Friday, September 25, 2020
இளமை எனும் பூங்காற்று
ரேடியோவில் ஒலிக்கும் பாடலை அவர் கூடப்பாடும்போது அவரின் குரல் போலவே தோன்றுவது அத்தனை மகிழ்ச்சி... தனியாகப் பாடும்போது ஏன் இவ்வளவு மோசமா இருக்கேன்னு சிறுவயதில் நினைத்ததுண்டு. இப்ப பாடுனாலும் அதே மாதிரி தான் தோணுது. பாடகனாக வேணும்னு நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் போலப் பாடணும் என்பது தான் ஆசையாக இருக்க முடியும். அதிக Bass நிறைந்த ஆணுக்குரிய குரல். கரகரப்பில்லாத பிசிறில்லாத பனிக்குழைவு அவரின் குரல். அவருக்குப் பின்னர் எத்தனையோ பேர் வந்த போதும் அவரை அவர் இடத்தை யாராலும் அசைக்க முடியவில்லை என்பது தான் நிஜம்.
அவர் பாடலைப் பாடித்தான் ஏழாவது படிக்கும் போது பரமக்குடி பள்ளியில் பரிசு வாங்கினேன். இன்னமும் ஞாபகமிருக்கிறது அந்தப் பாடல். செய்தி வந்தபோது அத்தனை துக்கமில்லை. ஒவ்வொரு நிலைத் தகவலாகப் பார்க்கும் போது, வாட்ஸப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலை பகிரும் போதும் என்னையறியாது எனக்குள்ளிருந்து .... #இளமைஎனும்பூங்காற்று
Sunday, September 20, 2020
டான்க்விக்ஸாட் , பாலா மற்றும் மலையாளப்படம்
பாலா’வின் பேச்சு எப்பவும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஓசூர் போகும் போதெல்லாம் எப்படியும் சந்தித்து விடுவது வழக்கம். இன்றைய ஸூம் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். கூட்டம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மணீக்கூறு கழிந்தே நான் இணைந்தேன். மறந்தே விட்டது, ஒரு மலையாளப் படம் (வலிய பெருந்நாள்) ஓடிக்கொண்டிருந்தது ( இத்தனைக்கும் பாலா வாட்ஸாப்பில் ஸூம் கூட்டச் சுட்டியை பகிர்ந்திருந்தார் எனக்கு.) அதில் லயித்தவன் இதை மறந்து போய்.ஹிஹி.. செர்லாண்டிஸ் எழுதிய டான் க்விக்ஸாட் முதல் புதினம், முதல் போஸ்ட் மார்டனிக், முதல் கட்டுடைப்பு என அனைத்தும் புதிய விஷயங்கள்.(எனக்கு ) நமது அத்தனை சினிமாக்களிலும் சிக்கல் நேரத்தில் மிகச்சரியாகத் தோன்றும் தலைவனை அறிமுகப் படுத்தியது செர்லாண்டிஸ் தானாம். இத்தனை நாள் எம்ஜியார் தான் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். பின்னரும் தொடர்ந்து பேசினார்.
