Thursday, December 19, 2019

யாதும்ஊரே யாவரும்கேளிர்

மனித இனமே மேய்ச்சல் நிலங்கள் தேடி புலம் பெயர்ந்தது தான் வரலாறு. ஆற்றுப்படுகை நாகரீகங்களெல்லாம் அதைத்தான் சொல்கின்றன. ஒவ்வொருவரின் டிஎன்ஏ’வைப்பரிசோதித்துப் பார்த்தால் யாரும் தாம் வாழும் தற்கால நிலத்துக்குச் சொந்தமானவர் என நிரூபிக்க வாய்ப்புகள் குறைவு. இதில் நாடென்ன மதமென்ன ? குறுகிய மனங்களின் விகாரங்கள் தான் இவை. குழு மனப்பான்மையை விட்டு பல்கிப் பெருகி சமுதாயமாக வாழ முற்பட்ட மனித இனத்தை மீண்டும் கூண்டில் அடைக்க நினைக்கும் சிறுபிள்ளைத்தனம். சுற்றியிருக்கும் நாடுகளும் இதே பாணியைப் பின்பற்றி பெரும்பான்மை சமூகத்திற்கெனவே பேசுவது ,அதையே உறுதிப்படுத்துவது என்பன எல்லாம் கற்காலத்துக்கு மட்டுமே இட்டுச்செல்லும். #யாதும்ஊரேயாவரும்கேளிர்

Sunday, December 1, 2019

ஏர்ஹோஸ்ட்டஸ்

எமது அலுவலகத்தில் ஒரு இளைஞி வேலைக்கு சேர்ந்தார். உள்ளூர் கன்னடிகா ஹுடுகி. கொஞ்சம் அலட்டலான ஒப்பனையோடேயே வலம் வருவார். டஸ்க்கி ப்யூட்டீன்னுல்லாம் சொல்ல முடியாது. நம்மூர் பொண்ணுகளைப் போலவே கருமை நிறத்தில் தான் இருப்பார். பிறகு பேச்சு கொடுத்தபோது தெரிய வந்தது, அவர் ஏர் ஹோஸ்ட்டஸ் பணிக்கென பயிற்சி எடுத்தவர் என. பெங்களூர்ல ஏகப்பட்ட இன்ஸ்ட்டிட்யூட் இதெற்கென இயங்கி வருகிறது. பயிற்சிக்கென விலை ஏகத்துக்கு கொட்டிக் கொடுக்க வேணும் லட்சங்களில். ஹிந்தி கண்டிப்பாக அறிந்திருக்க வேணும். நுனி நாக்கு ஆங்கிலத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். எல்லாம் அவரிடம் இருக்கிறது.

ஒரே ஒரு பிரச்னை என்னவெனில் அவரின் இயல்பான நிறம். அதை மறக்கடிக்கும் அளவு தம்மை முன்னிறுத்த அவர் செய்த முயற்சிகளைப் பற்றி கதையாக சொல்வார். விமான பணிப்பெண்ணுக் கென கண்ணை மூடிக்கொண்டு நேபாளிகளை தேர்ந்தெடுத்து எடுத்துவிடுவார்கள் என. அத்தனை வெள்ளை அவர்கள். முகத்தில் சிறு பருத்தடம் கூட இருந்து விடக்கூடாது என்பதில் வெகு கண்டிப்பாக இருப்பார்கள் என்றார். மேலும் இவரின் கையில் முழங்கை அருகே பெரிய தழும்பு ஒன்று இருந்து போனது. அதை நீக்கி விட்டு வாருங்கள் என விடாப்பிடியாக கூறிவிட்டனர். அதற்கென பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிறகு தழும்பு போக வழியிருக்கிறது, ஆனாலும் தொடர்ந்து உட்கொள்ள வேண்டிய மாத்திரைகளால். கேன்சர் வர வாய்ப்பிருக்கிறது என மருத்துவர்கள் சொல்லி விட்டனர் என்றார். இப்பெண்ணின் தந்தையோ அதெல்லாம் வேணாம், நீ உள்ள வேலையைப் பார் என்று கூறியிருக்கிறார்.

பெரிய விமான நிறுவனங்களில் தென்னிந்தியப் பெண்களே இல்லாது இருக்க இதுவே காரணம். என்ன வெள்ளாவி வைத்தாலும் நம்மவர்கள் வெள்ளையாக ஆக முடியாது. இதை விடலாம். வெளிநாட்டு விமான நிறுவனங்களில் ஆப்ரிக்க பெண்கள் பணி புரிவதை நானும் கண்டிருக்கிறேன். இங்கு மட்டும் என்ன இப்படி ஒரு நிபந்தனை ? எல்லாம் சினிமாவில் தான் நடக்கும் போலிருக்கிறது , பார்வதி நடித்து வெளிவந்த மலையாள ‘உயரே’வில் அவரின் காதலன் முகத்தில் அமிலம் வீசி அவரின் வாழ்க்கையை முடக்கி விடுவான், எனினும் ஒரு விமான நிறுவனம் அவருக்கு விமானப் பணிப் பெண்ணாகவே வேலை கொடுப்பார்கள்.! விமானப் பயணிகள் அனைவரும் அவரின் மன உறுதியைப் பாராட்டுவர்.! ஹ்ம்.... எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் ! #ஏர்ஹோஸ்ட்டஸ்

