Friday, September 30, 2011

முதல் நிலவு



சூரியக்குடும்பத்தில் ஒரு கோளுக்கு
இருபத்தேழு நிலவுகள் இருப்பதாக
ஆய்வுகளின் முடிகள் தெரிவிக்கின்றன.
பகலென்ன இரவென்ன ?
எப்போதும் நிலவுகளின் ஒளியில்
எனை நனைத்துக்கொண்டேயிருப்பேன்
ஆதலால் நான் என்னை
அங்கே செலுத்திக்கொள்ளலாம்
என்றிருக்கிறேன்
இப்படிச்சொன்னதிலிருந்து
ஒரு நிலவு என்னுடன்
பேச மறுத்துவிட்டது.



.

Wednesday, September 28, 2011

நியூற்றினோவும் எனது தோழியும்





 நியூற்றினோவின் துணை கொண்டு
ஒளியினுங்கூடுதல் வேகம்
பயணித்தும் உன் மனதின் ஆழம்
இன்னும் அறிய இயலவில்லை தோழி
ஐன்ஸ்டீன் தோற்றதும்
இங்கனம் தான் போலிருக்கிறது.

பயணத்தில் பல படிகள்
கீழிறங்கும் போது அறிய முடிந்தது.
இதுவரை நீ எனக்குக்காண்பிக்காத
உனது உள் மனத்தின்
ஒரு படியிலும் எனக்கான
இடம் இல்லை என்பதை.

எங்காவது ஒரு மென்மையான
மூலையில் எனக்கான ஒரு
இடம் இருக்குமென நினைத்து
எனக்குள் மகிழ்ந்திருந்த என்னை
என்றோ பிறந்த உன்னுடன் ,
நேற்றுப்பிறந்த நீயூற்றினோவும்
சேர்ந்து சபித்துவிட்டதில்
முதல் முறையாக எனக்குக் கோபம் வந்தது

ஐன்ஸ்டீனின் விதியை
மீள நிரூபிக்கும் ஆராய்ச்சியில்
இனியும் தாமதிக்காமல்
முழு மனதுடன் இறங்கிவிடுவதென்று
முடிவெடுத்திருக்கிறேன்.
புரட்டிப்போடும் அறிவியலும்
இந்த இயல்(ற்)பியலுக்கு
உதவவில்லை என்பதால்



.

Saturday, September 24, 2011

பிதற்றல்கள்



ஊறவைத்த சூரிய ஒளி,
அடக்கி வாசிக்கும் சில்வண்டுகள்,
திருவிழாக்கூட்டத்தில் சன்னமாய்
எங்கோ ஒரு மூலையில் ஒலிக்கும்
புதிதாய் வாங்கிய ஊதியின் சத்தம்,
சாலையின் ஓரத்தில்
ஊர்ந்து செல்லும் பெயரறியாப்பூச்சி,
சகித்துக்கொள்ளவே இயலாத
நெட்டுக்குத்தலான குன்று போன்ற வலி,
சூழலறியாது தனது விருப்பை
மட்டுமே கவனத்தில் கொள்ளும் சிறுகுழந்தை,
இறந்து போன மூதாதையர் செய்த
நல்ல விடயங்கள் மட்டுமே ஞாபகத்திலிருத்தல்,
கடல்கன்னியின் உருவத்தை
பச்சை குத்திக் கொண்ட மாலுமி,
காலையில் உண்ட சிற்றுண்டியை
சட்டென மறந்துபோதல்,
புத்தி ஸ்வாதீனம் உள்ள சில நல்ல நண்பர்கள்,
பெரிய பிரச்சினை ஏதும் கிடையாத பைத்தியங்கள்,

இவை அனைத்திற்குள்ளும்
ஏதோ ஒரு ஒற்றுமை
இருப்பது போல் எனக்குத்
தோணிக்கொண்டேயிருக்கிறது.


