Monday, October 17, 2022

நான் தான் ஒளரங்கசேஃப்

                           9 பேர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம் இன் படமாக இருக்கக்கூடும்

நேற்றைய புரவி கூடுகையில் முகிலன்,பத்மபாரதி, ரமேஷ் கல்யாண் பாவெங்கடேசன் மற்றும் முத்தாய்ப்பாக பாலசுப்ரமணியன் பொன்ராஜும் ‘நான் தான் ஒளரங்கசேப்’ பற்றி பேசினர். நல்ல கூட்டம். ஓசுரில் முப்பதுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். (ஒரு இலக்கிய விமர்சனக் கூட்டத்துக்கு இவ்வளவு கூட்டம் நம்ப இயலவில்லை)
 
முதலில் பேசிய பாவெ’க்கு கொஞ்சம் தயக்கமும், பேச்சில் தடுமாற்றமும் இருந்ததைப்பார்க்க முடிந்தது. எழுதுவோர் எல்லாம் நல்ல பேச்சாளர்கள் இல்லை தான்.ஒத்துக்கொள்ளலாம். முகிலன் கேமரா இருப்பதைப்பற்றி ஸ்டேஜ் ஃப்ரைட் இல்லாது   அமையாக பேசினார். போரைப்பற்றிய அசூயை ஒரு பெருந்துயரம் பற்றிய அவரின் பேச்சு சிறப்பு. பின்னர் பத்மபாரதி பேசினார். இடையிடையே கதை வேறுபக்கம் திரும்பி ‘சீலே’ பயணத்தைப்பற்றி 100 பக்கங்கள் இருப்பதைக்கண்டு அதை அப்படியே கடந்து விட்டதாகவும்,கதையின் ஓட்டத்துக்கு தடைக்கல்லாக இருந்ததைக் கூறினார்.
 
ரமேஷ் கல்யாண், தமது டேப்லட்டில் குறித்து வைத்திருந்தவற்றை அவ்வப்போது பார்த்துவிட்டு எந்தத்தயக்கமுமின்றி பேசினார். சாரு நம்மிடம் எல்லாத்தகவல்களையும் கொடுத்துவிட்டு முடிவு வாசகனின் கையில் தான் இருக்கிறது என்ற ஒரு பொறுப்புத்துறப்பு புதினம் இது.
 
(ஒளரங்கசெஃப் , சாரு வெரி சேஃப்) ’எல்லாரும் செய்றான் நானும் செய்றேன்’ என்பது ஒளரங்கசேப்பின் நிலை. அவன நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன்’ என்று சொன்னானா என்பதை குறிப்பிடவில்லை. (நூலை நான் இன்னமும் வாசிக்கவில்லை. )
 
 
                                               1 நபர் மற்றும் உட்புறம் இன் படமாக இருக்கக்கூடும்
 
கதையை தானே சொல்லிச்செல்வது ஒரு வகை. ஆசிரியராக இருந்து கொண்டு கதை சொல்லியை வைத்து அவர் மூலமாக கதையை சொல்லிக் கொண்டு போவது இன்னொரு வகை. இந்தப்புனைவு இரண்டாம் வகை. பிக்ஸல்களும் முழுப்படமுமாக இருப்பதை உவமையாகக்காட்டி பேசியது எனக்கு மிகவும் ரசிக்கக்கூடியதாக இருந்தது. ஆவி ஒரு அகோரி என்ற மீடியம் மூலம் கதை சொல்வது என்பது, மீடியம் ஆவியின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதால் சொல்லும் யாவையும் ஆவியின் கூற்று.மீடியம் அதற்கு ஒருபோதும் பொறுப்பேற்காது. அதுதான் இக்காலத்தில் அத்தனை மீடியாக்களும் செய்து கொண்டிருக்கின்றன, மேலும் சீலே பயணம் மற்றும் கொக்கரக்கோவின் மடைமாற்றும் கேள்விகள் போன்றவை இக்காலத்திய பேஸ்புக்,ட்விட்டர் மற்றும் வாட்ஸப்பைக்குறிக்கும் என்ற விளக்கம் மிக அருமை. இவ்வாறான கருத்துகளை சொல்லும்போது அவர் குரல் தளர்வின்றி முந்தைய தடுமாற்றங்கள் இன்றி ஒரு நிலையில் நின்று சொல்லியது நன்று. கொஞ்சம் நேரம் எடுக்கிறது செட்டில் ஆவதற்கு, 
 
