Sunday, March 31, 2013

கவ்வும் இசை ( சூது கவ்வும் )




அட்டக்கத்தியிலேயே தன்னைக்கொஞ்சம் திரும்பிப்பார்க்க வைத்தவர் சந்தோஷ் நாராயணன். பின்னர் பிஸ்ஸா’வில் மோகத்திரை’யில் நம்மை மயக்கிவிட்டு இங்கு முழுக்க ஒரு கலவையாக ஜூகல்பந்தி வைத்திருக்கிறார். மெலிதான ராப், கொஞ்சம் ட்விஸ்ட்டும், கொஞ்சம் Yodelingம் கலந்து, ஒரு பாடல் முழுக்க பழைய பாடலை ஞாபகப்படுத்துவதாகவும், இன்னொன்று ஜேம்ஸ்பாண்டின் பின்னணி இசைக்கலவையோடு விருந்து படைத்திருக்கிறார், யுவன் “ஆரண்ய காண்டத்தில்” பரீட்சித்துப்பார்த்து வெற்றி பெற்றது போல இங்கும் வென்றிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஒவ்வொரு பாடலும் பல காலங்களைக்கடந்து நம்மை வேறு ஒரு உலகிற்குக் கூட்டிச்செல்கிறது. போலித்தனமான சமாளிப்புகள் ஏதுமின்றி அந்த அந்தக்காலங்களில் உபயோகித்த இசைக்கருவிகளை வைத்து செவிக்குணவு கொடுத்திருக்கிறார்.

 

“நான் இமை ஆகிறேன்”

நான் கிட்டார் கற்றுக்கொள்ளும்போது ஆர்ச்சி ஹட்டன் மாஷே (மாஸ்ட்டர்) இந்த Que Sera Sera வை இரண்டு மாதப்பயிற்சிக்குப்பிறகு , கொஞ்சம் பிழையின்றி Chords எடுக்க முடியும் போது சொல்லிக் கொடுப்பார். ரொம்ப ஈஸியாக எடுக்கலாம் இந்தப்பாட்டை, எப்போதும் கீழிருக்கும் Minor E Stringல எடுக்கச்சொல்லுவார். அதுக்கே ரொம்ப முக்கி முக்கி எடுப்பேன். இதே பாடலை அப்போது 1957ல் ஆரவல்லியில் இசையமைப்பாளர் வேதா “சின்னப்பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஒரு நாளிலே ( பட்டுக்கோட்டையார் வரிகளில் ) என்று எடுத்தாட்கொண்டிருப்பார் :). அதே பாடல் 2013ல் சந்தோஷ் நாரயணானால் மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது இந்த “நான் இமை ஆகிறேன்” பாடலில். அருமையான வயலின் இழைத்து இழைத்து ஆரம்பிக்கிறது. அவங்க Western Style ஆன Verse and Chorus-ல Chorus Missing. Fantastic கட்டமைப்பு. தொடர்ந்தும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். தாளமேயில்லாது வெறும் வயலினும் பின்னால் கூடவே வந்து கட்டிப்போடுகிறது கேட்பவரை. ஒரு Christmas Carol கேட்ட Feeling வருவது இயற்கை. பல இழைகளாக வெவ்வேறு தளங்களில் ஒலிக்கும் வயலின் இழைகள் மனதை உறிஞ்சிக்கொண்டு செல்கிறது. 0.48-ல் ஆரம்பிக்கும் Solo Violin அந்த சோக இழையை நமக்குள் இசைத்துச்செல்கிறது. ஒரு Pure Symphonyக்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்த பாடல். என்னவொரு சோகமென்றால் பாடல் நீளமே 1:44 நிமிடங்கள் மட்டுமே…இருப்பினும் தொடர்ந்து Loop ல் வைத்துக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டுமென்று தோணுகிறது. பாடிய “திவ்யா ரமணி” யும் உணர்ந்து பாடியிருக்கிறார்.

