Friday, May 29, 2020

டோர்டெலிவரி

வீட்டுக்கு டெலிவரி பண்ண முடியுமா ? எல்லா மளிகை சாமானையும் தூக்கிட்டு போக முடியலை என்ற வழக்கமான டயலாக்குடன் அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். வழக்கமா அதே பதில் தான் சொல்லுவார்னு நினைத்து. இல்ல கரோனா முடியும் வரை டோர் டெலிவரி இல்லைன்னு சொல்வார். ஆனா இன்னிக்கு ஒரு பாட்டம் அழுதே தீர்த்துட்டார். ”இல்ல , இப்ப கட்டிக்குடுத்துக் கிட்டு இருக்கானுங்க பாருங்க எல்லாரும் அவங்க வீட்டுக்கு போகணும்னு ஒத்தக்கால்ல நிக்கிறாங்ய.. என்னால ஒண்ணும் செய்ய முடியலை. இந்த ஞாயிறு தான் கடைசீன்னு கெடு வெச்சிருக்கானுங்க” என்றார். எனக்கு திடுக்கிட்டது. 

அவர் தெலுங்கு, ஓரளவு கடையில் தெலுங்கு பேசுபவர்களையே வேலைக்கு அமர்ந்தியிருந்தார். இடையிடையே சில வடநாட்டுக் காரர்களும் தென்படுவர். ” இப்ப என்ன செய்றதுன்னெ தெரியலை. ஓரளவு லாக்டவுனெல்லாம் கொஞ்சம் குறைஞ்சுக்கிட்டு வர்ற நேரத்துல இவனுங்க ஊருக்கு போயே தீருவேன்னு நிக்கிறாங்ய சார்”. என்றவர் அப்படியே நின்றுவிட்டார். 

இத்தனைக்கும் கடைக்கு மேலேயே அவர்களுக்கு அறை வாடகைக்கு எடுத்துக் கொடுத்து அதிகம் அலையாது வேலைக்கு வர ஏதுவாக , பக்கத்துலயே ஒரு ஆந்திரா மெஸ்ஸையும் ஏற்பாடு செய்திருந்தார் என எனக்கு ஏற்கனவே தெரியும். இப்படி ஒரு இடத்தை விட்டுச்செல்ல அவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது என்று தெரியவில்லை. ஊருக்கே சென்றாலும் அவர்களுக்கு வேலை ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. அடுத்த வாரம் சென்றால் அவரும் அவர் மனைவியும் மட்டுமே நின்று கட்டிக் கொடுப்பர் என்று நினைக்கிறேன். #கரோனாஎஃபெக்ட்

Sunday, May 24, 2020

விகடன் விருதுகள்



அந்தந்தக் காலக்கட்டத்தில் அவரவர் திறமைகளுக் கேற்ப , சக படைப்பாளிகளின் படைப்புகளை ஒப்பு நோக்கி, திறனறிந்து கொடுக்கப்பட்ட விருதுகள் தான் அவை. தகுதியுள்ளவர்க்கு மட்டுமே கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். அதையும் அந்தந்தக்காலத்தில் மனமுவந்து ஏற்றுக்கொண்ட படைப்பாளிகள் , இப்போது அந்த நிறுவனம், கடும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கிக்கொண்டு இருக்கும்போது எடுக்கும் சில தவிர்க்க இயலாத முடிவுகளை கருத்தில் கொண்டு தமக்கே அளித்த விருதுகளை திரும்பக் கொடுத்தல் என்பதை எங்கனம் நியாயப் படுத்த இயலும் எனத் தெரியவில்லை. இது எனது கருத்து மட்டுமே. 

அறுவை சிகிச்சை செய்து மட்டுமே நீக்கவியலும் சில உடல் உபாதைகளை உடனேயே இருக்கட்டும் என்பதை எந்த மருத்துவரும் ஒத்துக்கொள்ள மாட்டார். நிறுவனம் என்பது சில நேரங்களில் சில கடுமையான முடிவுகளை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடும் முன்னர் எடுத்த தவறான முடிவுகளால். எத்தனையோ பேரை வெளி உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த நிறுவனம் அது. வேலையிழந்தவர்கள் அதை மட்டுமே நம்பிக்கொண்டு இருந்தது என்பது பத்திரிக்கை துறையைப் பொருத்தவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் அவர்கள் யாரும் NonTechnical/ Unskilled Labourers இல்லை. படைப்பூக்கமும், சொந்தமாக சிந்தித்து பல விஷயங்களை பாமரர்களுக்கும் எடுத்துச்செல்லும் படைப்பாளிகள் தான்.

