நேற்றைய பெங்களூர் டவுன்ஹால் ரவீந்த்ர கலாஷேத்ரா நாடக அரங்கு நிறைந்து கிடந்தது. உட்கார இடமில்லை. கிடைத்த இருக்கையை இருத்தி வைக்க வெளிக்கிளம்பி செல்ல இயலாத நிலை. எண்பது நிமிடங்கள் நாடகம். கைபேசி வெளிச்சம் மேடைக்கு எட்டுமென முன்னதாகவே அறிவிப்பு வெளியானது. அணைத்து வைக்கச்சொல்லி. பின்னரும் நாடகம் ஆரம்பமாகிய பிறகும் கூட ‘ஒலிவாங்கியில் இரைஞ்சினார் கன்னடத்தில், தயவாகி மொபைல் ஒந்து ஸ்விட்ச் ஆஃப்’ மாடு’ என்று.
முழுவிளக்குகளும்
அணைக்கப்பட்டது அரங்கிலும் மேடையிலும் .கும்மிருட்டு. உலகும் பிரபஞ்சமும் தோன்றியது
அப்படித்தானே. முழுக்க முழுக்க கருப்புப்பருப்பொருள் தானே முதலில். பின்னர் தோன்றியது
தானே இந்த தற்காலிக வெளிச்சக்கீற்று. இருள் சாஸ்வதம் ஒளி தற்காலிகம். அதுதான் நிதர்சனம்.
இன்னமும் இருளை வெல்ல ஒளியால் இயலவில்லை. ஓடி ஒளிந்து கொள்கிறது. தொண்ணூற்றைந்து விழுக்காடு
டார்க் மேட்டர் மட்டுமே. பிரபஞ்சத்தில். அதைத்தான் மேடை சொல்லியது காண்பித்தது.
கடிகார டிக் டிக்
ஒலி. விடாது ஒலிக்கிறது பின்னணியில். இத்தனை நாளும் கடிகாரம் தான் காலத்தை அளவிடுகிறது
என்றெண்ணிக் கொண்டிருந்தவனுக்கு , அது வெறும் அசைவு தான் என ஒரு ஸென் சொல்லியது. ஆதவன்
மேலெழுவதும்,வீழ்வதும் கடிகார முள்ளசைவும் ஒரு நிகழ்வு மற்றும் அசைவு மட்டுமே. அது
காலம் அல்லவென. அந்த டிக் டிக் ஒலியின் பின்னணியில்
மெல்லுடலி ஜெல்லி மீன் தவழ்ந்து தவழ்ந்து மெல்ல வெளிச்சம் பெறுகிறது. மேலெழும்புகிறது.
உலகின் முதல் உயிரி கடலில் இருந்து தான் தோன்றியது.
மச்சாவதாரம் முதல் அவதாரம் இந்து மரபில். அதைத்தான் நாடகமும் சொல்லியது.
நாடகம் தொடங்குமுன் சிறு குறிப்பொன்று கொடுக்கப்பட்டது. எத்தனை பேர் அதை உற்றுக்கவனித்தனர் எனத்தெரியவில்லை. மூன்று மொழிகளிலும் அது வழங்கப்பட்டது. பல்லுயிர் ஓம்புதல் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த நிகழ்வென.

புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய்,மனிதராய், பேயாய், கணங்களாய
வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய்,மனிதராய், பேயாய், கணங்களாய
வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
என்ற மாணிக்கவாசகரின் கவிதைக்கேற்ப சிக்கெனப்பிடித்துக் கொண்டேன் அவர்கள் கூறிய முன்னறிவிப்பில். இதையே தான் இதன் அடிப்படையில் தான் நாடகமும் நடந்து சென்றது முடிவு வரை.
அந்த ஜெல்லி மீனிலிருந்து தவழ்ந்து வெளிவருகின்றன மற்ற உயிரினங்கள். மரம், யானை, கழுதை,அணில், கிளிகள்,மனிதன் என பல்லுயிர்க்கோட்பாட்டை வலியுறுத்தும் இந்த நாடகம். ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதையும் காண்பிக்க தவறவில்லை. தொடர் நிகழ்வுகள், பரிணாம வளர்ச்சி, ஒன்றிலிருந்து இன்னொன்று தோன்றுவது ஒவ்வொன்றும் பேசுகிறது அதனதன் மொழியில். மனிதனுக்குத்தான் விளங்குவதில்லை. அடித்து உண்பதில் தான் குறி. அது அவன் இனமேயாகினும்.