Que sera Sera – வில் மகள் அன்னையை நோக்கி சந்தேகத்துடன் தனது வாழ்க்கை குறித்த கேள்வி கேட்பது போல பாடல் அமைந்திருக்கும். பட்டுக்கோட்டையார் அதை காதலன் காதலி தமக்குள் அளவளாவுவது போல அமைத்திருப்பார். இங்கு கொஞ்சம் சோகம் குழைய காதலி தன் காதலனை நோக்கிப்பாடுவது போல அமைந்திருக்கிறது. எல்லாச்சூழல்களுக்கும் பிரமாதமாகப் பொருந்திப்போகும் இசையும் அந்த ராகமும். “முன்பே வா என் அன்பே வா” பாடல் சோகராகம் அது. இயக்குநர் கேட்டுக்கொண்டதற்காக அதைக்காதலுக்காக , மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் தருணத்தில் இருக்கும் காதலிக்காக போட்டிருப்பார் ரஹ்மான். இப்படி ராகங்கள் எல்லாம் கேட்பவர் மனதைப்பொருத்தே தான் இருக்கிறது..!

இந்த ஆல்பத்தில் Best Music Scored இந்தப்பாடல்தான் :)




எல்லாம் கடந்து போகுமடா

எம்ஜியார் மன்னாதி மன்னனில் “அச்சம் என்பது மடமையடா “ என்று குதிரையில் சென்றுகொண்டே பாடிக்கொண்டு செல்வது போல அமைந்திருக்கிறது. தனியாக ஒரு தபேலாவும் , கொஞ்சம் வயலினுமாக நம்மை அந்த 50-60 காலங்களுக்கு வெகு எளிதாகக் கூட்டிச்செல்கிறது. எந்த Synth Music -ம் இல்லாமல். குதிரைக் குளம்பொலிச்சத்தம் ரொம்பவும் Opt ஆக அமைந்திருக்கிறது பாடலில். கோவை ஜலீல்-ன் குரல் Period Film Music  ன் Feel கொண்டு வருவதில் பெரு வெற்றி பெற்றிருக்கிறது. 1:16 ல் ஒலிக்கும் தபேலா தண்ணீர் சலசலத்து ஓடும் நினைவைக்கொண்டு வந்து ,நமக்கு. குதிரை நீர் தேங்கிக்கிடப்பதைக்கடந்து செல்வது போல் ஒலிக்கிறது. ஜலீல் ‘எல்லாம் கடந்து போகும்’ என்று எளிதாகக் கூறுவது போல அல்லாமல் இந்தப்பாடல் நம்மைக்கடந்து செல்ல மறுக்கிறது.

காசு பணம் துட்டு Money Money

Mild Rap ஆக ஒலிக்கிறது இந்த காசு பணம் துட்டு Money Money. நன்கு வெறும் கையால் தாளம் போட்டுக் கொண்டே ரசிக்கலாம் இந்தப்பாடலை. மிகவும் எளிமையாக Bathroom Singers-க்காகவே இசைத்திருக்கிறார் சந்தோஷ். “சிஞ்ச்சுனுக்கான் சின்னக்கிளி சிரிக்கும் பச்சக்கிளி” மோஸ்தரில் அமைந்துள்ள பாடல் இது :)
பின்னால் ஒலிக்கும் போலீஸ் சைரன் அவ்வப்போது வந்து போய் அல்ர்ட் செய்துவிட்டுப்போகிறது :) 



