Saturday, October 28, 2017

2.0 ஒலிக !


இந்த தீவாளிக்கு Sennheiser CX 300 II Precision Noise Isolating In-Ear Headphone வாங்கினேன். என்னா வெலன்னு அமேஸான்ல பாக்கலாம், அத என் லாப்டாப்ல செருகி, 'ஹெலிகாப்டர்ல பெல்ட் போட்டு இறுக்கி உக்காரவெச்சு அப்பால மேடைல எறக்கிவிட்டு, எப்டீப்பா இவ்ளவ் எளிமையா இருக்கீங்கன்னு கேட்டாங்களாமே, அந்தப்பாட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன். ஏம்ப்பா ராஹ்மான் வெச்சு செய்ற ?. புதுசா ஏதும் செய்யக்கூடாதா? சின்னப்புள்ளைஹ ஸ்கூல்ல பீட்டீ பீரியட்க்கு ட்ரில் வாசிச்ச மேரி ஒரு மீஸங்கி. பின்னால ஓ ஓன்னு கத்தவிட்டு கடுப்பேத்றார். என்னா ஒரு இன்னோவேஷனே இல்லை. சரக்கு மட்டம். இத 2030ல தாம் கேக்கணும்னு ஒரு கூட்டம் கெளம்பிருக்கு.


ஆமா அது ராஜாளி'யா இல்ல ராசாலி'யா? தமிழால் வளர்ந்த குழந்தை கார்க்கி,யாரு கண்ணு வெச்சான்னு தெரியல, இப்டீல்லாம் எழுத ஆரம்பிச்சிருச்சி. கொஞ்சம் முன்னால தான் கவிஞர் தாமரை 'பறக்கும் ராசாளியே'ன்னு எழுதினார். (அதிலும் 'ஜா' வடமொழி இல்லை ) வலுக்கட்டாயமாக தமிழ் மட்டுமே எழுதுவேன் என்ற பிடிவாதத்துடன் எழுதி வருகிறார். ஆணைத் தொடர்கள் இயந்திர மனிதனுக்கு தமிழிலும் எழுதலாம்ப்பா. பாட்ட கேக்கவே முடியலையே இங்க. ஹ்ம்.. ஒரு வர்சம் ஆனப்புறம் கூட. 'தள்ளிப்போகாதே' வையே இன்னும் கேக்க சகிக்கலை. என்னா பண்றது அவருக்கு வாய்ச்சத குடுக்றார்.


இந்திர லோகத்து சுந்தரியே' சித் ஸ்ரீராமா அது ?. இப்பதான் தர்புகா சிவா இசைல ஒரு பாட்டு இன்னமும் லூப்ல உந்தி. மறுவார்த்தை பேசாதே'ன்னு. இங்க யய்ய்யய்யா யாய்ய்யாஆஆஆ... ஒரே குஷ்டம்ப்பா. எந்திரன் ஒண்ணுலயாவது நல்ல மெலடி கேட்கக் கிடைத்தது, இங்க எல்லாம் ஒரே எலெக்ட்ரானிக் இசை. இரைச்சல். வேஸ்ட்டு. #2.0



.