முந்தைய பாரா முழுக்க பாவே கூறியது/பேசியது. கடைசியாக பாலா பேசினார். கடைசிக்கவி’யின் ஆதங்கங்கள் பேச்சில் தெரிந்தது. ஏனெனில் குறித்து வைத்திருந்த பல குறிப்புகளை முன்னர் பேசிய நால்வரும் சொல்லி முடித்துவிட்டதால் ஏற்பட்டது. இருப்பினும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒன்று எனக்கு இதுவரை கிட்டாத ஒன்றை பாலா கூறினார். புத்தரை காந்தியின் இடத்தில் வைத்துப்பார்க்கலாம், அது போல ஜவஹர்லால் நேருவை அசோகரின் இடத்தில் பார்க்கவேணும். ஏனெனில் அசோக முத்திரைகள் தான் இந்தியாவில் இன்றளவும் பயன்படுத்துப் படுகிறது.
 
பேசிய அனைவரின் கூற்றுகளும் சாரு’வின் புத்தகம் ஒரு ஆவி,தாம் ஒரு மீடியம் மட்டுமே என்ற வாக்கில் அமைந்திராமல் தாம் முன்னரே வாசித்த நூல்களின் தரவுகளையும் குறிப்பிட்டு பேசியது சிறப்பு. (ஒரு வேளை பல ஆவிகள் கூடி வந்து இறங்கியிருக்கலாம் இந்த ஊடகங்கள் மீது 🙂 )
 
அடிப்படையாக இப்படியான கதை சொல்லல், ஒரு வித தப்பித்தலுக்கு வழி வகுப்பதாக அமையும் என்பது என் முடிவு ( இன்னமும் நூலை வாசிக்க வில்லை நான்) அரேபிய இரவுகளில் இப்பாங்கை காணலாம். திரைச்சீலை சொன்ன கதை, மேஜிக் கம்பளம் கூறிய கதை என ஏகக்கதைகள் காணப்படும். பிள்ளையாரும் வியாசருமாக ஒருவர் சொல்ல இன்னொருவர் எழுதினது.
 
மேலும் பாவெ ‘அடுத்த மாத கூட்டத்துக்கென ‘நொய்யல்’ புதினம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி பேசவிழைவோர் முன்கூட்டி பதிவு செய்து கொண்டால் நூலை 20-30 விழுக்காடு கழிவில் வாங்க ஏற்பாடு செய்யப்படும். நூல் விற்பதற்கு விமர்சகர்கள் நம்மாலான உதவி’ என்று வேண்டிக்கொண்டார்.
 
                                               3 பேர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம் இன் படமாக இருக்கக்கூடும்
 

Thursday, October 6, 2022

The Klaus Graf Quartet. - ஜாஸ் ம்யூஸிக்

 

 


நேற்று இரவு ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். ஜெர்மன் ஜாஸ் ம்யூஸிக் ஆர்கெஸ்ட்ரா. தசரா தானே ஆளே இருக்காதுன்னு நினைச்சு ஆறு மணிக்கு மேலே கிளம்பிப்போனேன் (ஏழரைக்கு ஷோ) சென்றடைந்ததும் வாசல் கார் பார்க்கிங் வரை குய்யூ வரிசை. அடச்ச.. தசரான்னா கோயிலுக்கு போங்கடா...இங்க ஏண்டா வர்றீங்க? ஆறரையிலிருந்து நின்று கொண்டிருக்கிறேன். வாயில் திறப்பதாக இல்லை. ஒருங்கிணைப்பாளர் வந்து லைன் முச்சூடும் ஆட்களை எண்ணிக்கொண்டிருந்தார். இல்ல உள்ள எல்லாருக்கும் சீட் இருக்குமான்னு பாக்கத்தான் என.கெதக் என்றிருந்தது.

