Tuesday, November 19, 2013

நான் ஆதாம்






கவர்ந்திழுக்கும்
உடைகள் அவன் அணிந்திருக்கவில்லை
அவ்வளவு ஏன்
அவன் சொல்லிக்கொள்ளும்படியான
உடையே ஒருபோதும்
அணிந்ததுகூட இல்லை
தலைவாருதலும் முகச்சவரமும்
ஒருபோதும் செய்ததில்லை
வாசனைத்திரவியங்களின்
வாசனை கூட அவன் அறிந்திருக்கவில்லை
அடுத்த வேளை பற்றிய
கவலையின்றிப் பசியாற
ஒரு சுமாரான வேலையும் கூட
அவனிடம் இருந்ததில்லை
அவளைக்கவிதை பாடி மயக்க
அவனிடம் தமிழ் இல்லை
குறுஞ்செய்திகளும்
அஞ்சல்களும் வாழ்த்து அட்டைகளும்
அவளுக்கு அனுப்ப
வாய்த்ததில்லை
இருப்பினும் அந்த ஏவாளிற்கு
ஆதாமிடம் தூய காதல் இருந்தது
நான் ஆதாம்
 
.


Tuesday, November 12, 2013

துளிப்பாக்கள்



காரணப்பெயர்

எழுதிவைத்த
கவிதைக்குக்கீழ்
போட்டுக்கொண்ட
பெயர் தான்
முதலில் எழுதியது
பின்னர் மேலே மேலே
எழுதியது தான்
இப்போது நீங்கள்
வாசிப்பது.

ஒளிரும்பெயர்

உன் பெயரைத்தேடியெடுத்து
எப்படி ஒளிரவைக்கிறாய்
என் செல்பேசியில் ?!

அதுமட்டுமே

உனைக்காட்டிலும்
எனக்கு இரண்டுவயது
கூடுதல்
அதுமட்டுமே


உடல்மொழி

ஏற்றுக்கொள்ளாமலும்
வெறுக்காமலும் இருக்க நினைக்கிறாய்
இருப்பினும் நட்பில் தொடர விருப்பமெனில்
எனக்கும் ஒரு வாய்ப்பிருக்கிறது
என்ற உன் உடல்மொழியால் ஏன்
என்னைத்தொடர்ந்தும் நிந்திக்கிறாய் ?

வாசல்

வாய்ப்புகள்
கதவில்லாத வாசல் வந்து
நிற்கும்போதும் கூட
வரவேற்கத்தெரியாமல்
நின்றிருக்கிறேன்.