Tuesday, June 25, 2019

காற்புள்ளி அரைப்புள்ளி

பாவெ’யின் வாராணசி வாசித்துக் கொண்டிருந்தேன். ஓசூர் செல்லும் பயணவழியில்.அத்தனை நெருக்கமான சொற்கள், இடைவிடாது பொழியும் மழை போல. பத்தி பிரிக்கவேயில்லை. அத்தியாயங்கள் இல்லை. அநியாயம். ஒன்றவே இயலாத படியான கதை சொல்லும் பாங்கு. காற்புள்ளி அரைப்புள்ளி ஏன் முற்றுப்புள்ளியைக்கூட தேட வேண்டியிருக்கிறது. இப்படி ஏன் எழுத வேணும்?

யாரையேனும் பார்த்து போலச்செய்ய எழுதும் முறையா இல்லை பாணியே அது தானா? இது போன்ற செறிவான, கருத்துப் பொதிகளை வாசித்ததில்லை. ஓரிடத்தில் கூட கதா பாத்திரங்கள் தமக்குள் உரையாடலே நிகழ்த்தவில்லை. ஆசிரியர் அதற்கான இடம் கொடுக்கவேயில்லை. நான் சொல்வேன் நீ கேள் (வாசி ) என்ற பாங்கு. இதை எப்படி சகித்துக் கொள்வது ? இல்லை எனக்குத்தான் இது புதிதாக இருக்கிறதா ?

கவிதைப்புத்தகங்களை வாசித்ததுண்டு. அவற்றில் முட்ட முழுக்க எதுவும் விளங்காது. இல்லை நினைவில் விழுந்து கிடக்கும் சில கவிதைகள் காலப்போக்கில் புரிந்து விட வாய்ப்புண்டு. இங்கு அதுவும் நிகழுமா என ஐயம். இருப்பினும் 67 பக்கம் வரை வாசித்து விட்டேன். இனியும் ஒரு நூறு பக்கம் தேறும். முனைப்புடன் அமர்ந்து வாசிக்க ஏதுவாயில்லை. புதினங்கள் ஏதும் வாசிக்காதவன் இல்லை நான். எஸ்ரா, ஜெமோ, சாரு, புதுமைப் பித்தன், இன்னபிற சிறுகதைகளை அழியாச் சுடர்களில் வாசித்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஒன்றிப்போய்.

அருந்ததிராயின் பரிசு பெற்ற புதினத்தை அதன் ஆங்கில மூலத்தில் வாசித்த அனுபவம் இருக்கிறது. அவரும் இருபது பக்கங்களுக்கு தான் சொல்லியது போக பிறகே கதை மாந்தர்களைப்பேச விடுவார். இங்கோ அதுவும் இல்லை. #வாராணசி

Wednesday, June 19, 2019

'மொட்ட மாடி மொட்ட மாடி'

'மொட்ட மாடி மொட்ட மாடி' அஞ்சலியில். கேட்க ஆரம்பித்து வெகு நேரம் கழித்தே நம்மை ஒரு சந்தக்கட்டுக்குள் கொண்டு வர நினைக்கும். பாடல் ஆரம்பிக்கும்போது எப்படி இதற்கு தாளம் அமையும் என்ற எதிர்பார்ப்பிலேயே நேரம் கழியும். அப்புறம் 'மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு' தளபதியில். ராசைய்யாவின் தாளங்கள் மறக்கவியலாதவை. இந்தத்தாளம் வெறுமனே 'தப்பு' கொண்டு இசைத்தது போல, நிறைய என்ஹேன்ஸ்மென்ட்ஸோ வேறு எதுவுமோ இல்லாது ,முழுக்கப்பதிந்து போன ஒன்று,என்னால மறக்கவே இயலாத தாளம் இது.
 

