Sunday, November 30, 2014

குகைமரவாசிகள்




ஸ்ரீனிவாசன் கண்ணன் ஃபேஸ்புக்ல மெஸ்ஸேஜ் போட்ருந்தார். குகைமரவாசிகள்’ நாடகம் ‘ஆர்பிஏஎன் எம்எஸ்’ ஸ்கூல்ல சனிக்கிழமை சாயங்காலம் ஆறுமணிக்குன்னு. ரெண்டு நாட்கள் முன்னமே சொல்லிவிட்டபடியால் இன்னிக்கு இருந்த செஷன்ஸையெல்லாம் கேன்சல் செய்துவிட்டு இதற்குப் போவதற்கு ஆயத்தமாகிவிட்டேன். முகவரி கண்டுபிடிக்கிறதுதான் ஏகக்கஷ்டம் பெங்களூரில. வீட்டுக்குப் பின்னாடி தான் இருக்கும் அதுவே தெரியாது. ‘ஐ.ட்டீ’ல இருக்குற எல்லாப்பயல்களுக்கும் இதேதான் பிரச்னை.  அமேரிக்காவில எந்த ஸ்ட்ரீட்ல எத்தனையாவது சந்துன்லாம் தெளீவாத்தெரியும். பக்கத்து வீட்டுக்காரன் பேர் தெரியாது. கூகுள் மேப்’ல தேடினா ‘ட்ரினிட்டி’ சர்ச்லருந்து ரெண்டே கிமீ’ன்னு ரியல் எஸ்டேட்காரன் சொல்றமாதிரி கல்கண்டு போல தண்ணி கிடைக்கும்னு சொல்றான்.

சரின்னு மாரத்தஹள்ளிலருந்து பஸ்ஸப்பிடிச்சு ட்ரிட்னிட்டில இறங்கிக்கலாம்னு பார்த்தா அந்தப்பக்கம் போற வண்டியே வர்ல. சரி போகட்டும்ன்னு ரிச்மான்ட் ரோட்ல இறங்கி அப்டியே ஒரு ஆட்டோ வெச்சுக்கிட்டு போலாம்னு நினைச்சு ஏறிட்டேன். ஆட்டோக்காரனுக்கும் வழி தெரியலை. ‘சும்மா கர்க்கோண்டு ஹோகி அல்லி அட்ரஸ் சிக்காங்கில்லாந்த்றே தும்ப ப்ராப்ளம் ஆகத்தே சார்’ன்னு குண்டத் தூக்கி போட்றான். ‘நீ ஹோகப்பா, கேளி கேளி ஹோகத்தே’ன்னு ஆட்டோ கிடைச்சாப்போறும்னு ஏறிட்டேன்.

டிக்கின்ஸன் ரோட் அந்த ஸ்கூல் பக்கம் வரை போயாச்சு. இடையில திரு’வுக்கு போன் பண்ணி ‘தல எங்கருக்கீங்கன்னு கேட்டேன். டிக்கின்சன் ரோட் வந்துருங்க ராம்’ என்றார்.அவருக்கும் புதிய இடம்.வழி சொல்லத் தெரியவில்லை. அப்புறம் ரோட்சைட் பார்க்ல உக்காந்திருந்த போலீஸ் வுமன் கிட்ட அட்ரஸ் கேட்டா தெளிவாச்சொன்னார்..’ஸ்ட்ரெய்ட் ஹோகி ரைட் தொகு, ஃபர்ஸ்ட் பில்டிங்கு ஆ ஸ்கூலு’ தொடர்ந்து ஓட்டிக்கொண்டு வந்த பிறகு ஆட்டோக்காரரே கண்டு பிடித்துவிட்டார். ஒருவழியாக ஆட்டோக்காரருக்கு பணத்தை பைசல் பண்ணிவிட்டு (அறுபது ரூபா, மீட்டருக்கு மேல பத்து) உள்ளே நுழைந்தால் முழுக்க கார் பார்க்கிங் மாதிரி ஆளே இல்லை. நடந்து உள்ளே வரை சென்று பார்த்தேன்.ஆள் நடமாட்டமே இல்லை. பிறகு வராண்டாவில் நடந்து ஏதேனும் வழி இருக்கிறதா என நோட்டம் விட்டேன், எல்லாக் கதவுகளும் இறுகப்பூட்டிவைத்திருந்தனர். திரும்ப வர எத்தனித்த என்னை ‘மாலையிட்டவர்’
(மங்கை அல்ல) , ‘ஏனு பேகு’ என்றார் ‘இல்லா இல்லி ஒந்து ட்ராமா’ என்று இழுத்தேன். ‘ஹேளு பேகு சார்,பேக்ஸைடு ஹோகி’ என்றார். கட்டிடத்தை சுற்றிக்கொண்டு பின்னால் சென்றேன். அங்கே அத்தனை கூட்டம். ஆஹா நாடகம் தொடங்கிவிட்டது போலருக்கேன்னு விரைவாகச்சென்றேன்.

இடையில் ஸ்ரீனிவாசன் அழைத்தார். அப்புறம் சலித்துக்கொண்டார். ‘எங்க வச்சாலும் யாருக்குமே தெரியமாட்டேங்குதே’ என்று :) ஒரு பக்கம் சாயாக்கடை ஓடிக்கொண்டிருந்தது. கன்னடமும் இங்கிலீஷும் கலந்து பேசிக்கொண்டிருந்தார் ஒரு ஒடிசலான பெண்மணி. ‘அழகிப்போட்டிக்கி போறார் போல. தொளதொளவென பைஜாமா மாதிரி போட்ருந்தார். கையில் ‘சேம்சங் காலக்ஸி 4’ நோட் போலிருக்கிறது. அவ்வப்போது தடவிக்கொண்டே ‘வுட் யூ லைக் டு ஹேவ் சம் மோர் ட்டீ’ என்று பந்தி பரிமாறிக் கொண்டிருந்தார். ‘இந்தக்குளுருக்கு ட்டீ தேவயில்லை...’ என்று நினைத்து மட்டும் கொண்டேன்.