முருகபூபதியின் நாடகங்கள் இதைத்தான் சொல்லவருகிறேன், புரிந்து கொள்ளுங்கள் என்ற ஒரு வரையறைக்குள் கட்டுப்படாதவை. அவர் சொல்லவரும் விஷயங்களை பார்ப்பவன் மனதில் உண்டாக்கிக் கொள்ளும் சித்திரத்தினூடாக புரிந்து கொள்ள வைக்க முயல்வதே. அதனடிப்படையில் ஒவ்வொருவரின் கற்பனையும் கலந்து அது முழுமை பெறும். சொல்வதொன்று புரிந்து கொள்வதொன்று என்ற மொழிக்கூறின் சொல்லாடல்களின் வழியல்ல,இது உணர்வின் வழி புரிந்துகொள்ளல். இதுகாறும் இந்த பிரபஞ்சம் நமக்களித்தவற்றை அதன் பாங்கில் ஒத்திசைந்து அதன் வழி அறிந்து கொள்ள இது ஒரு நல்வாய்ப்பு.
கொடுக்கப்பட்ட எண்பது
நிமிடங்கள், அத்தனையும் அறிவுப்புலன் திறப்பு. ஏற்கனவே பொதிந்து வைத்த உள்ளீடற்ற கற்பனைகளை,
உருவத்தை அதன் வழி கிடைத்த அறிவை உதறித்தள்ளிவிட்டு புதிதாக கற்பனை வளத்தை,நாமாக உருவாக்கிக்கொள்ள
வைக்க நினைத்த நாடகங்கள் இவை. இவற்றின் பாணி புதிது. சொல்லவரும் முறை புதிது. உருவாக்கி
வைத்திருக்கும் பிம்பங்களைத்தகர்த்தெறியும் படைப்பு.
நாடகத்தில் அத்தனை உயிரினங்களும் பேசுகின்றன. அதனதன் மொழியில். சில அசைவுகளாலும் , சில நடப்பதாலும், சில ஒலியெழுப்புவதாலும், சில நமக்குத்தெரிந்த அன்னை சொல்லிக்கொடுத்த தமிழ் மொழியாலும் பேசுகின்றன. எதை உள்வாங்கிக் கொள்வது சுலபம் ? அது பார்வையாளனின் கண்ணில், கேட்கும் காதில் ,உணர்ந்து புரிந்து கொள்ளும் மனதில் இருக்கிறது.
நாடகத்தின் ஒரு கட்டத்தில் அனைவரும் ஒருங்கே நிற்க, அதில் இருவர் மட்டும் அந்த மற்றவரின் தோளிலும் தலையிலும் ஏறி நம்மைப் பார்த்துக் குதிக்கின்றனர். கையில் அகப்பட்ட குழந்தையை அபகரித்துச் செல்கின்றனர். பதின்மூன்று பச்சைக்கிளிகள் என ஒரு பதம் வருகிறது. அதை தூத்துக்குடியில் கொல்லப்பட்டவரை நினைவுறுத்தியது.
பின்னரும் ஏகத்துக்கு இறுக்கமாக அமர்ந்து கொண்டிருக்கும் பார்வையாளர்களை கொஞ்சம் இளக வைக்கும் பாணியில் கோமாளிகள் வந்து சிரிப்பு மூட்ட முயன்றனர். அதிலும் அத்தனை குறியீடுகள். ‘தலைவர் வர்றார் தலைவர் வர்றார் மைக் செட்டு காரரே கொஞ்சம் சவுண்டு கூட்டிவிடும், என்றும் தலைவனின் அருகில் நிற்பவனை கோமாளியாக தொப்பி அணிந்து கொள் என அதிகாரம் செய்வதும், அதானே தலைவனுக்கு எப்போதும் அவனின் கீழிருப்பவர் கோமாளிகளாகத்தானே இருக்க வேணும் ? கொஞ்சம் அறிவுடன் பேச முயன்றால் என்னவாகும் என்பது, புரிந்து கொண்டு செயல்படத் தொடங்கி விட்டால் தலைவன் பாடு திண்டாட்டமாகிவிடுமே ?!
