Sunday, April 22, 2018

ரஹ்மானும் ராசைய்யாவும்



ஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ஹிந்தி பெல்ட்டிலிருந்து வந்தவர்கள் தான். சாயங்கால வேளைகளில் இல்லை பொழுது போகாது எங்கும் வெளியில் செல்லாத சனி ஞாயிறுகளில் பொதுவில் வைத்திருக்கும் டீவீ'யில் பாடல்கள்/படம் பார்ப்பது வழக்கம். எல்லாவருக்கும் ஒரே டீவி. மக்கள் அனைவரும் ஹிந்தி பெல்ட் ஆனதால் வழக்கமாக ஹிந்தி பாடல்களே பெரும்பாலும் ஓடும். வேறு வழியின்றி நானும் உட்கார்ந்து பார்த்துத் தொலைப்பது வழக்கம். அவர்கள் அடிக்கடி பார்க்கும் சேனல்கள் ஒன்றைக்கூட நான் பெங்களூரில் பார்த்தில்லை. அப்படியான சேனல்களும் இன்னபிற பிரபல ஸ்டார் ஹிந்தி போன்ற சேனல்களும் ஒலிக்கும். எனக்கும் ஹிந்திப் பாடல்களுக்கும் ஏழாம் பொருத்தம். எனக்கென்னவோ ஹிந்திப்பாடல்கள் ஒரு போதும் தமிழின் தரத்தை ஒருக்காலும் எட்டுவதே இல்லை என்றே எண்ணுவேன். அதே கூற்று உறுதிப் படுத்தப்பட்டது. 

அந்த ஒரு மாதத்தில். அமர்ந்து பார்த்தவைகளில் கொஞ்சமும் உழைப்பின்றி, கூடுதல் கற்பனைகளின்றி வழக்கம்போல பஞ்சாபி பாங்க்ராவையும் , ஹிந்துஸ்தானியையும் , பின்னர் ஃப்யூஷன் பேர்வழி என்ற பெயரில் இரண்டையும் கலந்துகட்டி ஆகத்திராபையாகவே பாடல்கள் ஒலித்தன. தமிழ் மருந்துக்குக்கூட ஒலிக்காது. நானும் சர்ஃப் செய்து அலுத்துப் போனேன். இதிலென்ன ப்யூட்டி என்றால் ரஹ்மானின் பாடல்கள் ஒன்று போலும் ஒரு சேனலிலும் ஒலிப்பதில்லை. ஆமாம் நிஜம். ஒரு மாதம் இருந்திருக்கிறேன் நண்பர்களே.. ஒரு பாடலும் எந்தன் காதில் விழுந்ததேயில்லை. எத்தனை சேனல் அத்தனையும் ஹிந்தியன்றி வேறேதுமில்லை. என்றாலும் ஒன்றிலும் நம்ம தமிழ் ரஹ்மானின் நேரடி ஹிந்திப்பாடல்களோ இல்லை மொழி மாற்ற ஹிந்தி பாடல்களோ காணவேயில்லை. அது தான் உண்மை.

நம்மைப்போலவே அவர்களும் ரஹ்மானை ஒதுக்கிவிட்டனர் என்றே தோன்றுகிறது. உள்ளுக்குள் மிதப்பில் என்னடா ரஹ்மான் பாட்டத்தான கேப்பீஹ' என்று இறுமாப்பில் இருந்தவனுக்கு பெரும் இடி. மேலே அறையில் இருக்கும் பொழுதுகளில் அங்கனம் ரஹ்மான் பாடல்கள் ஒலிக்குமாயின் சேனல் மாற்றம் செய்கிறார்களாவென காது கொடுத்துக் கேட்பேன். ஹ்ஹூ,ம் அப்படியெல்லாம் ஒன்றுமேயில்லை.


இப்போது தேசீய விருதுகள் மீண்டும் ஒரு முறை ரஹ்மானுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. யார் கேட்கிறார்கள் ஐயா உமது பாடல்களை ?! என்னைக்கேட்டால் ரஹ்மானும் ராசைய்யாவும் இந்த விருதுகளிலிருந்து விலகி இருக்கலாம். எல்லாம் செய்தாயிற்று, எல்லாப்பாடல்களிலும் அத்தனை வித பரீட்சார்த்த முயற்சிகளும் செய்தாயிற்று. இளைஞர்களுக்கு வழி விடுங்க ஹூஸூர் எஸமான்.