பேச்சு கிட்டத்தட்ட முடிந்துவிடும் நிலையில் இணைந்ததால் அதிகம் கேட்க இயலவில்லை. கூட்டக்கோப்புச் சேமிப்பின் இணைப்புக்காக காத்திருக்க வேண்டியது தான். எனினும் பின்னர் நிகழ்ந்த கேள்வி பதில் அருமை. அதிலும் ராஜேஸ்வரி என்ற அம்மையார் ஈழத்தமிழில் பல வரலாற்று உண்மைகளை சொல்லிக் கொண்டிருந்தார். ( அந்தக் காலங்களில் பெண்கள் கொஞ்சம் அறிவுள்ளவாராக இருப்பின் சூனியக்காரி என்று தீ வைத்துக் கொளுத்தி விடுவர் எனவே அக்காலத்திய புதினங்கள் பெண்களைப் பற்றி அதிகம் பேசாது இருக்கும்) ,குணா கந்தசாமி, கனலி விக்னேஷ், வேல் கண்ணன் போன்ற பெருந்தகைகள் எல்லாம் கூடியிருக்கும் இடத்தில் இந்தச்சின்னப்பயல் என்ன பெரிதாகக் கேட்டுவிட முடியும் என்று மிண்டாதிருந்து விட்டேன் அடுத்த கூட்டம் ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களைக் குறித்து என ஒருங்கிணைப்பாளர் இளங்கோ சொன்னார். அந்தக்கூட்டத்துக்காவது நேரத்தில் இணைவேன். அன்றும் எதேனும் மலயாளப்படம் பார்க்க வில்லை எனில். ...ஹிஹி #டான்க்விக்ஸாட்
Friday, September 18, 2020
All I Need is Roses
பாடல் முழுக்க ஒரே தாளம் தான் , திரும்பத்திரும்ப வரும். எனினும் காதுகளைக் குளிர்விக்கும். இது ஒரு மீளுருவாக்க பாடல். செயிண்ட் ஜான் தாமே எழுதி இசையமைத்த பாடல் 2016ல் வெளிவந்த பாடலை தாளக் கட்டை இப்போதைய ராப்/ஹிப் ஹாப் பாணியில் மித வேகத்திலிருந்து அதிவேகத்திற்கு கூட்டியதில் ,இதுவரை டிக்டாக்கில் நான்கரை பில்லியன் முறை இசைக்கப்பட்டிருக்கிறது பகிரப் பட்டிருக்கிறது.
ஒரிஜினல் பாடல் சர்ச்சுக்குள் புகுந்து களேபரம் செய்வது போல அமைந்திருக்கும். ஒரே குறை என்னவெனில் பாடலின் வரிகள் எதையும் கேட்க முடியவில்லை என்பதே. எந்த ஹிப் ஹாப்பில் வரிகள் கேட்கவியலும். சும்மா விடுங்கடா. இமான்பெக் என்பவர் இவருக்கு வயது 19 தானாம். இவர் தான் இந்தப்பாடலை மீளுருவாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்.
I already know, already know, nigga roses
All I need is roses
Turn up baby, turn up, when I turn it on
You know how I get too lit when I turn it on
Can't handle my behavior when I turn it on
Too fast, never ask, if the life don't last
காலைல ஒரு தடவை விஎச்1ல் இந்த மீளுருவாக்கப் பாடலைக் கேட்டு விட்டேன். நாள் பூரா மண்டைக்குள் சுற்றிக்கொண்டே இருந்தது. Heavily Addictive and Poisonous இந்த மாதிரி பாடல்கள் எதேனும் மண்டைக்குள் சுற்றிவந்தால் அதை நீக்க வேணுமெனில் சூயிங் கம்மை சுவைத்துக் கொண்டே இருந்தால் போய்விடுமாம். ஹ்ம்... சுத்தட்டும் பரவால்லை
இதை Dance Categoryல் வைத்திருக்கின் றனர். எனக்கென்னவோ ஹிப்ஹாப்பின் விஷம் இறங்கி இருப்பதைப்போலவே தோன்றுகிறது. பெங்களூர் பப்களில் வார இறுதி இரவுகளில் இசைக்கப் பொருத்தமாக இருக்கும்.
ஒரிஜினல் ரோஸஸ் பாடல் இன்னமும் மெதுவாக இசைக்கும். அந்த பழைய ரோஸஸ் பாடலின் வீடியோவும் யூட்யூபில் கிடைக்கிறது. இந்த மீளுருவாக்கத்தைக் கேட்டுவிட்டு அதைக்கேட்க யாருக்கும் ஒப்பாது.
எனக்கொரு ஆசை. ’ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது’ என்ற ராசைய்யாவின் பாடலை மீளுருவாக்கம் செய்து அதன் வேகத்தில் முக்கால் பங்கு குறைத்து வெளியிட்டால் இனனமும் அருமையாக இருக்கும். ராசைய்யாவே சொல்லியிருக்கிறார் சோகத்தும் மகிழ்ச்சிக்குமென தனித்தனி ராகங்கள் இல்லை. எதையும் எந்தச் சூழலுக்கும் வாசிக்கலாமென. மீளுருவாக்கம் என்பதை எந்த இசையமைப்பாளரும் ஒத்துக் கொள்வதில்லை.
