நேற்று பா.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா ஓசூரில் நடைபெற்றது.
ஒரு கலைப்பள்ளியின் மேலுள்ள மொட்டை மாடியில். ஸ்ரீனி நான் மற்றும் செந்தில் மற்றும்
இன்னபிற உள்ளூர் நண்பர்கள் கலந்து கொண்டனர். பெரிய சாமி, மனோன்மணி புது எழுத்து, பின்னர்
ரமேஷ் கல்யாண் , கவின் மலர், ஆதவன் தீட்சண்யா என பெருந்தலைகளின் முகங்கள் களைகட்டியது.
5 மணிக்கு தொடங்க வேண்டிய விழா வழமை போல 7 மணிக்கு துவங்கியது.
ரமேஷ் கல்யாண் வெகு விமரிசையாக பேசினார். பா.வெயின் கதைகளிலிருந்து மேற்கோள் காட்டி.
ஓசூரின் மாலைப்பொழுது வெய்யில் தாழ்ந்து காற்று வீசத்தொடங்கியிருந்தது. ஓவியத்தில்
வரைந்த மாம்பழத்தின் நிறம் எந்த இடத்தில் பச்சையிலிருந்து மஞ்சளாக மாறுகிறது என்ற வரையறைக்கு
உள்ளாக்கப்பட இயலாதது போல பா வெயின் கதைகளில் உள்ளர்த்தங்கள் புரிந்து கொள்ள இயலாதவை
மயக்கம் தருபவை என்று கவித்துவமாக உரையாற்றினார்.( இவரது கவிதைகள் வார இதழ்களில் வெளியாகி
இருக்கின்றன ) கட்டிடம் கட்டும் கை தேர்ந்த கலைஞனைப்போல ஒரு மாய எதார்த்தத்தை தம் கதைகளில்
பொதிந்து வைத்திருப்பார் பாவெ. அத்தகைய கட்டிடங்களினூடே பறந்து செல்லும் பறவைகள். நீர்த்தாரைகள்
என சொல்லிக்கொண்டே போனார். பேசிய பேச்சாளர்களிலேயே இவர் அதிக நேரம் எடுத்துக்கொண்டார்.
கவின் மலர் பேசியது சிறிது நேரம். என்னைப்போல் இவரும் பயணத்தில்
மட்டுமே வாசிப்பவர் போல. எடுத்து வைத்த அத்தனை புத்தகங்களையும் பயணத்தில் வாசிக்க முயற்சி
செய்வேன், பாவெ எழுதிய முந்தைய கதையை இது போல
கைப்பையில் எடுத்து வைத்து பயணம் புறப்பட்டால் கைப்பையோடு புத்தகமும் தொலைந்து போனது
என்ற அங்கலாய்த்துக் கொண்டார். வாரணசியைப் பற்றி பேச முற்பட்டவர்க்கு அங்கு தற்போது போட்டியிடுபவர்
தான் ஞாபகம் வந்து தொலைக்கிறது. வாரணசி ஒரு அந்திமக்காலங்களின் நிலம் என்பதை இந்தக்கதை
விளக்குகிறது, மேலும் இந்தக்கதையில் பல புதிய மொழி பெயர்ப்புகள் சொற்கள் வந்திருக்கிறது
என்று குதூகலமாக குறிப்பிட்டார். இது நாள் வரை
Independent Journalist என்பதை சுதந்திரப் பத்திரிக்கையாளர், சுயாதீனப்பத்திரிக்கையாளர்
என்றே எழுதப்பட்டு வந்தன, அதை மாற்றி பா.வெ ‘விருப்பு சார் பத்திரிக்கையாளர் என்ற பதத்தை
பயன்படுத்தியிருப்பது சிறப்பு. தமது விருப்பத்தின் பேரில் கட்டுரைகள், கதை கவிதைகள்
எழுதி அதைப்பிரசுரத்துக்கு எந்தப்பத்திரிகைக்கும் அனுப்பி வைப்பது போன்ற ஒரு பத்திரிக்கையாளனை
( ஹிஹி என்னைப் போன்ற,,,, ஹிஹி ) விருப்பு சார் பத்திரிக்கையாளர் என்று விளித்திருப்பது
மிகவும் சரியான பதம் என்று சிலாகித்தார்.