Thursday, September 22, 2011

நான் எப்பொதெல்லாம் தனிமையிலிருக்கிறேன்



எதையும் யோசிக்காதபோதும்,
எதையும் செய்ய,செய்விக்க இயலாதபோதும்,
ஒரு பாடலையும் பாடாதபோதும்,

என் கிட்டாரின் மெல்லிய விள்ளல் இசையை
என் விரல்களால் தூண்ட இயலாதபோதும்,
என் கவிதைகளில் காதல் இல்லாதபோதும்,
என் கண்களில் ஈரம் குறையும் போதும்,

என்னைச்சுற்றி நடப்பவை பற்றி எனக்கு
சிறிதும் அக்கறையில்லாத போதும்,
எனக்கென சாலையோரப்பெட்டிக்கடைக்காரன்
ரொட்டியை மீதம் வைத்திருக்காத போதும்,

தூரத்தில் ஒலிக்கும் தடதடக்கும் ரயிலின் ஓசை
சட்டென மறையும் போதும்,
என்றும் வரும் என நம்பிக்காத்திருந்த
மழைக்குருவி இன்று வராமலேயே போகும்போதும்

என
நான் எப்போதெல்லாம்
தனிமையிலிருக்கிறேன்
என்று உணர்ந்துகொண்டிருக்கும்
அப்போதெல்லாம் தனிமை
என்னைப்படர்ந்து கொண்டிருக்கிறது.
 




   .

Tuesday, September 20, 2011

பதினேழாம் வயது





எனது ஐ.க்யூ'வை கணக்கிலெடுத்து,
என்னுயரத்திற்கு சரியானவன்
எனக்கணித்து ,
என் வாழ்நாள் முழுதும்
துணையாக உடன் வரத்தக்க
பொருத்தமான ஒருவனை
தேர்ந்தெடுத்தால், 

அவன் ஏற்கனவே
பல சலிப்பூட்டும் இளம்பெண்களின்

காதலனாகவே இருந்திருக்கிறான்
அவன் தனது நீண்ட காலக்கனவை
என்னுட்ன் விவாதிக்கிறான்
இவனும் மற்ற இளைஞர்கள்
போலவே நிகழ்காலத்தில்
வாழ மறுக்கின்றவனாகவே
இருக்கிறான்.
சலித்துத்தான் போகிறது
எனக்கும்.



.


Saturday, September 17, 2011

அடுத்த பாடல்



அடுத்து என்ன பாடல் ஒலிக்கும்
என்ற மன நிலையுடன் உள்ள
வானொலி ரசிகனைப்போல
உனது அடுத்த வார்த்தைகளுக்கென
ஆவலுடன் காத்திருக்கிறேன்.


அவர் எழுதிய கவிதைப்புத்தகம்
எங்கே கிடைக்கும் என்று
எழுத்தாளனிடமே
கேட்பது போல உன்னைப்பற்றிய
கவிதை எங்கே கிடைக்கும் என
உன்னிடமே கேட்கிறேன்


பத்திரிக்கைகள் ஏதுவாயிருப்பினும்
அவற்றின் தலையங்கங்கள்
தனித்தமிழில் மட்டுமே வருவது போல
கடிதங்கள் ஏதுவாயிருப்பினும்
உனக்கென எழுதும்போது நானதில்
காதல் மட்டுமே எழுதுகிறேன்.


என்னைச்சுற்றி பல மொழிகள்
பேசப்படினும் என் எண்ணங்கள்
தமிழில் மட்டுமே இருப்பது போல
உன்னைச்சுற்றி பலர் இருப்பினும்
என்னில் உன்னை மட்டுமே
நிறைத்திருக்கிறேன்.


.
.

Thursday, September 15, 2011

கடற்கன்னியின் கால்கள்



கடற்கரையின் மணல்
சீமைச்சர்க்கரை போலவே
விரிந்து கிடக்கிறது.

இரவுகளில் அவை
நிலவொளியுடன் இணைந்து
இன்னும் இனிக்கும் போலிருக்கிறது

அலைகள் வந்து அடித்தும்
அவை இன்னும் உப்பாகவில்லை.