Sunday, April 8, 2018

பத்மாவதி ..இல்ல பத்மாவத்



பத்மாவதி ..இல்ல பத்மாவத் இன்னிக்கு தான் பார்க்கமுடிந்தது. பாகுபலிக்கப்புறம் தான் பத்மாவதி அப்டி சொல்றதுல எனக்கு எந்தவித ஐயமும் இல்லை. சொல்லப் போனால் இரண்டும் வேறு வேறு. பொழுது போகணூம்ல அதான். இருந்தாலும் படம் ரொம்பவே நீளம் வெட்டிச்சுருக்கீருக்கலாம்.ஆர்ப்பாட்டமான நடிப்பு ரன்பீர் கபூர், அதுக்கு கொஞ்சமும் சம்பந்தமேயில்லாத ராஜ்பூத் ஷாஹீத் கபூர். இடுக்கல்ல சிக்கின எலி மாதிரி இருக்கான். ஆர்ம்ஸ், ஸிக்ஸ் பேக்லாம் காமிச்சாலும் ரன்பீர் கபூர்க்கு பக்கத்துல கூட நிக்க முடியாது. அலாவுதீன் கில்ஜி பாடத்துல படித்தது. கில்ஜியின் கைத்தடி மாலிக் கஃபூர் எங்க ஊரு பரமக்குடி வைகை ஆத்துக்கு அந்தக்கரை வரைக்கும் வந்துட்டான்னு சொல்லுவார்கள். அப்போது பரமக்குடீல்லாம் பாண்டிய நாடு..ஹிஹி அத்தனை பெரிய சாம்ராஜ்யத்துக்கு சொந்தக்காரன் ஜஸ்ட் லைக் தட் ஒரு பெண்ணுக்காக இப்டி அலைஞ்சான்னு ஹ்ஹ்ஹி… தீபிகா’வுக்காக அலையலாம். ஹ்ஹி..


அரண்மனை, வேலைப்பாடுகள், உடையலங்காரங்கள் ஒக்காந்து ரூம் போட்டு யோசிச்சு செஞ்சிருப்பார் போல சஞ்சய் லீலா பன்சாலி. சம்பவம் பண்ணீருக்கான் மச்சான், செமடா.. ஷாஹீத் கப்பூருக்கு உடம்பு தான் பிரச்னை, அரச உடுப்புகள்லாம் போட்டவுடன ஸ்கூல் போற சின்னப்பையன் மாதிரி தெரியிறார். அதான். எப்பவுமே மனதில் ஒரு சோகம். என்னதான் ராஜ்பூத் வீர்ர்கள்னு சொல்லி சொல்லி கூவினாலும் முகத்துல அந்த தைரியம் தெரியமாட்டேங்குது ரன்பீர் ஆர்ப்பரிக்கிறார் உடலும் திமிரும் தாண்டவமாடுது உடலிலும் முகத்திலும். அறிமுகமே அமர்க்களம். நெருப்புக்கோழியை பரிசாக கொண்டுவந்து மகளை பெண்கேட்கிறார். அமீர் குஸ்ரூ அலாவுதீன் கில்ஜியின் ஆஸ்தான கவியாக இருந்திருக்கிறார் போலருக்கு.அடிக்கடி அவரையும் காண்பிக்கின்றார்கள். நேற்று தான் குஸ்ரோவின் கல்லறைக்கு சென்று வந்தேன்.இங்கு டெல்லி நிஜாமுத்தீனில்.

தனியாளாக மேவார் அரண்மனைக்கு செல்லுவதும் ஷாஹீதுடன் செஸ் விளையாடுவதும்,உணவுத்தட்டுகளை உதட்டோர ஏளனத்துடன் திருப்பி திருப்பி எதிலாவது விஷம் வைக்கப்பட்டிருக்குமாவென சந்தேகத்துடன், ஒரு தடவை கூட எதிரியை நம்பாமலிருப்பதும் ஆஹா. செம வில்லண்டா. வரலாறு சொல்கிறது மிகத்தைரியமான, பலம் வாய்ந்தவன் இந்த அலாவுதீன் கில்ஜியென. அதை ரன்பீர் கபூரின் நடிப்பு ஜஸ்ட்டிஃபை செய்கிறது 



அழகுப்பதுமை தீபிகா. இப்பதான் எச்.பீ.ஓ’வில XXX Return of Xander Cage பார்த்தேன்,. அதுல கொஞ்சம் எடக்கு மடக்கான வசனங்கள்லாம் கூட பேசுவார். லண்டன் பிக் வீலை, அம்மணமாக குறிப்பிட்ட சில மணித்துளிகளில் ஏறிக்காண்பித்தேன் என்பார். ஹிஹி. இங்க முழுதும் போர்த்திக்கொண்டு ராஜபுதன இளவரசி. ஹ்ம். இதுவும் நல்லாத்தான் இருக்கு. இவர் நடித்த ஒரு நெஸ்கஃபே விளம்பரம் எல்லா பச்சிளம் பாலகர்களும் கண்டு மகிழ்ந்தது. சரக்கென குறுவாளை எடுத்து ஷாஹீதின் நெஞ்சில் சிறு கோடிழுத்து இன்னமும் காயம் சரியாகவில்லை. இங்கிருந்து உங்களால் செல்ல வியலாது என்பார். அத்தனையும் காதல். ஆஹா. ஒவ்வொரு தடவையும் ஷாஹீத் போருக்கு புறப்படும் போதெல்லாம் கண்ணோர மையை எடுத்து பொட்டு வைக்கிறாள் அவனின் கன்னத்தில்..திருஷ்டி!



