Tuesday, November 2, 2021

பாலைவனப்பெரும் புழு #Dune

 

Dune: Release Date, Trailer, Cast, Sequel, and Everything We Know So Far 

தந்தையைப்போலவே இவன் கண்களிலும் தெளிவான தடுத்தாற்றலும் தைரியமான கீழ்ப்படிதலின்மையும் தெரிகிறது. எங்களைத்தனியே விட்டுவிட்டு வெளியே நில் என்கிறாள் ஆரக்கிள். அவள் என்ன சொல்கிறாளோ அதை அப்படியே செய் எனக்கூறிவிட்டு வெளிச்சென்று நிற்கிறாள் அன்னை. என் அன்னையின் இல்லத்திலேயே அவளை வெளியே அனுப்புகிறாய் என வினவுகிறான் தனயன்.  அருகில் வந்து மண்டியிட்டு நில் என ஆணை பிறப்பிக்கிறாள் அந்த ஆரக்கிள். ‘என்ன தைரியமிருப்பின் எனக்கே ஆணையிடுவாய்?’  ‘இந்தப்பெட்டிக்குள் உன் வலது கையை விடு’  ஹ்ம்... உனதன்னை நான் சொன்னதைச் செய்யச்சொல்லி விட்டுச் சென்றிருக்கிறாள். ஹ்ம்.. செய் கையை பெட்டிக்குள் வை’ எனக்கூறிக்கொண்டே சரேலென ஒரு ஊசியை எடுத்து அவன் கழுத்தின் மிக அருகில் வைத்துவிட்டு ‘கையை வெளியே அடுத்தால் அடுத்த நொடி இந்த ஊசி உன் கழுத்தில் பாயும்... அத்தனையும் விஷம் , நொடியில் மரணம்’ என்பவள்  ‘இந்தப்பரீட்சை மிகச்சுலபம் , கையை வெளியே எடுத்தால் உடனடியா நீ இறப்பாய்’ ’இந்தப்பெட்டியில் அப்படி என்னதானிருக்கிறது?’ “வலி”, உள்ளிருப்பது வலி’ என்கிறாள் ஆரக்கிள்.

காவலாளிகளை அழைக்கவேண்டிய அவசியமில்லை.  உன்னன்னை வெளியே தான் நிற்கிறாள் கதவருகே அனைத்தையும் கேட்டுக்கொண்டு, அவளைத் தாண்டி யாராலும் வந்து விடமுடியாது !” “ ஏனிதைச்செய்கிறாய் எனக்கு?’ ‘ கூண்டிலடைப்பட்ட மிருகம் தன்கால்களை தொடர்ந்து கடித்துக்கொண்டு தப்பிக்கப்பார்க்கும்’ நீ என்ன செய்யப்போகிறாய்?” என வினவுகிறாள் தம் புருவத்தை சுழித்துக்கொண்டு. பொறுக்க முடியாத வலி, ஊழிப்பெரு வெள்ளத்தில் அடைப்பட்ட மிருகமென தவிக்கிறான்,இருப்பினும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் கிடந்து மருகுகிறான், வெளியில் அவன் அன்னை குமுறுகிறாள், செய்வதறியாது கலங்கிக்கொண்டு உதட்டைக்கடித்துக்கொண்டு வயிற்றை எக்கிப்பிடித்துக்கொண்டு சப்தமின்றி அழுகிறாள். ஹ்ம்.. இன்னொரு பிரசவம் அவளுக்கு..  பெட்டிக்குள் விட்ட கையின் வலி பொறுக்க முடியாத அளவு மிகும்போது அடக்கமுடியாது அரற்றுகிறான் தனயன்... தலையைத்திருப்பி அசைத்து வலியை எங்கனமேனும் கடத்திவிட இயலாது. விஷஊசி குத்தினால் போயேவிடும் உயிர். கழுத்தில் கத்தி, உள்ளேவிட்ட கையில் பொறுக்கமுடியாத வலி. என்ன செய்வாய்?

 ஹ்ம்.. நீ பொறுக்குமளவுக்கே உனக்கு வலிகள் தரப்படும் என்கிறது பைபிள். என்னைகேட்டால் மகிழ்வுக்கும் அதுவே பொருந்தும். மகிழ்வுகளும் வலிகளும் பொறுக்குமளவுக்குத்தான் தரப்படுகின்றன எல்லா உயிர்களுக்குமே, எனினும் பிரித்தறியாது, பொருளறியாது அரற்றுகிறோம் இல்லையேல் கொண்டாடித் தீர்க்கிறோம்.  