ஒரு வழியாக ஏழு இருபதுக்கு வாயில் திறந்தது. எனக்கு முன்னால் குழுமியிருந்த பக்த கோடிகள் எல்லாம் அவா அவா சீட்ல போய் உக்காந்துட்டா :) முன்பதிவெல்லாம் கிடையாது. முதலில் வருவோர்க்கு இடம் கிடைக்கும். அதுல தமக்கு பக்கத்துல ரெண்டு கர்ச்சீஃப் எல்லாம் போட்டு வெச்சு இந்தியாவின் மானத்தைக் காப்பாதுதுஹ சில பிரகஸ்பதிகள். ஜெர்மென் கச்சேரியானாலும் நாமெல்லாம் இண்டியா பிரஜையான்னோ. அடக்கெரஹமே. எல்லா இருக்கையும் ஃபுல். வாசப்படீல ஒக்கார வேண்டீது தான். அதுல ரெண்டு வரிசை போட்டாங்ய. ஒருங்கிணைப்பாளர் வந்து பாருங்க க்ரைஸிஸ் வந்தா போவதற்கு வழி வேணும். ஒரு வரிசை மட்டும் போடுங்க என்றார். இந்தக்கண்றாவில்லாம் பாக்க ஜெர்மன் டீம் இன்னும் மேடைக்கு வர்ல.

கொஞ்சம் லேட்டா வந்த ஜெர்மன் கன்ஸுலேட் அதிகாரிகளுக்கே இடம் இல்லைன்னா பாத்துக்குங்க...ஹிஹி.. அப்பறம் இவங்க தான் ஸ்பான்ஸர்ஸ் ன்னு சொல்லி முன்னாலா சீட்ல பகுமானமா ஒக்காந்திருந்த சிலரை கெளப்பி விட்டது நிர்வாகம். ஹ்ம்..எழுந்தவர் எல்லாரும் சலித்துக் கொண்டே படிகளில் அமர்ந்தனர்.

ஜாஸ் இசை நமக்கு பரிச்சயமானது தான். என்ன ஒண்ணு இதுதான் ஜாஸ்னு தெரியாம கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஒரு சாக்ஸஃபோன், ஒரு ட்ரம்ஸ்,ஒரு செல்லோ மற்றும் ஒரு பியானோ ..அவ்ளவ்தான் டீம். ஜெர்மென் காரா பேரெல்லாம் வாயில நுழையாது, இருந்தாலும் சுருக்கமாக அறிமுகப்படுத்தினார். சாக்ஸஃபோன் கலைஞர். இவர் இதுவரை நான்கு முறை க்ராமி அவார்டுக்கென பரிந்துரைக்கப்பட்டவர் என்பது கூடுதல் செய்தி. ஏழரை மணிமுதல் ஒன்பதரை வரை இசை மழை பொழிந்தது.

The Klaus Graf Quartet.

Klaus Graf - சாக்ஸஃபோன் கலைஞர், Thilo Wagner – பியானிஸ்ட் ,Veit Hubner – செல்லோ பாஸ்ஸிகல், மற்றும் Obi Jenne – ட்ரம்ஸ் இசைக்கலைஞர்கள். எல்லாருக்கும் தலை வெள்ளை தான். வெள்ளைக்காரா எல்லாம் வெள்ளையாத்தான் இருக்கும் :) வயசு அதிகம் போலருக்கு. ஜாஸ் இசை மென்மையானது என்றெல்லாம் இல்லை. ட்ரம்ஸ் அடித்துப்பிளந்து விட்டார். அந்த பியானோ கலைஞரைப் பார்த்தால் ‘ஹான்ஸ் ஸிம்மர்’ (ட்யூன் புகழ்) போலவே இருந்தார். ஆஹா.

