Saturday, December 10, 2022

சில்லா சில்லா,,,

 

 


சில்லா சில்லா,,, செமப் பாட்டூ.. அஜித்துக்கு இப்டி குத்தாட்டம், இல்ல ராவடி பாட்டெல்லாம் செட் ஆகறதேயில்லை. ஏன்னா அவர் சரியா ஆடமாட்டார்.! தம்பி போட்ட ’ஆலுமா டோலுமா’ அப்புறம் ஹாரிஸ் இசைத்த ‘அதாரு இதாரு’ அப்பால அப்டியே பின்னாடி போய் நம்ம பரத்வாஜ் இசைத்த ’தீபாவளி தல தீபாவளி’ (இது எஸ்பிபி பாடினது..!) , அப்புறம் யுவனின் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ எல்லாமே பாடல் நல்லாருந்ததால தான் கேட்டோம். கொஞ்சம் ஆடவும் வேணும்லா. இங்கயும் பாட்டு கெளப்பிருக்கு, ஆனா என்ன ஐயா அஜீத்து ஆடணும் அதான் 🙂 அவ்வளவு பெரிய உடம்பை வெச்சுக்கிட்டு தெலுகுலோ சிரஞ்சீவி ஆடுவார். அற்புதமா இருக்கும் !

ஜிப்ரானுக்கு இது முதல் குத்துசாங்குன்னு நெனக்கிறேன். இறங்கி அடிச்சிருக்கார். சம்மதிக்கணும்! தம்பி தான் செட்டாவான்னு அனிரூத்தையே பாட வெச்சது ரொம்ப சரி. (கொஞ்சம் ஜலபுலஜங்கு ஸ்டைல்ல பாட்டு. ) வரிகள் இப்ப வர்ற ‘ப்பொயட்டு’ கள விட நல்லாவே இருக்கு. வைசாகா’ஆ...!
 
புடிச்சத செய்யுறது
என்னைக்குமே மாஸ்!
தினம் தினம் முக்கியம் பா
நம்ம இன்னர் PEACE!
 
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
 
இதுல ’கில்லா’ங்கறது இந்திச்சொல் (உருதும் கூட). கோட்டை எனப் பொருள்படும். லால் கிலா (ரெட் ஃபோர்ட்) .. மாஸ் பீஸ் சில்லா கில்லா ரைமிங்!. எலெக்ட்ரிக் கிட்டார் பேஸ்டு பாடல். இடையிசையிலும், முகப்பிலும் பின்னி எடுக்கிறது கிட்டார். சந்தோஷ் ரஜினிக்காக ஒரு ’நெருப்புடா’ போட்டார், இதே எலக்ட்ரிக் கிட்டார பேஸா வெச்சு. ஒரு மாஸ் குடுக்கும் அதான். தெறிக்கும் சும்மா. ஜிப்ரானின் 50 போலருக்கு... வாழ்த்துகள்.!

 

Saturday, November 26, 2022

The Courtesan: An Enigma

நேற்றிரவு ஒரு இசை/பாடல்/நடன நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். கொஞ்சம் அல்ல நிறையவே பழைய நடன அசைவுகள் கொண்ட நிகழ்ச்சி. முழுக்க முழுக்க வடநாட்டின் ஹிந்துஸ்தானியும், கதக் மற்றும் கஸல் பாடல்கள் ஆடல்கள் என அப்படியே ரெட்ரோ எஃபெக்ட்டுக்கு ஆளைத்தூக்கிக் கொண்டு போய் விட்டது. என்ன ஆச்சரியம், ஏழு மணி நிகழ்ச்சி The Courtesan: Enigma-க்கு அரங்கு நிறைய ஏழரை ஆகி விட்டது.

இது போன்ற நடனங்கள், அக்காலத்திய முகலாய அரசர்களால் வெகுவாகப் புகழப்பட்டு அதற்கென அரங்கங்கள் அமைத்து என வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டிருக்கிறது. இருப்பினும் இது போன்ற அரங்குகளில் ஆடுவோரை ‘இழிகுலத்தார்’ பரத்தைகள் என்றே அழைத்திருக்கின்றனர். (நம்ம ஊரில் சதிராட்டம் போல.) . அதிகம் இதுபோன்ற நடனங்கள் இப்போது வழக்கில் இல்லை எனலாம். பெரும்பாலும் கதக் நடனத்தின் கூறுகளே அதிகம் தென்பட்டது எனக்கு.(அத்தனை  பரிச்சயமில்லை எனினும்) நிகழ்வை ஒருங்கிணைத்து, நடனங்கள் அமைத்து, பாடல்களை தெரிவு செய்து என பெரும் பணி ஆற்றியிருக்கிறார் மஞ்சரி சதுர்வேதி என்ற நடனக்கலைஞர். அவரே அத்தனை நடனங்களையும் மேடையில் ஆடினார்.

அரங்கத்தைப்பற்றி சொல்லவே வேண்டாம். படங்கள் திரையிடுவ தாகட்டும். நாடகங்கள் அரங்கேற்றுவதாக இருக்கட்டும், (இடாகினி மாய அரத்தம் - பூபதியின் நாடகம் இங்கு தான் பார்த்தேன்) இது போன்ற இசை/நடன நிகழ்வுகள் நடப்பதாகட்டும் எல்லாவற்றிற்கும் பொருத்தமான இடம் பெங்களூர் இண்டர்நேஷ்னல் செண்டர்.

’நீஷா சிங்’ என்ற நடிகை, அவ்வப்போது மேடையில் தோன்றி பின் வரும் ஆடல்/பாடலினைக்குறித்து தூய ஆங்கிலத்தில் ..( ஹ்ம். உண்மையில் ஆங்கிலத்தில் தான் உரையாற்றினார். இப்படிக்கும் இருவரும் லக்னோ’வை இருப்பிடமாகக்கொண்டவர்கள்.!) உரை நிகழ்த்தினார். பாடல் உருவான விதம், அதை 1800களில் யார் ஆடினது, எந்த அரண்மனையில் இது நிகழ்ந்தது, ஆடற்கலைஞர் யார் என அந்த ஆடற்கலைஞரே நம்முன் வந்து சொன்னது போல கூறினார். நான் இன்னார், இந்த இடத்தில் இது பாடப்பட்டது என்பது போல கூறியது வெகு சிறப்பு. குரல் பின்னிலிருந்து ஒலிக்காது நம்முன்னிருந்து அமர்ந்துகொண்டு கூறிக் கொண்டிருந்தார்.

ஒளிவிளக்குகள் பற்றி சொல்லியே ஆகவேண்டும். நாடகமேடைகளில் பெரு வெளிச்சம் தரும் விளக்கு களின் முன்புறம் பல நிறங்களைக்கொண்ட காகிகதங்களை ஒட்டி காட்சியின் போக்கிற்கேற்ப ஒளிர்ந்து, அணைத்து நம்மை நாடகத்தோடு ஒன்றச் செய்வர். இங்கு ஒளி வெள்ளம் ஒரு விளக்கில் பல வண்ணங்களாக, பல LED பல்புகளைக் கொண்டு வட்டமிட்டு விழுகிறது மேடையில் அதன் உள்ளில் அமர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட சினிமா’வைப் போல ஆனால் இங்கு அத்தனையும் நேரடியாக. எதுவும் பதிவு செய்து மறுஒளிபரப்பு போலின்றி அத்தனையும் நேரலையாக. ஆஹா..! புகைப்படங்கள் எடுத்தேன், எனினும் அந்தக்காட்சிக்கு பொருந்த வேணும் என்பதற்காக சாம்பிராணிப் புகையை மேடையெங்கும் சுழல விட்டதால் புகை மண்டிவிட்டது புகைப் படங்களில்! சாயங்கால வேளை, மற்றும் இரவு, நிலவு கொஞ்சும் இரவு என விளக்கு அமைப்புகள். காணக்கண் கோடி வேண்டும். பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அக்காலத்துக்கே நம்மை அழைத்துச் சென்று விடும் விளக்கு அமைப்புகள்.

நடனங்கள் எல்லாம் ’உம்ராவ் ஜான்’ போன்ற ஆடலுக்கு உரித்தான சினிமாப் படங்களில் இருந்தது போலவே அமைந்திருந்தது. (எனக்குத் தெரிந்த ஒரே படம் அதுதான்..இந்த வகைகளில் ) ஒரு பாடல் முழுக்க மஞ்சரி அமர்ந்தே அடவுகள் பிடித்துக்கொண்டிருந்தார். எழுந்து கொள்ளவே இல்லை. கிட்டத்தட்ட 15 நிமிடம் இருக்கும் ஒரு பாடல்.! பின்னரும் ஆடி பாடி என மேடை முழுக்க அவருக்கே சொந்தம் என சுழல்கிறார். முழு அர்ப்பணிப்பு இல்லையெனில் இதெல்லாம் சாத்தியமில்லை.

அன்றைய பெரும்பாலான ஆடற்கலைஞர்கள் , இஸ்லாமிய சமூகத்தினராகவே இருந்தது. இல்லையெனில் , இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களாகவே அமைந்திருந்தது ஒரு ஆச்சரியம். அதில் ஒரு ஆடற்கலைஞர் ஆர்மீனியா நாட்டைச் சேர்ந்தவராம். (அந்தக் காலத்திலேயே இருபதினாயிரம் இந்திய ரூபாய்கள் செலவளித்து தம் பூனைகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்..! 🙂 ) அடவுகள், நடன அசைவுகள் எல்லாம் கதக், பெரும்பாலும் உடலை வளைத்து, பெரு முயற்சி செய்து என்றெல்லாம் இல்லாது, வெகு சுலபமான ஸ்டெப்ஸ்களை மட்டுமே வைத்து ஆடினார்.(ஒரு வேளை ஆட்டமே அப்படித் தானோ என்னவோ… நம்மைப்போல பரதநாட்டியம் பார்த்தே பழகிய ஆட்களுக்கு அப்படித் தோன்றும்)

இந்த நடனங்களை ‘முஜ்ரா’,’கோட்டா’ என்ற அவச்சொல்லலாலேயே கூறிப்பழகி விட்டனர். (அந்தப்புற நடனவகைகளில் சேரும் இது) இங்கு ஆடிய ஆடற்கலைஞர் மஞ்சரி இது போன்ற நடனங்களை ஆடப்போகிறேன் இந்தியா முழுதும் என்றதும், அவர்தம் தோழர்களெல்லாம் உனக்கென்ன பைத்தியமா , இதைப்போய் ஆடப்போகிறாயா என கேலி பேசினர் என்றார். பாம்பேயில் டான்ஸ் பார்களில் சில இடங்களில் இந்த வகை நடனங்கள் ஆடப்படுகிறது இன்றும். நமக்கு பார்க்கும்போது அப்படி ஒன்றும் ஆபாச சுழிவுகளோ, இல்லை மயக்கவைக்கும் அசைவுகளோ இல்லை. இருப்பினும் இந்த நடனத்துக்கு அப்படி ஒரு பெயர் விழுந்து விட்டது.