 இதே தாளம் ரொம்ப நாளைக்குப்பிறகு ஜெயா மேக்ஸ்ஸில் 'மாமன் ஒரு நா மல்லியப்பு கொடுத்தான்'னு சிவக்குமார் பாடிக் கொண்டிருந்த போது பிடிபட்டது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப்பிறகு அந்தத்தாளம். மறுபடி வந்திருக்கிறது...ஆஹா.. இன்னும் கூட சொல்லணும்.. 'சத்யா'வின் 'வளையோசை கலகலவென' அது தாளத்துக்காக எழுதின பாடலா இல்லை ஓடி ஓடிப்போகும் தென்றல் வரிகளுக்காக இசைத்த தாளமா என மயங்கும் நிலை கேட்கும் யாவருக்கும் வரும்.'ஒத்த ரூபாயும் தாரேன்' நாட்டுப்புறப்பாட்டு படத்தில ..அப்புறம் 'வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்' கிழக்கு வாசல்.. 'ஆலோலங்கிளி தோப்பிலே' கேளுங்க சிறைச்சாலை படத்தில..தாளத்திற்கெனவே இந்தப்பாடல் அதுவும் டூயட்டு..


ரஹ்மானின் இசையில் 'அடியே' கடல் பாடலைத்தாளத்திற்கென சொல்லலாம். இதுவரையில் எப்போதும் யாருடைய இசையிலும் வராத தாளக்கட்டு. பாடலே தாளத்தின் அடிப்படையில் தான் இருக்கும். பின்னில் ட்ரம்ஸோ இல்லை வேறு பேங்கோஸோ தாளமிசைக்க வேண்டியிராத பாடல். இன்னொரு பாடல் கூட அவரின் முதல் படத்தில் வந்த 'தேன் தேன் தித்திக்கும் தேன்' என்ற 'திருடா திருடா' படத்தில் வந்த பாடல். முழுக்க ஜதி சொல்லி இசைக்கும் பரதநாட்டியப் பாடல்கள் போல , எடுத்துக்காட்டுக்கு 'தில்லானா மோகனாம்பாள்' ல வரும் 'மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன'வில் இடையில் அந்த ராகத்துக்கேற்ற கொன்னக் கோலை வாசித்து இசைத்தது போல் , இங்கு ட்ரம்ஸ் வைத்துக்கொண்டு நல்ல ஒரு முயற்சி.
நான் ரசித்த தாளங்கள் இவரிடம் இந்தப் பாடல்கள்.. 


அப்புறம் இன்னொண்ணு கூட சொல்லலாம். கொஞ்சம் வித்தியாசமாக டெக்னொ' ஸ்டைல்ல இசைத்த 'சாட்டர்டே நைட் பார்ட்டிக்குப் போகலாம் வரீயா' என்ற அந்தப்பாடல். தாளமும் பாடலின் வரிகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து பிரிக்கவேயியலாதது போல ஒரு சுக அனுபவம். 'ஒட்டகத்தக்கட்டிக்கோ' கூட சொல்லலாம். மத்தளம் மட்டுமே களை கட்டும். #தாளங்கள்

Friday, June 14, 2019

பா.வெ

கடந்த வாரம் ரம்ஜானன்று புதின ஆசிரியர் பா.வெங்கடேசனைச் சந்திக்க வாய்த்தது. ஓசூரில் அவரின் இல்லத்தில் ஸ்ரீனியும் உடன் இருந்தார். வாரணசி புதினத்தின் பாராட்டு விழாவிற்குப்பிறகு அவரை அது குறித்தும் பின்னர் அவரின் பிற படைப்புகள் குறித்தும் விவாதிக்க வாய்ப்பு கிடைத்தது. சிறு மழை தூறல் அன்று. சரளமாக ஆங்கிலம் கலந்து தான் பேசுகிறார். பிற எழுத்தாளர்களைப் போலல்லாது விடாப்பிடியான தனித்தமிழில் இல்லாது. எஸ் ரா’வைச்சந்தித்த பிறகு இன்னுமொரு புதின ஆசிரியரை இப்போது தான் சந்திக்கிறேன் என்றேன்.