ரஹ்மானும் வேண்டாமெனச் சொல்லியும் எஸ்ஜே சூர்யா கேட்டுக் கொண்டதற்காக ’தொட்டால் பூ மலரும்’ பாடலை கொஞ்சம் வெஸ்ட்டர்ன் டைப்பில் மீளுருவாக்கி கொடுத்தார். ஒண்ணுமிலலை 6-8ல வாசிச்சா ரஹ்மான் பாடல் வரும். அவ்வளவு தான்.எனினும் ஒரிஜினலா இல்லை மீளுருவாக்கமா என்றால் கேட்பவர் காதுகள் தான் சொல்லவேணும் #AllIneedisroses
Tuesday, September 15, 2020
- - 15 செப்டம்பர், 2013, முற்பகல் 11:38 நினைவுகள்.
- - 15 செப்டம்பர், 2013, முற்பகல் 11:38 நினைவுகள்.
பெங்களூர் கோரமங்கலா 80 ஃபீட் ரோட்லருந்து சில்க் போர்டு வர்றதுக்கு எந்த ஆட்டோவாவது ஒத்துக் கொண்டதுன்னா அவர ஒபாமா ஆக்கீறலாம். ஆனாலும் எனக்கு ஒரு ஒபாமா கெடச்சார் அன்னிக்கு. ஏகத்துக்கு ட்ராஃபிக். வண்டி ஒரு இம்மி கூட நகரல. கைல வெச்சிருந்த ஃபைலை அப்படி ஆட்டோ சீட்டில் வைத்துவிட்டு , அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். இப்பல்லாம் எலெக்ட்ரானிக் மீட்டர் , வெய்ட்டிங்க் டைம் ‘டிக்’கிக் கொண்டிருந்தது. ‘ஏகப்பட்ட ட்ராஃபிக் ஆயிப்போச்சு தம்பி, பெங்களூர்ல இருக்கிற அமைப்புக்கு 15 லெட்சம் வண்டி தான் ஓட முடியும் (?) ஆனா இப்ப 45 லெட்சம் வண்டிக ஓடுது. எங்கருந்து எடம் கெடைக்கும் ?
தம்பி எப்டி போலாம்ங்க்றீங்க’ என்றார். ‘சேவா சதன் வழியா போயி அந்த கிருபாநிதி காலேஜ் கட்ல ரைட் எடுங்கன்னேன்.’ ‘இல்ல வர்றவங்க இந்த ரூட்ல போங்க அப்பதான் மீட்டர் கம்மியாவும்னு சொல்லுவாங்க அதான் கேட்டேன்னார்’. அப்பல்லாம் என்ன இத்தினி ஆட்டோ வண்டில்லாம் கெடயாது, பஸ்களோட ப்ளீமூத், மாரீஸ் மைனர், எப்பவாச்சும் ரோல்ஸ் ராய்ஸ், அப்பறம் நம்ம அம்பாஸிடர் இவ்வளவுதான் ஓடும். அப்பால பிரிமியர் பத்மினி வந்துச்சு, எடமும் விசாலமா இருந்துச்சு, ட்ராஃபிக்கும் கெடயாது. இப்ப இந்த ஐடி’காரங்க வந்ததுலருந்து சொம்மா பேங்க் லோன் குடுத்து குடுத்து வண்டிக பெருகிப்போச்சு.
64’ல
HMTல வேலக்கி சேர்ந்தேன் தம்பி அப்ப எனக்கு 69 ரூபா மாசச்
சம்பளம்,
‘HMT-ன்னா வாட்ச் தயார் பண்ணுவீங்களோ’ இல்ல நான் டூல் செக்ஷன்ல இருந்தேன்’
என்றார். அப்ப தான் எனக்கு கல்யாணம் ஆச்சு. வாங்கிற சம்பளத்த பூரா எங்கப்பா
கைல குடுத்துருவேன். ஒரு சினிமா பார்க் போகணுன்னா கூட அவர் கிட்ட தான்
எதிர்பாக்கணும்.சனி ஞாயிறு தயங்கித் தயங்கி நிக்கிறத பாத்துட்டு அங்க
அண்ணன்தான் அஞ்சுபத்து கொடுத்து ‘பொண்டாட்டிய சினிமா கினிமா கூட்டீட்டுப்
போய்ட்டு வாடா’ன்னு அனுப்பி வெப்பார். எம்ஜியார் படம் ரெண்டு பேரும்
பால்க்கனி டிக்கெட் வாங்கிட்டு போய் பாத்துட்டு , அப்டியே ஓட்டல்ல
சாப்ட்டுட்டு வீடு வந்த சேர்ந்தா மிச்சம் சில்லறை கைல இருக்கும். இப்ப ?!