மேலும் பேசுகையில் இத்தனை புதிய பதங்களை கொண்டு வந்திருப்பினும்
குறிப்பிட்டு சொல்லத்தக்க ஒரு பழைய சொல் அதை இப்போது அனவரும் தவிர்த்து வரும் வேளையில்
அதற்கிணையாக பல புதிய சொற்கள் பயன்படுத்த தொடங்கியிருப்பினும் அதே பழைய பதத்தை சொல்லியிருப்பது
தவறு எனக்கூறி ஆதங்கப்பட்டார். அது வன்கலவிக்கு பழைய சொல். இருப்பினும் பின்னர் பா வெ. தமது ஏற்புரையில் கதை நடக்கும் களம் எழுபது எண்பதுகளில்
பழையகாலம் ஆகவே அதே சொல்லைப்பயன்படுத்த வேண்டியதாயிற்று என்று. நவீனம் தவிர்க்கப்பட
வேண்டியது.
பாவெ.யின் நூற்கள் உட்புக இயலாதவை. கடினமான பாறை போன்றவை.
அதற்கென செய்யப்பட்ட உளியின் சுத்தியும் கொண்டே உடைத்து உட்புக வேண்டிவரும். என்ற அவர்
கூற்று கோணங்கி’யின் மொழி பற்றியது. இப்படித்தான் பலரது கவிதைகளும். மிகுந்த சிரமத்திற்கிடையில்
அவற்றை பல முறை வாசித்து உட்பொருளைப் புரிந்து கொள்ள வேண்டிவரும் . சித்தர்கள் எழுதி
வைத்தவை அனைவரும் புரிந்து கொள்ள இயலாதவை. அதற்கென முயற்சி தேவை. அவயொன்றும் வேற்றுக்கிரக
வாசிகளின் மொழியில் எழுதப்பட்டவை அல்ல.
கவின் மலரின் பேச்சில் அவரது களைப்பு மேலோங்கி இருந்தது,
ஒலிவாங்கி இருப்பினும் களைப்பு அவரின் குரலை உள்ளிழுத்துக் கொண்டே இருந்தது. சொற்களை
வாக்கியத்தை தொடங்கும் வேகம் முடிக்கும்போது இல்லை. அவரது பேச்சு முழுவதும் அங்கனமே
இருந்தது. இருப்பினும் கதையின் மையக்கருத்து ஒரு பெண்ணின் ஆடையற்ற நிலை, பின்னர் நிர்வாணம்
இரண்டும் தவிர வேறேதும் பேசவில்லை என்ற ஆதங்கம். பொள்ளாச்சி நிகழ்வுகளைக் குறிப்பிட்டு
கதையின் மையக்கருத்தும் அதையொட்டியே இருந்ததைப்பற்றி ஆதங்கம் அவரது பேச்சில் தெரிந்தது.
முன்னதாக நிகழ்வு தொடங்கும் முன்னரே வந்து ஸ்ரீனியுடன் மட்டும்
உரையாடிவிட்டு எழுதி வைத்திருந்த குறிப்புகளை சரிபார்க்கப் போய்விட்டார். :)
பார்த்தால் எதோ பரீட்சைக்கு படிக்க உட்கார்ந்த சிறுமி போல். :)
தோழர் ஆதவன் தீட்சண்யாவுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். தோழர்
ஓசூர் தொகுதியில் உங்களுக்கு இடமில்லையா என. ஹ்ம். அதற்கெல்லாம் கட்சிக்கென முழுதாக
உழைக்க வேண்டும். நேரமில்லை. இருப்பினும் மார்க்ஸிஸ்ட் கட்சி வேட்பாளர் வேள்பாரி சு வெங்கடேசன் வெற்றி பெறுவது உறுதி. கட்சிப்பணிக்கென
வலுவாக உழைப்பவர். நேற்று அவரின் கூட்டத்தில் பங்கெடுக்க மதுரை சென்று வந்தோம் என மகிழ்வுடன்
உரையாடிக் கொண்டிருந்தார். நிறைய எழுத்தாளர்கள் போட்டியிடும் களம் ஆகி விட்டது தமிழ்நாடு.