வாமணிகண்டன் விரைப்பாக நின்றுகொண்டிருந்தார். இன்னிக்கு எழுதவேண்டிய பதிவை எழுதி ப்ளாக்ல போட்டுட்டு வந்தவர் போல முகத்தில் அமைதியாக இருந்தார். ‘என்ன மணி பாக்கவேமுடியல பெங்களூர்லதான் இருக்கீங்களான்னேன்,, இங்க தான் இருக்கேன்.’ அப்ப யாரோ சென்னைக்கு மாற்றலாகி போய்ட்டாரே யாரது..ஓ தூரன் குணா’ தான் சென்னைக்குப்போய்ட்டார். ‘கொசு கடிக்கும் போலருக்கு என்றார். அதான் ஷூஸ்ல வந்திருக்கீங்கல்ல, ஒண்ணும்கடிக்காது என்றேன். அப்புறம் திரு, இவர்தான் சிறுகதை மன்னன்னு ஒருத்தரை அறிமுகப்படுத்தினார்.(அவரின் பெயர் மறந்துவிட்டது) ‘இவர் சின்னப்பயல்’ ‘சின்னப்பயல் சரி என்ன பேரு’ என்று கேட்டார். ‘இராமநாதன்’ என்றேன், ராமநாதன்னா காரைக்குடியா என்றார்..இல்ல ‘பரமக்குடீ’ன்னேன். ‘ஓ எதோ குடி’ என்றவர் தொடர்ந்து பேச அத்தனை ஆர்வம் இல்லாதவராய் கையில் ஆளுயிர க்ளாஸில் வைத்திருந்த ட்டீ’யை உறிஞ்சிக்குடிக்க ஆரம்பித்து விட்டார். ‘வாழை’ இயக்கத்தைச்சேர்ந்த ஒரு பெண்மணி , வந்திருந்த எல்லோரிடமும் ஒரு நோட்டுப்புத்தகத்தில் அவர்களின் ஈமெயில் அட்ரஸை எழுதித்தருமாறு வேண்டினார்.  சென்னை ‘டைம்ஸ் அஃப் இண்டியா’ ஆகாசமுத்து தமது ‘செல் நம்பரையும்’ சேர்த்தே எழுதினார். ஐயா வெறும் ஈமெயில் அட்ரஸ் மட்டுமே எழுதக்கேட்டார் எனக்கூறினேன்.

இப்டியே அரட்டைலயே போயிரும்போலயேன்னு நினைத்துக்கொண்டிருக்கும்போது , அதே ஒடிசல் பெண்மணி அவரின் எடையினும் கூடுதல் அளவிலான மைக்கை கஷ்ட்டப்பட்டு கையிலெடுத்துக்கொண்டு ‘ப்ளே வில் டேக் சம் மோர் டைம், தெயார் அர்ரெஞ்சிங்’ என்று கெஞ்சினார் எல்லாரிடமும். இன்னொரு முறை சாய்ப்பந்திக்கு அழைத்தார். இந்த முறை கூட்டத்தில் அத்தனை ஆர்வமில்லை சாய் குடிக்க. பனி பொழியத்தொடங்கியிருந்தது. மேலே ஏறிட்டுப்பார்த்தேன். மரம் மூடிய விளையாட்டுத்திடல் அது. இடையிடையே வானும் கொஞ்சம் மேகமும் தெரிந்துகொண்டிருந்தது. நிலவைக்காணவில்லை.

பின்னால் உள்ள மூடிய அறைகளில் இருந்து ‘ஹூ ஹா’ என சப்தம் வந்துகொண்டிருந்தது, என்ன யாரையாவது ராக்கிங்’ பண்றாங்களான்னு கேட்டேன். ‘வார்மிங்க் அப்’ செஷன் என்றார் திரு, நாடகத்திற்கான ஒத்திகை.இடையிடயே முரசொலியும் சலங்கையொலியும் கேட்டுக்கொண்டிருந்தது. லைட்டிங் அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆகிக் கொண்டிருந்தது. திரு முன்னாடி விரித்திருந்த தார்ப்பாயில் போய் அமர்ந்து கொண்டார். என்னையும் அழைத்தார். சக்கர உருளிகளிலேயே அமர்ந்து பழகிவிட்டு கீழே உட்கார்வது என்பது அத்தனை எளிதான விஷயமில்லை. அதுவும் நாடகம் ஒன்றரை மணிக்கூறு என்றும் அறிவித்திருந்த படியால் கொஞ்சம் மேடைக்குப்பக்கத்தில் உள்ள நீல்கமல் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்துகொள்ள எத்தனித்தேன். மொத்தமே சற்றேறக்குறைய எழுபது பேர் வந்திருப்பர் என்றே தோணியது.

மேலே போட்டிருந்த (சமந்தா அணிந்து ஆடிய மைக்ரோமினி’யை ஒத்த துணியிலான :) ) டெனிம் ஷேர்ட்டை இறுக்கிக்கொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு நாடகம் எப்போது தான் ஆரம்பிக்கும் என எல்லோரின் ஆர்வமும் போல அமர்ந்திருந்தேன்.

