Tuesday, February 19, 2019

2ஜி கைப்பேசி



கவிதாவின் பொசல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். நேற்று ஒரு செமினார் அதற்காக 335ல் ஏறி ரிச்மாண்ட் ரோட் வரை சென்று கொண்டிருந்தேன் கையில்பொசலோடு’. பேருந்தின் இருக்கை அருகில் ஒரு முதியவர் ,தலையெல்லாம் தும்பைப்பூ. கையில் ஒரு பழைய பட்டன்கள் மட்டுமே கொண்டிருக்கும் 2ஜி கைப்பேசி. பச்சை பட்டன், சிவப்பு பட்டன் மட்டுமே முழுக்க அழிந்து போன ஒரு கைப்பேசி. ஆங்காங்கே சில எண்களின் ஒரங்கள் அழிந்து அழிந்து நடுமத்தி வரை வந்திருந்தன. சிறு கையேடு அதில் மளிகை சாமான் பட்டியல் மட்டுமே எழுதத்தகுந்த கையடக்கமானது. ஒரு புறம் பெயர்களும் அதையொட்டி எண்களும் எழுதி வைத்திருக்கிறார், ஒவ்வொரு பக்கம்மாக புரட்டி புரட்டி எண்களை தெரிவு செய்து அழைக்கிறார். பொத்தான்களை அழுத்தி அழுத்தி. பெரும்பாலும் பெயர்கள் கன்னடத்தில் இனிஷியல் மட்டுமே ஆங்கிலத்தில்.

கண்ணாடியை உயர்த்தி விட்டுக்கொண்டு தலை தூக்கி பார்க்கிறார் சில சமயம். பிறகும் அந்தக்கையேட்டில் உள்ள எண்களைத் தெரிந்தெடுத்து அழைத்துப் பேசுகிறார். பேச்சுக்கொடுக்க எத்தனித்தால் சட்டை செய்ய மறுத்தார். எனது உடைந்த கன்னடத்தில் பேச முயன்ற போது கையில் தமிழ்ப்புத்தகத்தை ஒரு முறை பார்வையிட்டு விட்டு தமிழில் பதில் சொன்னார். ஏன் ஒரு அண்ட்ராய்டு வாங்கிக் கொள்ளலாமே என்றேன். இல்லப்பா அதில பெயர் தேடிக்கண்டு பிடிக்க ஆகுதில்லா. அதான் இப்படி என்றார். கத்துக்கலாமே, ஹ்ம் அதுக்கெல்லாம் எங்க நேரம்?.. யாரைக்கூப்டறீங்க ? எல்லாம் என் நண்பர்களைத்தான், கார்ப்பரேஷன் வரை போய் அவங்களைப் பாக்கணும் அதான் எல்லாரும் கெளம்பிட்டாங்களா என்னான்னு ஒவ்வொருத்தரா அழைச்சிப்பாக்றேன் என்றார்.

கவிதாவின் கதைகளில் இப்படியான பல வெள்ளந்தியான, சமகால நவீனங்களை புறந்தள்ளும் கதா பாத்திரங்கள் உலவுகின்றன. சில கதைகளை அவரின் வலைப்பூவில் வாசித்த ஞாபகம். பல சிறுகதைகள் கட்டுரையாகவே எனக்கு தோன்றியது. இன்னமும் முழுதும் வாசிக்கவில்லை. வாசித்ததில் நூலின் பெயர் கொண்ட சிறுகதை அருமை. இரு காதல் சமகாலத்தில் செய்ய முற்படும் பெண்டிரின் சிறுகதை ஒரு சுஜாதாவின் சிறுகதையை ஞாபகப்படுத்தியது. விரைவில் முழு விமர்சனம் எழுதுவேன். நூல் ஆணை கொடுக்கும்போதே சொன்னேன், காசு கொடுத்து வாங்கும் நூலுக்கு விமர்சனம் எழுதியே ஆவது என்றுஹாஹா. #பொசல்

.