மஞ்சரி கடைசியில் பேசினார். அவரும் ஆங்கிலத்தில் தான் பேசினார். இன்றைக்கு சினிமா நடிகையருடன் எல்லோரும் செல்ஃபி எடுத்துக் கொள்ள ஆசைப் படுகிறோம் அல்லவா, இதே அளவு புகழும் பணமும் பெற்றவர்கள் தான் அன்று ‘கோட்டே’வில் ஆடியவர்கள் என்று. என்ன ஒன்று ஆடிய இடம் தவறு. இது போன்று பெங்களூர் இண்டர்நேஷ்னல் செண்டரோ, என்.சி.பி.ஏ (National Center for Performing Arts)வோ அக்காலத்தில் இல்லை. இருந்திருப்பின் அவர்களும் சமுகத்தில் மதிக்கத்தக்கவர்களாக இருந்திருப்பர் என்றார்..தினமும் ஆறு மணிநேரம் பயிற்சி , இன்றும், எடுப்பதாகவும் , இந்த நிகழ்வுக்கென கிட்டத்தட்ட ஐந்தாறு நாட்கள் தொடர்ந்து ஆடிக் கொண்டு இருந்ததாகவும் கூறினார். பின்னர் சினிமாவில் ஆடத்தொடங்கி யிருக்கின்றனர் , இந்த நடனக் கலைஞர்கள், அவ்வழித்தோன்றலில் ஒருவர் தான் மிகவும் புகழ் பெற்ற பாலிவுட் நடிகை ‘நர்கீஸ்’. மேலும் இது போன்ற ஒரு நடன நிகழ்வுக்கு அரங்கு நிறைந்து போனது குறித்து மிகவும் மகிழ்ந்து போனார் மஞ்சரி.

Wednesday, November 16, 2022

பிங்க் விஷம். Pink Venom

 

 

 


பிங்க் விஷம். Pink Venom….இவளுஹ அடிச்சுக்கலக்குறாளுகடா. அதான் ப்ளாக் பிங்க் (Black pink) பொம்மானாட்டிங்க பாட்டுக்கோஷ்ட்டீ. இடைக்கிடைக்கி கொரியன்ல பாடி விட்ருவாளுக. அதத்தேடிக்கிட்டே அலைய வேண்டியது தான். ஆரம்பிப்பது படு அமெரிக்கையாக சீன தந்திக்கருவியை மீட்டிக் கொண்டு, (குங் ஃபூ ஹஸில் படத்துல இதே கருவில கத்திகளை செருகி வைத்துக்கொண்டு ஒண்ணொண்ணா ஏவி விடுவானுங்க..செமப்படம் அது) அதற்குப்பிறகு வழக்கம்போல அடி பொளிதான். அப்பட்டமான ராப். எமினெம் இவா ஒடம்புக்குள்ள வந்து இறங்கிட்டாபோல. அப்டி ஒரு அமர்க்களம். 01:07ல ஆரம்பிக்கும் அந்த ஆட்டத்துக்கே கோடி கொட்டிக் கொடுக்கலாம்டே...ஹ்ம்…

அடிப்படையா முதலில் தொடக்கி வைக்கும் அந்த சீனப்பாட்டுதான் மெட்டு இதுக்கு. ரஹ்மான் அடிக்கடி சொல்வார், அவங்க பாட்டுல அதிகமா ‘சிந்துபைரவி’ ராகத்தை பயன்படுத்துவர் என்று. இருக்கலாம். அத இப்டி எரோட்டிக்கா அரேபியன் ஸ்டைல்ல,யா பாட்றது என்னென்னென்னல்லாம் வருது ?..ஹ்ம்...உருமிக்கொண்டே இருக்கும் அந்த எலெக்ட்ரிக் கிட்டார். நம்ம கெபா ஜெரீமியா வாசிச்சாபோல இருக்கு,

அற்புதமான ஜுகல்பந்தி. சீனப்பாரம்பரிய இசையில் ஆரம்பித்து, மெல்ல மெல்ல நழுவி அடித்துப்பொளிக்கும் ராப்’பினில் பின்னி எடுத்து மீண்டும் சீன இசைக்கே திரும்பி வருவதெல்லாம். எமகாதகிகளால தான் முடியும்.00:55 லிருந்து 01:16 வரை , பிறகு 01:59 லிருந்து 02:21 வரை இந்த ஆட்டம், நம்ம ஜானி மாஸ்ட்டர்கூட போட மாட்டாத ஸ்டெப்ஸ்ங்ணா.. :)

01:18 லிருந்து 01:38 வரை பின்னியெடுக்கும் ராப். ஆஹா….ராப்’ இசையெனில் பெரும்பாலும் உருப்படியான வரிகள் அந்த வரிகளில் சங்கதிகள் என்றில்லையெனில் உடனே சலித்துப்போகும். இங்கு அது போல ஒரு மயி#$ம் தேவையில்லை என கூடச்சேர்ந்து ஆடவைக்குது… ஹிஹி. Taste that Pink Venom…. நம்ம தெருக்குரல் (குரலா இல்லை குறளா..? இன்னும் சந்தேகம் தான் எனக்கு) அறிவு இவா கூட ஒரு சோடி போட்டு ஆடீட்டாள்னா ரொம்ப சந்தோசம்.

Taste that pink venom, taste that pink venom
Taste that pink venom (get 'em, get 'em, get 'em)
Straight to ya dome like whoa-whoa-whoa
Straight to ya dome like ah-ah-ah

01:38ல் திரும்ப பாடலை அதே சீனப்பாணிக்கு கொண்டுவரும் அந்த எலெக்ட்ரிக் கிட்டார் ..சம்மதிக்கணும் மச்சா..எல்லா ஜானர்களும் இருக்கு.. சீனப்பாரம்பரிய இசை, ராப், பின்னர் பெண்டுகள் மட்டுமே பாடித்திளைக்கும் பாப் என்ன இல்லை இந்தப்பாட்டினிலே..? ஏன் கையை ஏந்த வேண்டும் வெஸ்ட்டர்னிலே ...ஹிஹி.

ஸ்பைஸ் கேர்ள்ஸுக்கு பிறகு அதிகம் சம்பாதிக்கும் பெண்டுகள் பேண்டு (Girls Band) இதுதானாம்...ஹ்ம்.. இன்னுந்தான் இவா ஓரோர்த்தி பேரென்னென்னு கண்டுபுடிக்கிறேன்.. ஒரு பொம்மனாட்டி பேர் மட்டும் எனக்குத் தெரிஞ்சுது….01:18ல ரெட் டீஷர்ட் போட்டுக்கிட்டு ஆட்றாளோல்யோ அவா பேரு ‘ஜீ ஸூ’வாம்..என்னது ஜீஈஈஇ ஸூவா...ஹிஹி... சரி சரி….மத்த எல்லாவளுக மூஞ்சியும் ஒரே மேரியா இருக்கு மக்கா..அதான்.. ஹிஹி.. சேனல் விஎச்1ல ஒரு ரெண்டு லெட்சம் தடவ, அப்புறம் இங்க பெங்களூர் 91.9 ரேடியோ இண்டிகோ’ல ஒரு மூணு லெட்சம் தடவ போட்டுட்டான் இந்தப்பாட்ட….ஹிஹி… #PinkVenom

Monday, October 17, 2022

நான் தான் ஒளரங்கசேஃப்

                           9 பேர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம் இன் படமாக இருக்கக்கூடும்

நேற்றைய புரவி கூடுகையில் முகிலன்,பத்மபாரதி, ரமேஷ் கல்யாண் பாவெங்கடேசன் மற்றும் முத்தாய்ப்பாக பாலசுப்ரமணியன் பொன்ராஜும் ‘நான் தான் ஒளரங்கசேப்’ பற்றி பேசினர். நல்ல கூட்டம். ஓசுரில் முப்பதுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். (ஒரு இலக்கிய விமர்சனக் கூட்டத்துக்கு இவ்வளவு கூட்டம் நம்ப இயலவில்லை)
 
முதலில் பேசிய பாவெ’க்கு கொஞ்சம் தயக்கமும், பேச்சில் தடுமாற்றமும் இருந்ததைப்பார்க்க முடிந்தது. எழுதுவோர் எல்லாம் நல்ல பேச்சாளர்கள் இல்லை தான்.ஒத்துக்கொள்ளலாம். முகிலன் கேமரா இருப்பதைப்பற்றி ஸ்டேஜ் ஃப்ரைட் இல்லாது   அமையாக பேசினார். போரைப்பற்றிய அசூயை ஒரு பெருந்துயரம் பற்றிய அவரின் பேச்சு சிறப்பு. பின்னர் பத்மபாரதி பேசினார். இடையிடையே கதை வேறுபக்கம் திரும்பி ‘சீலே’ பயணத்தைப்பற்றி 100 பக்கங்கள் இருப்பதைக்கண்டு அதை அப்படியே கடந்து விட்டதாகவும்,கதையின் ஓட்டத்துக்கு தடைக்கல்லாக இருந்ததைக் கூறினார்.
 
ரமேஷ் கல்யாண், தமது டேப்லட்டில் குறித்து வைத்திருந்தவற்றை அவ்வப்போது பார்த்துவிட்டு எந்தத்தயக்கமுமின்றி பேசினார். சாரு நம்மிடம் எல்லாத்தகவல்களையும் கொடுத்துவிட்டு முடிவு வாசகனின் கையில் தான் இருக்கிறது என்ற ஒரு பொறுப்புத்துறப்பு புதினம் இது.
 
(ஒளரங்கசெஃப் , சாரு வெரி சேஃப்) ’எல்லாரும் செய்றான் நானும் செய்றேன்’ என்பது ஒளரங்கசேப்பின் நிலை. அவன நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன்’ என்று சொன்னானா என்பதை குறிப்பிடவில்லை. (நூலை நான் இன்னமும் வாசிக்கவில்லை. )
 
 
                                               1 நபர் மற்றும் உட்புறம் இன் படமாக இருக்கக்கூடும்
 
கதையை தானே சொல்லிச்செல்வது ஒரு வகை. ஆசிரியராக இருந்து கொண்டு கதை சொல்லியை வைத்து அவர் மூலமாக கதையை சொல்லிக் கொண்டு போவது இன்னொரு வகை. இந்தப்புனைவு இரண்டாம் வகை. பிக்ஸல்களும் முழுப்படமுமாக இருப்பதை உவமையாகக்காட்டி பேசியது எனக்கு மிகவும் ரசிக்கக்கூடியதாக இருந்தது. ஆவி ஒரு அகோரி என்ற மீடியம் மூலம் கதை சொல்வது என்பது, மீடியம் ஆவியின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதால் சொல்லும் யாவையும் ஆவியின் கூற்று.மீடியம் அதற்கு ஒருபோதும் பொறுப்பேற்காது. அதுதான் இக்காலத்தில் அத்தனை மீடியாக்களும் செய்து கொண்டிருக்கின்றன, மேலும் சீலே பயணம் மற்றும் கொக்கரக்கோவின் மடைமாற்றும் கேள்விகள் போன்றவை இக்காலத்திய பேஸ்புக்,ட்விட்டர் மற்றும் வாட்ஸப்பைக்குறிக்கும் என்ற விளக்கம் மிக அருமை. இவ்வாறான கருத்துகளை சொல்லும்போது அவர் குரல் தளர்வின்றி முந்தைய தடுமாற்றங்கள் இன்றி ஒரு நிலையில் நின்று சொல்லியது நன்று. கொஞ்சம் நேரம் எடுக்கிறது செட்டில் ஆவதற்கு, 
 
முந்தைய பாரா முழுக்க பாவே கூறியது/பேசியது. கடைசியாக பாலா பேசினார். கடைசிக்கவி’யின் ஆதங்கங்கள் பேச்சில் தெரிந்தது. ஏனெனில் குறித்து வைத்திருந்த பல குறிப்புகளை முன்னர் பேசிய நால்வரும் சொல்லி முடித்துவிட்டதால் ஏற்பட்டது. இருப்பினும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒன்று எனக்கு இதுவரை கிட்டாத ஒன்றை பாலா கூறினார். புத்தரை காந்தியின் இடத்தில் வைத்துப்பார்க்கலாம், அது போல ஜவஹர்லால் நேருவை அசோகரின் இடத்தில் பார்க்கவேணும். ஏனெனில் அசோக முத்திரைகள் தான் இந்தியாவில் இன்றளவும் பயன்படுத்துப் படுகிறது.
 