அதே ஒடிசல் இன்னுமொருமுறை மைக்கை கையிலெடுத்து ஆங்கிலத்தில் தொடர்ந்தார். நாடகத்துக்கான சின்ன அறிமுகம் என்றவர் இது ‘நல்லதங்கல்’ ‘நல்லதங்கல்’ ஸ்டோரி என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார், பின்னர் என்னைப்பார்த்து கொஞ்சம் புன்முறுவல் பூத்தார். ஹிஹி ..அது கொஞ்சம் வேறு மாதிரி இருந்தது. இனியும் இங்கு தங்குவது நல்லதல்ல என்று நினைத்துக்கொண்டு இன்னமும் மேடைக்கு அருகேயுள்ள சேரில் போய் அமர்ந்து கொண்டேன்.

முன்னதாக கட்டியங்காரன் வந்தார். எல்லோரின் கவனத்தையும் மேடை மீதிழுக்க, தொடர்ந்து பேசியவர் மறக்காமல் ‘செல்ஃபோனை; ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுங்கள் என்று கூறிக்கொண்டு சென்றார். நிலம்,நீர்,வெளி,நெருப்பு எல்லாம் கார்ப்பரேட்டுகள் கையில் சென்றுவிட்டது. மிச்சமிருப்பது ‘காற்று’ மட்டுமே அதுவும் அவன் கையில் சென்றுவிடும் என்று பயமுறுத்தினார். ரியல் எஸ்டேட், கடல் மீன்பிடி, வான் வெளி மூடியாயிற்று, நிலத்துள்ளில் கரி,வைரம் எல்லாம் கார்ப்போரேட் கைவசம். எஞ்சியிருப்பது காற்று மட்டுமே. அதுவும் பையிலடைத்து விற்கப்போகிறான். எல்லோரும் ஃபோரம் மாலில் போய் வரிசையில் நின்று வாங்கி உறிஞ்சிக் கொள்ளவேண்டியது தான் போலிருக்கிறது. கொஞ்சம் அதைப்பற்றி நினைத்துப்பார்த்தேன். உள்ளிழுத்த பெருமூச்சுக்கும் எவ்வளவு கொடுக்க வேண்டிவரும் ?!

பதினோரு ஆண்கள்,இரண்டு பெண்கள் என நடிகர்கள் மற்றும் ஒரு கட்டியங்காரன் என களை கட்டியது நாடகம். எத்தனையோ குறியீடுகள் நாடகம் நெடுக. இன்னுமொருமுறை சுழலவிட்டுப்பார்க்கவியலாத யூட்யூப் விடியோ போல காட்சிகள் நகர்ந்துகொண்டேயிருக்கின்றன. பயன்படுத்திய பொருட்களைப்பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். மரத்தால், துணிகளால் ஆன ப்ராப்பர்ட்டீஸ். அத்தனையும் கைவினைக் கலைஞர்களைக்கொண்டே உருவாக்கப்பட்டிருக்கவேணும். சலிக்க புடைக்கப்பயன்படும் முறம் கூடப்பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாம்புகள், முயல்கள், இன்னபிற கானக விலங்குகள் எல்லாம் கையில் பிடித்துகொண்டு , அவைகளெல்லாம் பொம்மைகள் போலத் தோணவேயில்லை எனக்கு. கைகளில் எந்த விலங்கு இருக்கிறதோ அதே விலங்கின் இயல்பை நடிகர்கள் வெளிப்படுத்திக்கொண்டே வலம் வருகின்றனர்.



குகைகளில் நாய்களோடு மனிதகுலம் வசித்த காலங்களை கண்முன் நிறுத்தும் நடிப்பும், மேடை அமைப்புகளும், எதோ ஷங்கர் படத்தில் அரங்க அமைப்பு என நினைத்துவிடவேண்டாம். அத்தனையையும் நம் மனக்கண் முன்கொணர்ந்து நிறுத்திவிடுவது போலான நடிகர்களின் பாவங்களும், அங்க அசைவுகளும் வேறேதும் யோசிக்கவைக்காது முழு மனத்துடன் நாடகத்தோடு ஒன்றிவிட வைக்கிறது.

ஆதிவாசிகள் கிடைக்கும் பொருட்களை உண்டு,கண்ணில் கண்ட விலங்குகளை அடித்துக்கொன்று உண்ட காலங்கள் அவை. கிடைக்கும் பொருட்களை ஒன்றாகக்கிடத்தி தமது எல்லையை வகுத்துக்கொள்ள அவற்றைச்சுற்றி ஒரு வட்டம் போடும் இடம் அருமை. ‘இந்தப்பொருட்களெல்லாம் என்னோடதுடா, மவனே எவனாவது கைய வெச்சீங்க’ன்னு கேட்பது போல அவர்களின் முகபாவனைகளும் கைகளில் வைத்துக் கொண்டிருக்கும் வளைந்து நெளிந்த குச்சிகளும் அதிரவைக்கிறது. எல்லை வகுப்பது என்பது இன்னமும் விலங்குகளின் இயல்பு. சில விலங்கினங்கள் சிறுநீர் பெய்து வைத்தும்,இன்னபிற தமது எல்லைக்கு உட்பட்டவற்றை சண்டையிட்டுப் பாதுகாப்பதும் டிஸ்கவரி’யில் தினம் பார்க்கும் நிகழ்ச்சிகளுள் ஒன்று.

