Tuesday, August 25, 2020

மைனு லேங்கா....

 

டாட்டா ஸ்கைல அப்பப்ப பஞ்சாபி சேனல் பாக்றதுண்டு. அதுல ‘ஷோ பாக்ஸ்’னு ஒரு சேனல் , எப்பத்திருப்பினாலும் இந்த ‘லெங்கா’ பாட்டுத்தான் ஓடும். ஒண்ணும் பிரமாதமல்லாம் இல்லை. இளமையான குரல் மற்றும் உருவம் அந்தப் பையனுக்கு. பஞ்சாபி பொண்ணுங்கல்லாம் கொஞ்சம் ஹைட்டாத் தான் இருப்பாங்க. ஒரு லேங்கா வாங்கிக்குடுன்னு அடம் பிடிக்கிறார் தலைவி. தலைவன்கிட்ட வழக்கம்போல பைசா இல்லை, அதெல்லாம் வேணாம்னு கூட்டிட்டு வந்துட்றார். பசங்க கூட உக்காந்து பார்ட்டில மொதல்ல வர்ற ரிங்’ ஃபோன்காரன் தான் பில் குடுக்கணும்னு சொல்லும்போது தலைவர் எடுத்து நீட்டீர்றார் காசை. அதுல தலைவிக்கு இன்னமும் கோவம்..ஹிஹி..ரொம்ப பெரிய தீமோ இல்லை கருத்து சொல்லவோ எத்தனிக்கலை. சும்மா ஒரு காதல் பாட்டு. அற்புதம். லேங்கா’வ விடுங்க , பாட்டு முழுக்க அந்தப்பையன் போட்டுக் கிட்டு வர்ற அத்தனை சட்டையும் பிரமாதமான டிசைன்கள். ‘லைட் கராதே மேரே காளே பாள் மே’ கொஞ்சம் ஒளி வீசு என் தலைக்கு. இடையிசைல்லாம் கேட்கும் படி இருக்கு. கடைசீல லேங்கா வாங்கி குடுத்தாரா இல்லையா...ஹ்ம்.. முழுப்பாட்டும் பாருங்க.!!

இன்னிக்கும் ஒரிஜினலா பாடல்கள் வருவது என்பது பஞ்சாபில தான். மேலும் ஹிந்திப்பாடல்களால் அழிக்கவே முடியாத இடத்துல இன்னமும் பஞ்சாபி பாடல்கள் இருக்கிறது என்பது தான் நிஜம். மராட்டி மொழியை அழிச்சு ஒண்ணுமில்லாமப் பண்ணினது போல பஞ்சாபி பாடல்களை அழிக்க முடியவில்லை. மேலும் அவர்கள் இசை மார்க்கெட் இன்னமும் வலுவா இருக்க காரணம் இசையை, ஒலிப்பேழையை காசு கொடுத்து வாங்கி கேட்பர் பஞ்சாபிகள். பதிவிறக்கம் பெரும்பாலும் இல்லை. ’தே மர் ஜாண்யா ....!’ #மைனுலேங்கா

Monday, August 24, 2020

’நார்ஸி’

 

 

மீண்டும் மினுக்கியது, அந்த ’ஃப்யூச்சர்புக்’ வலைத்தளத்தின் அஞ்சல் பெட்டி. பெயர் பார்த்தேன் புதிதாக இருக்கிறது ‘நார்ஸி’ , நான்ஸியை ஒரு வேளை தவறாக எழுதியிருக்கக் கூடும் என்று நினைத்தேன். கேட்டு விடலாம் என்று நினைப்பதற்குள், ஒருமுறை அவளின் காலக்கோட்டை பார்வையிட்ட பிறகு கேட்கலாம் என சென்றேன்.அத்தனையும் எனக்குப் பிடித்த படங்களாகவே இருந்தன. எனினும் அத்தனையும் புதியவை. போஸ்ட் மாடர்னிஸத்தின் புதிய பரிமாணங்கள். வேற்று மொழிக் கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்து இட்டிருந்தாள். ஆனாலும் அவளின் ஒரு புகைப்படம் கூட இல்லை. எங்கெங்கிருந்தோ பகிர்ந்தவை மட்டுமே. தொடர்ந்து அலசிக் கொண்டிருக்கும் போது ’டிங்’ என்ற ஒலி கேட்டது அவள்தான், மீண்டும் அழைக்கிறாள். ஓடிச்சென்று அஞ்சற் பெட்டியை திறந்தேன்.

