வல்லினம் ஃபெப்ரவரி'2010 இணைய இதழில் எனது சிறுகதை.
“ஆகு, ஆகு”ன்னு பீச்சாங்கைப் பெருவெரல தரயில ஊணி சோத்தாங்கையிலிருந்த கோலிக்குண்டை, பீச்சாங்கையின் மோதிரவிரலுக்கு பக்கத்து வெரல்ல பொருத்தி, அந்த வெரலப்பின்னுக்கு இழூ……த்து எதிருல இருந்த என்னோட குண்டைக் குறி பாத்து அடிச்சான் செல்வா.
சில்லுப்பேந்து போச்சு என்குண்டுக்கு. குழிக்குண்டு வெளயாடிக்கிட்டிருந்தோம். செல்வாவுக்கு “ர” வஆ(ரா)து. சில்லுப்பேந்த குண்ட கையில எடுத்தேன். ”டேய்.. அனங்கிருச்சு... அங்கிருச்சு”ன்னு சொல்லி சண்ட ஆரம்பிச்சிடுச்சி. பரிட்சலீவு விட்டாப்போதும், இந்தக்குண்டு வெளயாட்டுதான். செல்வா, முத்துராசு, மயிலு (வாகனன்), பெரபாகரு, நான், அப்புறம் எப்பவாவது பத்து (பத்மனாபன்)ம் வருவான். கோலிக்குண்டு, பம்பரம், தட்டான் புடிக்கிறது இதெல்லாந்தான் வெளயாட்டு எங்களுக்கு. சண்ட உச்சக்கட்டத்துக்கு போகும்போது பக்கத்துவீட்டு கதவு தெறந்துது. “டேய்... என்னடாது, இந்த மத்தியான நேரத்தில கொஞ்சம் கண்ணசர விடுறீங்களா... பாவிகளா? தொலஞ்சு போங்கடா”ன்னு கெழவி சத்தம் போட்டுச்சு. ”டேய்... சத்தம் போடாம வெளயாடலாண்டா, எல்லாம் இவனால வந்தது, சில்லுப்போனா என்னடா? ஏண்டா குண்ட கையில எடுத்த? அதான் சீரழிஞ்சிடுச்சி.” சரி சரி, சத்தம் போடாம வெளயாடலாம்னு சொல்லி, டேய் உங்குண்ட அதே எடத்துல வெக்கணும்னான் செல்வா. “ஆகு , ஆகு”ன்னு குசுகுசுன்னு சொல்லிக்கிட்டே குண்ட அடிச்சான். கடசீல இருந்த எல்லாக்குண்டும் அடிச்சி அடிச்சி ஒடைஞ்சு போச்சு. சாயங்காலம் ஆயிருச்சு.” “டேய் , நாளைக்கி மறுபடியும் வெளயாடலாம்னு” சொல்லிட்டு அவுஹ அவுஹ வீட்டுக்கு போய்ட்டாங்ய.
இந்தத் தட்டான் (தட்டாரப்பூச்சி) ஏகப்பட்டது வரும் நாங்க வெளயாட்ற எடத்துல. சுத்தீ எருக்கஞ்செடியும், காட்டுச்செடியும், மரமும், ஒரே பொதருமா இருக்கும். எலந்தப்பழ மரம் கூட இருந்திச்சு. முள்ளிச்சனியன் அதிகந்தான் அதில. இருந்தாலும் விடறதில்ல. பறிச்சி பறிச்சி திம்போம். முத்துராசு காயா இருந்தாலும் விட மாட்டான். எல்லாத்தயும் பறிச்சிப்போட்ருவான். ”டேய் நாளைக்கும் கொஞ்சம் இருக்கட்டும்டா”னா விடமாட்டான். பக்கத்திலயே ஒரு கெணறு இருந்திச்சு. தண்ணி கிண்ணி எதுவும் கெடயாது, சும்மா மண்ணு மூடிக்கெடக்கும். அதுக்குள்ள போயி பண்ணி குட்டி போட்டு வெச்சுருக்கும். அதப்போயி சீண்டுவாங்ய, அது “உர் உர்”னு புடுங்க வரும். செனப்பண்ணிக்கி கொஞ்சம் கோவம் ஜாஸ்தி.