Friday, November 29, 2019

#விலங்குகள்

வீட்டிற்குள் பாம்பு நுழைந்தபோது எதுவும் செய்யத் தோணவில்லை. எங்கே நம்மைக் கொத்தி விடுமோ இல்லை தீண்டி செயலிழக்கச் செய்து விடுமோ என்ற அச்சம் தான் பரவிக் கிடந்ததே தவிர அந்தச் சூழலை எங்கனம் கையாள்வது என்ற ஒரு உத்தி போலும் தோணவில்லை. எப்போதாவது இயக்கும் புகைபோக்கி விசிறியில் குட்டி போட்டு வைத்திருக்கும் எலிகளைப் பிடித்து தின்ன வந்து, தவறுதலாக வீட்டின் பரணில் அமர்ந்து கொண்டது. கீழிருந்த ஒரு பங்காலி கிராமத்து காவலாளி சொன்னது இன்னமும் என் நினைவில் நிற்கிறது. நீங்க அந்த பாம்புக்கு தீங்கு நினைக்காத வரை, அது மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடாத வரை அது உம்மை ஒன்றும் செய்யாது. அதன் நோக்கம் வேறு என்று. பிறகு அவரின் துணையுடனேயே யாருக்கும் எந்த கெடுதலுமின்றி வெளியே அனுப்பி வைக்கப் பட்டது. எலி வராமப் பாத்துக்குங்க , பாம்பு விரட்டுவதற்கு வேலையே இருக்காது என்றார்.

அதே போல மழைக்காலப் பூனை ஒன்று ஏகப்பட்ட குட்டிகளை வீட்டின் உள்ளடங்கிய உப்பரிகையில் ஈன்று வைத்து விட்டு ஒவ்வொரு முறை கதவைத் திறக்கும் போதும், எங்கே இவன் தமது குட்டிகளுக்கு எந்த ஆபத்தையும் செய்து விடுவானோ என்ற பயம் அதன் கண்ணில் தெரிவதை பல முறை பார்த்திருக்கிறேன். கொஞ்சம் நாட்கள் இங்கனம் பழகிப் போனதும் தம் நான்கு கால்களில் வலது முன்னங்காலை மட்டும் திருப்பிப் போட்ட ’ட’ போல மடித்து வைத்துக் கொண்டு உள்ளடங்கிய கண்களோடு என்னிடம் இறைஞ்சி நிற்கும். பிறகு தான் புரிந்தது ‘ நான் உன்னை என் நண்பனாக கருதுகிறேன், தாக்காதே’ என்று கூறுவதாக. அதன் பிறகு குட்டிகளை நான் கை கொண்டு தூக்குவதை ஒரு போதும் தடுத்ததில்லை.

இதெல்லாம் வீட்டுக்குள்ள வர்றது அபசகுனம் தம்பி. அதுக்கு ஒரு எலெக்ட்ரானிக் ரெப்பெல்லண்ட் ஒன்று இருக்கிறது அதை வாங்கி பிளக்கில் செருகி வைங்க, அதிலருந்து வர்ற அல்ட்ராஸொனிக் வேவ்ஸ்’னால ஒரு பொட்டு பூச்சி வராது என்றார் மேல்வீட்டு அங்கிள். அதிலிருந்து அவரிடம் பேசுவதையே விட்டு விட்டேன். 

விலங்குகள் நம்மிடம் அவர்களின் மொழியில் தொடர்பு கொள்ளத்தான் செய்கின்றன. நமக்குத் தான் புரிவதில்லை. இயற்கையை விட்டு வெகு தூரம் சென்று விட்டதைப்போல உணர்கிறேன். #விலங்குகள்

Thursday, November 14, 2019

கேட்பிதழ்

புது எழுத்து அக்டோ’2019 கேட்பிதழ் (இந்தப்பதமே அழகா இருக்கே ) வாசித்துக்கொண்டிருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஐராதம் மாகாதேவனின் ’வின் பேட்டி அத்தனையும் நன்றாக இருந்தது.
சிறுகதைகளில் சட்டென மனதில் ஒட்டிக்கொண்ட புலிக்கதை ‘குமாரநந்தனின்’. இதழுக்கு உகந்த நடை. கணபதியின் இதயத்தை உருவிச்சென்ற புலி விடாது எனது இதயத்தையும் கவர்ந்து சென்றது.
பணயம் சிறுகதை சட்டெனெ முடிந்து விட்டதைப் போன்றிருந்தது. இந்த இதழுக்கு இந்த இதழ் பேசும் கருத்துச்செறிவுக்கு ஒப்பாது பாமரப்பாணியில் அமைந்த சிறுகதை அது.

சந்தனி ப்ரார்த்தனாவின் சிங்களச்சிறுகதையின் வடிவம் ஏனோ பட்டும் படாது சிறக்கவில்லை. சொல்ல வந்த முறையில் தவறா இல்லை மொழிபெயர்ப்பில் ஏதேனும் விடுபட்டதா என்ற குழப்பம்.பாலா’வின் சிறுகதை மாய யதார்த்தத்தை சொல்ல முயன்று விலகிச் சென்று வடிவச்சிக்கலில் சிக்கி மனதைக்கவர மறுக்கிறது.
விர்ஜீனியாஉல்ஃபின் சிறுகதை மொழி பெயர்ப்பிலும் சிலிர்ப்பை ஏற்படுத்த தவறவில்லை. 


பா’ராஜாவின் கவிதையில் கோமாளி // இரவெல்லாம் அழுத கண்ணீரில் உறையாதிருந்த ஒரு துளியை விரலாற்தொட்டான்// சிறப்பு.
சுதேசமித்திரனின் ‘ஆரண்யம்’ சிறுபத்திரிகை பற்றிய குறிப்பு மிக அருமை. எனைக் கவர்ந்த நடை. அதிலும் ஜெமோ’ச்சீண்டியிருந்த வரிகள் அற்புதம் .

