Monday, May 26, 2014

தமிழ் ராக்ஸ்




தமிழில் ராக் இசை எப்போதும் வெகு குறைவாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிரடியான ட்ரம்ஸின் பீட்ஸுகளும், காதைக்கிழிக்கும் எலக்ட்ரிக் கிட்டார்களின் நொடிக்கு மூன்றாயிரம் கார்ட்ஸுகளுமாக அதகளம் செய்யும் ராக் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அத்தனை பிடித்தமில்லை. தமிழ் இசையில் தாரை, தப்பு, பறை போன்ற இசைக்கருவிகள் எத்தனையோ இருப்பினும் ( பெர்குஷன் வகையில் ) அவை அத்தனை டெஸிபல்கள் ஏறி நம்மை நிலைகுலைய வைப்பதில்லை. ஆடவும் கொண்டாடவுமாக அளவோடே ஒலிக்கக்கூடியவை. மத்தளம் கூட குச்சியும் கைவிரல்களுமாக வைத்து வாசிக்கப்படுவது அத்தனை எளிதில் நம்மை அதிரவைப்பதில்லை. கோவில் , திருவிழாக்காலங்களில் அருகில் நின்று கேட்பவரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் இவை இருப்பினும் தமிழ்க்குடிகள் போல மகிழ்ச்சியையும், துயரத்தையும் கொண்டாடும் மனப்பாங்கு யாரிடமும் இல்லை. அதே தாரை,தப்பு மற்றும் மத்தளங்கள் இறப்பிற்கும் பிறப்பிற்கும் இன்னபிற சடங்குகளுக்கும் வாசிக்கப்படவே செய்கின்றன. பட்டையைக்கிளப்பும் இந்த இசை மேளதாளத்தோடு எரியூட்டப்படும் இடம்வரை ஒலிக்கும் தமிழ்நாட்டில்.

இதே யோசனையோடு ராக் இசை பற்றிய குறிப்புகளையும் இங்கு தரவிரும்புகிறேன். ஃப்ரீக்கி அட்டிட்யூட், அடித்து துவம்சம் செய்வது, எதைப்பற்றியும் கவலை கொள்ளாதிருப்பது அல்லது அனைவரின் கவனத்தையும் திசை திருப்பி இதுவரை தாங்கள் யோசித்துக் கொண்டிருந்தவற்றை அடியோடு மறக்கச் செய்து தம்பக்கம் விருப்பமுடனோ இல்லை விருப்பமின்றியோ, இத நிறுத்தித் தொலையேன் என கதற வைக்கும் இசையாகவே உருவெடுத்த ராக். இளவயதில் அனைவரின் கவனத்தையும் அவரறியாமலேயே கவர்ந்து விடும் ராக், காலப்போக்கில் அவர்தம் மெச்சூரிட்டியில் இந்த இசைப்பாங்கு பிடிக்காது போவது இயல்பு. அளவுக்கதிகமான ஒலியும் அடித்து தூள் பறத்தும் இரைச்சலும், இன்னநேரத்தில் இந்த பீட்ஸ்கள் விழுமென எதிர்பாராது வந்துவிழுபவையுமாக ராக் தொடர்ந்தும் ஆட்சி செய்கிறது. ‘ஜாஸ்’ல் இது மாதிரியான பீட்ஸ்களை காணவியலாது. பாப்’ இசையிலும் இதுபோலில்லை. ஹிப் ஹாப், ராப் இசை தொடர்ந்து ஒரே மாதிரியான தாளக்கட்டுகளுடன் கேட்பவரை சலிக்க வைக்கும் தொடராக ஒலிப்பவை, இவற்றிலும் பாடலின் முதலில் கவனத்தைக் கவர அதிரடியாக ஆரம்பித்தாலும் பின்னர் வழக்கம்போல தாமாக பீட்ஸ் குறைந்து ரிப்பீட் ஆகத்தொடங்கிவிடுபவை.