ஆமா தமிழ் வசனங்கள்லாம் கொழிக்குதே படத்துல. யார் வொர்க் பண்ணியது ? சாம்பிளுக்கு சில. “வண்ணங்களாலா இல்லை வாட்களாலா ?” “ காதலுக்கும் போருக்கும் இலக்கணங்கள் இல்லை”. “ மான் வேட்டையாடச்சென்ற எனக்கு சிங்கமல்லவா கிட்டியது?” இந்தப் பாலைவனத்தில் என்னால் கடல் அளிக்க இயலாது அது உங்கள் கண்களிலிருக்கிறதே” “ மனதில் படிந்தது சொற்களில் படிவதில் என்ன ஆச்சரியம்?” “அலாவுதீன் மீது அல்லாவே கூட நம்பிக்கை வைப்பதில்லை”

படம் முழுக்கவே பெண்ணாசையை அடிப்படையாகக்கொண்டதே. அவளே முடிவெடுக்கிறாள். இத்தனைக்கும் ராஜமாதா தடுத்தும் தானே புறப்பட்டு தம் காதலனை விடுவிக்க டெல்லி வரை செல்கிறாள். செம டஃப் ஃபைட் குடுத்தது மேவார் அரசு தான் போல கில்ஜிக்கு. 



ஆறு மாதங்கள் போர் தொடுக்காது அரண்மனைக்கு வெளியே காத்தே கிடக்கிறது கில்ஜியின் படைகள். பிறகு சமாதானப்புறா செல்ல உள்ளுக்குள் அத்தனை வன்மங்களும் கொண்டு. நான் உன்னை அழைக்கிறேன் நீ என்னை அழைப்பாயா என. அப்படியும் தீபிகாவின் முகம் காண வாய்க்கவில்லை கில்ஜிக்கு அந்தக்காட்சி மிகப் பிரமாதம். அவளை அவளின் அரண்மனையில் வைத்துப்பார்த்தே ஆகவேணும் என்ற பிடிவாதத்துடன் நிற்கும் கில்ஜியை கண்ணாடியில் புகைகளினூடே பார்க்க வைக்கிறாள்.அதிகமாக ஹிந்து கார்ட் பயன்படுத்தவில்லை,அவ்வப்போது அரசி சிவலிங்கத்துக்கு பூசை செய்வதுடன் காட்சிகள் முடிகின்றன. 

அந்த மாலிக் கஃபூர் (ங்கொய்யால பரமக்குடி வரைக்கும் வந்தவன்) ஆக்டிங்க் அப்படியே தூக்கிக்கொஞ்சலாம் போலருக்கு. (கடைசில இந்த கஃபூர் தான் அலாவுதீனையே போட்டுத்தள்ளினானாம் என வரலாறு கூறுகிறது.) திருநம்பி கதாபாத்திரம், அவர் பாடும் ஒரு அரேபியப்பாடல் ‘பிந்தே தில்’ மிக அருமை. டெஸர்ட் ரோஸ் கேட்டுப்பாருங்க அதே எஃபெக்ட் வரும். எவ்வித சமரசங்களுக்கும் இடம் கொடாமல் அந்த ஊரின் இசை., அதையும் தமிழ்ப்படுத்தியிருப்பது கொஞ்சம் இடிக்குது. அதைத்தவிர வேறெந்தப்பாடலும் எனைக்கவரவில்லை. பொதுவாவே ஹிந்தி ஹிந்துஸ்தானி பாடல்கள் தமிழுக்கு தமிழ் மண்ணுக்கு ஒவ்வாதவை. அவ்வளவு தான்.  ரஹ்மான் எதோ கொஞ்சம் மிக்ஸ் பண்ணி அடிக்கிறார்ங்கறதுக்காக அவரின் பாடல்களைக் கேட்க முடிகிறது. அவர்களின் ஒரிஜினல் மண்ணின் இசையென்றால் ஓட்டம் தான் பிடிப்பேன், 



வகை தொகையில்லாமல் கொலைகள். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. அதுவும் அந்த மங்கோலியனின் தலையையும், ஜலாலுதீனின் தலையையும் குத்தீட்டியில் குத்தி எடுத்து வருவெதெல்லாம் குரூரம். அலாவுதீனையே போட்டுத் தள்ள நினைப்பவனை கழுத்தை மட்டுமே நெருக்கி அதுவும் ஒற்றைக் கையாலேயே ..ஹ்ஹூம்.. கொடுமை. இருந்தாலும் மேவார் படைத்தளபதி தலையைக்கொய்த பிறகும் அவரின் உடல் கொஞ்ச நேரத்துக்கு காற்றில் வாள் வீசுகிறது என்பதெல்லாம் ஹிஹி..

இந்தப்படத்துக்கா இவ்வளவு பிரச்னை பண்ணினாங்க இந்த சங்கி மங்கிகள். அப்படி ஒன்றுமேயில்லையே
J  கேரக்டர்களுக்கு முகங்கள் மிக முக்கியம். அப்பதான் ஆதெண்ட்டிக்காக தெரியும். அந்த படைத்தளபதி உல்லாகான் அற்புதம். அப்படியே ஆஃப்கன் பஷ்தூன் முகம். இப்படி சில சில நகாசு செய்திருப்பதும் படத்தை அமர்ந்து பார்க்க வைக்கிறது. காற்று வெளியிடை தலைவி அதிதி இங்க கொஞ்சம் நடிக்க முயற்சி செய்திருப்பது தெரிகிறது. இவரும் படம் முழுக்க வருகிறார்.  சிஜி வொர்க் நிறைய செய்திருப்பார் போலருக்கு சஞ்சய் லீலா.

