போதும் வசிப்பதுண்டு. இரண்டு கட்டிடங்களுக்கு இடையே எப்போதும் புழங்காது இருக்கும் உயரமான இடைவெளியில் பொந்துகள் அமைத்துக்கொண்டு வாழ்கின்றன.அவை என் வீட்டிற்குள் எப்போதாவது வந்து செல்லும். கிட்ட வந்து பழகுவதையோ இல்லை வீடு முழுக்க சுற்றித்திரிவதையோ பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை அவை. பக்கத்து வீட்டின் ஜன்னல் மேற்புற லெண்ட்டிலில் அமர்ந்து கொண்டு ‘க்க்கும் க்க்கும்’ என்று ஒலியெழுப்பி என் கவனத்தைக்கவர நினைக்கும். ஒரு முறை அவற்றின் நெருக்கமான தருணங்களை என் புகைப்படக்கருவியில் பதிந்துவைத்து விட்டதைப் பார்த்ததிலிருந்து என் மீது கோபம் கொண்டு விட்டன. என்றே தோணுகிறது. ஏதும் பேசாது அமர்ந்துகொண்டு இல்லை நடை பழகிக் கொண்டேயிருக்குமவை. நினைத்துப்பார்க்காத நேரத்தில் சட்டெனெப்பறந்து தம் கூட்டுக்குள் சென்றுவிடும்.


சில நேரங்களில் வீட்டினுள் அரிதாக அவற்றின் இறகுகள் உதிர்ந்து கிடப்பதைக்காண நேரும். இந்தக் கோடை முடிந்து மழைக்காலம் ஆரம்பிக்கும் வரை புறாக்களை நான் சட்டை செய்வதில்லை. அவையும் என் மனம் அறிந்து தம் இருப்பைக்காட்டிக்கொள்ள முனைவதில்லை. விருந்தாளிகள் வந்து சென்ற பின்னரே கூடஇருப்பவரைப்பற்றி எண்ணத்தொடங்கும் சாதாரண மனிதன் போலவே நானும் அவற்றுக்கு. இந்தச்செய்தி வெகுகாலமாகவே தெரியும் புறாக்களுக்கு.

கூடவே வசிக்கும் புறாக்களைப்போல, எப்போதோ வரும் நான் கூடு கட்டிக்கொடுக்க நினைத்த மைனாக்களோ,  உரிமையுடன் என் ஜன்னல் கம்பிகளில் அமர்ந்து கூவும் மழைக்குருவியோ, அவ்வப்போது வந்து செல்லும் குயில்களோ , இன்னபிற பெயர் தெரியாப்பறவைகளோ எத்தனை  பழகினும் அருகே வருவதில்லை.

ஹ்ம்...சில பறவைகள் ஏனோ எத்தனை பழகினும் என் அருகே வருவதேயில்லை.




.



Friday, May 24, 2013

ஆரஞ்சும் காப்பியும்




வரைந்துகொண்டிருந்த
ஓவியத்திலிருந்து
ஆரஞ்சுச்சுளைகள்
ஒவ்வொன்றாகப் பிளந்து
விழுந்து கொண்டிருக்கிறது
வளைந்த தோலை
வரைய முயலுமுன் காய்ந்த சுளையை
மீண்டும் உயிர்ப்புடன் வைத்திருக்க
தூரிகையை வைத்து
சற்றே ஒரு கீற்று
அதன்மேல் தீட்டிவைத்தேன்
மேசையில் காபி ஆறிவிட்டிருந்தது.