Friday, February 15, 2019

டிஷ் டீவீ

பெங்களூர்ல லோக்கல் கேபிள்காரனுங்க தொல்லை தாங்கமுடியலை. தமிழ் சேனல்களை எப்பவும் மொதல்ல ப்ளாக் பண்ணிருவாங்கள். இல்லைன்னா காவிரிப்பிரச்னை வந்தால் தமிழ் ஆடியோவ மட்டும் ம்யூட் பண்ணி விடுவார்கள். இந்த எழவே வேணாம்னு டிஷ்க்கு மாறலாம்னு யோசிக்குபோது ரிலையன்ஸ் பிக்டீவி விளம்பரம் வந்தது. சரி என்று ஐநூறு செலுத்தி முன்பதிவு செய்து வைத்தேன். 45 நாட்களில் இணைப்பு கொடுக்கப் படும்,டிஷ் நிறுவும் போது 1500 செலுத்தினால் போதும் என்றனர். ஓராண்டு சந்தா இலவசம்.சரி என்று கேபிள் தொல்லை இனி விட்டது என நினைத்து பொறுமையாக காத்திருந்தேன். இரண்டு மாதம் கழிந்தது. ஒரு போன் கால் போலும் இல்லை. இடையிடையில் அவர்களிடம் பேச முயற்சித்தால் எப்போதும் ஹிந்தியில் மட்டுமே பேசுவர், கால் சென்டர் பாம்பெயில் இருக்கிறது. பத்து நாட்களில் வந்து விடும் இருபது நாட்களில் இணைப்பு கொடுக்கப்படும் என்றெல்லாம் சொல்லி சால்ஜாப்பு எப்போதும்  ஓடிக்கொண்டேயிருந்தது.

ஆறு மாதங்களாகி விட்டது. இனியும் இணைப்பு கொடுக்க வில்லையே என கேட்ட போது , இப்போது பெங்களூருக்கான இணைப்பு ஆரம்பிக்கவில்லை. அதனால் இன்னமும் 45 நாட்கள் ஆகும் எனக்கூறினர். சரி பொறுத்தது பொறுத்தோம் இன்னுங்கொஞ்ச நாள் தானே என பொறுமையாக இருந்தேன். எட்டு மாதங்கள் அப்படியே கழிந்தது. பின்னர் விசாரிக்கும் போது பணம் கட்டிய அனைவரின் தகவல்களும் அழிந்து போய்விட்டன. அதை மீட்டெடுப்பதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்றனர். அப்ப என்னோட 500 ரூவாய்க்கு  சங்கு தானா ?! இடையில் பிக் டீவி என்ற பெயரை மாற்றி இன்டிபென்டன்ட் டீவி என்றாக்கி விட்டது. இனி உங்களூக்கான இணைப்பு விரைவில் கொடுக்கப்பட்டுவிடும் என்றனர். உங்களின் தகவல்கள் அனைத்தும் கிடைத்தாகி விட்டது. இனி தாமதம் ஏதும் இல்லை இணைப்பு வழங்கப்படும் என்று கூறும்போது ஏற்கனெவே 12 மாதங்கள் ஆகிவிட்டன.

இனியும் இணைப்பு வரப்போவதில்லை என்ற முடிவானபின், திடீரென பிக் டீவியிடமிருந்து அழைப்பு வந்தது.  நாளை உங்கள் வீட்டுக்கு வந்து டிஷ் நிறுவப்படும் என்று.  என்னால் நம்பவே முடியவில்லை. வந்தவன் கூரை மேலேறி டிஷ்ஷை நிறுவிவிட்டு, கீழிறங்கி வந்து சார் உங்க வீடு க்ரவுன் ஃப்ளோர்ல இருக்கு அதனால டிஷ் லிருந்து டீவி வரை கேபிள் நீளம் ஜாஸ்தி ஆகுது அதுக்கு ஒரு மீட்டருக்கு இவ்வளவு கூடுதலாகும் என்றார். சரி எப்படியோ டிஷ் வேலை செய்ய ஆரம்பித்தால் போதும் என கேட்ட பணத்தை கொடுத்தேன், 1500 கூடுதல் இந்த எக்ஸ்ட்ரா கேபிள் கட்டணம். ( மொத்தமாக மூவாயிரம் ஆகி விட்டது. அப்படிப்பாத்தாலும் மாசம் 250 ரூவா , லோக்கல் கேபிளுக்கு கொடுத்த பணம் தான் ..ஹிஹி ) ஒரு வழியா டிஷ் கேபிள் எல்லாம் நிறுவியாகிவிட்டது. டீவியை திறந்தால் சன் டீவி குழும சேனல்கள் ஏதும் வரவேயில்லை. இரண்டு நாட்கள் போனது. பிற சேனல்கள் எல்லாம் வரத்தொடங்கின. இரண்டு நாட்களுக்கு பிறகு சன் வர ஆரம்பித்தது.