கிஞ்சித்தும் படை போர் விதிமுறைகள், நடபு பாராட்டல்கள் என எதுவுமேயில்லாத கில்ஜியும், அத்தனையையும் முறையே செய்யவேணும் என்ற மேவார் ராணாவும் அதையே சிரமேற்கொண்டு தம் நாட்டிற்கு பங்கம் வராத வரையில் முடிவுகளை எடுக்கும் பத்மாவதி அரசி என வழக்கம்போல முடிவுதான். வெகுவாக யூகிக்க முடிவது ஒரு பெரும் குறை.




.

 .

Saturday, April 7, 2018

குஸ்ரோ'வின் கவ்வாலி


இன்னிக்கு சனிக்கிழமை லீவூ :) அதனால ஹஸ்ரத் நிஜாமுத்தீன் போய்ட்டு வந்தேன்.அங்க இரண்டு அவுலியாக்களின்
( தேவதைகள்னு தமிழ்ல சொல்லலாம் ஏஞ்சல்ஸ்) சமாதி இருக்கிறது. டெல்லியில் இந்த இரு சூஃபி ஞானிகள் சமாதிகள் ஒன்றுக்கொன்று அருகிலேயே இருக்கின்றது. ஒரே காம்பவுண்டு. தர்காக்களுக்கு நம்மால் போக முடியும் அனுமதி உண்டு.( கீழக்கரை காலேஜில படிச்சவன்ப்பா :) ) இத்தனை பெரிய புகழ்பெற்ற ஞானிகளின் உறைவிடம் ஒரு சந்துக்குள் இருக்கிறது. நம்பவே முடியவில்லை. கொஞ்சம் தேடிப்பார்த்துவிட்டு பின்னர் விசாரித்து உள்ளே சென்றேன். பூ, போர்த்துவதற்கு ஒரு துண்டு,பின்னர் அவர்களுக்கேயுரித்தான அத்தர்,வாசனைப்பொருட்கள் மற்றும் ஊதுபத்தி எல்லாம் அர்ச்சனைத்தட்டு போல வாங்கிக்கொண்டு (இரண்டு) உள்ளே நுழைந்து நுழைந்து செல்லச்செல்ல  இன்னமும் புறாக்கூண்டுகள் போல உள்ளே சென்று கொண்டேயிருக்கிறது. சட்டென நிறுத்தினார் ஒருவர். என்னவென்றேன் , தலையில் ஸ்கார்ப் இல்லையே முதலில் தலை முடியை மறைத்துக் கொள்ளுங்கள், கர்ச்சீப் கட்டிக்கொள்ளுங்க என்றார்.




உள்ளே சென்றதும் எனக்கு ஒரு தயக்கம். எதில் முதலில் செல்வது என. அங்கு ஒரு இஸ்லாமியப் பெரியவர் முதலில் அமீர் குஸ்ரோ'வின் சமாதி பின்னர் நிஸாமுத்தீனின் சமாதிக்கு செல்லவேணும் எனப்பணித்தார். முதலில் சீடர் பின்னர் குரு. நான் தயங்கி நின்றதைப்பார்த்ததும் 'வாங்க நானே உங்களை அழைச்சிட்டுப்போறேன்' என சொன்னார். மும்பையில் இருந்தபோது ஹாஜி அலி, மிகப்பிரசித்தம் அங்கும் இதே போல அவர்களுக்குரிய மரியாதையுடனே தரிசிக்கலாம். பெண்களுக்கு உள்ளே அனுமதியில்லை. இங்கு ஒருவர் சிறிய பெண் குழந்தையை வெளியில் விட மனதின்றி உள்ளே அழைத்துவந்துவிட்டார். அவ்வளவு பெரிய கூட்டமெல்லாம் இல்லை. என்னை அழைத்து வந்தவர் முதலில் அந்த பெண் குழந்தையை வெளியில் அழைத்துச்செல்லுங்கள் , இங்கு பெண்கள் வர அனுமதியில்லை எனத்தெரியுமல்லவா என்றார். வெளியே போர்டில் ஹிந்தி, உர்தூ மற்றும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கின்றனர், பெண்களுக்கு அனுமதியில்லையென. வெய்யில் பிளக்கிறது வழக்கம்போல. நேற்றுப்பெய்த மழையின் சுவடு போலும் இல்லை.  வெளியில் மார்பிளில் அமர்ந்திருப்பவர்கள் சூடு தணிக்க விசிறி கொண்டு விசிறிக்கொண்டே இருக்கின்றனர். அவரைப்பார்த்தால் நம்ம ஊரில சாம்பிராணி போடுபவர் போல இருந்தது :) 