இதனூடே காதலும் முகிழ்க்கிறது அதற்குத்தயாரான இருவரிடம். அதில் பெண்ணாக நடித்தவர் ஒரு சின்ன தாவணியை மேலாக போர்த்திக்கொண்டு வந்தார், ஆணான இன்னொருவர் எலும்பும் தோலுமாக ஒரு பலமான காற்று அடித்தாலும் முறிந்து விடுவது போலான தோற்றத்திலிருந்தார். எனக்கென்னவோ இந்த ‘எலும்புந்தோலும்’ பெண்ணாக நடித்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்குமென தோன்றியது. ஒருவேளை கான்றாஸ்ட்டாக இருக்கட்டும் என்று ‘முருகபூபதி’ நினைத்திருக்கக்கூடும். இத்தனை நாளும் எப்போதும் சலைன் ஏற்றிக்கொள்ளும் படியான தேகமே அழகிய பெண்ணுக்குரித்தானது என கார்ப்பரேட்டுகள் ஆக்கி வைத்த மனநிலை கூட என்னை அவ்வாறு யோசிக்க வைத்திருக்கலாம். முயங்குவதும் பின்னர் குழந்தை பிறப்பதும் ,,ஹ்ம்,, இதே நம்ம தமிழ் சினிமாவாக இருந்தால் பார்த்துக்கொண்டிருந்த அத்தனை பேருக்கும் . அரங்கத்திலேயே கூட குழந்தைகள் பிறந்திருக்கும் ‘அந்த’க்காட்சிகளைப்பார்த்து. இங்கோ ஒரு துளி ஆபாசமில்லை. இத்தனைக்கும் பெண்கள் தவிர நடித்த அனைவருக்கும் மேலாடை என்ற ஒன்றே எப்போதும் இல்லை நாடகம் முழுக்க. பெண்களுடைய உடையும் வேறு எதையும் நினைக்கவைக்கத் தோணாத ஒன்றாகவே இருந்தது.

ஒரு காட்சியில் , திறவுகோல்களை ஒவ்வொரு கதாபாத்திரமும் தம் கைகளில் வைத்துக்கொண்டு அவர்களையடுத்தவர்களின்  மூளையைத்திறப்பது போலவும். தம்மையும் திறந்து கொண்டு அடுத்தவரையும் திறக்க வைக்கும்படியான முயற்சியாக அந்தக்காட்சி, அப்போது அத்தனை நடிகர்களும் முகமூடி அணிந்திருந்தனர். திறவுகோல்களின் பணி முடிந்ததும் அத்தனை நடிகர்களும் முகமூடிகளைக் கழற்றி கீழே வைத்துவிட்டனர். பார்த்துக்கொண்டிருந்தவர்களை நோக்கியும் நடிகர்களின் கையிலிருந்த திறவுகோல்கள் திருகின. எத்தனை பேர் முகமூடியை கழற்றி வைத்தனரோ தெரியவில்லை.இதுபோல பல குறியீடுகள் நாடகம் முழுக்க. அத்தனையையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளத்தான் இயலவில்லை.

இசை பற்றிக்குறிப்பிட்டே ஆகவேண்டும். இதுவரை கேட்டிராத ஒலிக்கோவைகள். பெரிய முரசுகள் வைத்துக்கொண்டு சப்தமெழுப்பி அரங்கை அதிரவைப்பதும், சின்னதாக இடுப்பில் கட்டிக்கொண்டு, தண்டோரா போட வருபவர் போல, சின்ன முரசுகளை வைத்து நுட்பமான இசையை எழுப்புவதும் , இன்னமும் பெரிய ஊதுகுழல்களை வைத்து அரூபமான,அமானுஷ்யமான ஒலிகளை ஒலிப்பது என , இதுகாறும் செவ்வியல், மற்றும் இன்னபிற மேற்கத்திய இசைகளையே கேட்டுக்கொண்டிருந்த என் காதுகளுக்கு இன்பத்தேன் வந்து பாய்ந்தது. என்ன ஒரு ஆச்சரியம் ‘ ஒரு பார்வையாளரின் செல்ஃபோன் கூட ஒரு தரம் கூட ஒலிக்கவேயில்லை. அத்தனை பேரும் ஆஃப் செய்து விட்டிருந்தனர். நல்ல செய்தி நேரில் நடக்கும்போது தேவையற்ற அழைப்புகளுக்கு செவிமடுக்க யாருக்குத்தான் மனது வரும் ?!

இடையே கட்டியங்காரர் வந்து சோகத்திலும்,ஆழ்ந்த இறுக்கத்திலும் சூழ்ந்து போய்க்கிடந்த பார்வையாளர்களின் குழு மனநிலையை மாற்றவேண்டி அடையாள அட்டை பற்றி கலாய்த்தார். எங்க போனாலும் அடையாள அட்டை கேக்றான், நாடகம் பார்க்க வந்தவனுக்கும் , நடிக்கிறவனுக்கும் அடையாள அட்டை எதுவும் தேவையில்லை, ஆனா எல்லாம் முடிஞ்சு இந்த ராத்திரில வெளிய தெருவில போனீங்கன்னா அடையாள அட்டை கேப்பான், எல்லாரும் எடுத்துவெச்சுக்குங்க என்று கூவினார். அடையாள அட்ட, மொகரக்கட்ட, உத்திராட்சக்கொட்ட :) ஆதார் அட்டை இறைவனுக்கும் கூட இருக்கிறது. லார்ட் ஹனுமான் தனக்கு அடையாள அட்டை வாங்கிவைத்துள்ளதாக செய்தித்தாளில் பார்த்தேன்.