பேசிய அனைவரின் கூற்றுகளும் சாரு’வின் புத்தகம் ஒரு ஆவி,தாம் ஒரு மீடியம் மட்டுமே என்ற வாக்கில் அமைந்திராமல் தாம் முன்னரே வாசித்த நூல்களின் தரவுகளையும் குறிப்பிட்டு பேசியது சிறப்பு. (ஒரு வேளை பல ஆவிகள் கூடி வந்து இறங்கியிருக்கலாம் இந்த ஊடகங்கள் மீது 🙂 )
 
அடிப்படையாக இப்படியான கதை சொல்லல், ஒரு வித தப்பித்தலுக்கு வழி வகுப்பதாக அமையும் என்பது என் முடிவு ( இன்னமும் நூலை வாசிக்க வில்லை நான்) அரேபிய இரவுகளில் இப்பாங்கை காணலாம். திரைச்சீலை சொன்ன கதை, மேஜிக் கம்பளம் கூறிய கதை என ஏகக்கதைகள் காணப்படும். பிள்ளையாரும் வியாசருமாக ஒருவர் சொல்ல இன்னொருவர் எழுதினது.
 
மேலும் பாவெ ‘அடுத்த மாத கூட்டத்துக்கென ‘நொய்யல்’ புதினம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி பேசவிழைவோர் முன்கூட்டி பதிவு செய்து கொண்டால் நூலை 20-30 விழுக்காடு கழிவில் வாங்க ஏற்பாடு செய்யப்படும். நூல் விற்பதற்கு விமர்சகர்கள் நம்மாலான உதவி’ என்று வேண்டிக்கொண்டார்.
 
                                               3 பேர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம் இன் படமாக இருக்கக்கூடும்
 

Thursday, October 6, 2022

The Klaus Graf Quartet. - ஜாஸ் ம்யூஸிக்

 

 


நேற்று இரவு ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். ஜெர்மன் ஜாஸ் ம்யூஸிக் ஆர்கெஸ்ட்ரா. தசரா தானே ஆளே இருக்காதுன்னு நினைச்சு ஆறு மணிக்கு மேலே கிளம்பிப்போனேன் (ஏழரைக்கு ஷோ) சென்றடைந்ததும் வாசல் கார் பார்க்கிங் வரை குய்யூ வரிசை. அடச்ச.. தசரான்னா கோயிலுக்கு போங்கடா...இங்க ஏண்டா வர்றீங்க? ஆறரையிலிருந்து நின்று கொண்டிருக்கிறேன். வாயில் திறப்பதாக இல்லை. ஒருங்கிணைப்பாளர் வந்து லைன் முச்சூடும் ஆட்களை எண்ணிக்கொண்டிருந்தார். இல்ல உள்ள எல்லாருக்கும் சீட் இருக்குமான்னு பாக்கத்தான் என.கெதக் என்றிருந்தது.

ஒரு வழியாக ஏழு இருபதுக்கு வாயில் திறந்தது. எனக்கு முன்னால் குழுமியிருந்த பக்த கோடிகள் எல்லாம் அவா அவா சீட்ல போய் உக்காந்துட்டா :) முன்பதிவெல்லாம் கிடையாது. முதலில் வருவோர்க்கு இடம் கிடைக்கும். அதுல தமக்கு பக்கத்துல ரெண்டு கர்ச்சீஃப் எல்லாம் போட்டு வெச்சு இந்தியாவின் மானத்தைக் காப்பாதுதுஹ சில பிரகஸ்பதிகள். ஜெர்மென் கச்சேரியானாலும் நாமெல்லாம் இண்டியா பிரஜையான்னோ. அடக்கெரஹமே. எல்லா இருக்கையும் ஃபுல். வாசப்படீல ஒக்கார வேண்டீது தான். அதுல ரெண்டு வரிசை போட்டாங்ய. ஒருங்கிணைப்பாளர் வந்து பாருங்க க்ரைஸிஸ் வந்தா போவதற்கு வழி வேணும். ஒரு வரிசை மட்டும் போடுங்க என்றார். இந்தக்கண்றாவில்லாம் பாக்க ஜெர்மன் டீம் இன்னும் மேடைக்கு வர்ல.

கொஞ்சம் லேட்டா வந்த ஜெர்மன் கன்ஸுலேட் அதிகாரிகளுக்கே இடம் இல்லைன்னா பாத்துக்குங்க...ஹிஹி.. அப்பறம் இவங்க தான் ஸ்பான்ஸர்ஸ் ன்னு சொல்லி முன்னாலா சீட்ல பகுமானமா ஒக்காந்திருந்த சிலரை கெளப்பி விட்டது நிர்வாகம். ஹ்ம்..எழுந்தவர் எல்லாரும் சலித்துக் கொண்டே படிகளில் அமர்ந்தனர்.

ஜாஸ் இசை நமக்கு பரிச்சயமானது தான். என்ன ஒண்ணு இதுதான் ஜாஸ்னு தெரியாம கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஒரு சாக்ஸஃபோன், ஒரு ட்ரம்ஸ்,ஒரு செல்லோ மற்றும் ஒரு பியானோ ..அவ்ளவ்தான் டீம். ஜெர்மென் காரா பேரெல்லாம் வாயில நுழையாது, இருந்தாலும் சுருக்கமாக அறிமுகப்படுத்தினார். சாக்ஸஃபோன் கலைஞர். இவர் இதுவரை நான்கு முறை க்ராமி அவார்டுக்கென பரிந்துரைக்கப்பட்டவர் என்பது கூடுதல் செய்தி. ஏழரை மணிமுதல் ஒன்பதரை வரை இசை மழை பொழிந்தது.

The Klaus Graf Quartet.

Klaus Graf - சாக்ஸஃபோன் கலைஞர், Thilo Wagner – பியானிஸ்ட் ,Veit Hubner – செல்லோ பாஸ்ஸிகல், மற்றும் Obi Jenne – ட்ரம்ஸ் இசைக்கலைஞர்கள். எல்லாருக்கும் தலை வெள்ளை தான். வெள்ளைக்காரா எல்லாம் வெள்ளையாத்தான் இருக்கும் :) வயசு அதிகம் போலருக்கு. ஜாஸ் இசை மென்மையானது என்றெல்லாம் இல்லை. ட்ரம்ஸ் அடித்துப்பிளந்து விட்டார். அந்த பியானோ கலைஞரைப் பார்த்தால் ‘ஹான்ஸ் ஸிம்மர்’ (ட்யூன் புகழ்) போலவே இருந்தார். ஆஹா.

ஒவ்வொரு இசைத்துணுக்கும் பத்து-பதினைந்து நிமிடங்களுக்கு என வாசித்தனர். இன்னிக்கு ஜாஸ் என்று சொன்னால் தம்பி அநிருத்தின் ‘மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே’ தான். அதையே ‘கண்ணால பேசிப்பேசிக்கொல்லாதே வை காப்பி அடிச்சுட்டார்னு சில ஞான சூனியங்கள் புலம்பித்தள்ள்ளிவிட்டன. அந்த ட்ரம்ஸ் பீட் அதன் இசைக்குறிப்பு எல்லாம் ஒரிஜினல் ஜாஸ்ஸிலிருந்து எடுக்கப்பட்டது. ’வானமின்று மண்ணில் வந்து ஆடுதே’ ராசைய்யாவின் பெஸ்ட் ஜாஸ். ஜாஸில் பிரதானமாக இருப்பது சாக்ஸஃபோன், பல நாட்களாக நாம கென்னி ஜி’யின் சாக்ஸை கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். ராசைய்யாவின் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ மைல்ட் ஜாஸ் வித் சாக்ஸஃபோன்,பின்னர் ‘கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்’ . ’அடியே என்ன எங்கடீ கூட்டிட்டுப்போறே’ ரஹ்மான், ’தேன்மொழி’ தம்பி அநிருத், ’அக்கம்பக்கம் பார்’ சந்தோஷ் நாராயண் இவையேல்லாம் கொஞ்சம் பிரபலமான ஜாஸ் இசைப்பாடல்கள்.

இப்டி பல பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இங்கு அவர்கள் வாசித்தவை கொஞ்சம் சொந்த காம்போஸிஷன்ஸ், மற்றும் இன்னபிற பெரும் இசைக்கலைஞர்கள் இசைத்தவை. பீட்டில்ஸின் ஒரு பாடலை பாடினார். எனக்கு அடையாளம் கண்டுபிடிக்க இயலவில்லை. கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர் சட்டென கூறிவிட்டார். கட்டற்ற இசை, தளைகள் இல்லாதவை, அடித்துப்பொழிந்தது. கீழே உட்கார்ந்திருக்கிறேனே என்ற நினைப்பே வரவில்லை.

குன்னூர்(ஊட்டி), பெங்களூர், மைசூர் அப்புறம் மும்பை (இந்த லிஸ்ட்ல சென்னையே காணம் .. :) ) இந்த டீமின் டூர். மாக்ஸ்முல்லர் பவனின் ஏற்பாடு இந்த இசைநிகழ்ச்சி. அரங்கத்திலிருந்து நேயர் விருப்பம் எல்லாம் கேட்கப்பட்டது. அதைச்சட்டை செய்யவேயில்லை. கரோனாவில் அடிபட்டு பெரும் வறுமைக்குள்ளானது இந்த இசைக்குழு. வருத்தப்பட்டுக்கொண்டே சொன்னார்.2020-ல் ஃபெப்ரவரியில் இங்கு பெங்களூரில் இசைத்ததாக (கரோனாவுக்கு கொஞ்சம் முன்பு) அதுவே கடைசிக்கச்சேரி என்றார். பின்னர் இப்போது தான் தொடங்கியிருக்கிறது என மகிழ்வுடன் கூறினார்.

எத்தனைதான் எம்ப்பி3-யிலும், சர்ரவுண்டு சவுண்டு ஆடியோவிலும்,  5.1 ஹோம் தியேட்டரிலும் ஐமாக்ஸிலும் கேட்டாலும், அவையெல்லாம் முன்னக்கூட்டி பதிவு செய்து திரும்ப ஒலிப்பவை. இசை நிகழ்ச்சி எனில் நேரடியாக கேட்கவேணும். அதில் தான் மகிழ்ச்சி.

