விவேக்கின் உறுதிவிழாவுக்கு போகும்போது பின்பக்க கதவை மூடினேனான்னு
சரியாக் கவனிக்கலை. மணி மூன்றரை இருக்கும் திரும்பி வந்து பாத்தா தர்பூசணிய
தின்றுவிட்டு யாரோ உப்பரிகைல போட்டு வெச்சிருந்தாங்க.. நேத்து சாப்பிட்ட
வெள்ளரிக்காயின் தோல்களை குப்பை தொட்டியில் போட்டு வைத்திருந்தேன். அது
முழுக்க கீழே சிதறிக்கிடந்தது. யாராவது பிள்ளைங்க மேல் வீட்டுல இருந்து
போட்ருப்பாங்க , கம்பிகள் வழியா உப்பரிகைல விழுந்துருக்கும்னு நினைச்சு மேல
பாத்தா...ஆஹா.. அனுமார் கூட்டம். மந்திகள் ஒரு குடும்பமா வசதியா கம்பிகள்ல உக்காந்து ஒண்ணொண்ணா சாப்ட்டுட்டு கீழ போட்டுக்கிட்டு இருக்காங்க..
காடு காணாமலாகிறது. பக்கத்துல இருக்கிற நந்தினி பால் கழகத்தின் மரங்களைக்காடு என எண்ணி இங்க கிளம்பி வந்துட்டாங்க போலருக்கு, பாவம்.
வீட்டில் கொடுக்க பழமோ காய்களோ எதுவும் இல்லை. சரின்னு கொஞ்சம்
பேரீச்சம்பழங்களை தட்டில் வைத்து ஏந்தினேன். சண்டை போடாமல் ஒண்ணொண்ணா
எடுத்துக்கிட்டாங்க. அட அதில் குட்டிகளும் அடக்கம். கொஞ்ச நேரம்
வெய்யிலில் காய்ந்துவிட்டு பிறகு எல்லோரும் சொல்லி வைத்தாற் போல கிளம்பி
சென்றுவிட்டனர். #மந்தியும்காடுகளும்
பரமக்குடியில்
தொடக்கப்பள்ளி எங்களுக்கு ஓம் சண்முகா தியேட்டர் அருகிலிருக்கும்
ஆர்.சி.யாதவா பள்ளியாகவே இருந்தது.சர்ச் பள்ளிக்கூடம் என்றழைக்கப்பட்டது.
(இன்னும் இருக்கிறது :)
)நானும் என் அக்கா சாந்தியும் (என்னை விட மூன்றே வயது மூத்தவள்)
ஒன்றாகத் தான் போவோம் வருவோம். என்னைக் கூட்டிக்கொண்டு போய்விட்டு திரும்ப
வீடு வந்து சேர்வதற்குள் அவளுக்கு போதும் போதும் என்றாகிவிடும். சில
நேரங்களில் அண்ணன் என்னை சைக்கிள் கேரியரில் கட்டி வைத்து கொண்டு போய்
விட்டுவிட்டு வரும். (இல்லையென்றால் சைக்கிளிலிருந்து குதித்து வீடு வந்து
விடுவேன்) படிப்பென்றால் அவ்வளவு கசப்பு.
அப்போது நான் மூன்றாவது
படித்துக்கொண்டு இருந்தேன். வழக்கமாக அரசுப் புத்தகங்களைத் தான் வாங்க
வேணும் என்பார்கள் எல்லாப் பாடத்திற்கும், ஒரு முறை தவறுதலாக வேறு தனியார்
வெளியிட்ட புத்தகத்தை வாங்கி வந்துவிட்டார் அப்பா. பாடங்கள் நடத்தத்
துவங்கி நாட்களாகி விட்டன. ஆசிரியர் மழைமேகம் (அவர் பெயர் :))
என்னை எழுந்து வாசிக்கச்சொல்லும் போதெல்லாம் விழிப்பேன். ஒரு நாள்
பிடித்து விட்டார். உடனே என் அக்காவை அழைத்து வந்தேன். எனக்காக சண்டை
போட்டாள் அவள். உந்தம்பி எதையோ வாங்கீட்டான்ங் கறதுக்காக அந்தப்பாடத்தை
யெல்லாம் நடத்த முடியுமா? என பேசினார். எனக்காக ரொம்பவும் வாதாடுவாள்
சாந்தி.!