தட்டான் புடிக்கிறதுல மயிலு எம்டன். சட்டயக் கழட்டி சுத்துவான். சாயங்கால நேரத்தில கண்ணு மண்ணு தெரியாம சுத்திக்கிட்டிருக்கிற தட்டான் எல்லாம் பட்பட்டுன்னு கீழ விழுந்திரும். தட்டான்ல ஏகப்பட்ட வக, “புலித்தட்டான், கொரங்குத்தட்டான், ஊசித்தட்டான், செவப்புத்தட்டான்”னு. புலித்தட்டான் பாக்கறதுக்கு மஞ்சக்கலர்ல மினுமினுன்னு இருக்கும். ஒடம்பு முழுக்க புள்ளி, புள்ளியா இருக்கும். ஊசித்தட்டான் பச்சக்கலர்ல பாக்க ஊசி மாறியே இருக்கும். ஒற்ற அடியில கீழ விழுந்திரும். கொரங்குத்தட்டான் கன்னங்கரேல்னு நல்லாக் கருகருன்னு இருக்கும். ஆனா ஏன் கொரங்குத்தட்டான்னு பேர் வெச்சாங்யன்னுதான் தெரியல.
இந்தக்கொரங்குத்தட்டானப் புடிக்கிறது தான் கஷ்டம். எமகாதகன் மாதிரி விர்விர்ன்னு பறக்கும். எலயில ஒக்காந்திருக்கும் போது றக்கய ஆட்டாம இருக்கும், செத்திருச்சிங்கற மாதிரி. கையக்குவிச்சு வெரல முன்னுக்கு நீட்டி பட்டும்படாம றக்கயத் தொட்டவொடனே “விர்ர்ன்னு” பறக்கும். வெலவெலத்துப்போகும். ஆனா இந்தப்புலித்தட்டான் சாது. சீக்கிரம் புடிச்சிறலாம். அதப்புடிச்சா விடவே மாட்டாங்ய. பெரபாகருக்கு சேட்ட கொஞ்சம் ஜாஸ்தி, எல்லா றக்கயும் ஒண்ணாச் சேத்துப் புடிச்சிக்கிட்டு கீழ இருக்கிற கல்ல அதோட காலால பொறுக்க சொல்லுவான், இப்டி “கல்லப்பொறுக்கு கருப்பட்டி தாரேன்.. கல்லப்பொறுக்கு கருப்பட்டி தாரேன்..”னு. அதுவும் பாவம் ஒக்காரச்சொல்றாங்யளாக்கும்னு நெனச்சுகிட்டு அந்தக்கல்ல அத்தன காலாலயும் புடிக்கபோகும், பட்டுன்னு மேல தூக்குவான், அது கல்லக் கீழ போட்றும் கனம் தாங்காம. இதயே பண்ணிப்பண்ணி செல சமயம் கல்லோட கனம் அளவுக்கு அதிகமாகும்போது, றக்கயெல்லாம் பிச்சிக்கிட்டு கல்லோட தட்டான் கீழ விழுந்திரும். அதோட அதுகதி சரி. தூக்கிப்போட்றுவான் பெரபாகரு.
மயிலு ஒரு நாளு கொரங்குத்தட்டானப் புடிச்சேபுட்டான். வெரட்டி வெரட்டிப் புடிக்கப்போயி கை, கால்லயெல்லாம் செராய்ப்பு. கடசியா அந்தச்சனியன் எலந்தப்பழ மர உச்சியில போய் ஒக்காந்திருந்தது. கைய லகுவா உள்ள விட்டு புடிச்சுப்புட்டான். நான் கெடச்ச ஊசித்தட்டான கையில வெச்சிக்கிட்டிருந்தேன். ”இத கொரங்குத்தட்டானுக்கு திங்கக் குடுறான்னாங்ய”. ரெண்டும் சண்ட போட்டதில கொரங்குத்தட்டான் தான் ஜெயிச்சிச்சு. செல்வா புதுசு புதுசா டெக்னிக்கெல்லாம் பண்ணுவான். தட்டான் புடிக்கறதில. ”டேய் நீட்டமா, ஒரு கம்பப்புடிச்சிக்கிட்டு அசயாம நின்னோம்னு வெச்சுக்கவேன், அதுல தட்டான் வந்து ஒக்காரும்போது நைசா கீழ எறக்கி புடிச்சிராலம்டா”ன்னுவான். போட்டு மொத்துவாங்ய அவன.