Wednesday, October 25, 2017

பிறக்கும்போதே கிழவன்




'யாவரும் பதிப்பகம்' ஜீவகரிகாலன் பகிர்ந்த 'போர்ஹேஸ் எழுத்துகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு வெளியீடு' காணொலிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். போர்ஹேஸ்/ இடாலொ கால்வினோ/சார்த்தர் என்ற பெயர்கள் எனக்கு அறிமுகமானது சில ஆண்டுகள் முன்பாகத்தான். பிரம்மராஜனின் வேர்ட்ப்ரஸ் வலைத்தளத்தில் ஒரு சிலமுறைகள் வாசித்திருக்கிறேன். காணொலியில் குணா, பின்னர் பாலா மற்றும் ஆசிரியர் பிரம்மராஜனும் பேசியவற்றை பார்த்தேன். என்னைபொருத்தவரையில் பேசியவர்களில் கொஞ்சம் ஆதன்டிக்காக பேசியது பாலா மட்டுந்தான் எனத்தோன்றியது. பாலா அதிலிருக்கும் கதைகளைப்பற்றி அதிகம் பேசவில்லை, இருப்பினும் பொதுவாக போர்ஹேஸ் எப்படிப்பட்டவர், எத்தகைய மானுடம் அவர், ஆன்ட்டி மார்டன் (anti modern),எடெர்னிட்டி,இம்மார்ட்டலிட்டி, டைம் என்பன பற்றியே அதிகம் பேசுகின்றன போர்ஹேஸின் எழுத்துகள்.மேலும் பிறக்கும்போதே கிழவனாகப் பிறந்தவர் ;), அவரின்  குணாதிசயங்கள் என்ன என்பனவற்றை விவரித்தார். அவரின் எழுத்துகள் மூலமே இத்தனையையும் அறிய முடிந்திருக்கிறது. சிற்சில பேட்டிகளையும் மேற்கோள் காட்டி பேசினார். மொழிபெயர்ப்பு எங்கனம் ஆரம்பித்தது என்ற விளக்கம் எனக்கு புதிது. இப்படியெல்லாம் சில நிகழ்ச்சிகள் வாயிலாகத்தான்  இப்படிப்பட்ட விஷயங்கள் தெரியவருகின்றன .

குணா தொகுப்பை முழுதுமாக வாசிக்கவில்லை என்பது அவர் பேசிய விதத்திலேயே தெரிந்தது. 'வந்து வந்து என நிறைய வந்(த)து அவர் பேச்சில். இருப்பினும்  போர்ஹேஸ் அவர்தம் சிறு வயதில் வசித்த வீட்டிற்கு சென்றிருந்தேன் என்றார்.தமிழனாகப்பிறந்த அனைவருக்கும் ஒருமுறையேனும் பாரதி வசித்த இல்லத்துக்கு செல்லவேணும் என்ற அவா. அதிலென்ன இருக்கிறது. இருப்பினும் இடம்,காலம், பொருள் எல்லாமே முக்கியமாகத்தான் இருக்கிறது அவன் எழுத்தாளனாயினும் கூட!

நானும் தான் ப்ராக்(செக்கோஸ்லொவேக்கியா) நகரில் சுற்றித்திரிந்த காலங்கள் உண்டு. இருந்தாலும் கஃப்க்கா வசித்த வீட்டைப்பார்க்க ஒருமுறை கூடப்போகவேயில்லை. பல முறை சென்றுவந்த ஜூவிஷ் சினகாக் (கல்லறை)க்குப்பின்னர் உள்ள தெருவில் தான் வசித்திருக்கிறார் என்பது விக்கி மூலமாகத்தெரிய வந்தது. ஏன் போய்ப்பார்க்கவில்லை,,, அப்பல்லாம் எனக்கு எழுத்து/இலக்கியம்/கவிதைகள் மற்றும் இன்னபிற வஸ்துக்களில் பரிச்சயமில்லை. நிறைய மேற்கத்திய இசைக்கூடங்களுக்கு கால்கள் வலிக்க வலிக்க நடந்தே சென்று ரசித்திருக்கிறேன். ஓவியக்கண்காட்சிகளில் பல மணி நேரம் செலவழித்து இருக்கிறேன். புகழ்பெற்ற சார்லஸ் பிரிட்ஜில் தெருப்பாடகர்களின் இசையை கைப்பிடிச்சுவரில் சாய்ந்து நின்றபடியே ரசித்திருக்கிறேன்.

கடைசியாக பேசிய பிரம்மராஜன்,பெரும்பாலும் சம காலத்தில் வசிக்கும் இன்னொரு தலையணை எழுத்தாளரைப்பற்றியே பேசி போரடித்துவிட்டார். ஆல மரத்துக்கும் உச்சி மரத்துக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் எழுதி வைத்திருக்கிறார் என்றார். கல்யாணவீட்டு  மேடைகளில் அரசியல் பேசியது போல எனக்கு தோன்றியது.