நான் பார்க்கும் சேனல்கள் பெரும்பாலும் நேஷ்னல் ஜ்யாக்ரஃபி, மற்றும் டிஸ்கவரி சயின்ஸ்(இந்த சேனலில் எந்த நிகழ்ச்சி எப்போ என்பததெல்லாம் அத்துப்படி எனக்கு ), பிறகு வி ஹெச்1 (ஆங்கில் பாடல் சேனல்) ட்ரேஸ் அர்பன் (இதுவும் ஆங்கிலபாடல் சேனல், ஒரு விளம்பரம் கூட வராது இந்த சேனலில். இருபத்திநாலு மணி நேரமும் விளம்பரங்கள் கிடையாது , இடைவிடாத பாடல்கள் மட்டுமே. இந்த சேனலை மட்டும் பார்க்கலாம் என ரேட் தேடினால் மாசம் 150 ரூவாயாம்..ஹ்ம்...) இதெல்லாம் வருதாவெனப்பார்த்துக் கொண்டிருந்தேன். ஒழுங்காக வந்து கொண்டு இருந்தது, இரண்டு நாட்களாக வி ஹெச் 1 ஆஃப். க்ராமி அவார்ட்ஸ் ஃபங்ஷன் அதில் தான் லைவ். எல்லாம் போச்சு. டிஸ்கவரி சயின்ஸ் உங்க ப்ளான்ல இல்லை அதனால வரவே வராது என்றார்கள். தேவையேயில்லாத முன்னூறு இந்தி சேனல்கள் எப்போதும் நிற்காது இடையறாது பொழிகிறது. எல்லாம் ஃப்ரீ சேனல்ஸ் அதனால. இங்க்லீஷ் மூவி சேனலில் எச்பிஓ, ஸ்டார் மற்றும் டபள்யூ பி மட்டும் ஆஜர், மற்றதெல்லாம் பணால். ரொம்ப நாளைக்கு பிறகு அன்ட் ஃப்ளிக்ஸ் வருகிறது.  


யூடிவி வேல்ர்ட் மூவிஸ் என்ற சேனல் எங்கு தான் கிடைக்கிறது என்ற சேதியே இல்லை. ஆங்கிலம் தவிர்த்த பிற உலக மொழிப்படங்கள் எல்லாம் வரும்.என்டீடீவி ,சி என் என், பிபிசி எல்லாம் அவ்வப்போது முகம் காட்டும். தொடர்ச்சியாக ஒரு போதும் இல்லை. சேனல் நம்பர் ஞாபகம் வைத்து சரியாக எண்களை அழுத்தினால் வேறேதாவது சேனல் கதறும்.செயா டீவி குழும சேனல்கள் அனைத்தும் ஆஃப்.  சில்லுண்டி தமிழ் சேனல்கள் மெகா,பாலிமர் எல்லாம் ஒன்றிரண்டு நாள் மட்டும் கண்ணில் தென்படும். பின்னால் அதுவும் ப்ளூ ஸ்கீர்ன் தான் காமிக்கும். பெங்களூரில் கொஞ்சம் மழை இடின்னால் அத்தனை சேனலும் பணால்.

ட்ராய் கட்டுப்பாடுகளில் சிக்கித்தவிக்கிறது இன்டிபென்டென்ட் டீவி. ஐநூறு கட்டும்போது கூறினர், ஓராண்டு சந்தா இலவசம். அத்தனை ஹெச் டீ சேனல்கள் மற்றும் தென்னிந்திய பேக் எல்லாம் உண்டு என. நிறுவின பிறகு தான் தெரியுது என்னெல்லாம் ஃப்ரீன்னு.  இரண்டாம் ஆண்டிலிருந்து எனக்கான பேக்'குகளை நானே தெரிவு செய்ய வேணும். அப்போது லோக்கல் கேபிளுக்கு கொடுத்ததை விட கூடுதல் கொடுத்தே ஆக வேணும் போலிருக்கிறது. கோயிலுக்குப்போனா அங்க ரெண்டு பேய் சிங்சிங்குன்னு ஆடின கதையா இருக்கு. 


இப்ப இந்த டிஷ்ஷைக்கழற்றி விட்டு டாட்டா ஸ்கை, இல்லைன்னா வீடியொகான் இல்லை வேற போடலாம்னு பாத்தா, இத வாங்கி மூணூ மாசங்கூட ஆகலை. அதுக்கு மறுபடியும் அஞ்சாயிரம் செலவழிக்கணும். வெறுமனே பொதிகை டிடியில் ஒலியும் ஒளியும்  பாத்துக்கிட்டு கெடந்திருக்கலாம்னு இப்பத்தான் தோணுது.