தண்ணிப்பஞ்சம் தான் எல்லா ஊரப்போலவும். முனிசிபாலிட்டி தண்ணி வெய்யில் காலத்துல மக்கர் பண்ணும். அப்ப கொடத்த தூக்கிகிட்டு ஆத்துக்குப்போயி பம்புசெட்டுல தண்ணி புடிச்சு கொண்டாரணும். ஆத்துல தண்ணியெல்லாம் ஓடாது, எப்பவாச்சும் வெள்ளம் வரும்போது மட்டும் தண்ணி ஓடும். நாங்க போயி அத அதிசியமா பாப்போம். அதனால எல்லாம் ஊத்துதான். செல சமயம் நாங்களே ஊத்து போடுவொம். அந்த ஊத்தப்பாத்தாங்யன்னா பம்புசெட்டுக்காரங்ய விட மாட்டாங்ய. மண்ணப்போட்டு மூடிருவாங்ய. அவங்யளுக்கு காசு போகும்ல. அதனால. அங்க போய் வரிசைல நிக்கணும் கொடத்த வெச்சுக்கிட்டு. அதுக்கு சோம்பேறிப்பட்டு நாங்க கொடத்த எல்லாம் வரிசைல போட்டுட்டு ஆத்துக்குள்ள வெளயாடப்போயிருவோம். நம்ம வரிச வர்றப்ப பம்புசெட்டுக்காரன் தண்ணி நெறச்சு வெச்சிருப்பான். போகும்போது காசக்குடுத்துட்டு தண்ணிக்கொடத்த எடுத்துக்கிட்டு போவோம். சைக்கிள்ல பின்னுக்கு கட்டிவெச்சுக்கிட்டு. அப்பறம் புள்ளயாரக்கொண்டாந்து போடறதும் இந்த ஆத்துலதான்.
நாங்கல்லாம் ஆத்துக்குள்ள கபடி வெளயாடிக்கிட்டிருந்தோம் அன்னிக்கு. பத்தும் (பத்மனாபன்) வந்திருந்தான். கபடி போரடிச்சு போச்சுன்னா பாலத்துல போற சைக்கிள்காரன, மோட்டார்காரனப் பாத்து கிண்டல் பண்ணி சிரிச்சிக்கிட்டிருப்போம். போற வேகத்துல அவ்ளவா சட்ட பண்ண மாட்டாங்யங்ற தைரியத்துல. அன்னிக்கு கொஞ்சம் ஓவராப்போயிருச்சு. எங்க பள்ளிக்கூடத்தில போசு, போசுன்னு ஒரு வாத்தி. அவரக்கண்டாலே எவனுக்கும் புடிக்காது. சும்மான்னாலும் அடிப்பாரு. ஒரு நாள் நீதிபோதனை வகுப்புக்கு வேற வாத்தி கெடக்கலன்னு இவர அனுப்பிட்டாங்ய. வந்தவரு வேகமா வேதிச்சமன்பாடு அது இதுன்னு போர்டுல பூரா ஏபிசிடி, ஒண்ணு, ரெண்டு எல்லாம் எழுதி அறுத்துத்தள்ளிப்புட்டாரு. அப்ப “பத்த”ப் பாத்து எந்திரிடா, இந்த சமன்பாட்ட போட்றான்னு சொன்னாரு, அவனுக்கு அப்பத்தான் ரெண்டாஞ்சாமம், நல்ல மத்தியானம் மூணு மணி, சத்துணவு தின்னுட்டு (அன்னிக்கு முட்ட வேற) அவனவன் தூக்கத்தில சொக்கிகிட்டு இருக்கப்ப சமன்பாடு, கொமன்பாடுன்னு கேட்டவொடன, போர்டுல போயி ஏபிசிடின்னு என்னத்தயோ எழுதி வெச்சிப்புட்டான். அடி பொளந்துட்டாரு போசு. அதயே கருவம் வெச்சுக்கிட்டு, இவர எப்டியாவது பழிவாங்கணும்னு நெனச்சிவெச்சிக்கிட்டான் பத்து.
போசு சைக்கிள்ல ஒரு தகரடப்பா (கேரியருக்கு சைடுல) வெச்சிருப்பாரு. அதுல “போசு”ன்னு பேர வேற எழுதி வெச்சிருப்பாரு. அன்னிக்கி ஆத்துல மத்தவங்யள கிண்டல் பண்றப்ப இவரு (போசு) சைக்கிளும் வந்துச்சு... தூரத்தில அந்த சைக்கிள் வரும்போதே பத்து அத அடயாளம் கண்டுகிட்டு “டேய் போசு, டேய் போசு”ன்னு ஆத்தே அலர்ற மாதிரி கத்துனான். இந்த மாதிரி கத்திட்டு நாங்க ஆத்துப்பாலத்துக்கு கீழ ஓடிப்போயிருவோம். பாலத்து மேல போறவன் சைக்கிள ஸ்டாண்டு போட்டு நிறுத்திட்டு வர்றதுக்கு கொஞ்ச நேரம் ஆகும். அதுக்குள்ள வேற எங்கன்னாலும் ஓடிப்போயிரலாம்னு தைரியந்தான். அன்னிக்கு கொஞ்சம் ஓவராவே கத்திட்டான் பத்து. இருந்த ஆத்தரத்தையெல்லாம் சேத்து வெச்சுகிட்டு. நாங்கல்லாம் ஓடி ஓளிஞ்சுக்கிட்டோம். பாலத்திலருந்து கீழ பாத்தா அவ்வளவு தூரம் மூஞ்சி சரியாத்தெரியாது. உடனே அந்த போசு வாத்தி சைக்கிள் ஸ்டாண்டப்போட்டுட்டு, எறங்கி வந்து பாலத்துல கைபுடிச்சி நடக்கிற கம்பில கால ஊணிக்கிட்டு எக்கிக் கீழ பாத்தாரு. கடசியா ஓடி வந்தவன் பத்து. மூஞ்சி தொலக்கமாத் தெரியாட்டாலும் ஒரு குத்து மதிப்பா இவந்தான்னு புரிஞ்சிக்கிட்டாரு. பத்து ஒடம்பும் அப்டி. நல்லாப் பத்து ஆள சேத்துப்பண்ண மாதிரி இருப்பான் (அதான் அப்டி பேரு வெச்சாங்யளோ என்னவோ, அவங்ய வீட்ல!)
