Thursday, July 16, 2015

அன்புள்ள அப்பா



சென்ற ஞாயிறு ஜூலை 12, இன்னொரு இரண்டாம் ஞாயிறு. கடந்த இரண்டு மாதங்களாக வேலை நெருக்கடியில் செல்லவியலவில்லை. குறுகுறுப்பு உள்ளேயே..அதான் இன்றைய மாதச்சந்திப்புக்கு வெகு விரைவாகவே சென்று விட்டேன். தமிழ்ச்சங்கத்தில் நுழைந்து எப்போதும் பின்னிலிருக்கும் எலிவேட்டர் வழியாக செல்வது வழக்கம்.பட்டனை அழுத்தினேன்..லைட்டே எரியவில்லை. அருகில் கேட்கலாமென்றால் யாரும் இல்லை. கொஞ்சம் நடந்து முன் வந்து 'என்ன பின்னால இருக்கிற லிஃப்ட்' வேலை செய்யலியா என்றேன்.துடைப்பாளி ( ஆஹா அருமையான சொல்) இல்ல..சுட்சி போடல அதான் என்றவர் ஒரு கை துடைப்பத்தோடு  அலுவலக முன்வாசல் லிஃப்ட்டை திறந்துவிட்டார். மூன்றாவது மாடிசென்று அங்கிருந்து நான்காவது மாடிக்கு படி ஏறிச்சென்றேன். கதவு திறக்கவில்லை. அடைத்திருந்தது. கொண்டியை நீக்கி திறந்து முதல் ஆளாக சென்று நாற்காலிகளை ஒழுங்குபடுத்தி மின்விசிறிகளை சுழலவிட்டு உப்பரிகை வந்து நின்று கொண்டேன்.

நல்ல காற்று. முதல்நாள் மழை பெய்திருந்து கொஞ்சம் சிலுசிலுவென காற்று அடித்துக்கொண்டிருந்தது. அல்சூர் ஏரி எப்போதும் நீர் நிறைந்திருக்கும்.அருகில் அத்தனை பச்சை மரங்கள்.கேட்கவே இத்தனை இன்பம்.சுற்றி சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தேன். நீர்க்காக்கைகள் ஏரியின் நீர்ப்பரப்பில் கால்கள் பட்டும்படாமல் நீந்திப்பின் பறந்து சென்றன. அருகில் இரு பாய்மரப்படகுகள் பயணிகளுக்காக நீந்திக்கொண்டிருந்தன. அருகில் இருந்த மரத்தில் கழுகு ஒன்று செட்டில் ஆகியிருந்தது. பறக்க எத்தனிக்கவோ இறக்கைகளைக்கோதவோ இல்லை. காற்றில் அசையும் கிளையோடு தாமும் எவ்விதச்சலனமுமின்றி சேர்ந்து அசைந்து கொண்டிருந்தது.

ஒன்றிரண்டு புகைப்படங்கள் எடுத்தேன். படியில் ஸ்ரீனிவாசன் ஏறி வந்துகொண்டிருந்தார். என்ன ராம்..என்றவரிடம் உங்களுக்காக முன்னரே வந்து எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தியிருக்கிறேன்.வாங்க என்றவனை கையில் தூக்கவியலாத புத்தகச்சுமைகளோடு ( புது எழுத்து 15 ஆம் ஆண்டு சிறப்பிதழ், சிலேட்டு ஆகியவை) ஏறிவந்தார். என்ன இன்னிக்கு யாராச்சும் சிறப்பு விருந்தினர் வர்றாங்களா என்றேன்.ஒரு பதிலும் இல்லை அவரிடம். கொண்டு வந்த புத்தகச்சுமையை அருகிலிருந்த மேஜையில் இறக்கி வைத்துவிட்டு என்னோடு வந்து உப்பரிகையில் நின்று கொண்டார்.

