திண்ணை" யில் வெளியான எனது கவிதை.
எனது ரகசியங்கள்
ஏதும் வெளித்தெரிந்து
விடக்கூடாதென்ற பயம்
எனக்குள் ...ஆதலால்
என் பேச்சைக் குறைக்கிறேன்
செயலில் அதை மற்றவர்கள்
காண இயலாதவாறு
மறைக்கிறேன்
சிலரைத் தெரிந்தும்
தெரியாதது போல்
நடிக்கிறேன்
நைச்சியமாக சிலரின்
கண்களை நோக்கிப்
பேசுவதைத்
தவிர்க்கிறேன்
வழக்கமாக கூடும் இடம்
செல்லும் சாலையைத்
தவிர்த்து சுற்று வழியில்
பயணிக்கிறேன்..
நான் இயல்பில் இல்லாததை
சரியாகக் கண்டு சொன்ன
பல நாள் நண்பனை
சந்தேகிக்கிறேன்
புழுங்கும் மனதுடன்
நடைப்பிணம் போல்
அலைகிறேன்.
கனவுகள் தொல்லையில்
நடு இரவில் விழித்துக்
கொள்கிறேன்
யாருக்கும் சொல்லிக்
கொள்ளாமல்
ஊர் விட்டுச்செல்லவும்
எத்தனிக்கிறேன்.
வேற்றூரிலும் எவரேனும்
கண்டு கொண்டால்
என்ன செய்வது என்று
எண்ணி மருகுகிறேன்.
என்றாலும்
என் ரகசியம்
இன்னொரு உயிர்க்கும்
தெரிந்துதானே
இருக்கிறது.?!
.