 

”ஏன் இத்தனை காலதாமதம் ? இரவு பதினொன்றரைக்கெல்லாம் நான் உறங்கி விடுவேன் என்று உனக்குத்தெரியாதா ?”  என்று உரிமையோடு கேட்டாள். இல்லை காலக்கோட்டில் உலவிக்கொண்டிருந்ததில் கவனம் பிசகிவிட்டது எனச் சமாளித்தேன். ஹ்ம்.. பேசு என்றாள். என்ன பேசுவது ? எப்படி தொடங்குவது .இதே தயக்கம் தான் நூற்றாண்டு காலமாய் அத்தனை பையன்களுக்கும் இருப்பது தானே?..சரி இன்று கேட்டுவிடலாம் என்றெண்ணி ,விசைப்பலகையில் தட்டச்சிடும் போது அவளிடமிருந்து எதிர்பாராக்கேள்வி வந்தது. ‘உனக்கு காலப்பயணங்களில் நம்பிக்கை உண்டா?’ என. ஹ்ம் இருக்கிறது என்றேன். பிறகு நீண்ட நேர மெளனம் இருபுறமும்.

 

’பொதுச்சார்பியல் கோட்பாடு சரியாக இருந்து, ஆற்றல் அடர்த்தி நேர்மறையானதாக இருந்தால், காலப்பயணம் சாத்தியமில்லை’ அல்லவா? என்று வினவினாள். அது ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கூற்று. இருப்பினும் அதற்காக எல்லாம் அப்படியே தான் இருக்க வேணும் என்று கட்டாயமில்லை ,ஓளியின் வேகத்தில் பயணிக்க இயலாவிட்டாலும் கிட்டத்தட்ட அதன் வேகத்தை எட்டிப்பிடித்து, எங்கேனும் புழுத்துளை கிட்டினால் சாத்தியம் தான்.. என்று என்னளவிலேயான காலப்பயண அறிவைக் கொண்டு விளக்க முயன்றேன். கொஞ்சம் நம்பிக்கை வந்தவளாக மீண்டும் ஏதும் பேசவில்லை.

நேரம் கடந்து கொண்டிருக்கிறது. வழக்கமான கேள்விகளை அவள் விரும்ப மாட்டாள் போலிருக்கிறது. அதோடு ஒரு முறை போலும் வணக்கங்களைப் பரிமாறிக் கொண்டதேயில்லை அவள். இப்படி ஒரு விசித்திரப்பிறவியா என்று யோசித்தேன். ’உனது பூச்செடிகளுக்கு நீர் ஊற்றினாயா’ என்று ஒரு முறையேனும் கேட்பாய் என்றெண்ணி ஏமாந்திருக்கிறேன் என்று சொல்லிவிட வேணும் என நினைத்தேன். ஒரே ஒரு முறை என் வீட்டு உப்பரிகையின் பூந்தொட்டிப்படத்திற்கு விருப்பக்குறி (மட்டுமே) இட்டிருந்தாள். அதனால் தான்.

 

சில நொடிகளில் பச்சை நிறம் சாயம் கலைந்து சாம்பல் நிறமாகிவிட்டது அவளின் பெயரில். ஹ்ம்.. இன்றும் கேட்கவில்லை எனச்சலித்துக் கொண்டே நேரத்தைப்பார்த்தேன் , சரியாக பதினொன்றரை. சுழற்றிய கண்களை இன்னமும் வலிக்க விடாது உறங்கி விட்டேன்.

 

இப்படியே தொடர்கிறது ஒவ்வொரு நாளும் ஒரு முடிவும் இல்லை. எனக்கும் அம்மாதிரியான வழக்கமான காதலர்கள் பரிமாறிக்கொள்ளூம் இதயங்களையோ இல்லை சில நொடிகள் மட்டுமே ஆடிக்களைக்கும் ஜிஃப்களையோ பகிர நான் விரும்புவதில்லை. அவசியத் தேவையான விஷயங்களைப் பற்றி மட்டுமே விவாதிக்க விரும்புபவன் நான் என்பதை அவளும் அறிந்திருக்கக்கூடும். எங்கிருக்கிறாய் என்ன செய்கிறாய் உண்பதற்கும் உடுத்துவதற்கும் என்ன வழிவகைகள், இருப்பிடம் குறித்த எந்தத்தகவலும் உன் தன்விளக்கத்தில் இல்லையே,பிடித்த உணவுகள், நடக்கப்பிடித்த கடற்கரைகள், பறக்கப்பிடித்த வானங்கள் எவை என எத்தனையோ கேள்விகள், இருப்பினும் ஒன்றும் தோன்றுவதில்லை அவள் பெயரில் பச்சை ஒளிரும்போது.