மொத்தத்தில் தாமதமாக வந்திருப்பினும் தற்காலத்திற்கென வந்திருக்கும் புது எழுத்து கேட்பிதழ்2019 #புதுஎழுத்து

Wednesday, November 13, 2019

#அயோத்தி.

பெரிய பெரிய ரைட்டப்லாம் எழுதுகிறார்கள் , அயோத்தி தீர்ப்புக்காக. இதைப்பற்றி பேசவேண்டாம் என்றிருந்தேன். இருப்பினும் சொல்லிவிட நினைக்கும் ஒன்றே ஒன்று. இங்க பெங்களூரில் அகரா’ன்னு ஒரு இடம் இருக்கிறது. மிகப்பிரபலமான பகுதி. அதில் ஒரு ஆஞ்சநேயர் சிலை கிட்டத்தட்ட 200அடிகள் இருக்கலாம், ஓங்கி உயர்ந்து நிற்கும். கற்சிலைதான் அத்தனை அழகிய வண்ணங்கள் பூசப்பட்டு ஜொலிக்கும். அதன் தொட்டடுத்து ஓரடிபோலும் இடைவெளி இல்லாது ஒரு பள்ளி வாசலின் மினரட் (கோபுரம்) அதோடு கூடிய பள்ளிவாசல் கட்டப் பட்டிருக்கும். பாங்கு ஒலியும் எழும் நேரத்துக்கு. 

இன்னும் முடியவில்லை. அதனையும் தொட்டடுத்து ஒரு ஒரிஸ்ஸா பாணியில் அமைந்த ஜெகந்நாதர் ஆலயமும் இருக்கிறது. வடநாட்டு பாணியில் ஒவ்வொரு கோபுரத்திலும் காவிக்கொடி பறந்து கொண்டிருக்கும். பஜனைகள் காதைத்துளைக்கும் , அந்த மேம்பாலத்தை கடந்து செல்லும்போது. மூன்று வழிப்பாட்டுத் தலங்களும் நூறடிக்கு உள்ளேயே அமைந்திருக்கும்.அது தான் சிறப்பு,

நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிப்பது தவறுதான். இருப்பினும் இதைப்போல மஸ்ஜிதும், கூடவே ராமனும் அருகருகே இருந்து அயோத்தியில் அருள் பாலித்திருக்க நீதி வழிவகை செய்திருந்தால் இன்னமும் மகிழ்ந்திருப்பேன், #அயோத்தி.

Sunday, November 10, 2019

டெர்மினேட்டர் டார்க் ஃபேட்


இப்ப வர்ற ஆங்கிலப்படங்கள்லல்லாம் ஏன் அளவுக்கு அதிகமா ஸ்பானிஷ் பேசற கேரக்டர்களை வெச்சே எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்ப வந்த லாஸ்ட் ப்ளட் படத்துலயும் அதே, இந்த ’டெர்மினேட்டர் டார்க் ஃபேட்’லயும் அதே. தமிழ்ப்படங்கள்ல தான் ஒண்ணு ரெண்டு மலயாள வசனத்தை வெச்சு இல்லைன்னா தெலுகு வசனத்தை வெச்சி அங்கயும் ஓட்டலாம்னு பார்ப்பது வழக்கம். அதே பாணி ஹாலிவுட்லயுமா ?! ஸ்பானிஷ் பேசற மக்கள் அதிகம் வசிக்கிறார்களா? அமெரிக்காவில். ட்ரம்ப் பெரிய மெக்ஸிகோலருந்து சட்ட விரோதமா குடியேறத்துடிக்கும் ஸ்பானியர்களைத் தடுக்க சுவரே கட்டி விடப்போறதா உதார் காட்டிக்கிட்டு இருந்தார். இங்கிலீஷ் படம் பெரும்பாலும் ஸ்பானிஷ் கூடவே பேசிக்கிட்டு தான் வருது.


கதை அதே கதைதான். தொண்ணூறுகள்ல வந்த டெர்மினேட்டர். எதிர்காலத்துல இருந்து வில்லன் வருவார், இப்ப நடக்கிற ஆய்வுகளை முறியடிக்க இல்லைன்னா வலுவாக்க. அதே தான் இங்கயும். 2042ல தன்னைக் காப்பாற்றின டானி என்ற பெண்ணை , இப்ப 2019ல காப்பாற்ற வரும் ஒரு க்ரிஸ் எனும் இளமங்கை. சின்ன வயசில பிள்ளைகளை காப்பாற்றி பெரியவனாக்கினா வயசான காலத்துல அவங்க நம்மைக் காப்பாற்றுவார்கள் அல்லவா அதையே இங்க கொஞ்சம் உல்ட்டாவாக்கி.ஹிஹி.. ஆனா அந்த இளமங்கை இங்கு இப்போது நிகழ்காலத்தில் டானி என்ற பெண்ணைக் காப்பாற்றி விட்டு இறந்தும் போகிறார். அங்க தான் குஸப்பம். பின்னர் எங்கனம் அவர் சிறு குழந்தையாக டானியாலேயே 2042ல் காப்பாற்றப்படுவார். ஆஹா...ஏகத்துக்கு சுத்துல விட்றாங்யளே..! இந்த டானியின் வயிற்றில் வளரும் சிசு பிற்காலத்தில் உலக சந்ததியினரைக் காப்பாற்றப் போகிறதாம். ஹ்ம். ..அதனால அவர் ஒரு ‘மேரி’யாக அறியப்படுகிறார். ஒருமேரின்னா ”அந்தமேரி” இல்லை. அன்னை மேரி..ஹிஹி. ஆரு ஆரைக்காப்பாத்துறது ? ஏம்ப்பா...ஹ்ம்.