ஒவ்வொரு இசைத்துணுக்கும் பத்து-பதினைந்து நிமிடங்களுக்கு என வாசித்தனர். இன்னிக்கு ஜாஸ் என்று சொன்னால் தம்பி அநிருத்தின் ‘மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே’ தான். அதையே ‘கண்ணால பேசிப்பேசிக்கொல்லாதே வை காப்பி அடிச்சுட்டார்னு சில ஞான சூனியங்கள் புலம்பித்தள்ள்ளிவிட்டன. அந்த ட்ரம்ஸ் பீட் அதன் இசைக்குறிப்பு எல்லாம் ஒரிஜினல் ஜாஸ்ஸிலிருந்து எடுக்கப்பட்டது. ’வானமின்று மண்ணில் வந்து ஆடுதே’ ராசைய்யாவின் பெஸ்ட் ஜாஸ். ஜாஸில் பிரதானமாக இருப்பது சாக்ஸஃபோன், பல நாட்களாக நாம கென்னி ஜி’யின் சாக்ஸை கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். ராசைய்யாவின் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ மைல்ட் ஜாஸ் வித் சாக்ஸஃபோன்,பின்னர் ‘கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்’ . ’அடியே என்ன எங்கடீ கூட்டிட்டுப்போறே’ ரஹ்மான், ’தேன்மொழி’ தம்பி அநிருத், ’அக்கம்பக்கம் பார்’ சந்தோஷ் நாராயண் இவையேல்லாம் கொஞ்சம் பிரபலமான ஜாஸ் இசைப்பாடல்கள்.

இப்டி பல பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இங்கு அவர்கள் வாசித்தவை கொஞ்சம் சொந்த காம்போஸிஷன்ஸ், மற்றும் இன்னபிற பெரும் இசைக்கலைஞர்கள் இசைத்தவை. பீட்டில்ஸின் ஒரு பாடலை பாடினார். எனக்கு அடையாளம் கண்டுபிடிக்க இயலவில்லை. கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர் சட்டென கூறிவிட்டார். கட்டற்ற இசை, தளைகள் இல்லாதவை, அடித்துப்பொழிந்தது. கீழே உட்கார்ந்திருக்கிறேனே என்ற நினைப்பே வரவில்லை.

குன்னூர்(ஊட்டி), பெங்களூர், மைசூர் அப்புறம் மும்பை (இந்த லிஸ்ட்ல சென்னையே காணம் .. :) ) இந்த டீமின் டூர். மாக்ஸ்முல்லர் பவனின் ஏற்பாடு இந்த இசைநிகழ்ச்சி. அரங்கத்திலிருந்து நேயர் விருப்பம் எல்லாம் கேட்கப்பட்டது. அதைச்சட்டை செய்யவேயில்லை. கரோனாவில் அடிபட்டு பெரும் வறுமைக்குள்ளானது இந்த இசைக்குழு. வருத்தப்பட்டுக்கொண்டே சொன்னார்.2020-ல் ஃபெப்ரவரியில் இங்கு பெங்களூரில் இசைத்ததாக (கரோனாவுக்கு கொஞ்சம் முன்பு) அதுவே கடைசிக்கச்சேரி என்றார். பின்னர் இப்போது தான் தொடங்கியிருக்கிறது என மகிழ்வுடன் கூறினார்.

எத்தனைதான் எம்ப்பி3-யிலும், சர்ரவுண்டு சவுண்டு ஆடியோவிலும்,  5.1 ஹோம் தியேட்டரிலும் ஐமாக்ஸிலும் கேட்டாலும், அவையெல்லாம் முன்னக்கூட்டி பதிவு செய்து திரும்ப ஒலிப்பவை. இசை நிகழ்ச்சி எனில் நேரடியாக கேட்கவேணும். அதில் தான் மகிழ்ச்சி.