ஒரு மெண்ட்டலி சேலஞ்சுடு பெண்மணியை ஒரு வீல் சேரில் உட்கார்த்தி வைத்திருந்தனர் பார்வையாளர்களில். எனக்கு கொஞ்சம் முன்னால ஒவ்வொரு இசைத்துணுக்கு முடியும்போதும் ஆ,ஹ்ம், என்ற அரங்கத்தில் கொஞ்சம் கேட்கும்படியாகவே ஒலியெழுப்பிக்கொண்டிருந்தார். இசையே மருந்து.. #ஜாஸ்ம்யூஸிக்


 

Tuesday, October 4, 2022

நட்சத்திரம் நகர்கிறது

                                     வெளியானது பா.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' ஃபர்ஸ்ட் லுக் | pa  ranjiths Natchathiram Nagargiradhu movie first look released - hindutamil.in

நட்சத்திரம் நகர்கிறது... உரையாடுகிறது. பொதுவா ஒரு நம்பிக்கை உண்டு, ஷூட்டிங் ஸ்டார்ஸை பார்த்தால் அக்கணம் நினைத்து நடக்கும் என. அது ஒரு மூடநம்பிக்கை. இந்த மூட நம்பிக்கை கொண்ட ஒரு பெண் தான் ”தமிழ்” ரெனெ. (எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் ஒரு சில மூட நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்யும்) நான் கூட ரெனே என்றவுடன் ரெனே மெர்க்ரிட் என்ற ஒரு ஐரோப்பிய ஓவியக்கலைஞர் பெயரைத்தான் வைத்துக் கொண்டிருக்கிறாளா என, அப்படி இல்லை, மார்க்வேஸின் நாவலில் வரும் ஒரு கதா பாத்திரத்தின் பெயர் என அவளே கூறுகிறாள். ஏன் ’தமிழ்’ என்ற பெயர் பிடிக்கவில்லையா? 
 
படத்தின் துவக்கம் குஸ்ட்டாவ் க்ளிம்ட்’டின் ஓவியம் ஒரு சிற்பமாக அமைக்கப்பட்ட ஒரு படுக்கையிலிருந்து.ஹ்ம்.. வித்தியாசமாத்தான் இருக்கும்போலருக்கு என்று பார்க்க முற்பட்டேன். உடனே துவங்குது உரசல். உனக்கு ராசைய்யாவை பிடிக்காது. சாதிப்புத்தியைக் காட்டீட்டீல்ல.. என்கிறாள். வரிசை கட்டி நிற்கவைத்தார் அத்தனை பேரையும், சினி உலகமே கைக்குள் கிடந்தது என்று விதந்தோதுகிறாள். பொதுவா இன்னொரு ஆணைப் பற்றி புகழ்ந்து பேசினால் அதுவும் அத்தனை நெருங்கிய படுக்கை அறையில் எந்தப்பயலுக்குத்தான் கோவம் வராது? ஹ்ம்..? அவர் ராசைய்யாவாவே இருக்கட்டும். கோபம் வரத்தான் செய்யும்.தொடர்ந்தும் ராசைய்யாவின் பாடலையே பாடுகிறாள். அவனுக்கு இன்னமும் கோபம் பெருக்கெடுக்கிறது. உனக்கு என் மேல தான் கோபம் என்று புரிந்து கொண்டு நகர்கிறாள். என்னுடைய ரசனைகள் உனக்குப் பிடிக்கவில்லை, எனது தெரிவுகள் உனக்கு ஒத்துப்போகவில்லை என சொல்லிக்கொண்டு.
 
பீஃப் சாப்டுறியா எனக்கேட்பது ரொம்பப்பழசாகி விட்டது. இங்கு பெங்களூரில் அதெல்லாம் சர்வ சாதாரணம். இனியும் படங்களில் கதா பாத்திரங்கள் இதையே பேசி திடுக்கிட வைக்க இயலும் என எனக்குத் தோணவில்லை. ’ரெட் டீ’ வாசிச்சிருக்கிறியா, அதுல ஒரு கருப்பன் வள்ளின்னு கேரக்டர்ஸ், நல்ல ஒரு லவ் ஸ்ட்டோரி இருக்கு அந்த அவல நாவலுக்குள்ளயும் என்று கூறும்போது ‘எனக்கு லவ் ஸ்டோரியே பிடிக்காது’ என்கிறான் இனியன். ரெனேவுடன் சேர்ந்து நானும் சத்தமாக சிரித்துவிட்டேன்.
 
நிறைய பேர் இந்தப்பெண் கதாபாத்திரத்தை பாலச்சந்தரின் பெண்கள் போல என. அவரின் படங்களில் வரும் பெண் பாத்திரங்கள் சாதி குறிப்பிடப் படவில்லை எனினும், ஆண்டாண்டு காலமாக அவர்கள்தம் ஜெனரேஷனே படித்து உலக விஷய ஞானம் உள்ள பெண்ணாகவே இருப்பர். இங்கு ரெனே அப்படி இல்லையே. ஒதுக்கப்பட்டவள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் பயப்பட்டவள். அத்தனை ஃப்ளாஷ்பேக்கும் ஒரு கார்ட்டூனாகவே உருவெடுத்திருக்கிறது இங்கு. அதிலும் ரெனே நீல நிற ஆடையே அணிந்திருக்கிறாள். என்னை வெறுத்து ஒதுக்கியவைகளே என்னை இன்னமும் படித்து அறிவைப்பெருக்கிக்கொள்ள வேணும் என உந்தித்தள்ளியது என தயக்கமற, அச்சமின்றி தெரிவிக்கிறாள்.
 
 
                             நட்சத்திரம் நகர்கிறது' படத்திற்கு 'ஏ' சான்றிதழ்- Dinamani
 
நீளமான பத்து பதினைந்து பேர் அமர்ந்து பேசி அலசும் காட்சி, இதுவரை எந்தப்படத்திலும் நான் பார்த்ததில்லை. அற்புதம். உரையாடல் நிகழ்கிறது. காரசாரமான உரையாடல்கள், யாரும் பொதுவில் வைத்து விவாதிக்க இயலாதவற்றை பேசித் தீர்க்கின்றனர். ரொம்ப சாதாரணமான ஒரு யுவனாக கலையரசன். ஆஹா. நம்மைப்போல ஒருவன். கூலிங் க்ளாஸ் எல்லாம் மாட்டிக்கொண்டு வருகிறார்.அவரிடம் இருக்கும் கூலிங் க்ளாஸை தாம் வாங்கிக்கொண்டு ’இங்க பாரு நடிக்க வந்தமா போனமான்னு இருக்கணும், கலைய வளக்கிறேன் அது இதுன்னு பேசுன அதோட அவ்ளவ்தான்’ என்று கூறும் ஒரு கதாபாத்திரம் நல்ல சிரிப்பை வரவழைக்கிறது.
 
 
படம் முழுக்கவும் எனக்கு ’கும்பளாங்கி நைட்ஸ்’ மற்றும் ‘சார்லி’ படம் ஞாபகமே வந்து கொண்டிருந்தது. உருவாக்கம் எல்லாம் அதன் அடிப்படை தான். (மேலும் முருகபூபதியின் நாடகங்களும்) படத்தில் வரும் நாடகம் பெர்ஃபெக்ட். அத்தனை கொல்லப்பட்ட சீவன்களும் ஒரு சட்டகத்துள் இருந்து பேசுவது பிரமாதம். அதோடு விடாமல் கொல்லப்பட்ட அந்த அத்தனை இளைஞர்களின் குரூர கொலைகள் நிகழ்விடக் காணொலிகள் செய்தி ஊடகங்கள் வாயிலாகவும் பகிரப்படுகிறது. இருப்பினும் கலையரசனின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் சி சென்டருக்கான சினிமா. நாடகத்துக்குள் ஒரு சினிமா அது. சினிமாவுக்குள் ஒரு நாடகத்தை பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு பெரும் சலிப்பு.
 
அதேபோல கடைசி 20 நிமிட நிகழ்வுகளை வெட்டி எறிந்திருந்தால் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்குமென பலர் கூறியிருந்தனர். உண்மையைச் சொன்னால் அந்த மங்க்கியும் நாடகத்தில் ஒரு கதாபாத்திரம். முழு ஒப்பனையும் செய்து கொண்டு தமது காட்சிக்கென காத்துக்கொண்டு இருக்கும் ஒரு கேரக்டர். காண்போர் இருக்கையிலிருந்து எழுந்து வந்து அபிநயிக்கும் ஒரு நடிகர்.. இப்படியெல்லாம் ஒரு நாடகம் நடந்து விட முடியுமா? ஹ்ம்.. அதான் கதாயுதத்துடன் வந்து துவம்சம் செய்கிறது அந்த மங்க்கி.
புரட்சி செய்கிறேன் பேர்வழி என்று எவ்வித இடையூறுமின்றி நாடகத்தை மிகச்சிறப்பாக அரங்கேற்றியிருந்தால் அது இன்னொரு சாதாரண சினிமாவாகவே போயிருக்கும். துவம்சம் செய்ததால் தான் அது இக்காலத்திய உண்மை நிகழ்வு. (புரட்சில்லாம் இருக்கட்டும் எங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு அதைத்தான் என் சினிமா பேசும் என ரஞ்சித் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.) 
 
படம் முழுக்க ராசைய்யாவின் பாடல்களே.! எல்லாம் சரி. அந்தந்த நிகழ்வுகளுக்கென காட்சிகளுக்கென பொருத்தமான பாடல் தேர்வுகள் அருமை. ஒரு கேள்வி என்னிடம் மண்டிக்கிடக்கிறது. படத்தில் தோன்றி நடிக்கும் கிட்டத்தட்ட அனைவரும் 20களின் வயதில் இருப்பவர்கள். அவர்களுக்கு இத்தனை துலக்கமாக ராசைய்யாவின் பாடல்கள் தெரிந்திருக்குமா?… 20களில் இருக்கும் யாராயிருப்பினும் ’அநிருத்/ஆதி/ கொஞ்சம் ரஹ்மான்/பி.ட்டி.எஸ்/ப்ளாக் பிங்க்’ எனத்தான் உலவுவதாக நான் கண்டிருக்கிறேன். (எதோ ராசைய்யாவின் ஒன்றிரண்டு பாடல்கள் அதுவும் டிக்டாக் போன்ற செயலிகளில் பிரபலமானால் தான் உண்டு அவர்கள் உலகத்தில்.)
 
இத்தனை நட்சத்திரங்கள், கேலக்ஸிகள், இணைப் பிரபஞ்சம் மற்றும் அது குறித்த கோட்பாடுகள் என அறிவியல் நம் கண் முன்னே விரிகிறது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அத்தனையையும் துடைத்தெறிகிறது இத்தனையும் தெள்ளத்தெளிவாக நம் கண்முன் விரியும் இந்த நிகழ் காலத்திலும் சாதி/மதம் ,தாழ்வு உயர்வு என்றெல்லாம் ஏன் பேச வேணும், நடைமுறையில் வைத்துக்கொண்டு கட்டி அழ வேணும் எனக்கேட்கிறார் இயக்குநர்.
 