அதே சாரா கார்னர், அப்புறம் சாரா கார்னரை போட்டுத்தள்ள வந்த அதே அர்னால்ட் டி2 மெஷின் டெர்மினேட்டர். இப்ப வில்லனை அடிக்க மனிதனாக மாறிக்கொண்டு இருக்கும் அர்னால்ட் டி2 மெஷின். நம்பணும். வில்லன் சொல்றான் , நாம ரெண்டு பேரும் உருவாக்கப்பட்டது இவர்களை போட்டுத்தள்ளத்தான் என்று. என்னோட வா செஞ்சிருவோம் என்று கூப்பிடுகிறான். மசியவில்லை டி2. அப்புறம் ஏகப்பட்ட ஃபர்னிச்சர்களை உடைச்சு , ஹெலிகாப்டர், கார் போன்றவற்றையும் உடைத்து தூள் தூளாக்கி நம்மையும் கூடவே .ஹிஹி..  சாரா கார்னர் (லிண்டா ஹேமில்டன்) தன் மகனைக்கொன்ற டெர்மினேட்டரை போட்டுத்தள்ள சுற்றிக்கொண்டு இருக்கும் ஆண்ட்டி,,ஹிஹி கிழவின்னு தான் சொல்லணும். இளமங்கை க்ரிஸை தம் மகனாக அறிந்துகொண்டு வியப்படைகிறார். இப்பிறவியில் தம்மகன் ஜான் இளநங்கை க்றிஸாக உருவெடுத்திருப்பதாக எண்ணி உவகை கொள்கிறார். அப்ப அவாளும் மீள் பிறப்பு உண்டூன்னு நம்பறா..ஹிஹி.

சண்டைக்காட்சிகளிலும் புதுமை இல்லை. அதே போன்றே தூள் தூளானாலும், இரண்டாக மண்டையை , உடலைப்பிளந்தாலும் , சொட்டுத் திரவமாக உருக்கி விட்டாலும் மீண்டும் அத்தனை மூலக்கூறுகளும் ஒன்றிணைந்து புதிய இயந்திரனாக கட்டமைத்துக் கொள்ளும் நைண்ட்டீஸ் டெக்னாலஜி. (அத்தனை அரசாங்கங்களும் அழித்து விட்ட டெர்ரரிஸ்ட் கேங்களை மீண்டும் ரீக்ரூப்பிங் பண்ணவிடாது உருக்குலைக்க எண்ணும் அதே டிஸைன்.) வில்லன் மீண்டும் உருக்கொண்டு வராத அளவுக்கு பத்தாயிரம் டிகிரி ஃபாரன்ஹீட்டில் வைத்து உருக வைக்கும் முடிவு. புதுசா எதுனா யோசிங்கடெ. வில்லனுடன் டி2 அர்னால்டும் வழக்கம் போல மரிக்கிறார். டானி தம் குழந்தை வளர்வதை கண்ணுற்று உவகை கொள்கிறார். சுப ப்ராப்தி மஸ்த்து..மஸ்த்து!


Monday, October 14, 2019

புழுதிமரப்பறவைகள்



நேற்றைய பெங்களூர் டவுன்ஹால் ரவீந்த்ர கலாஷேத்ரா நாடக அரங்கு நிறைந்து கிடந்தது. உட்கார இடமில்லை. கிடைத்த இருக்கையை இருத்தி வைக்க வெளிக்கிளம்பி செல்ல இயலாத நிலை. எண்பது நிமிடங்கள் நாடகம். கைபேசி வெளிச்சம் மேடைக்கு எட்டுமென முன்னதாகவே அறிவிப்பு வெளியானது. அணைத்து வைக்கச்சொல்லி. பின்னரும் நாடகம் ஆரம்பமாகிய பிறகும் கூட ‘ஒலிவாங்கியில் இரைஞ்சினார் கன்னடத்தில், தயவாகி மொபைல் ஒந்து ஸ்விட்ச் ஆஃப்’ மாடு’ என்று.

முழுவிளக்குகளும் அணைக்கப்பட்டது அரங்கிலும் மேடையிலும் .கும்மிருட்டு. உலகும் பிரபஞ்சமும் தோன்றியது அப்படித்தானே. முழுக்க முழுக்க கருப்புப்பருப்பொருள் தானே முதலில். பின்னர் தோன்றியது தானே இந்த தற்காலிக வெளிச்சக்கீற்று. இருள் சாஸ்வதம் ஒளி தற்காலிகம். அதுதான் நிதர்சனம். இன்னமும் இருளை வெல்ல ஒளியால் இயலவில்லை. ஓடி ஒளிந்து கொள்கிறது. தொண்ணூற்றைந்து விழுக்காடு டார்க் மேட்டர் மட்டுமே. பிரபஞ்சத்தில். அதைத்தான் மேடை சொல்லியது காண்பித்தது.

கடிகார டிக் டிக் ஒலி. விடாது ஒலிக்கிறது பின்னணியில். இத்தனை நாளும் கடிகாரம் தான் காலத்தை அளவிடுகிறது என்றெண்ணிக் கொண்டிருந்தவனுக்கு , அது வெறும் அசைவு தான் என ஒரு ஸென் சொல்லியது. ஆதவன் மேலெழுவதும்,வீழ்வதும் கடிகார முள்ளசைவும் ஒரு நிகழ்வு மற்றும் அசைவு மட்டுமே. அது காலம் அல்லவென.  அந்த டிக் டிக் ஒலியின் பின்னணியில் மெல்லுடலி ஜெல்லி மீன் தவழ்ந்து தவழ்ந்து மெல்ல வெளிச்சம் பெறுகிறது. மேலெழும்புகிறது.  உலகின் முதல் உயிரி கடலில் இருந்து தான் தோன்றியது. மச்சாவதாரம் முதல் அவதாரம் இந்து மரபில். அதைத்தான் நாடகமும் சொல்லியது.