Wednesday, May 15, 2013

மாற்றமேயில்லாத “மரியான்”




கடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மிஸ்ஸிங் என்ற எண்ணம் கேட்பவர் மனதில் எழாமல் இல்லை. ஏழு பாடல்கள், வழக்கமாக ரஹ்மானின் ஸ்டைலில் இரண்டு பாடல்கள் ஒன்று சக்திஸ்ரீ , இன்னொன்று விஜய் பிரகாஷ்/சின்மயி பாடியது. மற்ற பாடல்கள் ஒன்றில் கடல் ராசா ‘அரேபியன் டச்’, இன்னொன்று ‘போர்த்துக்கீஸிய டச்’சில் அமைந்த I love Africa , கொஞ்சம் ஹிப் ஹாப் கலந்து, என அள்ளித்தெளித்த கோலமாக ஒரு முழுமையான ஆல்பமாக இல்லாது ஒவ்வொன்றும் தனித்தனியே நிற்கிறது. 23 வருடக்களைப்பு எங்கும் தெரிகிறது பாடல் முழுக்க. ரஹ்மான் என்ன செய்தாலும் ரசிப்போம் என்ற ரசிகர்களுக்கென வந்திருக்கும் ஆல்பம் இது :) கிட்டத்தட்ட ‘கடல்’ படம் போலவே கதைப்பின்னணி கொண்ட ஒரு படத்துக்கான இசை, அதனால இங்கும் அதன் பாதிப்பு வெகுவாகவே தெரிகிறது



I love Africa  - Mysterious Girl


எதோ கார்ப்போரேட் நிறுவனங்களுக்காக விளம்பரத்துக்கென செய்து கொடுத்தது போல தோற்றமளிக்கும் இந்தப்பாடல். ரஹ்மானுடன் ப்ளேஸ்ஸும் சேர்ந்து பாடியிருக்கிறார். ஹிப் ஹாப், கொஞ்சம் ஜமைக்கன் உடன் போர்த்துக்கீஸிய டச்’சுடன் வந்திருக்கும் பாடல். Peter Andre வின் Mysterious Girl ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.! ரஹ்மான் உலகெங்கும் போய் இசை அமைக்கிறார் என்பதற்கு இந்தப்பாடல் ஒரு சான்று. இப்பல்லாம் Blaze நிறைய பாட்றார் தமிழ்ல!! :)

இன்னும் கொஞ்சம் நேரம் - சண்டக்கோழி

கொஞ்சம் Folklore ஆக இருக்கட்டும் என்று , ஆய்த எழுத்தின் “சண்டைக்கோழி”யை கொஞ்சம் மாத்தி தட்டி மெருகேற்றி இங்கு “இன்னும் கொஞ்சம் நேரம்” ஆக இசைத்திருக்கிறார். திரும்பக் கேக்கணும்னு தோணவைக்கும் ஒரே பாடல் இது. அருமையான மெலடி...3:14 ல் ஆரம்பிக்கும் வயலின் மனதுக்கு இதமாக ஒலிக்கிறது. பெர்ஃபெக்ட் தமிழ்ப்பாட்டு. இப்டி சொன்னாத்தான் எல்லாருக்கும் புரியும் :) இன்னும் ரஹ்மான் அந்த அக்கார்டியன் ஒலியிலிருந்து மீளவேயில்லை போலிருக்கு, பாடல் முழுக்க நிறைந்து ஒலிக்கிறது. இருப்பினும் பழைய பாடல் என்ற தோற்றத்தை உண்டு பண்ணுவது இந்தப்பாடலுக்கு ஒரு பெரிய குறை.