பாலா எழுதிய 'துரதிர்ஷ்டம்பிடித்த கப்பலின் கதை'யை ஒரே வாரத்தில் ஷிஃட் போட்டு வாசித்து முடித்தேன். அதே கெதியில் விமர்சனமும் எழுதிஅனுப்பினேன் கரிகாலனுக்கு,கணையாழியில் வெளிவந்தது . இப்போது இந்த புத்தகத்தையும் வாசித்தே ஆகவேணும் என்ற ஆவல் காணொலிகள் மூலம் வந்துவிட்டது. எத்தனை காலம் பிடிக்கும் புரிந்து கொள்ள...பார்க்கலாம். இணையவழி ஆணை கொடுக்கலாமா என்ற யோசனையில்..இப்போது :) 


.

Saturday, October 21, 2017

'பிஜேபி வந்தாலும் வரும்'


பக்கா மசாலா அஞ்சு ரூபா டாக்டர். இடைவேளைக்குப்பிறகு நிறைய வெட்டியிருக்கலாம். இன்னமும் க்ரிஸ்ப்பாக வந்திருக்கும். கடைசீல ரெண்டு வசனம் பேசி, கையை உயர்த்திக்காட்டினதுக்கா இவ்வளவு பெரிய கட்சி மெர்சலாகிக்கெடக்கு. அடக்கருமமே. பயம்..வேறொண்ணுமில்ல.  அவ்வளவு சீரியஸால்லாம் இத எடுத்துக்கொள்ள வேண்டியதேயில்லை. அப்படியே விட்ருந்தா எப்பவும் உள்ளது தானேன்னு போயிருக்கும்.மெர்ஸல்VSமோடின்னு ஹாஷ்டேக் வெக்கிற அளவுக்கெல்லாம், அதுவும் அகில இதிய ட்ரென்ட் அடிக்கிற லெவலுக்கு...ஹிஹி...ஒண்ணுமே இல்லீங்ணா. 'பிஜேபி வந்தாலும் வரும்' சண்டைக்கின்னு விஜயோ இல்ல அட்லியோ நினைச்சிக்கூட பாத்துருக்க மாட்டாங்க.ஹிஹி அந்த கடைசி சீன் வசனங்களெல்லாம் கட் பண்ணா மேரியே தெர்ல..ஹிஹி..முழுக்க ஓடுதுங்ணா. பெங்களூர்ல சில இடங்கள்ல இருக்கும் தியேட்டர்களில் தான் பிரச்னை. அதுவும் லோக்கல் காங்கிரஸ் கவுர்மென்டு தமீழ்ஸ் ஓட்டு சிக்காங்கில்லா'ன்னு பயந்து ஆதரிச்சதால வந்த பிரச்னை அத விடுங்க.


பாரீஸில் வேட்டி உடுத்தி வரும் தமிழனை சீண்டிப்பார்க்கும் உள்ளூர் போலீஸ், அப்புறம் அவர் டாக்டர்னு காமிக்கிறதுக்கு எங்கயோ லாபில விழும் பெண்ணைக் காப்பாற்றுவது, எம்ஜியார் இப்டித்தான் செவனேன்னு அவர்பாட்டுக்கு வீட்டுக்கு ஓடு அடுக்கிக்கிட்டு இருப்பாரு எங்கியோ, அஞ்சு தெரு தள்ளி காருக்கு குறுக்கா வந்துவிடும் ஆட்டுக்குட்டியை அத்தனை வீட்டு ஓட்டையும் ஒடச்சி போட்டு வந்து காப்பாத்துவார்.அது மாதிரி இங்க.. ஹிஹி..

படத்துல தேடிப்பார்க்க வேண்டியிருப்பது ஆஸ்கார் நாயகன் தான். எவ்வளவு வயசாயிடுச்சி அவருக்குன்னு இப்பதான் தெரியுது.பாட்டெல்லாம் எங்கெங்கயோ வந்து விழுது,புனே'யில் மல்யுத்தத்திற்கு பிறகு வர்ற இசையெல்லாம் வெண்டாவி அத்து வரும்வேளையில் அண்டங்காக்கா கரைந்த மாதிரி சூழலுக்கு ஒவ்வாத மெட்டுகள்.. சின்னப்பசங்கள வெச்சு இசைக்க விட்டுருக்கணும். பேசும் போதும் பின்னால ஹார்மனில்லாம் தேவையா. வசனமே கேக்கல.



