Friday, November 29, 2019

#விலங்குகள்

வீட்டிற்குள் பாம்பு நுழைந்தபோது எதுவும் செய்யத் தோணவில்லை. எங்கே நம்மைக் கொத்தி விடுமோ இல்லை தீண்டி செயலிழக்கச் செய்து விடுமோ என்ற அச்சம் தான் பரவிக் கிடந்ததே தவிர அந்தச் சூழலை எங்கனம் கையாள்வது என்ற ஒரு உத்தி போலும் தோணவில்லை. எப்போதாவது இயக்கும் புகைபோக்கி விசிறியில் குட்டி போட்டு வைத்திருக்கும் எலிகளைப் பிடித்து தின்ன வந்து, தவறுதலாக வீட்டின் பரணில் அமர்ந்து கொண்டது. கீழிருந்த ஒரு பங்காலி கிராமத்து காவலாளி சொன்னது இன்னமும் என் நினைவில் நிற்கிறது. நீங்க அந்த பாம்புக்கு தீங்கு நினைக்காத வரை, அது மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடாத வரை அது உம்மை ஒன்றும் செய்யாது. அதன் நோக்கம் வேறு என்று. பிறகு அவரின் துணையுடனேயே யாருக்கும் எந்த கெடுதலுமின்றி வெளியே அனுப்பி வைக்கப் பட்டது. எலி வராமப் பாத்துக்குங்க , பாம்பு விரட்டுவதற்கு வேலையே இருக்காது என்றார்.

அதே போல மழைக்காலப் பூனை ஒன்று ஏகப்பட்ட குட்டிகளை வீட்டின் உள்ளடங்கிய உப்பரிகையில் ஈன்று வைத்து விட்டு ஒவ்வொரு முறை கதவைத் திறக்கும் போதும், எங்கே இவன் தமது குட்டிகளுக்கு எந்த ஆபத்தையும் செய்து விடுவானோ என்ற பயம் அதன் கண்ணில் தெரிவதை பல முறை பார்த்திருக்கிறேன். கொஞ்சம் நாட்கள் இங்கனம் பழகிப் போனதும் தம் நான்கு கால்களில் வலது முன்னங்காலை மட்டும் திருப்பிப் போட்ட ’ட’ போல மடித்து வைத்துக் கொண்டு உள்ளடங்கிய கண்களோடு என்னிடம் இறைஞ்சி நிற்கும். பிறகு தான் புரிந்தது ‘ நான் உன்னை என் நண்பனாக கருதுகிறேன், தாக்காதே’ என்று கூறுவதாக. அதன் பிறகு குட்டிகளை நான் கை கொண்டு தூக்குவதை ஒரு போதும் தடுத்ததில்லை.

இதெல்லாம் வீட்டுக்குள்ள வர்றது அபசகுனம் தம்பி. அதுக்கு ஒரு எலெக்ட்ரானிக் ரெப்பெல்லண்ட் ஒன்று இருக்கிறது அதை வாங்கி பிளக்கில் செருகி வைங்க, அதிலருந்து வர்ற அல்ட்ராஸொனிக் வேவ்ஸ்’னால ஒரு பொட்டு பூச்சி வராது என்றார் மேல்வீட்டு அங்கிள். அதிலிருந்து அவரிடம் பேசுவதையே விட்டு விட்டேன். 

விலங்குகள் நம்மிடம் அவர்களின் மொழியில் தொடர்பு கொள்ளத்தான் செய்கின்றன. நமக்குத் தான் புரிவதில்லை. இயற்கையை விட்டு வெகு தூரம் சென்று விட்டதைப்போல உணர்கிறேன். #விலங்குகள்

Thursday, November 14, 2019

கேட்பிதழ்

புது எழுத்து அக்டோ’2019 கேட்பிதழ் (இந்தப்பதமே அழகா இருக்கே ) வாசித்துக்கொண்டிருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஐராதம் மாகாதேவனின் ’வின் பேட்டி அத்தனையும் நன்றாக இருந்தது.
சிறுகதைகளில் சட்டென மனதில் ஒட்டிக்கொண்ட புலிக்கதை ‘குமாரநந்தனின்’. இதழுக்கு உகந்த நடை. கணபதியின் இதயத்தை உருவிச்சென்ற புலி விடாது எனது இதயத்தையும் கவர்ந்து சென்றது.
பணயம் சிறுகதை சட்டெனெ முடிந்து விட்டதைப் போன்றிருந்தது. இந்த இதழுக்கு இந்த இதழ் பேசும் கருத்துச்செறிவுக்கு ஒப்பாது பாமரப்பாணியில் அமைந்த சிறுகதை அது.

