****
மலம் புசிக்க
வைக்கப்பட்டவனின் ஒவ்வொரு கவளத்திலும் அவனுக்குப் புகட்டிவிடுபவன் பெயர் இருக்கிறது.
****
.
|
Monday, October 29, 2012
பருக்கை
Wednesday, October 24, 2012
மழையும் தேநீரும்
பார்த்துக்கொண்டே
நடந்துகொண்டிருந்த எனக்கு
இருட்டிக்கொண்டு வந்த வானம்
பொழியக்காத்திருந்தது
இன்னும் கொஞ்சம் தான் தூரம்
எட்டி நடந்தால் சென்றடைந்து விடலாம்
அருகிலுள்ள தேநீர்க்கடையை
ஏற்கனவே கடைக்கு முன் சிலர் நின்றிருந்து
வழியை அடைத்துக்கொண்டிருந்தனர்
நாயரின் குரல் மட்டும் உள்ளிருந்து கேட்டது
ஆணை கொடுத்து காத்திருந்தபோது
முதலில் விழுந்த துளி
அருகில் புகைத்துக்கொண்டிருப்பவனின்
பீடி நுனியை நனைத்தது.
சட்டென உதறியவனின் கங்கு
என் கையின் பின்புறத்தில் விழுந்து
சிறு சூட்டை உணரச்செய்தது
தொடர்ந்தும் பெய்த மழை
மேற்கூரைத் தகரங்களில் ஒலியெழுப்பிக்கொண்டு
தாரை தாரையாக விழுந்து கொண்டிருந்தது
தெறித்த மழைநீருடன் கரையை ஒட்டியிருந்த
சேறும் சகதியும் வேட்டியைத் தூக்கிப்பிடித்த
என் கால்களில் அப்பிக்கொண்டது
நனைந்து கொண்டிருந்த குருவிகள்
தம் அலகால் தெப்பலாக நனைந்த
இறகுகளைக் கோதி விட்டுக்கொண்டிருந்தன
பொழிந்து முடித்த வானம்
வெளிர் நீலமாக சுத்தமாகக்கிடந்தது.
ஆங்காங்கே சிறு குட்டைகளில்
தேங்கிக்கிடந்த மழை நீரில்
தலை கவிழ்த்து
என் முகம் பார்த்துச்சென்று
கொண்டிருக்கிறேன்.
இன்னொரு மழைக்கும்
இன்னொரு தேநீருக்கும்
எத்தனை காலம் காத்திருக்கவேண்டிவரும்
என மனதிற்குள் எண்ணியபடி.
குறை ஒன்றும் இல்லை
தேநீரில்
சர்க்கரை அளவு குறைவு
போலத்தென்பட்டது.
சற்று ஜன்னலின் வெளியே
கோப்பையை நீட்டினேன்
விழுந்தன சில துளிகள்
குறை ஒன்றும் இல்லை
இப்போது ..
.
Thursday, October 18, 2012
பாடுபொருள்
மழையை, அதனோடு கூடிய தேநீரை
காற்றை, பூக்களை
மயங்கும் புறத்தோற்றத்தின் அழகுடன் கூடிய
எந்தப்பெண்ணையும் அனுமதிக்கவில்லை
என் கவிதை தனக்குள் வந்து உலவ
வறுமையை, செழுமையை,
கடவுளை சாத்தானை,கண்ணாடிகளை, அதன் பிம்பங்களை,நிழல்களையும் அவற்றின் நிஜங்களை
மயக்கும் மதுவையும்
இன்னபிற லாஹிரி வஸ்த்துக்களையும்
அனுமதிக்கவில்லை
என் கவிதை தனக்குள் வந்து உலவ
குழந்தைகளை, முதியோரை
சித்ரவதைகளை, காதலை,
நிராகரிப்பை,அறிவுரைகளை, பிதற்றல்களையும்
அனுமதிக்கவில்லை
என் கவிதை தனக்குள் வந்து உலவ
போரை, அமைதியை,அசடனை, அறிவாளனை
பறவையை, ஏன் அதன் ஒற்றைச்சிறகைக்கூட
அனுமதிக்கவில்லை
என் கவிதை தனக்குள் வந்து உலவ
மாயையை, காட்சிப்பொருளை
சொர்க்கத்தை, நரகத்தை
பொதுவுடைமையை, முதலாளித்துவத்தை
சோஸலிஸத்தை அனுமதிக்கவில்லை
என் கவிதை தனக்குள் வந்து உலவ
ரசிகனை, உருவாக்குபவனை
வழிப்போக்கனை, தேசாந்திரியை
பக்கிரியை அனுமதிக்கவில்லை
கடைசியாக ஒரு உண்மையைக்கூறுகிறேன்
உங்களிடம் மட்டும்,
இந்தக்கவிதை தனக்குள் நுழைந்து உலவ
என்னையே அனுமதிக்கவில்லை.
.
Sunday, October 14, 2012
ஒன்று சேர்ந்த தென்றல்
அவற்றின் இடைவெளியூடே
பயணித்து வருகிறது
சிலசமயம் வரவா வேண்டாமா
என்று கேட்டுக்கொண்டு
அங்கேயே நிற்கிறது.
மர இலைகளை சிறிது அசைத்துப்பார்த்துவிட்டு
தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையெனக்
கோபித்துக்கொண்டு சட்டென நின்றுவிடுகிறது,
வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளை
மெலிதே மடங்கச்செய்து பின்,
சற்றே வலுவாகி அதைத்தன்போக்கில்
இழுத்துச்செல்கிறது
இலைகளை அசைத்துக்கொண்டிருப்பதைப்
பார்த்துக்கொண்டிருக்கும் என்னை நோக்கி
வர எத்தனிக்கிறது
சீராகப்பெய்து கொண்டிருக்கும் மழைச்சாரல்களின்
உள்ளே புகுந்து அவற்றின் சீர் வரிசையைத்
தள்ளாடச்செய்கிறது ,
கீழே விழுந்துவிட்ட இளம் இலையைத்
தம்மால் இயன்றவரை மேலெழும்பச்செய்கிறது,
வியர்த்திருக்கும் வேளையில்
அந்தப் பனித்துளிகளைக் கவர்ந்து செல்கிறது,
அருகிலுள்ள பூந்தோட்டத்தின் வாசனையைத்
தம் கரங்களால் அள்ளிவந்து என்னிடம் சேர்க்கிறது,
இவையனைத்துமாக ஒன்று சேர்ந்து
உன்னை நினைத்ததும்
என் மனதுக்குள் பரவி நிற்கிறது.
.
Subscribe to:
Posts (Atom)