வில்லனுக்கு பஞ்சமா? இப்பல்லாம் எஸ் ஜே சூரியா அடிக்கடி இந்த மாதிரி வர்றார். ப்ரகாஷ் ராஜ்,சாயாஜி ஷின்டேக்கெல்லாம் வயசாயிடுச்சி போல.இவ்வளவு இங்கிலீஷெல்லாம் பேசுற நித்யா மேனனுக்கு மொத்த ஆஸ்பத்திரியையே எழுதிக்கொடுக்கும் போது என்னெ ஏதூன்னு கேக்கத்தோணலியா..ஹ்ம்..?

மூன்று தலைவிகளையும் அவரவர்க்கேத்த இடத்தில் வைத்திருந்தாலும் அந்த ரோஸ்மில்க் அக்கினேனி பாக சால உந்தி அட்லி.. 'நானாவது அஞ்சு நிமிஷம் பஞ்ச் பேசி அடிப்பேன், அவன் அடிச்சிட்டுதான் பேசவே ஆரம்பிப்பான்னு' தன்னையே கலாய்த்துக்கொள்ள அனுமதித்த விஜய்க்கு ரொம்ப நாளைக்கிப்பிறகு ஒரு செம ஹிட். ஆஹா மறந்துட்டேன்.. ஜோஸஃப் விஜய்க்கு மெர்சல் ஹிட்டுங்ணா <3 br="">


.

Monday, October 9, 2017

Look What You Just Made Me do!




Taylor Swift - Look What You Made Me Do

Pre-order Taylor Swift's new album, reputation, including "Look What You Made Me Do," here: http://smarturl.it/reputationTS http://vevo.ly/MOlgkR



Look What You Made Me do! Taylor Swift புதுப்பாடல். வழக்கம்போல இருக்கும் பெப்பி திங் மிஸ்ஸிங். வழக்கமான பாப் இசைதான். ஒண்ணும் வித்தியாசமில்லை. இருக்கிற அனோரெக்ஸிக் பாடிக்கு சும்மா ஒப்பனை இல்லாம வந்தாலே எலும்புக்கூடு மாதிரி தான் இருப்பாங்கோ :) இதுல ஸ்கெலிடன் மேக்கப் வேறயா? ரெப்பூட்டேஷன் ரொம்பவே கலங்கி கிடக்கு போல. ஹிஹி அது என்ன லிப்ஸ்டிக்கா இல்லை ஏஷியன் பெயின்ட்ஸா ?! ‘மறக்க முடியுமா'ன்னு ஒரு பழைய படம். எஸ் எஸ் ஆர் நடிச்சது. அதுல கடைசி சீன்ல இது மாதிரி தான் அவங்க அந்தப்படத்தில நடிச்ச கேரக்டரைப் பற்றி சொல்லி பின்னர் மறக்க முடியுமான்னு கேக்கற நாடகத்தனம் மாதிரி , இங்க டெய்லர் ஸ்விஃப்ட் கட்டின அத்தனை வேஷமும் ஒண்ணா நின்னுக்கிட்டு.. ஹ்ம். என்னத்த சொல்றது? பல இடங்களில் இவரின் முகம் எனக்கு 'ப்ரிட்னி ஸ்பியர்ஸ்' போலவே தோணுகிறது.

இதுல ஹாப்பிட் மாதிரி என்விரான்மெண்ட் எல்லாம் க்ரியேட் பண்ணி… ம்யூஸிக் வீடியோக்கு மெனக்கிட்ட மாதிரி கொஞ்சம் பாட்டுக்கும் 'கிட்டி'ருக்கலாம். ரெப்பூட்டேஷன்னு பேர் வெச்சதுக்கு 'ரெற்றொஸ்பெக்ட்'ன்னு வெச்சிருக்கலாம். எல்லாக் கலைஞர்களும் இது போன்ற ஒரு நிலைக்கு வந்து செல்வர்னுதான் நினைக்கிறேன். வரிகளும் சொல்லிக்கிர்ற மாதிரி இல்லை ..இந்த நாலு வரிய வேணா சொல்லலாம்.