Come Na Come


“வயலும் வாழ்வும்” நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடல் ஒரு Perfect Rap :). அதிரவைக்கும் இசையில்லாது மைல்டாக அடுக்கடுக்காக ராப் பாடலுக்கேயுரித்தான அளவில் வார்த்தைகளை இடையிடையே அடுக்கி வைத்து ரஹ்மானின் பழைய “பேட்டை ராப்” பை ஞாபகப்படுத்துகிறது. 3:17 ல் ஆரம்பிக்கும் “டன்டன்டான் டடடான்” இசையோடு சேர்ந்தொலிக்கும்போது நம்மையும் பாடவைக்கிறது. தொடர்ந்து கேட்கும்போது பல இடங்களில் போரடிப்பது இந்தப்பாடலுக்கு தோல்வி L. வயலின் தொடர்ந்து பாடிக்கொண்டேயிருக்கிறது பாடல் முழுதும். என்னைக்கேட்டால் ராப் இசை என்பது ஒரு Failure வடிவம் , ஏன் தொடர்ந்தும் கலைஞர்கள் இதை இசைத்துக்கொண்டேயிருக்கின்றனர் என்பது புரியவேயில்லை. எப்போதும் கட்டமைப்பை மாற்றவியல்லாத அத்தனை ராப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும்படியான சலிப்பூட்டும் இசை வடிவம் இது. Seasonal ஆக வந்து போகும் போது கூட பழைய பாடல்களை உடனே ஞாபகப்படுத்துவதே இந்த மாதிரியான Genre ல் அமைந்த பாடல்களின் சோகம்..! “கடல்”ல் ரஹ்மான் வாசித்த “மகுடி மகுடி” , ஆதிபகவனில் யுவன் தொழுத “பகவான்” எல்லாம் இந்த வகையில் வந்து , யார் இசைத்தாலும் அவரவர்தம் கற்பனை கலக்கவியலாது ஒரே மாதிரியாகத்தெரிந்து தொலைப்பதே இவ்வகைப்பாடல்களின் தோல்வி.!


மாமா டவுஸர் கழண்டுச்சு

Typical Andrea வின் Yodeling உடன் அவருக்கேயுரித்தான , தெனாவட்டுடன் அமைந்திருக்கிறது பாடல். அந்தக் காலத்தில் Twist என்ற பிரபலமாக இருந்த ஆடலுக்கு பொருந்தக்கூடிய இசை,மறைந்த நடிகர் நாகேஷ் ஆடி ஆடி நம்மைக்களைத்துப்போக வைத்த பாடல்/ஆடல் இது :).  மன்மதன் அம்பு’வில் அமைந்த ஒரு பாடல் Whos the Hero? போன்ற Genreல் ஒலிக்கும் இந்தப்பாடலுக்கு கூடவே இசைக்கும் Trumpet  நல்ல உறுதுணை.! மேலும் “கந்தசாமி”யின் “அலெக்ரா” வகையில் இதுவும் ஒரு Smash Hit for Andrea..! :)

Sudden Delight

இந்த Theme Music, James Bond-ன் வழக்கமான நம் காதுகளுக்கு புளித்துப்போன பின்னணி இசையின் பாங்கில் அமைத்திருப்பது ரசிக்கும்படியில்லை. புதிதாக ஏதாவது செய்திருக்கலாம்.

இருப்பினும் தம்மிடம் இருக்கும் Stuff  இன்னும் குறையாமல் மூன்றாவது படத்திலும் (அட்டக்கத்தி, பிஸ்ஸா, இப்போது சூது கவ்வும்) மற்ற சமகாலத்திய இசையமைப்பாளர்களிடமிருந்து  வேறுபட்டு
ரசிக்கும் படியான இசையைத் தம்மாலும் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துத்தானிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். சபாஷ் சந்தோஷ்.!



 

  .

Wednesday, March 27, 2013

பிடித்துத்தானிருக்கிறது



என் கருத்துகளுக்கு
மதிப்பளிப்பவர்களுடன் மட்டுமே
என்னால் தொடர்ந்தும்
தொடர்பிலிருக்க முடிகிறது

மாற்றுக்கருத்துகளுக்கு இடமளிக்க
வேண்டுமென்று நினைத்தாலும்
என் கருத்துகளுடன் உடன்படுபவர்களையே
அரவணைத்துச் செல்ல முடிகிறது

என் குறைகளை
முகத்தில் அடித்தாற்போல்
என்னிடம் சொல்லாதவர்களையே
அருகில் வைத்துக்கொள்ள முடிகிறது

வெளிப்படையாகச் சொல்லாமல்
அதை நாசூக்காகச் சொல்லுபவர்களை
இனங்கண்டுகொள்வதில்
என் ஆர்வம் அடங்கியிருக்கிறது

எனக்குக் கீழ்ப்படிதலுள்ளவர்களின்
சூழல்களில் மட்டுமே என்னால்
தொடர்ந்தும் தயக்கமின்றி
இயங்க முடிகிறது.