கடைசியாக ஆதவன் தீட்சண்யாவின் உரை. எல்லாவற்றையும் பேசி அலசி
ஆராய்ந்து என தெள்ளத்தெளிவான உரை. இருந்து அமர்ந்து விவாதிக்கவென ஒரு அறை போலும் இல்லாத
ஓசூர் கிளை. இப்பவும் அதே கதிதான். எதோ கோவிலின் பிரகாரத்தில் அமர்ந்து விவாதிப்போம்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு. வெங்கடேசன் தவறாது
எல்லாக்கூட்டங்களிலும் கலந்து கொள்வார். விவாதங்களை ஏற்றுக்கொள்வார். குறிப்புகள் எடுத்துக்கொண்டு
அவற்றை தம் கவிதை கதைகளில் மாற்றம் செய்ய பயன்படுத்திக்கொள்வார். என மலரும் நினைவுகள்
தான் அவரின் பேச்சில். பாவெ’யின் குடும்பம் அவருக்கு அளித்திருக்கும் பூரண ஒத்துழைப்பு
அவரை இந்த நிலைக்கு கொணர்ந்திருக்கிறது என்று மகிழ்ந்தார்.
இப்போது சமீபத்தில் மறைந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
அவர்களின் துணைவியார் தம் கணவருடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு குறைவாகவே வாழ்ந்தார். பின்னர்
கணவனின் மறைவிற்குப்பின் கிட்டத்தட்ட எழுபதாண்டுகள் தனிமையில் ஒற்றை மகனுடனே தம் வாழ்வைக்கழித்தார்.
அவர்களின் மகன் வளர்ந்து பெரியவனான பின் , ஏனம்மா இன்னமும் இந்தக்குப்பைகளை வைத்துக்கொண்டிருக்கிறாய்
எல்லாவற்றையும் தூக்கிப்போடு என்று கூறியதாக துணைவியார் சொல்லியிருந்தார். அத்தனையும்
பட்டுக்கோட்டையார் எழுதிய கவிதை, கட்டுரை, நூற்கள், அவரது புகைப்படங்கள் இதெல்லாம்
தான் அவர்தம் தமையனுக்கு குப்பைகள் ஆகிவிட்டன. பின்னர் மார்க்ஸிஸ்ட் தோழர் அவற்றை எடுத்துக்கொண்டு
வந்து பாதுகாப்பாக வைத்திருக்கிறார் என்றவர், அது போன்ற குடும்பத்தைக் கொண்டிராத பா.வெ
இன்னமும் தொடர்ந்து எழுதி இன்ன பிற பாராட்டுகளையும் பெற வேண்டும் என வாழ்த்துரைத்தார்.
பெரியசாமி பின்னில் அமர்ந்திருந்த என்னிடமும், அன்னருகில்
அமர்ந்திருந்த புது எழுத்து ஆசிரியர் மனோன்மணியிடமும் நீங்களும் போய்ப்பேசுங்க என்றவரிடம்
ஒரு வரி போலும் நான் வாசித்ததில்லை பிறகெப்படி பேசுவது என மறுத்தேன். பாராட்டு கூட்டம்
வரை வந்தாயிற்று இன்னமும் புதினத்தை கையாலும் தொட்டுப் பார்க்கவில்லை. செந்தில் கதையை
முழுமையாக வாசித்திருந்த போதும் போய்ப்பேசவில்லை.
வாரணசி வாரணசி , வாரணாசி இல்லை. எனக்கு இப்போது தான் தெரிகிறது.
அந்திமக்காலங்களின் நிலம். பின்னரும் பேருந்தில் பெங்களூர் திரும்பி வரும்போது அத்தனை
உள்ளீடுகளையும் அரசியலையும் பேசிக்கொண்டு தான் வந்தோம் நானும் செந்திலும்.
.