கொஞ்ச நேரம் நின்னு பாத்த போசு திரும்பிப்போய்ட்டாரு. உள்ள பாலத்துக்குக்கீழ பண்ணி நரகலும், அதோட குப்பை வீச்சமும் தாங்க முடியாம பயஹ வெளியில வருவாங்யன்னு எதிர்பாத்து ஏமாந்துபோய்ட்டாரு. மூக்கப்புடிச்சிக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தோம். நேரம் வேற ஆயிக்கிட்டிருந்தது. அங்க போயி தண்ணிக்கொடத்த வேற எடுக்கணும், சீக்கிரம் போகலன்னா வீட்ல அடி விழும், அது வேற பயம். டேய் செல்வா, எட்டிப்பார்றா போசு போய்ட்டாரான்னு. செல்வா மெதுவா வெளிய போய்ப்பாத்துட்டு, அங்கருந்தே கத்துனான். ”டேய் போசு போய்ட்டார்றான்னு”. சிரிச்சுக்கிட்டே ஓடி வந்தோம் வெளிய. பத்துக்கு மட்டும் பயம் விடவே இல்ல, எங்க இந்தப்போசு நம்மளப் பாத்துருப்பாரோன்னு. ஏன்னா பத்துப்பதினெஞ்சு நாள்ல பள்ளிக்கூடம் வேற தொறக்கப்போகுது.
செல சமயம் ராத்திரிலயும் ஆத்துக்குப்போவோம். அங்க போயி மணல்ல மல்லாக்கப்படுத்துக்கிட்டு அரட்ட அடிச்சிக்கிட்டிருப்போம். அப்ப எரி நட்சத்திரம் வந்து விழுகிறதப்பாத்துட்டு “டேய் நான் தீவாளிக்கி விட்ட ராக்கெட்டு இப்பதாண்ட வந்து விழுகுதுன்னு முத்துராசு சொல்லிக்கிட்டு இருப்பான்”, அத ரொம்ப நாளா நாங்க நம்பிக்கிட்டிருந்தோம். ஆத்துக்கு அந்தக்கரைல தான் சுடுகாடு. “டேய் அந்தக் “குருசாமி”ப்பய ஏண்டா வாத்திகிட்ட அடிவாங்குனான்? அவனா, குடுத்த ரேங்க் கார்ட அப்பாகிட்ட காட்டி கையெழுத்து வாங்கிட்டு, மடக்காம கொண்டு வரணும்னு வாத்தி சொன்னத வெச்சுக்கிட்டு, அதப்பையில போடாம, கைல புடிச்சிக்கிட்டு நடந்து போறப்ப சாக்கடக்குள்ள விழுந்திருச்சு அது, திரும்பி எடுத்துப்பாத்தா அதுல ஒண்ணுமேயில்ல, எல்லாமே அழிஞ்சு போயிருச்சி” அதான் வாத்தி போட்டுத்தள்ளிட்டாரு அவன. ”ம்க்கும், அவன் சும்மாவே எழுத்துக்கு ஒரு புள்ளி வெக்கிறவன் தானடா, அன்னிக்கு போர்டுல போயி எழுதுடான்னா அங்கயும் போயி ஒவ்வொரு எழுத்துக்கும் பக்கத்தில ஒரு புள்ளி வெச்சுவிட்டான். அதான் அன்னிக்கே வாத்தியாரு” ஏன்டா போர்டெல்லாம் அம்மாப்பெத்து வெச்சுருக்கேன்னு?” அடியப்போட்டாரு.