ஒரு மெண்ட்டலி சேலஞ்சுடு பெண்மணியை ஒரு வீல் சேரில் உட்கார்த்தி வைத்திருந்தனர் பார்வையாளர்களில். எனக்கு கொஞ்சம் முன்னால ஒவ்வொரு இசைத்துணுக்கு முடியும்போதும் ஆ,ஹ்ம், என்ற அரங்கத்தில் கொஞ்சம் கேட்கும்படியாகவே ஒலியெழுப்பிக்கொண்டிருந்தார். இசையே மருந்து.. #ஜாஸ்ம்யூஸிக்


 

Tuesday, October 4, 2022

நட்சத்திரம் நகர்கிறது

                                     வெளியானது பா.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' ஃபர்ஸ்ட் லுக் | pa  ranjiths Natchathiram Nagargiradhu movie first look released - hindutamil.in

நட்சத்திரம் நகர்கிறது... உரையாடுகிறது. பொதுவா ஒரு நம்பிக்கை உண்டு, ஷூட்டிங் ஸ்டார்ஸை பார்த்தால் அக்கணம் நினைத்து நடக்கும் என. அது ஒரு மூடநம்பிக்கை. இந்த மூட நம்பிக்கை கொண்ட ஒரு பெண் தான் ”தமிழ்” ரெனெ. (எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் ஒரு சில மூட நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்யும்) நான் கூட ரெனே என்றவுடன் ரெனே மெர்க்ரிட் என்ற ஒரு ஐரோப்பிய ஓவியக்கலைஞர் பெயரைத்தான் வைத்துக் கொண்டிருக்கிறாளா என, அப்படி இல்லை, மார்க்வேஸின் நாவலில் வரும் ஒரு கதா பாத்திரத்தின் பெயர் என அவளே கூறுகிறாள். ஏன் ’தமிழ்’ என்ற பெயர் பிடிக்கவில்லையா? 
 
படத்தின் துவக்கம் குஸ்ட்டாவ் க்ளிம்ட்’டின் ஓவியம் ஒரு சிற்பமாக அமைக்கப்பட்ட ஒரு படுக்கையிலிருந்து.ஹ்ம்.. வித்தியாசமாத்தான் இருக்கும்போலருக்கு என்று பார்க்க முற்பட்டேன். உடனே துவங்குது உரசல். உனக்கு ராசைய்யாவை பிடிக்காது. சாதிப்புத்தியைக் காட்டீட்டீல்ல.. என்கிறாள். வரிசை கட்டி நிற்கவைத்தார் அத்தனை பேரையும், சினி உலகமே கைக்குள் கிடந்தது என்று விதந்தோதுகிறாள். பொதுவா இன்னொரு ஆணைப் பற்றி புகழ்ந்து பேசினால் அதுவும் அத்தனை நெருங்கிய படுக்கை அறையில் எந்தப்பயலுக்குத்தான் கோவம் வராது? ஹ்ம்..? அவர் ராசைய்யாவாவே இருக்கட்டும். கோபம் வரத்தான் செய்யும்.தொடர்ந்தும் ராசைய்யாவின் பாடலையே பாடுகிறாள். அவனுக்கு இன்னமும் கோபம் பெருக்கெடுக்கிறது. உனக்கு என் மேல தான் கோபம் என்று புரிந்து கொண்டு நகர்கிறாள். என்னுடைய ரசனைகள் உனக்குப் பிடிக்கவில்லை, எனது தெரிவுகள் உனக்கு ஒத்துப்போகவில்லை என சொல்லிக்கொண்டு.
 
பீஃப் சாப்டுறியா எனக்கேட்பது ரொம்பப்பழசாகி விட்டது. இங்கு பெங்களூரில் அதெல்லாம் சர்வ சாதாரணம். இனியும் படங்களில் கதா பாத்திரங்கள் இதையே பேசி திடுக்கிட வைக்க இயலும் என எனக்குத் தோணவில்லை. ’ரெட் டீ’ வாசிச்சிருக்கிறியா, அதுல ஒரு கருப்பன் வள்ளின்னு கேரக்டர்ஸ், நல்ல ஒரு லவ் ஸ்ட்டோரி இருக்கு அந்த அவல நாவலுக்குள்ளயும் என்று கூறும்போது ‘எனக்கு லவ் ஸ்டோரியே பிடிக்காது’ என்கிறான் இனியன். ரெனேவுடன் சேர்ந்து நானும் சத்தமாக சிரித்துவிட்டேன்.
 