பிறகும் தொடர்ந்த நாடகம் வழக்கத்துக்கும் மாறான சோகத்தைப்பிழிந்தது. கட்டாந்தரை, பனி பெய்து நனைந்து கொண்டிருக்கிறது நிலம். வெட்டவெளியிலான விளையாட்டுத்திடல் அது. நடிக்கும் அனைவரும் மேற்சட்டை என எதுவும் அணியாது தொடர்ந்து ஒன்றரை மணிக்கூறாக நடித்துக்கொண்டிருக்கின்றனர். இத்தனை நாட்கள் பெங்களூரிலேயே இருந்த எனக்கே குளிர் தாங்க இயலவில்லை. இடையிடையே சமந்தா ஷேர்ட்டின் பட்டன்களை சரியாகப்பூட்டிருக்கிறேனா என சரிபார்த்துக்கொண்டிருந்தேன். அத்தகைய நிலத்தில் வெறும் முதுகோடு விழுவதும், புரண்டு அழுவதும் என ஒரு விகல்பமுமின்றி நடித்துக் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட நல்ல தாய்த்தமிழ் பேசி நடிக்கும் நடிகர்களை விட்டுவிட்டு மொழியின் வாசனை போலும் அறியாதவரைக் கொணர்ந்து, அவருக்கு கரிய சாயம் பூசியெல்லாம் நடிக்க வைக்க வேணும் என்ற அவசியம் ஏன் நேர்ந்தது ? கொடுமை.!

வலையில் மாட்டிக்கொள்வது போல ஒரு காட்சி, ‘ஐ.ட்டீ’ கம்பெனியில் மாட்டிக்கொண்ட ஒவ்வொரு இந்தியக்குடிமகனையும் நினைத்துப்பார்க்க வைக்கும் காட்சி அது. அத்தனை பேரும் கீழே விழுந்து கிடக்கின்றனர் கட்டாந்தரையில் உடுப்புகளின்றி நினைத்துப்பார்க்கவே இயலவில்லை இந்தக்குளிரில் என்னால். அவர்களுக்கு வெய்யிலும் மழையும் பனியும் ஒரு பொருட்டில்லை. இது எனது மண் எனது நிலம் எனது மழை எனது பனி என்ற எண்ணமே அவர்களிடம் மேலோங்கி நிற்கிறது.

நடிப்பவர் அடித்துக்கொண்டு அழுகின்றனர், புழுதி வாரி இறைக்கின்றனர்,அமர்ந்திருந்த ஒவ்வொரு பார்வையாளனின் சட்டையிலும் அந்த திடலின் ஒரு துளியாவது ஒட்டியிருக்கும். இசைக்கருவிகளின் ஒலியைக்காட்டிலும் அவர்கள் தம் நெஞ்சிலும், தொடைகளிலும் அடித்துக்கொண்டு அழும் ஒலி ஓங்கி ஒலிக்கிறது. குழந்தை பொம்மைகளை ஒவ்வொருவரும் பிடித்துக்கொண்டு நின்றும் நடந்தும் அலைந்து கொண்டும்,அமர்ந்தும் பாராட்டி சீராட்டி பின்னர் காவு கொடுக்க எத்தனிக்கும் காட்சி மனதைப் பிழிந்துவிட்டது. அனைத்து விளக்குகளும் அணைந்தவுடன் எங்கிருந்தோ ஒலித்த கரவொலி கேட்டதும் நிமிர்ந்து அமர முடிந்தது என்னால். நாடகம் நிறைவடைந்தது.

மேடையில் தோன்றி நடித்த அத்துணை கலைஞர்களையும் ஒரு சேர வரிசையில் அமரவைத்து நடுநாயகமாய் முருகபூபதியும் தோன்றினார். நாடகம் பற்றிய கருத்துகளை வரவேற்கிறோம் என கூட்டத்தைப் பார்த்து மொழிந்தார்.ஒவ்வொருவராக கேள்வி கேட்கத்தொடங்கினர்.‘ஹோசூர் பா.வெங்கடேசன்’ கேள்வி எதுவும் கேட்காமல் தமக்கு புரிந்த நாடகத்தை விளக்கினார். கம்ப்யூட்டர், செல்ஃபோன் என்ற ஆங்கிலச்சொற்களை கட்டியங்காரனின் இலகுமொழியில் மட்டுமே கேட்கவியலும் என்றும் நாடகத்தினுள்ளில் அதற்கு இடமில்லை எனக்கூறினார்.

பின்னர் ஒலிவாங்கியை வாங்கிக்கொண்ட வாமணிகண்டன் , ஒரு தனிமனிதனால் இத்தனை பெரிய கார்ப்போரேட் சாம்ராஜ்யத்தை அசைத்துப்பார்க்கமுடியுமா என அவரின் எழுத்துப்போன்ற அதே பாமரத்தனத்துடன் கேட்டார், அதற்கு முருகபூபதி கூறிய அறிவார்ந்த பதில் என்னை மிகவும் கவர்ந்தது. ‘ஒரு நல்ல சமகால எடுத்துக்காட்டு ‘இடிந்தகரை’ ஒரு மீனவன் எதிர்க்கத்துணிந்து அத்தனை மீனவ சமூகமும் அவனைப்பின்தொடர்ந்து முன்னெடுத்த ஒரு போராட்டம் இடிந்தகரை, எனது சக நடிகர்களோடு போய் அவர்களுடன் தங்கி அவர்களின் மனநிலையை அறிந்தவன் ,ஆதலால் தனிமனிதன்,இனியும் முடியுமா என்ற கேள்விகள் எக்காலத்துக்கும் பொருந்தாது’ என உரைத்தார். போராட்டம் என்பது எக்காலத்திலும் இருந்துகொண்டுதானிருக்கிறது. அதைப்பார்க்க மட்டுமேவென் வெறுமனே பார்வையாளனும் இருந்து கொண்டு தானிருக்கிறான்.

