மலைகள் இதழில் வெளியான கவிதைகள்
நட்சத்திர மீன்
கடற்கரையோர
சிப்பிக்கடையில் வாங்கிவந்த
அந்த நட்சத்திர மீன்
வெளிப்புறச்சுவரில் பட்டுத்தெறித்த
ஒரு மழைத்துளியில்
தன்னைச்சிலிர்த்துக்கொண்டது
கடந்து போகிறாய்
நான் வலிந்து
அந்தச்சாலையில்
செல்லவில்லை
முன்கூட்டித்தீர்மானித்து
மணி
பார்த்துக்கொண்டு
அந்த
இடத்தைக்கடக்கவில்லை
இதற்கு முந்தைய
திருப்பத்தில்
அந்த விபத்தை
வேண்டுமென்றே
நான் நிகழ்த்தவில்லை
இப்போது என்
முன்னில்
என்னை நீ கடந்து
போகிறாய்
பறவை
பறவைக்கும்
கவிஞனுக்கும்
உள்ள தொடர்பே
உனக்கும்
எனக்குமானது.
ருசி கண்ட பூனை
கவிஞன் ஒரு
தற்கொலை ருசி
கண்ட
பூனை
நினைவு
உங்களுக்கு
மிக முக்கியமானவர்
இந்தக்கவிதையை வாசித்தபின்
முதலில் நினைவுக்கு வருபவர்
எனக்கு எதையும் வாசிக்காமலேயே
உன் ஞாபகம் தான் வருகிறது.