படம் பார்த்து முடித்து சில நாட்களாகவே என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும் ஒரே கேள்வி இது தான். இத்தனை பேசாப் பொருளையும் பேசத்துணிந்த இயக்குநருக்கு ஒரு தாழ்த்தப்படுத்தப்பட்ட ஒரு இளைஞனாக ’ரெனே’ கேரக்டரை ஏன் திரையில் காண்பிக்க இயலவில்லை என. அப்படிக் காண்பித்திருந்தால் இப்படி ஒரு மாற்று/போல்டு சினிமாவாக வந்திருக்க வாய்ப்பில்லை என தோணியிருக்கும் போல அவருக்கு!...
 

                                   பா ரஞ்சித்தின் "நட்சத்திரம் நகர்கிறது" படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது!! |  Pa Ranjith's Natchathiram Nagarkirathu Movie Shooting Started Again - Tamil  Filmibeat
 

Monday, August 22, 2022

பறையிசைப் பணிமனை

 


கடந்த இரண்டு நாட்கள் அற்புதமாகக்கழிந்தது. ஓசூரில் குருகுலம் பள்ளியில் அக்னி குழு ஏற்பாடு செய்திருந்த ‘பறையிசைப் பணிமனை’யில் கலந்து கொண்டேன். போன அக்டோபர் 2021ல் அக்னி ஷர்மிலா’வை நான் லெ.முருகபூபதியின் ‘இடாகினி மாய அரதம்’ நாடக அரங்கில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். அதில் அபிநயித்த தம் மகள் ‘இனியாழ்’ பற்றி. பிறகும் தமது இந்தப்பணிமனை பற்றி குறிப்பிட்டார். வகுப்புகள் எடுக்கிறோம், வணிக எதிர்ப்பார்ப்பின்றி, கட்டமைப்பு வசதிக்கெனமட்டும் ஒரு தொகை கொடுக்க வேண்டி வரும் என. பின்னரும் இடையே ஒரு நிகழ்வு நடந்து முடிந்திருந்தது. ஆகஸ்ட்டில் இன்னொரு நிகழ்வு இருக்கிறது என அறிந்த பின் இணைந்து கொண்டேன்.
 
ஏற்கனவே கொஞ்சம் இசைஞானம் (!) கிட்டார் என இருப்பதால் எளிதாக இருக்கும் என நினைத்து கொஞ்சம் ஏமாந்தேன், ரிதம் பேட்டர்ன்ஸ் விரைவில் விளங்கி விடும்தான். இருப்பினும் அதைக் குச்சிகள் வைத்துக் கொண்டு பறையை இடது கையில் தொங்க விட்டுக்கொண்டு (இன்னும் தோள்ப்பட்டை வலி தீரவில்லை 🙂 ) சிண்டுக்குச்சி (மெலிந்த குச்சி) அடிக்குச்சி (குண்டுக்குச்சி) என இரண்டு குச்சிகளை விரல்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு அடித்து ஒலி எழுப்ப வேணும்.ஆஹா.. ரெண்டு நிமிடத்தில் இடது தோள் வலிக்க ஆரம்பித்துவிட்டது. போட்டிருக்கும் ட்டீ ஷர்ட் வேறு வழுக்கிக்கொண்டு போக பறையை நிலை நிறுத்தப் பெரும்பாடு பட வேண்டியிருந்தது. 
 
லெ.முருகபூபதி’யின் நாடகக்குழுவின் முழுநேர நடிகர் நரேஷ் தான் எங்களுக்கு பறையிசை பயிற்றுவிக்க வந்த குரு. அத்தனை நேர்த்தி. எக்ஸெல்லண்ட் ஆர்ட்டிஸ்ட். உடல் மொழி அபாரம். நாடகங்களில் நடிப்பதெனில் சும்மாவா?!. அறிமுகங்கள் முடிந்த பின் பாடம் ஆரம்பித்தது. 
 
பறையின் வரலாறு பற்றி, அதை இசைப்போர் பற்றி, மேலும் இன்றுவரை இந்த தமிழ்ப்பறைக்கென பறை இசைக்கென இசைக்குறிப்புகள் என ஏதும் இல்லை. நாட்டார் வழக்கியல் போல இதுவும் குரு சீடர் பரம்பரை வழி வந்த கலையே. சொல்லிக்கொடுத்து இசைக்க வைத்து பின்னர் அவர்தம் சீடர்களுக்கு என வழிவழி வந்த கலை இது. முதன் முதலாக இசைக்குறிப்புகளை தமிழில் கண்டேன். ஆஹா. இத்தனை நாளும் ஏபிசிடி என ஆங்கில இசைக்குறிப்புகளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இது ஒரு ஆச்சரியம். ‘த கு கூ தா தீம்’ என ஒவ்வொரு குச்சிக்கும் ஒலிக்குறிப்பு. முதலில் தத்தம் தொடைகளில் சொல்லிக்கொண்டே அடித்து இசைத்து விட்டு போதுமான அளவு மாத்திரைகள் (கால அளவு) மனனம் ஆன பின்பு தமது பறையில் இசைத்துக் காட்டி, எங்களை இசைக்கப் பணித்தார்.
 

 
குச்சிகள் கையில் நிற்க மறுக்கிறது. இல்லையேல் அடி சரியாக விழ மறுக்கிறது, அடி விழுந்தாலும் ஓசை எழவில்லை, திருப்தி இல்லை. இது என்னது, தேவையில்லாம வந்து மாட்டிக்கிட்ட மாதிரி இருக்கே. அதோட இந்த தோள்பட்டை வலி வேறு தொடங்கி விடுகிறது. ஒருவாறு எல்லாமாக ஒன்று கூடி வர மத்தியானம் ஆகிவிட்டது. மொத்தம் ஏழு குறிப்புகள் இசைத்தோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. எளிதாகத்தொடங்கி கொஞ்சம் சிக்கலான குறிப்புகள் வரை. பறையைக் கீழே வைத்துவிட்டு அடித்தால் இன்னமும் செளகரியம் எனத்தோன்றாமலில்லை 🙂 ட்ரம்ஸ் இசைப்பது  போல. அதற்கெல்லாம் வழியே இல்லை சின்னப்பயலே என பறை எனைப்பார்த்து சிரிக்கிறது. 
 
மொத்தம் பத்துப்பேர் முதன்முறையாக இசை பழக வந்தவர். மேலும் இரண்டாம் மூன்றாம் முறை, ( இவாளெல்லாம் சீனியர் பார்த்தேளா 🙂 ) என பயிற்சிக்கு வந்தவர் பலர். அனைவரும் ஒன்று கூடி இசைக்க முடிந்தது இரண்டாம் நாளில் எங்களுக்கு கொஞ்சம் பிடிப்பு வந்ததும்.
 
கிட்டாரில் இடது கை விரல்நுனிகள் கிழியும், காய்த்துக் காய்த்து குருதி பெருகும்.பின்னர் மறத்துப் போகும். இங்கோ இடது கை முழுதும் தொங்கிப் போகிறது. தந்திக்கருவிகளை விடவும் இதற்கு உடல் வலிமை அதிகம் தேவைப்படுகிறது. பறை அடிப்பது மட்டும் அல்ல வகுப்பு. அதற்கேற்ப அடவுகள் (உடலால் ஆடுவது, இசைக்கேற்ப) முக்கியம் என ஒவ்வொரு இசைக் குறிப்பிற்கும் ஒவ்வொரு அடவு. சுத்தமாக வரவே இல்லை எனக்கு. ஓரளவு இசைக்கலாம். ஆடவெல்லாம் சொன்னால் எப்படி?..ஹ்ம்.. இருப்பினும் போதுமான அளவு நேரங்கிடைத்தது, ஆக அடவுகளை எடுத்தே ஆகவேண்டுமென்ற கட்டாயம், இங்கு இல்லையெனில் மனம் லயிக்காது என்பது உண்மை. இசை போட்டுவிட்டு இரவு நேர பார்களில் ஆடுவதெல்லாம் ஆட்டமேயில்லை. அது கூத்து. இங்கு ஆடுவது ஒரு ஒழுங்கு முறையில். முறையாக பயிற்சி எடுக்கவில்லை யெனில் மேடையேறிச் சென்று இசைப்பது இயலாத காரியம். 
 
விஜயின்’டோல் டோலுதான் அடிக்கிறான்’, தனுஷின் ’ஒத்தசொல்லால’, சூர்யாவின் ‘என்னத்தேடி வந்த அஞ்சல’ போன்ற பாடல்கள் பறையிசையில் இசைக்கப்பட்டவை. சட்டென ஞாபகம் வந்தவை இவை. தெம்மாங்கு (மகிழ்விசை), மற்றும் பல இசைக் கோவைகள் பறையிசையில் உள்ளன. ராசைய்யாவின் ‘மார்கழி தான் ஓடிப்போச்சு போகியாச்சு’ கேட்டுப் பாருங்க. இந்தப்பறையொலி எங்கும் கேட்டிராத ஒன்று. அற்புதம்.
 
பின்னரும் மாலையானதால் சென்று கொஞ்சம் இளைப்பாற நினைத்தால் சீனியர்கள் குழு பள்ளியின் மண்டபத்தில் அமர்ந்து ஒட்டுமொத்தமாக இசைக்க அது ஒரு ம்யூசிக்கல் ஜாம்’ உருவெடுத்தது. மிகப்பெரிய ட்ரம் ஒன்றினை கீழே வைத்து அனைவரும் பாடி மகிழ்ந்த அற்புத தருணங்கள் அவை. அத்தனை திறமைகள் கொட்டிக்கிடக்கின்றது. குரு நரேஷ் போன்றோர் தொடர்ந்தும் கலை இரவுகளில் ஆறு ஏழு மணிநேரம் தொடர்ந்து பறையிசைப்பர் என்ற ஆச்சரிய தகவலும் கிடைத்தது. அத்தனை எனர்ஜி. சளைக்காத அடி. ஒலி பட்டையைக்கிளப்புகிறது.
 

 
இரண்டாம் நாள், ஒயிலாட்ட அடவுகள் என காலை ஏழரை மணிக்கே ஆரம்பித்துவிட்டார். முதல் நாள் களைப்பே தீரவில்லை. அதற்குள் இன்னொரு அடவா?..ஆஹா. இந்த ஒயிலாட்டம் நான் பரமக்குடியில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் ஒவ்வொரு முறையும் பார்த்திருக்கிறேன். நின்ற இடத்தை விட்டு அகலாது வரிசையாக நின்றுகொண்டு கையில் ஒரு கர்ச்சீஃப் வைத்துக்கொண்டு அத்தனை அழகாக அடவுகள் காண்பிப்பர். முன்னும் பின்னுமாக திரும்பி ஆடிக்கொண்டு. அதே அடவுகள் இங்கு நாங்களும் செய்து பார்த்தோம். ஓரளவு தான் வந்தது. ”குனிந்து இரு கைகளால் பூப்பறித்து நிமிர்ந்து வலது புறம் முதுகின் கூடையில் இடுவது” ஒரு அடவு , ”முழுதும் குனிந்து இரு கைகளால் நாற்று நடுவது” ஒரு அடவு என அத்தனையும் தமிழர் வாழ்வியலை அடையாளங் காட்டும் அடவுகள். ”வலது குதி காலை முன்வைத்து மேல் நோக்கி பார்த்துப்பின் குனிந்து இடது காலில் முன்பாதத்தை மட்டும் தரையில் அழுத்தி குனிந்து பார்ப்பது” என்பன போன்ற அடவுகள் , உடலைப்பதம் பார்த்துவிட்டது. 
 