எம்எஸ்வி காலத்திற்கு முந்தைய திரைப்படங்களில் ராக் இசை என்பது இல்லவே இல்லை எனலாம். அப்போதெல்லாம் ராக்-அன்-ரோல் என்ற ஆட்டத்திற்கென வாசிக்கப்பட்ட இசையே பிராதனமாயிருந்தது. சந்திரபாபு பாடிய பல பாடல்கள், நாகேஷ் ஆடிய பாடல்கள் எல்லாம் அந்த வகையிற்சேர்ந்தவை. உத்தமபுத்திரனில் சிவாஜி ஆடிய ‘ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு’ சந்திரபாபு பாடிய ‘ஒன் ட்டூ த்ரி ஃபோரு’ எல்லாம் அந்நாளைய ராக்-அன்-ரோல் பாடல்கள். நிறைய எடுத்துக்காட்டுகள் சொல்லிக்கொண்டே போகலாம். அப்பொதே ராக் இசை தமிழில் இடம் பெறத்தொடங்கிவிட்டாலும் மென்மையாகவே ஒலித்தன. அவற்றின் தன்மையின்றி அதிரடிகள் எல்லாம் குறைத்து , ஜாஸ் கலந்து கேட்பவனின் காதுகளைப்பதம் பார்க்காது ஒலிக்கச் செய்யப்பட்டன. எம்ஜியாரின் ‘ என்னைத்தெரியுமா நான் சிரித்துப்பேசி கருத்தைக் கவரும் ரசிகன்’ என்ற பாடல் அந்நாளைய ஜாஸ் கலந்து பின்னர் ட்விஸ்ட் நடனத்திற்கேற்ப இசைக்கப்பட்ட அருமையான பாடல். எனது விருப்பத்தில் எப்போதும் அமர்ந்திருக்கும் பாடல் அது. பின்னர் ஒரு விளம்பரத்திற்காக அது ரிக்கிரியேட் செய்யப்பட்டது. அது இன்னமும் மெருகு கூடி எப்போதும் அழியாது நிலைத்தது.

‘வண்ணக்கிளி சொன்ன மொழி’ , ‘கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா’, ‘கண் போனபோக்கிலே கால் போகலாமா?’ இவையெல்லாம் ஒரே ஜென்ர்ரில் வரக்கூடிய ஜாஸும்,ட்விஸ்ட்டும் கலந்து இசைத்த ராக்-அன்-ரோல்கள். அப்போது ராக் இசையிலான அதிரடிப்பாடல்களுக்கு களம் இல்லை. சமீப காலத்தில் தொண்ணூறுகளில் ஜான் பான் ஜோவி, ப்ரையன் ஆடம்ஸ், மெட்டாலிக்கா , எம்.எல்.டி.ஆர் போன்ற குழுக்களும் தனிப் பாடகர்களும் ராக் இசையை அதன் தன்மையில் அதிரடியாகப்பாடி அசத்தினர். ( எனக்குப் பிடித்தவர்களைப்பற்றி மட்டும் இங்கு சொல்லியிருக்கிறேன் , இன்னும் எத்தனையோ பேர் :) ) ராக் இசையில் பல வகைகள் இருக்கின்றன. விக்கிபீடியாவில் கொட்டிக்கிடக்கிறது :) ராக் இசைக்கான களம் பற்றி விவாதிக்க தமிழ்த்திரையுலகம் தயாராகவில்லை, எண்பதுகள் வரை.

இசையறிவு பெற்றிருந்த இயக்குநர்களும் இந்தக்குறிப்பிட்ட இசையை தமது படங்களில் பயன்படுத்திக் கொள்ள விழைந்ததேயில்லை. எனக்குத்தெரிந்து முதல் ராக் அதன் தன்மையுடன் ஒலித்தது தொண்ணூறுகளில் வெளி வந்த ‘போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி’ என்ற பாடல் தான். இளையராஜா’வின் இசையில் கமலும்,அருண்மொழியும் இணைந்து பாடியது. அப்போது கூடவே பிரபலமாக இருந்த டி.ராஜேந்தரும் முயற்சி செய்து பார்த்திருக்கிறார், ஆனாலும் இத்தனை தூய்மையான ராக்’ இசை அவரின் இசையில் ஒலித்ததில்லை. பாப்’ கலந்தே இசைக்கும். ‘அம்மாடியோ ஆத்தாடியோ’ என்ற ‘ஒரு தாயின் சபதம்’ படத்தில் வரும் பாடல் கூட அப்போதிருந்த டிஸ்கோ/ப்ரேக் டான்ஸுகளுக்கு ஏற்றவாறு ஒலித்த மைல்ட் ராக் அது. டீஆரின் பாடல்களில் எப்போதும் ட்ரம்ஸின் அதிரவைக்கும் ஒலி கூடுதலாகவே இருக்கும், இருப்பினும் ராக் இசையை அவர் தொட்டதில்லை. நம்ம குத்துப்பாட்டு வகையறாக்களில் அதிரடி ட்ரம்ஸ் கொண்டு வாசித்து அவர் புளகாங்கிதம் அடைந்துகொண்டார்.