அப்ப அந்த “பாஸ்கரு?”, அது மூதேவி யாருகிட்ட வெளயாடணும்னு தெரியாம, பெரிய க்ளாஸ் படிக்கிற பயஹ போறப்ப, அவன் எப்பவும் செய்வான் பாரு ஒரு சேட்ட, பண்ணிய வயித்தோட சேத்துவெச்சு எத்துவான் பாரு, அப்டி அவங்ய போறப்ப எத்திருக்கான், பண்ணி சாக்கடைல விழுந்த வேகத்துல, சாக்கடத்தண்ணி எல்லாம் அந்தப்பயஹ மேல தெரிச்சி, மவனே அடி பொளந்துட்டாங்யளாம், ஆனா வாயத்தெறக்க மாட்டேங்றாண்டா. இத இந்தக் குருசாமிப்பய தான் எங்கிட்ட சொன்னான். இதக்கேட்டவொடனே சிரிப்புத்தாங்கல மயிலுக்கு.
முத்துராசு பயங்கர டூப்பெல்லாம் விடுவான். ஓவிய வாத்தி மக கல்யாணத்துக்கு சீர் செனத்தியெல்லாம் காகித்துல வரஞ்சே குடுத்துட்டாருன்னு டூப் விட்டான் முத்துராசு... அப்ப மத்த வாத்திகளப்பத்தியும் பேச்சு வந்துது.
எங்களுக்கு ஒரு கணக்கு வாத்தியார் இருந்தாரு. பேரு மீனாட்சி சுந்தரம். எங்கருந்தோ மாத்தம் வாங்கிக்கிட்டு எங்க ஊருக்கு வந்தாரு. அவருக்கு ஒரு கண்ணு மட்டும் கோணிக்கிட்டு மூக்கப்பாத்துக்கிட்டு இருக்கும். அதுனால அவருக்கு “புள்ளயாரு”ன்னு பேரு வெச்சிவிட்டான் மயிலு. பெரபாகருக்கு கணக்குன்னா ரொம்ப இஷ்டம்.ஒண்ணாம் வாய்ப்பாடே தகிடுதத்தம் போடுவான்..! ஒரு தடவ எல்லாரும் கணக்கப்போட்டு முடிச்சிட்டு ரைட் வாங்கறதுக்காக நின்னுக்கிட்டிருந்தோம். எல்லாரும் அவனவன் எடத்துல தான் நிக்கணும், கூட்டத்தோட கோயிந்தா போட்டா அவருக்கு புடிக்காது. பெரபாகருகிட்ட வந்து நோட்ட வாங்கிப்பாத்துக்கிட்டிருந்தாரு. அவன் பக்கத்துல இருக்கிறவனத்தான் புள்ளயாரு பாக்குறாரக்கும்னு நெனச்சி ஒக்காந்துட்டான். புள்ளயாருக்கு கோவம் வந்து “டேய் எந்திர்றா”ன்னு கத்தினாரு. அவனுக்கு இன்னும் அவர் பக்கத்துல இருக்கிறவனத்தான் பாக்கற மாதிரி இருந்திச்சு.”சார் இங்க”ன்னு மேல் பக்கத்த காட்டுனான், அவரு கீழ்பக்கத்துல ரைட் போட்டார், சார் இங்கன்னு கீழ காட்டுனான், அவரு சைடுல ரைட் போட்டார். இதப்பாத்த அவனுக்கு சிரிப்பு மாளல, கெக்கெபிக்கென்னு சிரிக்க ஆரம்பிச்சுட்டான். ஈரக்கொலயிலயே அடியப்போட்டாரு புள்ளயாரு.
அடுத்த நாளு பம்பரம் வெளயாடிக்கிட்டு இருந்தோம். பீச்சாங்கையில பம்பரத்த புடிச்சிக்கிட்டு சாட்டய வடிவா இறுக்கிச்சுத்தி அப்டி விட்டாக்க, சும்மா ரெங்கும் பம்பரம் ஒரு அஞ்சு நிமிசத்துக்கு தரயில. சாட்டைக்கு நுனியில எல்லாரும் ஒரு பெரிய முடிச்சா போட்டு வெச்சுருப்பாங்ய. சுண்டு வெரலுக்கும், மோதிர வெரலுக்கும் எடைல குடுத்து புடிச்சிக்கிடறதுக்கு. நான் நல்லா சோடாடப்பி மூடிய விளிம்பில்லாமத்தட்டி, அது நடுவுல ஒரு ஓட்டயப்போட்டு சாட்டை நுனிவரை கொண்டுவந்து அதுக்குக்கீழ முடிச்சுப்போட்டு வெச்சிருப்பேன். சாட்டயத்தூக்கிப்புடிச்சா நூல்குண்டு மாதிரி இருக்கும். வளவு வளவா இருக்கும் அந்த சோடாடப்பி மூடி.