ஆறு ஏழு மணிநேரம் கையில் பறையையும் வைத்துக் கொண்டு அடித்து ஒலி எழுப்பி பின்னர் சற்றும் தவறாது அடவுகளையும் குழுவாக எடுப்பது அதுவும் மேடையில் என்பதெல்லாம் பெரும் சவாலாகவே இருக்கும், இருப்பினும் ஒரு மனிதனால் ஏழு மணிநேரம் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற என் கேள்விக்கு இடையிடையே சில அடவுகள் உடலைச் சமன் குலையாது காக்க வைக்கும், அது போகப்போக உங்களுக்கு புரிபடும் என குரு நரேஷ் மெதுவாகச் சொன்னார்.
 
தொடர்ந்தும் பறையிசைப் பணிமனையில் கலந்து கொள்ளவேணும் என்ற ஆர்வம் இல்லாமலில்லை. இந்த அடவுகளை மட்டும் கொஞ்சம் தள்ளி வைத்தால் நலம் என இரவிலும் அடாது பணிபுரியும் அமெரிக்கக் கூலியான என் உடல் என்னிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறது 🙂
 

 20,21 ஆகஸ்ட்’ 2022 ல் நடைபெற்ற பறையிசைப்பணிமனை புகைப்பட ஆல்பம் இங்கே.

https://photos.google.com/share/AF1QipONKL3cWdpKvVRe5_zZ43pNMT4A1cQDf6SA7HeZ2JeRw3fQPvzJt6dP4kI_rpqDsg?pli=1&key=MHBmbkp3T291ejNoNF9oa2YyZWRhLWdPSmxTR3RB

Monday, August 15, 2022

மாமனிதன்

மாமனிதன் பார்த்துக்கொண்டிருந்தேன். படம் துவங்கியவுடனே தோணியது இது இயக்குநர் ‘பாலு மகேந்திரா’ சன் டீவீயில் ‘கதைநேரம்’ என்ற ஒரு தொடர் நிகழ்ச்சி, குறுங்கதைகளை வைத்துக்கொண்டு ஒரு ஆந்தாலஜி போல செய்திருந்தார் தொண்ணூறுகளின் கடைசியில். அதில் ஒரு ஆட்டோ ட்ரைவர்,தமது ஆட்டோவில் பயணித்த ஒரு பெரியவரின் மறந்து வைத்துப்போன நகைப்பை/பணப்பையை எடுத்துக் கொண்டு போய் ஒப்படைத்து பின் அந்தப் பெண்ணை திருமணமே செய்து கொள்வார். இயக்குநர் சீனு ராமசாமியும் பாலு மகேந்திராவின் சீடர். ஒரு வேளை அவரே அந்தச்சிறுகதையை அப்போதே எழுதியிருக்கக் கூடும். அதே சிறுகதை கொஞ்சம் பின்னரும் பிற்சேர்க்கைகளாக சம்பவங்களைக் கோர்த்து இங்கே மாமனிதனாக உருவெடுத்திருக்கிறது.
 
விஜய் சேதுபதி ஆட்டோ ட்ரைவர். ‘ப்பா’ என அவரே பலமுறை சொன்ன அதே பெண் மனைவி. ஓடணும் அப்பதான் கஷ்டங்கள் தொல்லை பண்ணாது என்று ஓடுகிறார். ஓடுகிறார் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடுகிறார். எல்லாக்கதாபாத்திரமும் என்னால் செய்யமுடியும் பல வேறு படங்களில் என நிரூபிக்க முயல்கிறார். என்னைக்கேட்டால் விஜய் சேதுபதி பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு அப்புறம் கொஞ்சம் தாமாக அபிநயிக்க கிடைத்த வாய்ப்பு இங்கு தான் என்பேன். இதையே செய்யலாம். இருந்தாலும் தொடர்ந்தும் தமது முகம் எங்கும் தெரியவேணும் என்பதற்காக ‘எதிரி’ கதாபாத்திரங்களையும் ஏற்றுக்கொண்டு செய்கிறார். எனினும் அத்தனை சோபிக்கவில்லை என்பதே நிஜம். ( விக்ரம் படத்தில் அவரின் அத்தனை மேனரிஸமும் ‘அடிமைப்பெண்’ கூன்விழுந்த எம்ஜியார் தான்). ’மின்னல் முரளி’ குரு சோமசுந்தரமிடம் மலயாள தேசம் செல்லுமுன் நள்ளிரவில் பேசும் காட்சிகள், பின்னரும் தினக்கூலி வேலைக்கு சேர வரிசையில் நின்று, பின்னர் கழிவறை சுத்தம் செய்யயும் போதும், மேலும் அந்த சாயாக்கடை பெண்ணிடம் கண்ணியமாக நடந்துகொள்ளும்போதும் என நல்ல காட்சிகள்.அவருக்கு தம் இயல்பினனாக திரையிலும் இருக்க கிடைத்த நல்வாய்ப்பு.
 
’எல்லாரும் எல்லாம் தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லைப்பா’ எனக்கூறும் வாப்பா பாயாக குரு சோமசுந்தரம், எஃப் ஐஆரில் அவர் பெயர் சேர்க்கவேயில்லையே என்று கூறும் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், மலயாள தேசத்தில் தம்முடன் வசிக்கவைக்கும் அந்த சகபணியாளர், மேலும் கட்டிப்பிடித்து வழியனுப்பி வைக்கும் மலயாள மணிகண்டன். என இப்படி நல்லுங்களைக் காணலாம் படம் முழுக்க. வழக்கம்போல கடைசிக் காட்சிகளில் நல்லவனாக மாறிவிடும் ஷாஜி பாத்திரம் மட்டுமே க்ளீஷே.
 
யுவனின் பெயர் பரவலாக அடிபட்டுக்கொண்டிருந்த படத்தில் பின்னணியும் அவர் செய்திருப்பதைப்போல இல்லையே,இது ராசைய்யாவின் பாணி ஆயிற்றே என படம் முழுக்க முடிவடையும் வரை யோசித்துக் கொண்டே இருந்தவனுக்கு பின்னர் காணக்கிடைத்தது பின்னணி ராசைய்யாதான் என.ஆஹா. இது போன்ற கதைகளுக்கு இசைக்க இக்காலத்தில் அவரைத்தவிர யாருண்டு?. அதற்காக பண்ணைப்புரத்துக்காரன்க.. அதுக்காக இசைஞானி போல வயலினெல்லாம் வாசிக்கத்தெரியாது என்று ஒரு காட்சியில் கூறுகிறார் விஜய் சேதுபதி. இப்படி முகத்துதிகளும் அவ்வப்போது உண்டு.

விஜய் சேதுபதி கடைசிக்காலத்தில் காசி சென்று எனக்கு தீங்கு செய்தவரின் பாவங்களையும் போக்கும் விதம் இங்கு வந்திருக்கிறேன் என்கிறார். கஞ்சா நிறைந்த ஹூக்கா புகைக்கிறார். ஏனோ ஒட்டவேயில்லை. மாமனிதன் அல்ல. மனிதன் தான் அவன் #மாமனிதன்

Monday, July 18, 2022

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா - ஆப்ரா

 1 நபர், திரை, தொலைக்காட்சி மற்றும் உட்புறம் இன் படமாக இருக்கக்கூடும்

ஆப்ரா இசைக்கச்சேரி. சென்னையில் ரஹ்மானின் இசைப்பள்ளியில் ஆப்ரா இசையைப் பயிற்றுவிப்பவர் Nina Kanter மற்றும் அவரது மாணாக்கர், Himanshu Barot பின்னர் ஒரு பியானிஸ்ட் Karl Lutchmayer என ஒரு குழு இன்று கச்சேரி நடத்தியது. முழுக்க முழுக்க ஆப்ரா (Opera) நமக்குப் பழக்கமில்லாத முட்ட முழுக்க அன்னிய இசை. சிம்பிளாக சொன்னால் ஓலமிட்டுக்கொண்டே பாடுவது . ஆனால் இதுதான் மேற்கத்திய வாய்ப்பாட்டு (குரலெழுப்பி பாடுவது). நிறைய பாடினர். ஷூபர்ட்’டின் இசைக்கோவை, பின்னர் நிறைய ஜெர்மன் இசை (அப்படித்தான் நினைக்கிறேன் ஒண்ணும் புரியலை) , இருப்பினும் பின்னில் திரையில் அப்பாடலின் ஆங்கில வரிகள் அவ்வப்போது திரையிடப்பட்டன. வாசித்துக் கொள்ளலாம். எனினும் ஒன்ற முடியவில்லை. 
 
பழக்கமில்லாத இசை.எனக்கென்னவோ மெளலின் ரூஜ் (Moulin Rouge) படத்தைப்பார்ப்பது போலவே இருந்தது நிகழ்ச்சி முழுதும்.
பாடலிலேயே முழுக்கதையும் சொல்கிறார், இடையில் கைதட்டல் ஏதும் வேண்டாம் எனப்பணித்துவிட்டு, பின்னில் திரையில் தோன்றும் டெக்ஸ்ட்டை வாசித்து கதையை புரிந்துகொள்ளலாம். ஒரு வித நாடகீயமான, பாடிப்புரியவைக்க முயலும் கதைகள் (அப்பா..ஒரு வழியா சொல்ல முடிந்தது இப்படி)
 
இந்த ஐரோப்பிய பெண்மணியிடம்(Nina Kanter) ரஹ்மானின் பள்ளியில் பயின்ற ஒரு மாணவரும் பாடினார். நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறாராராம். ஆசிரியரும் புகழ்ந்து தள்ளினர். அவர் ஒரு மெக்ஸிகன் தாலாட்டு பின்னர் வழக்கம் போம ’அவே மரியா’ (Ave Maria – Hail Mary)வைப்பாடினார். இந்தப்பாடல் மட்டுமே எனக்கு பரிச்சயம், (எனது கிட்டார் நோட்ஸில் இது உள்ளது) இசைக்கும் போது கேட்டுச்செல்வது என்பது எளிது. அதையே வாய்ப்பாட்டெனில் குளிரில் நடுங்கி குரலெழுப்பவியலாதவர் போல பாடுவர். அவ்வளவும் ரசிக்க இயலாது போகும்.
 