ஐந்தாவது படிக்கும்போது திங்கட்கிழமை ப்ரேயரில் எதேனும்
தலைப்பில் ஒருவர் பேசவேணும். அதற்காக எனது ஆங்கில ஆசிரியர் ஜேம்ஸ் (எல்லாப்
பாடத்துக்கும் ஒரே வாத்தியார் தான்..ஹிஹி ) என்னைத் தயார்ப்படுத்தி
விட்டார். சும்மா ரெண்டு பக்கத்துக்கு ( என்ன கண்டெண்ட் என்பது மறந்து
விட்டது). அதை உருட்டு போடமுடியாமல் தவித்த போது சாந்தி தான் , டேய் பத்தி
பத்தியா வாசிச்சி மனப்பாடம் பண்ணுடா என்றாள். அப்படியே செய்தவுடன் தான்
பயம் போனது. திங்கட்கிழமை போய் ப்ரேயரில் நின்றாகி விட்டது. ப்ரேயருக்காக
முன் உள்ள திடலில் தண்ணீர் தெளித்து நீளமாக நடந்து வருவதற்காக கோடு போல
கோலம் போடுவர் பெரிய க்ளாஸ் பிள்ளைகள், அன்று சாந்தி தான் அந்த கோலத்தை
போட்டாள். நான் போய் நிற்கிறேன் அங்க. என்னடா பயமில்லாம பேசுவியா என்றாள்.
எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. ஹ்ம்..அதெல்லாம் பேசிரூவேன்
என்றேன். பேச ஆரம்பித்து நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. போட்ட
உருட்டில் பாதிக்கும் மேல் மறந்தே போய் விட்டது. அதுவும் மைக்கில்
பேசவேணும். அந்தப்பேப்பரை எனக்குத்தெரியாமல் சாந்தி கையில் வைத்துக்கொண்டு
தூண் மறைவில் நின்று வரிவரியாக சொல்லிக் கொண்டேயிருக்க எனக்கு வீராவேசம்
வந்து அத்தனை வரிகளையும் ஒப்பித்து தள்ளிவிட்டேன். பின்னர் ஆசிரியர்
பாராட்டினார். ‘நல்லாப் பேசிட்டடா என்று’ .க்கும். அவ எடுத்துக்
குடுக்கலேன்னா எல்லாம் கிழிஞ்சுருக்கும்.
சனிக்கிழமையானால்
பள்ளிக்கூடம் மூன்று மணிக்கே முடிந்து விடும். வீட்டுக்கு வரும் வழி
எப்போதும் ஒன்றாகத்தானிருக்கும். ஆனாலும் சனி மட்டும் பாதையை மாற்றி ஐந்து
முக்குரோடு வரை சென்று பின்னர் அங்கிருந்து இப்போது இருக்கும் போலீஸ்
ஸ்டேஷன் வழியாக வருவது வழக்கம். அது இன்னும் 10 நிமிடங்கள் கூட ஆகும்.
ரெண்டு பேரும் பைகளை ஆட்டிக்கொண்டே வருவோம்.அதுல ஒரு ஜாலி!
பரமக்குடி நெல்லை மெஸ் எதிரே ஒரு குச்சி ஐஸ் ஃபேக்டரி ஒன்று இருந்தது.
அதில் பத்துக்காசுக்கு ரெண்டு குச்சி ஐஸ் கொடுப்பார்கள். அதோடு ஒரு உப்பு
ஐஸும் ஃப்ரீ. உப்பு ஐஸ் என்றால் கலரிடாத, இனிப்பிடாத ஐஸ். அதை ரோட்டில்
கீழே போட்டு காலால் எத்தி எத்தி நடந்து வருவோம். அவ்வப்போது கிடைக்கும்
அந்த ஜில்லிப்பு. :) அம்சமாயிருக்கும். அந்த பரமக்குடி சூட்டுக்கு அத்தனை இதமாக இருக்கும்.
இரவில் படுக்க முன்னர் நான்கு புறமும் சிலுவை போட்டு விட்டுத்தான்
தூங்குவாள் சாந்தி. வேறு இடத்தில் படுத்திருந்தாலும் , அம்மா தூக்கி
பின்னர் வழக்கமான இடத்தில் படுக்க வைக்கும் போது மீண்டும் படுக்கையின்
நாலாபுறமும் சிலுவை போட்டுவிட்டுத்தான் தூங்குவாள். கிறீஸ்துவே
ரட்சீப்பீராக. (ஒரு கொசுறு செய்தி. இவாளாடே அத்திம்பேர் தான் நல்ல
ஸ்ரீதேவி படமெல்லாம் போடுவார்.அதை இங்கே ஒரு முறை பகிர்ந்திருந்தேன்.)
எல்லாப்பசங்களுக்கும் மொதல்ல அக்கா இல்ல தங்கச்சிங்கதான் மொத கேர்ள்ஃப்ரெண்டு அப்புறம் தான் மத்தவங்கள்லாம். :) இன்னிக்கு அக்கா சாந்திக்கு பிறந்தநாள் அதான்...ஹிஹி ) #சாந்திபர்த்டே