நிறைய பேர் இந்தப்பெண் கதாபாத்திரத்தை பாலச்சந்தரின் பெண்கள் போல என. அவரின் படங்களில் வரும் பெண் பாத்திரங்கள் சாதி குறிப்பிடப் படவில்லை எனினும், ஆண்டாண்டு காலமாக அவர்கள்தம் ஜெனரேஷனே படித்து உலக விஷய ஞானம் உள்ள பெண்ணாகவே இருப்பர். இங்கு ரெனே அப்படி இல்லையே. ஒதுக்கப்பட்டவள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் பயப்பட்டவள். அத்தனை ஃப்ளாஷ்பேக்கும் ஒரு கார்ட்டூனாகவே உருவெடுத்திருக்கிறது இங்கு. அதிலும் ரெனே நீல நிற ஆடையே அணிந்திருக்கிறாள். என்னை வெறுத்து ஒதுக்கியவைகளே என்னை இன்னமும் படித்து அறிவைப்பெருக்கிக்கொள்ள வேணும் என உந்தித்தள்ளியது என தயக்கமற, அச்சமின்றி தெரிவிக்கிறாள்.
 
 
                             நட்சத்திரம் நகர்கிறது' படத்திற்கு 'ஏ' சான்றிதழ்- Dinamani
 
நீளமான பத்து பதினைந்து பேர் அமர்ந்து பேசி அலசும் காட்சி, இதுவரை எந்தப்படத்திலும் நான் பார்த்ததில்லை. அற்புதம். உரையாடல் நிகழ்கிறது. காரசாரமான உரையாடல்கள், யாரும் பொதுவில் வைத்து விவாதிக்க இயலாதவற்றை பேசித் தீர்க்கின்றனர். ரொம்ப சாதாரணமான ஒரு யுவனாக கலையரசன். ஆஹா. நம்மைப்போல ஒருவன். கூலிங் க்ளாஸ் எல்லாம் மாட்டிக்கொண்டு வருகிறார்.அவரிடம் இருக்கும் கூலிங் க்ளாஸை தாம் வாங்கிக்கொண்டு ’இங்க பாரு நடிக்க வந்தமா போனமான்னு இருக்கணும், கலைய வளக்கிறேன் அது இதுன்னு பேசுன அதோட அவ்ளவ்தான்’ என்று கூறும் ஒரு கதாபாத்திரம் நல்ல சிரிப்பை வரவழைக்கிறது.
 
 
படம் முழுக்கவும் எனக்கு ’கும்பளாங்கி நைட்ஸ்’ மற்றும் ‘சார்லி’ படம் ஞாபகமே வந்து கொண்டிருந்தது. உருவாக்கம் எல்லாம் அதன் அடிப்படை தான். (மேலும் முருகபூபதியின் நாடகங்களும்) படத்தில் வரும் நாடகம் பெர்ஃபெக்ட். அத்தனை கொல்லப்பட்ட சீவன்களும் ஒரு சட்டகத்துள் இருந்து பேசுவது பிரமாதம். அதோடு விடாமல் கொல்லப்பட்ட அந்த அத்தனை இளைஞர்களின் குரூர கொலைகள் நிகழ்விடக் காணொலிகள் செய்தி ஊடகங்கள் வாயிலாகவும் பகிரப்படுகிறது. இருப்பினும் கலையரசனின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் சி சென்டருக்கான சினிமா. நாடகத்துக்குள் ஒரு சினிமா அது. சினிமாவுக்குள் ஒரு நாடகத்தை பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு பெரும் சலிப்பு.
 