பின்னர் ஒலிவாங்கி கிடைத்த சிலரும் நாடகம், அதன் அமைப்பில் விளங்கவில்லை இன்னமும் எல்லோருக்கும் புரியும் வண்ணம் படைத்திருந்தால் சிறப்பாக இருக்குமென தெரிவித்தனர். ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட பெண்மணி, நாடகத்தில் அவருக்குப்புரிந்த ஆங்கிலப்பாகத்தை மட்டுமே கவனித்து அதை மட்டும் நோக்கியே கேட்டார். டிஸ்ப்ளேஸ்டு பீப்பிள்ஸ் பற்றி தான் கேட்டுக்கொண்டிருந்தார், வேலையின்றி வெளி நாடுகளுக்கும், மானிலங்களுக்கும் செல்லும் உழவர்கள் இன்னபிற தொழிலாளர்கள் பற்றிய பதிவாக ஆங்கிலத்தில் இடம் பெற்ற அந்த நாடகக்காட்சிகளைப்பற்றிய கேள்வியாக அது அமைந்தது.

பின்னர் நேரம் கடக்க ஆரம்பித்ததும் , சரி இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என அறிவித்தபின் அனைவரும் கலைந்து சென்றனர். பின்னரும் நாங்களெல்லோரும் குழுவாக சேர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தபோது ‘எழுத்தாளர் கோணங்கி’ எங்கள் அருகே வந்தார். பணிவாக ‘வணக்கம் சார்’ என கை குலுக்கினேன். எந்தவித தயக்கமுமின்றி முன் பின் அறிந்திராத என்னுடன் கை குலுக்கினார். என்னளவே உயரம் அவருக்கு, அவரின் உடலைப்பற்றி மட்டுமே கூறினேன். நிறையப்பேச நினைத்த காதலன் போல காதலி முன்னால் எதுவும் பேசவியலாது நின்று கொண்டிருந்தேன். புரிந்துகொண்டவராய் வேறு பக்கம் பார்வையைத் திருப்பி கூட நின்ற பிறருடன் பேசத்தொடங்கினார். நான் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன். பிரபலமானவர்கள் நம்மிடம் வந்து பேசுவது இயல்பாக இருக்கிறது அவர்களுக்கு, நாம் ஆரம்பிப்பது தான் ஆகக்கடினமான ஒன்றாக இருக்கிறது.

நேரம் கடந்து கொண்டிருந்தது, பனி அடித்துப்பெய்ய ஆரம்பித்துவிட்டது. விடை பெற்றுச்செல்ல ஒவ்வொருவராய் தேடிக்கொண்டிருந்தேன்.. ஸ்ரீனிவாசன் வாங்க ராம் நம்ம வீட்டுக்குப் போய்ட்டு அப்புறம் காலைல போகலாம் என்றார். இருப்புக்கொள்ளவில்லை எனக்கு, இப்பவே மணி ஒன்பது ஆகிவிட்டது, ஆட்டோக்காரன் இத்தனை நாள் வைத்திருந்த ஆட்டோவின் விலை கேட்பான் பக்கத்திலிருக்கும் கருடா மால் செல்வதற்கு என்ற பதைபதைப்பு என்னை வாட்டியது. சரி நான் கிளம்புகிறேன் என்று செந்திலிடமும் திருவிடமும் கையசைத்து விட்டு வரும் வழியில் கோணங்கி ஐயா நின்று கொண்டிருந்தார். சிறிதே புன்னகைத்தவாறே அவரைக்கடந்து சென்றேன்.எல்லாம் நாடகம் தான். நடிப்புதான். எனக்கு உள்ளுர நடுங்கிக் கொண்டிருந்ததை மறைத்து புன்னகைத்துக்கொண்டே அவரைக்கடந்தேன்.

‘இதர் ஸே ஜாவூன்’ என்று கேட்டவாறே ஆட்டோக்காரர் மீட்டர் போட்டுக்கொண்டார் ஆச்சரியந்தான். இத்தனை இரவிலும் மீட்டர். பின்னர் கருடா மாலில் இறங்கியதும் மீட்டர் காட்டிய மினிமம் 25ஐ மட்டுமே என்னிடம் வாங்கிக்கொண்டதும். இறங்கி நின்றுகொண்டிருந்தபோது வழியே வந்த முன்னூற்று முப்பந்தைந்தை கைகாட்டி நிறுத்தி ஏறி எனது குகை வந்து சேர்ந்தேன். என்னைப்பார்த்துப் புன்னகைத்த அந்த ஒடிசல் பெண்மணியிடம் ஃபோன் நம்பர் கேட்காது வந்துவிட்டது மட்டும் உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதனாலென்ன இன்னுமொரு நாடகம் இன்னுமொரு ஒடிசல் ,.இன்னொரு ஃபோன் நம்பர் ! :)


Monday, November 17, 2014

ஸ்ருதி’லயம்




ஸ்ருதிஹாசனுக்கு பெயர் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த நல்ல படமோ இல்லை நடிப்பதற்கான வாய்ப்புகளோ இன்னும் அமையவில்லை இவருக்கு. எனினும் தொடர்ந்தும் நடிப்பிலேயே கவனம் செலுத்தி வருகிறார். அது அவரின் தனி மனித சுதந்திரம்.அதைப்பற்றி கூற வரவில்லை நான். இன்னொரு அழகிய முகம் இருக்கிறது அவருக்கு, அதுதான் இசை! இவர் நல்ல பாடகியும் இசையமைப்பாளரும் கூடத்தான். என்ன கொஞ்சம் வெஸ்ட்டர்னில் பாடுகிறார் அதுதான் குறை. இன்னபிற ராகங்களையும் தொடர்ந்தும் பாட அவரால் இயலும். அழகிய குரல், இப்போதைய பெண் பாடகர்களுள் சில நல்ல பாடல்களைப்பாடுவதற்கான வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.