வெளயாட்டு ஒண்ணும் பெரிய விசயம் இல்ல, தரயில ஒரு வட்டத்தப்போட்டு அதுக்குள்ள ஒரு கட்டயப்போட்டு வெச்சிருப்பாங்ய. பம்பரத்த ரெங்கு விட்டு கட்டய யாராவது வட்டத்துக்கு வெளிய எடுக்கும்போது, மத்தவங்ய வெளிய ரெங்கு விட்டு சாட்டையால கோஸ் எடுக்கணும். (சாட்டய ரெண்டு கையாலயும் நுனிக்கொரு பக்கமாப்புடிச்சிக்கிட்டு, கீழ சுத்திக்கிட்டிருக்கிற பம்பரத்த தூக்கி ஆகாசத்துல போட்டு கையால புடிக்கிறது தான் கோஸ்.) அப்டி கோஸ் எடுக்க முடியலன்னா அவன் பம்பரத்த அந்த வட்டத்துக்குள்ள வெச்சு மத்தவங்ய அது மேலயே குத்துவாங்ய பம்பரத்த ரெங்குவிட்டு. அந்தப்பம்பரம் வெளிய வந்த பிறகும் கோஸ் எடுக்கணும், இதுல தோத்தா அவ்ளவ்தான். பம்பரத்த ஆக்கர் எடுத்துருவாங்ய. ஆக்கர்னா அறுவாள எடுத்துட்டு வந்து பம்பரத்த ரெண்டாப்பொளந்து விட்ருவாங்ய. அத மாதிரி நான் நெறய வாட்டி மத்தவங்ய பம்பரத்த ஆக்கர் வெச்சதனால எங்கூட வெளயாடவே பயப்படுவாங்ய.
பம்பரம் கடயில வாங்கும்போது அதுல ஆணி இருக்காது. சும்மா மொட்டயாதான் இருக்கும். அதுல ஆணி அடிக்கிறதுக்காக, பம்பரம், கோலிக்குண்டு விக்கிற கடைக்கி எதுத்தாப்ல இருக்குற பழய டார்ச்லைட், கொட ரிப்பேர் பண்ற பாய் (முஸ்லிம்) கடைக்கி போவோம். அவரு பம்பரத்த பென்ச் வைஸ்ல செங்குத்தா வெச்சு ஆணி அடிப்பாரு. சில சமயம் ஆணி அடிக்கும் போதே பம்பரம் பொளந்துக்கும். அதுக்கப்புறம் வைஸ இளக்கி, பம்பரத்த படுக்க வெச்சி ஆணிக்கொண்டய ஃபைல்லால தேய்ச்சு கூராக்கி குடுப்பார். பம்பரத்த கீழ விடாம கையிலயே ரெங்க விடுறது ஒரு கலை. எல்லாருக்கும் வராது. பம்பரத்த சுவத்தில பூசியிருக்கிற சுண்ணாம்பு, காவி இதுஹள்ல தேய்ச்சுட்டு, கொண்டயப்பாத்தா அந்தக்காவி கோணல் மாணலாத்தான் இருக்கும், ஆனா அது தரயில அந்தக்காவியோட ரெங்கும்போது கண்கொள்ளாக்காட்சியாயிருக்கும்.
ஆத்தோரத்தில வெளயாடப்போகும்போது, அகஸ்மாத்தா எப்பவாவது, தென்ன மரத்திலருந்து எளநி கீழ விழுந்து கெடக்கும். அதக்கண்டாலே செல்வாவுக்கு ஒரே கொண்டாட்டந்தான். அன்னிக்கி ஒண்ணு கெடந்துச்சி. அத எடுத்து தென்னமரத்துல அடிச்சு அடிச்சே நாரெல்லாம் பிச்சுப்போட்டான். முழுசாத் தேங்கா வர்ற வரைக்கும். ”டேய் முத்துஆ(ரா)சு, போயி கொஞ்சம் பொட்டுக்கள்ள, வே(ர்)க்கள்ள, அப்பஅ(ற)ம் கொஞ்சம் சீனி அதொட ஒரு வத்திப்பெட்டி எல்லாம் வாங்கிட்டு வாடா”ன்னான்.” எதுக்குடா? , நீ வாங்கிட்டு வாடா நான் சொல்ஏ(றே)ன்”. முத்துராசு கொஞ்சம் காசுக்காரப்பய, அவன் அப்பா துபாயில இருக்காரு. எங்களுக்கு அப்பப்ப தீனி சப்ளயர் அவந்தான். முத்துராசு கடைக்குப்போனான். ”டேய் மயிலு, பெஅ(ர)பாகவு(ரு), நீயுந்தாண்டா, கொஞ்சம் சுள்ளி பொஅ(ற)க்குங்கடா”ன்னான். “என்ன மவனே அதிகாரம் தூள் பறக்குது“ன்னு சொல்லிக்கிட்டே பொறக்கிக்கொண்டாந்து குடுத்தோம்.