நாடகம் தொடங்குமுன் சிறு குறிப்பொன்று கொடுக்கப்பட்டது. எத்தனை பேர் அதை உற்றுக்கவனித்தனர் எனத்தெரியவில்லை. மூன்று மொழிகளிலும் அது வழங்கப்பட்டது. பல்லுயிர் ஓம்புதல் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த நிகழ்வென.  

புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி
பல்விருகமாகி
பறவையாய், பாம்பாய்
கல்லாய்
,மனிதராய், பேயாய், கணங்களாய
வல்
அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்


என்ற மாணிக்கவாசகரின் கவிதைக்கேற்ப சிக்கெனப்பிடித்துக் கொண்டேன் அவர்கள் கூறிய முன்னறிவிப்பில். இதையே தான் இதன் அடிப்படையில் தான் நாடகமும் நடந்து சென்றது முடிவு வரை.

அந்த ஜெல்லி மீனிலிருந்து தவழ்ந்து வெளிவருகின்றன மற்ற உயிரினங்கள். மரம், யானை, கழுதை,அணில், கிளிகள்,மனிதன் என பல்லுயிர்க்கோட்பாட்டை வலியுறுத்தும் இந்த நாடகம். ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதையும் காண்பிக்க தவறவில்லை.  தொடர் நிகழ்வுகள், பரிணாம வளர்ச்சி, ஒன்றிலிருந்து இன்னொன்று தோன்றுவது  ஒவ்வொன்றும் பேசுகிறது அதனதன் மொழியில். மனிதனுக்குத்தான் விளங்குவதில்லை. அடித்து உண்பதில் தான் குறி. அது அவன் இனமேயாகினும்.

முருகபூபதியின் நாடகங்கள் இதைத்தான் சொல்லவருகிறேன், புரிந்து கொள்ளுங்கள் என்ற ஒரு வரையறைக்குள் கட்டுப்படாதவை. அவர் சொல்லவரும் விஷயங்களை பார்ப்பவன் மனதில் உண்டாக்கிக் கொள்ளும் சித்திரத்தினூடாக புரிந்து கொள்ள வைக்க முயல்வதே. அதனடிப்படையில் ஒவ்வொருவரின் கற்பனையும் கலந்து அது முழுமை பெறும். சொல்வதொன்று புரிந்து கொள்வதொன்று என்ற மொழிக்கூறின் சொல்லாடல்களின் வழியல்ல,இது உணர்வின் வழி புரிந்துகொள்ளல். இதுகாறும் இந்த பிரபஞ்சம் நமக்களித்தவற்றை அதன் பாங்கில் ஒத்திசைந்து அதன் வழி அறிந்து கொள்ள இது ஒரு நல்வாய்ப்பு.

கொடுக்கப்பட்ட எண்பது நிமிடங்கள், அத்தனையும் அறிவுப்புலன் திறப்பு. ஏற்கனவே பொதிந்து வைத்த உள்ளீடற்ற கற்பனைகளை, உருவத்தை அதன் வழி கிடைத்த அறிவை உதறித்தள்ளிவிட்டு புதிதாக கற்பனை வளத்தை,நாமாக உருவாக்கிக்கொள்ள வைக்க நினைத்த நாடகங்கள் இவை. இவற்றின் பாணி புதிது. சொல்லவரும் முறை புதிது. உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களைத்தகர்த்தெறியும் படைப்பு.

நாடகத்தில் அத்தனை உயிரினங்களும் பேசுகின்றன. அதனதன் மொழியில். சில அசைவுகளாலும் , சில நடப்பதாலும், சில ஒலியெழுப்புவதாலும், சில நமக்குத்தெரிந்த அன்னை சொல்லிக்கொடுத்த தமிழ் மொழியாலும் பேசுகின்றன. எதை உள்வாங்கிக் கொள்வது சுலபம் ? அது பார்வையாளனின் கண்ணில், கேட்கும் காதில் ,உணர்ந்து புரிந்து கொள்ளும் மனதில் இருக்கிறது.

நாடகத்தின் ஒரு கட்டத்தில் அனைவரும் ஒருங்கே நிற்க, அதில் இருவர் மட்டும் அந்த மற்றவரின் தோளிலும் தலையிலும் ஏறி நம்மைப் பார்த்துக் குதிக்கின்றனர். கையில் அகப்பட்ட குழந்தையை அபகரித்துச் செல்கின்றனர். பதின்மூன்று பச்சைக்கிளிகள் என ஒரு பதம் வருகிறது. அதை தூத்துக்குடியில் கொல்லப்பட்டவரை நினைவுறுத்தியது.

பின்னரும் ஏகத்துக்கு இறுக்கமாக அமர்ந்து கொண்டிருக்கும்  பார்வையாளர்களை கொஞ்சம் இளக வைக்கும் பாணியில் கோமாளிகள் வந்து சிரிப்பு மூட்ட முயன்றனர். அதிலும் அத்தனை குறியீடுகள். ‘தலைவர் வர்றார் தலைவர் வர்றார் மைக் செட்டு காரரே கொஞ்சம் சவுண்டு கூட்டிவிடும், என்றும் தலைவனின் அருகில் நிற்பவனை கோமாளியாக தொப்பி அணிந்து கொள் என அதிகாரம் செய்வதும், அதானே தலைவனுக்கு எப்போதும் அவனின் கீழிருப்பவர் கோமாளிகளாகத்தானே இருக்க வேணும் ? கொஞ்சம் அறிவுடன் பேச முயன்றால் என்னவாகும் என்பது, புரிந்து கொண்டு செயல்படத் தொடங்கி விட்டால் தலைவன் பாடு திண்டாட்டமாகிவிடுமே ?!