என்னால் கண்டிப்பாக
செய்ய இயலாதவற்றைக்
கண்டுகொள்ளாமல் இருப்பவர்களையே
எனக்கு மிகவும் பிடித்துப்போகிறது

என் திறமையை இனங்கண்டு
புன்முறுவலைக் கண்களில் காண்பித்து
சிறிதே தலையை மட்டும் அசைத்து
அளவுக்கு மீறிப்பாராட்டாதவர்களின்
அருகாமையை என் மனம் விரும்புகிறது

இத்தனை இருப்பினும்
நான் எதிர்பார்க்கும் தகுதிக்குச்
சற்றுக் கீழிருப்பதே
என்னிடம் நிலைக்கிறது

இது போன்ற கவிதைகளை
முதல் வரியிலிருந்து
வாசிக்க ஆரம்பித்து
பத்திகள் செல்லச்செல்ல
கொஞ்சம் கொஞ்சமாக
உங்களை என்னிடம்
கண்டுகொண்டவர்களுக்கென
தொடர்ந்தும் எழுதுவது
எனக்குப் பிடித்துத்தானிருக்கிறது


.

Monday, March 18, 2013

பரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை

 

பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிடுங்கச்சென்ற தமிழன், வளைகுடா நாடுகளில் கட்டிட வேலைக்கும் ஒட்டகம் மேய்க்கவும் சென்ற ஆடுஜீவிதத் தமிழன் என எல்லோருக்குள்ளும் ஒரு ஒட்டுப்பொறுக்கி உண்டு. இப்போதும் கூட அமெரிக்காக்காரனுக்கு ராத்திரி இரண்டு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து தொண்டூழியம் பார்க்கிறவனும் ஒட்டுப்பொறுக்கி தான். எப்போதும் ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் அவனது ஆருடத்தில் நாடு கடத்தப்படும் யோகம் உண்டு என்பதே ஒரு சோகம். முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைசாமி அதைப் பெருமையாகச்(?)சொல்லுவார். “முன்னால கடூழியம் பார்ப்பதற்காகப் போனான், இப்ப தம் அறிவை விற்கத்தானே போறான்” என்று! :)

paradesi_adharva_635

இதுபோல கொத்தடிமைகள் கதைகளாகவும், நாடகங்களாகவும், திரையிலும் பார்த்துச் சலித்தவைதானே. என்ன ஒரு ஆதர்ச நாயகன் வந்து அவர்களுக்குள்ளாகவே இருந்து கொண்டு கடைசியில் போரிட்டு அனைவரையும் விடுவிப்பான். இங்கு கொஞ்சம் மாறுதலுக்கென அப்படி ஏதும் நிகழாமல் பார்த்துக் கொள்கிறார் பாலா.! வேறொன்றும் புதிதில்லை. இதை அனுராக் காஷ்யப் ஹிந்தி/ஆங்கில துணை எழுத்துகளுடன் வடநாட்டிலும் வெளியிட்டிருக்கிறார் என்பது ஏன் என்று புரியத்தானில்லை.

அந்தக் கிராமத்தில் நடக்கும் கல்யாணத்திற்கென அதர்வா அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்கிறார். கூடவே அலையும் வேதிகா அவரைச் சீண்டிக் கொண்டிருப்பதிலேயே பொழுது கழிகிறது. இலையில் அமர்ந்தும் ஏதும் வைக்கவிடாமல் அவரை அழ வைக்கும் முயற்சிகள் வெகுவாக மனதைக்கவர்கிறது. பெரியப்பா (விக்ரமாதித்யன் நம்பி) எங்கே எங்கே என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார் அதர்வா, அவரை அலைக்கழித்து அலைக்கழித்து கடைசி வரை அவர் இறந்ததை சொல்லவே இல்லை அவருக்கு. அதர்வாவும் மறந்தே விடுகிறார். இத்தனை தேடியவர் அடுத்த நாள் அவர் மனைவியைக் காணும்போது ஒரு வார்த்தை கூடவா கேட்காமல் இருப்பார் ?! ஹ்ம்... நாமும் அதை மறந்துவிடுவதே நல்லது. .! :)