ஃப்ரீலேன்ஸிங் என்ற கருத்தாக்கம் இந்தத்துறைக்கு மட்டுமே சாலப்பொருந்தக்கூடிய ஒன்று. நிறுவனம் எடுக்கும் எந்த முடிவுகளையும் சமாளிக்கும் திறனில்லாத தொழிலாளர்கள் என்பதை நிர்வாகத்தின் பிழையாகக் கருதத் தோணவில்லை எனக்கு. எனது தகவல் தொழில்நுட்ப துறையில் இதெல்லாம் சர்வ சாதாரணமாக நிகழக்கூடிய ஒன்று. (Hire and Fire) புதிதாக திறன்களை வளர்த்துக் கொள்தல், நிறுவனம் சாராது சில வேலைகளை தாமாக தனியாக எடுத்து செய்ய முற்படுதல் என்பது மட்டுமே தொடர்ந்தும் தம்மை இயங்க வைக்கும். மேலும் அந்த நிறுவனங்கள் ஏதும் அரசாங்கம் நடத்துபவன அல்ல. வேலைப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லாத நிலை. போட்டிகள் மிகுந்தவை. தாமாக பல திறமைகளை வளர்த்துக்கொள்வதே இந்த சிக்கலான காலகட்டதுக்கு தேவையான ஒன்று. #விகடன்விருதுகள்

.

Friday, May 8, 2020

Wasted on You......


 

நல்ல ராக் கொஞ்சம் மிதமான. ஓலம் ஒலிக்கிறது. ஓலத்தை சன்னக்குரலில் ஒலிக்க இயலாது. ராக் தான் வழி. நல்ல வரிகளும் கூட, இந்தச்சரணம் எனக்குப் பிடித்தது. முழுப்பாடலையும் மொத்தம் ஐந்து கவிகள் எழுதி இருக்கின்றனர் . 

”ஒருமுறை இது பூந்தோட்டமாக இருந்தது
அதுவே நம் உலகமாகவும்
எல்லாக்கொடுங்கனவுகளும் இருளில் மூழ்கிக்கிடநதன
கொஞ்சம் கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டாய் உனக்காக
பின் நீயே எதிரியானாய்
இப்போது நம்மைக்கண்ணுறு
கொஞ்சம் கொஞ்சமாக மூழ்குகிறேன்
உண்மையாக இருக்க”



Wednesday, May 6, 2020

சக்தே இண்டியா

பெங்களூரில் என் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டிக் கொண்டிருக்கின்றனர். எட்டு மாதமாக வேலை நடந்து கொண்டிருந்தது. கொரானா வந்ததும் தாமாக நின்று விட்டது. அந்த கட்டிட மேஸ்த்திரி அருகிலேயே வசிப்பவர். எப்போதும் ஏழு மணிக்கெல்லாம் அவரை கட்டிட முகப்பில் பார்க்கலாம். உள்ளூர் செய்தித்தாள் வாசித்துக் கொண்டு அமர்ந்திருப்பார். வேலையாட்கள் தமது வேலையைத் தொடர்ந்திருப்பர். இப்போதோ அவர் மட்டுமே அமர்ந்து செல்ஃபோனை பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஆட்கள் யாரும் இல்லை. எல்லோரும் பீகார்,மற்றும் பெங்காலில் இருந்து வேலைக்கு வந்தவர்கள்.அனைவரும் சென்று விட்டனர். கட்டிடம் அப்படியே நிற்கிறது.  பெங்களூர் பேலஸ் கிரவுண்ட்ஸுக்கு வரச்சொல்லி உள்ளூர் அரசாங்க ஆணை, வேற்று மாநிலத்துக்கு செல்லவேணுமெனில் அதற்கென ஒரு செயலியும் உருவாக்கப் பட்டிருக்கிறது.  அதன் வழி அவர்கள் பதிவு செய்து சென்று மூன்று நாட்களாக காத்திருக்கின்றனர்.