The world moves on, another day, another drama, drama
But not for me, not for me, all I think about is karma
And then the world moves on, but one thing's for sure
Maybe I got mine, but you'll all get yours 


ஹே டி எஸ் ,Look What You Made Me do! Look what you just made me do ;) ;)


.

Friday, October 6, 2017

நந்தவனத்தில் ஓர் ஆண்டி


நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி ..ஹிஹி.. அதுக்கப்புறம் நம்ம முருக்டாஸைத்தான் கேக்கோணும். பிறர் அழுவதைபார்த்து மகிழும் செம்மம். எல்லாருந்தான். எஸ் ஜெ சூர்யாதான் ஹீரோ. 'டை ஹார்ட் வித் வெஞ்சென்ஸ்' ஜெரீமி அயன்ஸ் போல பாறையை உடைக்க சொல்யூஷனை ஊற்று எனக்கூறிவிட்டு இந்தப் பக்கம் ஆஸுபத்திரியை தகர்க்க,இல்லை இல்லை பேங்க்கை கொள்ளையடிக்க முற்படும் வில்லன். மகேஷு பாவு என்டு ஒருத்தர் தான் ஈரோவாம். எப்படிப்பாத்தாலும் 'அம்மா பாட்டில்ல இவ்ளவ்தான் பாலா, இன்னுங்கொஞ்சம் ஊத்தும்மா'ன்னு கேக்கறா மேரி ஒரு மூஞ்சி. ஆக்ரோசம், அவமானம், அழுகை, சிரிப்பு,எல்லா எழவுக்கும் ஒரே மொகச்சாடை. பீடை. அடக்கருமமே இவனெயெல்லாம் அக்கட டேஸம் எப்டித்தான் சூஸ்த்துன்னாரோ ? கெரஹம்டா.

 
எஸ் ஜெ சூர்யா, கதாப்பாத்திரத்தேர்வு அமர்க்களம். அந்த மனிதி படத்துக்கப்புறம் ஆளு சொம்மா எல்லாருக்கும் சவால் விட்றாபோல நடிக்கிறார்ங்ணா. என்ன கிறிஸ்டோஃபர் நோலனின் 'ஜோக்கர்' போல வேஷங்கட்டிக்காம நடிச்சிருக்கார். இரண்டு விரல்களை துப்பாக்கி போல குறுக்கி வைத்துக்கொண்டு ஆசுவாச நடை பயிலும் ஜோக்கர். முன்னவர் ஸ்கேட்டிங்க் போர்டில் வருவார், இங்கு வெறுமனே நடை அவ்ளவ்தான். தம்பியை அந்த ஈரோ 'பால் புட்டி' கன்பாயிண்ட்ல நிக்கவெச்சு பாயிண்ட் ப்ளாங்க்ல போட்டுத்தள்ளும்போது இதழ்க்கடையோரம் ஃபூ'ங்கறார். பயம்னா என்னான்னு கைல விலங்க அவுத்துவிடச் சொல்லிட்டு முன்னால உக்காந்திருக்கிற 'ஃபீடிங்க் பாட்டிலுக்கு' வெளக்கம் சொல்றார். ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஓர் ஆண்டி எஸ் ஜெ சூர்யா. எல்லாரும் அழணும் தான் அதப்பாத்து மகிழணும். இயல்பாவே அது போலவே இருக்கார். ஆமா எதுக்கு,அது மட்டும் கேக்கப்பிடாது. அது அப்டித்தான்.



ஹாரீஸுக்கு ஒரு வேலையுமில்லை. சூர்யாவின் காட்சிகளில் வெறுமனே மயானச்சங்கை ஊதி ஊதி வாய் வலிச்சது தான் மிச்சம் போலருக்கு, அவருக்கு எப்பவோ சின்னப்பயலுஹள்லாம் இங்க சேர்ந்து ஊதீட்டாங்ய :) #ஸ்பைடர்

.