அந்தப் பஞ்சாயத்துக்காட்சிகளில் வேதிகா மரத்தின் பின் நின்றுகொண்டு சைகை மொழியில் அதர்வாவுடன் பேசும் காட்சி , எனக்கு ஏனோ அந்த ‘தெய்வத்திருமகளில்’ கடைசி நேர நீதிமன்றக்காட்சிகளை நினைவு படுத்திக் கொண்டேயிருந்தது. இருப்பினும் அந்தத் ‘திருமகளில்’ இருந்த காட்சியின் இறுக்கம் கிஞ்சித்தும் இங்கு இல்லை. மனதில் ஒட்டவே இல்லை.

பாத்திரத்தேர்வுகளில் கவிஞர் விக்ரமாதித்யன் நம்பி (நான் கடவுளிலும் அந்த மனம் பிறழ்ந்த சிறு குழந்தையின் தாத்தாவாக நடித்திருந்தார்) பிறகு அந்த தன்ஷிகா, என்னமா உணர்ச்சிகளை ஒரு நொடியில் கைதேர்ந்த நடிகை போல காண்பிக்கிறார். அந்தக்கூனல் கிழவியையும் கூடச் சொல்லலாம்.

கல்யாணத்தில் அந்தச் சிங்கி அடிக்கும் பையனை காணக்கண்கோடி வேணும். வேலையை முழு மனதுடன் செய்யும் அந்தப்பாங்கு , ஒவ்வொருத்தரிடமும் அருகில் நின்று வேலை வாங்கி இருக்கிறார் பாலா. அந்தக் கங்காணியை விடவும் கம்பௌண்டர் கதாபாத்திரமும் அவரின் உடல் மொழியும் அருமை.

இடைவேளை வரை வேதிகாவுக்கும் அதர்வாவுக்குமான சீண்டல்களும் , ஏசல்களுமாகவே கழிகிறது. அந்த உடைந்த கட்டிடத்துக்குள் அவர்கள் உறவு கொள்ளும்வரை. குழந்தை பிறந்து அவன் கொஞ்சம் பெரியவனான பின் அதே கட்டிடத்தில் சென்று அமர்ந்து கொண்டிருப்பதும் , அவனின் குழந்தை அங்கே அவளால் முடியாத அழுகையை அழுது கொண்டிருப்பதும் கவிதை. எனினும் வேதிகா சிறிதும் ஒட்டவில்லை படத்தில். பழைய படங்களில் அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாது ஏழையாய் இருப்பினும் ரோஸ்பவுடர் கட்டாயம் பூசியிருப்பார்கள் அதுபோல இங்கு இவருக்கும் கரும்பூச்சு பூசப்பட்டு அவரை மெனக்கெட்டு நமக்கு கருப்பியாகக் காட்டுவது நன்றாகவே தெரிகிறது. உடல்மொழி வாய்க்கவேயில்லை, சொல்லிக் கொடுத்தது போல நடித்துவிட்டு , சரியாகத்தான் செய்தோமா என்று சந்தேகத்தோடே இருப்பது அவரின் கண்களிலே தெரிவது ரொம்பவே வேதனை. லைலா’ இல்லாது போனது நன்றாகவே தெரிகிறது.

ஆங்கில மொழி வாசனை கூட அறியாத இன்றைய தமிழ்க்காதலர்கள் கூட எப்போதும் “I love You” சொல்லிப் பார்த்தே பழகிய நமக்கு நாஞ்சிலாரின் “நினைக்கிறேன்” என்ற சொல்லே புதிதாகவும் போதுமானதாகவும் இருப்பது நிறைவு. “வெள்ளைக்காரி சூட்டுக்கு ஒன்னால ஈடுகுடுக்க முடியாதுடே”, “இவனுக்கு தாயத்து கைல கட்றதா இல்லை புடுக்குல கட்றதான்னு தெரியலயே” “ஒன் வண்டியக் கொண்டு போய் ஊர்க்காரன் குண்டிக்குள்ள விட்றா” என்ற வசனங்கள் அந்த கிராமத்து மொழி இன்னும் சிதையாது நம்கூடவே தங்கிவிடாதா என்று நம்மை ஏங்க வைக்கிறது.