Dune - Dolby

 ‘அமைதி’ என்பதை அத்தனை சத்தமாக ஆணையிடும் குரலில் சொல்கிறாள் ஆரக்கிள். அமைதி என்பதையும் சப்தமிட்டுச்சொல்லும்போது மட்டுமே அதன் பொருள் புரிகிறது. அன்னைக்கும் தனயனுக்குமான போராட்டம். ஹ்ம்.. இன்னொரு பிறப்பு,  வெளியே “நான் பயப்படக்கூடாது” என வாய்விட்டுச் சொல்லிக் கொண்டு தன்னைத்தேற்றிக்கொள்கிறாள் அன்னை. கண்டிப்பாக நான் பயப்படக்கூடாது’ இதுவும் கடந்து போகும், இக்கணங்களை அனுபவித்தே தீர்க்கவேண்டிய கட்டாயம் இருவருக்கும் ”பயம் என்பது உள்ளத்தை, என் தைரியத்தைக்  கொன்றழிக்கும் கருவி” பயம் என்பது சிறு மரணம் விட்டால் உன்னை முட்ட முழுக்காக கொன்றழித்தே தீரும்.  இந்தபயம் என்னைக்கடந்து செல்லும், அதை நான் அனுமதிப்பேன் மேலும் அதை எதிர்கொள்வேன் என அரற்றுகிறாள் அன்னை.  அது என்னைக்கடந்து சென்ற பின்னர் அதன் வழித்தடத்தை நான் கண்டறிவேன் என் உளக்கண்களால் பயம் தன்னைக் கடந்து சென்றபிறகு ஒன்றுமே இருக்காது , நான் மட்டுமே நிலைத்து நிற்பேன், கடந்து சென்ற பயமோ வலியோ அல்ல,.  என அழுகையுடனூடே மகிழ்ந்து கொள்கிறாள் அன்னை.

 ”போதும்” என கூறிவிட்டு ஊசியை விலக்கிவிட்டு கையை வெளியே எடுக்கப் பணிக்கிறாள் ஆரக்கிள். எதையும் பொறுமையின்றி  உடனடியாகச்செய்து முடித்து விடவேண்டும் என்ற ஆவல் கொண்ட மிருகத்தைபோல நீ நடந்து கொண்டிருப்பாயானால்  உன்னை வாழ அனுமதிக்க இயலாது கொன்றழித்திருபேன் என்கிறாள் ஆரக்கிள். உன் பரம்பரை வழி அதிஉன்னத ஆற்றலைப்பெற்றிருக்கிறாய்  ‘ஏனெனில் நான் அரசனின் மகன் என்பதாலா?. இல்லை நீ ஜெஸ்ஸீக்காவின் மகன்( அரசி) என்று கூறிவிட்டு அன்னையை  உள்ளே அழைக்கிறாள். ”ஹ்ம்.. நீ உன் கனவுகளைப்பற்றிச்சொல்  நீ கண்ட கனவுகளைப் போலவே எல்லாம் நடப்பதாக உணர்கிறாயா ?” என வினவுகிறாள் ஆரக்கிள் தனயனை நோக்கி. ”அப்படி இல்லை ” என்பதில் அடங்கி இருக்கிறது அவனது முன்னேற்றம். 

Dune' Release Plans: Why Warner Bros. Is Keeping the Film on HBO Max -  Variety

ஹான்ஸ் ஸிம்மர், தனயனின் பொறுக்க முடியாத வலிகளை சப்தத்தில் கொண்டு வர மிகப்பிரயத்னப்பட்டிருக்கிறார். சுற்றிக்கொண்டிருக்கும் ராட்டினத்தில் எதிர்பாராத கீழிறக்கம் வரும்போது, இல்லை தரையில் ஓடிக்கொண்டிருக்கும் விமானம் சரேலேன அதே வேகத்தில் அந்தரத்தில் மேலெழும்போது நமக்கு ஏற்படும் எக்கிப்பிடிக்கும் வயிற்றின் வலி ..கணநேரமானாலும் நம்மை ஒருவழி பண்ணிவிடும்.  அந்த உணர்வை தொடர்ந்தும் தக்கவைக்கிறது ஆதங்கத்துடனும் அழுகையுடனும்..ஆஹா.. ஓலம் ஒலிக்கிறது. இதே போல ஓலம் ‘ பேண்டிட் க்வீன் பூலன் தேவி படத்தில் நுஸ்ரத் ஃபதே அலிகான் இசைத்திருப்பார். கொஞ்சம் அரேபியன் ஸ்டைலில் சூஃபி கலந்திருக்கக்கூடும் என்றே எண்ணுகிறேன்.

கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்பதிலிருந்து,  மெய்ப்படும் கனவுகள் மட்டுமே வேண்டும் என்ற நிலை நோக்கி நகரும் படம். அழுத்ததுக்கு உட்பட்ட எந்த ஆத்மாவும் புடை போட்ட தங்கம் போல ஜொலிக்கும் என்பதை தலைவனாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் தனயன் உணர்கிறான் காலம் செல்லச்செல்ல. Dreams are messages from the deep.! அதிஉன்னத மனிதன் தாம் தலைவனாவதை ஒருபோதும் விரும்புவதில்லை , அவன் அழைக்கப்படுகிறான் காலத்தால் பின்னர் அதற்கு அவன் பதிலளிக்கிறான்.

அன்னையின் இன்னொரு கருவை குறிப்பறிந்து சொல்கிறான் அவளுக்கே இன்னமும் உறுதியெனத் தெரியாத போதும். எதிர்காலத்தை குறிப்பறிந்து சொல்லும் உணர்வுகள், தம் இனத்தின் ,பிறரின் மற்றும் எதிரியின் நகர்வுகள் எல்லாவற்றையும் ஒரு Soothsayer போல குறிப்பாலுணர்த்தியும் அதற்கென தயார் நிலையில் தம்மையும் தம்மின மக்களையும் வழிநடத்திச்சென்ற நல்ல தலைவர்கள் துரோகத்தால் வீழ்த்தப்படுவது தமிழினத்துக்கு புதிதில்லை. இங்கும் அதுவே நிகழ்கிறது..

சிஜி’யின் பங்களிப்பு அபரிமிதம். அந்த ஹெலிகாப்டரை ‘ஊசித்தட்டான்’ போல வடிவமைத்து. அதன் இறக்கைகளை ஒருசேரக்குவித்து நிலத்துக்குப் பாய்வது என்பதெல்லாம் மிகப்புதிது  இருப்பினும் இன்னமும் வெள்ளைதோலனையரே எல்லாவற்றையும் எல்லோரையும் சேவியராக இருந்து காப்பர், கறுப்பின மக்கள் அவர்களுக்கு தொண்டூழியம் செய்யவே பிறந்தவர், பிற நாடுகளுக்கு வரும் இடர் அனைத்தையும் போக்க வெள்ளைத்தோலுள்ளவரையன்றி உலகில் வேறு யாரும் இல்லை என்ற தொன்மங்களைத்தவிர்த்திருக்கலாம்.

பாலை மணலில் கிடைக்கும் வேற்றுக்கிரக/ இண்டெர்ஸ்டெல்லார் பயணங்களுக்கு பயணிக்க உதவும் எரிபொருள் ஸ்பைஸஸ் பெற்றோலேயன்றி வேறொன்றுமில்லை. ஸ்பைஸை எடுத்துக்கொண்டு செல்லுங்கள், மணலை நாட்டினை எங்களிடம் விட்டுவிடுங்கள் எனக்கெஞ்சும் பாலைநில மக்கள் ஆஃபகானிஸ்தானேயன்றி வேறொன்றுமில்லை. உருமாறி வந்திருக்கும் ட்யூன் மணற்குன்று.

இந்த இயக்குநர் ’டெனிஸ் வில்லெனுவ்‘ இயக்கிய Arrival என்கிற வேற்றுக்கிரக வாசிகள் நம்முலகுடன் தொடர்பு கொள்ளுவதைப் பற்றிய படம். எல்லா அயலான் படங்களை விடவும் சற்று விலகி நின்று யோசிக்க வைத்தது. இசையும் மிகப்பிரமாதமாக அமைந்திருந்த ஒன்று. எனினும் அதில் ஸிம்மர் இல்லை.

#dune

 
 
Dune Character Posters Released - Flipboard