Sunday, October 1, 2017

ஏழு தோட்டாக்கள்



'ஐ யாம் கௌரி' நேற்று சாயங்காலம் செயிண்ட் ஜோஸஃப் கல்லூரி அரங்கத்தில் திரையிடப் பட்டது. அரங்கு நிறைந்த மௌனம். ஆங்கிலம் மட்டுமே பிழையின்றி எழுதிப்பேசிக் கொண்டிருந்த கௌரி, கன்னடத்திலும் வெகு குறுகிய காலத்திலேயே பத்திகள் எழுதுமளவுக்கு தேர்ந்தார். பத்திரிகைகளில் வரும் எழுத்துப்பிழைகளை சரிபார்க்கும் அளவுக்கு முன்னேறினார். பிறப்பால் கன்னடராயினும் ஆங்கில வழிக்கல்வி பயின்றவர். பங்காளிச்சண்டையில் 'லங்கேஷ் பத்திரிகே' கை நழுவிப்போன போது கொஞ்சமும் அசராமல் இரண்டே வாரங்களில் 'கௌரி லங்கேஷ் பத்ரிகே' என ஒன்றைத்தொடங்கி இன்று வரை அதை நடத்திக் கொண்டிருந்தார். எடுத்துக்கொண்ட பிரச்னைகள் அவரை இந்த அளவிற்கு வன்முறைக்கு இலக்காக்கியிருக்கிறது. பழங்குடியினரின் வாழ்வாதாரம், ஜேஎன்யூ மாணவர்கள் கன்னையா குமார்/ஷீலா ரஷீத் போன்றவர்களை அரவணைத்துச்சென்றது, ஆர் எஸ் எஸ்ஸிற்கு கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்த்துப்பேசியது என.

ஐந்து மணிக்கு எனக்கூறியிருந்த போதும் , படம் திரையிட தாமதமானது. இயக்குநர் தீப்பு மன்னிப்புக்கூறிக்கொண்டு படத்தை தொடங்கி வைத்தார். தங்கு தடையின்றி கௌரி லங்கேஷின் பேச்சு, அவரது நடவடிக்கைகள் என தொடர்ந்தும் சம்பவங்கள் கோவையாக வந்து விழுந்தன. ஒரு ஆவணப்படம் பார்ப்பது போன்ற உணர்வே இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணிக்கூறு படம் ஓடியிருக்கும். அரங்கில் அவரது அன்னை, மற்றும் நண்பர்களும் அமர்ந்திருந்தனர். வழக்கம்போல எல்லா அம்மாக்களையும் போல என் மகள் டாக்டராக வேணும் என்றுதான் விரும்பினேன் அவள் தான் ஜர்னலிஸம் எடுத்துப்படிக்கப்போகிறேன் என அதையே படித்து பின் முழுநேர பணியாக்கிக்கொண்டார்.

லிங்காயத் பிரச்னைகளையும் முன்னெடுத்துச்சென்றிருக்கிறார். லிங்காயத் வகுப்பைச்சேர்ந்த துறவிகளும் இறுதி ஊர்வலத்தில் பங்கெடுத்துக் கொண்டதைக்காண நேர்ந்தது. இஸ்லாமியர்களும் பர்தாக்களுடன் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். Communal Harmony என்றால் என்னவெனப்போதிக்க முயன்றவருக்கு பரிசு ஏழு தோட்டாக்கள். கௌரியால் கர்நாடக முதலமைச்சரை ஒரு ஃபோன் காலில் அழைத்து அவரை சந்திக்க முடிந்ததையும் நினைவு கூர்ந்தனர். எல்லோரும் வெகு எளிதில் அணுகும் படியான தூரத்திலேயே இருந்திருக்கிறார். திருநங்கைகளுடன் அவர் பேணிய உறவு, பழங்குடியினருடன் அவர் உரையாடியது என அத்தனையும் ஆவணக்கோப்பில் பதிவாகியிருக்கிறது.

அவர் சுடப்பட்ட அன்று உடன் வெளியான அத்தனை ட்வீட்களையும் இயக்குநர் தீப்பு' படத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார். மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதில் என்ன தவறு என்று காரசாரமாக அவர் என்ன செய்ய விழைந்தார் என அறிந்துகொள்ளாமலேயே முன்கூட்டிய அவதானிப்பில் அள்ளித் தெளித்திருந்த கோலங்களைப் பதிவு செய்திருந்தார்.