4 பேர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம் இன் படமாக இருக்கக்கூடும்
 
ஐ படத்தில் ‘ஐலா ஐலா’பாடல் இந்த ஆப்ரா பாணியில் அமைந்த முதல் தமிழ்ப்பாடல். எத்தன பேர் கேட்டீங்க?...அதான்...நமக்கு ஒருநாளும் ஒத்தே வராத இசை. நடாலி டி லூச்சியோ’ அப்ப்டீன்னு ஒரு வெளிநாட்டு பொம்மனாட்டி, வெளிநாட்டு பாட்டு செட்டக்கொண்டாந்து எறக்கி பாடவெச்சார் நம்ம ரஹ்மான். ஏன்னா இங்குள்ள வேறு யாராலும் பாட இயலாத இசைக்குறிப்புகள் அத்தனையும் ஆப்ரா. ஓரளவு நம்ம ஆண்ட்ரியா (ஆஹா.. வந்துட்டாங்கோ.. ஹிஹி) இந்த இசையைப் பாடுவார். ’ஹூஸ் த ஹீரோ ஹூஸ் த ஹீரோ’ன்னு அது கூட ஒரு துணுக்கு தான். நிறைய எதிர்பார்க்க முடியாது.
 
கடைசியாக ஒரு தமிழ்ப்பாடல் (ஆமாங்க ஆமா) , பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’வை ஆப்ரா ஸ்டைலில் பாடினார் Sandeep Gurrapadi என்ற இன்னொரு ஆப்ரா பாடகர். (அதான சென்னைல படிச்சுட்டு தமிழ்ல பாடலன்னா எப்டி?) உச்சரிப்புகளை மன்னிக்கலாம். உண்மையில் அது ஒரு ட்ரூ ஆப்ரா வெர்ஷன். ஷ்ருதிஹாசனை போட்டுக்கலாய்த்து தள்ளியது ஞாபகமிருக்கலாம் எல்லோருக்கும் ‘தென்பாண்டி சீமையிலே’வை அவரது வெஸ்ட்டர்ன் பாணியில் பாடிவைத்து பாட்டு வாங்கிக்கொண்டார். இங்கு இந்த சின்னஞ்சிறுகிளி ஆப்ராவை கேட்டால் எல்லோரும் அதையே சொல்வர்.
 
ஆர்ட் ம்யூசிக் ஃபெஸ்டிவல் சென்னையில் அடுத்த வாரம் நடக்க இருப்பதாகவும், (எதோ இடம் சொன்னார் மறந்துவிட்டது) அங்கு பாட நினைத்த சில பாடல்களை முதன் முதலாக இந்த பெங்களூர் மேடையில் பாடியிருக்கிறோம் என்று (ஆஹா.. அப்ப நாந்தான் முதலில் கேட்டது) பெருமிதமாக அந்தப்பெண்மணி கூறினார். அரங்கிற்குள் செல்ல எத்தனிக்கையில் RSVPஇல் பெயர் உள்ளவர்கட்கு மட்டுமே அனுமதி என்று குண்டைத்தூக்கி போட்டனர் வாயிலில். சிறிது நேரங்கழித்து அவர்களை முன்னர் செல்லவிட்டு பின்னர் பதிவு செய்யாத என்னைப்போன்ற பாவாத்மாக்களை உள்ளே விட்டனர். ஆப்ரா வாழ்க.

Friday, June 3, 2022

நட்டுக்கட்டு - ஷ்ரேயா கொஷல் - மராட்டி பாடல்

 


 ஊர்ல எல்லாப்பேரும் விக்றோம் விக்றோம்னு கத்திக்கிட்டிருந்தப்ப ஒருத்தன் மட்டும் மராட்டி பாட்டு கேட்டுக்கிட்டிருந்தான். யார்ரா அவன்..ஹிஹி நான்தான்..ஹிஹி.... ஷ்ரெயா கோஷல் (மறுபடி வந்தாச்சா.. ஹிஹி. வழியாத வழியாத... ) ‘ நட்டுக்கட்டு நட்டுக்கட்டு’ன்னு போட்டுத்தாக்கி இருக்காங்ணா. ஆஹா. பாம்பேல கொஞ்சம் வேலே பாத்ததுனால , அவா சங்கீதமும் கொஞ்சம் தெரியும். அபங் (அடிக்கிற சரக்கு இல்லை. அவாளோட க்ருஷ்ணா பாட்டு) நம்ம ஓ எஸ் அருண் கூட நன்னாப்பாடுவார். சரி அத விடுங்க. அது மராட்டி சங்கீதம் தான்.

 
இங்க இது கொஞ்சம் சரசாங்கி போல நாயகனை அசத்த பாடும் ஒரு லாவணி. ( இதுதான் அவங்க காமரசம் ததும்பும் ஆடல் பாடல் வகை) பாட்டுன்னு வெச்சுக்கலாம். கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்கும் மேல அந்த கொட்டு (தபேலாவும், மிருதங்கமும்) போட்டுத் தள்ளுது ஆரம்பத்துல.... நமை எழுந்து ஆட வைக்கிது. அந்த அம்மணி அம்ருதா தலைல முக்காடெல்லாம் போட்டுக்கிட்டு, பாடலின் உள்ளே நம்மை கிரங்க அடிக்கிது( கதாநாயக/கியரை அறிமுகப்படுத்தும் முன்பு முகத்தை மட்டும் மறைத்து மறைத்து ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவர் நம்ம நாடகங்களில். அதெல்ல்லாம் போச்சு எப்பவோ..) இங்க அடிச்சு தூள் கெளப்பறா அம்மணி. கேளுங்கோ. 
 
03:22 ல அந்த ஸ்டெப்ஸ் பாருங்கோ. ஓஹோ காவ்வாலே..! 02:45ல் தொடங்கும் அந்த மாண்டோலின் (அல்லது அதனையொத்த ஒரு தந்தி இசைக்கருவி) விரிந்து பரந்து அந்த இண்டெர்லூடை அப்படியே வயலின் மற்றும் ஷெனாயின் துணையுடன் 03:20 வரை தாங்கிச்சென்று பின்னர் தபேலாவிடம் கையளிக்கிறது. சுகானுபவம்டெ..! 
 
இதையே ரஹ்மான் பண்ணீருந்தார்னா உலகமே கொண்டாடீருக்கும். ஹ்ம்.. என்ன பண்றது ’அஜய் அதுல்’னு புதிய இசையமைப்பாளர்கள் போலருக்கு. பெஸ்ட்டூங்ணா.! 04:05 ல புன்னாகவராளி தெரியுதா...பாம்பு கெளம்பி வந்துரும்...ஆஹா!
 
நூறு சதமானம் கன்வென்ஷனல் பாட்டு.வேறு எந்த சேட்டையும் இல்லை. அப்பட்டமான மராட்டி சங்கீத். ஃபக்த் மராட்டீ..! லைக் கரா ஷேர் கரா...ஆணி சப்ஸ்க்ரைப் கரா ( லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க மேலும் சப்ஸ்க்ரைப் பண்ணுங்க) என அம்மணி கூவுது கட்சீல.ஹிஹி.. #நட்டுக்கட்டு

 

Tuesday, May 3, 2022

Aritmija - ஜுகல்பந்தி

 


போன வாரம் ஒரு இசை நிகழ்ச்சி. வழக்கம்போல
BIC Bangalore International Centerல தான். செந்தில் பாலா இருவரையும் கூப்பிட்டேன். பாலா ஆறரைக்கு வருவதெல்லாம் ஆகாது என்றுகூறிவிட்டார். செந்திலுக்கு வேறு பணி. நான் மட்டுமே கிளம்பிப் போய்விட்டேன். Aritmija என்ற ஒரு குழு. இரண்டு ஸ்லோவினியர்கள், இரண்டு இந்தியர்கள் (ரெண்டு பேரும் வடநாட்டை சேர்ந்தவர்,,இந்தி சரளமாக பொழிந்தது) . நிகழ்ச்சி தொடங்குமுன் , முன்னுரையாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓரிரண்டு வார்த்தைகள் பேசுவது வழக்கம். கேள்விகள் தான் கேட்டார் பேசவில்லை. ஸ்லோவினியா எங்க இருக்குன்னு தெரியுமா? அங்க என்ன மொழி பேசுவாங்கன்னு தெரியுமா?ன்னு கேட்டார். ஆங்கிலத்தில் தான் பேசினார். கொஞ்ச பேர் கையத்தூக்கி எதோ சொன்னார்கள். எனக்கு உண்மையிலேயே தெரிய வில்லை. இத்தனைக்கும் அது ஐரோப்பிய நாடு என அறிந்து தானிருந்தேன். இருப்பினும் கை தூக்க ஒரு தயக்கம்.பின்னர் அவரே தொடர்ந்தார்.

ஸ்லொவினியா யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்த நாடு. பெங்களூரைப் போலவே சுற்றளவு கொண்ட நாடு. (அவ்வளவு தானா , ஒரு நாடு??) 80 சதம் மரங்கள் பெங்களூரை விட அதிகம். 60 சதம் பெங்களூரின் மக்கட்தொகையை விடக்குறைவு என்றார். அரங்கில் ஒரு ஈ காக்கை கூட சத்தம் எழுப்பவில்லை. அங்கிருந்து இரண்டு கிட்டாரிஸ்ட்டுகள் வந்திருக்கின்றனர். ஸ்லோவினிய தூதரக வழி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று அறிமுகப்படுத்தினார்.

நிகழ்வு தொடங்கு முன்னரே நான் அரங்கின் வெளியே இருக்கும் தோட்டத்தில் அமர்ந்திருந்தேன் இரண்டு வெளிநாட்டவர் தமக்குள் பேசிக்கொண்டிருந்ததை பார்த்தேன், ஒன்றும் புரியவில்லை. இதுவரை கேள்விப்பட்டிராத மொழி. கொஞ்ச காலம் ஐரோப்பாவில் இருந்ததால் இன்ன மொழி தான் எனக்கண்டுபிடித்துவிடுமளவுக்கு தெரியும் தான். அவர்கள் அருகில் தான் அமர்ந்திருந்தேன். ஏற்கனவே போஸ்ட்டர்கள் பார்த்திருந்ததால் இவர்கள் தான் கிட்டார் கலைஞர்கள் எனத் தெளிவானது. சென்று பேசலாம் என எத்தனித்தபோது கட்டிடத்துக்கு கொசு மருந்து அடிக்கும் தொழிலாளி கையில் பெரிய பம்ப்புடன் வந்து புகையைக் கிளப்பிவிட்டார். அத்தோடு எழுந்து போனவர்கள் தான், புகைக்குள் சென்று மறைந்தே விட்டனர். ஆஹா..