‘நேத்து ஐநூறு ரூபா குடுத்து வீட்டுக் காய்கறி , மளிகை எல்லாம்
வாங்கிக்கன்னு சொல்லீட்டு சவாரி போயிட்டு சாயங்காலம் திரும்பி வந்தா
இன்னும் கொஞ்சம் காசு குடூன்னு கேக்றா என் பொண்டாட்டி. என்னம்மான்னேன்,
என்னா செய்றது எல்லாம் செலவாயிட்டுதூங்கறா என்று கூறிச்சிரித்தார்.’
இத்தனைக்கும் நான் அவர எதுவுமே கேட்கல. அவராகவே சொல்லிக் கிட்டேயிருந்தார். ‘அப்புறம் 25 வருஷ சர்வீஸுக்கப்புறம் வீஆரெஸ் வாங்கிட்டு இந்த ஆட்டோவ வாங்கி ஓட்டிட்டிருக்கேன்.’ அவன் இப்பவே , இப்பந்தான் படிச்சிக்கிட்டிருக்கான் அதுக்குள்ள பல்ஸர் வேணூங்கறான்’ ‘யாரு ? ’ ‘என் மகன் தம்பி ‘
எனக்கு ஒரே பையன் தம்பி , இங்க தான் KR-புரத்துல ஒரு எஞ்சீனியரிங் காலேஜ்ல சேத்து விட்டுருக்கேன். காலை டிஃபன் வீட்டில சாப்ட்டுட்டு மத்தியானத்துக்கு வீட்டுலருந்தே கட்டீட்டும் போயிடுவான் , அப்டியும் தெனத்துக்கு அம்பது ரூபா கைல குடுத்துவிடுவா அவன் அம்மா. இப்ப அதுவும் பத்தல இன்னும் அம்பது குடூங்கறான் தம்பி. ‘ஒண்ணரை காலன் பெட்ரோல், ரெண்டே கால் ரூபா அப்ப, இப்பத்தி கணக்குக்கு மூணேமுக்கா லிட்டர் வரும்,இப்ப பாரூங்க தம்பி 75-ரூபா விக்கிது பெட்ரோல் ஒரு லிட்டருக்கு.’
அவர் பேச்சில் முழுக்க கன்னட வாடை தான் அடித்தது. ஒரு திருப்பத்தில் நிறுத்தி ஒதுங்குப் புறமாகப்போய் சிறுநீர் கழித்துவிட்டு வந்தார். பிறகு உட்கார உள்ளே நுழைந்தவர் கை இரண்டையும் சீட்டின் மேல் வைத்துக் கொண்டு, தலையை மட்டும் என் பக்கம் திருப்பி ‘எங்க தம்பி இப்ப இருக்கிற புள்ளைங் கல்லாம் கடுமையா ஓழச்சி வேல செஞ்சி சம்பாதிக்கிறதுன்னா அவ்வளவு யோசிக்கிதுங்க, ஆனா காசு மட்டும் நெறயக் கொட்டணும்னு எதிர்பாக்குதுங்க’ என்றார்.