ஒவ்வொரு முறை தலைவர் மேடையிலிருந்து விடை பெற்றுக்கொள்ளும் போது கோமாளியை தனக்கு பூட்ஸ் அணிவிக்கப் பணிக்கிறார். பூட்ஸ் நக்கும் அடிமைகள் தான் தலைமைக்கு என்றும் பிடிக்கும். தலைவர் திரும்பிச்செல்லும் வழி ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலென கூவிக்கொண்டே செல்கிறார். அவ்வப்போது தேவைப்பட்டால் விளம்பரத்துக்கென குப்பை பொறுக்க சேற்றிலும் இறங்குவான் தலைவன் . மேலும் தலைவன் பேசும் போது கோமாளி கொசுவை அடிக்கிறார் சுற்றிச்சுற்றி அது தலைவனை வணங்காத அவரியல்புக்கு ஒத்துவராதவரை அப்புறப்படுத்துவதன்றி வேறேதுமில்லை.. 


காதலரை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதைகளோடு ஊர்வலம் செல்லப்பணிக்கும் ஒரு கூட்டம். அது வேறொன்றும் இல்லை. கலப்புத் திருமணங்களின் இன்றைய நிலையை எடுத்துரைப்பது.

அடுத்து என்ன காட்சி என ஊகிக்கவியலாத நாடகமாக்கம். என்னென்ன பொருட்கள் (Properties) கையில் ஏந்திவருகின்றனர் நடிகர்கள் என்பதும் புதிர் தான். இருப்பினும் எனக்கென்ன ஆச்சரியமென்றால் அதில் ஒருவர் கூட பிழை செய்யவேயில்லை. ஒரு தவறேனும் கண்டுபிடிக்க வாய்ப்பே தரவில்லை. அப்படி ஒரு பயிற்சி. என்ன பேசவேணும் என்ன செயல்கள் செய்யவேணும் எத்தனை முறை மேளத்தில் ஒலி எழுப்ப வேணும் என்று கட்டுக்கோப்பான ராணுவ ஒழுங்குடன் அமைக்கப்பெற்ற நாடகம். இருப்பினும் அது இயந்திரத்தனமாக தோன்றவில்லை. அந்தந்த காட்சிக்கேற்ப உடல்மொழியும், முகமொழியும் நடிப்புமென அசத்திய நடிகர்கள். மேடையை முழுக்க அவர்கள் ஆக்ரமித்துகொண்டனர். முதல் வரிசையில் அமர்ந்திருந்ததால் என்னால் இத்தனை அருகே இருந்து காண முடிந்தது. இதே கருத்தை ‘முருக பூபதி’ அவர்களிடம் நாடகம் முடிந்து கீழிறங்கி எங்களுடன் உரையாடிக் கொண்டிருந்த தருணத்தில் சொன்னேன்.

நாடகம் முடிந்ததும், கேள்விகளுக்கு பதில் சொல்ல நடிகர் கிஷோர் (அத்தனை வெற்றி மாறன் படங்களிலும் முக்கியமான கதா பாத்திரங்களில் தோன்றுவார்) பின்னர் இயக்குநர் முருகபூபதி மற்றும் அவரின் உதவியாளர் மேடையில் அமர்ந்திருந்தனர். எல்லாரின் கேள்விகளையும் ஒரு சுருக்கில் சொல்லிவிடலாம் நாடகம் புரியவில்லை என்பதே. அதற்கு அவரின் வழக்கமான பதில் இது தான். அது உங்களின் முயற்சியில், கற்பனை வளத்தில் இருக்கிறது என்பதே. நடிகர் கிஷோருக்கு பணி மேடையில் கன்னடத்திலிருந்து தமிழுக்கும் பின்னர் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் மொழி பெயர்த்து சொல்வதே. அவரால் இயன்றவரை மொழி பெயர்த்து கூறினார். இவரை ரவீந்த்ர கலாக்‌ஷேத்ராவின் அத்தனை நாடக அரங்கிலும் காணலாம்.

கடைசியாக எல்லாம் முடிந்து கீழிறங்கிய இயக்குநர் முருகபூபதி’யிடம் அபிலாஷ், ஸ்ரீனி மற்றும் நான் உரையாடிக்கொண்டிருந்தோம். அவரிடம் நான் கேட்டது இது தான். ‘இந்த நாடகம்  கடல் உயிரினத்தில் ஆரம்பித்து எல்லாமுமாகி பின்னர் ஆகக்கடைசியில் கடலில் கலக்கும் பல்லுயிர் தானே’ என. அவர் ஆமோதிக்கவும் இல்லை மறுதலிக்கவும் இல்லை. எனினும் அவரின் முகத்தில் ஒரு ஒளிக்கீற்றென ஒரு புன்முறுவல் தோன்றி மறைந்ததை காணத்தவறவில்லை. எனக்கொரு மகிழ்ச்சி நாடகத்தின் மையக்கருத்தை எட்டிவிட்டேனென்று.