அவருடன் பணியாற்றிய பத்திரிக்கை நண்பர்கள் அனைவரும் ஆவணப்படத்தில் பேசியி ருக்கின்றனர். எத்தனை பெரிய பத்திரிக்கைகளிலும் சம்பளம் நேரத்துக்கு கிடைப்பதில்லை எனினும் கௌரி லங்கே ஷ் பத்ரிக்கையில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தினத்தன்று சம்பளம் வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தனர். கடைசி செப்டம்பர் மாதச் சம்பளத்துக்கென கௌரி லங்கேஷ் தமது எல் ஐ சி பாலிசியை சரண்டர் செய்திருப்பதாகவும் அதன் மூலம் இம்மாதம் வழங்கப்படும் எனவும் கூறியிருந்ததை எண்ணி மாய்ந்து போகிறார் பதிப்பாளர். தொடர்ந்தும் பத்திரிக்கை நடக்கும் என மேடையில் முழங்குகிறார். இரவு இரண்டு மணி எனப்பாராது விமான நிலையம் வரை வந்து தம்மை அன்புடன் அழைத்துச் சென்றதை நினைவு கூறுகிறார் கன்னையா குமார்/மேவானி. பின்னரும் காலை பத்து மணியளவில் தானே காரை ஓட்டிக்கொண்டு இவர்களை கூட்டம் நடக்கும் இடத்திற்கும் அழைத்துச்செல்கிறார். உழைக்கத்தயங்காத கௌரி.

இந்த ஆவணப்படத்தயாரிப்பில் பங்கெடுத்துக்கொண்ட அத்தனை பேரும் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் , ஏற்கனவே கௌரி லங்கேஷுடன் இணைந்து பணியாற்றியவர்கள். இதே அரங்கில் தான் சென்ற ஆண்டு ஷீலா ரஷீத்' காஷ்மீர் போராளியின் பேச்சும் நடந்தது. படம் முடிந்ததும் அரங்கின் வெளியில் இயக்குநரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தோம் நான் ஸ்ரீனி மற்றும் தோழர் சௌரி. இந்த ஆவணப்படத்தை தமிழகத்தில் திரையிட திட்டமிட்டிருப்பதை எங்களிடம் கூறினார் தீப்பு. எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பிரதி அனுப்பிவைக்க கோரிக்கை விடுத்தேன். தோழர் சௌரியும் அதையே வேண்டிக் கொண்டார். இரண்டொரு நாளில் இந்தப்படத்தை யூட்யூபில் பதிவேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என்ற தகவலையும் தெரிவித்தார் இயக்குநர்.

படம் முடிந்ததும் வழக்கமாக நாற்காலிகள் நகற்றுவதும். சலசலவென பேச்சு கிளம்புவதும் இயல்பு. அப்படி ஏதும் இங்கு அரங்கில் நிகழவேயில்லை. சட்டென விளக்குகள் எரியத்தொடங்கியதும் அவசர அவசரமாக கண்ணீரைத் துடைத்துக்கொள்ள எத்தனித்தனர் அனைவரும். அரங்கில் மயான அமைதி. மைக் எடுத்து இயக்குநர் தீப்பு பேசத்துவங்கியதுமே நிலமை சகஜமானது. எழுத்தை எதிர் எழுத்தால் சரி செய்ய வேண்டுமென்ற காலமெல்லாம் போயே போய்விட்டது.

ஆவணப்படத்தில் பணியாற்றிய அத்தனை பெயர்களும் பட்டியலிட்ட பிறகு ,கௌரி நம்மை நோக்கி 'உங்களுக்கென இன்னமும் இரண்டொரு வார்த்தைகள் உள்ளது பிறகு பேசுகிறேன்' என்று கூறியதும் திரை விழுந்தது. அவர் எப்போதும் பேசுவார் நம்முடன் அவரின் எழுத்துகள் மூலம் அதை யாராலும் தடுக்க இயலாது. .


.