”ஒரு தவறு நடந்திருக்கிறது” என்று சொன்னாள் அவள் தான் அடுத்த நாள். என்னவெனக்கேட்க முயன்றேன்.  பொருளும், எதிர்ப்பொருளும் மிகச் சரியாக, சமமான கணக்கில் உற்பத்தியாகி ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டிருந்தபோது, எங்கோ சமநிலை ஒரு நூல் அளவு தவறி, எதிர்ப் பொருளை விட, எதிரணுக்களைவிட ஒரு நூலளவு அணுக்களும், பொருள்களும் அதிகமாகிவிட்டன. அந்த நூலளவு பொருள்கள்தான் பல லட்சம் கோடி விண்மீன்களாக, பேரண்டத்தில் உள்ள அத்தனையுமாக உள்ளன, ஆனால், அந்த தவறு எங்கு நடந்தது, எப்படி நடந்தது என்பதற்குதான் விடை இல்லை.” உனக்குத் தெரியுமா அதைப்பற்றி எப்போதாவது சிந்தித்திருக்கிறாயா என்று வினவினாள். ஹ்ம்.. இப்படி ஒரு கோட்பாடு உலவத்தான் செய்கிறது அனைவரும் விடை தேட முயல்கின்றனர். என்று பதில் தெரியா மாணவன் போல நின்றேன்.

சரி என்றவள்..மேலும் வெகு நேர மெளனத்திற்குப்பின்  எங்கிருக்கிறாய் என்ன செய்கிறாய் உண்பதற்கும் உடுத்துவதற்கும் என்ன வழிவகைகள், இருப்பிடம் குறித்த எந்தத்தகவலும் உன் தன்விளக்கத்தில் இல்லையே, பிடித்த உணவுகள், நடக்கப்பிடித்த கடற்கரைகள், பறக்கப்பிடித்த வானங்கள்” என்று நான் கேட்க நினைத்த அதே சொற்றொடர்களை வரிசையாகக் கேட்டாள். திக்கு முக்காடிப்போனேன். இவளுக்கு எப்படித்தெரிந்தது.... என்ன பதில் சொல்ல மாட்டாயா என்று மீண்டும் வினவினாள். அடிப்படையாக எல்லா விஷயங்களும் ஒத்துப்போகிறதே என்ற பூரிப்பில் நா எழவில்லை. மீண்டும் நேரம் பதினொன்றரை ஆகிவிட்டது தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததில். உறக்கம் சுழற்றியது. அன்று கனவெல்லாம் பறந்து கொண்டிருந்தேன் எனக்குப்பிடித்த வானங்களில். மேகங்களூடாக பயணித்து வந்து ”நான் யாரும் வேற்றாள் இல்லை அது நீயே தான்” என்றாள் நார்ஸி.

Saturday, August 15, 2020

பாடும் போது நான் தென்றல் காற்று

 

தமிழ் மற்றும் இன்னபிற மொழியில் பாடும் கலைஞர்களுக்கு இந்திய துணைக் கண்டத்தில் வெளிநாட்டு பாடற்கலைஞர்களைப் போல ஸ்டேஜ் ஷோக்களில் வயர்லெஸ் மைக் வைத்துக்கொண்டு ரசிகர்களிருக்குமிடம் வரை வந்து அவர்களோடு கலந்து பாடும் வாய்ப்போ, அவர்களோடு சேர்ந்து ஆடும் வாய்ப்போ கிடைப்பதில்லை. எத்தனை பாடல்கள் பாடியிருந்தபோதும், ஆர்ப்பாட்டமான பாடல்களும் கூட. கொஞ்சம் கட்டுப்பட்டித்தனம் அவர்கள் மனத்திலேயே ஊறிக்கிடக்கிறது போலு.ம். தனிப்பாடற்திரட்டுகள் (ஆல்பம்) கலாச்சாரம் இன்னமும் தமிழ் மண்ணில் ஊறாதது தான் காரணம். இந்த ஒல்லிப்பிச்சான் அநிருத் அப்பப்ப பாட்றான்.