கூட அழைத்து வந்த இஸ்லாமிய பெரியவர் எங்கருந்து வர்றீங்க என்ன பெயர் என்றெல்லாம் விசாரித்தார். அந்த ஞானிகளின் உறைவிடத்தில் பொறுப்புகளில் இருப்பவர் போல தெரிந்தது அவரின் உடல்மொழி. விபரங்கள் சொன்னேன். இங்கு வருபவர் தொண்ணூறு விழுக்காடு பிற மதத்தை சேர்ந்தவர்கள் தான் பாய் என்றார். தயங்காதீங்க, கொண்டு வந்த பொருட்களை சார்த்துங்க என்றார். எனக்கு அவ்வளவு பழக்கமில்லை. முன்னப்பின்ன இது போன்ற இடங்களுக்கு சென்றதில்லை. பின்னரும் பிறர் செய்வதைப் பார்த்து பார்த்து ஒன்றன்பின் ஒன்றாக செய்தேன். சிறிய கயிறு ஒன்று நாமெல்லாம் கைகளில் கட்டிக் கொள்வோமல்லவா , அது போல ஒன்று, அதை உறைவிடம் சுற்றியுள்ள மார்பிள் ஜாலிகளில் கட்டி வைத்திருக்கின்றனர். என்னையும் அதில் கட்டிவையுங்க என்றார். நீங்க என்ன நினைத்து கட்டுகிறீர்களோ அது உடனே நடக்கும். அவுலியாக்களின் ஆசி கிடைக்கும் என்றார். எனக்கோ இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. எனக்கு என் மேலேயே நம்பிக்கை கிடையாது :)  சரி அவர் சொல்கிறாரே எனக்கட்டி வைத்தேன்.

துஆ (பிரார்த்தனை) முடிந்ததும் பின்னர் வெளியே வாருங்கள் எனக்கூறிவிட்டு அவர் வெளியே சென்று விட்டார். உள்ளேயே நின்று கொண்டிருந்தேன். பெண்கள் எல்லாம் வெளியில் அமர்ந்து எதோ ஓதிக்கொண்டிருந்தனர். அந்தச்சூழலே எனக்கு அன்னியமாயிருந்தது. இருப்பினும் எதோ ஒன்று எனை அங்கே நிறுத்தி வைத்திருந்தது.

அமீர் குஸ்ரோ ஒரு பெரிய சூஃபி கவி, அவரின் வாழ்க்கை வரலாறு நான் சிறுவனாக இருந்தபோது தூர்தர்ஷனில் இரவு ஒன்பது மணிக்கு ஒரு பெரிய மெகா சீரியலாகவே வந்தது.( நானும் ஒரு கவிஞன்தான்ப்பா :)  ) பாரசீக மன்னன் நாதிர் ஷாவின் படையெடுப்பிலும் தாங்கி நிற்கிறது. இசையால் இறைவனை அடைவது 'கவ்வாலி' பாடல்கள் மூலம் என்பது இஸ்லாத்திற்கு ஒவ்வாத ஒன்று. நம்ம நாயன்மார்கள், ஆழ்வார்கள் போல பெற்றதைப்பாடி இறைவனடி சேர்ந்தவர்கள் இவர்கள். இந்த நிஜாமுத்தீன் சூஃபி ஞானியின் பிரதம சீடர்களில் ஒருவர் அமீர் குஸ்ரோ. மாபெரும் கவிஞர்.  ஷரியத் சட்டம் சம்மதிக்குமானால்  எந்தன் சமாதியில் குஸ்ரோவின் உடலும் அடக்கம் செய்யப்படலாம் எனக்கூறுமளவுக்கு குஸ்ரோவின் கவிதைகளின் பால் அன்பு வைத்திருந்தார் நிஜாமுத்தீன் அவுலியா. சமாதியின் உள்ளில் படமெடுக்க அனுமதியில்லை. வெளியில் வந்தபிறகு நிறைய எடுத்தேன். #டெல்லிடயரீஸ்

.

Sunday, April 1, 2018

மும்தாஜுடன் ஒரு காதல்


மும்தாஜுடன் ஒரு காதல். ஆக்ரா டூர்னா ஒடனே கெளம்பிற வேண்டியது காலைல ஆறு மணிக்கெல்லாம் குளிச்சு ரெடியாகி ஆஷ்ரம் செளக் பக்கத்துல பஸ் நிக்கிதுன்னு தகவல் கிடைத்து ஒரு ரிக்ஷா வைத்துக் கொண்டு சென்றேன். இன்னமும் கால்களால் மிதித்து ஆட்களை ஏற்றிச்செல்லும் ரிக்ஷாக்கள் டெல்லியில் இருக்கின்றன. நல்லவேளை நான் பிடித்தது மோட்டர் வைத்த மிதிவண்டி. அங்கு சென்றால் இன்னமும் பஸ் வரவில்லை. வேறு டூர் ஆப்பரேட்டர்கள் களமாடிக்கொண்டிருந்தனர். ஒருவழியாக பஸ் வந்து சேர்ந்தது.