சந்தனி ப்ரார்த்தனாவின் சிங்களச்சிறுகதையின் வடிவம் ஏனோ பட்டும் படாது சிறக்கவில்லை. சொல்ல வந்த முறையில் தவறா இல்லை மொழிபெயர்ப்பில் ஏதேனும் விடுபட்டதா என்ற குழப்பம்.பாலா’வின் சிறுகதை மாய யதார்த்தத்தை சொல்ல முயன்று விலகிச் சென்று வடிவச்சிக்கலில் சிக்கி மனதைக்கவர மறுக்கிறது.
விர்ஜீனியாஉல்ஃபின் சிறுகதை மொழி பெயர்ப்பிலும் சிலிர்ப்பை ஏற்படுத்த தவறவில்லை. 


பா’ராஜாவின் கவிதையில் கோமாளி // இரவெல்லாம் அழுத கண்ணீரில் உறையாதிருந்த ஒரு துளியை விரலாற்தொட்டான்// சிறப்பு.
சுதேசமித்திரனின் ‘ஆரண்யம்’ சிறுபத்திரிகை பற்றிய குறிப்பு மிக அருமை. எனைக் கவர்ந்த நடை. அதிலும் ஜெமோ’ச்சீண்டியிருந்த வரிகள் அற்புதம் .

மொத்தத்தில் தாமதமாக வந்திருப்பினும் தற்காலத்திற்கென வந்திருக்கும் புது எழுத்து கேட்பிதழ்2019 #புதுஎழுத்து

Wednesday, November 13, 2019

#அயோத்தி.

பெரிய பெரிய ரைட்டப்லாம் எழுதுகிறார்கள் , அயோத்தி தீர்ப்புக்காக. இதைப்பற்றி பேசவேண்டாம் என்றிருந்தேன். இருப்பினும் சொல்லிவிட நினைக்கும் ஒன்றே ஒன்று. இங்க பெங்களூரில் அகரா’ன்னு ஒரு இடம் இருக்கிறது. மிகப்பிரபலமான பகுதி. அதில் ஒரு ஆஞ்சநேயர் சிலை கிட்டத்தட்ட 200அடிகள் இருக்கலாம், ஓங்கி உயர்ந்து நிற்கும். கற்சிலைதான் அத்தனை அழகிய வண்ணங்கள் பூசப்பட்டு ஜொலிக்கும். அதன் தொட்டடுத்து ஓரடிபோலும் இடைவெளி இல்லாது ஒரு பள்ளி வாசலின் மினரட் (கோபுரம்) அதோடு கூடிய பள்ளிவாசல் கட்டப் பட்டிருக்கும். பாங்கு ஒலியும் எழும் நேரத்துக்கு. 

இன்னும் முடியவில்லை. அதனையும் தொட்டடுத்து ஒரு ஒரிஸ்ஸா பாணியில் அமைந்த ஜெகந்நாதர் ஆலயமும் இருக்கிறது. வடநாட்டு பாணியில் ஒவ்வொரு கோபுரத்திலும் காவிக்கொடி பறந்து கொண்டிருக்கும். பஜனைகள் காதைத்துளைக்கும் , அந்த மேம்பாலத்தை கடந்து செல்லும்போது. மூன்று வழிப்பாட்டுத் தலங்களும் நூறடிக்கு உள்ளேயே அமைந்திருக்கும்.அது தான் சிறப்பு,

நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிப்பது தவறுதான். இருப்பினும் இதைப்போல மஸ்ஜிதும், கூடவே ராமனும் அருகருகே இருந்து அயோத்தியில் அருள் பாலித்திருக்க நீதி வழிவகை செய்திருந்தால் இன்னமும் மகிழ்ந்திருப்பேன், #அயோத்தி.

Sunday, November 10, 2019

டெர்மினேட்டர் டார்க் ஃபேட்


இப்ப வர்ற ஆங்கிலப்படங்கள்லல்லாம் ஏன் அளவுக்கு அதிகமா ஸ்பானிஷ் பேசற கேரக்டர்களை வெச்சே எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்ப வந்த லாஸ்ட் ப்ளட் படத்துலயும் அதே, இந்த ’டெர்மினேட்டர் டார்க் ஃபேட்’லயும் அதே. தமிழ்ப்படங்கள்ல தான் ஒண்ணு ரெண்டு மலயாள வசனத்தை வெச்சு இல்லைன்னா தெலுகு வசனத்தை வெச்சி அங்கயும் ஓட்டலாம்னு பார்ப்பது வழக்கம். அதே பாணி ஹாலிவுட்லயுமா ?! ஸ்பானிஷ் பேசற மக்கள் அதிகம் வசிக்கிறார்களா? அமெரிக்காவில். ட்ரம்ப் பெரிய மெக்ஸிகோலருந்து சட்ட விரோதமா குடியேறத்துடிக்கும் ஸ்பானியர்களைத் தடுக்க சுவரே கட்டி விடப்போறதா உதார் காட்டிக்கிட்டு இருந்தார். இங்கிலீஷ் படம் பெரும்பாலும் ஸ்பானிஷ் கூடவே பேசிக்கிட்டு தான் வருது.