இசைப்பவனுக்கு என்றும் வயதாவதில்லை. எல்லாவித இசை வகைகளையும் இசைத்துப்பார்க்க வேணும் என்ற அவா அவரின் மனதில் இருக்கத்தான் செய்யும். திரையிசை பல மனிதர்களின் கூட்டு முயற்சி என்பதால் இசையமைப்பாளர்களின் வேண்டுதல் பெரும்பாலும் செவி சாய்க்கப்படுவதில்லை. எல்லாம் செய்து வைத்து விட்டு இயக்குநர் வேண்டாமென்றால் அது படத்தில் இடம்பெறவே பெறாது.

இப்போது வரும் இளம் இசையமைப்பாளர்கள் மிகவும் விருப்புடனும், அதோடு தைரியமாகவும் இசைக்கத் தொடங்கிவிட்டனர் ராக் இசையை. இளம் வயதில் அந்தத்துடிப்பில் இது போன்ற எல்லாவற்றையும் களைந்தெறியும் இசை பிடித்துப்போவதென்பது நியாயமானது. அதைச்செய்து பார்க்க களம் அமைவதும் இப்போதெல்லாம் வெகு சுலபமாக நிகழ்ந்துவிடுகிறது. ‘க்ளோபல் வில்லேஜ்’ கருத்து பரவலாக விரும்பப் படாவிடினும் கார்ப்போரேட்டுகளின் வற்புறுத்தலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது அதன் வழி இந்த இசையும் இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. இருப்பினும் இன்னமும் அந்நியமாக நிற்கக்காரணம் நாம் இன்னும் இந்த வகை இசைக்கு நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவில்லை என்பதே.

மெட்டாலிக்காவும் ஹெவி மெட்டலும் கேட்காது எந்தப்பாலகனும் தமது இளமையைக்கடந்து விடுவதில்லை. ஆங்கில இசையில் இந்த இசை கேட்கும் பருவம் அவரவர் இளமைக்காலமே. அதையே இன்றைய இளம் இசையமைப்பாளர்களும் கொடுக்கத்தொடங்கி விட்டனர். ஒரு சொடுக்கில் யூட்யூபில் பொழியத்தொடங்கும் இசையை தமிழிலும் கொடுத்தாலென்ன என்ற மனப்பாங்கும் எல்லோருக்கும் அமையப்பெற்று இருப்பதும் இந்த வகையிலான இசை இப்போதெல்லாம் தொடர்ந்தும் ஒலிக்கிறது, திரைப்படத்தில் ஒரு பாடலேனும் அதிரடி ராக் இசை தாங்கி வலம் வருகிறது.

யுவனின் அவரது சொந்தக்குரலில் பாடிய அத்தனை பாடல்களும் மட்டுப்படுத்தப்பட்ட ராக் வடிவமே. ராஜாவுக்கு ப்ளூஸ். தேவாவிற்கு கானா. ரஹ்மானுக்கு ? இன்னெதென்று சொல்லவியலாதது. நிறைய எனர்ஜியுடன் ராக் இசை போல பாடிக்கொண்டிருந்தவர் இப்போது குரலில் எனர்ஜி குறைந்து பிறரைப் பாடவைத்துக் கொண்டிருக்கிறார். யுவனுக்கு எப்போதும் ஹிப் ஹாப் கலந்த ராப்/ பின்னர் மட்டுப்படுத்திய ராக் பிடித்தம். கம்ஃபர்ட ஸோன். ராஜா செய்து பார்க்காத விஷயங்களே இல்லை. இப்போது ஜாஸ் மட்டுமே அவரது இசை என ஆகிவிட்டது. இரண்டாயிரத்திற்குப்பிறகு முழுக்க முழுக்க ஜாஸ் மட்டுமே விரவிக்கிடக்கிறது அவரது இசையில். 