பின்னர் ஒவ்விருவராக வர ஆரம்பித்தனர். திரு' ஏகத்துக்கு மெலிந்துகிடக்கிறார். டீசீஎஸ்'ல எப்டீல்லாம் வேலை ,ஷிஃட் என அலுத்துக்கொண்டார். பின்னர் மணிகண்டன் வந்தார். வாங்க மணி என்ன இப்டி இளைச்சுட்டீங்க என்பதற்கு வழக்கமான புன்னகையோடு உள்ளே நுழைந்தார். பெரியசாமி'யும் சிவா'வும் ஓசூரிலிருந்து வந்துகொண்டிருப்பதாக ஸ்ரீனி தெரிவித்தார். கிருத்திகா படியேறி வந்தார். ஏறிவந்து கொண்டிருந்த சிவா'வை சிலப்பதிகாரம் நீயா நானா பார்த்தேன் என்றேன். நான் அந்த நிகழ்ச்சியைப்பார்க்கவில்லை என்று கூறி வேகமாக உள்ளெ சென்றார்.பின்னர் குள்ளமான தடிமனாக ஒருவரை ரமேஷ் கண்ணன் அழைத்துவந்தார். உள்ளே நுழைந்தவர் பாத்ரூம் என்றார். தமிழ் புரியுமோ என்ற சந்தேகத்தில் சைகை காட்டினேன். பாத்தால் தமிழர் போலத்தெரியவில்லை. பின்னர் பார்த்தால் அவர்தான் லாசரா'வின் புத்ரன் 'சப்தரிஷி' என்று தெரியவந்தது :) அவர் தான் இன்றைய சிறப்பு விருந்தினர் விழா நாயகர்.

அனைவரும் கூடி விட்டனர்.சிவா' சப்தரிஷி மற்றும் மணி அருகருகே அமர்ந்துகொண்டனர். சரி ஆரம்பிச்சுடலாம் என்றவர் , பதிலுக்கு காத்திராமல் சப்தரிஷியை எல்லோருக்கும் அறிமுகப்படுத்திவைத்தார்.  சப்தரிஷி பின்னர் எல்லோரையும் அறிமுகப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டவர் எத்தனை பேர் இதில் லாசரா'வைப்படித்திருக்கிறீர்கள் என்றார். யாரிடமும் சரியான பதில் இல்லை. கொஞ்சம் வாசித்திருக்கிறொம். அப்பப்ப வாசித்தது உண்டு என எல்லோரிடமும் சால்ஜாப்புகள் :) லாசரா'வின் கதைகளை அழியாச்சுடரில் வாசித்தேன். புரியவில்லை அத்தனை என்றேன்..என்ன வயது உங்களுக்கு என்று கேட்டவரிடம் ஒரு ஐந்து வயதைக்குறைத்தே சொன்னேன். அதான் புரியலை உங்களுக்கு என்றார்.


என்னருகில் பதிப்பாளர் அஃகு பரந்தாமனின் மகன் 'நந்தலாலா' அமர்ந்து  வேடிக்கை பார்த்துக்கொண்டு மட்டுமிருந்தார். ஒரு கேள்வியும் கேட்கவில்லை. நிறைய குறும்படங்கள் எடுத்திருப்பதாகவும் , அவை யூட்யூபில் இருப்பதாகவும் பின்னர் நேரம் கிடைக்கும் போது பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.  எனக்கு இந்தப்பக்கம் அமர்ந்திருந்த பெரியசாமியும் ஏதும் பேசாமல் நடப்பவற்றை உன்னிப்பாக கவனித்துக்கொண்டேயிருந்தார்.

பின்னரும் சப்தரிஷியே மழையாகப்பொழிந்தார். அவரின் அப்பா, அப்பா, அப்பா மட்டுமே வேறேதும் இல்லை அவர் பேச்சில். நிறைய சுவாரசியமான தருணங்களைப்பகிர்ந்து கொண்டார். அப்பாவைப்பற்றி இத்தனை பெருமையாகவும் அதுவும் தொடர்ந்து நான்கு மணி நேரத்துக்கு மேல் பேசுபவரும் உலகிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்கவேணும்.