வர் வேலை விட்டு வருமுன்னதாகவே அவரின் வீட்டிற்கு சென்று விட்டோம். வீட்டில் அவர் இன்னும் வரவில்லை என்றவுடன் திரும்பி நடந்து வந்து கொண்டிருக்கும்போது அவரே வண்டியில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்துவிட்டார். இன்னிக்கு விடுமுறை இல்லையா என்றேன், எங்களுக்கு ரம்ஜான், கிறிஸ்மஸ்களுக்குல்லாம் விடுமுறை கிடையாது என்றார். எனக் கென்னவோ அது ஒரு செய்தி போலத் தோணிற்று.

பின்னர் அவரின் மேல் மாடியில் எழுதும் அறைக்கு கூட்டி சென்றார். எத்தனையோ நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அலமாரி முழுதும் நிரம்பி தரையிலும் வழிகிறது நூல்கள். வாரணசி வாசிக்க வாய்ப்பிருக்கிறதா என்றேன். சற்றும் யோசிக்காது அலமாரியை திறந்து எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார். ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னமும் வாரணசியின் நெகிழி உறையைப் பிரிக்கவே இல்லை நான். விமர்சனம் வந்துவிட்டதா என வினவினேன். ஹ்ம்.. காலச்சுவடில் ஒருவர் எழுதியிருக்கிறார் என்றார். பாராட்டு விழாவிற்கு வந்திருந்தீர்களா என கவனமாகக் கேட்டார். ஆமாமென்றேன்.

நாவலின் இலக்கணம் குறித்து கேட்டேன். அது நிறைய நாவல்களை வாசிக்கும் போது மட்டுமே புலப்படும் என்றார். சிறுகதைக்கு இருப்பதைப் போல எதேனும் இலக்கணம் இருக்கிறதா என்ற உள்ளூர உழன்று கொண்டிருக்கும் எனது வினாவிற்கான விடையாக அது அமையவில்லை.

தாண்டவராயன் கதை’ புதினத்தை வாசித்த ராஜன் குறை என் இல்லத்திற்கே வந்துவிட்டார் என்னைச் சந்திக்க என குழந்தையின் மகிழ்வில் கூறிக் கொண்டிருந்தார். இதுவரை உங்களின் எந்த புதினத்தையும் நான் வாசித்ததில்லை என்றேன்.அவர் ஒன்றும் மிண்டவில்லை என் பதிலுக்கு.

அதோடு கூடுதலாக ஒரு சிறு கதைத் தொகுப்பையும் கொடுத்தார். அடர்த்தியான சிறுகதைகள்.கோவில் யானை பற்றிய சிறுகதை மனதை விட்டகலாது அந்த ஆனை போலவே அசையாது நின்று கொண்டு இருக்கிறது என் மனதில். இன்னமும் வாசிக்க வேணும். #பாவெ

Sunday, June 9, 2019

ஒளிப்பதிவாளன்


பாம்பேயில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, தங்கியிருந்த வீட்டின் அருகில் ஒரு மராட்டி தேநீர்க்கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். எப்போதும் அங்கு ஒரு தேநீர் அருந்திவிட்டே லோக்கல் ட்ரெயினைப் பிடிக்கச்செல்வது வழக்கம். ஒரு நாள் எனது யாஷிகா கேமராவை (பழைய ஃபிலிம் ரோல் போட்டு படம் எடுக்கும்) எடுத்துக்கொண்டு சும்மா படம் எடுக்கவென்று அலைவது வழக்கம். அதைப் பார்த்துவிட்டு என்னிடம் தயங்கித்தயங்கி தம்பி, என்னை ஒரு படம் எடுங்களேன், டீ போடுவது போல, ஃபோட்டோக்ராஃபரைக் கூப்பிட்டால் நிறைய காசு கேட்கிறான் என்றார். சரி நில்லுங்க என்றபோது , கரண்டியை நன்கு பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்தார். 