எல்லாவற்றையும் கலந்து ஒரு பாணியை உருவாக்கிக்கொண்ட பிறகு அது அவர்களின் பாணியாக கம்ஃபர்ட் ஸோனாக நிலைத்துவிடுவது வாடிக்கை. ‘எவண்டி ஒன்னப்பெத்தான்’ அருமையான ராக், இருப்பினும் தொடர்சொற்கள் விழுந்து அதை யுவனுக்கு பிடித்த ராப்/ஹிப் ஹாப் ஆகிப்போனது. ‘ஏகன்’ படத்தில் வரும் ‘எல்லாருக்கும் ஃப்ரெண்டு’ பாடலும் ஹிப் ஹாப் தான்!

ரஹ்மானுக்கு ‘ராக்ஸ்ட்டார்’ என்ற முழுப்படமே கிடைத்தது, அந்த இசையை மக்களின் மத்தியில் நீள மேடை அமைத்து வெளிநாட்டு பாடகர்கள் போல பாட ஆட வைக்க வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் ஒரு பாடல் மட்டுமே ராக் வடிவம். மற்றதெல்லாம் வழக்கமான ஹிந்திஸ்தானி மற்றும் கவ்வாலியாக முடிந்தது. ‘குன் ஃபாயா குன்’ என்ற அந்தக் கவ்வாலிக்கு கிடைத்த வரவேற்பு ‘சட்டா ஹக்’ ராக்’கிற்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. அதன் பிறகு அநிருத் இப்போது ‘வேலையில்லாப்பட்டதாரி’யில் அதை முயன்றிருக்கிறார். மான் கராத்தே’வுக்கு கிடைத்த வரவேற்பு இதற்கு கிடைக்கவில்லை. படம் வெளிவந்தால் கொஞ்சம் கேட்க வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் அத்தனை சுவாரசியமாக யாரும் விரும்பிக் கேட்கவில்லை. எத்தனை தான் மெனக்கெட்டிருந்தாலும் ரசிகர்கள் புறக்கணித்தால் இசைப்பவனால் தொடர்ந்தும் அதைப் பிடிவாதமாகச் செய்யவியலாது.

இன்னமும் ராக் இசையில் அமைந்த பாடல்களை விருப்பப்பாடல்களாக நம்மவர்கள் வானொலியிலும் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சிகளிலும் கேட்டுப் பெறுவதில்லை. இசைக்கச் சொல்வதில்லை. வழக்கமாக வரும் பாடல்களையும் அவற்றின் முறைகளையும் பற்றி விவாதிப்பதில் அத்தனை சுவையிருப்பதில்லை. ஆதாலால் ராக் :) இருப்பினும் சில பாடல்களை அதன் ஒரிஜினல் ராக் வடிவத்தில் கொடுத்த இசையமைப்பாளர்களையும் அவர்களது அந்தப்பாடல்களையும் பற்றி கூறவிருக்கிறேன் இந்தக் கட்டுரையில்.




‘போட்டுவைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி’ - இளையராஜா

முதல் பாடல் ராஜா’வின் ‘போட்டுவைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி’ சிங்காரவேலனிலிருந்து. எனக்குத்தெரிந்த  முழு முதல் ராக் இது தமிழ்த்திரையில். அத்தனை உயர்ந்த சுதியில் பாட கமலால் இயலவில்லை என்பதால் அருண்மொழியும் கூடவே பாடுகிறார். உயர்ந்த சுருதியில் பாடும்போது குரல் உடைந்து கத்துவது போலத்தோன்றக்கூடாது. அங்க தான் பிரச்னையே ஆரம்பிக்கும். பாடுபவர்கள் எத்தனை சங்கதிகளையும் பாடிவிடலாம். இப்படி உயர்ந்த ஸ்ருதிக்கு கத்தாமல் இருப்பது ஒரு சவால். 