இரவு இரண்டு மணிக்கு எழுப்பி 'டேய் அந்த நாலாவது பாராவிலிருக்கும் வரியை எடுத்து முப்பந்தைந்தாவது பக்கத்தின் மூன்றாவது பாராவில் செருகி விடு என்பார்'. அத்தனை கதைகளையும் வீட்டில் அமர்ந்து தான் எழுதுவார். அதுவும் நானும் என் தம்பியும் வீட்டைச்சுற்றி ஒடும்போது  எங்கள் கைகள் பட்டு வேகத்தில் பேப்பரும் பேனாவும் , அதன் மூடியும்/ எழுதும் பேடும் ஒவ்வொருதிசைக்குச்சென்றாலும் அத்தனை பொறுமையாக எல்லாவற்றையும் எடுத்து பின்னரும் விட்ட இடத்திலிருந்து எழுத ஆரம்பித்துவிடுவார்.அதிகம் பேசமாட்டார். என்னிடம் ( சப்தரிஷி'யிடம்) மட்டும் அதிகம் பேசுவார். வாழ்வை அத்தனை குதூகலமாக வாழ்ந்து அனுபவித்தார். அவர் வசிக்கும் தெருவில் இத்தனை பெரிய எழுத்தாளர் வசிக்கிறார் என்ற விஷயமே யாருக்கும் தெரியாது. ஒருமுறை நடிகர் சிவக்குமார் அவரைச்சந்திக்க வந்தபோது தான் தெருக்காரர்களுக்கு தெரியவந்தது. (ரமேஷ் கண்ணன் 'சப்தரிஷி'யைக்காட்டி இவர் ஓசூரிலேயே பத்துவருடங்களாக இருந்து வருகிறார். எனக்கே இப்பதான் தெரியும் என்றார். )

இப்படி பல விஷயங்களை அருகிலிருந்து பார்த்து கவனித்து , கூடவே வாழ்ந்து அனுபவித்து அவரின் கதைகளை அவ்வப்போது எழுதிக்கொண்டிருந்த புத்ரன் சப்தரிஷியின் குரல் ஓங்கி ஒலிக்கிறது .அரங்கில் அத்தனை அரவமில்லை. எல்லாம் அவர் குரலே ஒலித்துக்கொண்டிருந்தது.

அவ்வப்போது சில கேள்விகளைக்கேட்டார் சிவா , மணியும் பிறரும் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தனர். மணியின் இந்தக்கேள்விக்கு அவரிடம் நேரடி பதில் இல்லை. எப்போது பேசினாலும் சுஜாதா'வையும் கமலையும் இழுத்துப்பேசுகிறீர்களே ஏன் என்று. இத்தனை பேசுவாரா லாசரா' என்று என்பங்குக்கு கேட்டு வைத்தேன். இல்லை பேசமாட்டார், ஆனாலும் என்னிடம் பேசுவார் என்றவரிடம் 'இல்லை நிறையப்பேசுபவர்கள் அத்தனை எழுதுவதில்லை அதேபோல் எழுதுபவர்கள் அத்தனை பேசுவதில்லை' என்ற என்னிடம் அதெல்லாம் சும்மா இப்ப எல்லோரும் பேசறாங்க எழுதவும் செய்றாங்க என்றார். தாமும் சில குறுங்கதைகளையும் , ஒரு பக்க கதைகளையும் எழுதியிருப்பதாக சொன்னார்.

 ஒரு பக்கக்கதையை எப்படி எழுதினாய் என்று லாசராவுக்கு அத்தனை ஆச்சரியம் என்று பெருமை பொங்கக் கூறிக் கொண்டார். ஏனெனில் லாசரா குறைந்தது நாற்பது-ஐம்பது பக்கங்கள் எழுதுவது தான் வழக்கம் அதுவும் எல்லாவற்றையும் சுருக்கி சுருக்கி எழுதியுமே அது ஐம்பது பக்கங்களுக்குப்போய் நிற்கும் என்பதால். எடுத்துக்காட்டாக "எதிரில் நிற்பவனை 'வா'வென்று அழைத்தேன் நான்". இந்த வாக்கியத்தில் எதிரில் நிற்பவனைத்தான் கூப்பிட முடியும் , அதனால் அந்த "எதிரில் நிற்பவனை" வேண்டாம்.  ஏற்கனவே தன்னிலையில் எழுதிக்கொண்டிருக்கும் கதையில் "அழைத்தேன்" தேவையேயில்லை.
கூப்பிடுவது 'நானாகத்தானிருக்கமுடியும்" ஆகவே "நான்"-உம் தேவையில்லை.அதனால் வெறுமனே "வா" மட்டுமே போதும் என்று எழுதுவார் லாசரா. இப்படியெல்லாம் பார்த்துப்பார்த்து நுணிக்கு நுணுக்கி எழுதியுமே பல பக்கங்களைத் தாண்டியவை அவரின் கதைகள்.