அந்த இடங்களை வெறுமனே வாயசைக்கும் நடிகர்கள் எடுத்துக்கொண்டு விட்டனர். பாடும் அனைவரும் இதுவரைக்கும் பின்னணிப்பாடகர்கள் என்றே அழைக்கப்படுவது ஒரு சாபம். வெளிநாட்டில் பாடுபவரே ஆடி மகிழ்விப்பது போல இங்கும் இருப்பவர் கொஞ்சமே. அதுவும் இப்போது மட்டுமே கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து தான். அப்பாச்சி இண்டியன், ப்ளேஸ், உஷா உதுப் போன்ற மேற்கத்திய பாணியில் பாடும் கலைஞர்களுக்கு மட்டுமே ஸ்டேஜ் ஷோக்களில் முன் வந்து பாடும் வாய்ப்புகள் கிட்டியது. அதிலும் மாம்பலம் மாமி உஷா உதுப் தமிழ்ச்சேலை கட்டிக் கொண்டே பாடி அசத்துவார். ராசைய்யா எப்போதும் தமது ஆர்மோனியப்பெட்டியை ஒரு ப்ராப்பர்ட்டி போல வைத்துக் கொண்டு ‘இதை; விட்டு அகல மாட்டேன் என்று சிறுகுழந்தை போல அடம் பிடிப்பார். நின்ற இடத்திலேயே பாடிவிட்டு சென்றுவிடுவர் அனைவரும்.

எஸ்.பி.பாலசுப்ரமணியமும் அதே போல ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’ ’இளமை இதோ இதோ’ ன்னு ஒரு ராக் ஸிங்கர் போல ராம்ப்பில் பாடிக்கொண்டே நடந்து வந்தால் எப்ப்டி இருக்கும்? உடல் பருமனைப்பற்றி யோசிக்க வேண்டாம், அதே போலுள்ளவர் எல்லாம் பாடத்தான் செய்கின்றனர். மீண்டு வருவார் பாடுவார். #பாடும்போதுநான்தென்றல்காற்று.

Friday, August 14, 2020

எட்ஜ் ஷ்ருதி

குரலில் எந்த பிசிறும் இல்லை. பாடும் முறை கேட்கும்போது எதோ வெளிநாட்டு பெண்மணி பாடுவது போல தெரிகிறது. பார்த்தா நம்ம பரமக்குடி பெண்மணி ’ஷ்ருதி ஹாசன் போர்ட்ரெய்ட்’ ஸ்டைலில் வெளியிட்டிருக்கும் பாடற்காணொலி இந்த ‘எட்ஜ்’ ... இதே போர்ட்ரெய்ட் ஸ்டைல் ஏற்கனவே தம்பி அநிருத் முயற்சி பண்ணது தான். ஒன்றும் புதிதில்லை. எனக்கென்னவோ பாட்டு நர்சரி ரைம் போல தோன்றுகிறது. இங்க பெங்களூர் உள்ளூர் ரேடியோ இண்டிகோ’வில் நேரலையில் இந்தா வர்றார் அந்தா வர்றார்ன்னு உதார் விட்டுக்கிட்டே இருந்தாங்ய. ஷ்ருதி வர்ற வழியக்காணம்.

விஎச்1-ல ஓரிரு முறை இந்தப்பாடல் ஒளிபரப்பானது. க்ளோபல் ப்ரிமியர் விஎச்1ல’ தான் நடந்தது போலருக்கு. இப்பல்லாம் நிறைய உள்ளூர் கோடாங்கி சங்கீதங்களை பரப்புறார் விஎச்1 சேனல். கூடவே நிறைய கோ-பாப் ( கொரியன் பாப் பாடல்கள்) போட்டு விட்றான் அதான் எரிச்சல். எதோ பிடிஎஸ்’ஸின் ஒரு பாடல் புகழ் பெற்று விட்டதால (மைக் ட்ராப்) ஓயாம கோ-பாப் தான் போட்றான். பொம்பளையா இல்ல ஆம்பளையான்னே தெரியறதில்லை. எல்லாரும் ஒண்ணாத்தான் தெரியறா அவங்க பாட்டுகள்ல.

இந்தப்பாடலும் க்வாரண்ட்யூன் (க்வாரண்டைன் ட்யூன்ஸ்) வரிசைல தான் வரும் போலருக்கு. முன்னால நாயகனின் உள்ளூர் சரக்கு ’தென்பாண்டி சீமை’ய சீமை சரக்காக்கி கொடுத்தார். இப்ப டைரக்ட்டா சீம சரக்கே வந்திருக்கு. ஏ தமிழ் கூறும் நல்லுலகே கண்டு கேட்டு மகிழு... #எட்ஜ்ஷ்ருதி