சாலையில் போய்க் கொண்டிருந்தவர்கள் ஃப்ரேமிற்குள்ளும் வந்து போய்க்கொண்டிருக்க, கொஞ்சம் பொறுங்க என்றேன்..இருப்பினும் சமாளித்துக்கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டேயிருந்தார், சரியான தருணத்தில் அவரும் கரண்டியும்,மட்டும் ஃப்ரேமிற்குள் வந்துவிட ஒரு க்ளிக். அதன் பிறகு ரோல் நிறைந்தவுடன் , டெவெலெப் செய்து பிரிண்ட் எடுத்து அவரிடம் ஒரு நாள் கொடுத்தேன். வாங்கிப்பார்த்தவர் முகத்தில் அன்றைய சாயா முழுதும் ஒரே மணிநேரத்தில் விற்றுத்தீர்ந்தது போல சந்தோஷம். அன்று எனக்கு ஒரு காப்பி கிடைத்தது கூடுதல் சீனியுடன் இலவசமாக...! பிறகு சில நாட்கள் கழித்து அவரின் பக்க சுவரில் ஃப்ரேம் செய்து மாட்டி வைத்தார். சாயா குடிக்க வருபவர்களிடம் பெருமையாக அதைக் காண்பிக்கவும் செய்வார்.

நானும் தொடர்ந்து படங்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறேன் நேஷனல் ஜியோக்ரஃபி புகைப்பட போட்டிக்கு , ஒரு போதும் எனக்கு அத்தனை மகிழ்ச்சி கிடைத்ததில்லை, அந்த சாயாக்கடை நண்பரின் முகத்தில் இருந்ததை விட.! எனது பழைய ரோல்களை தேடிப் பார்த்ததில் ஒருபோதும் அந்த நெகட்டிவ் கிடைக்கவில்லை. அவரின் சிரிப்பும், அந்த காப்பியின் சுவையும் இன்றும் அழியாப் புகைப்படம் போல என்றும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது.

Thursday, June 6, 2019

திபேத் எக்ஸைல்


கூர்க்கிலிருந்து திரும்பி பெங்களூர் வரும் வழியில் திபேத்’ எக்ஸைல். கோல்டன் சிட்டி. சீனா துரத்தியடித்த திபேத் புத்த பிக்குகள் இங்கு வந்து தமது வம்சத்தை வளர்க்கின்றனர். இழைத்து இழைத்து உண்டாக்கிய புத்த விஹார். பள்ளி, இருப்பிடம் மடம் எல்லாம் ஒரே இடத்தில் இந்திய அரசின் முழு ஓத்துழைப்போடு. தமிழன் வந்தால் மட்டும் அடி.அகதி முகாம். எல்லாம் தலேலேழுத்து...


சிறு சிறு பையன்களெல்லாம் வேதம் கத்துக்கிறார். அவர்களின் பிரத்யேக உடுப்போடு. உணவு கொண்டு சென்ற ஒரு ஸ்மால் பிக்குவை புகைப்படமெடுக்க முனைந்த போது ‘திபேத்’ மொழியில் ஆஊ என்றார். எனக்கென்னவோ ஜாக்கிஷான் படத்தில் வரும் குங்ஃபூ போல ஒலித்தது. மொழி எழுத்தெல்லாம் கொஞ்சம் நேபாளத்தோடு ஒட்டிப்போகிறது.


புகைப்படம் எடுக்க அனுமதி இருக்கிறது. இருப்பினும் தடை செய்யப்பட்ட பகுதிகளும் உண்டு.உள்ளே போனால் எதோ சீன நகரத்தினுள் வந்து விட்டது போல தோன்றும். #திபேத்எக்ஸைல்

Tuesday, June 4, 2019

மண்டலாபட்டி - கூர்க்

கடந்த இரண்டு நாட்கள் கூர்க் பயணம், மண்டலாபட்டி இது வரை பார்த்திராத மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலம்.கரடுமுரடான பாதை. இருப்பினும் அத்தனையும் பெய்யும் மழையில் நொடியில் அடித்துச்செல்லப்படும் சாலை.. பாதையே இல்லை என்று தான் சொல்லவேணும். ஜீப் இல்லையென்றால் ஏதேனும் கனரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி.மற்ற இலகு ரக வாகனங்கள் சென்றால் அத்தனை பாகங்களையும் கையில் பொறுக்கிக்கொண்டு தான் வரவேணும். நிலவில் உள்ள பாதை கூட அத்தனை மோசமில்லை போல. உடம்பில் ஒவ்வொரு எலும்பும் எண்ணப்பட்டு விட்டது.. ஹிஹி..