நண்டுகளும் ,
அலையிலிருந்து
ஒதுங்கிக்கொள்ளும்
சிறிய சிப்பிகளும்,
ஆமைகளும் கரை தேடி
வந்துதான் வளைகள்
அமைக்கின்றன.

இவை அனைத்தையும்
ரசித்துக்கொண்டே
முடிவற்ற கடற்கரையில்
அமர்ந்து அவள் தன்
கால்களை
நனைத்துக்கொண்டிருந்தாள்

அவை இன்னும்
ஏன் கடற்கன்னியின்
வாலாக மாறவில்லை
என்ற வியப்புடன் நான்.

 .


Monday, September 12, 2011

"மச்சி, ஓப்பன் த பாட்டில்"


உயிரோசை'யில் வெளியான திரை விமர்சனம்

பணம் மட்டுமே குறிக்கோளாய்க்கொண்ட ஒரு சமூகம். அதையே இந்தப்படத்தைப் பார்ப்பவருக்கும் எடுத்திருப்பவர்களுக்குமான மையக்கருத்தாக வைத்து,எப்படியேனும், வலிக்காமல், அதற்கென பெரும் முயற்சி என்று எதுவும் செய்யாமல் , குறுக்கு வழியில்"Easy Money"யை அடைந்து விடத் துடிக்கும் ஒரு கூட்டம் என்ற எதிர்மறை எண்ணங்கள் கொண்ட நால்வர் – ‘அஜித்' தோடு ஐவர்,என ஒன்று கூடிச்சேர்ந்து கொண்டு யாருக்கோ சொந்தமான பணத்தை அடித்துச் செல்லுவதைக் கொஞ்சம் மிரட்டலாகவே சொல்லியிருக்கிறார் வெங்கட் பிரபு. பணம் , பணம் , பணம் இதுவே தாரக மந்திரம்.

காதோரத்தில் சிறிது நரை கூடினாலும் , கிழப்பருவம் எய்திடாத அஜித். அதற்குக் கட்டியம் கூறும் வகையில், த்ரிஷா , அவர் அப்பாவிற்குத் தெரியாமல் மடியில் வைத்திருக்கும் கையை அழுத்தி, சொல்லவேண்டாமெனத் தடுத்தும் "நாற்பது" என்று உண்மையைச் சொல்லும்போது ," Life begins at forty" என்று தாமும் அந்த வயதிலேயே வாழ்க்கை என்று சொல்லக்கூடிய வ்கையில் ஒன்றை ஆரம்பித்ததை , உறுதி செய்து கொள்கிறார் ஜெயப்ரகாஷ்.

Betting Illegal Money-யைக் கொள்ளயடித்தல் என்ற ஒரு வரிக்கதைக்கு Knot மிகச்சரியாக வந்திருக்கிறது பிரபு வெங்கட்டிற்கு, கோவா'வில் சொதப்பியதை இங்கே சரி செய்துதான் இருக்கிறார். எனினும் பணத்தைக் கொள்ளையிடத் திட்டமிடும் காட்சிகளில் ஆயாசம் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

இன்னும் பத்து ஆண்டுகளில் எட்டப்போகும் வயதை, இப்போதே தான் நடித்த படங்களின் எண்ணிக்கையால் அடைந்து விட்ட தல யின் தற்புகழ் பாடாமல், வராண்டா முழுக்க அவர் தன் சொந்தக்கால்களால் நடைபழக விடாமல், நாற்பதுகளில் இருக்கும் அவரின் இயல்பான தோற்றத்தைக் காண்பித்ததற்காக வெங்கட்'டிற்கு நன்றி. 

அஜித்திற்கு இது ஒரு புதிய பரிமாணம் இல்லை , ‘தீனா’, வாலி’, பில்லா போன்ற படங்களில் , ஏற்கனவே செய்த வேடங்கள் தான் என்ற போதிலும், இதில் ஒரு கட்டத்தை அடைந்து பின் அதைக்கடந்தும் விட்டிருக்கிறார்.வாய் விட்டுச்சிரிக்கும் வில்லன்களின் Last Laugh-ஐ படம் முழுக்க , அனுபவித்து நிறைய சிரித்து , நம்மையும் சேர்ந்து மகிழ வைக்கிறார் அஜித்.