அதேபோல கடைசி 20 நிமிட நிகழ்வுகளை வெட்டி எறிந்திருந்தால் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்குமென பலர் கூறியிருந்தனர். உண்மையைச் சொன்னால் அந்த மங்க்கியும் நாடகத்தில் ஒரு கதாபாத்திரம். முழு ஒப்பனையும் செய்து கொண்டு தமது காட்சிக்கென காத்துக்கொண்டு இருக்கும் ஒரு கேரக்டர். காண்போர் இருக்கையிலிருந்து எழுந்து வந்து அபிநயிக்கும் ஒரு நடிகர்.. இப்படியெல்லாம் ஒரு நாடகம் நடந்து விட முடியுமா? ஹ்ம்.. அதான் கதாயுதத்துடன் வந்து துவம்சம் செய்கிறது அந்த மங்க்கி.
புரட்சி செய்கிறேன் பேர்வழி என்று எவ்வித இடையூறுமின்றி நாடகத்தை மிகச்சிறப்பாக அரங்கேற்றியிருந்தால் அது இன்னொரு சாதாரண சினிமாவாகவே போயிருக்கும். துவம்சம் செய்ததால் தான் அது இக்காலத்திய உண்மை நிகழ்வு. (புரட்சில்லாம் இருக்கட்டும் எங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு அதைத்தான் என் சினிமா பேசும் என ரஞ்சித் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.) 
 
படம் முழுக்க ராசைய்யாவின் பாடல்களே.! எல்லாம் சரி. அந்தந்த நிகழ்வுகளுக்கென காட்சிகளுக்கென பொருத்தமான பாடல் தேர்வுகள் அருமை. ஒரு கேள்வி என்னிடம் மண்டிக்கிடக்கிறது. படத்தில் தோன்றி நடிக்கும் கிட்டத்தட்ட அனைவரும் 20களின் வயதில் இருப்பவர்கள். அவர்களுக்கு இத்தனை துலக்கமாக ராசைய்யாவின் பாடல்கள் தெரிந்திருக்குமா?… 20களில் இருக்கும் யாராயிருப்பினும் ’அநிருத்/ஆதி/ கொஞ்சம் ரஹ்மான்/பி.ட்டி.எஸ்/ப்ளாக் பிங்க்’ எனத்தான் உலவுவதாக நான் கண்டிருக்கிறேன். (எதோ ராசைய்யாவின் ஒன்றிரண்டு பாடல்கள் அதுவும் டிக்டாக் போன்ற செயலிகளில் பிரபலமானால் தான் உண்டு அவர்கள் உலகத்தில்.)
 
இத்தனை நட்சத்திரங்கள், கேலக்ஸிகள், இணைப் பிரபஞ்சம் மற்றும் அது குறித்த கோட்பாடுகள் என அறிவியல் நம் கண் முன்னே விரிகிறது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அத்தனையையும் துடைத்தெறிகிறது இத்தனையும் தெள்ளத்தெளிவாக நம் கண்முன் விரியும் இந்த நிகழ் காலத்திலும் சாதி/மதம் ,தாழ்வு உயர்வு என்றெல்லாம் ஏன் பேச வேணும், நடைமுறையில் வைத்துக்கொண்டு கட்டி அழ வேணும் எனக்கேட்கிறார் இயக்குநர்.
 
படம் பார்த்து முடித்து சில நாட்களாகவே என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும் ஒரே கேள்வி இது தான். இத்தனை பேசாப் பொருளையும் பேசத்துணிந்த இயக்குநருக்கு ஒரு தாழ்த்தப்படுத்தப்பட்ட ஒரு இளைஞனாக ’ரெனே’ கேரக்டரை ஏன் திரையில் காண்பிக்க இயலவில்லை என. அப்படிக் காண்பித்திருந்தால் இப்படி ஒரு மாற்று/போல்டு சினிமாவாக வந்திருக்க வாய்ப்பில்லை என தோணியிருக்கும் போல அவருக்கு!...
 

                                   பா ரஞ்சித்தின் "நட்சத்திரம் நகர்கிறது" படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது!! |  Pa Ranjith's Natchathiram Nagarkirathu Movie Shooting Started Again - Tamil  Filmibeat