கதை அதே கதைதான். தொண்ணூறுகள்ல வந்த டெர்மினேட்டர். எதிர்காலத்துல இருந்து வில்லன் வருவார், இப்ப நடக்கிற ஆய்வுகளை முறியடிக்க இல்லைன்னா வலுவாக்க. அதே தான் இங்கயும். 2042ல தன்னைக் காப்பாற்றின டானி என்ற பெண்ணை , இப்ப 2019ல காப்பாற்ற வரும் ஒரு க்ரிஸ் எனும் இளமங்கை. சின்ன வயசில பிள்ளைகளை காப்பாற்றி பெரியவனாக்கினா வயசான காலத்துல அவங்க நம்மைக் காப்பாற்றுவார்கள் அல்லவா அதையே இங்க கொஞ்சம் உல்ட்டாவாக்கி.ஹிஹி.. ஆனா அந்த இளமங்கை இங்கு இப்போது நிகழ்காலத்தில் டானி என்ற பெண்ணைக் காப்பாற்றி விட்டு இறந்தும் போகிறார். அங்க தான் குஸப்பம். பின்னர் எங்கனம் அவர் சிறு குழந்தையாக டானியாலேயே 2042ல் காப்பாற்றப்படுவார். ஆஹா...ஏகத்துக்கு சுத்துல விட்றாங்யளே..! இந்த டானியின் வயிற்றில் வளரும் சிசு பிற்காலத்தில் உலக சந்ததியினரைக் காப்பாற்றப் போகிறதாம். ஹ்ம். ..அதனால அவர் ஒரு ‘மேரி’யாக அறியப்படுகிறார். ஒருமேரின்னா ”அந்தமேரி” இல்லை. அன்னை மேரி..ஹிஹி. ஆரு ஆரைக்காப்பாத்துறது ? ஏம்ப்பா...ஹ்ம்.


அதே சாரா கார்னர், அப்புறம் சாரா கார்னரை போட்டுத்தள்ள வந்த அதே அர்னால்ட் டி2 மெஷின் டெர்மினேட்டர். இப்ப வில்லனை அடிக்க மனிதனாக மாறிக்கொண்டு இருக்கும் அர்னால்ட் டி2 மெஷின். நம்பணும். வில்லன் சொல்றான் , நாம ரெண்டு பேரும் உருவாக்கப்பட்டது இவர்களை போட்டுத்தள்ளத்தான் என்று. என்னோட வா செஞ்சிருவோம் என்று கூப்பிடுகிறான். மசியவில்லை டி2. அப்புறம் ஏகப்பட்ட ஃபர்னிச்சர்களை உடைச்சு , ஹெலிகாப்டர், கார் போன்றவற்றையும் உடைத்து தூள் தூளாக்கி நம்மையும் கூடவே .ஹிஹி..  சாரா கார்னர் (லிண்டா ஹேமில்டன்) தன் மகனைக்கொன்ற டெர்மினேட்டரை போட்டுத்தள்ள சுற்றிக்கொண்டு இருக்கும் ஆண்ட்டி,,ஹிஹி கிழவின்னு தான் சொல்லணும். இளமங்கை க்ரிஸை தம் மகனாக அறிந்துகொண்டு வியப்படைகிறார். இப்பிறவியில் தம்மகன் ஜான் இளநங்கை க்றிஸாக உருவெடுத்திருப்பதாக எண்ணி உவகை கொள்கிறார். அப்ப அவாளும் மீள் பிறப்பு உண்டூன்னு நம்பறா..ஹிஹி.

சண்டைக்காட்சிகளிலும் புதுமை இல்லை. அதே போன்றே தூள் தூளானாலும், இரண்டாக மண்டையை , உடலைப்பிளந்தாலும் , சொட்டுத் திரவமாக உருக்கி விட்டாலும் மீண்டும் அத்தனை மூலக்கூறுகளும் ஒன்றிணைந்து புதிய இயந்திரனாக கட்டமைத்துக் கொள்ளும் நைண்ட்டீஸ் டெக்னாலஜி. (அத்தனை அரசாங்கங்களும் அழித்து விட்ட டெர்ரரிஸ்ட் கேங்களை மீண்டும் ரீக்ரூப்பிங் பண்ணவிடாது உருக்குலைக்க எண்ணும் அதே டிஸைன்.) வில்லன் மீண்டும் உருக்கொண்டு வராத அளவுக்கு பத்தாயிரம் டிகிரி ஃபாரன்ஹீட்டில் வைத்து உருக வைக்கும் முடிவு. புதுசா எதுனா யோசிங்கடெ. வில்லனுடன் டி2 அர்னால்டும் வழக்கம் போல மரிக்கிறார். டானி தம் குழந்தை வளர்வதை கண்ணுற்று உவகை கொள்கிறார். சுப ப்ராப்தி மஸ்த்து..மஸ்த்து!