ஒவ்வொரு இடத்திலிருந்தும் பேலஸ் க்ரவுண்ட்ஸ் செல்ல (என் இடத்திலிருந்து பத்து அல்லது பனிரெண்டு கிமீ) ஒரு ஆளுக்கு ஆட்டோவுக்கென ஐநூறு ரூபாய் முதல் அறுநூறு ரூபாய் வரை ஆகிறது. (மீட்டரில் ஆகக்கூடுதல் ரூ150 மட்டுமே வரும்) அதிலும் சில சமயங்களில் , இந்த கரோனா காலத்திலும் ஷேர் ஆட்டோவாக செல்லுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆட்டோக்காரகளைச் சொல்லி குற்றமில்லை, இரண்டு மாதமாக அவர்களுக்கும் தம்பிடி வருமானம் இல்லை. கிடைத்தது லாபம் என கூறுபோடுகின்றனர். அங்கு சென்ற பிறகும் ஊருக்கு செல்ல அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் டிக்கெட். எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம். இரண்டு மாதமாக தினக்கூலி போலும் இல்லை. ஏற்கனவே ஐநூறு ரூபாய் ஆட்டோவுக்கு மேலும் ஆயிரம் ரயிலுக்கு.  காங்கிரஸ் கொடுக்கும் எனச்சொன்னதெல்லாம் அவர்கள் ஆளும் மாநிலத்தில் மட்டுமே. இங்கோ பிஜேபி அரசு. அதிலும் இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம். ரயிலில் இடமில்லை என்ற குறைபாடு. இங்கேயே அவர்கள் தங்க இடம் போலுமில்லை. திரும்பி அவர்கள் வேலை பார்த்த இடத்துக்கே செல்லலாமென நினைத்தால் மீண்டும் ரூ500 கொடுக்க வேணும்.

இப்போது கர்நாடக அரசு அவர்களை ஊருக்கு செல்லவேண்டாம் எனக்கூறுகிறது. உள்ளுர் கட்டிட காண்ட்ராக்டர்களுக்கு ஆட்கள் கிடைக்க சிரமமாக இருக்கிறதாம். மீண்டும் வேலை ஆரம்பிக்க போவதால் அவர்களை தடுத்து நிறுத்து என கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஊரடங்கு எப்போது மீண்டும் தலையில் விழும் என்பதற்கு ஒரு உத்திரவாதமும் இல்லை. வெளி மாநில பணியாளர்களுக்கு ஊருக்கும் செல்ல வழியில்லை.இரண்டு மாதங்களாக வருமானமும் இல்லை. #சக்தேஇண்டியா

Sunday, May 3, 2020

ஒரு க்ராம்

ஒரு கொரொனா வைரஸின் எடை 0.85 ஆட்டோக்ராம்ஸ் அல்லது ஒரு ட்ரில்லியனில் பத்து லெட்சத்தின் (one millionth of a trillion grams) ஒரு பங்கு எனலாம். 70 பில்லியன் கொரொனா வைரஸ்கள் ஒருவரை நோயாளியாக்கினால் அவருடைய உடம்பில் இருக்கும் கொரொனா வைரஸ்களின் மொத்த எடை 0.0000005 க்ராம்கள். இப்போது உலகில் இருக்கும் கொரொனா நோயாளிகள் 20 லெட்சம் பேர். ஆக இந்த 20 லெட்சம் நோயாளிகளின் உடம்பில் இருக்கும் ஒட்டு மொத்த வைரஸ்களின் எடை வெறும் 1 க்ராம் மட்டுமே. 700 கோடி மனித இனம் கொண்ட உலகமே வெறும் ஒரு க்ராம் வைரஸ் முன் மண்டியிட்டுக்கிடக்கிறது. 

ஏர்லைன் இண்ட்ஸ்ட்ரீஸ் இன்னமும் முழு வீச்சில் இயங்க இரண்டு ஆண்டுகளாகும். பல்லாயிரம் கோடிகள் இழப்பு இந்த இரண்டு மாதத்திலேயே.மொத்த வேலையிழந்தவரின் எண்ணிக்கை அமெரிக்காவில் மொத்தம் 3 மில்லியன் மக்கள். இந்தியாவில் வேலை மற்றும் வீடிழந்தோர் எண்ணிக்கை முப்பது கோடியைத் தாண்டும். இந்தியாவின் இந்த ஆண்டுக்கான ஜிடிபி 2 விழுக்காடு போலும் இருக்காது என ஆரூடம் ஓடுகிறது. வேலையிழப்பு , மேலும் வேலை பார்ப்போருக்கு 40 முதல் 50 சதமானம் வரை சம்பளம் குறைப்பு. முழு வீச்சில் பொருளாதாரம் மீண்டு எழ இன்னமும் இரண்டு ஆண்டுகளாகும். எல்லாம் எதனால் வெறும் ஒரே ஒரு க்ராம் வைரஸால்.

ஒரு க்ராம் வைரஸை வைத்துக்கொண்டு உலகையே ஆண்டுக் கணக்கில் முடக்கிப்போட முடியுமெனில் இதை விட (உயிரி) ஆயுதம் வேறேதும் வேணுமா ?? ஆறாம் அறிவு கொண்டு செவ்வாய் வெள்ளி எனப்பயணித்துக் கொண்டிருக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களை வடிவமைத்த மனித அறிவார்ந்த இனம் ஒரு க்ராம் வைரஸினும் கீழ் தான் என நினைக்கும்போது... #ஒருக்ராம்