லட்சுமி ராயை வீட்டிலிருந்து துரத்துவது, த்ரிஷாவிற்குத் தெரியாமல் அதை அவர் மறைக்கப் படும்பாடு, த்ரிஷா அவரின் மனைவியோன்னு கொஞ்ச நேரம் நம்மள திண்டாட வைக்கும்போது , குடித்து விட்டுத் தினமும் , ஒருத்தரோடு படுக்கைக்கு வந்து, காலையில் எழுந்து நேத்து யார் எங்கூட வந்ததுன்னு போர்வையை விலக்கிப் பார்ப்பது, இனிமே அதிகமா குடிக்கக்கூடாதுன்னு தனக்குத்தானே சொல்லிக் கொள்வது,அடுத்த நாள் தான் பணத்தை எடுக்கப் போகும்போது , என்னவெல்லாம் நடக்கும்,அந்த நால்வர் அணி எப்படி செயல்படும், எதிர்வினையாற்றும் என்று, செஸ் போர்டில், கையில் ஒரு சிகரெட்டை வைத்துக்கொண்டே நமக்கு சொல்லும் காட்சிகள், ‘தல'டா...!

த்ரிஷாவிடம் பேசும்போது கண்களில் துளியும் வில்ல'த்தனம் தெரியாமல் அஜித் பார்த்துகொள்வதும், காதல் மயக்கத்தில் த்ரிஷா அதைக் கண்டே பிடிக்காமல் போவதும் கவிதை.அதே த்ரிஷா , தந்தை ஜெயப்ரகாஷை அஜித் காரிலிருந்து தள்ளிவிட்டு விட்டுப் போகும், அவரின் வில்லத்தனம் புரிந்த பின்னர் அதே கண்களில் இருந்து விடும் கண்ணீர்த்துளிகள் இன்னுமொரு காதல் கவிதை.

ஒவ்வொரு தடவையும் அஜித்தான் வைபவ்'வைக் காப்பாற்றுகிறார். எனினும் சந்தேகத்தின் பேரில் ஜெய்ப்ரகாஷிடம் பிடிபட்ட அவரைக் காப்பாற்றி கொண்டு வந்து விட்டு, பின் அவரையே போட்டுத்தள்ள நினைத்து துப்பாக்கியைத் தூக்கிப்பிடித்துகொண்டு, ஒனக்காகப்போயி, ஜெயப்ரகாஷை மிரட்டிப்பணிய வெச்சேனேன்னு வெறுப்பின் உச்சக்கட்டத்தில் சொல்ற இடம், Simply Superb. Hats Off Ajith.

"அம்பத்தஞ்சு வருஷ உழைப்பை, அஞ்சு நிமிஷத்தில அடிச்சிட்டுப்போகலாம்னு பாத்துட்டானே, என் கையால அந்தப்பயல வளத்து, ஒன்னக்கல்யாணமும் பண்ணி வெச்சதுக்கு, எங்கிட்டயே doublecross பண்ண நென்னச்சததாம்மா தாங்கிக்க முடியல"ன்னு அஞ்சலிகிட்ட சொல்லும்போது "பசங்க"ல அப்பாவா வந்த ஜெயப்ரகாஷ் கிட்டத்தட்ட இங்கே அதே உறவுமுறையில் வளர்த்த வைபவ்விற்கென மிளிர்கிறார்.