கடல் ராசா அரேபியன் ட்ரீட்

“எலே கிச்சான்” American Country Song  மாதிரி இருக்குன்னு எல்லாரும் புடிச்சு இழுத்துவிட்டதுல , அந்தப்பக்கமே போகம, கொஞ்சம் பக்கத்துல இருக்கிற அரேபியாவிலருந்து பாட்டு கொண்டுவந்திருக்கார் இந்த முறை. பல்லவியில் சுண்டியிழுக்கும் பாட்டு , சரணங்களில் சலிப்பை வரவழைக்கிறது. யுவனால் எட்டமுடியாத பிட்ச்’களை எட்ட வைக்கும் முயற்சி, அதனாலேயே என்னவோ ரஹ்மானும் சேர்ந்தே பாடியிருக்கிறார் பாடலில் பல இடங்களில். ஷெனாய் கொண்டு ஆரம்பிக்கிறது பாடல். இந்தக்கொலவெறி வந்ததிலருந்து எல்லா இசையமைப்பாளர்களுக்கும் மத்தளம், நாயனம் வைத்துக்கொண்டு ஏதேனும் செய்து விட வேண்டும் என்று ஒரு ஆசை. அதையே இங்கும் பூர்த்தி செய்திருக்கிறார். அரேபியன் ட்ரீட்டில் நம்ம ஊரு நாயனமும் மத்தளமும். விண்ணைத்தாண்டி வருவாயா’வில் அந்த Marriage Songக்கென வரும் Interlude ல் இதே போல ஆனந்தராகத்தை வாசித்திருப்பார். ஹ்ம்...எல்லாம் ரிப்பீட் ஆகுதே ரஹ்மான் ஏன்...?!

யுவன் ஆரம்பிப்பது ஏதோ முருகன் பக்திப்பாடல் போல, ஐயா ஐயா என்றே தொடங்குவது (அவரே ஒரு பாட்டு போட்ருக்கார் , பில்லா-1ல்).மிகச்சுலபமாக பொருந்தும் பிட்ச் அவருக்கு..இருப்பினும் கொஞ்சம் ஸ்ட்ரெச் ஆனது பிசிறடிக்கிறது. இடையிடேயே ரஹ்மானும் கூடவே பாடி சமாளித்துவிடுகிறார். ராஜா சார்கிட்ட பாடினத விட யுவன் இதுல ரொம்ப ஃப்ரீயா பாடினா மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங் :) அந்த ஒரு இறுக்கம் எங்கயுமே பார்க்கமுடியல :) நெஜமாத்தான் மச்சி..! :)

  
நெஞ்சே எழு Truly Madly Deeply

தேசபக்திப்பாடல் மாதிரி , ரஹ்மானின் குரலும் இசையும் எந்த வித தாக்கத்தையும் , புல்லரிப்பையும் ஏற்படுத்தவேயில்லை.! இந்தப்பாடலில் தெரியும் அந்தக்களைப்பு படத்தின் அத்தனை பாடல்களிலும் பிரதிபலிக்கிறது. ராஜா சார் போல அத்தனை படங்கள் செய்வதில்லை ரஹ்மான். மிக கவனமாகத் தேர்ந்தெடுத்தே இசை அமைப்பது வழக்கம். இருப்பினும் இப்படி..இந்தப்பாடலுக்கான வரிகளும் Spoiling the Sport.  பாடல் அவர் முன்பு செய்திருந்த “ நேற்று இல்லாத மாற்றம் என்னது “ என்ற பாடலின் Orchestration ஐப்போலவே ஒலிக்கிறது. அந்தப்பாடல் எந்த இசைக்கலைஞரையும் வைத்து இசையமைத்த பாடல் இல்லை.! முழுக்க Synth-ல் செய்தே முடித்துவிட்டார் ரஹ்மான்.

Savage Garden ‘Truly Madly Deeply’, ‘Animal Song’  என்று ஏகத்துக்கு இது “போல” அமைந்த பாடல்கள் கேட்கும் சுவாரசியத்தை குறைத்தே விடுகிறது.