Sunday, September 13, 2020
Anežka (Agnes) Kašpárková
Anežka (Agnes) Kašpárková ங்கற ஒரு 90 வயது மூதாட்டி, ஓவியங்களால் தமது வீட்டினை அலங்கரித்து வைத்திருக்கிறார். செக் குடியரசில் உள்ள Louka என்ற கிராமத்தில் வசிக்கிறார். நம்ம ஊர் கிழவிகளுக்கு பொறணி பேசத்தான் நேரமிருக்கும். பழமையான மொரோவியன் ஓவியங்களை தம் கைகளால் எழுதி வீட்டின் சுவர்களை அலங்கரித்து வைத்து இருக்கிறார். கிணறு மற்றும் வாளியைக்கூட விடவில்லை. கை நடுங்காதா இவர் வயதில்?.. அத்தனை பூக்கள் , கலர் சென்ஸ் பாருங்க..அடுத்த ஷங்கர் படத்துக்கு ஆர்ட் டைரக்டரா வருவாங்க போல பாட்டியம்மா #மூதாட்டிஓவியம்
Sunday, September 6, 2020
பிரபஞ்சத்தில் ஒரு சிறு இலை
இப்போ இரண்டு பேரும் இல்லை. சென்ற ஞாயிறன்று அப்பா மறைந்து விட்டார். கடந்த வாரம் முழுதும் பரமக்குடியில் தான் இருந்தேன். ட்ரூ காந்தியன். ரிட்டயர்டு ரயில்வே ஸ்டெஷன் மாஸ்டர். நல்ல ஆங்கிலப் புலமை. தெளிவாக உரையாடுவார். இசை ரசிகர். அம்மா 2013லும் அப்பா 2019லும் ஒருவர் பின் ஒருவராக சென்றடைந்து விட்டனர் இந்தச் சின்னப் பயலை விட்டு விட்டு.எல்லாவற்றையும் நேரத்துக்கு செய்தாக வேண்டும் என்பதில் பிடிமானம் உள்ளவர். ’எப்போதும் எந்நாளும் பொய் சொல்லல் கூடாது’ என வாசற்படியில் நிறுத்தி என் வாயால் சொல்ல வைப்பார். கண்டிப்பானவர், தலை முடி வெட்டுவதி லிருந்து உடை அணிவது வரை எல்லாம் கட்டுப்பாடுகள் தாம்.
அம்மாவும் அப்பாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் நாற்பதுகளில். உங்க அப்பா என்னை மதுரையில சினிமாக்கெல்லாம் கூட்டிட்டு போயிருக்காஹ தெரியமாடா என்று பெருமை பேசுவார். அம்மா உடல் நிலை சரியில்லாது படுத்த படுக்கையாக வீழ்ந்து அழகு குலைந்து போயிருக்கும் போது, சூரியா போதும்டி நீ போயிரு என்றார். அதே நிலைக்கு அப்பாவும் வந்து விட்டார். ஒரு வாரம் முழுதும் இனிப்புகளை மட்டுமே கேட்டு வாங்கி உண்டார். எந்த நோயும் இல்லை. பெங்களூர் வந்திருந்த போது உள்ளூர் மருத்துவர் ஆச்சரியப் பட்டனர். அவர் வயதை அறிந்து. இப்போதும் தொடர்ந்தால் அவருக்கு வயது தொண்ணூற்று நான்கு. நினைவு பிறழ்ந்து விட்டது, யாரையும் அடையாளம் காண இயலவில்லை கடைசியில்.
அப்பாவுக்கு பரமக்குடி வக்கீல் சீனிவாசன் (கமலஹாசனின் தந்தை) நெருங்கிய நண்பர். சாருஹாசன் ‘டேய் கேசவா’ என அப்பாவைக் கட்டிப்பிடித்து நட்புறவு கொண்டாடுவார். காலகாலமாக நட்பு தொடர்ந்தது. அவர்களுக் கிடையில். ஊரில் அவரைத்தெரியாதவர் என யாருமில்லை. பரம்பரையாக வீட்டிற்கு துணி வெளுக்கும் ‘குருவம்மா’ கண்ணீர் உகுத்தார் அன்று. அத்தனை நெகிழ்வாயிருந்தது எனக்கு.
இண்டியன் எக்ஸ்பிரஸ் தான் வாசிப்பார். இந்து பிடிக்காது. ஆங்கில அறிவு வளர வேணும் என வாசிக்கச்சொல்வார். இயன்ற வரை தம் மக்கள் எங்களெல்லாவரையும் ஓரளவுக்கு படிக்க வைத்தார் தீவிர மதப்பற்று உள்ளவர். திருச்சி வானொலியில் இந்துப்பாடல்கள் முடிந்து கிறித்துவ இஸ்லாமியப் பாடல்கள் ஆரம்பித்தால் சடாரென நிறுத்தி விடுவார்.
வேலைகளில் அதிகம் நிலைப்பதில்லை நான். அது குறித்து அதிக விசனப்படுவார். விரதம், சைவம் எல்லாம் கோட்பாட்டோடு வாழ்ந்தவர். அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாத போது குருதி கொடுக்க வேண்டியிருந்தது , என்னைக்கொடுக்கலாகாது என தடுத்தார். இவன் எங்கெங்கெல்லாமோ போய் என்னென்னெத்தையோ சாப்ட்ருக்கான் என்று டாக்டரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். கடைசியில் நான் தான் கொடுக்கும் படி ஆயிற்று.