Sunday, August 9, 2020

Be Kind - Marshmello & Halsey

 ஹல்ஸி’யின் (Halsey) பாடல்கள் கவனம் பெறுபவை எப்போதும். தொடர்ந்தும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன் இவரின் இசையில் பாடல்களை. இப்போது சமீபத்தில் வெளிவந்த இந்த ‘Be Kind’ம் அதே ரகம். கேட்டே ஆக வேண்டும் என்ற வகையில். அற்புதமான குரல். பல தடவை இவர் பாடியதை ’ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட்’ (I didn't know that I was starving 'til I tasted you) பாடியது என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். பெயரும் கிட்டத்தட்ட ஒன்று போல இருக்கும். ஹல்ஸி இந்தப் பாடலை ‘மார்ஷ்மெல்லோவுடன்’ இணைந்து பாடி வெளியிட்டு இருக்கிறார்.  (பெங்களூர் 91.9 ரேடியோ இண்டிகோ’வில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி 8 மணி வரையிலும் ‘Ryan Secrets’ என்ற நிகழ்ச்சி ஒலி பரப்பாகும். வேறொன்று மில்லை. பாடல் வரிசை தான். அமேரிக்கன் டாப் 40.அதில் இந்தப்பாடல் எப்படியும் பத்துக்குள் இருந்து கொண்டே இருக்கும்.)

எனக்குத் தெரிந்து முகத்தையே காட்டாத எப்போதும் ‘மாஸ்க்’ அணிந்து கொண்டே எல்லாப்பாடல்களிலும் தோன்றுவார். இந்த மார்ஷ்மெல்லோ ஆன் மேரி (Anne Marie) பாடிய ஃப்ரென்ட்ஸ் பாடலிலும் அப்படியே மாஸ்க்கிட்டு தோன்றுவார். ஏன் எதற்கு காரணம் தெரியவில்லை. தம் முகம் எல்லோருக்கும் தெரியவேணும் புகழடைய வேணும் என்போரின் மத்தியில் இப்படி ஒரு கலைஞர். கேட்கப்போனால் இப்படி பதிலளிக்கிறார் “'I don't take my helmet off because I don't want or need fame. I'm genuinely trying to create something positive for people to connect with. ” முகத்தை மூடிக்கொண்டால் எப்படி பாஸிட்டிவ் எண்ணங்களை பரிமாற முடியும் ? தெரியவில்லை.

ஹல்ஸியின் இன்னொரு பாடல் ‘Graveyard’ அசரவைக்கும் கிட்டாரின் விள்ளல்களில் ஆரம்பிக்கும் பாடல். இந்தப்பாடலை காட்சிகளாக்கியதில் எனக்கு மிகவும் பிடித்தது அந்த Time Lapse Video Version தன் முகத்தையே முழுக்க வரையும் விதத்தை டைம் லாப்ஸில் படமாக்கி யிருக்கும் வெர்ஷன். பிரமிக்க வைக்கும் ராகம்.

இந்த Be kind பாடல் முழுக்க VFX மற்றும் CGயில் செய்தது போல. ஒரு பாடலுக்காக ஒரு படமெடுக்கும் செலவை செய்ய தயங்குவதில்லை போலும். சாதாரண பாப் வகையிலான பாடல் தான். இவர் வகை ElectroPop சேர்ந்தது. ஒன்றும் புதிதில்லை, ஹெவி எலக்ட்ரானிக் கருவிகள் கொண்டு வழக்கமான பாப் இசையை தூக்கி நிறுத்தும் முயற்சி தான்.. இருப்பினும் இங்கு மிகவும் பழகிய தாளம் தான்.. இருப்பினும் எதோ ஒன்று திரும்பத்திரும்பக் கேட்க வைக்கிறது. ஒரு கூடுதல் சங்கதி. இவர் ஒரு ஃபெமினிஸ ஆக்டிவிஸ்ட்டும் கூட. #Bekind

 

Thursday, August 6, 2020

பெய்ரூட்

லெபனான் பெய்ரூட்டில் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் கிட்டத்தட்ட எண்பதுக்கும் மேலானோர் இறப்பு மற்றும் 4000 பேர் காயம். 2,750 கிலோ நைட்ரேட், கிட்டத்தட்ட நாகசாகியில் அமெரிக்கா வீசிய குண்டுக்கு நிகரான எடை. 240 கிமீ தூரம் வரை அதிர்வு இருந்ததாக சொல்லப்படுகிறது. மூன்று நாட்கள் நாடளவிலான துக்கம், பின்னர் 66 மில்லியன் டாலர் வரையிலான உதவித் தொகைகள் வழங்கப் படுமென அதிபர் மிஷெல் எய்யோன் அறிவித்திருக்கிறார்.

ஃபரா ஃபர்ஸி அந்தத் துக்கத்திலாழ்ந்து தமது கனூன் இசைக்கருவி மூலம் இசைக்கிறார். ஒரே ஒரு இசைக் கருவி கொண்டு அத்தனை சோகத்தையும், உணர்ச்சி களையும் கொண்டுவர முடிகிறது இவரால்.#பெய்ரூட்