முதலில் சென்றது ஆக்ரா கோட்டைக்கு. அச்சசல் அப்படியே ரெட் ஃபோர்ட் போலவே இருக்கிறது முகப்பு. அதே நிறம். சிவப்பு ஆமா..முஸ்லீம்னாலே நமக்கெல்லாம் பச்சை'யாப்பாத்து தானே பழக்கம். என்னவோ ஒண்ணும் புரியலை. கூட வந்த வழிகாட்டிக்கு சப்தமே வெளியே வரவில்லை. அவரும் பாவம் அத்தனை வெய்யிலில் கத்தி கத்தி ஓய்ந்து விட்டார் போலருக்கு. என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கோ புகைப்படம் எடுப்பதைத்தவிர வேறு வேலையில்லாதது போல லயித்துக்கிடந்தேன். இந்தக்கோட்டையை அந்தந்தக்காலகட்டங்களில் வேறு வேறு அரசர்கள் கையில் வைத்திருந்தனர் போலருக்கு. அவ்வளவு மாற்றங்கள் ஏதும் செய்யாது அப்படியே இருக்கிறது இன்னமும்.

இருப்பினும் தொல்லியல் துறை சில பூச்சு வேலைகளை செய்திருப்பது கண்கூடு. உள்ளே செல்ல நுழைவுச்சீட்டு 40 ரூபா. நம்மூர்ல இருக்கிற கோட்டை கொத்தளம் எல்லாத்துக்கும் 15-20க்கு மேல டிக்கிட்டே கெடயாது. வடநாட்லதான் கொள்ளை. போன வாரம் போன டெல்லி ரெட் ஃபோர்ட்க்கு டிக்கிட் 35 ருபா.வடக்கு வாழ்கிறது தெற்கு தொங்குகிறது. இப்பதான் சித்ரதுர்கா கோட்டைக்கு சென்று வந்தோம் என் நண்பர்கள் அனைவரும். 15ரூவா தான் டிக்கிட்டு. ங்கொய்யால. இங்க மட்டும் என்ன?

வெய்யில் பின்னி எடுக்குது. பரமக்குடி வெய்யிலல்லாம் தூக்கி சாப்ட்ரும்போல. உள்ள செருப்பில்லாம நடந்தால் ராச துரோகத்துக்கு இன்னா தண்டனைன்னு தெரிஞ்சிக்கலாம் நண்பர்களே. அத்தனையும் மொஸைக் கல்லுல இழைச்சிருக்கான் ஷாஜஹான். ஆஹான்..அதான் வெய்யில் பொசுங்குது. மாட மாளிகை கூட கோபுரம் எல்லாம் இருந்தும் ஒரு சிற்பம் கூட இல்லை. அதுக்கெல்லாம் நம்ம தமிழன் நாடுதாண்டா. இங்க சும்மா பூவு புய்ய்ப்பம்னு கதை விட்டுக்கிட்டு இருக்காங்ய. அதிலயும் மார்பிள் ஓவியம் நெம்ப கஸ்டம் போல. ஒண்ணுமே செய்யல. வலைப்பின்னல் பண்ணினது தான் பெரிய ஆர்ட் வொர்க் போல.



ஒரே கல்லில பண்ணின குளியல் தொட்டி , நம்மூர் பெரிய கோவில்ல இருக்கும் எண்ணெய்த்தொட்டி மாதிரி இருக்கு.அதுல ஷாஜஹான் குளிச்சாராம். ஹே ராம். அரண்மனைக்குள்ள ஷீஷ் மஹல் (எல்லாமே இங்க மஹல் தான் ..ஹிஹி)னு ஒண்ணு இருக்கு. அதப்பூட்டி வெச்சிருக்காங்ய. சுவர் முழுக்க கண்ணாடி சில்ல ஒடச்சு ஒடச்சு பதிச்சு வெச்சு, உள்ள மேலெருந்து தண்ணி ஊத்தி விடுவாங்களாம். பகல்ல அப்டி கண் கொள்ளாக்காட்சியாக இருக்குமாம். ஹமாம். (குளியலறை) மனுசன் வெளயாடிருக்காண்டா.

இருப்பினும் வரலாற்றில் படித்த அந்த ஷாஜஹானின் சிறை அறையைக் காணவில்லை. எனக்குத்தான் தெரியவில்லையா இல்லை வழிகாட்டிக்கும் தெரியவில்லையா என குழப்பம். ஒளரங்கசீப் ஆட்சியை பிடித்தபின் தோப்பனாரை சிறையிலடைத்தான், அப்பால சின்னதா ஒரு சன்னல் தொறந்துவிட்டான் தாஜ் மகாலைப்பார்க்க என்ற அந்த சிறைஅறையை காணோம்.

யமுனை நதியின் ஒரு கரையில் அரண்மனை. மறுகரையில் தாஜ் மகால். அரண்மனையின் எந்தச்சாளரத்தை திறந்த போதும் தூரத்தில் தாஜ் மகல் தெரிகிறது. பாரீஸில் எந்த சன்னலைத்திறந்த  போதும் டவர் தெரியும் . அது போல..ஹிஹி.. ரசிச்சு கட்டிருக்கான்ப்பே.