பாடியே தனது திறமையை , தம்மை இந்த கலையுலகிற்கு அடையாளப்படுத்திக்கொண்ட இவர் , நடிக்கவும் செய்கிறார் என்பதும் , எனினும் அது இவரின் இரண்டாவது தெரிவாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. இதுவரை எந்தப்பெண்ணும் செய்யாத கதாபாத்திரங்களோ இல்லை யாரும் தொடத்தயங்கும் பாத்திரங்களோ இதுவரை அவர் செய்ததாகத்தோணவில்லை. இனியும் இவரின் பாதை ‘ஐந்து’ ஆண்டு சாதாரண எந்த ஒரு கதாநாயகியும் செய்யும் கதாபாத்திரங்களாகத்தான் தொடரவும் போகிறது.

மேலும் அவரின் டாம்பாயிஷ் லுக் , ஒரு கதாநாயகியாக ஏற்க வைக்க மறுக்கிறது என்பது தான் உண்மை.
நளினங்கள், சீண்டல்களுக்கான மடங்கல்கள் எல்லாம் இவரால் சாத்தியமாகக்கூடியதில்லை. அதோடு வேறுமாதிரி பார்ப்பதற்கும் இயலவில்லை. :) வேண்டுமானால் ஒரு ‘லேடி டெர்மினேட்டர்’ போன்று படங்களில் நடித்தால் பெருத்தமாயிருக்குமோ என்னவோ ..:) எனது பார்வையில் சேலையை வைத்து மறைக்காது மார்க்கச்சைகளை வெளிக்காட்டுவதும், முலையிடுக்குகளை ஒருக்கிக்காண்பிப்பதும் இவருக்கு ஒத்துவராத ஒன்று.

சரி அதெல்லாம் இருக்கட்டும் இதை இவர் செய்யத்தான் வேண்டுமா,? ஆன்ரியாவும் நன்றாகத்தான் பாடுகிறார், ஆனால் இதுவரை அவர் இசையமைப்பை இசைக்கோர்ப்பை கையிலெடுத்ததாக தெரியவில்லை. ஆல்பங்களோ இல்லை திரைக்கு இசைக்கவோ எப்போதும் முனைந்ததில்லை. என் எஸ் கே ரம்யா’வையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம். மேலைத்திய/அமேரிக்க பாடகிகளைப்போல ஒரு ப்ரிட்னி ஸ்பியர்ஸ், அல்லது ஒரு மரியா கரே, இப்போது வந்து கலக்கிக்கொண்டிருக்கும் சின்னப்பெண் ‘ஏரியானா க்ராண்டி’ போல இங்கு யாரும் இல்லை. பெண் பாடகிகள் ஆல்பங்கள் செய்யக்கூடிய அளவில் இல்லை என்பது ஒரு குறை. மும்பையில் பாப் டீவா’க்களாக சிலரே கொஞ்ச காலம் வலம் வந்தனர். ‘அலீஷா சினாய்’ ராகேஷ்வரி, ஷரோன் பிரபாகர், சுனிதா ராவ், நம்ம வசுந்தரா தாஸ் போன்றவர்கள் நன்றாகப் பாடக்கூடியவர்கள் என்ற அளவில் நின்றுவிட்டவர்கள். அவர்களின் ஆல்பங்களும் சில முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் உருவானவை, கோர்க்கப்பட்டவை மேலும் கட்டமைக்கப்பட்டவை என்று சொல்லலாம்.



ஆனாலும் ஸ்ருதி பல படிகள் மேலே போய் ,ஒரு திரைப்படத்தின் பாடல்களை மட்டுமே இசைக்காது அதன் பின்னணி இசையையும் சேர்த்தே , மிகவும் ஒரு சேலஞ்சிங்கான படத்தின் – உன்னைப்போல் ஒருவன்’ - பின்னணி இசையையும் அமைத்தவர். பாடல்களுக்கு ராகங்கள் தேர்ந்தெடுப்பது, பாடகர்களைப் பாடவைத்தல் என்பனவெல்லாம் அத்தனை எளிதல்ல. இருப்பினும் பின்னணி இசைக்கோர்ப்பு என்பது மிகவும் சவாலான விஷயம். அதையும் கமல் படத்திற்கு செய்து காட்டி அவரிடமே பாராட்டும் பெற்றவர்.  தமது மகள் என்ற காரணத்துக்காக அவர் அந்த வாய்ப்பை அத்தனை எளிதில் பெற்றுவிடவில்லை. அதை கமலே சில இடங்களில் குறிப்பிட்டிருந்தார். எதோ ஒரு படத்துக்கு இசையமைத்துவிட்டார் என்பதற்காக இந்தக்கட்டுரை இல்லை. இனியும் தொடர அத்தனை திறமைகளையும் தம்முள்ளே கொண்டவர் என்பதால் தான்.