இன்னிக்கு செல்வா என்னவோ செய்யப்போறான்ங்கறது மட்டும் உறுதி. அதுக்குள்ள முத்துராசு எல்லாத்தயும் வாங்கிட்டு வந்திட்டான். செல்வா எல்லாச்சுள்ளியயும் போட்டு தீய மூட்டுனான்.” டேய் என்னடா செய்யப்போற “ இகு(ரு) இகு(ரு) பாத்துக்கிட்டே இ(ரு)குன்னான். அவன் கையில இருந்த தேங்காயப்பாத்தா கடயில உரிச்ச மாதிரி வழுவழுன்னு இருந்துச்சு. தேங்காய ஒடக்காம அதில இருக்கிற மூணு கண்ணுல ஒரு கண்ணமட்டும் வெரல வெச்சு ஓட்டயப்போட்டான்.” முத்துராசு எல்லாத்தயும் குட்ஆ(றா)”ன்னு வாங்கி வேர்க்கள்ளயவும் பொட்டுக்கள்ளயவும் மாத்தி மாத்தி ஒவ்வொண்ணா ஓட்ட போட்ட தேங்காக் கண்ணு வழியா திணிச்சுவிட்டான். எல்லாம் போட்டு தீந்துச்சு. கடசியா சீனிய உள்ள கொட்டிவிட்டான் செல்வா. சீனி கொண்டாந்த காகிதத்த நல்லா சுத்தி கண்ண அடச்சுவிட்டு, தேங்காய கவட்டக்கம்புல குடுத்து நெருக்கிப்புடிச்சிக்கிட்டு, ஏற்கனவே மூட்டியிருந்த தீயில காட்டுனான்.” என்னடா பண்ற “கொஞ்சநேரம் இ(ரு)குங்கடா"ன்னான். தேங்காய் நார் கருகுற வாசனை அடிச்சுது.
இதுக்கிடயில நான் என்பங்குக்கு கீழ கெடந்த பச்சக்குறும்பைய (சிறு தேங்காய், வளராமல் கீழே விழுந்து விடும்) எடுத்து, அது மேத்தொலிய உரிச்சிப்புட்டு, நாலஞ்சு தென்ன ஓலயப்பிச்சு குச்சி (விளக்குமாற்றுக்குச்சி) எடுத்துகிட்டு, குறும்பைய நல்லா கல்லுல தேய்ச்சுவிட்டு தட்டயா ஆக்கி (பாத்தா சின்னக் கொட்டாங்குச்சி போல இருக்கும்) உரிச்ச ஒரு குச்சிய மட்டும் எடுத்து வளைவா ஆர்ச் மாதிரி பண்ணி, அதக் குறும்பையில குத்தி நிறுத்தி, அதுக்கு நடுவுல நீட்டமா ஒரு குச்சிய செங்குத்தா நிறுத்தி குத்தி வெச்சுட்டு ஒரு ஜாண் அளவு ஒடிச்சு வெச்சிருந்த ரெண்டு குச்சிகள ஆர்ச்சுக்கும், நட்டக்க நடப்பக்கமா நிக்கற குச்சிக்கும் எடயில விட்டு சுத்திக்கிட்டிருந்தேன், “டிக்கி, டிக்கி’ ன்னு சத்தம் வந்துக்கிட்டிருந்துச்சு.
கொஞ்ச நேரம் ஆனப்பிறகு தீயிலருந்து வெளியே எடுத்தான். அப்பறம் மயிலோட சட்டய வாங்கி தேங்காய அதுல வெச்சு சுத்தி, ஓங்கி கல்லுல அடிச்சான் செல்வா. தேங்கா உள்ள நொறுங்குன சத்தம் கேட்டுச்சு. அப்பறம் எடுத்துப்பார்த்தா, உள்ள இருந்த தண்ணில வேர்க்கள்ளயும் பொட்டுக்கள்ளயும் நல்லா வெந்து இருந்துச்சு, தண்ணியவே காணோம். எல்லாரும் பங்கு போட்டு சாப்ட்டோம்…தேங்காயும், கடலயும் சீனியோட கலந்து அம்சமா இருந்திச்சு. “டேய் செல்வா, அம்சம்டா, இதெல்லாம் ஒனக்கு எப்ட்றா தெரியும்?” “அதான் ஐயாவோட மகிம, இப்பத் தெ(ரி)கியுதா?” “ தெகியுது தெகியுது..”ன்னு சொன்னோம் எல்லாரும், அடிக்க வந்தான் செல்வா.