ஒவ்வொரு முறை தலைவர் மேடையிலிருந்து விடை பெற்றுக்கொள்ளும் போது கோமாளியை தனக்கு பூட்ஸ் அணிவிக்கப் பணிக்கிறார். பூட்ஸ் நக்கும் அடிமைகள் தான் தலைமைக்கு என்றும் பிடிக்கும். தலைவர் திரும்பிச்செல்லும் வழி ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலென கூவிக்கொண்டே செல்கிறார். அவ்வப்போது தேவைப்பட்டால் விளம்பரத்துக்கென குப்பை பொறுக்க சேற்றிலும் இறங்குவான் தலைவன் . மேலும் தலைவன் பேசும் போது கோமாளி கொசுவை அடிக்கிறார் சுற்றிச்சுற்றி அது தலைவனை வணங்காத அவரியல்புக்கு ஒத்துவராதவரை அப்புறப்படுத்துவதன்றி வேறேதுமில்லை..

காதலரை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதைகளோடு ஊர்வலம் செல்லப்பணிக்கும் ஒரு கூட்டம். அது வேறொன்றும் இல்லை. கலப்புத் திருமணங்களின் இன்றைய நிலையை எடுத்துரைப்பது.
அடுத்து என்ன காட்சி என ஊகிக்கவியலாத நாடகமாக்கம். என்னென்ன பொருட்கள் (Properties) கையில் ஏந்திவருகின்றனர் நடிகர்கள் என்பதும் புதிர் தான். இருப்பினும் எனக்கென்ன ஆச்சரியமென்றால் அதில் ஒருவர் கூட பிழை செய்யவேயில்லை. ஒரு தவறேனும் கண்டுபிடிக்க வாய்ப்பே தரவில்லை. அப்படி ஒரு பயிற்சி. என்ன பேசவேணும் என்ன செயல்கள் செய்யவேணும் எத்தனை முறை மேளத்தில் ஒலி எழுப்ப வேணும் என்று கட்டுக்கோப்பான ராணுவ ஒழுங்குடன் அமைக்கப்பெற்ற நாடகம். இருப்பினும் அது இயந்திரத்தனமாக தோன்றவில்லை. அந்தந்த காட்சிக்கேற்ப உடல்மொழியும், முகமொழியும் நடிப்புமென அசத்திய நடிகர்கள். மேடையை முழுக்க அவர்கள் ஆக்ரமித்துகொண்டனர். முதல் வரிசையில் அமர்ந்திருந்ததால் என்னால் இத்தனை அருகே இருந்து காண முடிந்தது. இதே கருத்தை ‘முருக பூபதி’ அவர்களிடம் நாடகம் முடிந்து கீழிறங்கி எங்களுடன் உரையாடிக் கொண்டிருந்த தருணத்தில் சொன்னேன்.
நாடகம் முடிந்ததும், கேள்விகளுக்கு பதில் சொல்ல நடிகர் கிஷோர் (அத்தனை வெற்றி மாறன் படங்களிலும் முக்கியமான கதா பாத்திரங்களில் தோன்றுவார்) பின்னர் இயக்குநர் முருகபூபதி மற்றும் அவரின் உதவியாளர் மேடையில் அமர்ந்திருந்தனர். எல்லாரின் கேள்விகளையும் ஒரு சுருக்கில் சொல்லிவிடலாம் நாடகம் புரியவில்லை என்பதே. அதற்கு அவரின் வழக்கமான பதில் இது தான். அது உங்களின் முயற்சியில், கற்பனை வளத்தில் இருக்கிறது என்பதே. நடிகர் கிஷோருக்கு பணி மேடையில் கன்னடத்திலிருந்து தமிழுக்கும் பின்னர் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் மொழி பெயர்த்து சொல்வதே. அவரால் இயன்றவரை மொழி பெயர்த்து கூறினார். இவரை ரவீந்த்ர கலாக்ஷேத்ராவின் அத்தனை நாடக அரங்கிலும் காணலாம்.
கடைசியாக எல்லாம் முடிந்து கீழிறங்கிய இயக்குநர் முருகபூபதி’யிடம் அபிலாஷ், ஸ்ரீனி மற்றும் நான் உரையாடிக்கொண்டிருந்தோம். அவரிடம் நான் கேட்டது இது தான். ‘இந்த நாடகம் கடல் உயிரினத்தில் ஆரம்பித்து எல்லாமுமாகி பின்னர் ஆகக்கடைசியில் கடலில் கலக்கும் பல்லுயிர் தானே’ என. அவர் ஆமோதிக்கவும் இல்லை மறுதலிக்கவும் இல்லை. எனினும் அவரின் முகத்தில் ஒரு ஒளிக்கீற்றென ஒரு புன்முறுவல் தோன்றி மறைந்ததை காணத்தவறவில்லை. எனக்கொரு மகிழ்ச்சி நாடகத்தின் மையக்கருத்தை எட்டிவிட்டேனென்று.