 மாதமொருமுறை தமது ஜீப்பை பழுது பார்ப்பேன் என்கிறார் ஓட்டுநர். கொண்டு போயிருந்த இண்டிகாவை வழியிலேயே நிறுத்திவிட்டு இவரின் வாடகை ஜீப்பில் சென்றோம். 280டிகிரி வளைவுகள்.எதிர்பாரா ஏற்றம். திறந்த சாளர ஜீப்புகளும் இருக்கின்றன. போய்விட்டு வருவது வாழ்க்கைக்கான சவால். எம்மிடம் வாங்கிக் கொள்ளும் ஆயிரத்து ஐநூறில் ஜீப் பராமரிப்புக்கே செலவாகி விடும் போல. அதிலும் திரும்பி வருகையில் சொல்லி வைத்தாற்போல டயர் கிழிந்துவிட்டது. எங்களை பாதி வழியில் இறக்கி விட்டு டயரை மாற்றிக்கொண்டிருந்தார் அந்த அத்துவான மலையில்.கொஞ்சம் பயந்தான். என்னவாகுமோ என்று.


முழுக்க மலை புற்கள். கற்பாறைகள் எங்கும்.ஒளி உள்ளே புக பயந்து ஒதுங்கும் காடு.கீழே விழுந்தால் வன அதிகாரிகள் நம் குரல் கேட்க எவ்வித வாய்ப்பும் இல்லை. ஜீப் செல்கிறது 25 கிமீ பாறைகளில். அதன் பின் கிட்டத்தட்ட ஒன்றரை கிமீ நடந்து சென்று மேலே போகலாம். அத்தனை கடுமையான பாதைக்குப் பிறகு. ஜீப் செல்ல இயலாது. கால் நடை தான். ஹ்ம்..#மண்டலாபட்டி

 

Saturday, June 1, 2019

தமிழ்’நாடு

இந்தி பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்டால் தான் ஆயிற்று என்பதில்லை. வெளி/வட மாநிலங்களுக்கு சென்று அங்கு இரண்டு மூன்று மாதங்கள் தங்கியிருந்தாலே போதும். எழுதப்படிக்கத்தெரிந்த எலைட் சமூகத்தை விட காய்கறி விற்போர்/கூலி வேலை பார்க்க முனைவோர் எளிதில் எந்த மொழியையும் கற்று விடுவது இயல்பு.

டெல்லியில் எத்தனையோ தமிழர்களைச்சந்தித்து இருக்கிறேன் அத்தனை பேரும் 80களில் தமிழகத்தில் பிறந்தவர் தான் பெரும்பாலும். அத்தனை அழகாக இந்தி பேசுவர். அறுபதாண்டுகளாக இந்தி பேசாததால் தமிழகம் ஒன்றும் குறைந்து விடவில்லை. எதையும் இழக்கவும் இல்லை. தொழில்/ வர்த்தகத்தில் முதல் மூன்று மாநிலங்களில் எப்போதும் ஒன்றாகவே திகழ்கிறது. மஹாரஷ்ட்ரா/ கர்நாடகாவுடன் தொழில் முனைப்பில் எப்போதும் போட்டியில் இருக்கும் தமிழகம்.

வடமாநில நண்பர்களிடம் இருக்கும் மனத்தயக்கம் தடை , என்ன இந்தி பேசவே மாட்டாங்யளே என்பது தான். பெங்களூருக்கு வந்துவிட எந்த தயக்கமும் காட்டாத வட மாநிலத்தவருக்கு அருகிலிருக்கும் சென்னைக்கு வரத்தயக்கம் மொழி மட்டுமே.

திணிப்பெல்லாம் ஒரு நாடு ஒரு மொழி ஒரு மதம் என்ற மூடர்கள் செய்து காட்டத்துடிக்கும் செயல். பன்முகத்தன்மைக்கு ஊறு கேடு. செயல்தான் இனி செயலாற்ற வேணும். #banhindi #TNAgainstHindiImposition