Saturday, August 24, 2019

நேகொபா


முதியவராக நடிப்பது என்பது வேறு. முதியவராகவே இருந்து அந்தப்பாத்திரத்தை கையாளுவது என்பது வேறு. உடல் மொழி ரொம்பவும் முக்கியம். எக்காரணத்தைக் கொண்டும், புஜபலமோ இல்லை நடையில் வேகமோ , சராசரி மனிதனைப்போல நடந்து விடக்கூடியதுமான உடல்மொழி எடுத்துக் கொண்ட கதாபாத்திரத்தின் சமனைக் குலைத்து விடும், கால காலமாக அவர் மீது விழுந்து கிடக்கும் இமேஜ் கொன்று போடுகிறது இங்கு. தலையும் தாடியும் இயல்பில் நரைத்துக்கிடப்பது மட்டும் வலுக்கூட்டாது கதா பாத்திரத்துக்கு. அப்படியே பல படங்களில் பார்த்துப்பழகிய நமக்கு அயற்சி தவிர வேறேதும் வருவதில்லை.


தம்பி நீ யாருன்னு எனக்குத் தெரியாது, அந்த இடத்தில எவ்வளவு சீக்கிரம் இல்லாம ஓட்றியோ அவ்வளவு நல்லதுன்னு உருவேத்தல்கள் தான் அவரின் இமேஜ். அதைத் தொடர்ந்து நடக்கும் சண்டைக் காட்சிகள், பின்னர் வழக்கம்போல தலைக்கவசம் அணிந்து கொண்டு போகும் ஒரு பைக் ரேஸ். இதெல்லாம் தான் அஜித். ஆனால் அந்தக் காட்சிகளில் கொஞ்சமும் அவருடைய உடல்மொழி கிஞ்சித்தும் காண்பிக்காத முதியவர் தோற்றம்,, பின்னரும் சவால் விட்டு பீடுநடை எல்லாம் அப்பட்டமான சால்ட் அண்டு பெப்பர் அஜித்துக்குத் தான் ஒத்துவரும். பரத் சுப்ரமணியத்துக்கு அல்ல...ஹ்ம்.. அந்த வகையில் ‘இந்தியனில்’ சங்கர் காட்டிய கமல் அபாரம். தளர்ச்சியுடனான சண்டைக் காட்சிகள், அபார மூளை கொண்ட பதிலடிகள் இதெல்லாம் தான் உடல்மொழியைக் கூட்டும் செயல். நாற்பது பேரை சுத்தவிட்டு அடித்து தூள் கிளப்புவதெல்லாம் தாத்தாவால் முடியாது வினோத்.


கோர்ட்டில் எழுந்து நிற்கும் ஒரு காட்சி போதும் , அத்தனையும் போலி. அபிநயிக்கவே தெரியவில்லை தல’க்கு. உள்வாங்கி நடிக்காது சொன்னதைச் செய்தார் போலருக்கு.#நேகொபா

Thursday, August 15, 2019

"L'herorisme de la chair"




மைலி சைரஸ் அத்தனை சிறப்பாக பாடக்கூடியவர் அல்ல. அத்தனை பெரிய பெயரும் இல்லை இவருக்கு. இருப்பினும் இந்தப்பாடல் அடிக்கடி இப்போதெல்லாம் ஒலிக்க விடப்படுகிற்து அத்தனை இசைச் சானல்களிலும் ரேடியோப்பெட்டிகளிலும் கூட. இவாவோட பெற்றோரும் பாட்டுக்காரா தான். இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் படியான பாடல்களை பாடவில்லை இவர். சமகாலத்திய டெய்லர் ஸ்விஃப்ட், கேட்டி பெர்ரி, எல் கோல்டிங், மராயா கெரே,மற்றும் சிலரைப்போல அத்தனை எதிர்பார்ப்புகள் இல்லாத பாடகி. இவரும் பாடுகிறார்.

’அம்மாவின் மகள்’ என்ற இந்தப்பாடல். காணொலி அத்தனை உரியதல்ல அனைவரும் காண்பதற்கு. இருப்பினும் விரசமின்றிக் காண்பிக்க எத்தனித்ததற்கு நன்றி. ’She is Coming’ என்ற ஆலபத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றிருக்கிறது. Don’t Fuck with My Freedom’ அதிரடியான வரிகள். சாதாரண பாப்’ வகையறாப்பாடல். முன்கூட்டியே தீர்மானிக்க கூடிய வகையிலான தாளம், இப்படித்தான் முடியும் என்று கொஞ்சமும் சுவாரசியமற்ற பாடல் ஊர்ந்துசெல்லும் வகை என்றிருந்த போதும் கேட்க வைத்துவிடும் பாடல் இது. சீஸனல், கொஞ்ச நாளில் பட்டுப்போகும் வகை.  இதை நம்பித்தான் பெரும் பாடகர்களின் பிழைப்பு ஓடுது. யாருக்கும் ஆற அமர்ந்து இசைக்க விருப்பமில்லை. 

இது நாள் வரை சிந்த்தில் இல்லாத தாளக்கட்டுடன் வரக்கூடிய பாடல்கள் என்பதே இல்லை என்றாகி விட்டது.  யாருக்கும் யோசிக்க நேரமில்லை. புதிதாய் உருவாக்க விழைவதில்லை. இருப்பதை வைத்து சமாளிக்க எத்தனித்தல்.  மைக்கேல் ஜாக்ஸனுடன் போனது புதிய வகை தாளம். “All I Want to is say that, they don’t really care about us”  என்ற பாடலின் தாளம் இது வரை கேட்டிராத வகை. எதோ ஆப்ரிக்க/ஹிஸ்பானிய வகை தாளம் அது. அதைக்கொணர்ந்து கொட்டினார் மைக்கேல்.  ‘இள நெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்’ ராசைய்யா இசைத்த பாடல். பாடல் முழுக்க தாளம் கேட்டுப்பாருங்கள் எங்கும் கேட்டிராத வகை. தண்ணீருக்குள் தாம்பாளத்தை வைத்து அதில் பெரும் கழி கொண்டு அடித்தது போல இருக்கும். ‘நிற்பதுவே நடப்பதுவே’ பாரதி பாடல். ஆரம்ப இசையில் ஒலிக்கும் அந்த தாளம். க்ஸைலஃபோனில் இசைத்தது போல.(அவர் எதில் இசைத்தார் எனப்புரிபடவில்லை.) கடந்து வருவது சிரமமான தாளக்கட்டு. ரஹ்மானின் ‘அடி மஞ்சக்கெழங்கே’ கேட்டுப்பாருங்கள். தடாலடியான அடியாக இருக்கும். எப்போதாவது ஒலிக்கும் அப்படிப்பட்ட தாளம் , இசை.!