இத்தனை திறமைகள் இருந்தும் இன்னும் ஏன் இவர் சாதாரண கதாநாயகிகள் போல், எப்போதும் போல மரத்தை சுற்றி டூயட் பாடிக்கொண்டும்,ஹீரோவின் பின் அலைபவர் போலவும் நடித்தே ஆகவேண்டிய கட்டாயம் என்ன இருக்கிறது அதைச்செய்ய பலர் இருக்கின்றனர். விஜய் டீவி கமல் ஐம்பதில் , சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் பாடிய அந்தப்பாடல் ‘நினைவோ ஒரு பறவை’ என்ற அந்த வானத்தில் சஞ்சரித்தல் போலான ஒரு ஹல்லூசினேஷன் பாடலைப்பாடி அதை ஹேராமின் ’நீ பார்த்த பார்வைக் கொரு நன்றி’யுடன் கொண்டு வந்து சேர்த்தார். ராஜாவே எழுந்து நிற்க எத்தனித்தார் அப்போது, அந்த ராட்சசன் அத்தனை எளிதில் யாரையும் தம் வாய்திறந்து பாராட்டுவதே இல்லை என்பது ஈரேழு பதினாலு லோகங்களும் அறிந்தது. அத்தனை எளிதில் அவரைப்பாடியோ இல்லை தமது இன்னபிற கலைத்திறமைகளைக் காட்டியோ புளகாங்கிதம் அடையச்செய்தல் என்பது பகீரதப்பிரயத்னம் ( ஹ்ம்.. என்ன ஒரு மாதிரி போகுது சொற்களெல்லாம்...’முரசு’ செய்யும் வேலை :) ) தமது சொந்தப்பிளைகளையே மனந்திறந்து பாராட்டாதவர். அவரையே வியப்புக்குள்ளாக்கியவர் நம்ம ஸ்ருதி. மேலும் இந்தக் கட்டுரையின் அடிநாதமே ‘அந்த’ ஒரு நிகழ்வுதான் :)

இத்தனை திறமையுள்ளவர் எதற்காக எல்லோரும் செய்யும் அந்த நடிப்பை செய்யவேணும். கமலும் இவரைவிடவும் இசையில் பல அநாயாசமான லெவல்களைக்கடந்தவர் ,ஆழ்ந்த அறிவைக்கொண்டவர். அவரே இசைக்கத்துணிந்ததில்லை. நடிப்பு, பாட்டெழுதுதல், வசனம். கதை, இயக்கம் என அறுபத்துநான்கு கலைகளையும் அறிந்த அவரே இசைக்க வந்ததில்லை.

இப்போதிருக்கும் ஜெனரேஷனுக்கு ஒரு பாடலை எழுதி மெட்டமைத்து அதை கேசியோ அல்லது யமஹா கீபோர்டில் இசைத்து யூட்யூப்பிலும் ஏற்றி ஊர் சுற்ற விடுவது என்பது சாக்லேட்டின் கவரைக்கழற்றி உண்பது போல மிகச்சுலபமான விஷயமாகி விட்டது. இருப்பினும் பலரையும் திரும்பிப்பார்க்கவைக்கும் படியான அதுவும் அந்தத்துறையில் ஜாம்பவான்களையே வியக்கவைக்கவும் திறமை இவருள் ஒளிந்து கிடக்கிறது.அதை இவர் ஏன் மேலும் மெருக்கூட்டக்கூடாது ?!

இந்தியத்திரையில் இது வரை பெண் இசையமைப்பாளர்கள் என பெயர் சொல்லுமளவிற்கு யாரும் இருந்ததில்லை. இப்போதைய ஸ்நேஹா கன்வல்கர் என்று ஹிந்தியில் ‘கேங்க் ஆஃப் வாஸிப்பூர்’ படத்திற்கு இசைத்து பெயர் பெற்றவர், அவராலும் ஜனரஞ்சக இசை என்ற ஆல்பங்களைக்கொடுக்க வியலுமா என்பதும் சந்தேகம். தென்னிந்திய திரையில் பெண்கள் பாடகிகளாக மட்டுமே வலம் வந்து பின் காலப்போக்கில் மறைந்துவிடுவது தான் நடக்கிறது. பானுமதி ராமகிருஷ்ணா ஒன்றிரண்டு படங்களுக்கு மட்டுமே அந்தக்கலத்தில் இசைத்தார் என விக்கிபீடியா கூறுகிறது. சகலகலாவல்லியான அவராலும் இசையமைப்புத்துறையில் நிற்கவியலவில்லை. பின்னர் சில காலம் முன்பு தெலுங்கில் ஒரு பெண் இசையமைப்பாளர் கொஞ்ச காலம் பணியாற்றினார் என்று நினைக்கிறேன். (பெயர் மறந்துவிட்டது) பிறகு அவரும் முழுமையாகத் தொடரவில்லை.

திரைத்துறையில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், பாடல் புனையும் கவிஞர்கள், நடன இயக்குநர்கள், என எல்லாத்துறையிலும் பெண்களின் பங்களிப்பு இருக்கும்போது இந்த இசையமைப்புத்துறையில் மட்டும் ஏன் இல்லை..?! என்ன காரணம் என எனக்கு விளங்கவேயில்லை.

இசையில் இசைத்துறையில் ஒரு வலுவான பின்புலம் உள்ள ஸ்ருதியால் இன்னும் பல சாதனைகள் புரியவியலும், வெறுமனே மரம் சுற்றும் கதாநாயகியாக நடிப்பதைத்துறந்து களமிறங்கினால்.சாதிக்க வேண்டியது எத்தனையோ இருக்கிறது.