அதர்வாவின் கால் நரம்புகள் வெட்டப்பட்ட பின்னர் கதையும் நொண்டியடிக்கிறது. நகர மறுக்கும் காட்சிகள் தொடர்ந்து கைக்கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அடிப்படையில் இது போன்ற காட்சிகளும் இதைப்போன்ற வலுவான சோகப் பின்னணித் திரைப்படங்களும் சுளுவில் நம்மைக் கரைத்து விடுவது போல இங்கு எங்குமே அமையவில்லை என்பதே ஒரு பெரும் சோகம். எதோ பாலா காண்பிக்கிறார் இன்னும் படம் முடியும் வரை இருந்து பார்த்துவிட்டுப்போவோம் என்றே தோணியது.

கல்யாணத்துக்கு வாசிக்கப்படும் பாட்டு எங்கே என்று இருக்கிறது, இதிலொன்றும் புதிதாக ஏதும் செய்ய வேண்டியதில்லை. ஹ்ம், என்ன சொல்வது... நாம் பார்த்துப் பழகிய தேவர் மகனின் “மாசறு பொன்னே வருக” வையே வாசித்து வைத்திருக்கலாம். பாலா படங்களில் எப்போதும் யார் இசையமைத்தாலும் பாடல்கள் எந்த முக்கியத்துவமும் பெறுவதில்லை. மேலும் அதற்கு முக்கியத்துவம் தருவது போல காட்சிகளும் உண்டாக்கப்படுவதில்லை. போகிற போக்கில் வந்து செல்பவையாகவே இருக்கும். இங்கும் அதுவே. பிரகாஷ் குமார் தமக்குக் கொடுத்த அரிய வாய்ப்பை வெகு சுலபமாகத் தவற விட்டிருக்கிறார்.

இப்படி ஒரு வலுவான கதைக்கு உரமூட்ட அழுத்தமான பின்னணி இசை மிகவும் அவசியம். சலீல் சௌத்ரி, நுஸ்ரத் ஃபதே அலிகான், நௌஷாத், போன்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய அரிய வாய்ப்பு இது. சேது’வை பின்னணி இசையின்றி சத்தத்தை முழுவதுமாகக் குறைத்து விட்டு கொஞ்ச நேரம் பாருங்கள். அப்போது தெரியும் இசை உங்களை என்னவெல்லாம் செய்கிறது என்று. விக்ரமை அந்த பைத்தியக்கார மடத்தில் வந்து அவள் பார்த்துவிட்டுச் செல்லும் போது அதுவரை கவனிக்காதிருந்துவிட்டு, பின்னர் அவள் செல்லும் போது அவளின் முதுகை நோக்கி கூவுவார் விக்ரம், மனதை அறுக்கும் பச்சைப் பின்னணியில், அந்த இசை உங்களை ஏதும் செய்ய இயலாத கையறு நிலைக்கு தாமாகவே கை பிடித்துக்கூட்டிச் செல்லும் , ஹ்ம். . . Bandit Queen ல், அந்த பூலான் தேவி காடையர்களால் மூன்று நாள் இடைவிடாது தொடர்ந்த வன்புணர்வுக்குப்பின், ஆடையின்றி நடக்க விடுவார்கள், அந்தப் பின்னணியில் இசைப்பது மிருகங்களின் மனதைக்கூடக் கரைத்து அவற்றின் கண்களில் நீரை அவை அறியாது வெளிக்கொண்டு வந்து விடும்.