வழக்கமா வெங்கட்பிரபு படத்தில இருக்கிற கோஷ்டில ஜெய் இல்லாத குறையைத்தீர்க்க வந்த ,கிட்டத்தட்ட அவர் முக அமைப்பிலயே இருக்கும் மஹத்,இருக்கிற ஐநூறு கோடிய மூணாப்பிரிக்கிறது கஷ்டம், கணக்கு சரியா வராதுன்னு சொல்லி , ப்ரேம நீயே போட்டுத்தள்ளுன்னு சொல்லும்போது , பரத்தையாக நடித்திருக்கும் லட்சுமி ராயின் கண்களில் தெரியும் மிரட்சி, அதே பணத்த ரெண்டாப்பிரிக்கிறதும் கஷ்டம்னு ,எங்க இவன் நாளைக்கு நம்மளயே போட்டுத் தள்ளிருவானோன்னு நினைத்து, பின்னாடி அதே மஹத்தை சுட்டுத்தள்ளும்போது அந்த வசனத்தை அவர் வாயால் சொல்லுவதைத் தவிர்த்து , காட்சிகளில் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். அதே போல, கடைசிக்காட்சிகளில், பணம் வைத்திருக்கும் வேனை மோதவிட்டு, பின் அஜித்'திடம் உனக்காகத்தான் இதெல்லாம் செஞ்சேன்னு அவர் சொல்லும் போது, 'நடிக்கிறத', இன்னும் கொஞ்சம் நல்லா நடிச்சு'க்காட்டியிருக்கலாம்.

வைபவைக்காப்பாற்றும் முதல் காட்சிகளில் , சண்டை கொஞ்சம் நீண்ண்ண்ண்டுதான் போய்விட்டது, வெட்டி, சுருக்கிகாட்டியிருந்தால் இன்னும் Crisp ஆக வந்திருக்கும். ப்ரேம் ஐஐடி ஸ்டூடண்ட், அதுவும் கோல்ட் மெடலிஸ்ட் என்று கூறும்போது அந்தப்பாத்திரத்தின் பின்னணியில் இருக்கும் நகைப்பிற்கான குறியீடு முழுமை பெறுகிறது.

ஆக்க்ஷன் கிங்கிற்கு அதிக வேலையில்லை. அவ்வப்போது அஜித் நடக்காத நீண்ட வராண்டாக்களில் தானாக நடப்பதும், ப்ரஸ்ஸிடமும், குறைந்த ஒளியில் சகபோலீஸ்காரர்களிடம் பேசுவதும்,விவாதிப்பதும், பின்னர் கடைசிக்காட்சியில் கொஞ்சம் அவர் உருவத்திற்கும், முன்னர் செய்து காட்டிய ஆக்க்ஷன் சாகஸங்களுக்கும் கொஞ்சமும் சம்பந்தமேயில்லாமல் சிறிய துப்பாக்கி கொண்டு சண்டை போடுவதுமாக கழித்திருக்கிறார்.இரண்டு பெரிய ஹீரோக்கள் இணைந்து நடிப்பது என்பதைத்தமிழில் மேலும் சாத்தியமாக்கியிருப்பதைத்தவிர வேறொன்றும் பெரிதாக அவர் செய்து விடவில்லை.

James Bond படங்களில் , பெண்களுக்கு, அவர்கள் Heroine-ஆகவே இருந்த போதிலும் , அதிக வேலையிருப்பதில்லை, எனினும் இங்கு , சற்றேறக்குறைய எதிர்மறையான இந்த Bond படத்தில் அஞ்சலிக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

யுவனைப்பற்றிக் கூறாமல் இந்த ஆட்டம் ஓயாது. Johan Sebastian Bach'ன் Conerto No1 in A Minor BWV1041 'ஐ வெகு தீவிரமான , 'கரணம் தப்பினால் மரணம்' என்ற சண்டைக்காட்சிக்கென இசைத்திருப்பது அவ்வளவு இறுக்கத்திலும், பரபரப்பிலும் அந்த உணர்வைத்"தல" க்குக் கொண்டு செல்வதில்லை என்பதை , பார்க்கும் நமக்கும், நடித்திருக்கும் 'தல'க்கும் Bach-ன் Symphony-யால் விளங்கவைக்கிறார் யுவன். Italian முறையிலான இந்த Concerto , Fast-Slow-Fast Arrangement என்று அழைக்கப்படும் Ritornello Structures வகையைச்சேர்ந்தது. படத்தில் இந்தக் குறிப்பிட்ட காட்சி அமைப்பில், முதலில் Slow Motion-ம்,பிறகு அதிவேக சண்டை என்றும் அலைக்கழிக்கப்படும் காட்சிகளுக்கு வெகு தெளிவாகவே தெரிவு செய்து இசைத்திருக்கிறார் இந்த இசைக்கோவையை. 