மாணிக்க விநாயகம்,ஷங்கர் மஹாதேவன் இவர்களின் குரல்கள் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் கத்தல் இருக்காது. அப்போது இவர்கள் இல்லை, இருந்திருந்தால் ராஜா பாடவைத்திருப்பார்.
இதிலிருக்கும் அந்த பெர்குஷனும் (ட்ரம்ஸும்) காதைக்கிழிக்கும் கிட்டாரும் தூங்கவிடாமல் செய்யும். (‘ராஜா கைய வெச்சா’ பாடல் ராக் இல்லை. அது பெப்பி நம்பர், பாப் அது :) ) கூடவே பாடும் கிட்டார். இது மாதிரி பாடல்களில் வரிகள் கேட்கவில்லை என்ற கூச்சல் போடவேமுடியாது. ஏற்கனவே இசையே பெருங்கூச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும் :) 3:07 ல் ஆரம்பிக்கும் கிட்டார் பின்னரும் தொடர்ந்து வரும் பியானோவின் மணியொலியும், எல்லாவற்றையும் அடித்து தூளாக்கும் ட்ரம்ஸ்..இதுதாண்டா ராக். ராஜா ராக்ஸ் :)

‘புடிக்கல மாமு’ -இளையராஜா

‘சிங்காரவேலனு’க்குப்பிறகு ராஜாவிற்கு கிடைத்த வாய்ப்பு , கௌதம் மேனனின் ‘நீதானே என் பொன் வசந்தம்’ல் வந்த அந்த காலேஜ் பாடல். ‘புடிக்கல மாமு’ அழுத்தமான காதையும் மனதையும் கிழிக்கும் அந்த அதிரடி ஓப்பனிங்கில் அசத்தும் எலக்ட்ரிக் கிட்டார். 0:17ல் தொடங்கும் அந்த லீட் மனதைக் கொள்ளை கொள்ளும். அதிரடி இப்படி ஒரு பாடலை திரும்பக்கொண்டு வந்த கௌதமுக்கு நன்றி. இருந்தாலும் பாடலின் பின்பகுதியில் நம்ம குத்துப்பாடலாக மாறிப்போவது தான் சோகம். எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள் எனத்தெரியவில்லை.முதல் நாற்பது செகண்டுகளும் கொள்ளை கொள்ளும் நம் மனதை. 

முதல் பகுதி ராக்’கிற்கு அந்த இரண்டாவது பகுதி குத்து’ ஒரு ரீமிக்ஸ். அதுதான் நிஜம். இன்னொரு தடவிய கேட்டுப்பாருங்க உங்களுக்கே தெரியும். வெறுமனே ஒரு மெதுவான பாடலை எடுத்துக்கொண்டு அதை 6-8ல் வாசித்தால் அது ரீமிக்ஸ் என்றில்லாது இது வேற ட்ரீட்டு. இருப்பினும் முடியும்போது அந்த கிட்டார் பீஸ் கொண்டு முடித்துவைப்பது இன்னும் அழகு. எழுபது வயதில் ராஜாவின் ராக் ....ஹ்ம்...ராஜா ராஜாதாண்டா.!

‘போதும் போதும்’ - தரண்குமார்

தரண் குமார் இசைத்த விரட்டு படத்தில் இடம் பெற்ற ‘போதும் போதும்’ என்ற பாடல். இவரை எப்போதும் பலரும் இசையமைப்பாளர் தமன் எனவே நினைத்துவிடுவதுண்டு. இவர் வேறு. ‘பூவே பூவே காதல் பூவே’ என யுவனைப்பாடவைத்து ஹிட் கொடுத்தவர். இப்போது இசைத்திருக்கும் இந்தப்பாடல் ஆன்ட்ரியா,நரேஷ் மற்றும் தருண் இணைந்து பாடிய அந்த ‘போதும் போதும்’ என்ற பாடல். பெர்ஃபெக்ட் ராக் மச்சி. அடித்து தூள் பறத்தியிருக்கிறார் தரண். ஆரம்பமே கிட்டாருடனேயே தொடங்குகிறது. செம ட்ரீட்டு இந்தப்பாடல்.  1:11-ல் அந்த கிட்டார் லீடும் மற்ற கார்ட்ஸும் மட்டும் வாசிக்கப்பயன்படாமல் தாளத்தையும் சேர்ந்திசைக்கும். ட்ரம்ஸோடு அங்கதான் அது ராக். அத்தனை தந்திகளையும் கார்ட்ஸுக்குண்டான விரல்களில் இடங்களில் சேர்த்து அழுத்திப்பிடித்துக்கொண்டு ப்ளக்கைக்கொண்டு ஆறு தந்திகளையும் ஒரு சேரவைத்து அடித்து நொறுக்குவது ராக். இங்கு நிகழ்ந்திருக்கிறது. ‘இன்னும் இன்பம் வேண்டுமா போய் விரட்டு’ :) ஆன்றியாவின் குரல் இன்னமும் உயர உயரப்பறக்கும்போது இனிமையாக ஒலிக்கிறது.