பிரபஞ்சத்தில் என்ன பெரிய மாறுதலை ஏற்படுத்தி விடும் உதிர்ந்து விழும் ஒரு
சிறு இலை எனினும் அது என் வீட்டு மரத்தில் இருந்து வீழும் போது பிரபஞ்சம்
நின்று தான் விடுகிறது. #அப்பா
https://www.facebook.com/hashtag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE?source=feed_text&epa=HASHTAG
Wednesday, September 2, 2020
யுவன்
அவரை மீண்டும் மீண்டும் அலைக்கழித்துக் கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன. இனியும் கிலேசங்களுக்கு இடமில்லை என்றானதும் மனது அமைதி கொண்டு விட்டது. எனினும் அத்தனை அலைக்கழிப்புகளும், இடையூறுகளுமே அவரை தொடர்ந்தும் இயங்க வைத்துக்கொண்டிருந்தது என்பதே உண்மை. கலையின் உச்சம் எட்ட நிலையில்லாத் தன்மை அவசியம் என்பதை அவர் பாடல்களில் கண்டிருக்கிறேன். எல்லாம் கிடைத்து விட்ட பிறகு வேறென்ன அமைதி தான். இப்போது அவர் இசையில் இனிமை குன்றி ரசிக்கவியலாமல் போனது என்னவோ உண்மைதான். அவரின் பழைய பாடல்களையே இன்னமும் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை எனக்கும் அமைதி கிட்டினால் அவரின் இப்போதைய பாடல்களையும் ரசிக்க இயலுமோ என்னவோ ?! #யுவன்
Tuesday, September 1, 2020
அப்பா
வீட்டுல நடக்கிற அத்தனை கல்யாணத்துக்கும் நான் தான் அனஃபிஷியல் ஃபோட்டோக்ராஃபர். சின்னதா ஒரு நிக்கான் 5.1 மெ.பி. காமிராவை வைத்துக் கொண்டு படமெடுத்துக்கொண்டே அலைவேன். அதுல ஒண்ணும் பெரிசா செய்துவிட இயலாது. இருப்பினும் படங்களின் தரம் நன்றாக இருக்கும். படங்களை எடுத்து முடித்த பின்னர் நிக்கானை டீவீயில் அட்டாச் செய்து ஒவ்வொன்றாக ஸ்லைட் ஷோ ஓட விடுவேன். அப்பாவும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பின்னர் முன்னோட்டம் முடிந்து அதை சின்ன சாஃப்ட்வேரின் துணையுடன் குறும் படமாக்கி காட்சிகளுக்குப் பொருத்தமான இசை சேர்த்து, தமிழில் எழுத்துகள் கூட்டி ஒலி சேர்த்து கிட்டத்தட்ட ஒரு படம் போலவே ஆக்கி (எல்லா வீடியோக்ராபரும் செய்யக்கூடியது தான்) சிடீயில் பதிந்து பரமக்குடி அனுப்பி வைப்பேன் இல்லையேல் போகும் போது டிவிடி ப்ளெயரில் போட்டு காண்பிப்பேன்.
தொடர்ந்து நடக்கும் அத்தனை விழாக்களையும் இது போல் படமாக்கி போட்டு காண்பிப்பது வழக்கம். அப்பா அதையெல்லாம் ரசித்துப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு பின்னர் ஒரு நாள் சாப்பிட உட்காரும் போது ‘டேய் சின்னப் பயலே நீ சினிமால’ சேர்ந்துடா என்றார். எனக்கு ரொம்ப ஆச்சரியம் , இப்டி சொல்லுவார்கள் என ஒருநாளும் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. எல்லா பெற்றோரும் தமது குழந்தைகளின் ’பேஸிக் இன்ஸ்டிங்க்ட்’ தெரிந்து தான் வைத்திருக்கின்றனர். நாமதான் கடைசி வரை அவர்களைப் புரிந்து கொள்வதேயில்லை. இன்று அப்பாவின் முதலாவது நினைவு தினம் #அப்பா
.