ஸ்பீட் பைக் காட்சியில் இழைத்து இழைத்து, நம்மையும் அஜித் கூடவே பயணிக்க வைக்கும் , அற்புதமான பின்னணி இசை., தீம் ம்யூஸிக்காக படம் முழுக்க வந்து நம்மை சிலிர்க்க வைக்கிறது.அதை "மங்காத்தா ஸிங்கிளாக" முன்னரே வெளியிட்டது அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி விட்டது.

படத்தின் தீம் ம்யூஸிக்கை'யே த்ரிஷா'வை சமாளிக்கும் காட்சிக்கென , மிருதங்கத்தையும், உடுக்கையையும் வைத்து ரீமிக்ஸ் செய்து கொடுத்திருக்கிறார். எனினும் யுவன் இந்த "உள்ளே வெளியே" ஆட்டத்திற்கென ஆரண்ய காண்டத்தை'ப்போல் அதிகம் மெனெக்கெடவில்லை ஓரிரு குறிப்பிட்டு சொல்லும் இடங்களைத் தவிர.படத்தின் பாடல்களுக்கென அதிகம் உழைத்திருக்கும் யுவன்,பின்னணிக்கென பில்லா'வைப்போலவே Second Fiddle-ஏ வாசித்திருக்கிறார் பல காட்சிகளில் (எனினும் படத்தின் பின்னணி இசையில் 'கார்த்திக் ராஜா'வின் பங்கே அதிகம் என்று தோணுகிறது.)

'வாடா பின் லேடா'வில் யுவன், இதுவரை செய்யாத ஒரு முயற்சி, முழுக்க தாள கதியை , சரணங்களில் மாற்றியபோதும் பாடலை விட்டு நம்மை விலகச் செய்யாதிருக்கும் மேஸ்ட்ரோ'த்தனம் அவருக்குள்ளும் புகுந்திருப்பதை தெளிவாகக் காட்டுகிறது.இது யுவனின்தீனா, ‘பில்லா, ‘ஏக"னுக்குப்பிறகான அஜித்'திற்கென்றே உரிய பிரத்யேக இசை.

நோகாமல் உட்கார்ந்து சம்பாதிக்கும் Betting Money-யை , அதேபோல் அதிக சிரமம் எடுத்துக்கொள்ளாமல்,சரியான திட்டமிடலில் , கொள்ளையடித்து தமக்குள் பங்கு போட்டுக்கொள்ளும் இருவரின் கதை'யில் அறம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதையும், மையக்கருத்தே தவறு என்பதையும், மறைத்து அதைத்தனது வலுவான திரைக்கதையைக்கொண்டு தெளிவாகச் சொல்லிவிடுதலிலும் வெற்றி பெற்றிருக்கிறார் வெங்கட்பிரபு.

இது வரை தான் எடுத்த மற்ற படங்களில் , யுவனைத் தவிர , வேறு எந்த Star Value-வும் இல்லாமல் வெற்றி பெற்றிருந்த (‘கோவா' தவிர்த்து) வெங்கட்பிரபு , இதில் முழுக்க முழுக்க பெரிய தல'களுடன் இணைந்தும் வெற்றி ஈட்டியிருக்கிறார்.! 

ஒரு வரீல இந்தப் படத்த விமர்சிக்கணும்னா "இன்னொரு தடவ" இந்த விமர்சனத்தின் " தல'(லை)ப்பை" வாசிச்சுக்குங்க).

.