இங்கும் அது போன்றே ஒரு காட்சி வருகிறது. அந்த கருத்தக்கன்னி’யை வெள்ளைக்காரனிடம் அனுப்பிவிட்டு அவள் கணவன் காலை மடித்துக் குந்தியிருக்க , பின்னர் அங்கு வந்து சேரும் அதர்வா’ விளக்கை பிடித்துக்கொண்டு செல்லும் காட்சி. இப்படி நிறையக் காட்சிகள் தீனி போட்டிருப்பினும் ஏதும் செய்வதறியாது எப்படியேனும் இதை நகர்த்தி தப்பித்து விடவேண்டும் என்று இசைத்தது போலவே இருக்கிறது. ’தீம் ம்யூஸிக்’ என்ற கன்செப்ட் இல்லாவிட்டாலும், அப்போக்கலிப்டோ’வின் இசையை தரவிறக்கிப் பயன்படுத்திருக்க வேண்டாம். படத்தில் எல்லாம் அசலாக இருக்கையில் இசை மட்டும் நகல்.

அத்தனை தூரம் போகாவிட்டாலும் “நீங்க நல்லவரா கெட்டவரா” என்று நம் கூடவே பயணித்துக் கொண்டிருக்கும் அந்த மணி காலகாலத்துக்கு நம் காதுகளிலும் மனத்திலும் ஒலித்துக்கொண்டே நம்மை அறுத்துக்கொண்டே இருக்கும். ஹ்ம் அத்தனையையும் கொட்டிக் கவிழ்த்து விட்டாயடா பாவி! நந்தா’வில் யுவனுடன் முதலில் பயணிப்பதில் இருந்த சிரமத்தைக் காட்டிலும் இங்கு இமாயலச் சிரமப்பட்டிருப்பார் பாலா என்றே நினைக்கிறேன். இதனை இவன் செய்வான் என்றாய்ந்து அவன் கண் விடலே சாலச்சிறந்தது.

அதர்வா தன் வாழ்க்கைக்காக ஓடுகிறான், அந்த மலைச்சரிவிலிருந்து விழுந்து எழுந்து, பிறகு அவர்களிடம் பிடிபட்டு கால் நரம்பை அறுக்கும் வரை கிட்டத்தட்ட நான்கு நிமிடங்களுக்கும் கூடுதலாக காட்சி நகர்கிறது. எந்தவொரு தாக்கத்தையும் பார்ப்பவர் மனதில் ஏற்படுத்தாது போவதற்கு முழுக்காரணம் கற்பனையற்ற, மலினமான இசை மட்டுமே. பாலா நீங்க ஒண்ணு பண்ணுங்க, பின்னணி இசையை முழுதுமாக ஊறி எடுத்துவிட்டு அந்தப் பண்ணைப்புரத்து ராஜாவை வைத்து மீண்டும் ஒலி சேருங்கள். புண்ணியமாப்போகும் உங்களுக்கு. காலகாலத்துக்கும் நம் மனதை விட்டு அகலாது நிற்கும் அது.

paradesi_adharva_636

அந்த ஆங்கிலேயர் கூட்டம் தமக்குள் பேசிக்கொண்டு ஒரு மருத்துவரைக் கொண்டு வர முடிவெடுக்கும் அத்தனை காட்சிகளும் முழுக்க எதோ பள்ளிக்கூட நாடகம் போலவே அமைந்திருக்கிறது. மெச்சூரிட்டியே தெரியவில்லை. பாலா தான் அந்தக் காட்சிகளை இயக்கினாரா. . ? ஆமா அந்த மருத்துவர் 'பரிசுத்தம்' நோய்க்கு மருந்து கொடுக்க வந்தாரா இல்லை மதத்தைப் பரப்ப வந்தாரா? அதோடு ஒரு பாட்டும் ஆட்டமும் வேறு, படத்தின் சீரியஸ்னெஸ்ஸை மழுங்கடிப்பது போலவே அதைத் தொடர்ந்த காட்சிகள். சாரி பாலா. .! இந்த மருத்துவர் சம்பந்தமான காட்சிகளில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்திருந்தால் எல்லாம் குணமாகிவிடும் என்று அவர்களைக் கேலி செய்வது போல Sarcastic Comedyயாக காட்சிகளை நகர்த்தியிருப்பது அழகில்லை பாலா; இந்துத்துவ கொடூரம். 