ஒரு வழியா எல்லா லீவும் முடிஞ்சு பள்ளிக்கூடம் தெறந்துட்டாங்ய. ’பத்து’க்கு மட்டும் பயம் நடுங்கிக்கிட்டிருந்திச்சு. மொத நாள் அவன் வரவேயில்ல. ரெண்டானாள் வந்தப்ப மொத பீரியடே ‘போசு’ வாத்தி வந்துட்டாரு. ஒவ்வொருத்தரயா பேரு சொல்லிக்கூப்பிட்டாரு. லீவு நாள்ல ஜேம்ஸ்பாண்ட் வேல பாத்திருப்பாரு போல. கரெக்டா எங்க அஞ்சு பேர மட்டும் கூப்ட்டு நிக்க வச்சாரு. ”அன்னிக்கி ஆத்துல கீழருந்து எவண்டா கத்துனது?” மொனங்கிக்கிட்டே பதில் சொன்னேன் நானு. கையில பணியாரம் குடுத்து அனுப்பிட்டாரு. மத்த எல்லாருக்கும் அடி பொளந்து கட்டிட்டு கடசியா பத்தக்கூப்பிட்டாரு. வாத்தி கேக்கறதுக்கு முன்னாடியே “சார் நான் ஓய்ந்தான் சார் கத்துனேன்” ‘ஓய்’ன்னு கத்தறதுக்கு நீ என்ன ஓநாயாடா’ன்னு சொல்லி ஒடம்பெல்லாம் டின் கட்டி அனுப்பிட்டாரு. “அஞ்சு பேரும் பெஞ்சு மேல ஏறி நில்லுங்கடா” வேற வேற எடத்துல ஒக்காந்துருந்ததால அவன் அவன் எடத்துல ஏறி நின்னோம்.
கட்டடம் ஓட்டுசாய்ப்புதான். அதனால சப்போர்ட்டுக்கு நீட்டமா குறுக்கு வாட்டுல தடியா இரும்புக்கம்பி ஒண்ணு கட்டியிருப்பாங்ய. பத்து நின்னது நாலாவது பெஞ்ச்ல, அவனுக்கு முன்னால பெஞ்ச்ல முத்துராசு நின்னுக்கிட்டிருந்தான். ”எவனும் கீழ எறங்கப்படாது, இன்னிக்கி பூரா நிக்கணும், அடுத்த பீரியட் வாத்தி வந்தாலும் காரணத்த சொல்லிட்டு நிக்கணும்”ன்னாரு போசு. டின் கட்டியும் சேட்ட போகல பத்து’க்கு. வாத்தி பின்னால திரும்பி போர்டுல வேதிச்சமன்பாடு ஆரம்பிச்சிட்டாரு. பத்து அந்த இரும்புக்கம்பிய ரெண்டு கையாலயும் புடிச்சி தொங்கிக்கிட்டு முன்னால நின்ன முத்துராசு முதுகுல லேசா ரெண்டுகாலால எத்திவிட்டான். இத எதிர்பாக்காத முத்துராசு முன்னால விழப்போயி பேலன்ஸ் தடுமாறி ஒக்காந்துருந்த பயஹ மேல விழுந்துவெச்சான். போசு ஒடனே திரும்பி, ”என்னடா சத்தம் இங்க” “இல்ல சார் பேனா கீழ விழுந்திருச்சு”ன்னு சமாளிச்சான் முத்துராசு. அதுக்குள்ள பத்திரமா சாதுபோல கம்பிய விட்டு கைய எடுத்துட்டு நின்னான் பத்து.
ஆச்சு சாயங்காலம், எங்க கிளாஸ அடுத்தது தான் ப்ளேக்ரவுண்டு, வாலிபால் வெளயாட்றேன்னு பந்தத்தூக்கி எங்க க்ளாஸ் ஓட்டு மேலயே போடுவாங்ய. அதுல ரெண்டுவாட்டி ஓடு ஒடஞ்சிருச்சி. வானம் பாத்த பூமி மாதிரி கொஞ்ச நாளக்கி அப்டியே இருக்கும், வெய்யிலும் உள்ள வரும், அதுல பயலுஹ மத்தியானம் சத்துணவு சாப்ட்ட தட்ட காய வெப்பாங்ய. வாத்தி வந்தா” எவண்டா இங்க பத்துபாத்திரம் கழுவிக்காயவெச்சது”ன்னு சத்தம் போடுவாரு. ஓடு மாத்தறதுன்னா வேற யாரயும் போக விட மாட்டாங்ய பத்தும், முத்துராசும். அவங்யளே தான் போகணும்னு அடம் புடிப்பாங்ய.
.