2:07ல் தொடங்கும் அந்த லீட் கிட்டார் பீஸ் இனி வரப்போகும் புயலைக்கட்டியம் கூறும். 2:49ல் அள்ளாமல் என்று ஆண்டிரியா பாடும் போது பின்னாலிருக்கும் அந்த ஃபோகஸ் லைட்ஸும் தாளத்திற்கேற்றவாறு அணைந்தெரிகிறது  :) ஆஹா டிவைன்டா.! 3:03ல் உச்சத்திற்கு செல்லும் ஆண்டிரியாவின் குரலோடு கிட்டார்ம் சேர்ந்து தாளம் போடுவது ரியல் ராக். இவரது பாணியே வெஸ்ட்டர்ன் பாடுவது தான். பின்னர் சொல்லியா கொடுக்கவேணூம் ?! :) எல்லாரும் ஒரு சேரப்பாடும்போது அந்த கிட்டாரும் ட்ரம்ஸுகளும் சேர்ந்து இசைப்பது பெர்ஃபெக்ட் ஆர்கஸம் போல தீர்ந்துவிடாது தொடரவே நினைக்கும் நமது மனம். :) இந்தப்பாடலை பியானோவுடன் தொடங்குகிறார் தரண். பின்னர் சீழ்க்கைஒலி. இத்தனை மெதுவாக ஆரம்பிப்பது பின்னர் வரப்போகும் புயலை அதிரடியாக யாரும் யோசிக்காவண்ணம் கொடுப்பதற்கே :) எல்லாரும் சர்ப்ரைஸ் பிடித்துத்தானே இருக்கிறது. ‘தாகுது தித்துகுது ..ஆஹா விரட்டு!

‘வேலையில்லாப்பட்டதாரி’ - அநிருத்

அடுத்து தம்பி அநிருத்தின் வேலையில்லாப்பட்டதாரி. ராக் இசையாக ஆரம்பித்தாலும் கத்தலால் இது ராக் ஆகிறது. பின்னரும் ஹிப் ஹாப் கலந்து விடுகிறது. அந்த ராக்குக்கே உரித்தான கிட்டாரும் ட்ரம்ஸும் ஓக்கே. இருந்தாலும் தூய்மையான ராக்’காக ஆகத்தவறிவிடுவது அந்த பின்னில் ஒலிக்கும் ஹார்மனி ராப் குரலால். இருக்கும் வெறுப்பில் எதையாவது அடித்து தூள் பறத்த வேண்டும் என்பதான அநிருத்தின் குரலில் ஒலிக்கும் இந்தப்பாடல் ஒத்துக்கொள்ளலாம் ராக் தான் என. இருப்பினும் அடித்துப்பிளக்கும் ராக் இசைக்கான குறிப்புகள் குறைவு. குரலில் அதை உயர்த்தி நிமிர்த்துவிட நினைப்பினும் பின்னல் ஒலிக்கும் ஹிப் ஹாப் ஹார்மனிக்குரல் அதை திசை திருப்பி விடுகிறது. உச்சஸ்தாயியில் அநிருத்தின் குரல் சிதறவில்லை நல்லவேளை. மழைக்குருவி போல இத்துனூண்டு இருந்துகொண்டு இப்படி ஒரு பரிமாணம். பாராட்டலாம். முழுசா ராக்காகவே இசைத்தாலெங்கே மக்களுக்கு பிடிக்காது போய்விடுமோவென அஞ்சி கொஞ்சம் ஹிப் ஹாப்பைக்கலந்து கொடுத்துவிட்டார். 2:47 ல் ஆரம்பிக்கும் வரிகள் அதை உறுதிப் படுத்துகின்றன. இருந்தாலும் இதை ஒத்துக்கொள்ளலாம் ராக் என :)