இரண்டு பெண்கள் இருக்கும் அரங்கில் நான் கேட்கத்தவிர்த்த கேள்விக்கு அவரின் பேச்சிலேயே விடை கிடைத்தது. தாம் அப்பாவிடம் கேட்ட இந்தக்கேள்வி, "ஏன் எனக்கு இழவு வீடுகளிலும் , கோயில்களிலும் செல்லும் போது பாலுணர்வு அதிகமாகிறது" , 'ஒண்ணுமில்லடா, எல்லாப்பெண்களும் குளித்துவிட்டு ஈரப்புடவையோடு வருவா' அதான் என்று சட்டென முடித்தார் லாசரா என்றார். முஸ்தீபுகளோ , தயார்ப்படுத்தல்களோ ஏதுமின்றி சரளமாக வார்த்தைகள் சட்டென வந்து விழும் அவரின் அப்பாவுக்கு. அத்தனை கவித்துவச்சொற்களோ இல்லை புரியாத பாஷையோயின்றி எல்லோருக்கும் தெரிந்த சொற்களை வைத்தே அத்தனை கதைகளையும் எழுதிவந்திருக்கிறார். இருப்பினும் உள்ளர்த்தம் புரிவதற்கு வயதும் அனுபவமும் வேண்டித்தானிருக்கிறது.

தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்தவருக்கும் கேட்டுக்கொண்டிருந்தவர்க்கும் சிறிது வயிற்றுக்கும் ஈயவேண்டி மணிகண்டன் 'தம்' டீ வாங்கி வந்தார். சின்ன காகிதக்கப்புகளை ஜாரின்  வாயில் வைத்துப்பிடித்துக்கொண்டு  மூடியை வலுவாக அழுத்தி கொஞ்சம் கொஞ்சம் நிறைத்துக்கொடுத்தார். எழுந்து சென்று 'இருங்க நானும் எடுக்கிறேன் 'என்றவனிடம் , இல்ல இன்னும் நல்லா அழுத்தினாதான் வரும் என்றார்.. ஏனென்றால் எனது ஒரு சிறிய அழுத்தத்திற்கு டீ வரவேயில்லை. ஹ்ம்.. இன்னுங்கொஞ்சம் முயற்சி பண்ணுங்க என்றவரின் பேச்சில் எனக்கு ஆயிரம் புரிந்தது.

சினிமாவிற்குப்போகும் போது மட்டுமே தாங்கள் அவரின் அனுமதி கேட்டுச்செல்வதாகவும் மற்ற விஷயங்களுக்கெல்லாம் அனுமதி வாங்கிச்செய்ததாக நினைவிலில்லை என்றவர் , அந்த அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டார். ஏறக்குறைய இந்த வயதிலிருக்கும் அத்தனை பேரின் அனுபவமாகத்தானிருந்தது. லாசரா தமது பதினேழாம் வயதிலெயே எழுத ஆரம்பித்துவிட்டார் என்ற செய்தி கொஞ்சம் நம்ப இயலாததாக இருந்தது. அவருக்கு ஆதர்ச எழுத்தாளர் என்றெல்லாம் யாரும் இல்லை எல்லோரையும் விடாமல் வாசித்துவிடுவார் , இலக்கியச்சண்டைகளில் எல்லாம் சமகாலத்தியவருடன் கலந்து கொள்வதில்லை. தாமுண்டு தம் எழுத்துண்டு என்றே எழுதி வந்தார். இப்படி யாரும் எதுவும் கேட்காமலேயே ஒரு எல்பி ரெக்கார்ட் போல விடாது பேசிக்கொண்டேயிருந்தார்.

ஏன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச்சேர்ந்த எழுத்தாகவே அவரின் எழுத்து காணப்படுகிறது என்ற கேள்விக்கு அவரின் சூழல் அப்படி.வேறேதும் சூழலை அவர் தமக்குரியதாகக்கருதவில்லை என்றும் சில பெயர்கள் சில சமூகம் சார்ந்திருப்பதாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.( விருமாண்டி'யும் சிங்கப்பெருமாளும் ).