இங்கு ஒளிப்பதிவு கிராமத்து முன்பகுதி Sepia Tone லும் பிற்பகுதி பச்சையிலைக் காடுகளுமாக, அந்தப்பச்சை சேது'வில் அந்த பைத்தியக்கார மடத்தைக்காண்பித்தது போன்ற மனதை உள்ளிருந்து அறுக்கும் பச்சையாக இன்றி வசந்தம் வந்தது போல இருக்கிறது. உண்மையில் அந்தக்கிராமம் பச்சைப்பசேலெனவும், இந்தப்பனிக்காடு ஒளிமங்கிய அவர்கள் வாழ்வை Sepia Tone-ல் பிரதிபலிப்பதாகவும் காட்டியிருந்தால் , படத்தின் அடிப்படை எண்ணம் ஈடேறியிருக்கும். ஒரு வேளை Contrast ஆக இருக்கவேண்டுமென்று கூட ஒளிப்பதிவாளர் செழியனும் பாலாவும் நினைத்திருக்கலாம். ஆனால் அதுதான் ஏனோ ஒட்டவேயில்லை ஒரு காட்சியும். ஒவ்வொரு முறை திரும்ப ஊருக்குச் செல்ல எத்தனிக்கும் அத்தனை பேரையும், கொம்பூதி வரவழைக்கும் காட்சிகள் திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான Camera Angles-ல் சலிப்பை வரவழைக்கிறது.

‘நியாயம்மாரே, என் பாட்டுக்கு தமுக்கு அடிச்சிக்கிட்டு கஞ்சியோ கூழோ குடிச்சுக்கிட்டு கிடந்தேனே’ என்று கடைசிக் காட்சிகளில் குன்று மேல் அமர்ந்து அதர்வா அரற்றும் காட்சி, அந்த நேரத்தில் வேதிகா குழந்தையுடன் வந்து சேர்வது ஒரு கவிதை போல விரிகிறது. அந்தக்காட்சி முழுதும் பின்னணியில் இயல்பான ஒலிகளை மட்டுமே கொடுத்து விட்டிருந்தால் இன்னமும் அழுத்தம் ஏற்பட்டிருக்கும் பார்ப்பவர் மனதில். ஹ்ம். . என்ன சொல்வது ? பார்ப்பவன் மனதில் ஓலம் ஒலிக்க விடவில்லை, மாறாக பயாஸ்கோப் பார்ப்பவனின் மனநிலையில் அமர்ந்திருக்கின்றனர். நமக்கு கொடுப்பினை அவ்வளவுதான்.

நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப்புழுதியில் எறிந்தது போல அத்தனையும் பாழாகிறது. இன்னும் எழுதிக்கொண்டே போகலாம் பாலா என்ற கலைஞனைப் பற்றி. சரியான தொழில் நுட்பத்தேர்வுகள் இல்லாமையே ஏகத்துக்கு முட்டுக்கட்டைகள் போல விரவிக் கிடக்கிறது படம் முழுக்க. ஒரு முழுமையான படைப்பாக மாற விடாமல் அத்தனை பேரும் சேர்ந்து தடுத்தேவிட்டனர். மேலும் அந்த எரியும் பனிக்காட்டிற்குச் செல்லும் மிக நீண்ட பயணத்தை வழக்கமான வணிகத் திரைப்படங்களைப்போல பின்னணியில் ஒரு பாட்டால் நகர்த்திக் கொண்டு சென்றிருக்க வேண்டாம்.

எதோ ஒரு ஆவணப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு படம் முழுக்க இருந்து கொண்டேயிருப்பது ஒரு பெரிய குறை. கடைசி நேரத் திருப்பங்களோ இல்லை. எப்போதும் பாலாவின் படங்களில் காணக் கிடைக்கும் வெகு மலினமான வழக்கமான முடிவுகளோ இல்லாதிருப்பதே படத்துக்கு ஒரு பெரிய ப்ளஸ் பாய்ண்ட். இப்படியான ஒரு ஆவணம் திரையில் பதிவு செய்யப் படவில்லை என்ற ஆதங்கம் இனி தமிழுக்கு இல்லை என்று சமாதானமடைந்து கொள்ளலாம் என்பதைத் தவிர வேறொன்றும் இப்படம் பெரிதாகச் சாதித்து விடவில்லை.


.