Saturday, February 2, 2019

’அந்தாதுன்’ - காணவியலாஒலி



நேற்று அந்தாதுன்பார்த்துக்கொண்டிருந்தேன். என்னா இசையடா பாவி. அமித் த்ரிவேதி ரஹ்மானுக்கு செம டஃப் குடுக்குறதுக்குன்னே பிறந்தவன் போலருக்கு. கண் தெரியாத பியானோ கலைஞன். பியானோ கலைஞன்னவுடனே எனக்கு அந்த ரோமன் போலன்ஸ்க்கியின் பியானிஸ்ட் படம்தான் ஞாபகம் வந்தது. ஹ்ம், அவ்வள வெல்லாம் எதிர்பார்க்காம தொடர்ந்து பார்க்க வேண்டிய கட்டாயம். தமக்கு கண் தெரியாதுன்னு அடுத்தவரிடம் சொல்லிக்கொள்வதால் தம்மால் கலையுடன் ஒன்றிப்போக முடியுமாம். காணவியலாஒலி. இந்த சமூகம் எக்கேடும் கெட்டுப் போகட்டும்,எனக்கு எந்தன் தேநீர் அருந்தினால் போதும் என்று புக்கோஸ்வ்க்கி போல வாழும் பியானிஸ்ட்.

நம்ம பாலமுரளி கிருஷ்ணா பாகவதர் கூட பிறர் பாடும் பாடல்களை காது கொடுத்தும் கேட்பதில்லை. அப்படிக்கேட்டால் அவர்களின் பாணி/ஸ்டைல் எனக்குள் ஒட்டிவிடும் என்று கூறுவார். ஒலியை எங்கனம் பார்ப்பது, கேட்கத்தானே முடியும்? அதான் நம்ம தலைவர் இங்க கண் தெரியாதவர் போல அபிநயிக்கிறார். இசை அபாரம் படம் முழுக்க. 80-களின் பின்னணியில் ஒலிக்கும் அத்தனை இசையும் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். ஆர் டி பர்மனின் யே ஷாம் மஸ்தானி மத்ஹோஷ் கியே ஜாஅற்புதமாக வாசிக்கிறான் கலைஞன். அது அந்தக்கால பிரமோத் சின்ஹா கலைஞருக்கு மிகவும் பிடித்த பாடலாம்.



அவ்வப்போது க்ளப்களில் வாசிக்கிறார். லண்டன் போகணும் காம்பெடிஷனுக்கு என்று எல்லோரிடமும் உதார் காட்டுகிறார் கலைஞர். ஒவ்வொரு பீஸும் பியானோவில் அற்புதமாக இசைத்திருக்கிறார் அமித்.  இவரின்உட்தா பஞ்சாப்பாடல்களில் ஒரு புது ஃப்ரெஷ்னெஸ் தெரிந்தது. அது அப்படியே மங்காமல் தக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்.

கொலை நடக்கும் இடங்களுக்கு யோஹான் செபஸ்ட்டியன் பாக்கின் இசை எடுத்துக் கையாண்டிருக்கிறார் அமித். அதைக்கேட்டால் கடவுளும் சாத்தானாகிவிடுவான்.  அப்படி ஒரு பிரளயத்தை உருவாக்கும் ஒலி. பரோக் இசை. கிட்டத்தட்ட பத்து நிமிடம் ஓடும் இசை அது. முதலில் சர்ச் ஆர்கனுக்கென எழுதப்பட்டு பின்னர் எல்லா வாத்தியங்களும் கொண்டு வாசிக்கப்படுகிறது. இங்கு ட்ரம்ஸ், பியானோ மற்றும் செல்லோ, அழுத்தமான வயலின் கொண்டு நெஞ்சைக்கீறி எடுக்கிறது. அதான் கொலை. ஹ்ம்.. தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக் கொண்
டார் அமித். இதுதான் அது J.S.Bach – Toccata and Fugue in D minor, BWV 565  https://youtu.be/ho9rZjlsyYY , மிக அற்புதமாக வாசிக்கப்பட்ட இசைத்துணுக்கு. கொஞ்சம் தேடியெடுத்து சுட்டி கொடுத்திருக்கிறேன். கேளுங்க. என்கிட்ட ‘டெக்கா’ என்ற நிறுவனம் வெளியிட்ட பாஃக்கின் ’Essential Bach’ இசைப்பேழை இருக்கிறது. அதில் முதலில் ஒலிக்கும் இந்த சாத்தானின் இசை.! அதன் ஒலி இந்த யூட்யூப் வகைறாக்களில் கிடைக்காது.








நம்ம ஜிப்ரான், நேர ஹான்ஸ் ஸிம்மரின்கடிகார ஒலிஇசையை அப்படியே உருவி ராட்சசனுக்கு போட்டிருந்தார். அமித் த்ரிவேதி பாக்கின் இசையை எடுத்துக் கொண்டிருக்கிறார். எத்தனை ஆண்டுகள் ஆயினும் அது இன்னமும் உயிர்ப்புடன் இருப்பது தான் ஆச்சரியம்.

.