எங்களைக்கட்டுப்படுத்தியெல்லாம் வளர்க்கவில்லை. நாங்களாகவே வளர்ந்துவிட்டோம் என அந்த அறுபதுகளின் காலகட்டத்தில் அத்தனை வீட்டிலும் அது போன்றே பிள்ளைகள் வளர்க்கப்பட்டதையும் சொல்லிக்கொண்டிருந்தார். சப்தரிஷியின் நண்பரின் அப்பா , வீட்டிற்கு வந்ததும் அவரின் செருப்பை வாங்கி பின்னில் திருப்பி பார்ப்பது வழக்கம் , சிகரெட்டை தேய்த்துவிட்டு வந்திருக்கிறானா எனப்பார்ப்பதற்கு.. அப்படியெல்லாம் ஒருபோதும் லாசரா செய்ததில்லை எனக்கூறி மகிழ்ந்துகொண்டார். அவரின் கதைகளைப்பற்றிய கேள்விகள் வரும்போது தம்மை முன்னிறுத்திவிட்டு லாசரா சென்று விடுவார் , அத்தனையும் தர்மசங்கடமான கேள்விகளேயன்றி ஏதும் வராது. அத்தனைக்கும் பதில் தயார்ப்படுத்திக்கொண்டு சமாளித்து அனுப்பும் வரை போதும் போதும் என்றாகிவிடும் என்று அங்கலாய்த்துக்கொண்டார் எனினும் குரலில் அது சந்தோஷமாகவே ஒலித்தது.

சுஜாதாவிற்கு ஒரு தேசிகனைப்போல லாசராவிற்கு ஒரு ரசிகர். எழுதிய அத்தனையும் வாசித்து தமது வாழ்வை ஒருமுகப்படுத்திக்கொண்டு அவரின் எழுத்துகளோடேயே வாழ்ந்து வரும் அன்பரை அறிமுகம் செய்து வைத்தார் சப்தரிஷி.(அவரின் பெயர் மறந்துவிட்டது) பின்னர் லாசரா'வைப்பற்றிய கட்டுரை ஒன்றை அவர் எழுதியதை சப்தரிஷி எல்லோருக்கும் வாசித்துக்காட்டினார். லாசரா'வின் குடும்ப நிகழ்வுகள்,பிறந்த நாட்கள், திருமண நிகழ்வுகள் முதற்கொண்டு ஞாபகம் வைத்து அத்தனை பேருக்கும் வாழ்த்து அனுப்பும் அன்பர் என நெகிழ்ந்து கொண்டார்.

கதைகளைப்பற்றிப்பேசக்கூடி விட்டு , இப்படி வாழ்வின் நிகழ்வுகளைப்பகிர்ந்ததோடு முடிந்து விட்டதே எனக்குறைப்பட்டுக் கொண்டவர்க்கு  அடுத்த சந்திப்பில் அதை வைத்துக்கொள்ளலாம் என மணிகண்டன்  சமாதானப்படுத்தினார். இருப்பினும் அவரின் கதைகளை வாசித்து சிலாகித்துப்பேசுமளவு எவரும் தயார்ப்படுத்திக்கொண்டு வந்தனரா என்றால் , என்னைப்  பொருத்தவரையில் யாரும் அந்த அரங்கில் இல்லை என்றே கூறுவேன்.இருப்பினும் அவரின் பேச்சினூடே சில கதைகளின் பெயர்களையும் அவற்றைப்பற்றிய சிறு உரைகளையும் ஆற்றத் தவறவில்லை சப்தரிஷி. பின்னர் கூட்டத்திற்கு முதன்முறையாக வந்தைருந்த அன்பர் ஏன் வாசிக்கவேணும் என்ற இப்போதைய தலைமுறையினரின் வழக்கமான கேள்வியைக்கேட்டார். சிரித்துக்கொண்டே அதற்கும் பதிலளித்தார்.

நிறையப்பேசிப்பேசி அவரும் களைத்துவிட்டார் கேட்ட நாங்களும். மணியும் இரண்டை நெருங்கியது . சரி இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்ற மணி கூட்டத்தை நோக்கி அடுத்த மாதம் இரண்டாம் ஞாயிறு-வில் கதைகளைப் பற்றிக்கதைப்போம் என்றவாறே எழுந்தார். அடுக்கி வைத்திருந்த புதிய எழுத்து'வின் பதிப்புகளை ஸ்ரீனியிடம் வாங்கிக்கொண்டேன். மணிக்கும் இரண்டு புத்தகங்களைக்கொடுத்தார். பின்னர்  சப்தரிஷியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். கீழிறங்கி வந்த சப்தரிஷியை ரமேஷ் காரில் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.  சரி ராம் எனக்கு ஷிஃட் நேரமாகிவிட்டதெனெ திரு தமது பைக்கை எடுத்துச்சென்றுவிட்டார். மணியும் சிவாவுமாக ஒன்று சேர்ந்து சென்றனர். பின்னர் ஸ்ரீனி , பெரியசாமி , நந்தலாலா இவர்களுடன் கொஞ்சம் கதை பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.