அப்புறம் தாஜ் மஹால். என்னோட மைக்ரோமேக்ஸ்லயும் கூட தாஜ் மஹால் அழகாத்தான் தெரியுது. அவ்வளவு கூட்டம் நெருக்குது உள்ள போறதுக்கு. தொடர் நான்கு நாட்கள் லீவு அதனால எல்லாரும் கெளம்பி வந்துட்டாங்ய. எக்கச்சக்க ஃபோட்டோஸ் எடுத்தேன். என்னதான் ஃபோட்டோல பாத்தாலும் நேர்ல பாத்தா மேரி வராது. ஆகவே மக்களே நேரில் சென்று பார்த்துடுங்கோ. சின்ன மினியேச்சர் மாடல் ஒண்ணு பண்ணி வெச்சிருக்கு யூ.பி அரசாங்கம் அச்சசல் தாஜ் மஹல் போலவே. லைட் எஃபெக்ட்ஸ்லாம் பிரமாதமா இருக்கு. மூன்லைட் சொனாட்டா வாசிக்கலாம் போலருக்கு. அங்கயே சின்ன சின்ன தாஜ் மஹல்லாம் விற்கின்றனர் மீடியம் சைஸ் வாங்கினேன்.

எது ஒரிஜினல் மார்பிள்னு சாம்பிள் காண்பித்தார். ஒளி ஊடுருவுவது ஒரிஜினல் ஊடுருவாவிட்டால் டூப்பு.. மொபைல் டார்ச் அடித்து இன்னபிற அறை விளக்குகளை அணைத்துவிட்டு காண்பித்தார். ஜெகஜ்ஜோதீன்னா இன்னான்னு அப்பத்தான் தெரியுது. அந்த மொஸைக் கல்லில் சில பூ வேலைப்பாடுகள் அதில் ஒளியைப் பாய்ச்சினால்  பூ அதன் நிறத்தில் மிளிரும் காட்சி. காணக்கண் இரண்டு கோடிவேண்டும். அதையே மும்தாஜ் பேகத்தின் கல்லறையைச்சுற்றி வேலைப்பாடுகள் இருக்கும் உட்புற சுற்றுச்சுவர்களிலும் டார்ச் அடித்துக்காண்பிக்கின்றனர். ஹ்ம்... பிரமாதம்.



உள்ளே போவதற்கு முன் செருப்புக்கால்களோடு போகக்கூடாதாம். அதனால பேப்பர் கவர் ஒன்று தருகின்றனர். அதை செருப்புகளுக்கு மேல் (கீழ்) இட்டுக்கொண்டு நடக்கணும். மார்பிள் வீணாவதைத் தடுக்க. அந்த உறை நாலெட்டு வைத்தவுடனேயே கிழிந்து விடுகிறது.அப்புறம் சுத்தம் என்ன சுகாதாரம் என்ன? அதொடு மக்கள் கால்களிலிருந்து கிழிந்து புறப்பட்டு காற்றில் பரவி தாஜ் மகாலின் எல்லா மூலை முடுக்குகளிலும் அந்த காலுறைகள். கருமம். இதான் பாதுகாக்கும் லெட்சணம். காற்று பிய்த்து எறிகிறது தடுப்பணை போல சின்னக்கழிகளை ஊன்றி அதில் தொல்லியல் துறை என எழுதி வைத்து இருக்கும் அத்தனை பதாகைகளையும் பரப்பி அடிக்கிறது மூலைக்கொன்றாக. பரந்து விரிந்த வீதி, சமாதிக்கு செல்லுமுன். அத்தனையும் மார்பிள். பத்து யானைகள் பக்கவாட்டில் ஒன்று கூடி நடக்கலாம் போல அத்தனை பெரிய வீதி. நான்கு மினார்களிலும் மேலே செல்வதற்கு வழி இருக்கிறது எனினும் பூட்டியே வைத்திருக்கின்றனர். கோவில் பிரகாரம் சுற்றுவது போல நான்கு மாட வீதிகளையும் சுற்றி விட்டுத்தான் மும்தாஜின் சமாதியைக்காண முடிகிறது.

உள்ளூர் வெளியூர் , வெளிநாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே வழி. சின்னத்திறப்புகளில் ஸ்பெஷல் தரிசனம்லாம் கிடையாது. என்னவொன்று பூந்தோட்டமெல்லாம் சுற்றி வர வேண்டியதில்லை அவர்களுக்கு. நமக்கோ 4 கிமீ நடந்து சுற்றி வந்தால் அவர்களுடன் தாஜ் மகாலில் ஏறும் வழி ஒன்றாகத்தானிருக்கிறது. 