தேநீரில் சிநேகிதம் – ஜேம்ஸ் வசந்தன்

சுப்ரமணியபுரம் படத்தில் வந்த ‘தேநீரில் சிநேகிதம்’ அடித்துப்பறத்தாத ஒரு ராக். கொஞ்சம் எரிக் க்ளாப்டன் ஸ்டைலில் கிட்டாருடன் கூடிய இசை அது. படமே எண்பதுகளில் என்றானபின் கொஞ்சம் ராக்’கையும் கலந்து கொடுக்கலாம் என ஜேம்ஸ் வசந்தன்,சசிகுமார் நினைத்திருப்பர் போலும். ‘கண்கள் இரண்டால்’ பாடல் அப்படிக்கொடி கட்டிப்பறந்தது. இந்தப்பாடலை கேட்பார் போலும் இல்லை. பல்லவியே அமர்க்களமாக வழக்கம்போல இல்லாமல் ஆரம்பிக்கும் :) எந்தப்பாடலையும் விட எனக்கு ரொம்பப்பிடித்த பாடல் இது. ஈசன்’ படத்திலும் க்ளப் சாங்’க்குக்காக முயற்சித்தார் ஜேம்ஸ். அத்தனை எடுபடவில்லை. பாடலின் தொடக்கத்தில் ஒவ்வொரு வரிக்கும் இடையே ஊடுருவிச் செல்லும் அந்த எலக்ட்ரிக் கிட்டார் , 3:07-ல் ஊளையிடத் தொடங்கி 3:28 வரை இதுதாண்டா ராக் என்று சொல்லிச்செல்லும்


‘சட்டா ஹக்’ - ரஹ்மான்

தமிழ் ராக்ஸ்னு பேர் வைத்துவிட்டு இந்திப்பாடலைப்பற்றி பேசறேன்னு பார்க்காதீங்க. இது தமிழ்ப்பாட்டு இல்லைங்கறதால கடைசி இடம் :) ரஹ்மானுக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு ராக் இசையைப்பயன்படுத்த இங்க தான் கிடைத்தது. மைக்கேல் ஜாக்ஸனிடம் கிட்டார் வாசித்தவரை வைத்து இந்தப்பாடல் பதிவு செய்யப்பட்டது எனக்கூறியிருந்தார். அதற்கு முழுத்தகுதியும் உள்ள இந்தப்பாடல். 3:06 ல் துவங்கும் அந்த லீட் கிட்டார் அத்தனை இனிமை. கொஞ்சமும் ராக்’கின் இலக்கணம் மாறாது இசைக்கிறது. வழக்கம்போல் மெதுவாகவே தொடங்கும் பாடல் போகப்போக விஸ்வரூபமாக உருவெடுக்கும். பெர்ஃபெக்ட் வழக்கமான  ராக் இசைக்கலைஞர்கள் போல மக்கள் கூட்டத்துக்குள் போடப்பட்ட மேடைக்குள் நுழைந்து பாடும் இந்தப்பாடலில் ரஹ்மான் ராக்ஸ் ! முழுப்பாடலின் ஸீக்வென்ஸும் அதே போலவே அமைந்திருக்கும் Justifies the Rock Song. 3:56ல் ‘மோகித் சௌகான்’ கத்தினாலும் குரல் கிழியாது/உடையாது அதே ஸ்ருதியில் பார்ப்பவரின் மனதைக்கிழிக்கும் அந்த ராக். ரியல் ராக்! ஆங்கில ராக் பாடகர்கள் இடையிடையே பேசவும் செய்வர். ஹ்ம்.. அதே போன்றே இந்தப்பாடலிலும் ஒலிக்கிறது.பார்வையாளர் ரசிகர்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்களின் கருத்தை ஒரு சேரக்கேட்பதில் அத்தனை விருப்பம் ராக் பாடகர்களுக்கு.

