’கொயி நிதியா கியா’ என்ற அஸ்ஸாமியப்பாடல். மூன்று மொழிகளில் எழுதப்பட்ட பாடல். ஆஹா. ஷ்ரேயாகோஷலும், பாப்போன் என்பவரும் பாடியிருக்கும் இந்தப்பாடல் , அவர் தமது இன்ஸ்ட்டாவில் இதனில் ஒரு சின்ன துணுக்கைப் பகிர்ந்திருந்தார். ’முன்பே வா என் அன்பேவா’ வைப்போல ஒரு சில்லென ஒரு காதல் பாடல். இது பிஹூ என்ற அவர்களின் புத்தாண்டுக்காலம், அதில் பிறக்கும் ஒரு காதல் அதனையொட்டிய ஒரு பாடல். எனக்கென்னவோ பாப்போனின் (ஆண் பாடகர்) குரல் ’இசையில் தொடங்குதம்மா’ அஜய் சக்ரவர்த்தியின் குரலை ஞாபகப்படுத்துகிறது.
புல்லாங்குழலில் பூபாளம் இசைக்க சைக்கிளில் பயணிக்கும் ஒரு ஜோடி. இயற்கை வளங்களுக்கு கேட்கவே வேண்டாம். இது வரை ஒரு முறை போலும் அந்த செவன் ஸிஸ்டர்களுக்கு பயணித்ததே இல்லை. பெங்களூர் அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டிகள் பெரும்பாலும் அஸ்ஸாமீஸ்களாகவே இருப்பர். அவங்க எப்பவும் நேப்பாளிகள் என்றே நினைத்துக் கொண்டிருப்பது வழக்கம். கேட்டால் இல்ல டிப்ரூகர் அஸ்ஸாம் என்றுரைப்பர். அவர்களின் பாடல்களை மொபைலில் பொதிந்து வைத்துக்கொண்டு இசைக்கும் போது அவ்வப்போது காதில் விழும். அதிக வித்தியாசம் காணவியலாத பாடல்கள் அவர்களது. நேப்பாளிகளின் பாடல்கள் போலவே இசைக்கும்.
இம்மியும் மாறாத பாரம்பரிய இசைக்கருவிகள் கொண்டு, டோலக், தபேலா, மற்றும் புல்லாங்குழலும் சந்தூருமாக இழைகிறது. சிந்தஸைஸுக்கு இடமில்லை. இந்தியில் பாடல் எழுதும் போது பஞ்சாபி சொற்களும் அளவற்ற உருதுச்சொற்களும் கலந்தே எழுதப்படும். அது போல இங்கும் மூன்று வட்டார வழக்கில்/ மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. என்ன நமக்கு தான் ஒரு சொல்லும் புரியாது, இருப்பினும் யூட்யூபில் ஆங்கில துணை எழுத்துகள் இருக்கிறது… என்றாலும் இசைக்கு மொழியில்லை…!
02:53ல் வரும் அந்த நடனம் அவர்களின் பாரம்பரிய பிஹூ நடனம். சாதாரணமாகவே அஸ்ஸாமி என்றாலே இந்த ஸ்டெப்ஸை மட்டுமே அடிக்கடி காண்பித்து மனப்பாடமே ஆகிவிட்டது. 04:40ல் ஆரம்பிக்கும் அந்த புல்லாங்குழலும் அதன் பின் தொடரும் பப்போனின் ஹம்மிங்கும் ராசைய்யாதான்.. ஆஹா..! ஷேர்ஷா’ திரைப்படத்தில் வெளிவந்த 'ராத்தேன் லம்பியான்’ என்ற இந்திப்பாடலைப்போல நீங்காப்புகழ் பெறத்தகுதியான பாடல் இது. எலெக்ட்ரானிக், அரபி , ஹிப்ஹாப் எல்லாம் கேட்கலாம்... இருப்பினும் இது போன்ற ஒரு பாடலைக் கேட்கும் போது அதன் சுகமே அலாதி....! #மானேனோகிமானேனோகி