தாஜ் மகலில் ஏறுவதற்கு இருபது படிகள் அதீத உயரம். எங்கு திரும்பி பார்த்தாலும் யமுனை நதி.  தண்ணி ஓடுகிறது. தூரத்தில் நதியில் மேயும் ஆடுகள். போட் வசதியெல்லாம் இல்லை போலருக்கு. அந்தப்பக்க மறுகரையில் அரண்மனை. திரும்ப வரும் போது டயானா சேரில் அமர்ந்து படம் எடுத்துக்கொண்டேன். தேவையில்லாமல் யார் யாரோ ஃப்ரேமுக்குள். அத்தனை கூட்டம். இரவில் நுழைய அனுமதி மறுப்பு. சாயங்காலம் ஐந்தரைக்குள் வெளியே வந்து விட வேணும் என ஏகப்பட்ட கெடுபிடிகள்.

பின்னர் கிளம்பி மதுரா சென்றோம். அதற்குள் 8 மணியாகிவிட்டது. அந்தக்கோவில் , கிருஷ்ணன் பிறந்த இடமாம்.அதை அத்தனை இஸ்லாமிய அரசர்களும் இடித்துத்தள்ளியதை எழுதி வைத்திருக்கின்றனர். மூன்றடுக்கு பாதுகாப்பு. கையில் ஸ்டென் கன்னுடன் பல காவலர்கள். இப்பொதும் கோவிலின் கோபுரம் மசூதியின் மினார் தான். மூன்று மினார்கள். உள்ளே சென்று பார்த்தபோது உள்ளில் சிலை ஏதும் இல்லை. வெறுமனே படம் வைத்திருக்கின்றனர். கோவிலின் உட்புறம் சிறைச்சுவர்கள் போல சோடனை. சிறையில் பிறந்த கிருஷ்ணக் குழந்தை. பஜனை காதைக்கிழிக்கிறது. க்ருஷ்ண ஜனம் பூமி. வடநாட்டுக் கோவில் போல எல்லா இடங்களிலும் காவி. பிரசாதம் ரவா லட்டு. ஒரு பாக்கெட் வாங்கினேன். பிரித்து அங்கேயே ஒரு விள்ளல் தின்று பார்த்தேன். ஹ்ம்..பரவாயில்லை. எனினும் ரொம்ப நாள் வைத்திருக்க இயலாது போலருக்கு.

பின்னர் அங்கிருந்து கிளம்பி விரிந்தாவன்' சென்றோம். நான் கூட பிருந்தாவன் என்றால் தோட்டம் துறவுகளாலானது என. அப்படி ஒன்றுமேயில்லை. பிருந்தா என்றால் துளசி, வன் என்றால் காடு , துளசிகளாலான காடு என்ற பொருள். பண்டிட் விளக்கிகொண்டிருந்தார் எல்லாருக்கும் அரைத்தூக்கம். களைப்பு. ஒன்றுமே புரிபடவில்லை. அங்கு கிட்டத்தட்ட ஆயிரம் கோவில்கள் இருக்கும் போல. ஒரு பெரிய கோவில் அதை ஏற்கனவே மூடப்பட்டு விட்டது . நடை சாத்தியாயிற்று. பதினோரு மணிக்கு போனா யாரு திறப்பா ?

அந்தக்கோவிலையும் கோபுரங்களை இஸ்லாமிய மன்னர்கள் இடித்துத் தள்ளினார்களாம். பின்னர் அதைக்கட்டவேயில்லை. குறைக்கோபுரமாக இன்னமும் காட்சியளிக்கிறது. தாஜ் மகலோடு என் மைக்ரோமேக்ஸ் தம் வாழ்க்கையை முடித்துக்கொண்டது. பேட்டரி சார்ஜர் போட பஸ்ஸில் ஏதும் வழியில்லை. அதனால கிருஷ்ண ஜன்ம பூமி, பிரிந்தாவன் எல்லாம் படம் எடுக்க முடியவில்லை.

கிருஷ்ணனின் காளிங்க நர்த்தனம், பின்னர் குளிப்பவர்களின் சேலையை உருவி வைத்துக்கொண்டு என களமாடியவை எல்லாம் இங்கு தான் நடந்ததாம். ஆம். கோபிகைகள் ஒட்டுத்துணியில்லாமல் குளித்ததால் தண்டனை கொடுக்க எண்ணி கிருஷ்ணன் அப்படி செய்தாராம். பண்டிட் சொன்னார்.ஆதலால் மக்களே இனி அங்கனம் செய்யாதீர்.

தூக்கம் சொக்குகிறது. ஒண்டும் பிடிபடவில்லை. எப்படா பஸ்ஸிலமர்ந்து டில்லிக்கு போய்ச்சேருவோம் என ஆகிவிட்டது. மணி பதிணொன்றரை. பஸ் முழுக்க ஏஸி ஆதலால் உட்கார்ந்தவுடன் சட்டென உறக்கம் வந்து விட்டது. கனவில் மும்தாஜ் வந்தாள். கூடவே ஷாஜஹானும் வந்துவிட்டார். அடச்ச..க்ளீனர் பாய், சார் நீங்க எறங்கும் இடம் ஆஷ்ரம் செளக்கில் பஸ் நிக்கிது , சீக்கிரம் இறங்குங்க என்றான். அதுக்குள்ள டில்லி வந்துவிட்டதாவென இறங்கினேன். பின்னர் ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். #டில்லிடயரீஸ்