Saturday, September 10, 2011

வரிகள் லிஸ்ட்



கவிதை எழுத அமர்ந்த நான்
அதோடு மளிகைக்கடைக்கும் சேர்த்து
லிஸ்ட் எழுதிக்கொண்டிருந்தேன்

முக்கியமானவை , உடனடித்தேவைகள்
முதலில் வைக்கப்பட்டன
கொஞ்சம் இருப்பு உள்ளது,பரவாயில்லை வகைகள்
அடுத்து இடம் பிடித்தன

இன்னும் கொஞ்ச நாளைக்கப்புறம்
தேவைப்படுபவை பின் தங்கின
எப்போதும் இடம் பிடிப்பவை
என்னாலேயே வரிசையின்
கடைசியில் எழுதப்பட்டன.

எழுதியவை அனுப்பப்படும் இடங்கள்
எப்படியோ தவறுதலாக மாறி விட்டது
உடனே ஒன்று திரும்ப வந்து விட்டது
இன்னொன்றுக்காக காத்திருந்தேன்
அது வெளிவந்து விட்டது.



Friday, September 9, 2011

சொல்வலைவேட்டுவன்





தொடங்கத்தயங்கி நின்ற
எனது காற்புள்ளிகள்
உனது மேற்கோள்கள்

தொடத்தயங்கும்
உனது பதங்கள்
எனது வரிகள்

தர்க்கங்களைக்கடந்து
நிற்கும் உனது விவாதங்கள்
எனது வாக்கியங்கள்

பொருளை வெளிச்சொல்ல
தாமே நாணி நின்ற
உந்தன் சொற்கள்
எனக்கு இடைவெளிகள்

நீ விட்ட இடத்திலிருந்து
நான் துவங்கினால் அது கவிதை
நீ துவங்கினால் ?




.

Wednesday, September 7, 2011

மரத்துப்போன விசும்பல்கள்




காட்டிலிருந்து
வெட்டிக்கொண்டுவரப்பட்ட
மரம் காத்துக்கொண்டிருந்தது
தன் கதை தன் மேலேயே
அவனால் எழுதப்படும் என்று.


வெட்டுப்படுதலும், பின் துளிர்த்தலும்,
மழை வேண்டிக்காத்திருப்பதும்
வேண்டாத இலைகளைக் களைவதும்
அழையா விருந்தாளிகளைத் தாங்கி நிற்பதும்,  
அண்டி வரும் எவருக்கும்,
யாரெனத் தெரியாமல் நிழல் தருவதுமான
மரத்தின் நினைவுகள்
மறக்கடிக்கப்பட்டு
எழுதுபவனின் அவமானங்களும்
மகிழ்வும்,சோகமும்
அப்பிக்கொண்டன
எழுத்தாக அதன் மேல்.

மரமும் அதைக்கொஞ்சம்
வாசிக்க முயன்று
பின் தன்னைத்தானே
தேற்றிக்கொண்டது
ஏதோ ஒரு வகையில்
அவை தன் கதையை
ஒத்திருப்பதாக
.


Saturday, September 3, 2011

சோப்புக்குமிழிக் கற்பிதங்கள்



ஆப்பிளுக்குப்பதில்
நியூட்டன் தாமே விழுந்தார்
மரத்திலிருந்து
சிறுகாயமுமின்றி.

மேரி க்யூரியின்
புற்று நோய்
ரேடியத்தால் குணமாகிறது

அணுகுண்டுகள்
வெடித்துச்சிதறியதில்
லில்லிப்பூக்கள்
மலர்கின்றன

அமிலமழையில்
நனைந்த மலர்கள்
வெயிலில் பளபளவென
மின்னுகின்றன.

நான்காம் உலகப்போரின்
எச்சங்கள் முதல்
உலகப்போரின் எச்சங்களை
ஒத்திருக்கின்றன.

புத்தன் சிரிக்கையில்
உதிர்ந்த அவனின் ஒரு பல்
தொண்டைக்குழிக்குள்
சிக்கிக்கொண்டது.

நடை பழகும் காகங்கள்
இயல்புச்சிறகுகளின்
பறப்பை என்றோ
மறந்து விட்டன.

சாக்கடைகளைக் கடந்து
செல்ல கப்பல்
கட்டிக்கொண்டிருக்கிறேன்
கடல்களைக்கடக்க
என் கால்கள் போதும்.