பெரும்பாலான வெள்ளைஇன ஆண்கள்/பெண்கள் இசைக்கும் இசை இப்போதெல்லாம் மூன்றடி சிந்தஸைசருக்கும் அடக்கம் கொண்டு விட்டது. அதை மீறி யாருக்கும் யோசிக்க இயலவில்லை, நேரமுமில்லை. கருப்பின இளைஞர்/ஞிகளின் இசை ராப்/ஹிப் ஹாப்பைத்தாண்டி ஒலிப்பதில்லை. எளிது எளிது ராப் இசைப்பது. வரிகளை அடுக்கிக் கொண்டே போ, அவை தாமாகவே ஒரு இலக்கை எட்டும் முடித்து விடு. அவ்வளவுதான் இலக்கணமே. ‘பேட்ட ராப்’ கேட்டோம்லயா அதான்.  

மொத்தமே மூன்று வகைப்பாடல்கள் தான் இருக்கு இப்போதைய ஆங்கிலப் பாடல்களில்.  பெண்குட்டிகள் பாப்’பை விட்டு வெளி வருவதில்லை. ஆண்கள் ராப் என்ற பெயரில் சீரழிவது. இல்லையெனில் பாப்பில் தொடங்கி சிறிது இடைவெளியில் ராப்/ஹிப்ஹாப்’பை கொண்டு வந்து உருவேற்றுவது என்ற டெம்ப்ளேட்டுக்குள் அடங்கிக்கிடக்கிறது ஆங்கில ஆல்பங்கள். இத்தனைக்கும் இவையனைத்தும் தனிப்பாடற்திரட்டுகள் தான், எதோ திரைப் படத்துக்கோ இல்லையெனில் யார் சொல்லியே உருவாக்குவது  அல்ல. 

இசைக்கருவிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கின பாடல்களெல்லாம் ராப்’பேறிபோய் வீணாகிக்கிடக்கிறது. எல்டன் ஜான், எரிக் க்ளாப்டன், ஈகிள்ஸ் போன்ற வகைப்பாடல்கள் எல்லாம் மலையேறிவிட்டது.  உருப்படியான ராக்’ இசையும் இப்போது இல்லை. அதிலும் ஏகப்பட்ட திருட்டுகள், உருவல்கள், பின்னர் வழக்குகள் . அதிகமான பாடற்திருட்டுக்கும் இசைத்திருட்டுக்கும் புகழ் போனவர் அம்மணி கேட்டி பெர்ரி. சளைக்காது போராடுவார் இல்லையெனில் ஆஃப் த கோர்ட் செட்டில்மெண்ட் கொண்டு முடிப்பார்.தன்னிசை தனியிசை என உருவாக்குவோர் எவருமில்லை. கேட்போருக்கும் அது பற்றிய ஞானம் இல்லை.

திரும்ப மைலி சைரஸுக்கே வரலாம். அண்மையில் இவருக்கு ஆனது மணமுறிவு. எட்டு மாதம் தாக்குப்பிடிக்கவியலாத மணம். ஒருவேளை இந்தப்பாடல் கூட அதன்பிறகு உருவானதாக இருக்கலாம்.ஹிஹி.. Don’t Fuck with My Freedom’ ஒருவகையில் இந்தப்பாடல் லெஸ்பியனிஸத்தை ஆதரித்து எடுக்கப்பட்டது போல தெரியும். காணொலியின் பல பகுதிகள் அதை உறுதிப்படுத்தும் முட்கிரீடம் எங்கு அணிந்திருக்கிறார் என்பதைப் பார்த்தாலே தெரிய வரும். நான் என் அம்மாவின் மகள், அதனால நீ தேவையேயில்லை. So, back up, back up, back up, back up, boy, ooh.. இதையே பத்து தடவைக்கும் மேலேயே பாட்றார். I'm nasty, I'm evil Must be something in the water or that I'm my mother's daughter சத்தியமா எனக்கு இந்த வரிகள் புரியவேயில்லை. ஹிஹி.!

இப்போது எந்தப்பாடலைக் கேட்க முற்பட்டாலும் , இது எதிலிருந்து உருவப்பட்டது என்ற சிந்தனை தான் ஓடுகிறது பாடலைக்கேட்க எத்தனிப்பதேயில்லை. ஐயோ பாவம் ரசிகர்கள். இந்தப்பாடல் ஒலிக்கும் தாளத்தில் என்னால் பத்தாயிரம் ஆங்கிலப் பாடல்களைப் பட்டியலிட முடியும் :)
 
"Every Woman Is A Riot", "Sin is in your eyes", "L'herorisme de la chair" which means "the heroism of the flesh."  என்பன போன்ற வாசகங்கள் பாடல் ஒலிக்கும் திரையில் பளிச்சிடுகிறது. இவையனைத்துமே ஃபெமினிஸ வாசகங்கள் என கனடாவிலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறது. என்னுடைய வாசகங்களை அவர் பாட்டில் பயன்படுத்திக்கொண்டார் என.