நிகழ்ச்சி தொடங்கியது. முழுமொட்டை போட்டிருந்தவர் Bass Guitar இன்னொருவர் Lead Guitar என வாசிக்கத் தொடங்கினர். அவ்வப்போது தபேலா அவர்களின் வாசிப்பிற்கேற்ப தாளக்கட்டுடன் ஒத்திசைத்தது. அபஸ்வரம் எங்கும் இல்லை. மிகச்சரியாக Sync ஆகியிருந்த ஒலி. பின்னில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். ஹோஸ்ட்டிங்-க்காக வந்திருப்பார் போலிருக்கிறது என நினைத்துக்கொண்டேன். முகப்பிசை முடிந்ததும் எழுந்து பேசத்தொடங்கினார். சரளமாக ஹிந்தியிலும் ஆங்கிலத்திலுமாக பொழிந்தார். Aritmija குழு எப்படி உருவானது அதை ’அரித்மியா’ என்றே உச்சரிக்கவேணூம். ’அரித்மிஜா’ இல்லை எனத்திருத்தினார். கொஞ்சம் சொந்தக்கத சோகக்கதயும் கலந்து கட்டி அடித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஸ்லோவினியர்களின் நட்பு/தொடர்பு கிடைத்தது. கரோனாவால் எல்லாம் தடைப்பட்டு போனது ஒரு நிகழ்ச்சி கூட கிடைக்க வில்லை. இப்போது ஆரம்பித்துவிட்டோம் என மகிழ்வுடன் கூறினார். கலைஞர்களுக்கு அவ்வளவு காசு கிடைப்பதில்லை என பேத்தோஸ் பாடினார்.(எல்லாருக்குமே இப்டித்தானா ?? )


கைதேர்ந்த இசை.அத்தனை உழைப்பு. விரல்கள் துள்ளி விளையாடுகிறது கிட்டார்களில் இருவருக்கும். கிட்டத்தட்ட ஆயிரம் நிகழ்ச்சிகளுக்கு மேல் செய்திருப்பதாக குறிப்பு தெரிவிக்கிறது. எங்கும் நோட்ஸ் (இசைக் குறிப்புகள்) எழுதி வைக்கவில்லை. ஒரு தயக்கமில்லை. நல்ல ஒத்திகை. அதை செயல்படுத்தியதும் சிறப்பு. தவறுகள் செய்த போதும் மேடையிலேயே அவற்றை யாருக்கும் தெரியாது திருத்திவாசிக்கும் அந்த அனுபவம். ஆஹா. ஹாட்ஸ் ஆஃப் ஸ்லோவினயன்ஸ்.

பாடிய அந்தப் பெண்மணி ஸ்லோவினியா மொழியில் ஒரு பாட்டை முழுதுமாக கிட்டார்களின் மற்றும்  அருமையான தபேலாவின் துணையுடன் பாடி முடித்துவிட்டு , எதேனும் புரிந்ததா எனக்கேட்டார் . பின்னர் சிரித்துக் கொண்டே இது அவர்களின் மொழி. அதான் ஒரு சொல் போலும் உங்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை என்றார்.

ஒரு வித்தியாசமும் தெரியவில்லை அந்தப்பாடலில். ஏற்கனவே கேட்ட பழகிய பாடல் போலவே தோற்றமளித்தது. பின்னரும் ஜுகல்பந்தி ( இந்த சொல்லுக்கு தமிழ்ல என்னப்பா சொல்றது? ) யாகத்தொடர்ந்தது. கிட்டாருக்கும் தபேலாவுக்கும் ஒத்துவராது. ட்ரம்ஸ் தான் சரி அதுபோல நாதஸ்வரத்துக்கு தவில் தான். இங்கே ஒரு வேறுபாடும் தெரியவில்லை. அப்படியே பொருந்தியது தான் வியப்பு. சில இந்திப்பாடல்களின் உருவான சூழல்களை ஒப்பிட்டுப் பேசினார். நதிக்கரையோரம் காதலனைத்தேடிக் காத்திருக்கும் காதலி இங்கு, கடற்கரையோரம் காத்திருப்பது அங்கு என. பெரும்பாலும் ஒத்துப்போகும் விஷயங்களைக் குறித்து பேசினார். இருப்பினும் நம்ம ஊரில் பெங்களூரில்/ சென்னையில் எத்தனையோ பாடல்கள் இசைக்கப் பட்டிருக்கிறது. அதையெல்லாம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இத்தனை பிரபலங்களுக்கு அவை யெல்லாம் தெரிந்திராமல் இருக்க வாய்ப்பில்லை தான். பாடல்கள் என்றால் இந்திதான். படங்கள் என்றால் இந்திதானா?? சிம்பொனியும் ஆஸ்கரும் சென்னைல தான் ஒக்காந்திருக்காங்க. கொஞ்சம் அதயும் பேசுங்க.

இதுபோல ரஹ்மான் நிறையச்செய்கிறார். நேரில் சென்று பார்க்க வேணுமெனில் கொட்டிக் கொடுக்கவேணும் டிக்கெட்டுக்கு. கார்ப்பொரேட்டுகளுக்கு மட்டுமே சாத்தியம். நம்மைப்போன்ற கடைக்குட்டிகளுக்கெல்லாம் ஆவதில்லை. கோக் ஸ்டூடியோவில் நிறைய செய்கிறார் யூட்யூபில் பார்த்துக்கொள்ளலாம். ராசைய்யா இது போல எதேனும் செய்கிறாரா எனத்தேடித்தான் பார்க்க வேணும். ஜுகல் பந்திகளுக்கு முழுமையான ஒத்திகை அவசியம், மேலும் இரு புறமும் ஒத்திசைவான ராகங்களையும், தாளக்கட்டுகளையும் தேர்ந்தெடுத்து அந்தப்பாடல்களை மட்டுமே வாசிக்க வேணும். அதெற்கெல்லாம் கனகாலம் பிடிக்கும், அதனாலேயே பெரிய இசைக்கலைஞர்கள் ஒத்துக்கொள்வதில்லை. ஜக்கியின் சிவராத்திரி கொண்டாட்டங்களில் அவ்வப்போது சில முத்துகள் முகிழ்ப்பதுண்டு இதுபோல. ஆனாலும் அதுவும் ஒரு கார்ப்பரேட் நிகழ்வு தான். கலைஞர்களை ஊக்குவிப்பது என்பது பெருந்தன முதலாளிகள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.!

இந்த நிகழ்ச்சியே ’விப்ரோ’ நந்தன் நிலக்கேனிஐயா’வின் தயவில் அவர் தம் கட்டிடத்தில் நிகழ்த்தப்பட்டதுதான். என்ன ஒன்று அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இலவசம். படமாகட்டும். இசை நிகழ்வுகளாகட்டும். நாடகங்கள், ஆவணங்கள், என அத்தனை நிகழ்வுகளுக்கும் உள்நுழைவு இலவசம். லெ முருகபூபதியின் ’இடாகினி கதாய அரதம்’ நாடகம் இங்கு தான் அரங்கேறியது. நான்கு மாதங்களுக்கு முன்பு.

இந்த Aritmija இசை நிகழ்ச்சிக்கு அரங்கு நிறைந்து தானிருந்தது நேரம் போகப்போக இன்னமும் கூட்டம் கூடி இறங்கிச்செல்லும் படிக்கட்டுகளில் அமரத் தொடங்கினர். வெகு சில நிகழ்ச்சிகளுக்கே இப்படி கூட்டம் சேரும். இசை நிகழ்ச்சிகளெனில் நேரில் சென்று நம் காதால் எவ்வித மிக்ஸரின் உதவியின்றி, உருப்பெருக்கியோ, இல்லை குறைத்தோ என்றில்லாமல் நேரடியாகக் கேட்டால் தான் அதன் அருமை தெரியும். தந்திகள் அதிர்ந்து அதன் ஒலி நம் காதை நேரடியாக வந்தடையும் போது அதன் சுகமே அலாதி. அதுக்கு தான் அடிச்சிக்கிர்றது. லைவ் ஆர்க்கெஸ்ட்ரா தான் பெஸ்ட்.!



Tuesday, April 19, 2022

’கொயி நிதியா கியா’

 


’கொயி நிதியா கியா’ என்ற அஸ்ஸாமியப்பாடல். மூன்று மொழிகளில் எழுதப்பட்ட பாடல். ஆஹா. ஷ்ரேயாகோஷலும், பாப்போன் என்பவரும் பாடியிருக்கும் இந்தப்பாடல் , அவர் தமது இன்ஸ்ட்டாவில் இதனில் ஒரு சின்ன துணுக்கைப் பகிர்ந்திருந்தார். ’முன்பே வா என் அன்பேவா’ வைப்போல ஒரு சில்லென ஒரு காதல் பாடல். இது பிஹூ என்ற அவர்களின் புத்தாண்டுக்காலம், அதில் பிறக்கும் ஒரு காதல் அதனையொட்டிய ஒரு பாடல். எனக்கென்னவோ பாப்போனின் (ஆண் பாடகர்) குரல் ’இசையில் தொடங்குதம்மா’ அஜய் சக்ரவர்த்தியின் குரலை ஞாபகப்படுத்துகிறது.

புல்லாங்குழலில் பூபாளம் இசைக்க சைக்கிளில் பயணிக்கும் ஒரு ஜோடி. இயற்கை வளங்களுக்கு கேட்கவே வேண்டாம். இது வரை ஒரு முறை போலும் அந்த செவன் ஸிஸ்டர்களுக்கு பயணித்ததே இல்லை. பெங்களூர் அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டிகள் பெரும்பாலும் அஸ்ஸாமீஸ்களாகவே இருப்பர். அவங்க எப்பவும் நேப்பாளிகள் என்றே நினைத்துக் கொண்டிருப்பது வழக்கம். கேட்டால் இல்ல டிப்ரூகர் அஸ்ஸாம் என்றுரைப்பர். அவர்களின் பாடல்களை மொபைலில் பொதிந்து வைத்துக்கொண்டு இசைக்கும் போது அவ்வப்போது காதில் விழும். அதிக வித்தியாசம் காணவியலாத பாடல்கள் அவர்களது. நேப்பாளிகளின் பாடல்கள் போலவே இசைக்கும்.

இம்மியும் மாறாத பாரம்பரிய இசைக்கருவிகள் கொண்டு, டோலக், தபேலா, மற்றும் புல்லாங்குழலும் சந்தூருமாக இழைகிறது. சிந்தஸைஸுக்கு இடமில்லை. இந்தியில் பாடல் எழுதும் போது பஞ்சாபி சொற்களும் அளவற்ற உருதுச்சொற்களும் கலந்தே எழுதப்படும். அது போல இங்கும் மூன்று வட்டார வழக்கில்/ மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. என்ன நமக்கு தான் ஒரு சொல்லும் புரியாது, இருப்பினும் யூட்யூபில் ஆங்கில துணை எழுத்துகள் இருக்கிறது… என்றாலும் இசைக்கு மொழியில்லை…!

02:53ல் வரும் அந்த நடனம் அவர்களின் பாரம்பரிய பிஹூ நடனம். சாதாரணமாகவே அஸ்ஸாமி என்றாலே இந்த ஸ்டெப்ஸை மட்டுமே அடிக்கடி காண்பித்து மனப்பாடமே ஆகிவிட்டது. 04:40ல் ஆரம்பிக்கும் அந்த புல்லாங்குழலும் அதன் பின் தொடரும் பப்போனின் ஹம்மிங்கும் ராசைய்யாதான்.. ஆஹா..! ஷேர்ஷா’ திரைப்படத்தில் வெளிவந்த 'ராத்தேன் லம்பியான்’ என்ற இந்திப்பாடலைப்போல நீங்காப்புகழ் பெறத்தகுதியான பாடல் இது. எலெக்ட்ரானிக், அரபி , ஹிப்ஹாப் எல்லாம் கேட்கலாம்... இருப்பினும் இது போன்ற ஒரு பாடலைக் கேட்கும் போது அதன் சுகமே அலாதி....!  #மானேனோகிமானேனோகி