ஆவேசக்குரலில் கத்தும்போது , இத்தனை காலமும் அடக்கிவைத்த துயரம் அழுத்தங்களெல்லாம் உடைந்துபோய் சிதறிவிட்டால் மனது லேசாகும். அது தான் ராக்’கின் அடிப்படை இசைக்கூறு. எத்தனை தான் அடக்கிவாசிப்பினும் குரலுயர்த்தி பேசும்போது/பாடும்போது அழுத்தங்கள் போய் காற்றில் பறக்கும் உணர்வு கொடுப்பது ராக். அடித்து அழுவதும் ஒப்பாரி வைப்பதும் என நம் துக்க வீடுகளில் அதுவே ஒரு பெரிய ரிலாக்ஸ் ஆக மனதிற்கு வாய்க்கும். அந்த ரிலாக்ஸை மனதிற்கு கொடுப்பது இந்த ராக் இசை. நம்ம தமிழ் மக்களிடம் ஏற்கனவே இருக்கத்தான் செய்கிறது. ஆங்கிலக் குடும்பங்களில் இறப்போ பிறப்போ அத்தனை ஆர்ப்பாட்டமாக அழுது தீர்ப்பதில்லை/கொண்டாடுவதில்லை. சின்னதாக ஒரு கறுப்பு கர்ச்சீஃப் வைத்துக் கொண்டு உத்தேசமாக வழிந்த கண்ணீரை கன்னத்தில் அழுத்தித்துடைத்து விடும் அளவினது மட்டுமே அவர்களது துக்கம். அவர்களுக்கு இது போன்ற இசையே மருந்து. நாமும் கேட்கலாம். அத்தனை அந்நியமில்லை ஏற்கனவே பரிச்சயமானது தான் பிற வடிவங்களிலான இந்த ‘ராக்’ நமக்கு.!

தமிழ் ராக்ஸ் !


Tuesday, May 20, 2014

குறும்பாக்கள்




அந்த ஹைக்கூவில்
நடப்பட்ட மூங்கில்கள்
மேலும் வளர அனுமதியில்லை
-
மடக்கி வைத்த
குடையிடம் ஆயிரம்
மழைக்கதைகள்
-
இருபத்துமூன்றரை டிகிரி
சாயுமுன்னரான பூமி
எனக்கு வேண்டும்
-
உடல் நனைந்துவிடக்கூடாதென
குடை பிடிக்கிறது காளான்
தலை நனைந்துவிடக்கூடாதென நான்
-
பறந்து செல்லும்
செங்கால்நாரைகளின்
சேற்றுக்கால்களைக்
கழுவி விட்ட மாமழை
என் கால்களில் கொணர்ந்து
சேர்த்துவிடுகிறது
-
இப்போதெல்லாம்
இறக்கைகளற்ற பறவைகளே
என் கனவில் வருகின்றன.
 

 



இலைகளற்ற மரத்தை
                      காற்று போலும்                       
சீண்டுவதில்லை
-
ஒரு ஆமையின் ஓட்டை
திருப்பிப்போட்டால் எத்தனை
ஹைக்கூக்களை நிரப்பலாம்?
ஹ்ம்.. அதற்கு ஒரு ஆமையைக்
கொல்லவேண்டிவருமே ?!
-
தேநீர் வண்ணத்துப்பூச்சி
தவளை கோவில்மணி இலையுதிர்காலம்
இல்லாத ஒரு ஹைக்கூ இது
-
வருந்தி ஏறிய மலையின்
உச்சியில் பூத்திருந்தது ஒரு பூ
எந்த முயற்சியுமின்றி
-
மூன்றாம் வரிக்கென
காத்திருக்கும் ஹைக்கூ இது
-
மூன்லைட் சொனாட்டா
வாசிக்கிறேன்
பீத்தோவனுக்கு
கேட்கவில்லை
-
தாம் மேய்த்துக்கொண்டிருந்த
மந்தையிலிருந்து ஒரு ஆட்டை
எனக்கென உணவாகக்கொடுத்த
கர்த்தருக்கு நன்றி
-
நீ வழக்கமாக
அமரும் இடத்தில்
ஒரு மரத்தை
வரைந்துவைக்கிறேன்
-
சென்றுவிட்ட பறவையை
அழைத்துவர
வெய்யில் போயிருக்கிறது





.