நேற்று அவள் Typical Rahman Style

விஜய் பிரகாஷ் (சன் சிங்கர்ல எல்லாம் உக்காந்து போரடிச்சுப்போயி) மற்றும் சின்மயி (ட்வீட் பண்ணியது போக மீதம் கிடைக்கும் நேரத்தில்) பாடியிருக்கும் பாடல் இது. இது ரஹ்மான் பாட்டு தான் என்று அடித்துச்சொல்ல வைக்கும் Typical Rahman Style Song. இவரோட ஸ்டைலக்காப்பி அடிச்சு நிறையப்பேர் இது போல பாடல்களை இசைக்க ஆரம்பித்து விட்டதால் ,எதோ ஒரு Boredom  இந்தப்பாட்டில் அப்பட்டமாகத் தெரிகிறது. 180 அப்டீன்னு ஒரு படத்தில ஒரு பாட்டு எங்க ஆரம்பிக்குது எங்க முடியுதுன்னு தெரியாம , போற வழியெல்லாம் போயி , எப்பத்திரும்பி வரும்னே தெரியாம, எப்படியோ முடிஞ்சா சரின்னு இருக்கும்.அது மாதிரி ஏகத்துக்கு Slow வாக அமைந்திருக்கும் பாடல். ஹ்ம்,.,,ரசிக்க முடியல ரஹ்மான். Sorry ! சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது’ (காதல் வைரஸ்) ஒலிக்குதா..?! :)



எங்க போன ராசா - Re Run of the Nenjukulle


‘நெஞ்சுக்குள்ளே’ என்று பாடிய ஷக்திஸ்ரீ கோபாலன் பாடியிருக்கும் பாடல் கேபா ஜெரீமியா’வின் லீட் கிட்டாரில் இந்தப்பாட்டு ஒரு Perfect Guitar Lesson.  தொடர்ந்தும்நெஞ்சுக்குள்ளே’வை ஞாபகப்படுத்துகிறது. வேற யாரையாவது பாட வெச்சிருக்கலாம். அந்தக்குரல்ல மயங்கிட்டார் போல ரஹ்மான், அவரையே பாடவெச்சு அதே பாட்டை ஞாபகப்’படுத்தி’யிருக்கிறார். தாளமேயில்லாது லீட் கிட்டாரை வைத்துக் கொண்டே செய்த மேஜிக் இது. 1:45ல் ஆரம்பிக்கும் ஹம்மிங், மற்றும் கூடவே பாடும் கிட்டார் என்று அமர்க்களமாக ஆரம்பித்து உச்சஸ்தாயியில் முடிய நினைக்கும் போது , சடாரென கீழிறங்கி முதலில் பாடிய இடத்திற்கே வந்து சேர்கிறது. இருப்பினும் எதிர்பார்த்த அந்த Pep  இல்லை பாடலில். நிறைய Eric Clapton Songs இது மாதிரி வாசிக்கிறதுக்கு ரொம்ப இதமா இருக்கும்.அந்த லிஸ்ட்ல இந்த “காணாமப்போன ராசா’வையும் சேர்த்துக்கலாம்.

சோனாப்பரீயா - IPL Theme

‘கும்மி அடீ’ன்னு ஒரு பாட்டு “சில்லுன்னு ஒரு காதல்’ல போட்ருப்பார் , சூர்ய ஜோதிகா கல்யாணத்துக்காக. அந்த Genre ல் ஒலிக்கும் இந்தப்பாடல். ஆல்பத்திலேயே கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. கூடவே இப்போது நடந்துகொண்டிருக்கும் IPL Theme Music ஐ ஞாபகப்படுத்தும் முன்னணி Trumpet  உடன் ஆரம்பித்து வெகு சாதாரணமாக இருந்துகொண்டு நம்மை கவரத்தவருகிறது




நிறைய புதிய இசையமைப்பாளர்கள் களமிறங்கி விட்ட நிலையில், இன்னும் இது போன்று தனது பழைய ஸ்டைலிலேயே கொடுத்துக் கொண்டிருந்தாரென்றால் என்ன சொல்வது ?!.. இருபத்து மூன்று வருடக் களைப்பு அத்தனை பாடல்களிலும் தெளிவாகத்தெரிகிறது. ட்ரெண்ட் செட் செய்தவரின் பாடல்கள் எப்போதுமே அதுபோலவே ஆட்சி செய்து கொண்டிருக்கும் என்று இனியும் தோணவில்லை. ‘கடல்’ பாடல்கள் எத்தனை பேர் கேட்கிறோம்..ஹ்ம்...? பார்க்கலாம் அடுத்த அடுத்த ஆல்பங்களை..! :)

  
இது எனது 250 ஆவது பதிவு